சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 29 in the series 28 ஏப்ரல் 2013

ச.பச்சைநிலா

உதவிப் பேராசிரியர்

பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி

பெரம்பலூர்

வல்லிக்கண்ணனின் தமிழில் சிறுபத்திரிகைகள் என்கிற சிறுபத்திரிகைகள் பற்றிய நூல் தொகுப்பு தந்த புரிதலும், சமீபத்தில் கங்கு வரிசையில் வெளிவந்த பேரா. வீ.அரசுவின் சிறுபத்திரிகை அரசியல் என்கிற குறுநூல் கொடுத்த சிந்தனை கணமும் என்னை மேலும் சிறுபத்திரிகைகள் குறித்த வாசிக்கவும் பேசவும் செய்தன. அந்தவகையில் தமிழில் பன்முகப்பட்ட சிந்தனை ஓட்டங்களை வாசக மனங்களில் விதைத்து, அவ்விதைப்பின் ஆகப் பயனாக அறிவார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்பிய சாதனை தமிழில் சிறுபத்திரிகை வழி சாத்தியமாகிறது. மேலும் சமூக வெளியின் இன்றாம் இயங்குகின்ற செயல்பாடுகளை (தனிமனித செயல்பாடுகள் உள்ளிட்ட) கூர்ந்து அவதானித்து அதில் அறத்தின் பாற்பட்ட வாதங்களை அழுத்தமாகப் பதிவுசெய்தலைச் சிறுபத்திரிகைகளும் அதன் வெளியீட்டாளர்களும் மிகுந்த சுரணையோடு செய்தனர். இத்தகைய சுரணையின் தொடக்கப் புள்ளிகளை மணிக்கொடி (1930), சூறாவளி (1939), சக்தி (1939), சரஸ்வதி (1954), எழுத்து (1959) முதலான இதழ்களின் செயல்பாட்டின்வழி வெகுவாக உள்வாங்க முடியும்.

மேற்கத்திய சிந்தனைகளை அப்படியே பிரதிபலிக்கும் விமர்சன முறை, தமிழின் வளமான கவிதை மரபு தந்த எழுச்சி, இடதுசாரி பார்யோடு அணுகும் போக்கு, நவீன சிந்தனைகளை மரபிலக்கியத்தோடு பொருத்திப் பார்க்கும் முயற்சி எனச் சிறுபத்திரிகை சூழலோடு இணைந்த நிலையில் தமிழின் கலை இலக்கிய முயற்சிகள் விரிந்த தளத்தில் நடைபெற்று வந்துள்ளன. இத்தகைய செழுமையான போக்குகளை உள்வாங்கியவர்களாகவும் அவற்றின் வெளியீட்டு வரலாற்றை நன்கறிந்தவர்களாகவும் திகழ்கின்ற சமகால சிறுபத்திரிகையாளர் குறித்தும், அவர்களின் முயற்சியில் இயங்கும் சிறு பத்திரிகைகளின் நேர்மை குறித்தும் சில உரையாடல்களை இக்கட்டுரை நிகழ்த்த விருக்கிறது. சமகாலம் என்று ஒரு வசதிக்காக 1980களுக்குப் பிறகான காலக்கட்டத்தை எடுத்துக்கொள்வோம். மேலும் சமகாலம் என்று 80களுக்குப் பிறகான காலக்கட்டத்தை முன்னிறுத்துவதற்கு காரணம், மானிட அற ஒழுக்கத்தின் மீதான சில சிந்தனை முன்னெடுப்புகள் இக்காலச் சூழலில்தான் வெகுவாகப் பேசப்பட்டன. அந்தவகையில் சமூக இயங்கியலுக்குள் பெண் இருப்பின் அவசியம் குறித்தும், பெண்ணிய சொல்லாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் காத்திரமான விவாதங்கள் இக்காலச் சூழலில் தான் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக விளிம்புநிலை மக்களான தலித்துகளைப் பற்றிய வாழ்வியல் பாதிப்புகளும், பெருங்கதையாடலாக முன்னிறுத்தப்பட்டன.

மேற்குறிப்பிட்ட பொருண்மைகள் சார்ந்த முதன்முதலில் தமிழ்ச் சூழலில் படிகள் (1983) இதழும் நிறப்பிரிகை (1983) இதழுமே நேர்மையான, அதே நேரத்தில் சமூக அக்கறையோடும் தன் பங்களிப்பை செய்தன. அந்தவகையில் படிகள் இதழில் தமிழவன் எழுப்பிய தமிழில் தலித் இலக்கியம் தோன்றுமா? என்கிற கேள்வியும், தொடர்ந்து அவ்விதழ்களின் வேறு வேறு வெளியீடுகளில் எழுதப்பட்ட தலித் இலக்கிய விவாதங்களும், 1983 இல் இந்திரன் மொழிபெயர்த்த அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் கவிதை தொகுப்பு தந்த உத்வேகமும் தமிழில் தலித் இலக்கியச் சொல்லாடல்கள் தோன்றுவதற்கு முன் முயற்சிகளாக அமைந்தன. தலித் இலக்கியத்தின் ஒட்டுமொத்த எழுச்சியை 1990களுக்குப் பிறகு நடந்த அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாட்டங்களிலே வெகுவாகக் காணமுடிந்தது. இதன் வளர்ச்சியில் நிறப்பிரிகை சிற்றிதழின் செயல்பாடுகள் என்பவை அபாரமானவையாகும்.

மேலும் தலித் என்பவர் யார்? தலித் இலக்கியத்திற்கான கோட்பாடுகள் எவை? என்பதான விளக்குமுறை பதிவுகள் இவ்விதழின் வழியே முன்னெடுக்கப்பட்டன. பின்னளில் இந்தியாடுடே (1995) போன்ற வெகுசன இதழ்களிலும் தலித், தலித் இலக்கியம் குறித்த உரையாடல்கள் கவனம் பெற்றன. எனினும் பெரிய அளவில் வெகுசன இதழ்களில் தலித்தியம், பெண்ணியம் குறித்து விவாதிக்கப்படவில்லை. அதோடு வெகுமக்கள் தளத்திலும் இச்சிந்தனைகள் குறித்த பார்வை கிஞ்சித்தும் இல்லாமல் இருப்பதையும் உள்வாங்க முடிகிறது. மாறாகச் சிறுபத்திரிகை தளத்திலும், அறிவுஜீவிகள் தளத்திலும் மட்டுமே இச்சிந்தனைகள் சிரத்தையாகப் பேசப்பட்டன. வெகுசன பத்திரிகைகளிலிருந்தும் வேறுபடும் சிறுபத்திரிகையின் செயல்பாடு குறித்து வீ.அரசுவின் கருத்தைப் பதிவுசெய்வது அவசியமாகும்.

சமூகத்தில் கட்டப்படும் நம்பிக்கை சார்ந்த சடங்குகள் அவைகளின் மூலமாக உருப்பெரும் விழுமியங்களாகிய பிறவற்றை வெகுசனப் பண்பாடு கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ளும் மாறாகச் சிறுபத்திரிக்கைப் பண்பாடு இதனைக் கேள்விக்குள்ளாக்கும் என்கிறார்.

இனி 1980களுக்குப் பிறகு வெளிவந்த சிற்றிதழ்களைக் குறித்தும், அவற்றின் வெளியீட்டு பொருண்மை சார்ந்தும் சில விவாதங்களை முன்வைப்போம். அந்த வகையில் காலச்சுவடு (1988), உயிர்மை (2003), தீராநதி (2005), தமிழினி (2006), புதுவிசை (2007), உயிர்எழுத்து (2008) முதலான இதழ்கள் கலை இலக்கிய வெளி சார்ந்தும் புதிய காலசாரம், புதிய ஜனநாயகம், புதிய பார்வை முதலான இதழ்கள் அரசியல் வெளிசார்ந்தும் தலித் (சில இதழ்கள்), தலித் முரசு (1997), புதிய கோடாங்கி (2005), கவிதாசரண், போதி (2005) (சில இதழ்கள்) முதலான இதழ்கள் தலித்திய வெளிசார்ந்தும், பனிக்டம் (2006), அணங்கு (2006) முதலான இதழ்கள் பெண் வெளி சார்ந்தும் ஆகப்பெரும் பான்மையோடு வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சுந்தரராமசாமியின் தீராத கலை இலக்கியத்தேடலின் வெளியீடாகக் காலச்சுவடு சிற்றிதழ் உருப்பெற்றது. தொடக்கத்தில் கவிதை, புனைவு, இலக்கிய விமர்சனம் என விரிந்த அவரின் சிறுபத்திரிகை அவதாரம், மெல்ல மெல்ல தலித்தியம், பெண்ணியம் சார்ந்த உரையாடல்களையும், அவை தனித்து இயங்க வேண்டியதன் பின்புலத்தையும் சுட்டிக்காட்டி பல இளம்படைப்பாளர்க்ளைக் காலச்சுவடின் வழி எழுதத் தூண்டினர். இருப்பினும் பெரிய அளவில் அம்முயற்சிகளைக் காலச்சுவட்டில் மேற்கொண்டார் எனவும் சொல்ல முடியாது. வெறுமனே சார்பு நிலையில் மட்டுமே அவ்விவாதங்களை முன்னெடுத்தார். பின்னாளில் அவர் மறைவுக்குப் பிறகு அவரின் மகன் (கண்ணன்) கலை இலக்கிய அரசியல் நோக்கி சில ஆக்கப்பூர்வமான கருத்தாடல்களை ஓரளவு முன்னெடுத்தார் என்று சொல்லலாம். அந்த வகையில் பெரியார் 125, சிறப்பிதழ் (2004), உ.வே.சா. சிறப்பிதழ் (2005), பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி சிறப்பிதழ் (2006), தமிழர் உணவு வகைகள் சிறப்பிதழ் (2006), தலித் சிறப்பிதழ் (2008) எனப் பரந்துப்பட்ட தளத்தில் காலச்சுவடு இதழின் செயல்பாட்டை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். காலச்சவடு இதழின் வழி கூட்டிணைந்து செயல்பட்ட மனுஷ்யபுத்ரன் அதிலிருந்து வெளியேறி 2003இல் உயிர்மை என்கிற இதழைக் காலச்சுவட்டின் மாதிரி வடிவமாகவே அவ்விதழை அவர் வெளிகொண்டு வந்தார். ணூலை இலக்கிய அரசியல், சினிமா குறித்து பேச தனக்கென ஒரு எழுத்தாளர் கூட்டத்தை விரித்துக் கொண்டு, பின்னாளில் உயிர்மை பதிப்பகம் ஒன்றையும் ஏற்படுத்தினார். பத்திரிகைகளின் வழி பதிப்பகம் உருப்பெறுதல் என்பது சி.ச.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகை தோன்றிய காலத்திலே இம்முயற்சி நடந்தது என்பதனைப் புரிந்துகொள்ளலாம். ஒரு வகையில் காலச்சுவடு, உயிர்மை என்கிற இவ்விரண்டு சிற்றிதழ்களும் தனிமனித அடையாளத்தைப் பேணுவதாகவே உள்ளது.

இதன் நீட்சியைச் சமகாலச் சிற்றிதழ்கள் வரை பார்க்கமுடிகிறது. மேலும் இவ்விரு சிற்றிதழ்களின் இன்றைய நோக்கம் என்பது, இதழ்களில் தொடர்ந்து வருகின்ற கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கங்கள், பத்திகள் முதலானவற்றைத் தொகுத்து அவற்றைப் புத்தகங்களாக அச்சடித்து தன் பதிப்பகக் கணக்கில் புத்தகங்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதிரேயே குறியாக இருக்கின்றன. இப்பணியை வெகுஜோராகவும் அவை (அவர்கள்) செய்து வருகின்றன(ர்). கடந்த மூன்றாண்டுகளில் நடைபெறும் கொத்து கொத்தான நூல் வெளியீடுகள் இதற்குச் சாட்சியங்களாத் திகழ்கின்றன.

காலச்சுவடு சிற்றிதழ் முன்னெடுத்த தலித்திய, பெண்ணிய விளிம்புநிலை கருத்தாடல்களை உயிர்மை சிற்றிதழ் கிஞ்சித்தும் முன்னெடுக்கவில்லை. அதற்கு மனுஷ்ய புத்திரன் சொல்லும் காரணம் தன்னுடைய பத்திரிகை ஒரு இடைநிலை பத்திரிகை என்பதாகும். இடைநிலையோ கடைநிலையோ சமகாலச் சூழலில் பரவலாக விவாதிக்கப்படும் ஒரு கருத்தியல் பற்றிச் சிறிதும் பேசாத ஒரு பத்திரிகையைச் சிறுபத்திரிகை வரலாற்றின் ஒரு சாபக்கேடு என்றே சொல்லத் துணிகிறது. இருப்பினும் இவ்விரு (காலச்சுவடு, உயிர்மை) இதழ்களின் தோற்றத்தின் மூலம் சிறுபத்திரிகைக்கான வாசகப் பரப்பு என்பது கணிசமான அளவில் கூடியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. இத்தகைய சிற்றிதழ் வாசிப்பானது மாணவர்கள் மத்தியில் கல்வித் துறை சார்ந்த நிலையிலேயே பெருமளவு நிகழ்ந்து வருகிறது. எனக்கும் (2005-2009) இப்படியான அனுபவமே சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறை சார்ந்து ஏற்பட்டது.

குமுதம் என்கிற வெகுசன இதழின் மாற்றான கலை இலக்கியச் சிற்றிதழ் தீராநதி (2005). இவ்விதழின் ஒட்டுமொத்த பங்களிப்பு என்பது நவீன வாசகர்களுக்கு ஆறுதல் ஏற்படும் வண்ணம் திகழ்கிறது. மேலும் எவ்வித அரசியலுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத வண்ணம் நேர்கோட்டு தளத்தில் கவனிக்கத்தக்கதாக உள்ளது. தமிழினி பதிப்பகத்தின் சிறந்த நூல்களின் வெளியீட்டு முயற்சிகளின் ஊடாகக் காலம் கடந்து வெளிவரும் சிற்றிதழ் தமிழினி என்பதாகும். பதிப்பகங்கள் தனியாகச் சிறுபத்திரிகை ஒன்றை வெளியிட்டு தன் பங்கிற்குக் கலை இலக்கியம் சார்ந்து எத்தனிக்க முயற்சிக்கின்றன. அந்த வரிசையில் தமிழினி பதிப்பகத்தால் தமிழினி சிற்றிதழ் தோற்றுவிக்கப்பட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இதனைக் காலம் கடந்த நூற்றாண்டு பத்திரிகை என்று அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அதன் அட்டைப்படம் அவர்களை அப்படிச் சொல்லச் செய்கிறது. மாறாகப் பெரிய வாசக அதிர்வை ஏற்படுத்தியது என்று சொல்ல முடியாது.

கலை இலக்கிய விவாதங்களை முற்றாகத் தவிர்த்த நிலையில் அரசியல் களத்தில் அரசியல்வாதிகளின் மூர்க்கத்தனங்களையும், நரித்தனங்களையும் யார்மீதும் பாரபட்சமின்றி தோளுரித்துக் காட்டுதல் என்கிற புரிதலோடு மார்க்சிய, இடதுசாரி சார்புடைய பார்வைகள் 1970களிலே தமிழ்ச் சூழலில் புகுந்துவிட்டன. இதில் தொடக்கக் கால மனிதன், புதிய மனிதன் இதழ்களின் பங்களிப்பைக் கொண்டு தனித்து சுட்டலாம். இதன் நீட்சியில் சமகாலத்தில் புதிய கலாசாரம், புதிய ஜனநாயகம் இதழ்களும் தோன்றி அரசியல் குறித்த எதிர்பார்வையை வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கான வாசகர் கூட்டம் என்பதும் இப்பத்திரிகைகள் ஆட்களைத் தேடி விற்கப்படும் முறை என்பதும் சமகாலத்தில் அவலமான போக்கையே காட்டுகிறது. தோழர் வீராசாமி என்பவரிடம் இப்பத்திரிகைகளை வாங்கிப் படித்த அனுபவம் எனக்கு உண்டு.

தமிழ் சிறுபத்திரிகை மரபில் தலித்திய உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட முறை குறித்தும், அவை விவாதிக்கப்பட்ட போக்குகள் குறித்தும், தனித்த நிலையில் சுட்ட வேண்டும். அந்த வகையில் நிறப்பிரிகை தொடங்கி வைத்த இவ்விவாதங்கள் 1990களுக்குப் பிறகு தனித்த நிலையில் (அவற்றின் தலைப்பு உட்பட) சில சிற்றிதழ்கள் தோற்றுவிக்கப்பட்டன. தலித் முரசு (1997), தலித், போதி, புதிய கோடங்கி, கவிதாசரண் இதழ்களின் ஊடான தலித்துகளின் பிரச்சனைகளும், சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளான அவர்களின் வாழ்வியல் அவலங்களும் காத்திரமாகப் பதிவுசெய்யப்பட்டு வெளிவந்தன. இதில் தலித் முரசு இதழ் தலித்துகளின் அவல வாழ்க்கையைக் காட்டுப்படுத்துதல், அவை குறித்த எதிர்வினையைப் பதிவுசெய்தல் என்கிற குறுகிய தளத்திலே இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது. மாறாக, தலித், தலித் இலக்கியக் கோட்பாடுகள், தலித்திய விவாதங்கள் சார்ந்து பெருமளவில் இக்கறை கொண்டதாகச் சொல்ல முடியாது. புதிய கோடாங்கி இதழும் இப்போக்கையே கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் தலித், போதி (வெளிவந்த சில இதழ்கள்) சிற்றிதழ்கள், மேற்சுட்டிய கோட்பாடுகளுக்கும், விவாதங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தது என்பது தனித்து பார்க்க வேண்டியதாகும். இதோடு கவிதாசரண், புதுவிசையின் சமீபத்திய முயற்சிகள் ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதாக வெளிவருகிறது.

சிறுபத்திரிகை செயல்பாட்டின் நீட்சியாக இன்று தலித் படைப்புகள் பல வீரியமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் பாமா, சிவகாமி, இமையம், அழகிய பெரியவன் போன்றோரின் படைப்புகள் குறிப்பிடத்தக்க கவனிப்பைப் பெற்றுள்ளன.

1980களில் கட்டி எழுப்பப்பட்ட பெண்ணிய சொல்லாடல்கள், விவாதங்கள் அன்றையச் சூழலில் ஒரு சில பெண் படைப்பாளர்கள் (அம்மை, சிவாகமி, ராஜம் கிருஷ்ணன்) மட்டத்திலேயே எழுந்து, அது பற்றிய சில நூல்கள் எழுதி வெளியிடல் என்பதாக அமைந்ததே தவிர தனித்த நிலையில் சிறுபத்திரிகைகளில் விவாதிக்கப்படவோ, பேசப்படவோ இல்லை. இந்த அவலம் 90கள் வரை தொடர்ந்தது. 90களுக்குப் பிறகு தலித்திய விவாதங்களினூடே தலித் பெண்ணியம் என்பதாக ஓரளவு பேசப்பட்டது. படைப்பு என்கிற தளத்தில் கவிதையில் மட்டுமே பெண்களின் முயற்சி கணிசமான அளவு வெளிப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று வரை நீள்கிறது. பொதுவாகப் பெண்களின் படைப்பு முயற்சி என்பது பெருமளவு கவிதையில் தொடங்கிக் கவிதையிலே முடிவதாக இருக்கிறது. பிற இலக்கிய வகைகளில் (புனைவு, சிறுகதை, விமர்சனம்) விரல்விட்டு எண்ணும்படியான படைப்புகளே வெளிவந்துள்ளது. இது ஏன்? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இப்புதிரை உடைத்து பெண்ணிய வெளி என்பது பல பரிமாணங்களில் ஊடாடிச் செல்லுவதாக வெளிப்படல் வேண்டும்.

அந்தவகையில் பெண் வெளி குறித்த தேடலை, அவ்வெழுத்துக்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பனிக்குடம், அணங்கு என்ற இவ்விரு இதழ்கள் எழுச்சி கொண்டன. பெண் உடல் எழுத்துக்களின் மீதான அரசியலும், தலித் பெண்ணிய அரசியலும் காத்திரமான நிலையில் விவாதிக்கப்பட்டன. இருப்பினும் இவ்விரு இதழ்களில் மட்டுமே வெளிப்படும் பெண்வெளியின் போதாமையை நவீனத் தமிழ்ச் சமூகம் புரிந்துகொண்டு பல மாற்று இதழ்களின் தோற்றத்திற்கும் வழிவகுக்க வேண்டும்.

78 ஆண்டுகாலச் சிறுபத்திரிகைச் சூழலில் கலை இலக்கியம் சார்ந்த பொருண்மையின் விவாதங்களின் ஊடே, நூல்களில் அறிமுகம் (அ) விமர்சனம் என்கிற சிற்றிதழ்களின் பக்க அளவின் போதாமையை உணர்ந்து சமகாலத்தில் சிற்றிதழ்களின் மொத்த வெளியீட்டையும் நூல் விமர்சனப் பகுதிக்கு மாற்றுதல் என்கிற போக்கில் புதிய புத்தகம் பேசுது (2007), உங்கள் நூலகம் முதலான சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சமீபகாலமாகச் சிற்றிதழ்களின் வெளியீட்டு முறையும், அதன் செயல்பாடுகளும் வாசகர் மத்தியில் வாசிப்பு நிலையில் மந்தமான போக்கு நிகழ்வதைக் கவனிக்க முடிகிறது. அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று எல்லா சிற்றிதழ்களின் பொருண்மையும் ஒரே தரத்திலே விளங்குவதாகும். மற்றொரு காரணம் இச்சிற்றிதழ்கிள்ல எழுதுகின்ற படைப்பாளர்கள் இன்று வெகுசன இதழ்களில் (ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம்,ஜூனியர் விகடன்) தன் எழுத்துக்களை எழுதுவதில் பெருவிருப்பு கொண்டவர்களாகத் திகழ்வதுமாகும். வெகுசன சினிமாவை நோக்கிய இவர்களின் செயல்பாட்டையும் இச்சூழலிலேயே புரிந்துகொள்ள வேண்டும். ஒருவகையில் வெகுசன இதழ்களில் எழுதுதல் என்பது வெகுமக்களையும் தீவிர இலக்கிய வாசிப்புக்குத் தூண்டுதல் என்கிற முயற்சியாகவும் இதனைப் புரிந்துகொள்ளலாம். மாறாகத் தன் சுய வாழ்க்கையை உயர்த்தலுக்குத் தேவையான பொருளீட்டலுக்குத்தான் அவர்களின் பயணம் என்றால் சிறு பத்திரிகை வரலாற்றில் அவலமும் சோகமும் ஏற்படும் என்பது மறுப்பதற்கில்லை.

2008க்குப் பிறகு தமிழ்ப் பேராசிரியர்கள் தான் வேலை செய்கின்ற கல்வித்துறையோடு சேர்ந்த நிலையில் சிறுபத்திரிகையை வெளியிடுதல் என்பது, இயல்பாக அவர்களுக்குள் இருக்கும் கலை, இலக்கிய வரலாற்றுப் புரிதலை மேலும் தமிழ்ச் சூழலில் தன் பங்கிற்கு உரையாடி விட்டு செல்லுதல் என்பதாகவே சிறுபத்திரிகைகளை வெளியிடுகின்றனர். அந்த வகையில் 2008, மற்றும் 2009 முதல் வெளிவருகின்ற நோக்கு, பனுவல் மற்றும் மாற்றுவெளி சிற்றிதழ்களின் தற்கால முயற்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் இலக்கிய இலக்கண ஆய்வுகளை மீள்வாசிப்பு செய்தல் என்கிற தளத்தில் நோக்கு பனுவல் (இணைய வழி ஆய்விதழ்) இதழ்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து வேறான தளத்தில் மாற்றுவெளி இதழ் பரிமளிக்கிறது. மாற்றுவெளி இதழின் தனித்து சிறப்பு என்னவென்றால் இளம் ஆய்வுமாணவர்களின் சிந்தனைக்கு வழி வகுப்பதாகவும், அவர்களின் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அடையாளம் கொண்டுள்ளது.

புதுப்புனல் வழங்கும் காலாண்டிதழாக வெளிவந்த பன்முகம் (2002-2006) புனைவின் வழி வாசகப் பரப்பை தனித்த நிலையில் முன்னெடுத்தது. இன்று (செப்டம்பர் 2009 முதல்) புதுப்புனல் என்கிற புது வடிவெடுத்து வாசக அங்கீகாரத்தைக் கோரி நிற்கிறது. புதுப்புனல் வெளியீட்டு முயற்சியில் நவீனச் சிந்தனைகளும், அச்சிந்தனைகளின் மீதான உரையாடல்களும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் புதுப்புனல் தனது இடத்தை முழுமையான அளவில் நிரப்பும் என்பது திண்ணம். இன்றும் மாணவர்கள் மத்தியில் கையெழுத்து பிரதிகளாவும் குறைந்த பக்கங்கள் கொண்ட பத்திரிகைகளாகவும் சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. சிற்றிதழ்களின் இத்தகைய செயல்பாடுகள் அவற்றின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதோடு அவற்றின் முக்கியத்துவத்தையும் நவீன வாசகனுக்குக் காலச்சூழல் ஓட்டத்தின் ஊடே விளக்கிச் சொல்லும் என்பது நிதர்சனமாகும்.
————-

Series Navigationரோஜர் எபர்ட் – ஒரு சினிமா விமர்சகனின் பயணம்.வடிவம் மரபு: பத்துப்பாட்டு
author

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா says:

    ‘சிற்றிதழ்’ என்ற வரையறையைக் கட்டுரையாளர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று கருதுகிறேன். ஒன்று, சிறிய எண்ணிக்கையில் விற்பனையாவது, இரண்டு, பொருளாதாரப் பின்புலம் இல்லாமல் நடத்தப்படுவது – என்னும் இரண்டு நிபந்தனைகளுமே பூர்த்தி செய்யப்பட்டால் தான் ஓர் இதழைச் சிற்றிதழாகக் கொள்ளமுடியும். எனவே, ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’, மற்றும் சர்வ வல்லமை பொருந்திய குமுதம் குடும்பத்திலிருந்து வெளியாகும் ‘தீராநதி’ ஆகிய மூன்றும் சிற்றிதழ் என்ற வரையறையிலிருந்து வெளியேறிவிடுவதை மறக்க வேண்டாம். இந்த மூன்றையும் சிற்றிதழ்களாகக் கருதித்தான் ஆக வேண்டுமென்றால், கலைமகள், அமுதசுரபி இரண்டையும் கூட நாம் சிற்றிதழ்களாகத்தான் பார்க்கவேண்டும். அவைகளும் குறைவாக விற்பனையாகும் இதழ்களே! – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *