சிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ரா

author
0 minutes, 3 seconds Read
This entry is part 14 of 20 in the series 23 மே 2021

 

                                                                     முருகபூபதி

 

 

 

வள்ளுவர், கம்பன்,  இளங்கோ, பாரதி  முதலான  முன்னோடிகளை  நாம்   நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான் அவர்கள்     என்று     ஓவியங்கள்     உருவப்படங்கள்   சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.

 

இவர்களில்    பாரதியின்     ஒரிஜினல்   படத்தை  நம்மில்   பலர்     பார்த்திருந்தாலும்      கறுப்புக்     கோர்ட்     வெள்ளை தலைப்பாகை    தீட்சண்யமான   கண்களுடன் பரவலான    அறிமுகம்    பெற்ற  படத்தைத்தான் பார்த்துவருகின்றோம்.

 

அந்த  வரிசையில்   வீரபாண்டிய கட்டபொம்மனை  நடிகர் திலகம்  சிவாஜிகணேசனின்   உருவத்தில்   திரைப்படத்தில்      பார்த்து,  அவரது    சிம்ம கர்ஜனையை     கேட்டு  வியந்தோம்.

 

 பிரிட்டிஷாரின்   கிழக்கிந்தியக்கம்பனியை எதிர்த்து   அஞ்சாநெஞ்சனாகத் திகழ்ந்து  இறுதியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட வீரபாண்டிய    கட்டபொம்மன்  மடிந்த  மண்   கயத்தாறை கடந்து  1984  இல் திருநெல்வேலிக்குச்  சென்றேன்.

 

கட்டபொம்மன்      தூக்கிலிடப்பட்ட       அந்தப் புளியமரம்       இப்பொழுது     அங்கே    இல்லை.

 

கட்டபொம்மன்  பற்றிய  பல   கதைகள்   இருக்கின்றன.  அவன்     ஒரு தெலுங்கு     மொழிபேசும்    குறுநில மன்னன்      என்றும்   வழிப்பறிக்கொள்ளைக்காரன்   எனவும்     எழுதப்பட்ட       பதிவுகளை  படித்திருக்கின்றேன்.      இவ்வாறு        கட்டபொம்மனைப்பற்றிய  தகவல்களைத்தெரிந்து  கொள்வதற்கு  முன்பே எனது  இளம்பருவ  பாடசாலைக்காலத்தில்  இலங்கை      வானொலியில் வீரபாண்டிய  கட்டபொம்மன்   திரைப்படத்தில்      சக்தி  கிருஷ்ணசாமியின்  அனல்கக்கும்  வசனங்களை சிவாஜிகணேசனின்  கர்ஜனையில்  அடிக்கடி  கேட்டதன்பின்பு    அந்த  வசனங்களை   மனப்பாடம்செய்து  பாடசாலையில்      மாதாந்தம்  நடக்கும்  மாணவர் இலக்கிய    மன்றகூட்டத்தில்       வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் தரித்து  நடித்தேன். ஜாக்சன் துரையாக  நடித்த மாணவப்பருவத்து நண்பன் சபேசன்                 தற்பொழுது  லண்டனிலிருக்கிறான்.

    இடைசெவலைக் கடந்துதான்   திருநெல்வேலிக்குப்போக  வேண்டும். வழியில்  வருகிறது  கயத்தாறு.   அந்த  இடத்தில்   இறங்கி கட்டபொம்மன் சிலையைப்பார்த்தேன். பாடசாலைப்பருவமும் வீரபாண்டிய கட்டபொம்மன்                       திரைப்படமும்      நினைவுக்கு   வந்தன.  அவ்விடத்தில்    அந்தச்சிலை      தோன்றுவதற்கு      முன்னர்      மக்கள்  தாமாகவே         ஒரு     நினைவுச்சின்னத்தை       எழுப்பியிருந்தார்களாம்.

 

 எப்படி?

 

அந்தக்கதையை  1984 இல் இடைசெவல் கிராமத்தில் நான் சந்தித்த  கரிசல் இலக்கியவாதி      கி.ராஜநாராயணன்      சொன்னார்.

அண்மையில் மறைந்த அவர் நினைவாக இந்தப்பதிவை எழுதுகின்றேன்.

 கயத்தாறை       கடந்து      செல்வோரும்      வருவோரும்      ஒரு     கல்லை எடுத்து அந்த   இடத்தில்   போட்டுவிட்டு அஞ்சலி   செலுத்துவார்களாம்.       காலப்போக்கில்      ஒரு     பெரிய     கற்குவியலே அங்கு     தோன்றிவிட்டது.

 நடிகர்திலகம்     சிவாஜிகணேசன் வீரபாண்டிய      கட்டபொம்மனாக    நடித்த பந்துலு    தயாரித்து     இயக்கிய    படம்     வெளியாகி    வெற்றிகரமாக    ஓடும் வரையில்தான்     அந்த    மக்கள்    எழுப்பிய    கற்குவியல் நினைவுச்சின்னம்      இருந்திருக்கிறது.

 

 பின்னர், இரவோடிரவாக     யாரோ லொறிகளில்  வந்து அப்புறப்படுத்திவிட்டார்கள்.

 சில     நாட்களில்     அங்கே      ஒரு     கட்டபொம்மன்      சிலை தோன்றியிருக்கிறது.

 அது     கட்டபொம்மனைப்  போலவா  இருக்கிறது?   அந்த வேஷம் போட்ட   சிவாஜி  கணேசனைப்    போலத்தான்  இருக்கிறது   என்று   கி.ராஜநாராயணன்   சற்று     கோபத்துடன் என்னிடம்      குறிப்பிட்டார்.

 

பின்னாளில் அவர் அச்செய்தியை வீரனுக்கு   மக்கள்     எழுப்பிய    ஞாபகார்த்தம் என்ற                    தலைப்பில்     விரிவாகப்பதிவு    செய்துள்ளார்.  இந்த ஆக்கம் அவரது கரிசல் காட்டுக்கடுதாசி      நூலிலும் இடம்பெற்றுள்ளது.

 இதுவரையில்    சில  பதிப்புகளைக்கண்டுவிட்ட   அந்த நூல் அனைந்திந்திய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது.    

 

 கயத்தாறில் வீரபாண்டிய  கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட      நிலத்தை அரசிடமிருந்து  விலைக்கு வாங்கி,  சிலையையும் நிறுவிய   சிவாஜிகணேசனுக்கும்   அந்த மகத்தான   வீரனிடத்தில்      உணர்வு    பூர்வமான     ஈடுபாடு       நீண்டகாலமாக      இருந்திருக்கிறது. இதனை மிகவும்  விரிவாக    தமது  சுயசரிதையிலும்   சிவாஜிகணேசன்      குறிப்பிட்டிருக்கிறார்.

 

அவர் சிறுவயதில்     கம்பளத்தார்     கூத்தில்      கட்டபொம்மனைப்   பார்த்துவிட்டு,  என்றாவது     ஒருநாள்  கட்டபொம்மனாக       நடிக்கவேண்டும்     என்ற கனவோடு  வாழ்ந்திருக்கிறார்.  நடிகனாகும்  ஆசையில் கிராமத்திலிருந்து        வீட்டை       விட்டு       சின்னவயதிலேயே      ஓடிவந்த காலத்திலிருந்தே  கட்டபொம்மனை   அவர்  மறக்கவில்லை.  

 

     “ தான்  யாருமற்ற  அனாதை   “ என்று     பொய்  சொல்லிக்கொண்டு    நாடகக்கம்பனியில்      சேர்ந்ததே     கட்டபொம்மனாக      நடிப்போம்     என்ற நம்பிக்கையில்தானாம்.

 

 சிறுவனாகவிருந்து  வளர்ந்து  இளைஞனாகிய பின்னர்  சிவாஜி      பட்டத்தை      ஈ.வே.ரா பெரியாரிடம்       பெற்ற    பிறகு,      சிவாஜி    நாடக   மன்றத்தை    தமது     தம்பி   சண்முகம்    பொறுப்பில் தொடங்கியிருக்கிறார்.       இந்த     மன்றத்தின் தயாரிப்பாக     கட்டபொம்மன் நாடகத்தை       தமிழ் நாட்டிலும்  பம்பாய்  (இன்றைய  மும்பாய்) முதலான  வடநாட்டு     நகரங்களிலும்     நூற்றுக்கணக்கான     தடவைகள் மேடையேற்றியிருக்கிறார். பல சமூகசேவை     நிறுவனங்களின் நிதியுதவிக்காட்சியாகவும்  பல தடவைகள்   மேடையேறி    இலட்சம் இலட்சமாக     சேகரித்துக்கொடுத்துள்ளது  இந்த  நாடகம்.  ஒரு    தடவை இந்த நாடகத்தைப்பார்க்க வந்த    ராஜாஜி     ஒரு  காட்சியின்போது சிவாஜிகணேசனின்    உணர்ச்சிகரமான நடிப்பைப்பார்த்து           மயங்கி விழுந்திருக்கிறார்.

 1959   இல்      சக்தி கிருஷ்ணசாமியின்      இன்றைக்கும்     மறக்கமுடியாத கனல்பறக்கும்       வசனங்களுடன்        ( வரி-    வட்டி –    கிஸ்தி- வானம்    பொழிகிறது      பூமி      விளைகிறது.      எங்களோடு     வயலுக்கு  வந்தாயா?   ஏற்றம்   இறைத்தாயா?  உழவருக்கு       கஞ்சி,  கலையம்   சுமந்தாயா,  அல்லது எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா ? மாமனா?      மச்சானா?’) வெளியான  இத்திரைப்படம் வெள்ளிவிழாவும்    கண்டது.

 

  கெய்ரோவில் நடந்த  ஆசிய- ஆபிரிக்க  திரைப்படவிழாவிலும் விருது    பெற்றது.      அந்த     விழாவுக்குச்சென்றிருந்த     சிவாஜிகணேசன் எகிப்து அதிபர் நாஸர்   விழாவுக்கு   வரமுடியாமல்  அவசரமாக    சிரியா               சென்றிருந்தமையால்    அவரது     வாசஸ்தலத்துக்குச்சென்று நாஸரின்  மனைவியை  நேரில் சந்தித்து  இந்தியாவுக்கு    வருமாறும் அழைப்பு     விடுத்திருக்கிறார்.    

 

 பின்னர் பிறிதொரு  சந்தர்ப்பத்தில்  நாஸர் டெல்லிக்கு வந்த   சமயம் அப்பொழுது   பிரதமராகவிருந்த நேருவுடன்      தொடர்புகொண்டு     நாஸரை     சென்னைக்கு      அழைத்து பெரிய கூட்டமும்   நடத்தி   விருந்தளித்து உபசரித்திருக்கிறார்.

(இந்தத்     தகவல்களை      சிவாஜிகணேசனின்      சுயசரிதையில்  பார்க்கலாம்)

 

இப்படியெல்லாம் சிவாஜியின்வாழ்வில் இரண்டறக்கலந்துள்ள கட்டபொம்மனுக்கு,  அவன்  மடிந்த  மண்ணில்   சிலை  எழுப்புவதற்கு  அவர்   விரும்பியது இயல்பானதுதான்.  கட்டபொம்மன்  தூக்கிலடப்பட்ட  நிலத்தை      அரசிடமிருந்து    விலைகொடுத்து  வாங்கி,   அங்கே     தனது     வீரபாண்டிய     கட்டபொம்மன்      திரைப்பட     தோற்றத்தில்  ஒரு  சிலையையும் ஏற்பாடுசெய்து  திரையுலக                                    நட்சத்திரங்களை  அழைத்து     சிலை     திறப்புவிழாவை      கோலாகலமாகவே     நடத்திவிட்டார்      சிம்மக்குரலோன்.

 

1799 ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் 16 ஆம்   திகதியன்று   பிரித்தானிய    மேஜர்  பானர்மேனின் உத்தரவுக்கு அமைய  தனது    கழுத்தில்  தானே தூக்குக்கயிற்றை மாட்டிக்கொண்டு     உயிர்துறந்த    அந்த    வீரனுக்கு     அவன்     மறைந்த  பின்னர்,  அந்தப்புளியமரமும்  பட்டுப்போனதையடுத்து,   ஊர்மக்கள் கற்களைப்போட்டு    குன்று  போன்ற  பெரிய கற்குவியலையே நினைவுச்சின்னமாக   எழுப்பியிருந்தபோது தமிழ்  சினிமாவில் தோன்றிய  கட்டபொம்மன்  வந்து     அள்ளிச்சென்றுவிட்டானே    என்பதுதான்   கி. ராஜநாராயணனின்       தார்மீகக்கோபம்.

 

 அவர், தமது கரிசல்காட்டு    கடுதாசியில்    இப்படி   எழுதுகிறார்:-

 நடிகர்திலகம்       சிவாஜிகணேசனுக்கு –  கட்டபொம்மனைத்     தூக்கிலிட்ட இடத்தில்     அவனுக்கு     ஞாபகார்த்தமாக      ஒரு     சிலை     எழுப்பவேண்டும்  என்ற    நினைப்பு   வந்தது.  இது  ரொம்ப     வரவேற்க     வேண்டிய – பாராட்டப்படவேண்டிய       காரியம்.      ஆனால்  –  மக்கள்    தங்களால்     இயன்ற ஒரு     ஞாபகார்த்தத்தை      ஒவ்வொறு      கல்லாகச்சேர்த்து   வீரபாண்டியனுக்கு      எழுப்பியிருந்தார்களே.        அதை               ஏன்     அழித்தார்கள்?

 வேறு     ஒரு நாட்டில்      இப்படி     ஒரு காரியம்    நடக்குமா?    மக்கள்   அதற்குச் சம்மதிப்பார்களா?

 சத்தம்     காட்டாமல்    நடந்து     முடிந்துவிட்டது    இங்கே… பாஞ்சாலங்குறிச்சி      கோட்டையை     நொறுக்கி      இடித்து      தரைமட்டமாக்கி   அதை      இருந்த      இடம்      தெரியாமல்     ஆக்கிய     வெள்ளைக்காரனுடைய காரியத்துக்கும்       இதற்கும்      ரொம்ப      வித்தியாசம்                 இருப்பதாகத் தெரியவில்லை     எனக்கு.  “

 

 ஒரு  சினிமா நடிகரினதும்  ஒரு  இலக்கியவாதியினதும்  வேறுபட்ட சிந்தனைகளை     ஒரு     கட்டபொம்மனில்     நாம்    பார்க்கின்றோம்.

கயத்தாறில் ,  சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தை போன்ற சிலையையும்,  சென்னையில்  வி. சி. கணேசன் என்ற இயற்பெயர் கொண்ட சிவாஜிகணேசனின் சிலையையும் பார்க்கின்றோம்.

 

அண்மையில் மறைந்த கி. ரா. அவர்களின் உருவச்சிலை விரைவில் அவரது பூர்வீக கிராமம் இடைசெவலில் அமையும் என்று  தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

letchumananm@gmail.com

 

Series Navigationகாந்தியின் கடைசி நிழல்முளையைச் சுற்றும் மூங்கை மாடுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *