சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்

author
0 minutes, 10 seconds Read
This entry is part 15 of 19 in the series 31 ஜனவரி 2016


முனைவர் கோட்டி திருமுருகானந்தம்

 

thiru560@hotmail.com

 

 

 

 

உலக நாடுகளில் தமிழர் பல்லாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் தமிழர்களை மலாயா, பிஜித்தீவுகள், மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குக் கூலித் தொழிலாளர்களாக அனுப்பி வைத்தனர். பின்னர்த் தமிழர் பணி, கற்றல், கற்பித்தல் காரணமாக உலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அப்படித் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் உலக நாடுகளுள் ஒன்றுதான் சிங்கப்பூர். சிங்கப்பூரில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக இருப்பதால் பிற இந்திய மொழிகளைவிட தமிழ்மொழிப் புழக்கம் அதிகமுள்ளது. இந்நாட்டில் கி பி 1800 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் தமிழர் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை முதலிய படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வானொலி, தொலைக்காட்சி முதலிய தகவல் ஊடகங்கள் தமிழ்மொழி புழக்கத்திற்குரிய கருவிகளாக மட்டுமல்லாமல் இலக்கியம் மலர வாய்ப்பளிக்கின்றன. சிங்கப்பூரில் நடத்தப்படும் கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி, கட்டுரைப்போட்டி, நாடகப்போட்டி முதலிய போட்டிகள் சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்திற்குப் பாதையமைத்துத் தருகின்றன. இவைகளில் – 1900 ஆம் ஆண்டுகளுக்கு முன் – வாழ்ந்த முன்னோடிக் கவிஞர்கள் குறித்த அறிமுகத்தைக் காண்போம்.

 

1          மூத்த கவிஞர் முத்துக்கருப்பன் செட்டியார் சிங்கப்பூர்த் தமிழ்க்கவிதை வரலாற்றில் முன்னோடிக் கவிஞராக விளங்கும் முத்துக்கருப்பன் செட்டியார் சிங்கப்பூர், மலேசிய கவிதை உலகின் மூத்த கவிஞராக விளங்குகிறார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள சிவகெங்கைச்சீமை, அமராவதி தாலுக்காவின் காரைக்குடிக்கு அடுத்த நாகநாதபுரத்தில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் ராமநாத செட்டியார் என்பதாகும். இவர் அவதானப் பயிற்சி மிக்கவர். கணக்கில்லாத அவதானங்கள் செய்ததால் கணக்கிலவதானி என்று அழைக்கப் பெற்றார். இவர் படைத்துள்ள பினாங்கு தண்ணீர்மலை வடிவேலர் பேரில் ஆசிரிய விருத்தம் என்னும் நூலே தற்போது கிடைத்துள்ள சிங்கப்பூர்க் கவிதை நூல்களில் மூத்த நூலாகும்.

 

பினாங்கு தண்ணீர்மலை வடிவேலர் பேரில் ஆசிரிய விருத்தம் என்னும் இந்நூலைத் தேவகோட்டை வீரப்பசெட்டியார் அவர்களின் நண்பர் நாச்சியப்ப செட்டியார் குமாரர் அண்ணாமலை அச்சிடும்படி கேட்டுக் கொண்டதால் கல்விக் களஞ்சிய அச்சுக்கூடம் 1863 ஆம் ஆண்டு உருத்திரோற்காரி வருடம் புரட்டாசி மாதம் முதற்பதிப்பை அச்சிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்நூல் பிரபாகர அச்சுக்கூடம்,1869, மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம்,1873, பிரபாகர அச்சுக்கூடம், விவேக விளக்க அச்சுக்கூடம்,1874, (இரண்டு பதிப்புகள்), மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம்,1875, பரப்பிரம முத்திராக்ஷர சாலை,1878, பிரபாகர அச்சுக்கூடம்,1881, பரப்பிரம முத்திராக்ஷர சாலை, மாணிக்க முதலியார் கம்பேனி, மனோன்மணி விலாசவச்சுக் கூடம்,1882 (இரண்டு பதிப்புகள்), மநோன்மணி விலாச அச்சுக்கூடம்,1887, பரப்பிரம முத்திராக்ஷர சாலை,1891, மநோரஞ்சித விலாச அச்சுயந்திரச் சாலை 1898, ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம்,1905, ராஃபிள்ஸ் அச்சுக்கூடம், சிங்கப்பூர் 1917 எனப் பதின்நான்கு பதிப்புகள் வந்துள்ளன. பினாங்கு தண்ணிமலை வடிவேலர் ஆசிரிய விருத்தம், உலகநாத சுவாமிகள் பேரில் ஆசிரிய விருத்தம், குன்றாக்குடி சுப்பிரமணியர் பேரில் ஆசிரிய விருத்தம், நெல்லையம்பதி உலக நாயகியம்மன் பேரில் ஆசிரிய விருத்தம், வங்காளம் தெண்டாயுதபாணி பேரில் ஆசிரிய விருத்தம் என்னும் ஐந்து பகுதிகள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பகுதியும் பத்து பத்து ஆசிரிய விருத்தங்களென மொத்தம் ஐம்பது ஆசிரிய விருத்தங்கள் இந்நூலில் உள்ளன.

 

2          சிங்கப்பூர்ச் சித்திரகவி நாவலர் சி. வெ. நாராயணசாமி நாயகர் சிங்கப்பூர்த் தமிழ்க்கவிதை உலகின் தொடக்ககாலக் கவிஞராக விளங்கும் சி. வெ. நாராயணசாமி நாயகர் 1860 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் வாழ்ந்திருக்கிறார். இவர் தமிழகம் நாகப்பட்டினத்தைச் சார்ந்தவர். வெள்ளையப்பு நாயகர் இவர் தந்தையாவார். இவர் சிங்கப்பூரில் என்ன பணியாற்றினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவர் கவிஞர், கவிதையாக்கும் திறனைக் கற்றுக் கொடுத்தல், பதிப்பாசிரியர், நூலைச் சரிபார்த்துக் கொடுத்தல், அகராதிப்பணி எனப் பன்முகங் கொண்ட படைப்பாராய் விளங்குகிறார். இவரைப் பற்றியும் இவரது ஆக்கங்கள் பற்றியும் நோக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

சி. வெ. நாராயணசாமி நாயகர் தமிழகம் நாகூர்கண் வாழ்ந்த கா. முகம்மதுப் புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்றார். இவர் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலணக்கத்தில் வல்லமை பெற்றவர். சித்திரகவிதை யாக்கும் புலமை வாய்ந்தவர். அந்தாதி, மாலை, கீர்த்தனை முதலிய இலக்கியங்களைப் படைக்குந்திறன் உடையவர். அறிஞர்களைப் போற்றும் குணம் படைத்தவர். இவர் தன் ஆசிரியரையும் மாணவரையும் மதிக்கும் மாண்பினர்.

 

முகம்து அப்துல் காதிறுப்புலவர் தனக்குத் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுத்த ஆசிரியரை மறவாமல் ஒரு கவிதை எழுதியுள்ளார். அவரது கவிதைக்கு முன் சிங்கப்பூர்ச் சித்திரகவி நாவலர் ஸ்ரீ ல ஸ்ரீ சி. வெ. நாராயணசாமி நாயகர் என்ற எமதாசிரியவர்கள் மீது பாடிய 32 சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்ற வாசகம் காணப்படுகிறது. இதனால் இவரது ஆசிரியர் சித்திரகவி எழுதுவதில் வல்லவர் என்பதை உணரமுடிகிறது. மேலும் மாணவரின் நன்றி மறவாப் பண்பையும் காட்டுகிறது. இவர் தனது மாணவன் முகம்மது அப்துல் காதிறுப் புலவர், முகியித்தீன் அப்துல் காதிறுப் புலவர், செவத்த மரைக்காயர் ஆகியோர்க்குச் சாற்றுகவிகள் அளித்துள்ளார்.

 

சி. வெ. நாராயணசாமி நாயகர் அபிராமியம்மன் பேரில் பாதாதி கேசமாயியற்றிய பதிகமும் சில தனிபதங்களும், பரமவியல் பேசல், பாடற்றிரட்டு, நன்னெறித் தங்கம் பாட்டு, வெறியர் போதக மாலை, அடைக்கமாலை, பாலியர் யாப்பிலக்கணச் சல்லாபம், நெஞ்சொத்து மாலை, வைராக்கிய தருப்பணக் கீர்த்தனை, முதலாவது பிரபந்தத் திரட்டு, மானிடக்கும்மி, மும்மணி மாலை, அந்தாதி, பதிற்றந்தாதி, போதக மஞ்சரி, அடைக்கல மாலை எனப் பதினாறு கவிதை நூல்களைப் படைத்துள்ளார். மேலும் இவர் இசைப்பாடல்கள், ஓவியப் பாடல்கள் படைத்துள்ளதாகவும் தெரிகிறது. இவற்றுள் நன்னெறித் தங்கம் பாட்டு(1868), முதலாவது பிரபந்தத் திரட்டு(1873), மானிடக் கும்மி(1880) முதலிய நூல்கள் மட்டும் கிடைத்துள்ளன. இந்த நூல்களின் மூலமும் நுண்படச்சுருளும் சென்னை தரமணியிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ளன. இவை தவிர இவர் மலாய் தமிழ் அகராதி, மலாயச் சிங்காரம் என்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

 

சிங்கப்பூர்த் தமிழ்க்கவிதை உலகின் தொடக்ககாலக் கவிஞராக விளங்கும் சி வெ நாராயணசாமி நாயகர் பன்முகப் படைப்பாளியாவார். கவிஞர், பதிப்புப்பணி, கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தல், நூலைச் சரிபார்த்துத் தருதல், அகராதிப்பணி எனப் பல பணிகளைச் செய்துள்ளார். இவர் பதினைந்து கவிதை நூல்களைப் படைத்துள்ளார். முன்னோர்கள் பாடிய மானிடக்கும்மி என்னும் நூலைச் சரிபார்த்து பதிப்பித்துள்ளார். இவர் சிங்கப்பூரில் வாழ்ந்து படைப்புகளைப் படைத்த போதும் இவரைப் பற்றி சிங்கப்பூர் அறிஞர்களுக்கு அதிகம் தெரியவில்லை. இவர் படைத்துள்ள நூல்கள் சிங்கப்பூரில் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியத்திலும் இல்லை.

 

மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தைத் தொகுத்த முனைவர் முரசு நெடுமாறன், சிங்கப்பூர்ச் சித்திரகவி நாவலர் சி. வெ. நாராயணசாமி நாயகர் இசைப்பாடல்கள் இயற்றுவதில் வல்லமை பெற்றவர் என்ற கருத்தைச் சுட்டிக்காட்டி ஒரு பாடலைத் தம் தொகுப்பில் பதியவைத்துளார். சிங்கப்பூர்த் தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன் சிங்கப்பூர்ச் சித்திர கவிஞர்கள் என்னும் கட்டுரையில் இவர் சித்திரகவிதை படைக்கும் திறனுடையவர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இவரைப் பற்றி எந்தக் குறிப்பையும் சுட்டவில்லை, கட்டுரை எதுவும் எழுதவில்லை. இவர் தமது மாணவன் முகம்மது அப்துல் காதிறுப் புலவர், முகியித்தீன் அப்துல் காதிறுப்புலவர், செவத்த மரைக்காயர் ஆகியோர்க்குச் சாற்றுகவிகள் அளித்துள்ளார். இந்த மூன்று கவிதைகளையும் ஒன்றாக நோக்கும்போது இவரது நுண்மான் நுழைபுலம் தெரிகிறது. இந்தக் கவிஞர்களையும் அவர்களது நூலின் சிறப்பையும் அறிமுகப்படுத்தியுள்ள பாங்கு போற்றும்படி உள்ளது. இவர் தனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த கா. முகம்மது புலவரைப் பற்றி ஒரு பாடல் புனைந்துள்ளார். இப்படால் வழி இவரது நன்றி பாராட்டும் மாண்பைக் காணமுடிகிறது.

 

இவர் படைத்துள்ள நன்னெறித் தங்கப்பாட்டு காலத்தால் மூத்த நூலாகும். இந்நூல் 1868 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இதில் மக்களுக்கு வேண்டிய அறிவுரைகளைக் கவிஞர் படைத்துள்ளார். முதலாவது பிரபந்தத் திரட்டு என்னும் நூல் சிங்கப்பூரில் கோவில் கொண்டிருக்கும் முருகனின் சிறப்பு இயல்புகளை எடுத்துரைக்கும் இனிய பாமாலைகளின் தொகுப்பாகும். மானிடக்கும்மி இவர் பதிப்பித்த நூலாகும். ஏட்டுப் பிரதிகளில் இருந்ததை இவர் சரிபார்த்து பதிப்பித்துள்ளார்.

 

3          வீரப்பிள்ளை உபாத்தியாயர் கவிஞர் வீரப்பிள்ளை உபாத்தியாயர் படைத்துள்ள பினாங்கு தண்ணிமலை வடிவேலர் பேரிற்பாடிய இரட்டை ஆசிரிய விருத்தமும் தேவாரப் பதிகமும் என்னும் நூலைச் சென்னை கல்விக் களஞ்சிய அச்சுக்கூடம் 1869 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர்க் கவிதையுலகின் தொடக்ககால நூல்களில் ஒன்றான இந்நூல் பினாங்கு நகரில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமானின் சிறப்புகளைப் பாடும் பக்திப் பனுவலாகும்.

 

4          முகம்மது அப்துல் காதிறுப் புலவர் கவிஞர் முகம்மது அப்துல் காதிறுப் புலவர் 1870 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் வாழ்ந்திருக்கிறார். இவருடைய ஆசிரியராக சிங்கப்பூர்ச் சித்திரகவி நாவலர் சி. வெ. நாராயணசாமி நாயக்கர் இருந்திருக்கிறார். இவர் தன் மாணவன் எழுதிய முனாஜாத்துத் திரட்டு என்னும் நூலை அச்சாதி நோட்டமிட்டுள்ளார். அதாவது நூலைச் சரி பார்த்து அச்சிடுவதற்குத் தந்துள்ளார். இவர் அளித்துள்ள அறுபத்திரண்டு அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்துள்ள சாற்றுகவியில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை வாய்க்கப் பெற்றவர், தமிழிலுள்ள நான்கு வகையான கவிதைகளை இயற்றும் திறன் பெற்றவர், நல்ல குணம் படைத்தவர், இவர் தமிழகம் நாகூர்ப் பகுதியைச் சார்ந்தவர், கர்ணனைப் போல் பலருக்கும் கொடுக்கும் கொடைப்பண்பு படைத்தவர், பல கலைகளிலும் வல்லமை பெற்றவர், பல தரப்பட்ட நூல்களைக் கற்றுத் தேர்ந்து அறிவு நிரம்பப் பெற்றவர் எனத் தன் மாணவனின் சிறப்புகளைப் பாராட்டிப் பாடியுள்ளார்.

 

முகம்மது அப்துல் காதிறுப் புலவர் படைத்துள்ள முனாஜாத்துத் திரட்டு(1872), கீர்த்தனத் திரட்டு(1896) முதலான கவிதை நூல்கள் சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை வரலாற்றில் தொடக்க காலக் கவிதை நூல்களாகும். முனாஜாத்துத் திரட்டு என்னும் கவிதைத் தொகுப்பு சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் தொடக்க கால நூலாகும். 1872 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஜே பட்டன் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ள இந்நூலை நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவர் எழுதியுள்ளார். இந்நூல் தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் வாழ்ந்து மறைந்த இஸ்லாமிய இறைத்தூதர்களைப் பற்றிய நூலாகும். முனாஜாத்துப் பதிகம் கஃகு பேரில், முனாஜாத்துப் பதிகம் நபியுல்லா பேரில், முனாஜாத்துப் பதிகம் முகையதீன் ஆண்டவர்கள் பேரில், முனாஜாத்துப் பதிகம் சாகுல் மீதாண்டவர்கள் பேரில், தனிப்பாக்கள், தனிப்பதங்கள், சிந்து நபியுல்லா பேரில், சிந்து கூத்தானல்லூர் அப்துல் முகம்மது சாயபு, சித்திர கவிதைகள் என 110 கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் இறுதியில் கமலபந்தம், ரதபந்தம் என்ற இரு சித்திர கவிதைகளும் இடம் பெற்றுள்ளதால் இவர் சித்திரகவி எழுதுவதிலும் வல்லவராய்த் திகழ்ந்திருக்கிறார் என்பது புலனாகிறது.

 

கீர்த்தனத் திரட்டு என்னும் இந்நூலை முனாஜாத்துத் திரட்டு என்ற நூலின் மறுபதிப்பாக 1896 ஆம் ஆண்டு முகம்மது அப்துல் காதிறுப் புலவர் படைத்துள்ளார். முற்பதிப்பில் உள்ள கவிதைகளோடு மேலும் சில இறைத்தூதர்கள், இஸ்லாமிய மதகுருமார்கள் பற்றிய கவிதைகளையும் சேர்த்துப் படைத்துள்ளார். இந்நூலைச் சிங்கை ஜாவிப்பிரணாக்கான் கம்பெனி அச்சிட்டுள்ளது.

 

5          முகியித்தீன் அப்துல் காதர் கவிஞர் முகியித்தீன் அப்துல் காதர்சந்தக் கும்மி(1879) என்னும் நூலைப் படைத்துள்ளார். இவர் தந்தையார் நாகூர் மு. ஆக்கின் சாயபு நகுதா என்பதாகும். திருமுல்லைராயன் பட்டினத்தைச் சேர்ந்த இபுராகிம் சாகிபு மகன் காஜி முகம்மது இந்நூலை இயற்றும்படி கேட்டுக்கொண்டதால் இந்நூலைப் படைத்துள்ளார். இவரது ஆசிரியர் சி. ந. சதாசிவ பண்டிதர் பார்வையிட்ட பின் மகுதூம் சாயபு தனக்குச் சொந்தமாகிய தீனோதய வேந்திரசாலையில் அச்சிட்டுத் தந்துள்ளார். சி. ந. சதாசிவ பண்டிதர் அளித்துள்ள சிறப்புப் பாயிரம், சி. வெ. நாராயணசாமி நாயகர், கவிஞரின் மாணாக்கர் இ. காஜி முகம்மது ஆகியோர் தந்துள்ள சாற்றுக்கவிகள் கவிஞரைப் பற்றியும் நூல் பற்றியும் பல செய்திகளைத் தருகின்றன. இந்நூல் நபியுல்லா பேரில் துவாதசக் கலித்துறை, சந்தக்கும்மி என்னும் பிரிவுகளை உள்ளடக்கியது. இவர்புலவர் இலக்கியம், பொதுமக்கள் இலக்கியம் ஆகிய இரண்டையும் படைக்கும் திறனுடையவர் என்பதற்குச் சிறந்த சான்றாக இந்நூல் விளங்குகிறது.

 

முகியித்தீன் அப்துல் காதிறுப் புலவர், சந்தக்கும்மி என்ற நூலைப் படைத்துள்ளார். நபியுல்லா பேரில் துவாதசக் கலித்துறை, சந்தக்கும்மி முதலிய இரு தொகுப்புகளடங்கிய இந்நூல் நேரிசை ஆசிரியப் பாவில் இயற்றப்பட்டதாகும். நபிகளாரின் புகழை எடுத்துரைக்கும் கவிதைகளின் தொகுப்பான இந்நூலை 1879 ஆம் ஆண்டு சி. ந. சதாசிவப்பிள்ளை பார்வையிட்ட பின் சிங்கை தீனோதய வேந்திரசாலை அச்சிட்டுள்ளது. இந்நூலும் சமய நூலாகத் திகழ்கிறது. சி. ந. சதாசிவப் பிள்ளையும் சி. வெ. நாராயணசாமி நாயகரும் தந்துள்ள சாற்று கவிகள் இந்நூலில் காணக்கிடக்கின்றன.

 

6          நெல்லையப்ப செட்டியார் கவிஞர் நெல்லையப்ப செட்டியாரின் தந்தையார் மதுரை ஜில்லா காரைக்குடி ஏழு நகரத்திலுள்ள நேமநகரம் நெ இராமநாதச் செட்டியாராவார். இவர் பெரும் புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமும் வன்றொண்டச் செட்டியாரிடமும் கல்வி பயின்றவர். இவர் சிங்கப்பூரில் என்ன பணியாற்றினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவர் சிங்கை வடிவேலர் தோத்திரம்(1880), செவ்வலூர் மதுவ நாயகியம்மை பதிற்றுப் பத்தந்தாதி(1886), இராமநாத பிள்ளையார் பாடல்(1890) முதலிய கவிதை தொகுப்புகளை யாத்துள்ளார். இந்நூல்கள் சிங்கப்பூரின் தொடக்ககால கவிதை நூல்களாகும். இந்த மூன்று நூல்களையும் சி. கு. மகுதூம் சாயபுவின் தீனோதய வேந்திரசாலை அச்சிட்டுள்ளது.

 

சிங்கப்பூர் சித்தி விநாயகர் நவமணிமாலை, சுப்பிரமணியசாமி பிள்ளைத் தமிழ், சண்முக மாலை, சுப்பிரமணியர் பதிகம், அங்கயற்கண்ணி மாலை, சுந்தரேசர் திருவிரட்டை மணிமாலை, அநுகூல விநாயகர் மாலை. அநுகூல விநாயகர் பதிகம் என்ற சிறுநூல்கள் சிங்கப்பூர் பிரபந்தத் திரட்டு என்னும் நூலில் அடங்கியுள்ளன. சிங்கை வடிவேலர் தோத்திரத்தில் சில சித்திரகவிகளும் இடம் பெற்றுள்ளதால் இவர் சித்திரகவி படைப்பதிலும் ஆற்றல் வாய்ந்தவர் என்பது தெரிகிறது. இந்நூலைச் சி. ந. சதாசிவ பண்டிதர் பார்வையிட்டுள்ளார். அவர் அளித்துள்ள சிறப்புப் பாயிரம் இந்நூலின் சிறப்புகளையும் கவிஞரின் பண்புகளையும் ஒரு சேர உரைக்கிறது.

 

7          வால சுப்பிரமணிய ஐயர் கவிஞர் வால சுப்பிரமணிய ஐயர் பாண்டிய நாட்டில் மழவராயனேந்தல் என்னும் பகுதியைச் சார்ந்தவர். இவர் தந்தையார் சிதம்பர தீட்சிதர் என்பவராவார். தந்தையார் சிறந்த தமிழ்ப் புலவராகத் திகழ்ந்ததால் இவருக்கு இளமையிலேயே நூல்களைக் கற்பித்தார். அவதானம் செய்வதிலும் இவர் தேர்ச்சி பெற்று விளங்கினார். நூறு அவதானங்கள் வரை செய்தமை காரணமாக சதாவதானம் என்று அழைக்கப் பெற்றார். இவர் செட்டி நாட்டு காரைக்குடியில் நீண்ட நாள் தங்கியிருந்தார். இவர் கற்பக விநாயகர் அகவல், கற்பக விநாயகர் பதிகம், கொப்புடை நாயகி பதிகம், கொப்புடை நாயகி மும்மணிக்கோவை, பொய் சொல்லா மெய்யர் பதிகம், பொய் சொல்லா மெய்யர் நான் மணிமாலை, மீனாட்சி சுந்தரேசுவரர் இரட்டை மணிமாலை, மீனாட்சியம்மை பதிகம் முதலிய நூல்களைப் படைத்துள்ளார்.

கற்பக விநாயகர் பதிகம்: இரண்டு காப்புச் செய்யுள்கள் உட்பட 12 செய்யுட்களை இந்நூல் பெற்றிலங்குகிறது. இதிலுள்ள பாடல்கள் அனைத்தும், கற்பக விநாயகரைக் கருத்துள் வைப்பாம் என முடிகின்றன. கொப்புடை நாயகி பதிகம்: இந்நூல் காப்புச் செய்யுள் ஒன்று உட்பட 11 செய்யுட்களைப் பெற்றுள்ளது. ஆசிரிய விருத்தங்களாலான இந்நூல் மெய்மை மருவு கொப்புடை யம்மையே என ஒவ்வொரு பாடலும் முடிகின்றன. பொய் சொல்லா மெய்யர் பதிகம்: இந்நூல் காப்புச் செய்யுள் ஒன்று உட்பட 11 செய்யுட்களைப் பெற்றிருக்கிறது. பொய் சொல்லா மெய்யனையே போற்றி வாழ்வாம் என ஒவ்வொரு பாடலும் முடிகிறது. இந்நூல் ஆசிரிய விருத்தங்களாலானதாகும். மீனாட்சி சுந்தரேசுவரர் இரட்டை மணிமாலை: இந்நூல் 21 செய்யுட்களைப் பெற்றுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரைத் துதித்துப் போற்றுவதாக இந்நூல் அமைந்துள்ளது. மீனாட்சியம்மை பதிகம் என்னும் இந்நூலைச் சிங்கப்பூர் ஜாவிப்பிரணாக்கான் கம்பெனி வெளியிட்டுள்ளது. இந்நூல் மீனாட்சியம்மன் மீது பாடப்பட்ட நூலாகும். இவர் சிங்கப்பூரில் பணியாற்றிய போதும் தாயகத்தை மறவாதவராக வாழ்ந்திருக்கிறார். இந்நூல் வினாயகர் காப்புடன் 41 பாடல்களைக் கொண்டுள்ளது.

8          செவத்த மரைக்காயர் செவத்த மரைக்காயர் இயற்றியுள்ள மலாக்காப் பிரவேசத் திரட்டு என்னும் நூலைத் தீனோதய வேந்திரசாலை 1886 ஆம் ஆண்டு அச்சிட்டுள்ளது. இவர் தந்தையார் பெயர் கி. அப்துல் காதிறு சாகிபு மரைக்காயர். இவர் தமிழகம் நாகூர் பகுதியைச் சார்ந்தவராவார். இந்நூலுக்குச் சி. ந. சதாசிவம் பிள்ளை, நா. மு. அப்துல் காதிறுப் புலவர், சி. வெ. நாராயணசாமி நாயகர், நாற்கவி நாவலர் சவேரிநாதப் பிள்ளை, முகிய்யித்தீன் அப்துல் காதிறுப் புலவர், மு. ஆ. சுலுத்தான் மரைக்காயர், முகம்மது அலி மரைக்காயர், மு. கா. குமாரசாமிப் பிள்ளை முதலானோர் சாற்றுகவிகள் அளித்துள்ளர். இச்சாற்று கவிகளில் கவிஞரின் சிறப்பியல்புகள், அவர் பெற்றிருந்த சிறப்புகள், அவர் சார்ந்த பகுதி முதலான தகவல்கள் உள்ளன. இவர் பலருக்கும் தமிழையும் தமிழ்க் கவிதை இயற்றும் முறைகளையும் கற்றுக் கொடுத்துள்ளார். இவர் இசைப் புலமையுடன் இயல் புலமையும் வாய்க்கப் பெற்றவர் என்பதை இந்நூல் காட்டுகிறது. இவர் சித்திர கவிதை புனைவதிலும் வல்லவர்.

 

இந்நூல் இசுலாம் சமயம் சார்ந்த நூலாகத் திகழ்கிறது. இந்நூல் மலாக்காவிற்கு அருகிலுள்ள புக்கே புஸ்ஸாரென்னும் பெரிய மலையில் அடக்கம் செய்துள்ள ஹஸறத்து ஒலியுல்லா செய்கு இசுமாயில் சாகிபு குறித்த பாடல்களைக் கொண்டதாகும். நூலின் இறுதியில் இரட்டை நாகபந்தம், கமலபந்தம், இரதபந்தம், அட்ட நாகபந்தம், ஆபத்திர பந்தனம் என்னும் ஐந்து சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கான சித்திரகவிதைகள் அடுத்த பக்கத்தில் இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஒன்றே இவரின் புலமையை வெளிப்படுத்தும் விதத்திலுள்ளது. இவர் படைத்த வேறு நூல்கள் குறித்த விபரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. கம்பங் கிள்ளான் பகுதியில் மாணிக்க வியபாரம் செய்த மீறா சாகிப் அவர்களைப் பற்றியும் சிறப்பாகப் பாடியுள்ளார். இதனால் இவர் நன்றி மறவாத குணமுடையவர் என்பது புலப்படுகிறது. கவிஞர் செவத்த மரைக்காயர் மும்மணிக் கோவை, உயிர் வருக்கக் கோவை, மலாக்காப் பிரவேசத் திரட்டு, கந்தூரி திருவலங்காரச் சிந்து அலங்காரக் கும்மி, பதங்கள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார். இவர் படைத்துள்ள சில கவிதைகளைச் சிங்கைநேசன் இதழில் காணமுடிகிறது. எனவே இக்கால கட்டத்தில் இவர் இங்கு வாழ்ந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. இவர் என்ன பணியாற்றினார் என்பது தெரியவில்லை. இவர் புலவர் இலக்கியம், பொதுமக்கள் இலக்கியம் ஆகிய இரண்டையும் படைக்கும் திறனுடையவர்.

 

9          சி. ந. சதாசிவ பண்டிதர் கவிஞர் சதாசிவ பண்டிதர் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சார்ந்த நாச்சிமார் கோவில் என்ற கிராமத்தில் பொன் வினைஞர் குலத்தில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் நமசிவாயம் என்பதாகும். இவர் 1868 ஆம் ஆண்டு ஆங்கில அரசின் மேற்பார்வையில் நடந்த தமிழ்ப் பள்ளியில் ஆசிரியாக இருந்து தமிழைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். 1887 ஆம் ஆண்டு முதல் 1890 ஆம் ஆண்டு வரை சிங்கைநேசனை நடத்திய சி. கு. மகுதூம் சாயபுவின் ஆசிரியராவார். இவர் முகியித்தீன் அப்துல் காதிறுப் புலவர் படைத்துள்ள சந்தக் கும்மி என்னும் நூலைப் பார்வையிட்டுள்ளார். அதாவது அச்சாதி நோட்டமிட்டுள்ளார். அவருக்கு ஆசிரியராக இருந்து தமிழைச் சொல்லிக் கொடுத்துள்ளார். தனது மாணவர் படைத்துள்ள நூலிற்கு இவர் சாற்றுகவி அளித்துள்ளார். முப்பத்தாறு அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்துள்ள இச்சாற்று கவியில் கவிஞரின் சிறப்புகள், நூலின் சிறப்புகள் முதலியன காணக்கிடக்கின்றன. மேலும் இவர் முகம்மது சுல்தான் மரைக்காயர் இயற்றியுள்ள பதாநந்த மாலை என்னும் நூலிற்கும் சாற்றுகவி அளித்துள்ளார்.

 

கவிஞர் சதாசிவ பண்டிதர் வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகரந்தாதி, சித்திர கவிகள் முதலியவற்றை ஒரே நூலாகப் படைத்துள்ளார். இந்நூலைச் சிங்கைநேசன் ஆசிரியரான சி. கு. மகுதூம் சாயபு தனக்குச் சொந்தமாகிய தீனோதய வேந்திர சாலையில் 1887 ஆம் ஆண்டு சர்வஜித்து வருடம் சித்திரை மாதம் அச்சிட்டுக் கொடுத்துள்ளார். வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல் முதலியன காமாட்சி அம்மனைப் பாடியதாகும். சிங்கை நகரந்தாதி, சித்திரகவிகள் முதலியன சிங்கப்பூர் தேங்க் ரோட்டிலுள்ள தெண்டாயுதபாணி கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் தெண்டாயுதபாணி எனப்படும் சுப்பிரமணிய சுவாமியைப் பாடியதாகும். இவர் படைத்துள்ள சித்திரகவி என்னும் நூலில் மாலை மாற்று, அஷ்ட நாக விருத்தம், துவி நாக விருத்தம், இரத வெண்பா, கமல வெண்பா, சதுரங்க வெண்பா, துவி வெண்பா, திரி வெண்பா, கரந்துறை வெண்பா, தனு வெண்பா, வினாவிடை வெண்பா, அடி நினைந்திரங்கல், நடுவெழுத்து அலங்காரம் ஆகிய சித்திர கவிதைகள் உள்ளன. நூலின் இறுதியில் அஷ்ட நாகபந்தம், ரதபந்தம் என்னும் இரண்டு சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன.

 

10        மெய்யப்ப செட்டியார் கவிஞர் ராம. கு. மெ. மெய்யப்ப செட்டியார் படைத்துள்ள சிங்கப்பூர்ப் பிரபந்தத் திரட்டு என்னும் நூலைச் சென்னையிலுள்ள மதராசு ரிப்பன் அச்சியரந்திச் சாலை 1887 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. ஸ்ரீ வன்றொண்டர் இவரது ஆசிரியராவார். இவர் தமிழகத்திலுள்ள காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர். ராம. கு. ராம. சொக்கலிங்கச் செட்டியார் அளித்துள்ள சிறப்புப்பாயிரத்தில் கவிஞரின் சிறப்புகளைக் காணமுடிகிறது. இந்நூல் சிங்கப்பூர்ச் சித்தி விநாயகர் நவமணிமாலை, சிவசுப்பிரமணிய சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும்.

 

11        ம. ரு. வெங்கடாச்சலம் பிள்ளை கவிஞர் வெங்கடாச்சலம் பிள்ளை பினாங்கு நகரில் வாழ்ந்து இருக்கிறார். இவர் தமிழகம் நாகப்பட்டினத்தைச் சார்ந்தவராவார். இவர் வெளிவைபதி ஆனந்த வள்ளியம்மை துதி விருத்தம்(1876), பினாங்கு தண்ணிமாமலையின் கண்ணிலாகா நிற்கும் தெண்டபாணி யென்னும் சண்முகக் கடவுள் மீது புகழ்பெற்றோங்கிய அறுமுகப் பதிகம்(1887), பினாங்கு தண்ணீர்மலை வடிவேலன்மீது நவரத்நமாலை(1890) என்னும் மூன்று பக்திப் பனுவல்களைப் படைத்துள்ளார்.

 

பினாங்கு தண்ணிமாமலையின் கண்ணிலாகா நிற்கும் தெண்டபாணி யென்னும் சண்முகக் கடவுள் மீது புகழ்பெற் றோங்கிய அறுமுகப் பதிகம் என்னும் நூலைத் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ம. ரு. வெங்கடாசலம் பிள்ளை இயற்றியுள்ளார். பினாங்கு நகரிலுள்ள தண்ணீர்மலை என்பதைத்தான் இவர் தண்ணிமலை எனப் பாடியுள்ளார். இந்நூலில் அவையடக்கம், இறை வணக்கம், ஐந்து காப்புப் பாடல்களுடன் மொத்தம் 60 பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் பினாங்கு தண்ணீர்மலையில் குடிகொண்டிருக்கும் குமரனின் சிறப்புகளைப் பாடுவனவாக உள்ளன.

 

12        முகம்மது சுல்தான் மரைக்காயர் கவிஞர் முகம்மது சுல்தான் மரைக்காயர் தமிழகம் பரங்கிப் பேட்டையைச் சார்ந்தவராவார். இவர் 1870 ஆம் ஆண்டுகளில் இங்கு வாழ்ந்திருக்கிறார். இவர் என்ன பணியாற்றினார் என்பது தெரியவில்லை. இவர் படைத்துள்ள பதாநந்த மாலை என்னும் நூலிற்குச் சதாசிவ பண்டிதர் சாற்றுக்கவி அளித்துள்ளார். இதில் சதாசிவ பண்டிதர் கவிஞரின் சிறப்புகளையும் நூலின் சிறப்புகளையும் சிறப்பாகக் கூறியுள்ளார்.

 

முகம்மது சுல்தான் மரைக்காயர் இயற்றிய பதாநந்த மாலை என்னும் நூலை 1890 ஆம் ஆண்டு பினாங்கு அண்ட் ஸ்ட்ரெய்ட்ஸ் பிரஸ் அச்சிட்டுள்ளது. நபிகள் நாயகம், இறைதூதர்கள் பற்றிய 53 கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் திகழ்கிறது. சி. ந. சதாசிவ பண்டிதர், ம. ரு. வெங்கடாசலம் பிள்ளை ஆகியோர் சாற்று கவிகள் தந்துள்ளனர். இதனால் சமயநல்லிணக்கம் இருந்துள்ளதை உணரலாம். ஒவ்வொரு கவிதையின் தொடக்கத்திலும் இசைப்பாடல் வடிவில் பாடுவதற்கேற்ற இராகம், தாளம் முதலியவற்றைக் குறித்து உள்ளதால் இவர் இசைப்புலமை உடையவர் எனத் தெரிகிறது. எனவே இப்பாடல்கள் அனைத்தும் இசைத்தமிழ்ப் பாடல்களாகும். பதாநந்த மாலையில் அனைத்துப் பாடல்களும் இசுலாமியர்களின் இறையெனப் போற்றப்படும் நபிகள் நாயகத்தின் சிறப்புகளைக் கூறுவதாகும். ஒவ்வோர் இசைப் பாடலின் இறுதியிலும் இயல் தமிழில் ஒரு வெண்பா இடம்பெறுகிறது.

 

13        சுப்பராய தேசிகர் கவிஞர் சுப்பராய தேசிகர் பினாங்கென்னும் திவ்யதேசத் தண்ணீர்மலை வடிவேலர் பதிகமும் கீர்த்தனைகளும்(1892) என்னும் நூலைப் படைத்துள்ளார். இவரது தந்தையார் குழந்தை வேலாசிரி என்பவராவார். பினாங்குநகரின் சார்ஜன் மேஜர் அப்பாப் பிள்ளை முயற்சியாலும் மு. வ. பழ. பழனிப்ப செட்டியாரின் பொருள் உதவியாலும் இந்நூல் வெளிவந்துள்ளது. இவர் இசைப்புலமை மிக்கவராகவும் திகழ்ந்திருக்கிறார். எனவே கீர்த்தனைகளை எந்த ராகத்தில் எந்த தாளத்தில் பாடவேண்டும் என்று ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். இவர் செய்ந்நன்றி மறவாதவர் என்பதை இவர் இயற்றியுள்ள பாடல் உணர்த்துகிறது. இந்நூல் வெளிவருவதற்கு முயற்சி செய்த அப்பாதுரைபிள்ளை, பொருள் உதவி புரிந்த மு. வ. பழ. பழனிப்ப செட்டியார் குறித்து இவர் படைத்துள்ள பாடல் இதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.

 

14        இரங்கசாமிதாசன் கவிஞர் இரங்கசாமி தாசன் சிங்கப்பூரில் 1890 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்தாகத் தெரிகிறது. மகா ஸ்ரீ ல ஸ்ரீ குருங்குளம் கருப்பண்ண உபாத்தியாயரின் மாணாக்கர் இரங்கசாமி தாசன் குதிரைப் பந்தய லாவணி என்னும் நூலைப் படைத்துள்ளார். இவர் இயற்றியுள்ள அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி, கவிதை நூலாயினும் பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. 1893 ஆம் ஆண்டு தீனோதய வேந்திரசாலை வெளியிட்ட இந்நூல் சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். தஞ்சாவூரிலிருந்து கணவனும் மனைவியும்  பினாங்கு, மலாக்கா வழியாகச் சிங்கப்பூரில் நடக்கும் குதிரைப் பந்தயத்தைக் காணவருவதை விவரிக்கும் 21 பாடல்களுடன் சிங்கைநகர் சுப்பிரமணியர் பேரில் பதம் என்னும் பாடலுடன் மொத்தம் 22 பாடல்கள் இந்நூலில் உள்ளன.

 

15        வேலுப்பிள்ளை கவிஞர் வேலுப்பிள்ளையின் தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை என்பதாகும். இவர் கவி காளமேகப் புலவரைப் போல கவி பாடியதால் ஆசுகவி என்று அழைக்கப்பட்டார். இளமையில் பலாலியில் திண்ணைப்பள்ளி வைத்து நடத்திய வேலுப்பிள்ளை சட்டம்பியா என்பவரிடம் தமிழ் நூல்களைப் பயின்ற பின்னர், எந்நிலையிலும் எப்பொருள் குறித்தும் பாடும் ஆற்றல் பெற்றார். நகைச்சுவை ததும்ப இடித்து எடுத்துக் கூறுவதில் திறம் பெற்றவர். சுதேச நாட்டியம் என்ற நகைச்சுவை இதழை எட்டாண்டுகள் நடத்தினார்.

யாழ்ப்பாண வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வி. முருகேசம் பிள்ளையும் சிங்கப்பூரிலிருக்கும் சில செட்டியார்களும் வேண்டியதற்கு இணங்க யாழ்ப்பாணம் வயாவிளான் பகுதியைச் சார்ந்த க. வேலுப்பிள்ளை சிங்கப்பூர் தேங் ரோட்டில் குடிகொண்டிருக்கும் தெண்டாயுதபாணியைப் பற்றிப் போற்றிப் பாடிய நூலே சிங்கை முருகேசர் பேரில் பதிகம் என்னும் நூலாகும். இந்நூல் குருவணக்கத்துடன், பத்து பதிகங்கள், திருவூஞ்சல், கீர்த்தனம், பதம், ஜாவாளி என மொத்தம் பத்தொன்பது பாக்களின் தொகுப்பாகத் திகழ்கிறது. இந்நூல் சிங்கப்பூரிலுள்ள தெண்டாயுத பாணி என்னும் முருகனைப் பற்றிப் பாடிய பாக்களின் தொகுப்பாகும். இவர் வயவை விநாயகர் பதிகம், எச்சரிக்கை, ஊஞ்சல், மாவைக் கந்தரஞ்சலி, கலித்துறை வழக்கு, கொழும்பு சுப்ரமணிய சுவாமி பதிகம், திருக்கேதீச்சுர மான்மியம், சிங்கை முருகேசர் பேரில் பதிகம் முதலான நூல்களைப் படைத்துள்ளார். இத்தகவல்களைச் சிங்கை முருகேசர் பேரில் பதிகத்தின் பின்அட்டை வாயிலாக உணர முடிகிறது. இந்நூல்களில் சிங்கை முருகேசர் பதிகம் தவிரப் பிற நூல்களைப் பற்றிய குறிப்புகள் ஏதும் தெரிவில்லை.

வேலுப்பிள்ளை வயவை விநாயகர் பதிகம், எச்சரிக்கை, ஊஞ்சல், மாவைக் கந்தரஞ்சலி, கலித்துறை வழக்கு, கொழும்பு சுப்ரமணிய சுவாமி பதிகம், திருக்கேதீச்சுர மான்மியம், சிங்கை முருகேசர் பேரில் பதிகம் முதலான நூல்களைப் படைத்துள்ளார். இத்தகவல்களைச் சிங்கை முருகேசர் பேரில் பதிகத்தின் பின் அட்டை வாயிலாக உணரமுடிகிறது. இந்நூல்களில் சிங்கை முருகேசர் பதிகம் தவிரப் பிற நூல்களைப் பற்றிய குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.

 

சிங்கப்பூரில் பல இன மக்கள் தொடக்கக் காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு இந்நூல் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. இவர் வாழ்ந்த காலத்தில் இவர் குறிப்பிட்டுள்ள இனத்தினர் அனைவரும் மலாயாவில் வாழ்ந்தார்களா என்பது கேள்விக் குறியாகும். ஆனால் இவர் குறிப்பிட்டுள்ள மலாய்க்காரர், அராபியர், யூதர், சீனர், தமிழர், யுரேசியர், சிங்களர், பிரெஞ்சுக்காரர் முதலானவர்கள் அன்றைய மலாயாவில் வாழ்ந்திருக்கலாம். இவர்களது தலை முறையினர் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இன்றும் வாழ்ந்து வருவதால் இது உறுதியாகிறது. அதாவது பல இன மக்கள் வாழும் நாடு சிங்கப்பூர் என்ற உண்மையை இந்நூல் உணர்த்துகிறது.

 

16        கோசா மரைக்காயர் பினாங்கு உற்சவ திருவலங்காரச் சிந்து என்னும் நூலை நாகூர் கோ. முகம்மது நைனா மரைக்காயர் மகன் கவிஞர் கோசா மரைக்காயர் படைத்துள்ளார். இவர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர். இந்நூலை 1895 ஆம் ஆண்டு பினாங்கு கிம் சேய்க் ஹியான் என்னும் அச்சியந்திர சாலை அச்சிட்டுள்ளது. பினாங்கில் நடந்த கந்தூரித் திருவிழாவைப் பற்றிய முப்பத்திரண்டு கவிதைகளும் சில கீர்த்தனைகளும் இந்நூலில் உள்ளன. இந்நூலை வெளியிட நாகைபட்டினம் முகம்மது அபூபக்கர் பொருள் உதவி செய்துள்ளார். மதுரகவி வாருதி கி. அ. வு. செவத்த மரைக்காயர் இந்நூலைச் சரிபார்த்துக் கொடுத்துள்ளார். இவர் மேலும் சதானந்த மாலை, மனோரஞ்சித சஞ்சீவி என்னுமோர் அற்புத கிஸ்ஸா, திருக்காரைத் திருவிழாச் சிந்து, வைத்திய மகுடம் என்னும் கவிதை நூல்களையும் படைத்துள்ளார். சராரே இஷ்க், ஷிரீன் பரஹாத், ஜூஹூரா முஸ்திரி, லைலா மஜ்னூன் என்னும் நான்கு நாடக நூல்களையும் படைத்துள்ளார். இவை அச்சில் வந்த காலம், பதிக்கப்பட்ட அச்சகம் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

 

முடிவாகப் பார்க்கும்போது, 1900 ஆம் ஆண்டுகளுக்கு முன் மலாயைவை உள்ளடக்கிய சிங்கப்பூரில் மேற்குறிப்பிட்டுள்ள பதினாறு கவிஞர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. இவர்களைப் பற்றிய சரியான வரலாறு இல்லை. இவர்கள் அனைவரும் இவைகளைத் தவிர வேறு நூல்களை யாத்துள்ளார்களா என்பதும் தெரியவில்லை.இவர்களில் முத்துக்கருப்பன் செட்டியார் சிங்கப்பூர், மலேசிய கவிதை உலகின் மூத்த கவிஞராக விளங்குகிறார். இவர் படைத்துள்ள பினாங்கு தண்ணீர்மலை வடிவேலர் பேரில் ஆசிரிய விருத்தம் என்னும் நூலைத் கல்விக் களஞ்சிய அச்சுக்கூடம் 1863 ஆம் ஆண்டு உருத்திரோற்காரி வருடம் புரட்டாசி மாதம் முதற்பதிப்பை அச்சிட்டுள்ளது. இக்கட்டுரை இவர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரையாகும். இவர்களைப் பற்றி மேலாய்வு செய்வோர்க்கு இக்கட்டுரைய வழிகாட்டியாய் அமையுமென நம்பலாம்.

 

 

 

 

Series Navigationஅடையாளங்களும் அறிகுறிகளும்கோணங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *