சில்லறை நோட்டு

This entry is part 2 of 40 in the series 8 ஜனவரி 2012

சந்துருவுக்கு பெரும் பணக்காரனாக வேண்டும் என்று ஆசை! எப்படி பணக்காரனாக ஆவது?
உழைத்துச் சம்பாதிப்பதென்றால் – அது அன்றாட உணவுக்குக்கூடப் போதாது! லட்சம் லட்சமாக – கோடி கோடியாகச் சிலரிடம் பணம் இருக்கிறதே – அவர்களெல்லாம் உழைத்துத்தான் சம்பாதிக்கிறார்களா? அவனுக்கென்னவோ நம்பிக்கையில்லை! அவனுக்குத்தான் நன்றாக தெரியுமே – உழைத்து உழைத்துக் களைத்ததுதான் மிச்சம்! கோடீசுவரனாக வேண்டாம் – ஒரு நூறீசுவரனாகவாவது அவனால் ஆக முடிந்ததா? இல்லையே! பின் ஏன் உழைத்து உழைத்து ஓடாகப் போக வேண்டும்?

சந்துருவின் மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது.
குறுக்கு வழியில் கோடீசுவரனானால் என்ன?
சரி. அப்படியே செய்யலாம்! குறுக்கு வழி என்ன?
அச்சடித்த நோட்டு தானே பணம்! அதையே அச்சடிக்க ஆரம்பித்து விட்டால் – பிறகு கேட்கவா வேண்டும்?
அச்சடிக்கும் வேலை முழுவதையும் கற்றுக் கொண்டு, அப்படிக் கற்றுக் கொண்ட இடத்திலிருந்தே ஓர் அச்சு யந்திரத்தையும் திருடிக் கொண்டு சென்று – இரகசியமாக ஒரு இடத்தில் கோடீசுவரனாகும் வேலையைத் தொடங்கினான் சந்துரு.
எத்தனை ரூபாய் நோட்டு அடிப்பது? பேராசை வேண்டாம்! பத்து ரூபாய் நோட்டடித்தால் போதும்!
இரவு வேலை ஆரம்பமானது! அபசகுனம் போல் மின் விளக்குகள் ஏதோ கோளாறால் அணைந்துவிட்டன! விளக்குகள் அணைந்தால் என்ன? இரவெல்லாம் அச்சு யந்திரம் நிற்காமல் இயங்கிக் கொண்டிருந்தது! ரூபாய் நோட்டுக்கள் குவிந்து கொண்டே இருந்தன!
“புலபுல”வென்று விடியும் நேரம்! வேலையெல்லாம் முடியும் தறுவாயில் ஒரு பல் சக்கரம் உடைந்தது! உடைந்தால் என்ன? அச்சடிக்கும் வேலை தான் முடிந்து விட்டதே! இனி அவன் கோடீசுவரன்! அச்சு யந்திரத்தின் மற்றச் சக்கரங்களையும் உடைத்தெறிந்தான் சந்துரு! பின்னர் நோட்டுக்களைக் கட்டுக் கட்டாகக் கட்டினான்!
உதய சூரியன் எழுந்தான்! சுந்துரு நோட்டுக்களை வெளிச்சத்தில் பார்த்தான்! பகீரென்றது! பத்து ரூபாய் நோட்டல்லவா அவன் அடித்தான்! ஆனால், எல்லா நோட்டுக்களிலும் பதினைந்து என்று அச்சாகியிருந்தது. ஐயையோ! தவறு நேர்ந்துவிட்டதே! மறுபடியும் அச்சடிக்க முடியாதே! என்ன செய்வது?
சரி! புதினைந்து ரூபாய் நோட்டுக்களைத்தான் மாற்றியாக வேண்டும்! நகர்புறத்தில் நோட்டு மாற்றும் வேலையை ஆரம்பித்தால் பிடித்துவிடுவார்கள். ஏதாவது சிறு கிராமத்திற்குச் சென்று படிக்காத பாமர மக்களை ஏமாற்றித்தான் அதை மாற்ற வேண்டும்!
எனவே, சந்துரு ஒரு கிராமத்திற்குச் சென்றான்! அங்கே ஒரு சின்ன பெட்டிக் கடை! அதில் ஒரு பட்டிக்காட்டான்! படிக்பறிவில்லாதவன் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது!
ஆமாம்! இவன் தான் சந்துருவின் வேலைக்குச் சரியானவன்!
“அண்ணே! ஒரு பதினைந்து ரூபாய்க்குச் சில்லறை வேண்டும்!” என்றவாறு புத்தம் புதிய பதினைந்து ரூபாய் நோட்டைக் காற்றில் படபடக்க விட்டான் சந்துரு!
பெட்டிக் கடைக்காரன் கல்லாவைத் துழாவிப் பார்த்துவிட்டுப் பிறகு சொன்னான்: “மன்னிக்கணும்! பதினாலு ரூபாய் தான் இருக்கிறது! ஒரு ரூபாய் குறைகிறது!”
“ஒரு ரூபாய் குறைந்தாலென்ன? நம் அப்பன் வீட்டுச் சொத்தா முழுகிவிடும்! கிடைத்த மட்டிலும் லாபந்தானே!” இப்படி நினைத்தான் சந்துரு.
“ஒரு ரூபாய் குறைகிறதா? பரவாயில்லை! நீதான் சில்லறை கொடுக்கிறாயே! உனக்கும் ஏதாவது இனாம் வேண்டாமா? இதை வாங்கிக் கொண்டு சில்லறையைக் கொடு!” என்றவாறு சந்துரு பதினைந்து ரூபாய் நோட்டைக் கொடுக்க, அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்ட பெட்டிக்கடைக்காரன், சில்லறையைக் கொடுத்தான்.
மகிழ்ச்சியோடு சில்லறை நோட்டை வாங்கிக் கொண்ட சந்துரு அதைப் பார்த்த மறுகணம் அப்படியே விக்கித்து நின்றான்! காரணம்.. கிடைத்தச் சில்லறை இரண்டு ஏழு ரூபாய் நோட்டுகள்!

Series Navigationஅள்ளும் பொம்மைகள்அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்
author

சகுந்தலா மெய்யப்பன்

Similar Posts

Comments

  1. Avatar
    ganesan says:

    What the author is trying to establish….!DO the printing perfectly….OR TIT FOR TAT….OR Village people who are illiterate are more clever than expected…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *