சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்

This entry is part 24 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

 

 

ஆண்டுதோறும் சிங்கப்பூரில் திருமுறை மாநாடு நடைபெற்று வருகின்றது. முப்பத்து நான்கு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட வரும் திருமுறை மாநாடு இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 1, 2. 3 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் நகரின் டாங்க் சாலையில் அமைந்துள்ள தெண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் திருமுறை சார்ந்து இயங்கி வரும் பேச்சாளர் ஒருவரை அழைத்து இம்மாநாட்டில் பேசவைப்பது என்ற அடிப்படையில் இவ்வாண்டு அடியேன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

இத்திருமுறை அமைப்பினைத் தொடங்கி வைத்துச் சிங்கப்பூர் தமிழ் மக்கள் திருமுறை வாழ்வினை வாழும் பெரும் பேற்றை அடையச் செய்த சான்றோர் சிவத்திரு அம்பலவாணன் ஐயா அவர்கள் ஆவார். அவரது துணைவியார் கண்மணி அம்மையார் அவர்களும் அம்பலவாணன் ஐயாவுடன் இணைந்து இச்சீரிய பணியை தம் வாழ்நாள் முழுவதும் செய்தார்கள்.

. தன் அகக்கண் கொண்டுத் திருமுறை நெறிகளைச் சிங்கப்பூரில் வளர்த்தவர் அம்பலவாணன் ஐயா அவர்கள். அவர் வகுத்தளித்த முறைப்படி திருமுறை சார்ந்த போட்டிகள், நமசிவாய வேள்வி, அறுபத்துமூவர் குருபூசை ஆகியன ஆண்டுதோறும் நெறியோடு திருமுறை ஏற்பாட்டுக்குழுவினரால் தொடர்ந்து நடைபெறுத்தப்பட்டு வருகின்றன. அம்பலவாணன் ஐயா அவர்கள் திருக்குறள் மீதும் திருமுறைகள் மீதும் அளவிலாப் பற்று கொண்டவர். சிங்கப்பூரில் திருக்குறள், திருமுறை நெறிகள் பரவ வழிவகை செய்தவர். தவத்திரு குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவர். பலமுறை இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் வருகை தந்துத் தலயாத்திரைகள் மேற்கொண்டவர். திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்காக அவர் உழைத்த உழைப்பு, மேற்கொண்ட சிரத்தை போற்றத்தக்கது. அவரது வாழ்நாள் நிறைவெய்திய பின்பு அவரின் அடியொற்றித் திருமுறை மாநாடு ஆண்டுதோறும் திருமுறை ஏற்பாட்டுக் குழுவினரால் நடத்தப்பெற்று வருகின்றது.

திருமுறை மாநாட்டில் நாளும் திருமுறை இன்னிசை அரங்கேறுகின்றது. திறம் மிக்க ஓதுவார் பெருமக்கள் தங்களின் இனிய குரலால் வந்திருக்கும் சிவனடியார்களைப் பக்தி இயக்க காலத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். இம்மாநாடு திருமுறை அன்பர்களாலும், போட்டியில் பங்கெடுத்த மாணவ மாணவியர்களாலும் அவர்களின் பெற்றோர்களாலும் இவர்களின் வருகையாலும் சிறப்படைகின்றது. ஒரு மாநாட்டிற்கு இருக்கின்ற பெருத்த ஆதரவினை இக்கூட்டம் எடுத்துரைக்கின்றது.

வெள்ளி தொடங்கியது

திருமுறை மாநாட்டின் நிகழ்வுகள் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அழைப்பிதழில் குறித்த நேரத்தில் அதாவது சிங்கப்பூர் நேரப்படி ஆறரை மணிக்குத் துவங்கியது. தெண்டாயுதபாணி சன்னதியில் வழிபாடு நிகழ்த்தி, திருமுறைகளைச் சுமந்து கொண்டு அரங்கம் நோக்கி பெருமக்கள் சென்ற காட்சி கண்ணுக்கினியது.

ஒரு கூடுதல் தகவல். திருமுறை மாநாட்டினை முதன் முதலாகச் சிங்கப்பூரில் தொடங்கியபோது அதன் முதல் நிகழ்வில் புதுக்கோட்டை திலகதியார் ஆதீனத்தின் தோற்றுநர் சிவத்திரு சாயிமாதா சிவபிருந்தாதேவி அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அதனோடு நில்லாமல் திருமுறை மாநாட்டிற்காக திருமுறைகளை இந்தியாவில் இருந்து சுமந்து வந்து இங்கு அளித்திருக்கிறார். இத்திருமுறைப் புத்தகங்கள் பட்டு சார்த்தி அழகான தட்டுகளில் ஆண்டு தோறும் ஏந்தி வரப்பெறுகின்றன. திருமுறைகளின் வருகை நிகழ்ந்தபின் அரங்கில் தில்லை நடராசன் பூசை நடைபெற்றது.

முனைவர் ஆ. இரா. சிவகுமாரன் அவர்கள் தில்லை நடராசர் பூசை என்று உச்சரிக்கும் இனிய சொற்கள் நம்மை தில்லைக்கே கொண்டு செல்லுகின்றன. போற்றித் திருத்தாண்டகம் பாடி இறைவன் போற்றப்படுகிறான். ஆடல்வல்லானின் பூசையின் போது ஒரு திருமுறைப்பாடல் ஓதுவாரால் ஓதப்பட அதனை அரங்கில் உள்ளோர் அனைவரும் பின்தொடர்ந்து சொல்லும் நடைமுறை நாளும் நடைபெற்றது. அதுவே அரங்கினை திருமுறைத் தகுதிக்குக் கொண்டுவந்துச் சேர்த்துவிடுகிறது.

இதனைத் தொடர்ந்து திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் செயலர் திரு கண்ணா கண்ணப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இவ்வரவேற்புரையில் திருமுறை மாநாடு- ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் நடைமுறையையும் திருமுறை ஏற்பாட்டுக்குழு ஆண்டுதோறும் நடத்தும் பல திருமுறை நிகழ்ச்சிகளையும் எடுத்துரைத்து வரவேற்றார். இவர் பக்தியும், இ்சையும் அறிந்த இளைஞர். தேவாரப்போட்டிகளில் பங்கெடுத்து அதன் வழியாக இளமை முதலே திருமுறை மாநாட்டின் தொடர்பில் இருப்பவர்.

இவரைத் தொடர்ந்து சிறப்புப் பேச்சாளாராகிய நானும், திருமுறைமாநாட்டுக்குழுவின் தலைவர் சிவத்திரு இராம. கருணாநிதி அவர்களும் சிறப்பு அழைப்பாளர் சிங்கப்பூர் அரசு நீதி மன்றங்களின் மாவட்ட நீதிபதி திரு. பாலாரெட்டி அவர்களும் அரங்கிற்கு அழைக்கப் பெற்றோம்.

அரங்கின் வாசலில் திருமுறை அன்பர்களை வரவேற்க மல்லிகைப் பூ வனத்தில் நடராசர் காட்சி தந்து கொண்டிருந்தார். அவரையடுத்து சிவத்திரு அ.கி. வரதராசன் அவர்களின் முகமன் உரை, வரவேற்பு வணக்கம் இவற்றை வருகை தருவோர்க்கு வழங்க, இப்போது அரங்கின் அமைப்பு உங்கள் கண்களுக்குத் தெரியும். நல்ல குளிரூட்டப்பட்ட அறை. விளக்குகள், ஒலிபெருக்கிகள் மனதை மகிழ்ச்சிப்படுத்தும் நிலையில் அமைக்கப்பெற்றிருந்தன. விழா நிறைவுற்றதும் சிவத்திரு அ.கி. வரதராசன் அவர்கள் மாநாட்டுக்காக அதன் நடைமுறைக்காக வந்திருக்கும் அன்பர்கள் தரும் நன்கொடையைப் பெற்றுக்கொண்டு உடன் ரசீது அளித்து அவர்களை மனதார வாழ்த்துகிறார். திருமுறை மாநாட்டின் சார்பாக வெளியிடப்பெறும் வெளியீடுகளையும் அவர் அறிமுகப்படுத்தி அவற்றையும் வேண்டுவோர்க்குத் தரும் வகையில் தந்து கொண்டிருந்தார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து, திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் சிவத்திரு இராம. கருணாநிதி அவர்கள் தலைமை உரையாற்றினார். இவர் நீண்டகாலம் பல கோயில்களின் மேலாண்மைக்குழுத் தலைவராக பணியாற்றியவர். மேலும் இவர் மருந்தாளுமைத் துறையில் ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருபவர். இவர் சிங்கப்பூரின் அதிபர் விருது போன்ற உயரிய விருதுகளைப் பெற்றவர். இவரது தலைமை உரையில் பன்னிரு திருமுறை மாநாட்டில் இளைஞர்கள் பெரிதும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தொடர்ந்து நீதிபதி அவர்ளின் உரை. நீதி மன்ற நடவடிக்கைகள் பெரிதும் இடம்பெற்ற தடுத்தாட்கொண்ட புராணத்தை அடியொற்றி அமைந்தது. அவர் பேசிய பேச்சு இரத்தினச் சுருக்கம். அடுத்து திருமுறை மாநாட்டு வெளியீடுகள் வெளியிடப்பெற்றன.

நாளும் தமிழ்ப்பணி செய்யும் தகைமையாளர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவத்திரு சுப.திண்ணப்பன் அவர்கள் மாநாட்டு வெளியிடுகள் பற்றிய அறிமுகத்தை எளிமையாக அதே நேரத்தில் அழுத்தமாகத் தந்தார். திருமுறைவாணர் சிவத்திரு சொ. சொ. மீ சுந்தரம் அவர்கள் ஆற்றிய பெரியபுராண விரிவுரை நான்கு குறுவட்டுகளாக இவ்விழாவில் வெளியிடப்பெற்றன. மேலும் திரு அ.கி. வரதராசன் அவர்களின் கவி வண்ணத்தில், இசைவண்ணத்தில், இயக்க வண்ணத்தில் நடத்தப்பெற்ற – தடுத்தாட் கொண்ட புராணத்தை அடிப்படையாக வைத்து குயின்ஸ்வே முனீஸ்வரன் கோயிலில் அரங்கேற்றப்பட்ட –‘‘பித்தா பிறைசூடி’’ என்ற நாடகத்தின் காணொளி வடிவமும் குறுந்தகடாக வெளியிடப்பெற்றது. சிங்கப்பூரில் திருமுறை நவீனத் தொழில் நுட்பம் சார்ந்து திருமுறைகள் பரப்பப்பட்டு வருவதை இவ்வெளியீடுகள் உணர்த்துகின்றன.

இதற்குப் பின் அடியேனின் உரை. என்னுடைய உரைகள் மூன்று நாட்களும் இருந்தன. ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணிநேரம் எனக்களிக்கப்பெற்றிருந்தது. என் உரை பற்றிச் சொல்ல வேண்டுமானால் என்னுடைய உரையின் தலைப்புகள் கேட்பவர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது என்பது குறிக்கத்தக்கது. இத்தலைப்புகள் குறித்து வந்திருந்தவர்கள் எண்ணிய எண்ணம் என்னுடைய எண்ணம் ஆகியன ஒத்து அமைந்திருந்ததும் மகிழ்ச்சியைத் தந்தது. திருமுறை மநாட்டின் தலைப்புகள் தற்போது பொதுமையில் இருந்து கழன்று குறிப்பிட்ட பகுதியைத் தலைப்பாக தந்து விவாதிப்பது என்ற நிலைக்கு வந்திருப்பதை அறியமுடிகின்றது. 34 ஆண்டுகாலமாக நடத்தி வரும் இ்ம்மாநாட்டில் சொன்னைதையே சொல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாநாட்டுக் குழுவினர் கவனமாக இருக்கின்றனர்.

முதல் நாளான வெள்ளியன்று நேரக்கட்டுப்பாட்டின் உச்சத்தில் இருந்த நான் அன்றைய நிகழ்வுகள் முடிக்க வேண்டிய நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு நிகழ்வு முடியவேண்டிய நேரத்தில் முடித்துக்கொள்ளவேண்டிய சுய ஆர்வத்தில் ஒருமணிநேரத்தில் முடித்துக்கொண்டேன். அன்றைக்குத் தலைப்பு அருமையான தலைப்பு. ‘‘தலைமிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமையாகும்’’ என்ற சுந்தரர் துதியின் ஒரு பகுதி தலைப்பாகும்.

எனக்கெதிரில் என் ஒவ்வொரு சொல்லையும் மணியாகக் கோர்த்துக் கொண்டிருக்கிற பெருமக்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். பொறியாளர்கள், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், பேராசிரியர்கள், அரசாங்க உயர்அதிகாரிகள், திருமுறையை நாளும் ஓதும் அன்பர்கள், இசைகலந்து பாடும் இசைவாணர்கள், திருமுறைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மருத்துவத் துறை பேராசிரியர்கள், என்னை அறிந்த நண்பர்கள் போன்றோர் குழுமியிருக்க என்னுடைய பேச்சு நடைபெற்றது என்பது அரங்கின் தரத்தை உணர்த்தும்.

அன்றைய என் பேச்சின் புதிய செய்தியாக அரங்கில் கருதப்பட்டது திருத்தொண்டர் திருவந்தாதியின் எண்ணிக்கை பற்றியது. 89 பாடல்கள் மட்டுமே கொண்டு ஏன் திருத்தொண்டர் திருவந்தாதி பாடப்பெற்றது என்பதை என் பேச்சு கேள்வியாக எழுப்பியது. அதற்கான பதிலையும் சொன்னது.

சுந்தரர் துதிகளாக வரும் பத்துப்பாடல்கள் உணர்த்தும் கருத்துகள் தொகுக்கப்பட்டு வகைமை செய்ததாக என்பேச்சினை நான் அமைத்துக்கொண்டேன்.

கேட்ட அன்பர்கள் இனி சுந்தரர் துதிகளைப் படிக்கும் போது அதிக கவனத்துடன் படிப்பதற்கான வாய்ப்பினை இப்பேச்சு தந்ததாகச் சொன்னார்கள். இந்த ஒரு சிந்தனைக்காகத்தான் இந்த ஒருமணிநேரம் என்ற என் செயல் அம்பலவாணர்களின் அருளால் செயல் கூடியது. இரவு பிரசாதம் வழங்க முன்வந்தவர்கள் திருமதி நாச்சியம்மை அருணாசலம் குடும்பத்தார்கள். அவர்களின் உணவு வழங்கலை வரிசையாகப் பெற்றுக்கொண்டு இனிதாக உண்டு மகிழ்ந்தோம்.

முதன்முறை விமானப்பயணம், முதன் முறை சிங்கப்பூர் பயணம் என்ற என் புதிர்கள் மெல்லக் கழன்று இயல்பான சென்னை நகர வாழ்க்கைபோல் இந்த வெள்ளி இரவு முதல் சிங்கப்பூர் வாழ்க்கை எனக்குத் தொடங்க ஆரம்பித்தது,

இனிமையான சனிக்கிழமையும் தொடர்ந்தது

ஆகஸ்டு மாதம் இரண்டாம் நாள். சிங்கப்பூர் திருமுறை மாநாட்டிற்கும் இரண்டாம் நாள். அன்று மாலை நான்குமணிக்கே திருமுறை மாநாடு டாக்டர் ஆ. இரா. சிவகுமாரன் அவர்களின் இணைப்புரையோடு தொடங்கியது. அவரின் இணைப்புரை தில்லைக்கே கொண்டு சேர்த்து நடராசரை தொழவைத்தது.

அன்று இளஞ்சிறார்களின் சிறப்பான நாடகம். திருக்குறிப்புத் தொண்டர் பற்றிய அந்நாடகத்தைச் செண்பக விநாயகர் ஆலயம் சார்ந்த அன்பர்கள் நிகழ்த்திக் காட்டினர். மிகக் சிறப்பாக திருக்குறிப்புத் தொண்டரைச் சோதிக்க வந்த அடியவர், சிவபிரான மாறி அருள் தரும் காட்சியை புதிய முறையில் நாடகக் குழுவினர் அரங்கேற்றினர். திருக்குறிப்புத்தொண்டராக நடித்த சிறுவனி(ரி)ன் நடிப்பு மிக அருமை. அச்சிறுவன் துவைக்கம் கல்லில் தலையை மோதும் காட்சியில் மெல்ல இரத்தம் வருவதற்காகச் செய்யப்பட்டிருந்த பஞ்சில் சிவப்பு தடவிய பகுதியை எடுத்து வைத்துக்கொண்டு இரத்தம் வருவதாக நடித்திருந்த நேர்த்தி சிறப்பு.

தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டு முதற் பரிசு பெற்ற மாணவ மாணவியரின் பேச்சு, திருமுறை ஓதுதல் ஆகியன நடைபெற்றன. இவற்றை ஒழுங்குபடுத்துவதில் சிவத்திரு சாந்தி, திருமதி கண்ணா கண்ணப்பன், திருமதி வெங்கட் ஆகியவர்களின் பணி அளப்பரியது.இணைப்புரை வழங்கிய ஐயா சிவகுமாரன் அவர்களுக்கு இ்ம்மாணவர்களை அழைப்பது, அவர்களின் பேச்சினை நேரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது ஆகியன கைவந்த கலையாக இருந்தது. இவர்களுடன் இணைந்திருந்த தொண்டர்களின் பெயர்கள் என் நினைவுக்குறைவால் இங்குக் குறிக்க இயலவில்லை. சிவத்திரு நந்தகுமார் அவர்களின் பணி சிறப்பானது. மூன்று நாள்களும் நடைபெறும் நிகழ்வுகளை காணொளிக் காட்சியாகப் பதிவது, நேரத்திற்கு வந்து நேரத்தில் முடித்துக்கொள்வது என்று அவர் பணியாற்றினார். காரணம் அவர் இராணுவத் துறையில் பயிற்றுநராக இருப்பவர். இவருடன் ஒரு நாளட முழுவதும் சந்தோஷா தீவில் மகிழ்வுடன் சுற்றுலாப் பயணியாக நான் இருந்தேன். இவர் காட்டிய காட்சிகளை காணொளிப் பதிவுகளாக ஆக்கி அதனை உரிய இடத்தில் தந்து எடிட் செய்து நான் கிளம்புவதற்குள் என்னிடம் அளித்தவிட்ட நல்ல உள்ளத்தார் இவர். சிவத்திரு சிவசுப்பிரமணியம் ஐயா அவர்களின் பணி பாராட்டத்தக்கது. அவரே திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் பதிவாளர். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் போல அத்தனை நிகழ்வுகளின் ஒலிக்கோப்புகளை நெறிப்படுத்திப் பதிந்து வருபவர். நான் விமான நிலையத்தில் விடைபெறும்போது என்னுடைய பேச்சுகள் அனைத்தையும் ஒலிவடிவக் கோப்பாக என்னிடம் அளித்தார். இது போன்று பல அன்பர்கள். உணவு வழங்குதல், மேடையைச் சரிசெய்தல் முப்போதும் திருமுறை தீண்டுபவர்களாக அவர்கள் விளங்கினர். திருமுறை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு சில மாதங்கள் சிங்கப்பூரில் தங்கினால் போதும். திருமுறை யாதென உணரலாம்.

இன்றைக்கு அரங்கம் குழந்தைகளாலும், பெண்களாலும் நிரம்பியிருந்தது. சான்றோர்கள், குழந்தைகள், பெண்கள் என்ற கலவையான கேட்போர் என்பது மனதிற்குள் என் பேச்சின் வடிவை ஒழுங்கமைத்துக்கொள்ளத் தூண்டிக்கொண்டே இருந்தது.

திருமறை மாநாட்டிற்கான திருமுறைப் போட்டிகள் கடந்த ஜுலை மாதத்தில் மூன்றுநாள்கள் தொடர்ந்து நடத்தப்பெற்றிருக்கின்றன. இம்மூன்று நாட்களும் ஏற்பாட்டாளர்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள். அத்துடன் மலேசியாவில் இருந்து் நடுவர்கள் வரவழைக்கப்பெற்றுப் போட்டிகள் நடத்தப்பெற்றன என்ற நடுநிலைமையும் பாராட்டத்தக்கது. போட்டியில் பங்குபெறும் அ்னைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகள் என்பதும் முதல் மூன்று பரிசுகள் என்பதும் சிறப்பான அம்சங்கள். அதற்கு வழங்கப்பெற்ற கோப்பைகளும் நல்ல கலை நயமான தேர்வுகள்.

இக்குழந்தைகள் பரிசு பெறுவதற்கான வரிசை முறையில் அமைக்கக் கீழ்த்தளத்திற்கு அழைத்துச் செல்லப் பெற்றனர். இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பேசுவது என்ற ஒரு சூழல் கழிந்தது.

இன்று காலை திருவள்ளுவர் சிலை- சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மையத்தில் திறக்கப்பட்டது. முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள் இச்சிலையைத் திறந்து வைத்தார். இவரின் வழிகாட்டலில் ஒரு நல்ல நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு நான் பார்க்க நினைத்தத் தமிழாசிரிய நண்பர்கள் அனைவரையும் சந்திக்க முடிந்தது. காலை முதலே தமிழ்ப்பேச்சு மனதில் ஓடிக்கொண்டிருந்ததால் தமிழ்விடுதூதும் குற்றாலக்குறவஞ்சியும் தந்த தமிழின்பத்தை என்னுடைய பேச்சின் முன்னுரையாக வைத்துக்கொண்டு கண்ணப்ப நாயனார் புராணத்தில் இறைவன் சிவகோசாரியாருடன் பேசிய தமிழ்ப்பேச்சினை இரண்டாம் நாள் பேச்சில் எடுத்துரைத்தேன். சிவகோசாரியாருடன் வடமொழியில் இறைவன் பேசியிருக்கலாமே என்ற என் ஐயம் இந்தப்பேச்சிற்கானத் தூண்டுகோல் ஆகும். சிவகவிமணி இறைவன் பேசிய ஐந்துப் பாடல்களை வெள்ளிப்பாடல்கள் என்று ஓரங்கட்டுகிறார். இவை ஓரங்கட்டப்படக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அதனை நிறைவேற்ற அன்றைய பேச்சினை வடிவமைத்துக்கொண்டேன்.

இப்பேச்சின் வெற்றி மூன்றாம்நாள் நிகழ்ந்த அரசகேசரி ஆலய நிர்வாகக்குழுவின் சார்பில் வரவேற்புரையில் எதிரொலித்தது. வரவேற்புரையாற்றிய அன்பர், செண்பகவிநாயகர் கோயிலின் சித்தாந்த பாட வழிநடத்துநர் (பெயர் மறந்ததன் விளைவு- இத்தனைக் குறிப்புகள் தரவேண்டி உள்ளது) அவர்களின் பேச்சில் எதிரொலித்தது.

இறைவன் பேசாமால் பேசுவான் என்பதற்கு நேற்று ஐயா பேசிய தமிழ்ப்பேச்சு- உதாரணம் ஆகும். ‘‘இறைவன் கனவில் வந்தான். கனவில் வந்த இறைவன் பேசாமல் பேசிய பேச்சு , கேட்காமல் கேட்ட பேச்சு அது’’ என்றார் அவர்.

இணைக்காமல் இணைத்த அவரின் பேச்சு எனக்கு மனநிறைவினைத் தந்தது. இரண்டாம் நாள் பேச்சினைக் கேட்க வந்திருந்த மகளிர் மகிழும் வண்ணம் சிற்சில தற்கால குடும்பச் சூழ்நிலைச் சிரிப்புகளைக் கலந்து அன்று கலகலப்பாக அரங்கத்தை நிறைவேற்றினேன்.

தொடர்ந்து திருமுறைப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் தரப்பட்டன. பரிசுகளைத் தந்து கொண்டே இருந்தனர். பெற்றுக்கொண்டே இருந்தனர். மக்கள் கை தட்டிக்கொண்டே இருந்தனர். தன் பிள்ளைகள் பரிசு வாங்குவதை யுடியுப், பேஸ் புக்கில் நிறைக்க பெற்றறோர் படம் எடுத்துக் கொண்டே இருந்தனர்.

நிகழ்வுகள் முடிந்ததும் பிரசாதம் மனம் நிறைய வயிறு நிறைய வழங்கப்பட்டது. அன்றைக்குப் பிரசாதம் வழங்கியவர்கள் குயின்ஸ்வே முனீஸ்வரன் கோயில் நிர்வகத்தினர். உணவு உண்ணும் அந்நேர்த்தில் பேச்சு குறித்தும் மெல்லப்படும். அவற்றைக் கேட்டும் கேட்காமலும் அடியேன் உண்டு கொண்டிருப்பேன்.

ஞாயிறு நிறைந்தது

ஆகஸ்டு மூன்றாம் நாள். திருமுறை மாநாட்டின் மூன்றாம் நாள். இன்று. திருமுறை மாநட்டின் முழுநாறும் நிகழ்வுகள் நிகழுமாறு வடிவமைக்கப்பெற்றிருந்தது. இன்று. காலைமுதல் மாலை வரை திருமுறையின் சிந்தனைகளின்றி வேறில்லை. காலை நிகழ்வு அரசகேசரி சிவன் ஆலயத்தில் இயற்கையும் செயற்கையும் போட்டிபோடும் சூழலில் நடைபெற்றது.

தில்லை நடாசர் வழிபாடு, திருமுறை போற்றி, இவற்றோடு அன்று அறுபத்து மூவர் உலாவும், வழிபாடும் நடந்தது. குறிப்பாக இந்த ஞாயிறு பெற முடியாத ஞாயிறு. ஏனெனில் அன்று சுந்தரரின் ஆடி சுவாதி நட்சத்திரம். அவரின் திருத்தொண்டர் திருவந்தாதி பாடி அறுபத்து மூவரை வழிபடுவதற்கு உகந்த அற்புதமான நாள். எப்போதும் ஜுலை மாதம் கடைசி வாரத்தில் நடத்தப்படும் சிங்கப்பூர் திருமறை மாநாடு இவ்வாண்டு மலேசியாவில் நடைபெற்ற திருமுறை மாநாட்டினைக் கருதி ஒரு வாரம் தள்ளி வைக்கப்பெற்றது. அவ்வாரத்தில் சுந்தரர் குருபூசை வந்தது என்பது யாரும் எதிர்பார்க்காமல் நடந்து இறைகருணை. திருமுறை மாநாட்டிற்கு இறைவன் அளித்த அருட்கொடை.

இன்றைய நிகழ்வில் சிவத்திரு எல். வெங்கட்ராமன் அவர்கள் ‘‘மேன்மை கொள் சைவநீதி’’ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். திருமுறையின் வலிமையும் செழுமையும் அவர் பேச்சில் வெளிப்பட்டன. தேவாரத்தினை தரக்கட்டுப்பாட்டு மேலாண்மையுடன் அவர் இணைத்துப்பேசி அத்துறையும் தேவாரப்பாடல்களுக்குள் பொருந்துவதை வழிகாட்டுவதை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து திருமுறைக் கவியரங்கம் நாற்பத்தெட்டு நிமிடங்கள் ( நன்றி. திருமுறை மாநாட்டு நேரப்பதிவாளர் குமார் என்றழைக்கப்படும் திரு. மோகன் குமார் அவர்களுக்கு- இவர் வேத பாராயணத்தைத் தினம் செய்பவர். என்னை தினம் நேரத்திற்கு அழைத்துச் சென்று நேரத்திற்குக் கொண்டு வந்துச் சேர்ப்பவர். ருக் வேதம் தேர் நடத்த பெருமான் கயிலாயத்தில் உலா வந்தாராம். வேதவித்தான குமார் அவர்கள் வண்டியோட்ட சிறுமணியாய் நான் அவருடன் வந்துசேர்வேன். மேலும் வருபவர்கள் அனைவருக்கும் தரப்படும் சிங்டெல் பொருத்தப்பட்ட கைபேசியைக் கவனமாக வழங்கி அதன்வழி பேச்சாளருடான தொடர்புகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் இனிய கருத்தாளர். அவரே என்னை வரவேற்றார். வழியனுப்பியும் வைத்தார். ) வெண்பா ஓடையில் காதுகளை நனைத்தோம். சிவத்திரு அ.கி. வரதாரசன் அவர்கள் தடுத்தாட்கொண்ட நாயகன் பற்றிய கவிமழையை வருவித்தார். அவரின் வெண்பா ஈற்றுச் சீர்கள் இன்னும் அழுத்தமுடன் காதுகளில் கேட்கின்றன. (இவர் நல்ல பேச்சாளர். பொறியார் பணியை முடித்தவர். திருமுறை மாநாட்டுக்கு வரும் சிறப்புப் பேச்சாளரைத் தொடர்பு கொண்டு அவரை சிங்கப்பூர் வரவைக்க ஆவன செய்து உதவுபவர். தினம் தொடர்பு கொண்டு பேச்சாளரின் வருகையை உறுதி செய்வது என்ற மலைப்பணியைக் கலைப்பணியாகச் செய்பவர். அடுத்த ஆண்டிற்கான பேச்சாளரைத் தேடிக்கொண்டு இருக்கிறார். பேச்சாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களின் சுயவிபரக்குறிப்பு, பேச்சின் காணொளி, பேச்சின் ஒலிவடிவம் ஆகியவற்றை திரு. அ.கி.வ அவர்களுக்கு அனுப்பி வைத்தால் அது இருபக்கத்தார்க்கும் நல்லது செய்யும்)

இதனைத் தொடர்ந்து அன்பர்கள் வினவிய வினாக்களுக்கு பதில் தேடும் நிகழ்ச்சி. ஒருங்கிணைப்பாளராக இருந்துச் செயல்பட்ட கணேசன் அவர்கள் அப்போதுதான் தமிழகத் தலயாத்திரை முடித்து சிங்கை வந்திருந்தார். அவரின் வழிகாட்டுதல், பேரா. திண்ணப்பன் ஐயா அவர்களின் பரந்த பேரறிவு, இவற்றுக்கு இடையில் அடியேனின் சிற்றறிவுத் தெளிவுகள் இவை கலந்து அன்றைய நிகழ்வு மிகச்சிறப்புடன் நிறைவேறியது.

இந்நிகழ்வில் பங்கேற்பாளர் கேள்வி கேட்பது மட்டுமல்ல, பதில் விளக்கங்களும் தரலாம் என்ற புதிய முறையைப் பேராசிரியர் கொண்டுவந்தார். அது நல்ல பலன் அளித்தது. இளம் சிறார்கள் பல கேள்விகளை எழுப்பினார். ‘‘ஏன் சுந்தரருக்கு இரண்டு மனைவிகள்’’. அடிப்படையான கேள்வி இதுவென்றாலும் பதில் தேடுவதற்கு சமுதாய, உளவியல் காரணங்கள் தேவை. பதில் சொல்லாமலேபதில் தேடும்படி விட்டுவிட்டோம். பேரா. சிவகுமரன் அவர்கள் சிறுவர் கேள்விகளுக்கு அழுத்தமாகப் பதில் சொல்லுங்கள் என்று எங்களை வழிநடத்தினார். இவ்வகையில் அழுத்தமும் திருத்தமுமாக நடந்த நிகழ்வு இந்நிகழ்வு. இதன் பின் பிரசாதம் உண்டு, இளைப்பாற ஐயா வெங்கட்ராமன் அவர்களின் இல்லம் உண்டு என்று தங்கினேன். அன்றைய பிரசாத ஏற்பாடு அரசகேசரி கோயில் நிர்வாகத்தார்.

மாலை மலர்ந்தது

ஞாயிறு மாலை தில்லை நடராசர் பூசை, திருமுறை பாராயணம் இவற்றோடு தொடங்கிய நிறைநாள் நிகழ்ச்சி மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. . இன்று திருமுறைகள் பாடிய விவேக் ராசா அவர்களி்ன் பாடலில் அரங்கம் பக்தியால் திளைத்தது.

‘‘வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை’’ என்று அவர் பாடியபோது அதுவே அவரின் இசை உச்சமாக இருந்தது. பக்கத்தில் வேலாக நின்றிருந்த தண்டாயுதபாணி அரங்கத்திற்குள் வந்து சேர்ந்தார். வேலையும் மயிலையும் முருகனையும் மனக்கண்ணில் நிறுத்தி உச்சி குளிர வைத்தது. தடுத்து நிறுத்தமுடியாத தமிழிசை வெள்ளம்.

தொடர்ந்து அடியேனின் பேச்சு. ‘‘அடியார்க்கு அடியார்கள்’’ என்ற தலைப்பில் பேசினேன். சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரையே வணங்கிய அடியார்களை அவர்களின் பக்திச் செம்மையை எடுத்துரைத்து என் பேச்சு நகர்ந்தது.

இதன் வெற்றி அடுத்து நிகழ்ந்த திருமுறைத் தொண்டர் பட்டம் பெற வந்த அன்பரின் அறிமுகவுரையில் கண்ணா கண்ணப்பனின் வாயிலாக வெளிப்பட்டது. திருமுறைத் தொண்டர் பட்டம் பெற்றவரை அவரின் பணிகளுடன் காணொளி விளக்கமாக அரங்கிற்குக் காட்டியபோது பேச்சாளர் சொன்னபடி நாவுக்கரசர் எவ்வித விளம்பரமும் இல்லாமல் அப்பூதி அடிகள் வீட்டிற்குத் தனியராய், அடியவராய்ச் சென்றதுபோலவே இவ்வாண்டு திருமுறைத்தொண்டரும் சத்தமின்றி பணிசெய்பவர் என்றார்.

இதனைத் தொடர்ந்து பரிசு வழங்குதலும், நமசிவாய வேள்வியும் இனிது நடந்து பிரசாதத்துடன் அரங்கம் நிறைவுபெற்றது. செங்காங் அருள்மிகு வேல் முருகன், ஞான முனீஸ்வரன் ஆலயம் அன்றைக்குப் பிரசாத்தை அன்பளிப்புச் செய்திருந்தனர்.

ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இப்பெருவிழாவில் பங்கெடுப்பது என்பது கொடுத்து வைத்திருக்கவேண்டிய செயல். அரங்கம் நிறையப் பேசுவது என்பது அரிதினும் அரிய செயல். இவற்றை ஓரளவிற்கு நிறைவேற்றிய நிலைப்பாட்டில் நான் மூன்றுநாள்களும் இருந்தேன்.

இந்நிகழ்வின் தொடர்வாக பல நிகழ்வுகள் பல ஆலயங்களில் நடத்தப்பெற்றன. அதனைத் தொடர்பதிவில் இடுகிறேன். மொத்தத்தில் திருமுறை மாநாடு திருமுறைகளை, பக்தித்தமிழைச் சிறப்புடன் சிங்கப்பூர் அன்பர்கள் பேணிவருகிறார்கள் என்பதற்கான அடையாளமாக அமைந்திருந்தது.

Series Navigationஆனந்த பவன் நாடகம் – காட்சி-2சிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    மனக்கண்ணால் திருமுறை மாநாட்டு நிகழ்வுகளைக் கண்டது போல் இருந்தது.

    முனைவர் ஐயா மூன்று நாட்களும் நிகழ்த்திய உரைகளை தனித்தனி வ்யாசமாகவோ அல்லது தொகுத்து ஒரே வ்யாசமாகவோ திண்ணை தளத்தில் பகிர்ந்தால் திண்ணை தள வாசகர்களும் தில்லையம்பலவாணனின் பேரருளுக்கு பாத்ரமாவார்களே.

    தமிழகத்திலும் இது போன்ற திருமுறை மாநாடுகள் நிகழ்த்தப்படுகின்றன என எண்ணுகிறேன்.

    இயன்றால் ஹிந்துஸ்தானத்தின் பெருநகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் தக்ஷிண பாரதத்தின் அனைத்து மாகாணத் தலைநகர்களான பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இப்படிப்பட்ட மாநாடுகள் நிகழ்த்தப்பெறல் ப்ரதேசாந்தரங்களில் இருக்கும் திருமுறையில் நாட்டமுள்ள அன்பர்களுக்கு உத்சாஹம் அளிக்கும்.

    திருச்சிற்றம்பலம்
    சிவசிதம்பரம்

  2. Avatar
    ரெ.கா. says:

    //ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இப்பெருவிழாவில் பங்கெடுப்பது என்பது கொடுத்து வைத்திருக்கவேண்டிய செயல். அரங்கம் நிறையப் பேசுவது என்பது அரிதினும் அரிய செயல்.//

    ஐயா, மிக அருமையான தகவல். சிங்கப்பூரார் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்வார்கள் என்பதற்கு இது சான்று. முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் என் அன்பிற்குரியவர். பல ஆண்டுகளாக இந்தப் பணியாற்றி வருகிறார். தமிழ்க் கடலான பேராசிரியர் சுப. திண்ணப்பனின் வழிகாட்டலும் உள்ளது. நாச்சியம்மை அருணாசலம் குடும்பத்தினரும் தமிழ் மன்மும் பக்தி உள்ளமும் கொண்டவர்கள். நான் அறிந்தவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். இன்னும் ஏராளமானவர்களின் பணியும் அர்ப்பணிப்பும் இதில் உள்ளதை அறிவேன்.

    மலேசியாவிலும் திருமுறை மாநாடுகள் ஆண்டு தோறும் நடந்து வருகின்றன. குவாலா லும்பூர் மகா மாரியம்மன் கோவில் குழு இதனை அவர்களின் சொகுசு அரங்கிலேயே நடத்துகிறார்கள். தமிழ் நாட்டுப் பேச்சாளர்களின் பக்தி மயமான உரைகளும் பொழிவதுண்டு. திருமுறைகள் ஊர்வலம், பாராயணம், வழிபாடு, அறுசுவை உணவு அனைத்தும் உண்டு. “தென்னாடுடைய சிவன்” எங்கள் மலேசிய சிங்கப்பூர் நாடுகளில் என்னாளும் வாழ்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *