சில நேரங்களில் சில சில மனிதர்கள்

author
0 minutes, 14 seconds Read
This entry is part 4 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

கா.ரபீக் ராஜா

 

செல்வராஜ் என்னுடைய ஆஸ்தான சிகை அலங்கார நிபுணர் . நல்ல மனிதர். வழுக்கை தலையுடன் ஒருவர் வந்தாலும், “ஸ்டெப் கட்டிங்கா? இல்ல அட்டாக் போட்றவா? சார்!” என்று கேட்பார். கேட்டதற்கு நியாயம் செய்வது போல தலையில் இருக்கும் நூற்று சொச்ச முடிகளை நூற்றி எட்டு முறை சுற்றி வந்து வெட்டுவார். வெட்டிய முடி கீழே உதிர்கிறதோ இல்லையோ கத்தரி சத்தம் கிரீச் கிரீச் என்று சப்தம் கேட்டுகொண்டே இருக்கும். வழுக்கை முடி ஆசாமியே தனக்கு நிறைய முடி வளர்ந்து விட்டது போலேயே என்று நினைக்க வைப்பதுதான் செல்வராஜ் அண்ணனின் திறமை. சில நேரம் அவர்களை டை கூட அடிக்கவைத்துவிடுவர்.

 

 செல்வராஜ் அண்ணனின் ஒரே பிரச்சனை டிவியில் ஏதாவது ஒரு சென்டிமெண்ட் காட்சி ஓடினால் அவ்வளவு தான், ஒருவருக்கு முடிவெட்டுகிறோம் என்பதையும் மறந்து கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடும்,  அந்தளவிற்கு இளகிய மனம் படைத்தவர். வானத்தை போல, சமுத்திரம், மாயண்டி குடும்பத்தார் போன்ற படங்கள் டிவியில் ஒளிபரப்பானால் கடைக்கு விடுமுறை அளித்து விட்டு வீட்டிற்கு சென்று திரைப்படத்தை அழுது ரசிப்பார். இதை வைத்தே இவரை ஓட்டி மகிழ்ந்தாலும் அதை கண்டுகொள்ளவே மாட்டார்.

 

பெரும்பாலும் நன்றாக வெட்டும் இவரின் கத்திரி சிலநேரம் தலையில் கதகளி ஆடிவிடும்.

 

“என்னண்ணே தலைய இப்படி பண்ணிட்ட?”

 

“வீட்ல குளிச்சுட்டு சீவிப்பாரு. சரியா இருக்கும். இல்லேன்னா ஏ தொழிலையே விட்டுறேன்!”

 

குளித்துவிட்டு பார்த்தாலும் அப்படியே இருந்தாலும் திரும்ப போய் கேட்பதில்லை. அடுத்த முறை இது பெரும்பாலும் நியாபகத்துக்கு வராது. அப்படியே கேட்டாலும் சரி விடு. ஒருதடவை தப்பு நடந்துருச்சு. நான் தொழிலை விட்டா உனக்குதான் அந்த பாவம் என்று நம் பக்கம் திருப்பிவிடுவார்.

 

சிறுவயதில் உயரம் குறைவாக இருந்ததால் (இப்பவும்தான்) ஸ்டூல் போட்டு முடி வெட்டியதாக சொல்வார். பலரும் என்னை பார்த்து இரக்கப்படுவார்கள். அந்த இரக்கமே எனக்கு வெறுப்பாக இருக்கும் என்பார்.

 

இவர் மீது எனக்கு மரியாதை எப்போதும் இருக்க காரணம். தனது மூன்று குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்தார். படிப்புக்கு என்றால் எதையும் விற்க அஞ்சமாட்டார். நம்ம படுற கஷ்டத்தை நம்ம புள்ளைங்க படக்கூடாது ராஜா. படித்து வேலைக்கு போய்விட்டால் கஷ்டமில்லாமல் வேலை பார்க்கலாம் என்பது இவரது நம்பிக்கை.

 

ஒருநாள் ராஜா, மகளுக்கு மெடிக்கல்ல மெரிட்லயே சீட் கிடைச்சிருக்கு என்றார்..  அதன் பிறகு எனக்கும் வெளியூரில் வேலை என்பதால் செல்வராஜ் அண்ணணனை பார்ப்பதே அரிதாகிவிட்டது. மீண்டும் ஊருக்கு வந்ததும் கடையில் போய் பார்த்தேன். வேறு ஒருவர் இருந்தார். மாலை நான்கு மணி வரைதான் கடையில் இருப்பார் என்றார். அவரிடம் செல்வராஜ் அண்ணனின் மொபைல் நம்பரை வாங்கி பேசினேன்.

 

“என்னண்ணே கடைக்கு வர்றதில்லையா?”

 

“யார் சொன்ன வரமாட்டேன்னு. சக்கரையால கால்ல புண்ணு வந்து ஆறாம ஒரு காலையே எடுத்துட்டாங்க. ரொம்ப நேரம் நின்னு வெட்ட முடியாது. அதான் வேலைக்கு ஒருத்தரை போட்ருக்கேன்!”

 

“இப்டி உடம்பை சரியா கவுனிக்காம போயிட்டியேண்ணே!”

 

“அதுக்கென்ன பண்ணுறது, விதி அப்படி எழுதிருக்கு!”

 

“பொண்ணு படிப்பு முடிஞ்சிருச்சா?”

 

“முடிஞ்சிருச்சு. மேல படிக்கணும்னு சொல்ற! நா சக்கரைக்கு படிக்க சொல்லிருக்கேன்!”.

 

என் தாத்தா ஹோட்டல் அருகே ஒரு சிறிய பெட்டிகடையும் வாடகைக்கு இருந்தது. வருடத்தில் நான்கு பேருக்கு மாறியது. காரணம்தான் விளங்கவில்லை. கடையின் ராசியா அல்லது வந்தவர்களின் ராசியா என்று புரியவில்லை. கங்காதரன் என்கிற வடநாட்டு வாலிபர் இலக்கண பிழையோடு பேசிய தமிழ் ஏரியாவில் உள்ள அனைவர்க்கும் பிடித்துப்போனது. குடும்பத்தோடு தமிழகத்தில் குடியேறிய கங்காதர்ருக்கும் காரைக்குடி மிகவும் பிடித்துப்போனது. இந்த கங்காதரரை ஒருவர் தீவிரமாக தேடிக்கொண்டு இருந்தார், அதை கடைசி பத்தியில் சொல்கிறேன். இந்த கங்காதரர் தாத்தாவின் பெட்டிக்கடைக்கு ஒனரானார். இவர் பேசிய தமிழுக்கு தெரு பெருசுகள் அடிமையாகியது. சிறு திருத்தும் இவரின் மனைவிக்கு அடிமையாகியது. இடுப்பு இவ்வளவுக்கு கீழும் இருக்குமா என்று தெருவில் பட்டிமன்றம் நிகழலாத குறை. எதோ ஒரு சோப் விளம்பரத்தில் வந்த நடிகை இவர்தான் என்று அடித்துக்கூறினார்கள். பெயர் லக்ஷிமி மேத்தா என்றார்கள். விளைவு கடையில் கூட்டம் சையது பீடி வாங்குவதற்கு கூட தள்ளுமுள்ளு. நகர காவல்துறையினர் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தாத குறை. கடை வாடைகைக்கு கொடுத்த பாவத்திற்கு பஞ்சாயத்துகளை தாத்தா அட்டர்ன் செய்து கொண்டிருந்தார். கடை ஆரம்பித்த மூன்றாவது மாதத்தில் கங்காதர் டீ கடையும் தொடங்கியிருந்தார். பத்துக்கு எட்டு கடையில் எப்படி டீ கடை ஆரம்பித்தார் என்று தாத்தவுக்கு ஏக கடுப்பு. இப்படியேவிட்டா பேல்பூரி கடை போட்டுவிடுவான்  என்று வீறுகொண்டு எழும் தாத்தாவை அவ்வப்போது மசாலா பால் கொடுத்து தடுத்தார், கங்கா.

 

நம்பிளிக்கு, பிம்பிளிக்கு என்று தமிழை கடித்து குதறிய கங்கா ஓரிரு மாதங்ககளில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் அளவிற்கு முன்னேறினர். இப்போது கங்காதரை தேடி அவரது சொந்த ஊர் படை ஹோட்டலை மையம் கொண்டது. கங்கா நம்ம பய என்று தெருவில் கூடிய கூட்டத்தை பார்த்து அந்த படை அரைகுறை தமிழில் கூறியது இதைதான், “கங்காதர் ஓட்டிட்டு வந்தது என்னோட பொண்டாட்டியடா!” கூட்டம் கலைந்தது, கடையும்தான். அட்வான்ஸ் மிச்சம் என்று மகிழ்ந்த தாத்தாவின் மகிழ்ச்சி இரண்டே நிமிடங்களில் போனது. கங்காவை கஸ்டடி எடுத்த காவல்துறை சர்வீஸ் சார்ஜாக கடை அட்வான்சை வாங்கிச்சென்றது. கடைக்கு வரும் பிச்சைக்காரனை கூட இன்முகத்தோடு வரவேற்றவர், பல துக்கத்தில் பங்கெடுத்தவர், இவ்வளவு ஏன் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்களிப்பை செலுத்தியவர் எப்படி இன்னொரு மனைவியை ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் சொந்தமாக்கியிருக்க முடியும்? மனித மனங்கள் மர்மங்ககள் நிறைந்தது என்ற பொத்தாம்பொதுவான சிந்தனையில் இதை மூடுவதை தவிர வேறு வழியில்லை. 

 

மாதவண்ணா எனக்கு சிறுவயது முதலே தெரியும். எங்கள் வீட்டுக்கு சில வீடுகள் கடந்தால் இவர் வீடு. 70களிலேயே பட்டப்படிப்பு படித்தவர். உண்மையாகவே நடிகர் மாதவனுக்கு முதியவர் வேடம் கொடுத்தது போலவே பெயருக்கும் இவருக்கும் அப்படி ஒரு பொருத்தம். பூர்வீகம் கேரளா என்று சொல்வார்கள். ஏனோ திருமணம் செய்து கொள்ளவில்லை. எனிலும் ஒரு காதல் தோல்வி இருந்திருக்கும் என்பது கணிப்பு. நெருங்கிய உறவுகள் அனைத்தும் கேரளாவுக்கே சென்று செட்டிலாகி விட இவர் மட்டும் இவரது தம்பி மகன் வீட்டில் இருந்துவிட்டார். தம்பி மகன் குடும்பம் எப்பொழுதாவது இங்கு வரும். ஓரளவு வசதியான வீடு.

 

 மாதவண்ணா குடித்துவிட்டு யாருடனும் சண்டையிட மாட்டார், யாரவது சிக்கினால் பேசி தீர்ப்பார். வந்தவர் மரியாதைக்கு தலையாடினால் கழுத்து நரம்பு தேயும்வரை தலையாட்டிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தனக்குத்தானே ஆங்கிலத்தில் ஏதேதோ பேசுவார். அந்த ஆங்கிலத்தை சிலர் இங்கிலீஸ் பாட்டு எனவும், சிலர் உயர்ரக ஆங்கில கெட்ட வார்த்தை என்பார்கள். அபூர்வமாக சில நேரங்களில் தெளிவாக இருப்பார், அப்பொழுது ஆங்கில பாடத்தில் எனக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இவரிடம் கேட்பேன். குடிப்பதற்கு சைடிஸாக பலரும் பல வித பதார்த்தங்கள் உண்பார்கள். ஆனால் இவரின் சைடிஸ் ஒரே ஒரு மேரி பிஸ்கட் மட்டுமே. ஒரு பாக்கெட் மேரி பிஸ்கெட்டை ஒரு மாத சைடிஸாக பயன்படுத்திக்கொள்வார். இவருக்கென பொறுப்புகள் ஏதும் இல்லாவிட்டாலும் குடிப்பதற்காகவே கிடைக்கிற வேலையை செய்வார்.

 

தினத்தந்தி பேப்பரை சத்தமாக படிப்பார். சத்தம் நான்கு தெரு தாண்டி கேட்கும்.

“மதுரை லாட்ஜில் சினிமா பைனான்சியருடன் உல்லாசமாக இருந்த துணை நடிகை கைது”

 

பாலியல் தொடர்பான செய்திகளை படிக்கும்போது உக்கிரமாக இருப்பார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தற்கொலை”

 

உச் கொட்டும்போது ஆழ்ந்த இரங்கல்கள் அவரது எச்சிலில் தெறிக்கும்.

 

ஒருநாள் சரியான மழை. மாதவன்னா சத்தமாக பாடிகொண்டிருப்பது போல சத்தம் கேட்டது. காலையில் மாதவண்ணா காது மூக்கில் ரத்தம் வந்து இறந்து கிடப்பதாக அப்பா சொன்னார்.

 

இரண்டு நாள் கழித்து தினத்தந்தி மாவட்ட செய்தியில் பெட்டி கட்டிய செய்தியாக வந்திருந்தார் மாதவண்ணா. அவரின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை பார்த்து யாரோ உச் கொட்டியதாக நினைவு.

 

 

சினிமாவை விட நிஜத்தில் தான் நிறையா சுவாரஸ்யமான கதை நடக்கும் என்று ரெண்டே படம்(?) எடுத்த பெரிய இயக்குனர்கள் சொல்வார்கள். அது என்னவோ உண்மைதான். மூத்த நண்பர்க்கு நடந்த சம்பவம் இது.

 

காலையில் எழுந்த நண்பர் ரெண்டு கையை நன்கு தேய்த்து விட்டு அதை கும்பிடும் வழக்கமுடையவர். அன்றும் அப்படித்தான் தேய்த்துவிட்டு கும்பிடும் போது வழக்கத்துக்கு மாறாக ஒரு கொட்டாவி வந்துள்ளது. கொட்டவியை முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்குவோம் என்று எத்தனிக்கையில் கொட்டவிக்காக திறந்த வாய் மூட மறுத்துவிட்டது. இறைவா என்ன சோதனை இது? என்று தலையில் ஒரு கை, தாடையில் ஒரு கை வைத்து மேனுவலாக தன் வாயை மூட வைக்கும் முயற்சியோடு இன்னும் பல முயற்சிகள் செய்திருக்கிறார். அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

 

பலனில்லை என்று மனைவியை அழைத்து தன் நிலையை சைகையில் விளக்கியிருக்கிறார். மனைவியும் நிலைமை புரியாமல் “என்னென்னு வாயை திறந்து சொன்னாதானே தெரியும்” என்று அசட்டையாக பதில் சொல்லியிருக்கிறார். சனியனே, வாய் திறந்தது தான் பிரச்சினையே என்று உள்ளே புழுங்கியிருக்கிறார்.

 

சிறிது நேரத்தில் கணவனின் நிலைமை புரிந்த மனைவிக்கு பதட்டம் தொற்றி கொண்டுள்ளது. உதவிக்கு அருகில் அழைத்திருக்கிறார்கள். அதில் ஒரு உறவினர் நண்பரின் மூக்கில் குச்சியை விட்டு தும்மலை வர வைத்து இயற்கையின் சதியை இயற்கையால் முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். குச்சி கூர்மையாக இருந்ததால் தும்மலுக்கு பதிலாக ரத்தம் வந்திருக்கிறது. எனிலும் வாய் மட்டும் மூடவில்லை. இந்த நேரத்தில் சொந்தகாரனை எவன்டா கூப்பிட்டது என்ற நண்பரின் கதறல் யாருக்குமே கேட்கவில்லை.

 

நேரம் செல்ல செல்ல வாய் அதே நிலையில் இருக்க வாடகை காரில் மதுரையின் பிரபல மருத்துவமனை நோக்கி சென்றிருக்கிறார்கள். வண்டி ஓட்டுநர் சாலையை விட இவர் வாயைதான் அதிக முறை பார்த்து வண்டியை ஓட்டியிருக்கிறார். இது நண்பருக்கு வேதனையிலும் மிகுந்த அவமானத்தை தந்திருக்கிறது. மனைவியோ தன் கணவனுக்கு வாய் மூடி விட்டால் முத்தாளம்மன் கோவிலுக்கு அலகு குத்துவதாக இவர் காது படவே வேண்டியிருக்கிறார்.

 

இந்தநிலையில் வண்டியை விரட்டி ஓட்டிய ஓட்டுநர் சாலையின் வேகத்தடையை கவனிக்காமல் வண்டியை வேகமாக செலுத்தியிருக்கிறார். வாகனம் ஒரு மீட்டர் மேலே சென்று சாலையை அடைந்திருக்கிறது. வண்டியில் இருக்கும் அனைவரது தலையும் மேலே தட்டியிருக்கிறது. ஸாரிங்க, சரியா கவனிக்காமல் வண்டியை விட்டுட்டேன் என்று பின்னால் திரும்பிய ஓட்டுனருக்கு அதிர்ச்சி. நண்பரது திறந்த வாய் இயல்பாக மூடியிருந்தது. ஸாருக்கு சரியாயிருச்சு பாருங்க என்று இவர் சொன்னதும் மனைவியும் கவனித்திருக்கிறார். நண்பரது பிரச்சினை ஒரு வேகத்தடையில் சரியாகி விட்டது.

 

ஆபரேஷன் வரைக்கும் போகும் என்று நினைத்து அதிர்ச்சி வைத்தியத்தில் சரியானதில் நண்பருக்கு ஏக மகிழ்ச்சி. கணவருக்கு பேச்செல்லாம் சரியாக வருகிறதா என்று வரும் வழியெல்லாம் மனைவி நண்பரை பேச வைத்து வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். வீட்டுக்கு வந்ததும் ஓட்டுனருக்கு நன்றி சொல்லிவிட்டு ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கியதை மறுத்த ஓட்டுநர், இனிமே பாத்து கொட்டாவி விட சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வாடகையை மட்டும் வாங்கி சென்றுருக்கிறார்.

 

சம்பந்தப்பட்ட நண்பர் இன்றும் சமூகத்தில் ஒரு மதிப்புமிக்க நண்பராக வாழ்ந்து குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியை மறக்க முயன்று வருகிறார். ஏன் அந்த நீண்ட கொட்டாவி வந்தது என்று யாரும் அதிகமாக ஆராயவில்லை. சிலர் நரம்பு பிரச்சினை என்றார்கள். சிலர் தெய்வகுத்தம் என்றார்கள். எனிலும் அவருக்கு “ஸ்பீட் பிரேக்கர்” என்கிற செல்ல பெயர் வந்ததை யாராலும் தவிர்க்க முடியவில்லை.

 

ரோட்டில் சுற்றித்திரியும் மனநலம் சரியில்லாத மனிதர்களை காணும்போது போது ஒரு விஷயம் சற்று ஆச்சர்யமாக இருக்கும். அது அவர்களின் வயது! நிஜமாகவே பல முறை அவர்களின் வயதை கணிக்க முயற்சித்து தோற்று போயிருக்கிறேன்! தலை முடி கருகருவென்று இருக்கும். நான் அவர்களின் வயதை “30” என்று கணிக்கும் போது அவர்களின் நிஜ வயது என் தாத்தா மற்றும் பாட்டியின் வயதுக்கு இடைப்பட்டதாக இருக்கும். நடையில் கூட தளர்வே இருக்காது! எதை பற்றியும் கவலைப்படாத மனம் கூட இவர்களின் முதிர்வற்ற தோற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

 

மேற்கூறிய கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் மீரா. எங்கள் தெருவில் சுற்றித்திரியும் ஒரு மனநலம் சரியில்லாத மனிதர். ஒரு மனநலம் சரியில்லாத மனிதருக்கு யார் “மீரா” என்ற பெயர் சூட்டியது என்ற கேள்வியே இவர் மீது கொண்ட சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியது. என் சிறுவயதிலிருந்து இப்பொழுது வரை எப்படியும் ஒரு நாளில் எப்படியும் மூன்று நான்கு முறையாவது என் கண்ணில் பட்டுவிடுவார். அடர்த்தியான, கருமையான தலைமுடி, இருட்டை கிழித்து ஒட்டியது போல நீண்ட, நெடிய தாடி! அலையாத கண்கள், சற்று வலுவான தேகம் போல நடை.

 

சம்பந்தமில்லாத வார்த்தைகள் அவ்வப்போது  பேசினாலும், பல நேரம் அறிவார்ந்த அமைதியாக இருப்பார். யார் எதை கொடுத்தாலும் சாப்பிட மாட்டார். கொடுக்கும் முகங்களை ஆழமாக பார்ப்பார். பின்பு வாங்கிகொள்வார். வேண்டாம் என்றால் வேண்டாம்தான். தூங்கி பார்த்ததில்லை. ஒரு பெரிய அழுக்கு மூட்டையை எப்போதும் தோளில் சுமந்திருப்பார். பட்டன் இல்லாத ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அதில் பெல்ட்டுக்கு பதிலாக சணல் கயிற்றை சுற்றியிருப்பார். பழைய பட போஸ்டர்கள் எதாவது ஒட்டியிருந்தால் அதில் உள்ள நடிகரை ஏறெடுத்து பார்க்காமல் நடிகையின் படத்தையே உற்று பார்த்துகொண்டே இருப்பார். ஒருநாள் அன்பே வா சரோஜாதேவி போஸ்டரை உத்து பார்த்தவர் அருகில் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த எம்ஜியாரை ஆவேசமாக கிழித்து போட்டுவிட்டு இனிமே இங்க வராத என்பது போல எச்சரிக்கை செய்தார். 

 

வீட்டுக்கு அருகில் உள்ள கோவில் வாசல் தேங்காய் கடை கொட்டகை தான் மீராவின் இருப்பிடம். அது போக அதன் அருகில் உள்ள பஸ் ஸ்டான்ட் உறங்கும் இடம். மீராவின் பிறப்பு மற்றும் பூர்வீகம் பற்றிய பொய் கலந்த உண்மைகள் மற்றும் உண்மை கலந்த பொய்கள் அதிகம் உலாவும். எனவே அவரவர் வசதிகேற்ப மீராவை ஒரு பெரிய குடும்பத்தின் கடைசி வாரிசு என்றும், அதிகம் படித்ததால் ஏற்பட்ட வினை என்றும் கூறிக்கொள்வார்கள்.

 

ஒருநாள் மீராவை தேடி ஒருவர் வந்தார். வந்தவர் அவரை கூட்டி செல்ல ஆயத்தமானர். அருகில் இருப்பவர்கள் விசாரித்தனர். இவரின் தூரத்து சொந்தம் என்றார். என்பதோடு இனி நானே பராமரித்துக் கொள்கிறேன் என்றார். தெருவில் உள்ள பெண்களை முறைத்து பார்ப்பதாக மீரா மீதுள்ள குற்றச்சாட்டு ஏற்கனவே நிலுவையில் இருந்ததால் அவரை அழைத்து செல்ல யாரும் மாற்றுக்கருத்து கூறவில்லை. அழைத்து செல்ல வந்திருப்பவரிடம் யாரோ கேட்டார்கள். இவரோட பேர் என்ன?

 

“முகமது மீரான்!”

 

அதுநாள் வரை மனநலம் சரியில்லாதவராக அறியப்பட்ட கூட்டத்தில் ஒரு குரல் சொன்னது, “ஓ முசுலீமா?”

Series Navigationஆவணப்பட விமர்சனப் போட்டிஎனக்குப் புரியவில்லை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *