வாழ்க்கை ஒரு வானவில் – 21

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

21

சேதுரத்தினம் தன் மனைவியின் இறுதிச் சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டே தன் பணிக்குத் திரும்புவான் என்பதை அவனது அலுவலகத்தோடு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அறிந்த ராமரத்தினத்துக்கு ஒரு நடை கோயமுத்தூருக்குப் போய்விட்டு வரலலாமே என்று தோன்றியது. எனவே, சேதுரத்தினம் வந்ததன் பிறகு அவனைப் பார்த்தால் போதும் என்று முதலில் தான் செய்திருந்த முடிவை மாற்றிக்கொண்டான். அவனது கோயமுத்தூர் முகவரியையும் கேட்டுப் பெற்றுக்கொண்டான்.

 

எனவே, மறு நாளே அவன் ஓட்டல் முதலாளியைப் பார்த்துத் தன் விடுப்பு பற்றிப் பேசினான்: “சார்!”

“என்னப்பா?”

“கோயமுத்தூர்ல திடிர்னு ஒரு சாவு, சார். நான் உடனே போயாகணும். எனக்கு அஞ்சு நாளுக்கு லீவு வேணும், சார்.”

தம் கல்யாண விஷயம் பற்றிப் பேச அவன் வந்துள்ளதாய் எண்ணிய அவர் ஏதோ சாவு என்று கூறி விடுப்புக் கேட்கவே முகம் கறுத்துப் போனார். அவனும் வேண்டுமென்றேதான் `சாவு’ எனும் சொல்லை முதலில் உச்சரித்தான்.

“யாரு?”

“என் ஃப்ரண்டோட மனைவி, சார். பிரசவத்துல காலமாயிட்டாங்க. …”

“அடப் பாவமே!… சரி, போயிட்டு வா. நீ இன்னும் ஒரு மாசச் சம்பளம் கூட வாங்கல்லே, இல்லே? அதனால சம்பளம் இல்லாத லீவுதான் ரூல்படி தரணும். ஆனா உனக்கு நான் சம்பளப் பிடித்தம் பண்ண மாட்டேன்….” என்று அவர் இளித்துவிட்டு, “ரெயில் சார்ஜுக்குப் பணம் வெச்சிருக்கியா? …இந்தா இதை வெச்சுக்கோ…” என்று ஒரு நூறு ரூபாய்த் தாளைக் கல்லாவிலிருந்து எடுத்து நீட்டினார்.

அதை வாங்காமல், “வேணாம், சார். எங்கிட்டவே பணம் இருக்கு!” என்று சொன்ன அவன், “தேங்க்ஸ், சார்…” என்று கிளம்பினான்.

… தட்டப்பட்ட கதவைத் திறந்த சேதுரத்தினம் கண்கலங்கியவாறு வெளியேகைப்பையுடன் நின்றிருந்த ராமரத்தினத்தைக் கண்டதும் பெரிதும் வியப்புற்றான். தன் துயர்த்தில் பங்கு கொள்ளக் கோயமுத்தூருக்கே அவன் நேரில் வந்துவிட்டது கண்டு அவன் அந்தத் துய்ரத்திலும் சிறிது ஆறுதல் அடைந்தான்.

“ராமு!….உள்ள வா…”

ராமரத்தினம் உள்ளே சென்றான்.

சேதுரத்தினம் அவன் தோள் மீது சாய்ந்துகொண்டு விம்மினான்.

“அழாதீங்க, சேது சார்… என்ன பண்ண முடியும்? நாம கொடுத்து வெச்சது அவ்வளவுதான். .. நான் அவங்களைப் பார்த்தது கூட இல்லே…” – ராமரத்தினம் அவன் முதுகில் தட்டினான்.

சேதுரத்தினம் தன்னை விடுவித்துக்கொண்டு, அங்கே கழுத்தில் மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்த ஊர்மிளாவின் பெரிய புகைப்படம் வைக்கப்பட்டிருந்த மேசையை அவனுக்குக் காட்டினான்.

“உங்க மனைவி நல்ல அழகு, சேது சார்.”

“அவ மனசும் ரொம்ப அழகு, ராமு.”

அப்போது நாகவல்லி குழந்தையுடன் அங்கு வந்தாள். ராமரத்தினம் ஆவலுடன் சென்று குழந்தையைப் பார்த்தான். கருகருவென்று நிறையத் தலை முடியுடன் குழ்ந்தை அழகாக இருந்தது.                                                                                                                                         “உக்காருப்பா…என்னை விடவும் இந்தக் குழந்தைதாம்ப்பா ரொம்பவும் துரதிருஷ்டசாலி…” என்று அரற்றிய சேதுரத்தினம் நாகவல்லியையும் அவனையும் ஒருவர்க்கொருவர் அறிமுகப்படுத்தினான்.

பின்னர் இருவரும் நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

“குழந்தையோட இவங்களும் என்னோட மெட்ராசுக்கு வர்றாங்க. அங்க குழ்ந்தையைக் பார்த்துக்க ஒரு நல்ல ஏற்பாட்டைப் பண்ணினதுக்குப் பிறகு இங்க வந்துடுவாங்க. இவங்களுக்கு ரத்த அழ்த்தம், இதய நோய் ரெண்டுமே இருக்கு. இல்லாட்டி இவங்களே பார்த்துக்குவாங்க…என்ன செய்யப் போறேனோ, தெரியல்லே.”

“நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம், சேது சார். எங்கம்மாவும் தங்கைகளும் குழந்தையைப் பார்த்துக்கிறதாச் சொல்லிட்டாங்க. இவங்க குழ்ந்தையை எடுத்துண்டு நம்மோட வரட்டும். நேரே எங்க வீட்டுக்கு வந்துடுங்க ரெண்டு பேரும்…குழந்தையை எங்க வீட்டுல விட்டுட்டு இவங்க புறப்பட்டு இங்கே வந்துக்கட்டும்..”

“ராமு! நிஜமாவா! நீ ஒண்ணும் எனக்கு உதாணும்கிறதுக்காக உங்கம்மாவை இந்த விஷயத்துல நிர்ப்பந்திக்கல்லையே?”

“அப்படியெல்லாம் எதுவும் இல்லே, சேது சார். இது அவங்களே, தானாவே, சொன்ன யோசனை. அவங்க அப்படிச் சொன்னதும் எனக்கே ஆச்சரியமாயிடுத்து…எனக்கு அந்த யோசனை தோணவே இல்லே. உங்களுக்குச் சம்மதம்தானே?”                                                                “என்னப்பா இப்படிக் கேக்கறே? இதை விட நல்ல ஏற்பாட்டைக் குழந்தைக்கு என்னால பண்ண முடியுமா? ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ப்பா. பாவம் பண்ணிட்டு எனக்குப் பொண்ணாப் பொறந்த இது கொஞ்சம் புண்ணியமும் பண்ணியிருக்குன்னு தோணுது…” என்ற சேதுரத்தினம் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

“நீங்க கவலையே படாதீங்க, சேது சார். எங்கம்மா ரொம்ப நல்லவங்க. என் தங்கைகளும்தான். உங்க குழந்தையை நல்லாப் பார்த்துக்குவாங்க. இனி உங்க குழந்தை அவங்க பொறுப்பு. முக்கியமா இதைச் சொல்றதுக்காகவே நான் இங்கே வந்தேன். நேர்ல பார்த்துப் பேசறதுதான் சரின்னு தோணித்து. அதான் கிளம்பிவந்தேன். எங்கம்மாவும் நேர்ல போய்ச் சொல்லிட்டு வாடான்னாங்க….”

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், ராமு. உனக்கும் உங்க குடும்பத்துக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேண்? இது அவ்வளவு சுலபமாத் தீர்க்கக்கூடிய நன்றிக்கடன் இல்லே, ராமு!”

“பெரிய பெரிய வார்த்தை யெல்லாம் சொல்லதீங்க, சார். அந்த வாட்ச்மேனை அடிச்சுப் போட்றதுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து அன்னைக்கு ராத்திரி என்னோட வந்தீங்க, சேது சார்? ரோந்து போலீஸ் அன்னைக்குத் தெருவில சுத்திண்டு இருந்திருந்தாங்கன்னா என்ன கதி யாயிருக்கும்! அல்லது அந்த வாட்ச்மேனே நம்மைவிட பலசாலியா யிருந்திருந்தாலும் போச்சு. சில வாட்ச்மேன்லாம் கராத்தே கத்துண்டவங்களா யிருப்பாங்க. அப்படி இல்லைன்றதெல்லாம் வேற விஷயம். ஆனா அப்படி இருந்திருந்தா உங்களுக்கும் அது ஆபத்தா யிருந்திருக்குமில்லே? அதிலேயும் ஒய்ஃபை பிரசவத்துக்காக அசலூருக்கு அனுப்பி வெச்சிருக்கிற சமயத்துல உங்க்ளுக்கு ஏதாவது ஆகியிருந்தா? இந்த விஷயங்களை யெல்லாம் ஓரங்கட்டிட்டு எனக்காக வந்தீங்களே, சேது சார்? நான் மட்டும் உங்களூக்கு நன்றிக்கடன் படல்லையா?”

“சரி, சரி… இதுக்கும் அதுக்கும் சரியாப் போச்சுன்னு வெச்சுக்கலாம். இனி நாம ஒருத்தருக் கொருத்தர் நன்றிக்கடன் பட்டது பத்திச் சொல்லிக்க வேண்டாம். சரியா?”

இதற்கிடையே, தூங்கிவிட்ட குழந்தையைத் தூளியில் விட்டுச் சென்றிருந்த நாகவல்லி இருவருக்கும் காப்பி எடுத்துவந்து கொடுத்தாள்.

சேதுரத்தினம் சென்னையில் இல்லாத இந்த நாள்களில் நேர்ந்தவற்றை யெல்லாம் ராமரத்தினம் அவனுக்குத் தெரிவித்தான். மாலாவை மணந்து கொள்ள ரமணி ஆசைப்படுவது பற்றிக் கூறி, இருவர் மனங்களிலும் ஒரே நேரத்தில் அப்படி ஒரு விருப்பம் ஏற்பட்டது பற்றிய வியப்பையும் மகிழ்ச்சியையும் அவன் சேதுரத்தினத்தோடு பகிர்ந்துகொண்டான்.

“உன் சிநேகிதன் மட்டும் உறுதியானவனா யிருந்தா இது நடக்கும், ராமு. பார்க்கலாம்…”

“ரமணியும் ரொம்ப நல்லவன், சேது சார்.”

“என்னதான் சிம்ப்பிள் மேரேஜ்னாலும் சில ஆயிரங்களாவது தேவைப்படும். அப்படி அவங்க கல்யாணம் நடக்கும் போது என்னாலேயும் உனக்குப் பண உதவி செய்ய முடியும், ராமு…”

“தேங்க்ஸ், சேது சார்…நன்றிக்கடன் பற்றி இனிமே நாம ரெண்டு பேரும் பேச்க்கூடாதுன்னு சொல்லிட்டு, என்னோட நன்றிக் கடனை அதிக மாக்கிட்டே போவீங்க போல இருக்கு!”

“சரி சரி…போய்க் குளிச்சுட்டு வா. ரெண்டு மூணு நாளாவது இருப்பேல்லே?”

“அஞ்சு நாள் லீவ் கேட்டுண்டு வந்திருக்கேன். அதனால கண்டிப்பா மூணு நாள் இருப்பேன்…எங்க ஓட்டல் ஓனரால வேற உபத்திரவம் வரும் போல இருக்கு… எனக்கு வேலை போயிடும்…” என்று அவரது தொந்தரவு பற்றியும் விரிவாக ராமரத்தினம் பேசினான்.

“கடவுள் பார்த்துப்பார். இப்போதைக்கு இன்னொரு ஓட்டலுக்கு அப்ளை பண்ணு. நீ படிச்சவனா யிருக்கிறாதால ஏதாவது ஸ்டார் ஓட்டலாப் பாரு… அங்கே நல்ல சம்பளம் தருவாங்க….நானும் முயற்சி பண்றேன்..சரி.. நீ போய்க் குளிச்சுட்டு வா….”

ராமரத்தினம் எழுந்துகொண்டான்.

….. ஓட்டலுகுள் நுழைந்த ராமரத்தினத்தை, “என்னப்பா! இன்னைக்கு ஜாய்ன் பண்றியா?” என்றபடி முதலாளி வரவேற்றார்.

“… ஆமா, சார். அப்புறம் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”

“என்னப்பா?”

“அந்தப் பையனைப் பொண்ணு பார்க்க வரக்கூடாதுன்னு என் தங்கை சொல்லிட்டா…”

அவன் சொற்களைத் தமக்குச் சாதகமான மொழியில் புரிந்துகொண்ட முதலாளி, “புத்திசாலிப் பொண்ணு!” என்று காதளவோடிய இளிப்பை இளித்தார்.

“அவசரப் படாதீங்க, சார். அவ வேற யாரையோ லவ் பண்றாளாம். யாருமே தன்னைப் பொண்ணு பார்க்க வரக் கூடாதுன்னு சொல்லிட்டா. அதனால அந்தப் பிள்ளை வீட்டாருக்கு எங்கம்மா சொல்லி யனுப்பிட்டாங்களாம் இப்படி இப்படி விஷயம், அதனால பொண்ணு பார்க்க வர வேண்டாம்னு…சாரி, சார். மன்னிச்சுக்குங்க. எங்களூக்கே இது வரைக்கும் தெரியாத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டா அவ.”

முதலாளியின் முகம் சரிந்து தொங்கியது.

“சரி. நீ போய் வேலையைப் பாரு…” என்றார்.

உடனேயே, ‘ ……’உனக்கு இனி இங்கே வேலை கிடையாது. கெளம்புடா’ ன்னு பட்னு எப்படிச் சொல்லுவார்? அதான் போய் வேலையைப் பாருன்னிருக்கார். இந்த மாசம் முடியப் போறதே,. ஒண்ணாந்தேதி யன்னைக்குச் சம்பளத்தைக் கையில குடுத்துட்டு, ‘நாளையிலேர்ந்து உனக்கு இங்கே வேலை கிடையாது’ ன்னு சொல்லுவாரா யிருக்கும்’ என்று அவன் தனக்குள் நினைத்தபடி உள்ளே போனான். …

முதல் தேதியன்று சம்பளத்தை ராமரத்தினத்தின் கையில் கொடுத்துவிட்டு, “அடுத்த மாசத்துலேர்ந்து உனக்குச் சம்பளம் நூறு ரூவா அதிகமாப் போட்டுத் தரலாம்னு இருக்கேன். இங்கே வேற யாருக்கும் அது தெரியக் கூடாது… ஆனா ஒண்ணு. உன்னோட சின்னத் தங்கையை நான் பொண்ணு பார்க்க வரலாமில்லே? இல்லேன்னா, அவளும் யாரையாவது லவ் பண்றாளா?” என்ற முதலாளியை அவன் திகிலுடன் பார்த்தான்.

“என்னப்பா அப்படிப் பார்க்கிறே?”

“எங்க அம்மாவை ஒரு வார்த்தை கேட்டுட்டு நாளைக்கு வந்து சொல்றேன், சார்.”

“சரி…”

மறு நாள் அவன் ஓட்டல் வேலைக்குப் போகவில்லை. வீட்டில் அவன் ஓட்டல் முதலாளியின் தகாத ஆசையைப் பற்றித் தெரிவித்த போது எல்லாருமே அதிர்ந்து போனார்கள். அப்போதும் அவன் தான் பணிபுரிந்து கொண்டிருந்தது ஓர் ஓட்டல் என்பதைக் குறிப்பிடாமல் தன் மேலதிகாரி என்றுதான் கூறினான்.

“அடப் பாவி மனுஷா! நாப்பத்தஞ்சு வயசுக்கு மேல சின்னப் பொண்ணு கேக்கறதா அவனுக்கு! கட்டேல போக அவன்!” என்று பருவதம் சபிக்கிற பாணியில் கைவிரல்களைச் சொடுக்கினாள்.

“அவன் மேல நீ புகார் பண்ணலாமே, ராஜா!” என்று பருவதம் சொன்னதும் அவன் சிரித்தான்.

“அதெல்லாம் நடக்காதும்மா. என் மேல வீணா ஏதானும் பழி சுமத்தி ஜெயிலுக்கே அனுப்பிடுவான் அந்தாளு. தேவையா? பேசாம வேற வேலை தேடிக்கிறதுதான் நல்லது….” என்ற ராமரத்தினம், “ஏம்மா இப்படி நம்மைத் தேடிண்டு சோதனைக்கு மேல சோதனையா வருது?” என்று கேட்டுப் பெருமூச்செறிந்தான்.

“அதான் அன்னைக்கே சொன்னேனேப்பா. எல்லாம் நாம செஞ்ச போன ஜென்மத்துப் பாவம்! வேற என்ன காரணம் சொல்ல முடியும்?” என்ற பருவதமும் தன்பங்குக்கு ஒரு பெருமூச்சை உதிர்த்தாள்.

ராமரத்தினத்தின் வேலை வேட்டை அன்றிலிருந்தே மீண்டும் தொடங்கியது…

….. ஊர்மிளாவின் ஈமச் சடங்குகளை முடித்த பின் சேதுரத்தினம் நாகவல்லியுடனும் குழந்தையுடனும் நேரே ராமரத்தினத்தின் வீட்டுக்கே வந்து சேர்ந்தான். பருவதம் அவனிடம் தன் இரங்கலைச் சொல்லிவிட்டு ஆவலுடன் குழந்தையை நாகவல்லியிடமிருந்து கையில் வாங்கித் தன் மடியில் வைத்துக்கொண்டாள்.                                                                                                                                                                             நாகவல்லியையும் குழந்தையையும் அங்கே விட்டுவிட்டுக் குளித்துக் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டபின் சிறிது நேரத்திலேயே சேதுரத்தினம் தன் அலுவலகத்துக்குப் புறப்பட்டுப் போனான்.                                                                                                                        … மறு நாளே நாகவல்லியும் கோயமுத்தூருக்குப் பயணமானாள்…

… புதிதாய்ப் பிறக்கும் குழந்தைக்கு அதன் பதினோராம் நாளில் அதைத் தொட்டிலில் இட்டுப் பெயர் சூட்டும் விழா நடத்துவது வழக்கமான சடங்கு என்பதால், அந்த நாள் கடந்துவிட்ட போதிலும், பருவதம் சேதுரத்தினத்தின் அனுமதியுடன் வீட்டு மட்டுக்கு அதனைக் கொண்டாடினாள். சேதுரத்தினம் நெகிழ்ந்து போனான். என்ன பெயர் வைப்பது என்று அவனைக் கேட்ட பருவதம், அவன் பதில் சொல்லும் முன், “ஒண்ணு பண்ணலாமே? ஊர்மிளான்ற உங்க மனைவியோட பேரையே குழந்தைக்கு வெச்சுடலாமே!” என்று முந்திக்கொண்டு சொன்னபோது, “ரொம்ப நல்ல யோசனைம்மா!” என்றான் அவன் புன்சிரிப்புடன்.

…. மறு நாளுக்கு மறு நாள் இரவு ஏழரை மணிக்கு ஓட்டலிலிருந்து கணபதி ராமரத்தினத்தின் வீட்டுக்கு வந்தான். அவனுக்குக் கதவு திறந்த ராமரத்தினம், குசுகுசுப்பான குரலில், “கணபதி! நான் ஓட்டல்ல வேலை செய்யறது எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. ஒரு இரும்பு சாமான்கள் செய்யற கம்பெனின்னு பொய் சொல்லி வெச்சிருக்கேன். அதனால நீ கம்பெனின்னுதான் சொல்லணும்….” என்றான்.”

“சரி..”.

“உள்ளே வா…”

“இல்லேல்லே. இங்கேயே நின்னு பேசிட்டுப் போயிடறேன். முதலாளிதான் அனுப்பி வெச்சார். நீ ஏன் நேத்து வேலைக்கு வரலைன்னு கேட்டுண்டு வரச் சொன்னார்…”

“கணபதி! நான் வேலைக்கு இனிமே வரமாட்டேன்னு அந்தாளு கிட்ட சொல்லிடு. அவனுக்கு என் தங்கைகள்ள ஒருத்தியை ரெண்டாந்தாரமாக் கல்யாணம் பண்ணிக்கணுமாம். சொல்றான். பெரியவளுக்கு வேற இடம் திகையும் போல இருக்குன்னு சொல்லி நான் தட்டிக் கழிச்சதும் அப்ப சின்னவளைப் பண்ணிக்கிறேன்னு வாய் கூசாம நாக்குல பல்லைப் போட்டுச் சொல்றான். எவ்வளவு திண்ணக்கம் பாரு. அவளுக்கு இருபது வயசு கூட முடியல்லே. …”

“அட! அதானா!”

“ஆமா. ஆனா, நான் உன்கிட்ட சொன்னதை யெல்லாம் நீ ஓட்டல்ல வேற யார் கிட்டவும் சொல்லாதே. அப்புறம் அது அவர் காதுக்குப் போனா உனக்குத் தொந்தரவு. சரியா? நான் நின்னுட்டேன்னு மட்டும் சொல்லிடு… காரணம் கேட்டா, எனக்கு வேற நல்ல வேலைக்கு ஒருத்தர் ஏற்பாடு பண்ணப் போறார்னு மட்டும் சொல்லு.”

 

“சரி. அப்படியே சொல்லிடறேன். நான் வரட்டுமா?”

“முதல் முதல் என் வீட்டுக்கு வந்திருக்கே. பரவால்லே உள்ளே வந்து எல்லாரையும் பார்த்துட்டுப் போ. அதான் பேசி முடிச்சுட்டமே. ஒரு காப்பி கூடத் தராம உன்னை நான் அனுப்பலாமா?”

“இது காப்பி குடிக்கிற நேரமா! தவிர ஓட்டல்லே எப்பப் பாரு, காப்பி குடிச்சவண்ணந்தானே! பாரு. இப்பக் கூட என் வாயில கம்பெனின்றதுக்குப் பதிலா ஓட்டல்னு வந்துடுத்து. உள்ளேயும் வந்து உளறிடுவேன். வேண்டாம். வர்றேன், ராமு…”                                 அவனுக்கு விடை கொடுத்துவிட்டு ராமரத்தினம் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்தான். “யாரு வந்தா, ராஜா?” என்று கேட்ட பருவதத்துக்கு, “எங்க கம்பெனியிலேர்ந்து ஒரு ஆள் வந்தான்மா. ஏன் வேலைக்கு வரலைன்னு ஆஃபீசர் கேட்டுண்டு வரச் சொன்னாராம். நான் நின்னுட்டேன்னு சொல்லியனுப்பிட்டேன்….”

“ராஜினாமாக் கடுதாசி குடுக்க வேண்டாமா? திடுதிப்னு அப்படி யெல்லாம் நின்னுக்கலாமா? கம்பெனியாச்சேடா?”

 

“எழுதி என் மேஜை டிராயர்ல வெச்சிருக்கேன்மா. சாவி ஆபீஸ்லயே இருக்கு. திறந்து எடுத்துக்கச் சொல்லி யிருக்கேன்…”

`ஒரு பொய் சொன்னால் அதை நிலைநிறுத்த மேலும் மேலும் எத்தனை பொய்களை வரிசையாய்ச் சொல்லும்படி ஆகிறது!’ என்று அவன் தன்னுள் நினைத்துக் கொண்டான்.

சற்றுப் பொறுத்து, சேதுரத்தினம் வந்தான். குழந்தையைப் பார்த்துச் செல்ல ஒரு நாள் விட்டு ஒருநாள் வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

அப்படி அவன் வரும் நாள்களில் இரவுச் சாப்பாட்டை வெளியே ஓட்டலில் சாப்பிடக் கூடாது என்று பருவதம் அவனிடம் கண்டிப்பாய்ச் சொல்லி யிருந்தாள்.. முதலில் வலுவாக மறுத்த அவனும் பின்னர் அந்த ஏற்பாட்டுக்கு இணங்கினான். ஆனால் தனக்கென்று விசேஷமாகச் சமையல் எதுவும் செய்ய்க் கூடாது என்றும், எளிமையான சாப்பாடே போதும் என்றும் கண்டிப்பாகச் சொல்லி யிருந்தான். குழந்தைக்கான செலவுகளுக்கும் தன் சாப்பாட்டுச் செலவுக்கும் மாதாமாதம் ஒரு தொகையைத் தான் கொடுப்பதாக அவன் சொன்னதைப் பருவதம் ஏற்றுக்கொண்டாள்.

முன்கூட்டியே அவன் கொடுத்த இரண்டாயிரம் மிகவும் அதிகம் என்று பருவதம் கருதினாலும், அவன் வற்புறுத்தி அவளை அதைப் பெற்றுக்கொள்ள வைத்துவிட்டான். ராமரத்தினத்தின் மறுப்பு எதுவும் சேதுரத்தினத்திடம் எடுபடவில்லை. அவன் ரொம்பவும் ஆட்சேபித்தால் குழந்தையை ஏதேனும் விடுதியில் விட்டுச் சமாளித்துக்கொள்ளுவதாய் அவன் சொல்லவே அவனும் சும்மா இருக்க வேண்டியதாயிற்று. விடுதிக்குத் தான் கொடுக்க வேண்டியிருக்கும் தொகை அதை விடவும் அதிகமாயிருக்கும் என்றும், குழந்தையை அவர்கள் நல்ல முறையில் கவனித்து வளர்க்கவும் மாட்டார்கள் என்றும் அவன் வாதாடினான். எனவே நட்பின் காரணத்தால் அவர்களுக்குத் தான் வேண்டுமென்றே அதிகப்படியாய்ப் பணம் தரவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டு அவன் கொடுப்பதை ஏற்கவேண்டும் என்றும் மிகவும் வற்புறுத்தியதன் பேரில் ராமரத்தினமும் அதற்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று.

இதற்கிடையே, ஒரு நாள் ரமணி அவர்கள் வீட்டுக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று முன்னறிவிப்பு ஏதும் இன்றி வந்தான்.    – தொடரும்.

Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *