சாந்தகுமாரின் ‘மௌனகுரு’

This entry is part 14 of 40 in the series 8 ஜனவரி 2012

சென்னையை விட்டு பதினைந்து நாட்கள் போனதில் ராஜபாட்டை, மௌனகுருவைத் தூக்கி விட்டது. இருந்தாலும் விடுவதாயில்லை என்று மல்டிப்ளக்ஸில் தேடி, பார்த்தே விட்டேன்.
முதலிலேயே பத்திரிக்கை விமர்சனங்கள் நல்ல படம் என்று சொல்லிவிட்டதால் பணத்திற்கு பங்கமில்லை என்று எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தேன்.
படத்தின் பின் பாதி கொஞ்சம் போராளி சாயல் இருக்கிறது. அதே மாதிரி கொசு ரீங்காரம் பின்னணி எபெக்டுடன்.. ஆனால் அதோடு ஒற்றுமை ஓவர்.
சட்டென்று கோபப்படும் கதைநாயகன் அருள்நிதி அதிகம் பேசாதவன். அடிதடி என்று ஆகி சொந்த ஊர்க் கல்லூரியிலிருந்து முதல் வருடம் முடியாமலே வெளியேற்றப்பட்டு சென்னை கல்லூரியில் மீண்டும் முதல் வருடம் படிக்கும் கட்டாயம். சென்னைக் கலை கல்லூரிகளில் நடக்கும் கோஷ்டி சண்டை, அதற்கு உதவும் சமூக விரோதிகள் என காட்சிகள் நகரும்போது அருள்நிதி அடிக்கப்போகிறான் என்று நாம் எதிர்பார்க்கும் இடங்களிலெல்லாம் அவன் அப்படி செய்யாதது இயக்குநரின் புத்திசாலித்தனம். கல்லூரியில் காணாமல் போகும் பொருட்கள், அதைத் திருடும் முதல்வரின் மகன், விடுமுறையில் விடுதியே காலியாக இருக்கும்போது மகனைக் காப்பாற்ற அப் பொருட்கள் அடங்கிய பையை அருளின் அறை வாசலில் வைக்கும் முதல்வர், வீட்டிற்கு போக முடியாமல் விடுமுறையையும் விடுதியிலேயே கழிக்கும் அருள் அதை கண்டெடுப்பது, அதில் களவாடப்பட்ட பணம் மற்றும் அதன் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட கொலை குறித்த ஒரு காவல் அதிகாரியின் ( ஜான் விஜய் ) வீடியோ வாக்குமூலம், அதனால் அருள் துரத்தப்படுவது எனப் பயணிக்கிறது கதை.
படத்தின் மிகப்பெரிய ஆச்சர்யம் உமா ரியாஸ்கான். கர்ப்பிணி கிரைம் இன்ஸ்பெக்டராக அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு விருதுக்கு உகந்தது. கொஞ்சம் கருப்பு மேக்கப் ( என் பேரு பழனியம்மா ), ஆங்காங்கே முகத்தில் வெட்டுக்காயங்களின் வடு, படிய வாரிய கூந்தல், படம் முழுக்க காக்கிப்புடவை என வலம் வருகிறார். சபாஷ். உமா ரியாஸ்கானை டைட் ஜீன்ஸ¤ம் தொப்புள் தெரியும் டாப்ளிலும் பார்த்த கண்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி. உமாவின் அம்மா கமலா காமேஷ் நல்ல நடிகை. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைப்பதில்லை. சராசரி மசாலா படக் கதாநாயகனாக இல்லாமல் எதுவும் செய்யத்திராணியற்று உடல் பலம் ஒன்றையே நம்பியிருக்கும் பாத்திரத்திற்கு அருள்நிதி பொருந்திப் போகிறார். நன்றாகப் படிக்கும் அவருக்கு புத்திசாலித்தனம் கிஞ்சித்தும் இல்லை என்பது கதையின் வீக் பாயிண்ட். ஜான் விஜய் வில்லன். அடக்கி வாசித்திருக்கிறார். ஆனாலும் கதையில் யாருமே அவருக்கு பயப்படவே இல்லை. படம் பார்க்கும் நாமும்தான். பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார் தமன். முதல்வராக வரும் நடிகரும் ஜான் விஜய்யின் தோழியாக வரும் நடிகையும் இயல்பான நடிப்பைத் தருகிறார்கள் மெலோ டிராமா காட்சிகள் வரும்வரை. இரு மாநிலப் பிரச்சினை, காவல் துறையின் இமேஜ், தமிழ்நாட்டு அரசியல் என்று ஏதோதோ சொல்லி பழனியம்மாவை தடுத்து விடுகிறார்கள். கதாநாயகன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அவரும் சும்மா இருந்து விடுகிறார். கடைசியில் தீர்மானிக்கப்பட்ட முடிவாக நாயகன் அனைவரையும் வெட்டி சாய்த்து விடுகிறான். சுபம்.
ஊறுகாயாக வரும் வாகை சூட வா இனியா நல்ல நடிகை என்பதை சொற்ப காட்சிகளிலேயே கண்களால் சொல்லி விடுகிறார். இப்படிப்பட்ட படங்களில் நடித்தால் காணாமல் போய் விடுவார். அதற்காகவே அன்னக்கொடி ஜெயிக்க வேண்டும்.
0

Series Navigationசிற்றிதழ் அறிமுகம் : சங்குதீட்டுறிஞ்சி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Ramu Palaniappan says:

    The critique should in first place understand what kind of a film he is criticizing. For heaven’s sake, this is a mystery thriller. All the important twists are listed out. He says Kamala Kamesh is a good actress!!!! my goodness!! Just knowing how to play with your key pad, never makes you a good critic Mr….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *