சிறு ஆசுவாசம்

This entry is part 6 of 17 in the series 1 பெப்ருவரி 2015

கட்டிலை நகர்த்தி ஜன்னல் பக்கம் போட்டுக் கொண்டதில் சில சவுகரியங்கள் இருந்தன. எழுந்திருக்கும்போது ஜன்னலின் உள்பக்க கான்கிரீட்டின் நீட்சியைப் பிடித்துக் கொள்ளலாம். கொஞ்சம் எம்பி நின்று கொள்ளலாம். தலையை முன்னால் நீட்டிப் பார்த்தால் வீதியின் மறுபக்கம் தெரியும். தெருவில் நடமாடுபவர்கள் கண்களில் தட்டுப்படுபவர்கள். வாகனங்கள் ஏதாவது விரைந்து கொண்டிருக்கும். ஆனால் எந்த சவுகரியத்தையும் உணர முடியாத அளவு உடம்பு இறுக்கமாகி விட்டதைப் போல உணர்ந்தார் மணியன்.

உடம்பு மீது வெறுப்பு வந்து கொண்டே இருந்தது. தூங்கினால் மூக்கின் வழியே வெளியேறும் சளி சற்றே உறைந்து தலையணையை மோசமான வாசத்துடன் தள்ளி வைக்கச் செய்துவிடுகிறது. பல சமயங்களில் வாயிலிருந்து ஒழுகும் ஜொள்ளு கடைவாயில் உறைந்தது போக மிச்சம் தொண்டை வரைக்கும் வழிந்து விடுகிறது. எழுந்து உட்கார்ந்ததும் தொண்டை கமறி எழும் கோழை கனத்ததாக அடர்த்தியாய் பொட்டு வைத்தது போல் தெறித்து விழுந்து விடுகிறது. சளி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. அது தொண்டையில் உறைந்து வார்த்தைகளை தொண்டைக்குள்ளேயே விழுங்கச் செய்கிறது.

கட்டிலை விட்டு எழும்போது மெல்லத்தவழ்வது போல் எழுந்து நிற்க வேண்டியிருக்கிறது. தேனம்மை சொன்னாள் என்று பெரியம்மா சாயிபாபாவின் சுலோகங்களைச் சொல்லிக் கொண்டு கட்டிலிலிருந்து இறங்குவாள். செயல்படாதது போல இருக்கும் கால்களை மெல்ல நகர்த்திக் கொள்வாள். சுலோகம் மெல்ல கரைய கரைய உடம்பு நகர்ந்து கட்டிலிலிருந்து நகர்த்து என்று கடவுளையும் கூப்பிட முடியாது. கடவுளைக் கூப்பிட முடியாத திடம் அவருள் பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது.

கட்டிலைச் சுற்றி அதைப் பிடித்துக் கொண்டே நடமாடுவது பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கும் அவருக்கு. இது என்ன மணமேடையா. அக்னி வளர்க்கும் மண மேடையா. இதைச் சுற்றி வருகிறோமே என்றிருக்கும். இது பிணமேடையாக மாறிக் கொண்டிருக்கிறதா என்பது அச்சம் தருவது போல் மனதில் வந்து போகும்.

மூட்டுகளில் ஏதோ பாரத்தை வைத்து கட்டிக் கொண்டது போலிருக்கும். கால்களை அசைக்க அசைக்க வலி உயர்ந்து கொண்டேயிருக்கும். உடம்பின் ஒவ்வொரு நரம்பும் நிமிரச் செய்யவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொள்வது போலிருக்கும். வயது என்ன பெரியதாய் ஆகிவிட்டது.

சிவரஞ்சனி இறந்தபின் நல்ல சாப்பாடு இல்லாமல் போய்விட்டது அவருக்கும். எங்காவது வெளியில் சாப்பிடுவது சாதாரணமாகிவிட்டது. ஓய்வு கிடைக்கிறதென்று குக்கரை வைத்து சாதம் வடிப்பார். கொஞ்சம் பருப்பு தூள்பொடி உதவும். ஆனால் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து கொள்கிறபோது தொண்டையில் இறங்குகையில் சளி தொண்டையைப் பிடித்துக் கொண்டிருப்பது போல் தொண்டையின் உட்சுவர்களில் ஒட்டிக் கொள்ளும் ரசம் என்று வைத்து கரைத்துக் கொள்வார். மோர், தயிர் எதுவும் ஒத்துக் கொள்வதில்லை. சளியை தொடர்ந்து இருத்திக் கொண்டிருக்கும். வாழைப் பழம் என்று சாப்பிட்டு வருகிற அடுத்த நாளில் சளியைத் துடைத்தெறிந்து விட்டோம் என்று நினைக்கிறபோது தும்மல் ஆரம்பிக்கும் . சளி பிடிக்கும் .இருமலாய் மாறும். கபம் கபமாய் வெளித்தள்ளும். இருமி இருமி தொண்டை வலிக்கும். காறித் துப்பிக் கொண்டிருப்பது பத்து நிமிஷங்களுக்கொரு முறை என்பது போல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண வாழைப் பழம் பத்து நாட்களின் இம்சையாக மாறிவிடும். இரண்டு வேளைக்கென்று சமைத்து வைக்கிறபோது வரும் தொலைபேசி அழைப்பு ரொம்ப தூரத்திறகு பயணம் செய்ய வைத்துவிடும். ஏதோ ஒரு மூலைக்கு உடம்பு பதற எதையாவது கவனித்துவிட்டு சாப்பாட்டிற்குக் கை வைக்கிறபோது குக்கரில் கிடக்கும். சாதம் ஞாபகம் வரும். செலவழிக்கிற தொகை குக்கரிலும், முன் விரிந்து கிடக்கிற வாழையிலையிலும் பிய்த்துப் போடப்பட்டிருக்கும். சமையல் அறைக்குள் போவது கிரீன் டீயோ, ப்ளாக் டீயோ போடத்தான் லாய்க்காகும் என்பது போல அமைந்துவிடும்.

வெடிப்பான கால் உள் பாகங்களை சற்றே பிய்த்தெடுத்து விசிறி வீசுவார். அது சிறு சிறு அழுக்குத் துணுக்குகளாய் கட்டிலை ஒட்டின மொசைக் தரையில் விழுந்து கிடக்கும். தேனம்மை சுடுநீரை பக்கெட்டில் வைத்து ஊறின உள்பாதங்களை சொர சொரப்பான கற்களால் தேய்த்து அழுக்கை நீக்கிவிடுவாள். இதெல்லாம் எதற்கு என்று சங்கடப்படுவார். நான் இல்லாதப்பவும் நீங்க செஞ்சுக்கோணும்ங்கறதுனாலதா இதெச் செய்யறன் என்பாள். சுடுநீர் பக்கெட்டில் கால்களை அழுத்தி வைக்கிற போது ஒரு வகை சூடு உடம்பு முழுக்க பரவுவது போலிருக்கும். அதுவே உடம்பின் வலியைப் போக்கிவிடுவதாக இருக்கும். அதுவும் சுடுநீர்க்குளியல் உடம்பை வெகுவாகச் சொஸ்தமாக்கி விடுவதைப் போல பெருமூச்சுவிடச் செய்யும். இதெல்லாம் இப்போதைக்கு இல்லாமற் போய்விட்டது. உடம்பின் ஒவ்வொரு நரம்பும் முடிச்சு போட்டுக் கொண்டது போலாகிவிட்டது. தனித்து இயங்குவதும், இருப்பதும் சிரம்ம தருவதாகவே சொல்லிக் கொள்வார்.

கொஞ்சம் செடிகள் வளர்ந்திருந்தால் களையெடுப்பதும், சருகுகளை எடுக்க குனிந்து நிமிர்வதும் என்று செய்யலாம். அப்பா சின்ன வயதில் எதையாவது நடச் சொல்வார். மல்லிகைப் பூச்செடி என்று ஏதாவது குச்சியைக் கொண்டுவந்து நட்ச் சொல்வார். கொஞ்சம் சாணி தொப்பி போட்டுவிட்டு மெல்லியக் கைகளால் மண்ணைக் கீறி நடுவார். கற்றாழையை மிகுந்த அக்கறையுடன் பராமரிப்பார். பல தினங்களில் காலையில் ஓரளவு வளர்ந்ததை எடுத்து சீவி இளநியின் வெள்ளையச் சுவைத்து மிழுங்குவது போல் விழுங்குவார். உடம்பிற்கு நல்லதென்பார் அப்பா. செம்பருத்திப் பூவை காய்ச்சி கொஞ்சம் தேன் கலந்து தேனீர் போல் குடிக்கச் சொல்வார். இப்போதெல்லாம செம்பருத்தி பூச்செடி காணக்கிடைக்காமலே போய்விட்டது.

மெல்ல தும்மல் வந்து சளி சிதறி லுங்கி வேட்டியை எடுத்துத் துடைக்கச் செய்தது. இனி தொடர்ந்து தும்மல் இருந்து கொண்டே இருக்கும். முதலில் நெஞ்சை அதிரச் செய்யும். அப்புறம் உடம்பு அதிரும். தும்மல் வந்து மூக்கைத் துடைத்தபின் எல்லா சளியும் உள்ளிருந்து வெளியேறிவிட்டது போல் ஆசுவாசம் பிறகும். அடுத்த நாலாவது நிமிடத்தில் மீண்டும் தும்மல் வந்து உடம்பை அதிரச் செய்யும். உடம்பு இம்சையாய் துவண்டு கொண்டிருக்கும். உடம்பு என்பதே அவஸ்தை தானா. இந்த அவஸ்தையிலிருந்து மீள வழியே இல்லையா. சாவுதான் உடம்பின் பாரத்தை இல்லாமலாக்குமா. எது பற்றி நினைத்தாலும் உடம்பு பதற்றத்திற்குள்ளாகும் அவருக்கு. இப்படி உடம்பின் இம்சையைத் தாங்கிக் கொள்ளாமல் உடம்பை அழித்துக் கொள்வது பற்றி பல சமயங்களில் நினைத்துப் பார்த்துக் கொள்வார். ஏதாவது தற்கொலை முயற்சியால் உடம்பை அழித்துக் கொள்ளலாமா என்றிருக்கும். தற்கொலைக்கான சரியான காரணம் சொல்லப்பட வேண்டும். உடம்பின் அவஸ்தை தற்கொலைக்குக் கொண்டு சென்றதாக இருக்கக் கூடாது. வேறு காரணத்தைக் கற்பித்து கொள்ள வேண்டும். முத்துக்குமாரும், செங்கொடியும் ஏதோவொரு வகையில் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டார்கள். நீலவேந்தன் உள் இட ஒதுக்கீட்டை முன்வைத்து தன்னை தீயிட்டு கொளுத்திக் கொண்டார். நீலவேந்தனுக்கு வேறு காரணம் இருந்திருக்குமா என்பது பலரின் பேச்சுக்களில் கூட கிளம்பியிருக்கிறது. இரங்கல் கூட்டத்தில் பேசிய ப.பா.மோகன் அதை எழுப்பினார். அது போல் சந்தேகங்கள் எழக் கூடாது. அறம் சார்ந்த காரணமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு வந்தது.

எந்த அறத்தைக் கைவிட்டோம். எந்த அறத்தை புறக்கணித்ததால் வந்த சாபம் இது என்றிருக்கும் மணியனுக்கு. சம்பாதி, குஜாலாக இரு என்ற அறம்தான் எல்லோரின் வாழ்க்கை நியதியாகி விட்டதை அவரே பல மேடைகளில் பேசியிருக்கிறார். தற்போது தொலைக் காட்சிகளில் வரும் விவாதங்களில் இந்த பொது அறம், வளர்ச்சி என்ற வார்த்தைகள் அதிகம் தென்படுகின்றன. வளர்ச்சி வேண்டும் என்று கேட்கிறவர்கள் இரட்டை விரலை தேர்தல் சின்னம் போல் கேட்கிறார்கள். சுற்றுச் சூழல் விதிகளைத் தளர்த்து தொழிலாளர் நல உரிமைகளில் அக்கறை கொண்டு எதுவும் பேசாதே என்கிறார்கள். இவையே நாட்டை பெரும் வளர்ச்சிக்கு கொண்டு போகும். வல்லரசாக்கும் என்கிறார்கள். இதை நம்மவூர் 10 வருடங்களுக்கு முன்பே செய்ய ஆரம்பித்து விட்டதே. ஓ.. இனி இந்தியா முழுக்க இதுதான் கதையாகுமா. மீத்தேன் வாயு எடுப்பதை முன்வைத்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம். திருவாரூரில் நம்மாழ்வாரோடு அலைந்து திரிந்ததை அடையாளமாக்கிக் கொள்ளலாம். வேண்டாம் வெகு தூரத்தில் இருக்கிறது திருவாரூர். வாயு குழாய்கள் பதிக்கும் வேலையை முன்னிருத்திக் கொள்ளலாம். ஆனால் உடம்பின் அவஸ்தையை மறைக்க இப்படி ஈனச் செயலை செய்ய வேண்டாமே என்றிருந்தது அவருக்கு. தற்கொலையே இனச் செயல். அதற்கு காரணத்தைக் கண்டு கொள்வது என்பது இன்னும் ஈனச் செயல். உடம்பு எதை எதையோ மறுத்து மோசமான சிந்தனைகளையும் மறுத்து ஒதுக்குவது அவருக்கு ஆறுதலாகவே பட்டது.

எலீயைப் போல் செத்து விழலாமா என்ற நினைப்பு பல சமயங்களில் அவருக்குள் வந்ததுண்டு. ஆனால் அந்த வகை குரூர மரணங்களுக்கு மன திடமாகக் கூடாது என்றிருந்தது. லீக்யுங் தென்கொரியாவில் ரசாயன விவசாயம் விஷமாய் நுழைந்து அபிரி,இதமாய் மகசூல் தந்து முதன்மையானார். ஆனால் சீக்கிர அவரின் நிலம் பாழ்பட்டுப் போனது. நவீன பூச்சிக்கொல்லி விவசயத்தின் விபரீதம் பற்றி பிரச்சாரம் செய்வதை கண்ணும் கருத்துமாகக் கொண்டார். அதுவே பின்னர் உலக வர்த்தகக் கழகத்தின் விபரீதங்களை எடுத்துச் சொல்லும் பிரச்சாரமாக மாறியது. அவற்றின் மாநாடுகள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று போராட்டம் நடத்தினார். கான்கூர் நகர மாநாட்டின் போதுதான் தன் கோரிகைகளை உரக்கச் சொல்லியபடி கத்தியால் மார்பைக் குத்தி பிணமாக விழுந்தார்.

அப்படியெல்லாம் வலிந்து காரணங்களைக் கற்பித்து கொள்ள வேண்டும் என்ற முடிவும் மனதிற்கு வந்தது அவருள். மூச்சும் திணறியது அவருக்கு.

நுரையீரலுக்கு நல்ல காற்று கிடைக்காமல் இப்போதெல்லாம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதை உணர்ந்திருந்தார். உலகின் நுரையீரல் அமேஸான் என்பது இப்போது பழைய செய்தி ஆகிவிட்டது. அமேஸான் காடுகளை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைநதிகள் பாயும் அமேஸானில் தன் கால்களை அழுத்திக் கொண்டிருந்தால் உடம்பின் பாரமும், இம்சைகளும் குறைந்து போகும் என்பதை திடமாக நினைக்கத் துவங்கினார். நுரையீரல் நல்ல காற்று பட்டு ஆசுவாசம் பெறுவதைப் போல் உணர்ந்தார்.

இப்போதைக்கு இது போதும் என்று சொல்லிக் கொண்டார்.

Series Navigationஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !சுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்புவேற என்ன செய்யட்டும்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *