சலனங்கள்

This entry is part 6 of 22 in the series 24 ஜனவரி 2016

cinthuja

சிவக்குமார் வீட்டுக்குள் வரும் போது , நாச்சியார் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் .

‘ ஒ, நல்ல வேளையா டயத்துக்கு வந்துட்டேள் .கிச்சன்ல டிகாக் ஷன்  இறக்கி வச்சிருக்கேன் .ஏற்கனவே பால் காய்ச்சி  வச்சாச்சு . அதை சுடப்பண்ணி காப்பி கலந்து குடியுங்கோ . நான்
கோயிலுக்கு கிளம்பிண்டு இருக்கேன் ” என்றபடி வாசல் கதவுக்குப் பக்கத்திலிருந்த செருப்பு ஸ்டாண்டிலிருந்து செருப்பை எடுத்துப் போட்டுக் கொண்டாள். அவன் பதிலை எதிர்பார்க்கிறமாதிரி
அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள் .

” நீ எத்தனை மணிக்கு திரும்பி வருவே ? ” என்று சிவக்குமார் அவளைக் கேட்டான் .

” அங்க எப்படி கூட்டம் வரதோ , அதைப் பொறுத்து இருக்கு . நான் எதுக்கும் உங்களுக்கு போன் பண்ணறேன்  ” என்று கையிலிருந்த செல் போனைக் காட்டினாள் .

காலையில் , அவன் ஆபிசுக்குக் கிளம்பும் போதே , அன்று மாலை கோயிலுக்குப் போகும் தன் நிகழ்ச்சி நிரலை அவனிடம் நாச்சியார் தெரிவித்து விட்டாள் . குமாரா பார்க்கில் உள்ள முருகன் கோயிலுக்கு ஒரு சுவாமிஜி வந்திருக்கிறாராம். அவர் வந்து ஒரு வாரமாகிறதாம் . அவரைப் பார்க்க அப்படி ஒரு கூட்டம் காலையும் , மாலையும் அலை மோதுகிறதாம் .தரிசனம் பண்ண வருகிறவர்களுக்கு ஆசிர்வாதம் பண்ணுகிறார் . சில சமயம் , நமஸ்காரம் பண்ணுபவர்களில் சிலருக்கு புஷ்பமோ  , அட்சதையோ தரும்  போது,அவர்களுக்கு நடக்கப் போகும் நல்லது பற்றி சொல்வாராம் . நல்லது பற்றி மட்டும்தான். கெட்டது பற்றி இல்லை .
அதனால்தானோ என்னவோ , அப்படி ஒரு கூட்டம் . அவர் கொடுக்கும் அத்தகைய வாக்குகள் அப்படியே பலித்து விடுகின்றன என்று நாச்சியார் சொன்னாள் .
.
சிவக்குமார் சிரித்துக் கொண்டே ” ஒரு சமயம், இதெல்லாம் அவருடைய  ஆட்களே கிளப்பி விடற ரீலோ ? ” என்று கேட்டான் .

” உங்களுக்கு எதிலையுமே நம்பிக்கை கிடையாது ” என்று நாச்சியார் கோபப் பட்டாள் .” அவரென்ன அரசியல்வாதியா ,ஆள் வச்சு புரட்டல் எல்லாம் பண்ணறதுக்கு ? ”

” ஆன்மிகவாதியும் , ஒருவிதமான அரசியல்வாதிதான் . பேர் , புகழ் , பணம் , செல்வாக்கு ,கூட்டம் , கால்ல  விழறது, யோசிச்சுப் பாரு , இதெல்லாம் ரெண்டு பேருக்கும் ஒத்துமையை
காமிக்கிற விஷயம் இல்லையா ? ” என்றான் சிவக்குமார்.

நாச்சியார் ஒன்றும் பேசாமல் அவனை முறைத்துப் பார்த்து விட்டு வாசலுக்குச் சென்றாள் . அவனுக்குத் தர அவளிடம் சரியான பதில் இல்லை என்பதுதான் உண்மை …

சிவக்குமார் உடைகளை மாற்றிக் கொள்ளாமலே , சமயலறைக்குச் சென்றான் . பாலைச் சுட வைத்து விட்டு ,பில்டரில் இருந்த  டிகாக்ஷனை எடுத்துக் காப்பியைக் கலந்து கொண்டான் . .
வாயில் விட்டுக் கொண்ட போது நாச்சியார் கலந்து கொடுக்கும் போது கிடைக்கும் ருசியும் மணமும் இல்லை என்று நினைத்தான் . சாமியார்கள் மீது அவனுக்குக் கோபம் ஏற்பட்டது …

மனைவி  வரும் வரை என்ன செய்யலாம் என்று யோசித்துக்

கொண்டே ஹாலுக்கு வந்தான் . தொலைக்  காட்சிப்  பெட்டியின் மீது பார்வை விழுந்தது. ஆனால் உடலையும், உள்ளத்தையும்
ஒரு சேர  வருத்திக் கொள்ளும் மனநிலையில்  அவன் இல்லை.

 

அடுத்த தெருவில் இருக்கும் அண்ணாவின் வீட்டுக்கு வேண்டுமானால் போய் விட்டு வரலாம்.அவரையும் பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போகிறது …

அப்போது டெலிபோன் ஒலித்தது.

சிவக்குமார் ” ஹலோ ” என்றான்.

” டேய்  ஷிவு, என்ன  பண்ணிக்கிட்டு இருக்கே ? ” என்றது எதிர் முனைக் குரல். பழனிவேல். இவன் எங்கிருந்து வந்தான் ? –

” டேய் பழனி, நீ எங்கேர்ந்து  பேசறே? ”

” எல்லாம் உங்க ஊர்லேர்ந்துதான். காலேல  வந்தேன். ஒரு பார்டிய பாக்கணும்னு . இன்னிக்கே முடிய வேண்டிய வேலை நாளைக்கி தள்ளிப் போயிடிச்சி. அதான் உனக்கு போன்  போட்டேன் .
நீ ப்ரீயா இருக்கியா இப்ப ? ”

“ப்ரீதான். நீ இப்ப எங்கே தங்கியிருக்கே ? ”

அவன் எம்.ஜி . ரோடு அருகே உள்ள ஒரு ஹோட்டல் பெயரைச் சொன்னான் . நட்சத்திர ஹோட்டல் .ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மதுரையில் அவன் ஒரு பெரிய  ரியல் எஸ்டேட் புள்ளி .இருவரும் மதுரையில் பள்ளிக் கூடக் காலத்திலிருந்து சிநேகிதர்கள் .

சிவக்குமார் பழனிவேலிடம் ” சரி, நான் கிளம்பி வரேன் . இந்த ஊர் டிராபிக்ல அஞ்சு கிலோமீட்டர் தூரத்தை கடக்கறதுக்கு ஒரு  மணி

நேரம் பிடிக்கும். அதுக்குள்ளே நான் வந்தாலே நீ  மயக்கம்
போட்டு விழாம இருக்கணும் .” எதிர்முனையில் பழனிவேலின் ‘கட கட ‘ச்  சிரிப்புசிவக்குமாரின் காதை  அறைந்தது .

ஆனால் சிவக்குமார்அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் பெற்றவனாய், அடுத்த அரை மணி நேரத்திலேயே, பழனியின் அறையில் இருந்தான் .

பழனி வழக்கம் போல  ”ஜிலு ஜிலு’வென்றிருந்தான் . அப்போதுதான் குளித்து விட்டு வந்தவன் போல எப்போதும் காணப்படுவான். இது உடல் வாகாக அமையப் பெற்றதா அல்லது அவன் மனத்தின்
மலர்ச்சியைப் பிரதிபலிக்கிறதா என்று சிவக்குமார்

மனதில்  ஒவ்வொரு முறையும் எழும் கேள்வி இம்முறையும் எழுந்தது .

இருவரும் பரஸ்பரம்  அவரவரைப் பற்றியும், குடும்பத்தைப்  பற்றியும் விசாரித்துக் கொண்டார்கள்.

” நீ என்ன மதுரையிலிருந்து திடீர்ன்னு பெங்களூருக்கு

வந்திருக்கே ? இங்க ஆபிஸ் ஏதாவது போடலாம்னு  உத்தேசமா?’ என்று கேட்டான் சிவக்குமார்.

” இல்லே. இங்க ஒரு பெரிய பிராப்பர்டி விலைக்கு  வருதுன்னு கேள்விப்பட்டு வந்தேன். ஆனா நினைச்ச மாதிரி படிய

மாட்டேங்குது .”

 

” அவன் யானை விலை , குதிரை விலை சொல்லுவான். நீ அடிமாட்டு விலைக்கு கேட்பே . கடைசீல உன் வழிக்குத்தான் வருவான் ” என்று சிவக்குமார் நண்பனைக் கேலி செய்தான்..

 

பழனி சிரித்துக் கொண்டு எழுந்தான். அறை  மூலையில் இருந்த ‘பாரி’ல் இருந்து ஒரு விஸ்கி கொண்டு வந்து, இரு தம்ளர்களில் நிரப்பினான். ஒரு தம்ளரை எடுத்து உயர்த்துப் பிடித்தபடி

” சியர்ஸ் ” என்றான்.. சிவக்குமார் இன்னொரு தம்ளரை எடுத்துக் கொண்டான்

 

” நீ நினைக்கிற மாதிரி இது விலையைப் பத்தின விவகாரமில்ல இப்ப. ”

 

சிவக்குமார் நண்பனை உற்றுப் பார்த்தான் .

 

” ஆமாம். என்ன விலை கொடுத்தாலும் அந்த இடத்தை தரப் போவதில்லேன்னு அடம் பிடிக்கிறா ”

.

” என்னது ! பிடிக்கிறாளா ? ”

 

” ஆமாம். மிசஸ் கோமதின்னு . திருநெல்வேலி பக்கம் . எந்தப் பேச்சுக்கும் மசிய மாட்டேங்கறா ” என்றான் பழனி, குரலில் சற்று ஏமாற்றம் தொனிக்க.

 

” என்ன காரணமாம் ? ” என்று கேட்டான் சிவக்குமார்.

 

“என்னோட ஏஜென்ட் இங்கே இருக்கானே, அவன் கொஞ்சம் குளறுபடி பண்ணிபிட்டான் . அந்த அம்மா கிட்டே பேசும் போது , இந்த இடத்தை வாங்கி ஃ பாக்டரி ஆரம்பிக்கிறோம்னு

பெருமையா சொல்லியிருக்கான் . அவ உடனே முடியாதுன்னு சொல்லிட்டா . ”

 

” அந்த  நிலத்தை எதுக்கு யூஸ் பண்ணினா அவ குடுப்பாளாம் ? ”

 

” அவ அப்பாவோட அப்பா எழுவது எம்பது வருஷத்துக்கு முன்னே இங்க வந்து சேர்ந்திருக்காரு . தாசில்தார் உத்தியோகமாம் .. நேர்மையான ஆள்தான். வேலை பார்த்து சம்பாதிச்சதிலே மிச்சம்

பண்ணி, அதிலே, அங்கே இங்கே கொஞ்சம் இடங்கள்லாம்

வாங்கிப் போட்டிருக்காரு.. இதுநாள் வரைக்கும்,வாங்கிப்  போட்ட ஒரு சொத்தையும் அந்தக் குடும்பத்துல யாரும் வித்தது

இல்லையாம். . ”  .

 

சிவக்குமார் அவன் மேலும் பேசட்டும் என்று காத்திருந்தான். தட்டில் இருந்த மிக்சரையும், இரண்டுகடலையையும் வாயில் போட்டு மென்றான் .தன கேள்விக்கு இன்னும் அவன் பதில் தரவில்லை.

 

“நிலம் கிட்டத்தட்ட பதினைந்து ஏக்கரா . இருக்கும் .மெய்ன்  ரோடு லேர்ந்து கொஞ்சம் உள்வாங்கி இருக்கு. மைசூர் போற ரோடுல ,ஆனா சிட்டி லிமிட்டுக்கு உள்ள இருக்கு . செம ப்ராபர்டி . வீடு கட்டறதுக்கோ,ஃ பாக்டரி நடத்தறதுக்கோ அந்த இடத்தை தர மாட்டாளாம். ஸ்கூலு, ஆஸ்பத்திரின்னு  ஏழைகளுக்காக தர்ம ஸ்தாபனம் நடத்தறேன்னா  தரேன்னு பிடிவாதமா இருக்கா. அதை நடத்துறதுக்கு, இடம் தவிர, பணமும் தரேன்னு சொல்றா., மானேஜ் மெண்டையும் , தான் இருந்து பாத்துக்கணும்னு கண்டிஷன் போடறா. ”

 

” இந்த ஜாயிண்ட் வெஞ்சர்  உனக்கு ஒத்து வராதுடா பழனி . நிலத்தைத் தவிர பணமும் தரேங்கிறான்னு சொல்றே.பெரிய கைதான் போல இருக்கு ” என்றான் சிவக்குமார்.

 

” அதுக்காக விட்டுட முடியுமா ? ” என்று பழனி  சிவக்குமாரைப் பார்த்துக் கண்ணடித்தான் .

 

‘ இவன் பெரிய எமகாதகன் . கையில் ஏதோ பெரிய பிளான் வைத்திருக்கிறான். சற்றும்  கலங்கிய மாதிரி இவன்

காணப்படவில்லையே ‘ என்று சிவக்குமார் நண்பனைப் பார்த்தான்.

 

” இந்த பிராஜக்டை நான்  பண்ணியே ஆகணும் ஷிவு . .அந்த

இடத்தை வாங்கிட்டா, அதுக்குப் பக்கத்திலேயே

ஒரு பெரிய ஃ பாக்டரி இருக்கு. இப்போ ஒண்ணும்  பிசினஸ் இல்லே. பத்து வருஷமா பூட்டி வச்சிருக்காங்க . பாக்டரி கட்டடத்தை சுத்தி அரை மைலுக்கு நிலம் நீச்சு எல்லாம் ஃ பாக்டரிக்கு சொந்தமா இருக்கு. அதை ஈசிய வளைச்சுப் போட்டிறலாம் .” என்றான் பழனி.

 

“அந்த இடத்தை பேசி முடிச்சிட்டயாக்கும் ?” என்று கேட்டான் சிவக்குமார்.

 

இல்லையென்று பழனி தலையை அசைத்தான். ” அதுக்கு ஒனரு கவர்மெண்டு ” என்று சிரித்தான் பழனி “அதனாலே  எல்லோரும்

அதுக்கு சொந்தம் கொண்டாடலாம். ஏற்கெனவே

நாலஞ்சு சேரிகள்வந்தாச்சு ! ” .

 

சிவக்குமார் ஆச்சரியத்துடன் நண்பனைப் பார்த்தான் .

 

பழனி விஸ்கியை ஒரு மடக்கு குடித்தான் . பிறகு குரலைத் தாழ்த்திக் கொண்டு ” ரெண்டு பெரிய தலைகள்

இதில இருக்காங்க ” என்று  பெயர்களைச் சொன்னான் .

 

சிவக்குமார் நண்பனை உற்றுப் பார்த்தான். பிறகு வாய் விட்டுச் சிரித்தான் . ” நீ சரியான எம்டன்டா ” என்று அவன் கையைக் குலுக்கினான்.

 

பழனி சொன்ன இருவரில், ஒருவர் முக்கிய மந்திரிக்கு அடுத்த முக்கியமான  மந்திரி. இன்னொருவர், நகராட்சியில் மிக முக்கியமான புள்ளி .

 

”  ஆனா இரண்டு பேரும் எதிரெதிர் கட்சிக்காரங்க இல்லே ! ” என்று சிவக்குமார் சந்தேகத்துடன் நண்பனை நோக்கினான் .

 

” அது நியூஸ் பேப்பர்களுக்கும், டி . வி . காரங்களுக்கும் போடற சாப்பாடு ” என்று சிரித்தான் பழனி . ” உண்மையை சொல்லணும்னா எல்லோருமே  ஒரே கட்சிதான் . பணக் கட்சி  !  ”  என்றவன்

தொடர்ந்தான். ” நான் இந்த ப்ராஜக்டை எப்படியாவது

இந்த இரண்டு பேருக்கும் பண்ணித் தரணும் . அதுக்கு பதிலா,  எனக்கு ஒரு பெரிய வேலை கிடைக்கும். கவர்மெண்டுல ஒரு ஸ்கீம் வரப் போகுது. ரொம்பவும் பின் தங்கின கிராமமா பார்த்து, ஒரு ஐயாயிரம் கிராமத்துல வீடு கட்டிக் கொடுக்கப் போறதா  அறிவிக்கப்போறாங்க ஒரு மாசத்துக்குள்ள . அதுக்குன்னே நானும் மூணு கம்பனியை

இங்கே ஆரமிச்சு வச்சிருக்கேன். இந்த ரெண்டு பேரும், நம்ம கம்பனிகளோட செலக் ஷனை கவனிச்சிக்கிடுவாங்க.  நாளைக்கு ஆட்சி மாறினாலும் , அதுவும்  இவங்களுக்குள்ளேதான் . அதனாலே ஒரு கவலையும் எதிர்காலத்துக்கு இல்லே.  இது ஒரு சாலிட் ஆர்டர். அதுக்குத்தான் இவ்வளவு தூரம் முட்டிக்கிட்டு இருக்கேன் ” என்றான் பழனி .

 

” ஸோ ,இதெல்லாம், ஒரு பொண்ணோட கையில இருக்கு ” என்றான் சிவக்குமார்.

 

“ஆமா ,ஆனா அதுக்கும் ஒரு வழி இருக்கற மாதிரி தெரியுது. ஒர்க் அவுட் ஆகுமான்னுதான் கொஞ்சம்  டென்ஷன்ல  இருக்கேன்

இப்ப. ” என்றான் பழனி .காலியாகி விட்ட இரு தம்ளர்களிலும், விஸ்கியை ஊற்றி  ஐஸ்வாட்டரை விட்டு நிரப்பினான். . ஒருமடக்கு அருந்தினான் .

 

பிறகு , சட்டைப் பையிலிருந்து ஒரு கவரை எடுத்துப் பிரித்தான். உள்ளிருந்து ஒரு போட்டோவை எடுத்து சிவக்குமாரின் கையில் கொடுத்து ” இவரைத்தான் மலை போல நம்பியிருக்கேன் ” என்றான்.

 

புகைப்படத்தைப் பார்த்ததும், சிவக்குமாருக்கு, ஒரு கணம் , மூச்சு நின்று விடும் போல் இருந்தது. குமாரா பார்க் முருகன் கோயில் சாமியார் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். இரண்டு நாளைக்கு ஒரு முறை ஏதாவது நாளிதழிலோ , வாரப் பத்திரிகையிலோ, அவன் பார்த்து வரும் முகம்.

 

அவன் ஆச்சரியத்துடன் பழனியைப் பார்த்தான் .

 

” இவரு மிசஸ் கோமதியோட குடும்பத்தக்கு குரு . அவர் சொன்னா அது அவங்களுக்கு வேத வாக்காம் .”

 

” உலகம் பெரிய அல்ல, மிகச் சிறிய உருண்டை ” என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டுச் சிரித்தான் சிவக்குமார்.

 

” ஷிவு , நீ என்ன சொல்றே ? ”

 

அன்று தன்  மனைவிக்கும், தனக்கும் நடந்த சம்பாஷணையைப் பற்றிக் கூறினான் சிவக்குமார்.

 

” சாமியாரைப் பற்றி உன் மனைவி சொன்னது உண்மைதான் ” என்றான் பழனி . ” அவரை மாதிரி ஒரு திட சித்தரை பாக்கறது ரொம்பவும் அபூர்வம்தானாம். பணம், அதிகாரம், செல்வாக்குன்னு எதையும் அவர் பக்கத்திலே நெருங்க விடறதில்லேன்னு சொல்றாங்க .”

 

சிவக்குமாருக்கு ஒன்று புரியவில்லை. சாமியார் அப்படிப்பட்டவர்  என்றால் , இவன் எப்படி தன்  காரியத்தை அவர் மூலம் சாதித்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறான் ?

 

அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவன் போல, பழனி அவனைப் பார்த்து, ” நம்ம மந்திரிக்கும் அவர் குல குரு  ” என்றான். ” மந்திரியின் தந்தைக்கு, இந்த சாமியாரின் அப்பா மிகவும் நெருக்கமாம். பெரியவர் மீது  மந்திரியின் அப்பாவுக்கு அப்படி ஒரு கண்மூடித்தனமான  பக்தி. குடும்ப சொத்துல முக்கால் வாசி மடத்துக்கு எழுதி வச்சிட்டாரு ” என்றான் பழனி.

 

‘ இப்போது பையன் அதை  சாமியார் மூலம் சம்பாதிக்கப் பார்க்கிறானோ ? ‘ என்று ஒரு எண்ணம் மனதின் மூலையில் சிவக்குமாருக்குத் தோன்றி மறைந்தது.

 

” ஆனா, சாமியார், மிசஸ் கோமதியிடம், நிலத்தை  கொடுத்து விடு என்று சொல்ல மாட்டார்னு எனக்கு சந்தேகம் வந்து கிட்டே இருக்கு. ஏன்னா, மந்திரி அவரை நாலஞ்சு தடவை பார்த்து இதைப் பத்தி பேசலாம்னா, அவர் ஒண்ணும் பிடி குடுக்கலையாம் . ஆனா எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு . ”

 

அன்று காலை நாச்சியார், சாமியாரைப் பற்றிப் பேசும்போ து , அவர் நல்லதை, நல்லது நடப்பதைப் பற்றி மட்டுமே

பேசுவதாகக் கூறியது சிவக்குமாருக்கு ஞாபகம் வந்தது.

 

பழனி சொல்லுவதையெல்லாம் கேட்ட பிறகு, தனக்கு சாமியாரின் மேல் மரியாதை கூடுவதாக ,சிவக்குமார் உணர்ந்தான். உலகில், நடக்கும் ஒவ்வொரு  விஷயத்திலும் ஒரு விதிவிலக்கு  இருப்பது வாழ்வின் நியதி என்று சொன்னவன் தேர்ந்தெடுத்த அனுபவசாலியாக இருக்க வேண்டும். இரவு நாச்சியாரைப் பார்க்கும் போது,அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ”  சீ , எதாவது மன்னிப்பு, அது இதுன்னு உளறிண்டு இருக்க வேண்டாம் ” என்று அவனைக் கட்டிக் கொள்வாள். ஒரு சமயம்,அவள் தன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றுதான், மன்னிப்புக் கேட்க…..

 

அப்போது பழனியின் அலைபேசி ஒலித்தது. அவன் கையில் எடுத்துப் பேசினான். ” சரி, நான் அங்கேயே வந்திடறேன் ”

என்று கீழே வைத்தான்.சிவக்குமாரைப்  பார்த்து ” மினிஸ்டரோட பி.ஏ அவர் வீட்டுக்கு இப்பவே வரச் சொல்லறாரு . கொஞ்ச நேரம் உட்கார்ந்து, உன்னோட பேசி கிட்டே, டின்னரையும் முடிச்சுக்கலாம்னு இருந்தேன்  நாம ஒண்ணு  நினைக்க..” என்று வருத்தப்பட்டபடி எழுந்தான் .

 

உடை மாற்றிக் கொண்டதும், இருவரும் கிளம்பினார்கள். ” உன்னை வீட்டிலே இறக்கி விட்டுட்டு போகட்டுமா ? ” என்று பழனி கேட்டான்.  ” நீ போற வழிக்கு, நேர் எதிரா, நான் போகணும். யூ கோ அகெட் .முடிஞ்சா மறுபடியும், நீ ஊருக்கு போகறதுக்கு மின்னே பாக்கலாம் ” என்று சிவக்குமார் விடை பெற்றுக் கொண்டான் .

 

ஆட்டோ நிறுத்தத்தை நோக்கி நடந்தான். செப்டம்பர் இரவின் குளிர்ச்சி காற்றில் கலந்திருந்தது. கைகடிகாரம் மணி

ஒன்பது என்றது. அப்போது அவனது அலைபேசி மணி அடித்தது. எடுத்துப் பார்த்தான். நாச்சியார். வீட்டுக்கு வந்துவிட்டாள்

போலிருக்கிறது.

 

” ஹல்லோ ” என்றான்.

 

” நீங்க ஆத்துல இல்லையா. டெலிபோன்  மணி போயிண்டே இருந்தது ” என்றாள்  நாச்சியார் .

 

அவன் பழனியைப் பார்க்க வந்ததைப் பற்றிக் கூறினான்.

 

” அப்போ இன்னிக்கு ஆத்துக்கு வர்றது சந்தேகம்தானா? நல்லதாப் போச்சு ” என்று சிரித்தாள் அவள்.

 

” நல்லதா போச்சா ? ”

 

” இங்கே இன்னிக்கு பூஜை முடிய ரொம்ப நேரம் ஆகுமாம். என் கூட வசந்தா இருக்கா. அவ ஆத்துக்கு வந்து படுத்துண்டு நாளைக்கு காலம்பற  போகலாம்னு சொல்லிண்டு இருக்கா ” என்றாள்  நாச்சியார். வசந்தா, அவளுடைய ஊர்க்காரி. தூரத்து சொந்தம் வேறு. சின்ன வயதிலிருந்து ஒரே ஸ்கூலில், காலேஜில் படித்த இணை பிரியாத தோழிகள். அவன் வேண்டாம் என்று சொன்னாலும் நாச்சியார் கேட்கப் போவதில்லை. அவனையும் அங்கு வந்து விடு என்பாள் .

 

” சரி, ராத்திரிக்கு எனக்கு சாப்பாடு ? ”

 

” நான் மன்னி கிட்டே சொல்லிட்டுதான் உங்களுக்கு போன்  பண்ணினேன். அங்கே இன்னிக்கு அடையாம். உங்களுக்கு பிடிச்ச டிபன் ” என்றுசிரித்தாள். .

 

அவள் போனைக் கீழே வைத்த பின் அவன் மேலே நடந்தான்.  ஆட்டோ உடனே கிடைத்தால் கூட அரைமணி, முக்கால் மணி நேரம் ஆகிவிடும். அத்தனை நேரம் கழித்து அவர்களைப் போய்த்  தொந்திரவு பண்ண வேண்டுமா என்று நினைத்தான். ஆனால், மன்னியை நினைத்ததும், அந்த நினைப்பு பின்வாங்கிவிட்டது. ‘ உனக்காக எல்லாம் பண்ணி வைத்து வேஸ்ட் ஆகி விட்டது என்று ராத்திரி பன்னிரண்டு மணிக்குப் போன்  பண்ணி சண்டை போடுவாள். அவளுக்கு, நாச்சியாரை அவ்வளவாகப் பிடிக்காது. படிப்பு, அழகு, பணம், பிறந்தவீட்டுச் செல்வம் என்று எல்லாவற்றிலும் , தன்னை விட நாச்சியார் ஒரு படி மேல் என்று அவள்  கறுவிக் கொண்டு இருப்பாள்….

 

சிவக்குமார் பயந்த மாதிரியே, ஆட்டோ உடனே  கிடைத்து விடவில்லை . அப்புறம் ஒருவனிடம், இரண்டு மடங்கு பணம் தருகிறேன் என்றதும் வந்தான். அண்ணாவின் வீட்டை அடையும் போது மணி பத்தேகால் ஆகிவிட்டது. அவன் ஆட்டோக்காரனுக்கு பணம் கொடுத்து விட்டு, அண்ணனின் வீட்டை அடைந்தான். கதவைத் தட்டக் கையைத் தூக்கிய போது, மன்னியின் வாயில் தன்  பெயர் அடிபடுவதைக் கேட்டு கையைக்   கீழே இறக்கி விட்டான். மன்னியின் குரல்  நன்றாகவே அவன் காதில் கேட்டது.

 

” மணி பத்தரை ஆகப்  போறது . இன்னும் உங்க தம்பியாண்டானைக் காணலை. எப்ப வரப் போறானோ? அவன் பொண்டாட்டியானா, சீவி சிங்காரிச்சிண்டு, தினைக்கும், சாமியாரைப் பாக்க ஓடிடறா . என்ன மோகமோ, என்ன மயக்கமோ ! இவளும் பாக்கப் பளிச்சுன்னு இருக்கா. அந்த சாமியாரும் சின்னவர்தானாம். எனக்கு ஒண்ணும்  பிடிக்கலை …” என்று சன்னதம் வந்தவள் போல் கத்திக் கொண்டிருந்தாள்  .

 

” ஏய் கமலா , எதுக்கு இப்படி கத்தறாய் ? உனக்கு புத்தி பேதலிச்சுடுத்தா ? அவன் வர நேரம். காதுலே விழுந்து வைக்கப் போறது.  வாயை மூடிண்டு இரு ” என்று அண்ணா அவளை அடக்கும் குரல் கேட்டது .

 

” ஆமா, ஊர் முழுக்க வழிச்சிண்டு சிரிக்கிறது. நான் சொல்றதுதான் உங்களுக்கு பெரிசா போச்சா ? எப்பப் பார்த்தாலும், என்னையே அடக்கிண்டு … சீக்கிரம் வந்தான்னா, அடையை வார்த்து .போட்டுட்டு, படுக்கப்  போவேன் . .அப்பாடான்னு இருக்கு ” என்றாள்  மன்னி .

 

சிவக்குமார் வந்த வழியே திரும்பி வீட்டைப் பார்க்கச் சென்றான். தெரு நாய் ஒன்று அவனைப் பார்த்து உறுமி விட்டு, வாலைச் சுழற்றியது. மன்னியின் தீக் கங்குகள் அவனைத் தீண்டி, மிகுந்த வலியை ஏற்படுத்தின . அவளுக்கு நாச்சியார் மேல் ஏதோ பொறாமை என்றுதான் நினைத்திருந்தானே தவிர, இவ்வளவு காட்டம் இருக்கும் என்று  ஒரு போதும்  தோன்றியதில்லை.. சாமியாரிடம் மயங்கிக் கிடக்கிறாள் என்கிறாள் . அவருக்கும் சின்ன வயதாம், ஊருக்கே எல்லாம் தெரிந்திருக்கு என்கிறாள் .

 

மனது அலை பாய்ந்தது. இந்த நாச்சியார் சனியன் எதற்கு இப்படி பேர் வாங்க வேண்டும் ? ஏன் அவள் இன்று வழக்கம் போல வீடு திரும்பவில்லை ? திடீரென்று எங்கே இருந்து இவ்வளவு சாமி பக்தி அவளுக்கு வந்தது ? மற்றவர்கள் அவளப் பற்றி என்ன

பேசுகிறார்கள் ? மன்னியைப் போலவா ?  எனக்கு இதெல்லாம் எப்படி தெரியாமல் போயிற்று ?. நாச்சியார் ஏன் அழகாக இருக்கிறாள் என்று அவள் மீது கோபம் வந்தது .

 

நடந்து கொண்டிருந்தவன் ‘சட் ‘ என்று நின்று விட்டான் . எனக்கு என்ன ஆகி விட்டது ?   இம்மாதிரி கேள்விகள் எப்படி

எனக்குள் கிளம்பி வந்து கொண்டு இருக்கின்றன ? கொஞ்ச நேரத்துக்கு முன்பு  பழனியுடன் இருந்த போ து சாமியாரைப் பற்றி எழுந்த உயர்ந்த எண்ணங்கள் எங்கே மறைந்து போய் விட்டன ? எதற்காக நாச்சியார் மேல் குற்றம் காணும் கேள்விகள் எனக்கு எழுகின்றன ? மன்னி சொன்னது உண்மை என்றா  நானும் பயந்து சாகிறேன் ?

 

சிவக்குமாருக்கு குழப்பமாக இருந்தது .

 

Series Navigationசாவு சேதிதொடுவானம் 104 பாவ்லோவ் நாய்கள்
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *