சிறுகதை வாசிப்பு லா.ச.ரா. – ஒரு நாயும் ஒரு மனிதனும்.

author
1
0 minutes, 7 seconds Read
This entry is part 7 of 17 in the series 2 மே 2021

ஜெ.பாஸ்கரன்.

 

முதுமை எல்லோருக்கும் மகிழ்வாய் அமைந்துவிடுவதில்லை. உடல் ஆரோக்கியம், உற்றார் உறவினரின் அன்பு, அமைதியான வாழ்க்கை என எல்லாமும் நிறைவாய் அமைவது அரிது.  ‘ஒரு நாயும் ஒரு மனிதனும்’ கதையில் ஒரு முதியவரின் ஆற்றாமையை – உணவு, ஆரோக்கியம், உறவுகள் மூலம் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி இல்லாத நிலை – அவர் மன ஓட்டங்களிலேயே சொல்கிறார் லா.ச.ரா. வாசற்பக்கம் தனியறையில், கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கை. “சிறைக் கைதி போல், அறையில் தனிச் சாப்பாடு. ஐந்து வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது”.

‘உணவில் எண்ணை கூடாது, உருளைக்கிழங்கு கூடாது, காபி கூடாது – அதுவும் கொதிக்கக் கொதிக்க சாப்பிடவே கூடாது. Oh, Damn you Doctor’. ஆனாலும் மழை நாளில் வீட்டுக்குள்ளிருந்து வரும் காராசேவை மற்றும் காபி மணம் அவரைப் பாடாய்ப் படுத்துகிறது. அவருக்கு மட்டும் தனியே அருரூட் பிஸ்கட் -எரிச்சல்! முதியோர்களை வாயைக் கட்டச் சொன்னால் அவர்களால் முடியாது – கோபம் பொங்க எரிந்து விழுவார்கள். இதைத் தன் முத்திரை பதிக்கும் வார்த்தைகளில் லா.ச.ரா விவரிப்பதே சிறப்பு!

ரேழியில் மழைக்கு ஒதுங்கும் தெரு நாய் ஒன்று – அவர்தான் முதலில் இருக்கட்டும் என்கிறார்! – எப்படித் துரத்தினாலும் போகாமல், மீண்டும் மீண்டும் வந்து, அவர் வீட்டிலேயே, அவருக்கெதிரிலேயே தங்கி விடுகிறது. “மழைக்கும் தொலையவில்லை. பிளக்கும் வெயிலுக்கும் தொலையவில்லை, மறுநாளும் தொலையவில்லை, அதற்கடுத்த நாள், அதற்கும் அடுத்த நாள், நோ. அது போகவில்லை, போகவே இல்லை”-  இவ்வளவு கோபத்திற்குக் காரணம் இருக்கிறது! 

அவரது தினசரி வேலைகள் – கொஞ்சம் பூஜை புனஸ்காரம், காயத்ரி, சுந்தரகாண்டம். பிறகு இலை போட்டாச்சு என்று அழைக்கும் வரை ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் (‘அட்டைப்பட அரைநிர்வாண போட்டோவுக்கும், உள்கதைக்கும் சம்பந்தம் இல்லை – ஆனாலும் அவ்வளவு ஆபாசம் இல்லை. எவ்வளவு சுவாரஸ்யமாகக் கொண்டு போறான்!), பிறகு உண்ட களைப்பில் கொஞ்சம் தூக்கம், காபிக்குக் காத்திருத்தல், மனைவி நேசத்துடன் ஓட்ஸ் கஞ்சி பற்றி சண்டை – இப்படித்தான் போகின்றன! 

இதற்கிடையிடையே நாய் குறித்த விசாரம் வேறு – கைத்தடியால் வெளியே தள்ளினாலும் திரும்பி வந்து விடுகிறது. வீட்டில் ‘இருக்கிற வானரங்களின் தொந்திரவு போதாதென்று, இதனிடமும் மாட்டிக்கொண்டேனா?’ என்று நினைக்கிறார். அதனிடமும் ‘ஒண்டவந்த பிடாரி’ என்று ஒரு கரிப்பு.

வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த வாயில்லாப் பிராணியிடம் பிடிப்பு வந்து விடுகிறது – ‘காவலாய் இருந்துவிட்டுப் போறது’ என்கிறார்கள். கிழவருக்கோ, ‘மாடு வந்து பூச் செடிகளைத் தீர்த்துக் கட்டியதையோ, பக்கத்து வீட்டில் திருடன் வந்ததையோ கண்டு கொள்ளாமல், கழுத்தைத் திருப்பித் தன் முதுகையே கடித்துக்கொண்டிருக்கும் ரோஸியைக் (பையன்கள் சூட்டிய பெயர்) கண்டாலே எரிச்சல் – ஒரு நாள் கைதடியால் மண்டையில் போட்டுக் கொன்றுவிட நினைக்கிறார். எங்கே, எப்படிப் புதைப்பது என்றெல்லாம் நினைத்து, அந்த எண்ணத்தைக் கைவிடுகிறார்.

ரோஸிக்கு வீட்டில் கவனிப்பு  – முக்கியமாக தீனி – அதிகமாகிறது. அதன் மேனி மினு மினுக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு சோறு இத்யாதிகள் – பையன்கள் ‘ஜவ்வு’க்கு ஏற்பாடு செய்கிறார்களாம்; கலிகாலம் என்கிறார்! ஒரு நிலையில் “அவருக்கு வயிறு காயக் காய, ரோஸி தடித்துக்கொண்டே வருவது சகிக்கவில்லை” என்று எழுதுகிறார். லா.ச.ரா.

முதியவரின் மனநிலையை “ ஒரு நாய் காரணமாக மனம் இப்படி தவிக்குமா? தவிக்கணுமா? மனம் என்பது எங்கே அடங்குகிறது? என்னதான் காயத்ரி பண்ணினாலும், ராமஜெயம் எழுதினாலும், அதற்குப் பதிலாக வெறுப்பு.. வெறுப்பு.. வெறுப்பு.. எனக்கு பயமா இருக்கே “ என்று விவரிக்கிறார்.

உடல் இளைக்கிறார் முதியவர். “இளைக்காமல் என்ன செய்யும்? அதான் பாவிகள் எல்லோரும் சேர்ந்துண்டு பட்டினி போடறாளே! மிச்சத்துக்கு இந்த நாய் வேறு என்னைப் பிடுங்கித் தின்கிறதே!”  டாக்டரும் பரிசோதித்துவிட்டு, “சார், நீங்கள் எதிலுமே இனிமேல் பட்டுக்காதீங்க. அப்படி உங்களுக்குத் தாங்கற வயசு இல்லே. ஏதோ மருந்து, மாத்திரை, முக்கியமா டயட் – இதிலே வண்டிய ஓட்டிக்கிட்டுப் போக வேண்டியதுதான். அதுக்கு மேல நான் சொல்றதுக்கு இல்ல” என்கிறார். முதியவரி மைண்ட் வாய்ஸ் “ஆமாம். நீ சொல்ல இன்னும் பாக்கி இருக்கா வேற?” – வாழ்க்கையில் ஏமாற்றம், வெறுப்பு, டாக்டர் மீதும் பாய்கிறது!

ஒரு நாள் சாப்பாடு சரியாக அமையவில்லை. கொஞ்சம் பயத்தம்பருப்பு, தண்ணீர் போல ஒரு ரஸம், தாளிக்காத வேக வைத்த பீன்ஸ் – மார்க்கெட்டுக்குப் போகவில்லையாம்! பசி “வயிற்றில் ஓநாய் திரிந்தது” என்கிறார் லா.ச.ரா. 

“இந்த வாழ்க்கையே அவமானம். புத்தியுடன் உடம்பு ஒத்துழைக்கவில்லை என்கிறபோது, இனி இங்கே என்ன வேலை?”

காலி வயிறு உறுமிற்று. ஓநாய்!

தாளமாட்டாமல், சமையலறைக்குப் போகிறார். ஏனங்களைத் திறந்து உருளைக்கிழங்கு வெங்காய ரோஸ்ட், ‘செவ்ச் செவ செவ’ என்ற தேங்காய்த் துவையல், ஈயச் சட்டியில் ரஸம் (மைசூர் ரஸம், வண்டல்தான், தனியா மணத்துடன்) எல்லாம் பார்க்கிறார். சாதம் போட்டு, நெய் விழுது சேர்த்து, வண்டல் ரஸத்துடன் பிசைந்து அள்ளி அள்ளிப் போட்டுக்கொள்கிறார். ‘இப்படி சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று! நல்லாத்தான் பண்ணியிருக்காள்’ என்று சர்டிஃபிகேட் வேறு… விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், தடைகளை மீறி நாக்குக்கு ருசியாய்த் தின்பதை லா.ச.ரா விவரிப்பதே அழகு.

கூடவே வரும் ரோஸிக்கும் கணிசமான ஓர் உருண்டை சாதம் வைக்கிரார். தொண்டையும் வயிறும் எரிய, தன் இடத்தில் வந்து படுத்து விடுகிறார். இமைகள் மூடிக்கொள்கின்றன. ‘தூக்கத்தினால் அல்ல’ என்கிறார் லா.ச.ரா. ஏதாவது நேரத்தான் போகிறது. மாலையிலோ அல்லது பாதியிரவுக்குள் நிச்சயம்’ – ரோஸி அருகில் வந்து அவரை நக்கிக்கொண்டிருக்கிறது. முதுகைத் தடவிக் கொடுக்கிறார். ரோஸியின் கண்களைப் பார்க்கிறார். 

“அன்று யுதிஷ்டிரனைத் தொடர்ந்த என் எஜமான் போலும். இன்று நான் உன்னை அழைத்துப் போகத்தான் வந்திருக்கிறேன்” என்று நாய் நினைப்பது போல முடிக்கிறார்.

கட்டுப்பாடுகளுடன் சிறை போன்ற வாழ்க்கையின் கோபங்களும், வருத்தமும், வெறுப்பும் ஒரு முதியவரின் மனநிலையை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதை மிக நுணுக்கமாக எழுதியுள்ளார் லா.ச.ரா. ஒரு நாய்க்குக் கிடைக்கும் மரியாதையும், முக்கியத்துவமும் கூட தனக்குக் கிடைக்கவில்லையே என ஒப்பிட்டு வருந்துவதையும் குறிப்பிடுகிறார். தடைகளை மீறுவதால் தன் உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்தே மீறுகிறார். “ஆமாம், இனி இருந்து என்ன ஆகணும்? என் மீது உண்மையான அன்பு, பாசம் வைத்தவர்கள் எல்லாம் புறப்பட்டுப் போயாச்சு” என்பதில், இங்கிருப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று காட்டுகிறார். ஒரு நாயை விடக் கேவலமாகத் தான் நடத்தப்படுவதாக வருந்துகிறார்.

நாய்களுக்கும் இறப்புக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது – இரவு நேரங்களில் நாய் அழுவது போல ஊளையிட்டால், ஏதோ இறப்பு வரப் போகிறது என்று நினைப்பவர்கள் உண்டு. முதியவருக்கும், நாய்க்குமான அந்த பிணைப்பு, இறுதியில் சொல்ல வருவதும் அதைத்தானோ என எண்ண வைக்கிறது. 

ஜெ.பாஸ்கரன்.

Series Navigationசெவ்வாய்த் தளவூர்தி யிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம்இரண்டாவது அலை
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    திரு.லாசரா வின் கதையயை சுருக்கமாக சுவை குறையாமல் திரு.பாஸ்கரன் சொன்னவிதம் அருமை .பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *