சிறுவர் சிறுகதை: “ ஊனமே ஓடிடு ”

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 27 in the series 23 டிசம்பர் 2012

வே.ம.அருச்சுணன் – மலேசியா
மிகுந்த உற்சாகத்துடன் புனிதா, தனது புத்தகப்பையைத் தோலில் மாட்டிக் கொண்டு துள்ளல் நடைபயின்று பள்ளிக்குப் புறப்பட்டுவிட்டாள்! பள்ளிக்கு எங்கே தாமதமாகப் போய்விடுவோமோ என்ற அச்சத்தினால், முதல் நாளே இரவே பெற்றோர் வாங்கித்தந்த புதிய புத்தகப்பையில் அனைத்துப் புத்தகங்களையும் சீராக அடுக்கி வைத்துவிட்டாள்! நேரத்திலேயே படுக்கைக்குச் செல்கிறள்.
அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் படுக்கையை விட்டு தானே எழுந்துவிட்ட புனிதா, காலைக்கடன்களைத் தவறாமல் சமத்துடன் செய்திருந்தாள். அம்மா கோகிலா இறைவழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளில் மும்முரமாகப் போயிருந்ததைப் புனிதா தன் அறையினின்றும் கவனிக்கத் தவறவில்லை. நெஞ்சை உருகச் செய்யும் தேவாரப் பாடல்களைக் காலை நேரத்தில் குறுந்தட்டின் துணையுடன் வானொலியில் இசைக்கச் செய்வதில் அம்மாவுக்கு அலாதியான விருப்பம்; காலையில் கண்டிப்பாகத் தடங்கலின்றி நடைபெறவேண்டிய ஒரு நடவடிக்கையாகும் இதுவாகும்.

புதிதாகப் பிறந்திருக்கும் அன்றைய நாளை இறையுணர்வுடன் தொடங்க வேண்டும் என்பது அம்மாவின் கட்டளையாகும். அப்பா அருளப்பன் அம்மாவின் எண்ணங்களுக்கு ஆதரவானவர். காலை ஐந்து மணிகெல்லாம் வேலைக்குச் செல்லும் முன்பாக அருளப்பன்தான் வீட்டில் இறைவழிப்பாட்டில் ஈடுபடுவார். வழக்கம் போல்
அன்றும் அவ்வாறே இறைவழிப்பாட்டில் ஈடுபட்டார். ஆனால், இன்று வேலைக்குச் செல்லாமல் புனிதாவைப் பள்ளிக்கு அனுப்புவதற்காக விடுப்பு எடுத்திருந்தார்.
“புனிதா…….!புனிதா……..! சாமி கும்பிட வா………!” அம்மாவின் குரலில் அழுத்தம் தெரிகிறது!
“இதோ வந்துட்டேன் அம்மா…..!” உடனே சாமி அறைக்கு விரைந்து செல்கிறாள் புனிதா.
கால தாமதமாகச் சென்றால் அம்மாவுக்குப் பிடிக்காது. எதையும் உடனுக்குடன் செய்துவிடவேண்டும். வேலைகளைத் தள்ளிப்போட்டால் மிகவும் கோபப்படுவார். அப்பா பயபக்தியுடன் சாமிப் படங்களுக்குத் தீபாராதனைக் காட்டுகிறார். புனிதா பயபக்தியுடன் சாமி கும்பிடுகிறாள். அம்மா புனிதாவுக்குத் திருநீரு நெற்றியில் வைத்துவிடுகிறார்.
சிவந்த மேனிக்குப் பொட்டிட்டு திருநீரு பூசியபோது தாயின் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. புனிதா மிகவும் அழகாக இருந்தாள். பெற்ற மனம் துக்கம் தாங்காமல் கண்ணீர் விடுகிறார்! எதற்கும் கலங்கிப் போகாதவர் மகள் விசியத்தில் மிகுந்த கவலை கொள்கிறார்.
“கோகிலா……..! கோகிலா…….! என்ன சின்னப்பிள்ளையாட்டும் காலையிலேயே அழுதுக்கிட்டு? நீயே இப்படி கண்ணீர் விட்டா சின்னப் பிள்ளை புனிதா என்ன செய்யும்? உணர்ச்சியக் கட்டுப்படுத்திக்க………!”
“பெற்ற வயிறுங்க, பிள்ளைய இந்தக் கோலத்திலே பார்க்க என் மனசு தாங்கலிங்க……!” குலுங்கிக் குலுங்கி அழுகிறார்!
“தைரியம் சொல்ல வேண்டிய தாயே இப்படி நம்பிக்கை இழந்து பேசினா சின்னப்பொண்ணு எப்படி தைரியமா பள்ளிக்குப் போவா மற்ற பிள்ளைகளோட எப்படிப் போட்டிப்போட்டுப் படிப்பா? கண்ணீரைச் துடைச்சிக்கக் கோகிலா. இறைவன் நமக்கு
விட்ட வழி. இப்படித்தான் வாழனும்னு கடவுள் இட்ட வழியை நாம நினைச்சாலும் மாற்ற முடியுமா? கனிவுடன் மனைவியை அணைத்துக்கொள்கிறார்.
“கடவுள் நம்ம பிள்ளைய முடமா பிறக்க வைக்கலங்க டாக்டர் செய்த தவறால நன்றாகப் பிறந்த குழந்தை ஒரு முடமான கையோட காட்சி அளிக்கும் போது என் மனசு எப்படி இருக்கும்?”
“நம்ம குழந்தை நல்லபடியாகப் பிறந்தது உண்மைதான். குழந்தை பிறந்த
சில நாள்ல மஞ்சள் காமாலை நோய் கண்டது. மருத்துவர்கள் ஊசி மூலமா குழந்தைக்கு எதிர்ப்புச்சக்தி மருந்தை உடலில் ஏற்றினார்கள். நம்ம போதாதக் காலம் நோய் குழந்தையைப் பாதிச்சிடுச்சு! மருத்துவர்கள் நவீன மருந்துகள் எவ்வளவோ கொடுத்தும் பல வழிகளில் இறுதிவரையிலும் போராடியும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த பின்னரே வேறு வழி இல்லாததாலேயேதான் குழந்தையின் வலது கை முட்டிக்குக் கீழே வெட்டி எடுக்கும் நிலை ஏற்பட்டது!”
“நம்ம குழந்தை,மற்ற குழந்தைகளைப் போல எப்படிங்கப் படிக்கப்போரா?” கவலையும் துயரமும் அவரது குரலில் ததும்பி வழிந்தது!
“கோகிலா………உடல் ஊனமுற்ற பிள்ளைகள் இன்றைக்கு எப்படி
யெல்லாமோ படிச்சு என்னன்னவோ சாதனைகளைச் செய்துக் காட்டிக்கொண்டுதான்
இருக்கிறாங்க. இரண்டு கைகள் இல்லாதப் பிள்ளைகள் சாதனை செய்யும் போது புனிதாவுக்கு இடது கை முழுமையாக இருக்கே! கடவுள் கருணை நிறைந்தவர் எல்லா
குழந்தைகளுக்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறார். நம்ம குழந்தையும் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றியடைந்து காட்டுவா, நீ பொறுத்திருந்து பாரு!” கணவரின் தன்னம்பிக்கைப் பேச்சு கோகிலாவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.
கோகிலா சிந்திக்கத் தொடங்கினாள்!
“சரி…..சரி……பள்ளிக்கு நேரமாகுது வாங்க பசியாறுவோம்,” அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் தொய்வு நிலையை அடைந்து விடாமலிருக்க கணவர் மனைவியைத் துரிதப்படுத்துகிறார்.
“காலையிலேயே பசியாறல் செய்து வைத்திருக்கிறேன். வாங்க…வாங்க… பசியாறுவோம்!” மனைவி உற்சாகமுடன் செயல் படத்தொடங்கியதைக் கண்டு மகிழ்கிறார்.
அனைவரும் இட்டலியோடு தக்காளிச் சட்டினியின் சுவையில் ஆளுக்கு இரண்டு இட்டிலிகளைச் சுவைத்துச் சாப்பிடுகின்றனர். சுவை மிகுந்த மலேசிய வாழைப்பழமான ரஸ்தாலிப் பழங்களை உண்பதுடன், சத்து நிறைந்த பாலை விரும்பி அருந்தி மகிழ்கின்றனர்.
புனிதா தனது புத்தகப் பையிலுள்ள பொருட்கள் யாவும் சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்துக் கொள்கிறாள்.எல்லாம் சரியாக இருக்கின்றன என்பதற்கு அடையாளமாக அவள் முகத்தில் புன்முறுவல் ஒன்று தோன்றி மறைவது அந்தக் காலைப் பொழுதில் மிகத்தெளிவாகத் தெரிகிறது.மகள் கவனமுடன் இருப்பதைக் கண்டு அருளப்பன் புன்முறுவல் பூக்கிறார். மகள் சமத்துதான், மனதுக்குள் மகிழ்ந்து கொள்கிறார்.
மூவரும் காரில் அமரும் போது காலை ஏழு மணியைக் காட்டியது. ஏழு முப்பதுக்கு வகுப்பு தொடங்கிவிடும். பத்து நிமிடத்திற்குள் பள்ளியை அடைந்துவிடலாம்.
பள்ளி வளாகத்தை அடைந்த போது பெற்றோர்கள் பெருமளவில் திரண்டிருந்தது தெரிந்தது. ஏதோவொரு கண்காட்சி நிகழ்வுக்கு வந்தது போல் ஓர் உணர்வை அடைகிறார் அருளப்பன்.
மூன்று மாடிகளைக் கொண்ட அதிநவீன மூன்று மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ள ‘மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி’ மிகவும் கம்பீரத்துடன் வரவேற்பதைக் கண்டு அசந்து போகிறார்.அந்த ஆண்டுதான் புதிதாகக் கட்டப்பட்டு பள்ளிப் புதிய தவணைக்குத் திறந்த பள்ளியாகும். சுமார் இருபது ஆண்டுகள் பெற்றோர்களின் கடுமையானப் போராட்டத்தின் விளைவுதான் இன்று பழைய கட்டத்திற்குப் பதிலாகக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் புதிய கட்டடம்தான் இது என்ற உண்மையை அறிந்த அருளப்பன் ஆச்சரியப்பட்டுப் போகிறார்.
தமிழர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்களே என்று எண்ணியஅருளப்பன்
ஒற்றுமையுடன் செயல் பட்டால் எத்தனையோ சாதனைகளைச் செய்யலாமே! ம்…….இப்போதாவது தமிழர்கள் ஒன்றுபடத் தொடங்கிவிட்டார்களே! மனமகிழ்வோடு பள்ளி வளாகத்தில் நுழைகிறார்.
மகள் புனிதா முதலாம் ஆண்டு வகுப்பில் நுழைந்ததும் மாணவர்களிடையே ஒரு சல சலப்பு ஏற்பட்டது! ஒரு கை இல்லாத புனிதாவைக் கண்டதும் அதர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த மாணவர்கள் ஏதோ ஓர் அதிசயத்தைக் காண்பது போல புனிதாவை சூழ்ந்து கொண்டு ஏதேதோ கேட்கத் தொடங்கிவிடனர்.இதைக் கண்ட வகுப்பு ஆசிரியை அமுதா புனிதாவைப் பற்றி சிறு விளக்கம் கொடுத்து புனிதாவுக்கு அனைவரும் உதவுமாறு மாணவர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொண்டார்!
வகுப்பு ஆசிரியை அமுதா, மாணவர்களை அறிமுகம் செய்து வைத்தார். இனிமையுடன் எல்லாரிடமும் கல கலப்புடன் பேசிய புனிதா முதல் முதலாகத் தன்னை
அறிமுகம் செய்துக் கொண்டாள்.
“அனைவருக்கும் வணக்கம்.என் பெயர் புனிதா அருளப்பன்.என் தந்தையின் பெயர் திருவாளர். அருளப்பன் வேலு. இவர் ஒரு வழக்கறிஞர். என் தாயாரின் பெயர். திருமதி.கோகிலா நித்தியானந்தன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிகிறார். குடும்பத்தில் நான் ஒரே பிள்ளையாகும்.என் எதிர்கால ஆசை ஒரு சிறந்த மருத்துவராவதாகும்! மேலும் என்னைப் போன்று உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதே என் வாழ்வின் இலட்சியம்,!”
என்று தன் அறிமுகத்தை முடித்தபோது அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் கைதட்டி தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்!
“மாணவர்களே….புனிதாவின் அறிமுகத்தை நாம் அனைவரும் கேட்டோம்.
அவருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் அவரின் எதிர்கால ஆசை நிறைவே இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்!”
“அம்மா…….நமது வகுப்புக்குத் தலைவர் யார் என்பதை அறிந்து கொள்ளலாமா?” மாணவர் ஒருவர் எழுந்த நின்று ஆர்வம் மேலிட கேட்கிறார்.
ஆச்சரியப்பட்டுப்போன ஆசிரியை, “மாணவர்கள் இப்போது விவரமாகத்தான் இருக்கிறீர்
கள். சரி….உங்கள் விருப்பப்படி மாணவர் தலைவரை இப்போது தேர்ந்தெடுப்போம். தலைவருக்குப் போட்டிப் போட விரும்புவர்கள் கையை உயர்த்துங்கள் பார்ப்போம் என்றவுடன் ஒரு மாணவர் மட்டும் கையை உயர்த்தியது ஆசிரியைக்கு ஆச்சரியமாகப் போய்விடுகிறது!
எழுந்து நின்ற மாணவர், “அம்மா…..வகுப்புத் தலைவியாகப் புனிதாவை நான் முன்மொழிகிறேன்,” என்று கூறி அமைதியாக அமர்கிறார். அடுத்த எழுந்த மாணவி, “ அம்மா……..புனிதாவை நான் வழிமொழிகிறேன்,” என்று கூறி பதற்றமின்றி
இருக்கையில் அமர்கிறாள்.
வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் புனிதாவை வகுப்புத்தலைவியாக
ஏகமனதுடன் தேர்தெடுக்கின்றனர். ஆசிரியை புனிதாவை வகுப்பு மாணவர்கள் முன்னால்
நிற்க வைத்து வாழ்த்துக் கூறுகிறார். மாணவர்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான சூழலில் அன்றைய வகுப்பு
தொடங்குகிறது! ஆசிரியை தனது இருபது ஆண்டு கால அனுபவத்தில் முதல் நாளே எந்தவொரு தடங்களும் இல்லாமல் சுமூகமான முறையில் வகுப்பு தொடங்கியது ஆச்சரியமாகப் போகிறது!கல கலப்பாகத் தொடங்கிய வகுப்பு பிற்பகல் வரையிலும் மாணவர்கள எந்தவிதமான அலுப்புமின்றி கல்வி கற்றனர்.அன்றைக்கான வகுப்பு முடிவுற்றதும் மாணவர்கள் மகிழ்சியுடன் இல்லம் திரும்புகின்றனர்.
நாட்கள் நகர்கின்றன.புனிதா தான் ஒரு ஊனமானவள் என்ற எண்ணம் ஏதுமின்றி வகுப்பில் மற்ற மாணவர்களுக்குச் சளைக்காமல் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கினாள். வகுப்பில் நடைபெறும் எல்லா தேர்வுகளில் முதல் நிலையிலேயே வந்து எல்லாரதுபாராட்டுகளையும் பெற்றாள்.புறப்பாட நடவடிக்கையிலும் புனிதா சிறந்து விளங்கினாள்.பள்ளியைப் பிரதிநிதித்து ஓட்டப்பந்தயங்களிலும் பல தங்கப் பதக்கங்களையும் வென்று சாதனைப் படைத்தாள்.பள்ளிக்கு இதுநாள் வரையிலும் இல்லாத ஒரு புகழ் புனிதாவின் வெற்றிக்குப் பின் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியின் புகழ் வானைத் தொட்டது என்றால் அது மிகை இல்லை!
தேசிய அளவில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற தேசியமொழி பேச்சுப் போட்டியில் முதன் முறையாகப் பள்ளியைப் பிரதிநிதித்து புனிதா கலந்து கொண்டாள். பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இரண்டு சிறப்புப் பேருந்துகளில் புனிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போட்டி நடைபெறும் கோலாலம்பூர், உலக வாணிப புத்தரா மைய அரங்கத்திற்குச் சென்றனர்.
பிரதமர் கிண்ணத்திற்காக நடைபெறும் இப்போட்டியை வானொலி, தொலைக்காட்சியினர் நேரடியாக மக்களுக்கு அஞ்சல் செய்து கொண்டிருந்தனர். நாட்டுப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். சுமார் ஐயாயிரம் பேர் முன்னிலையில் போட்டியாளர்கள் தங்களின் திறமைகளைக் காட்டினர். இந்தப் போட்டியில் கலந்து கொண்ட பத்து போட்டியாளர்களில் புனிதா மட்டுமே தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்தவர்.மற்ற அனைவரும் தேசியப் பள்ளியைச் சேர்ந்தவராவர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் திறமைகளை மிகவும் சிறப்பா வெளிப்படுத்தினர். தீர்ப்பு வழங்குவதில் நீதிபதிகள் பெரும் சிரமத்தை
எதிர்நோக்கினர். இறுதியில், முடிவுகள் அறிவித்த போது எல்லா போட்டியாளர்களையும் தோற்கடித்து புனிதா முதல் நிலைக்கு வந்தாள் என்று அறிவிப்புச் செய்தபோது அந்த அரங்கமே அதிரும் வகையில் கூடியிருந்தோர் கையொலி எழுப்பினர்!
ஊனம் எதற்கும் தடையில்லை என்பதை மீண்டும் உலகுக்கு துணிவுடன் நிரூபித்த புனிதா, பிரதமரிடம் பரிசினைப் பெற்ற போது, கையொலியின் வேகம்
மேலும் உயர்ந்தது! மொழி, இனம், சமயம் வேறுபாடின்றி தான் வகுத்த ‘ஒரேமலேசியா’ என்ற கொள்கை அங்கே பரிபூரணமாக வெற்றி பெற்றதைக் கண்கூடாகக் கண்ட பிரதமர் பெரிய புன்னகை ஒன்றை உதிர்க்கிறார்!

முற்றியது

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இலக்கியகம் ஏற்பாட்டில் சிறுவர்/இளையோர் சிறுகதை போட்டியில் பரிசு பெற்றக் கதை

Series Navigationகுழந்தை நட்சத்திரம் … ! .சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *