சமுத்திரக்கனியின் போராளி

This entry is part 27 of 39 in the series 4 டிசம்பர் 2011

சிறகு இரவிச்சந்திரன்

சம்பவங்களே கதையை நகர்த்திச் செல்லும் உத்தியை கடைபிடித்து வெற்றியை எட்டும் •பார்முலாவை நாடோடிகள் படத்தில் கையாண்ட இயக்குனர், இதிலும் அதையே தொடர்கிறார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவது, இவர் கை தேர்ந்த ரசிக நாடி இயக்குனர் என்று காட்டுகிறது.
பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இருவர் கதாநாயகர்கள். காற்று அடிக்கும் பெண்ணும் குரூப் டான்ஸ் நடிகையும் கதை நாயகிகள். கரடி வேசம், காண்டாமிருக வேசம் எனப் போடும் ரூம் மேட். ஒண்டு குடுத்தன கதைகளில் வரும் அந்தணக் குடும்பங்களைத் தவிர்த்து மைய வாழ்வுக்குப் போராடும் வானவில் குடும்பங்கள்.
•பீல் குட் காட்சிகளாக அடுக்கி இடைவேளையில் ஒரு டிவிஸ்ட். பிறகு ஓட்டம், தப்பித்தல், போராடல் என ‘நாடோடிகள்’ ரகம்.
ரசிகனுக்கு லாஜிக் பற்றி எண்ணக் கூட நேரம் இல்லாமல் அடுக்கடுக்காய் காட்சிகள், சுவையான திருப்பங்கள் என இரண்டே கால் மணிநேரம் குளூவ்ட் டு தி ஸீட் தான்.
குறைவான வசனங்கள்.. ஆனால் செமை ஷார்ப். தியேட்டரில் டி டி எஸ் ஒலியைக் குறைக்கவேயில்லை. குறைத்தால் சில வசனங்கள் கேட்காமல் போய்விடுமோ என்கிற அச்சம்.
குமரன் { சசிகுமார் }, பாரதி ( சுவாதி), தமிழ்செல்வி (நிவேதா), அல்லரி நரேஷ் என நான்கு பாத்திரங்கள். பக்கா சென்னைத் தமிழ் பேசும் தமிழ்ச்செல்வி, ஒன்று கேட்டால் பத்து கேள்விகளை அடுக்கும் எதிர்காலம் பற்றிய பயம் உள்ள பாரதி, செல்வியைக் காதலிக்கும் நரேஷ், எதற்கும் கோபப்படாத குமரன்.
சின்ன சின்ன பாத்திரங்கள் காட்டும் மாறுபட்ட குணாதிசயங்கள்.
குடித்துவிட்டு தொலைக்காட்சியை அலறவிடும் பாத்திரம், ஆங்கிலம் அறியாத குமரனுக்கும் நரேஷ¤க்கும் உதவுவது, ஆங்கிலம் பேசும் பாத்திரம் மனைவியுடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது, கு. ஞானசம்பந்தன் { ‘ தீர்ப்புக்காகத் தான் வெயிட் பண்றேன்.. நாந்தான் சொல்லுவேன் ‘ }எப்போது எதையும் பட்டிமன்ற பாணியிலேயே அணுகுவது, மச்சினியைக் கல்யாணம் செய்து கொள்ள மனைவியைப் பைத்தியம் என்று நாடகமாடும் பாத்திரம், அனாதைகளாக ஏஞ்சல் எனும் பாட்டி, டீன் ஏஜ் பெண், பாரதியுடன்{ அவளுக்கும் யாருமில்லை } வாழும் அற்புதம்.
முதல் பாதி முழுவதும் யதார்த்த நகைச்சுவை. சாம்பிளுக்கு கொஞ்சம்..
‘ என்னா பேச்சு பேசறா, காது குடுத்து கேட்க முடியல ‘ – நரேஷ்
‘ அவ பேரு என்னா தெரியுமா.. தமிழ்ச்செல்வி.. ‘ – குமரன்
0
‘ சிலோன்ற பேரே நமக்குப் புடிக்காது இதுல அந்தப் பேர்ல பரோட்டா வேணுமாம் ‘
0
‘ வூட்டுல தம் புள்ளைங்க படிக்கணும்னு கேபிளைக் கட் பண்ணிட்டு பக்கத்து வீட்ல போய் சீரியல் பாக்கறது ‘
0
( ஞானசம்பந்தனைப் பற்றி ) ‘ வெள்ளையும் சள்ளையுமா டீசண்டா இருந்தாரு.. அவரக் கொணாந்து இங்கன போட்டு அசிங்கப்படுத்தறாய்ங்களே ‘
0
ஷார்ப் வசனங்களுக்கு ஒரு பதம்: குமரன் சொல்கிறான் பாரதியிடம்:
‘ நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. ‘
ரசிகனின் எதிர்பார்ப்பைக் கிளறி விட்டு கதையை முன்னெடுத்துப் போகும் இது.
0
பின்பாதி அதகளம். சைல்ட் பிராடிஜியான குமரனை சொத்துக்காக படிப்பை நிறுத்தி, சாணி அள்ள வைத்து, இருட்டறையில் போட்டு, முடி வெட்டாமல் ஒரு தற்குறியாக மாற்றும் அவலம். இடையில் வயதான சித்தப்பா, இளம் வயது சித்தி, அவள் மகன், கூடவே இருக்கும் அவள் அண்ணன், குமரன் மீது பாசம் வைத்திருக்கும் வாரிசில்லாத பெரியப்பா, யுரேனியம் கிடைக்கும் நிலம், குமரனின் மனநலக் காப்பக வாசம், நரேஷ¤டன் சந்திப்பு, அங்கிருந்து புது வாழ்வு ஆரம்பிக்க நகரம் பெயர்தலென •ப்ளாஷ்பேக்.
‘ இப்படியே ஓடிட்டே இருக்க வேண்டியதுதானா? ‘ என்ற பாரதி கேள்விக்குப் பின் தெளிவு ஏற்பட்டு திருப்பி அடிக்கிறான் குமரன். எல்லாம் முடிந்தது என்கிற நிலையில் நரேஷைத் தேடி ஆந்திர ரவுடிகள் கூட்டம் ஜீப், குதிரைகள் என வருவதுடன் படம் முடிகிறது. இரண்டாம் பாகத்துக்கு அஸ்திவாரம்?
மலையாளத்தில் சசிகுமாருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இருக்காதா பின்னே? யதார்த்த நடிப்பு, புருவம் உயர்த்துதல் கூட கிடையாது. இன்னொரு ப்ளஸ் பாயிண்ட், சிரிக்கும் போது அவர் கண்களும் சிரிக்கின்றன. சுவாதி, நரேஷ், நிவேதா என யாரும் சோடை போகவில்லை. துல்லியமான ஒலிப்பதிவு, இரண்டே பாடல்கள்.. அதில் ஒன்று நாடோடிகள் சம்போ சிவ சம்போ ரகம். ஓரிரு காட்சிகளில் வரும் பேராண்மை வசுந்தரா அசத்தல்.
நாடோடிகள் படம் போலவே, பார்த்துவிட்டு வந்த பிறகும் கூட இதன் பல காட்சிகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
வெற்றிப் படத்திற்கு அதுதானே இலக்கணம்?
0

Series Navigationநனைந்த பூனைக்குட்டிசரதல்பம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *