சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -3

This entry is part 20 of 31 in the series 10 பெப்ருவரி 2013

 

சொல்லாமல் கொள்ளாமல் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் தான் போனேன்.  இருந்தாலும், போனபோது செல்லப்பா வீட்டில் இருந்தார் சந்தோஷமாக இருந்தது. அப்போதெல்லாம் அந்த மாதிரி முன்னாலேயே சொல்லி நேரம் குறித்து வாங்கிக்கொண்டு போவது எனபது தெரியாத காலம். அத்தோடு அவர் இருந்தது மட்டுமல்லாமல் அங்கேயே நான் போன தருணத்தில் இலங்கையிலிருந்து சிவராமூவும் அங்கு இருக்க நேர்ந்தது, என்ன சொல்ல.. எல்லாம் நேர்ந்து கொள்கிறதே. தருமு சிவராமுவின் கவிதைகளும் சொல்லும் நடையும் போன்ற தமிழ்மொழி, உரை நடை பற்றிய எழுத்துவில் வந்த கட்டுரைகளும் ஒரு புதிய குரலை, ஆளுமையின் தோற்றத்தைச் சொல்லின.

 

என் பாராட்டைச் சொன்னேன் சிவராமுவிடம். ”எதிர்பாராத ஒரு ஆச்சரியம் தரும் சந்திப்பு (a very pleasant surprise!) இல்லையா> என்றேன். சிவராமுவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. பேசிக் கொண்டி ருந்தோம். என்ன என்று இப்போது நினவிலில்லை. அப்போது எழுத்து வர ஆரம்பித்து இரண்டு வருஷங்கள் முடிந்து இருக்கும். செல்லப்பாவின் வாடிவாசல் ஒரு சிறு புத்தகமாக, எழுத்துச் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாகவும், எழுத்து பத்திரிகையில் ஜீவனாம்சம் என்று அவரது புதிய நாவல் தொடராகவும் வெளிவந்து இருந்தது. கணவன் இறந்ததும் இனி தன் வாழ்க்கை ஆதரவற்ற கணவனின் பெற்றோருடன் தான் என்று தீர்மானித்து தன் அன்ணா ஜீவனாம்சத்துக்காகத் தொடர்ந்த வழக்கை உதறு, கணவன் மறைவுக்குப் பிறகும், அண்ணா சொல்லையும் மீறி, கணவனின் பெற்றோர்களுக்கு உதவியாக அவர்க்ளுடன் இருக்க முடிவு செய்கிறாள். மிகவும் வித்தியாசமான வாழ்நெறி.  வாடிவாசல் மதுரை மாவட்டத்தில் காணும் ஜல்லிக்கட்டு என்ற ஒரு வீர விளையாட்டை ஆயுதமின்றி காளையை அடக்குவது ஒரு அறம், மரபு, விளையாட்டு. தேவர் வகுப்பினரின் விளையாட்டு. இரண்டும் ஒரு ஆவணம் என்றே கூடச் சொல்லப்படத் தகுந்த பதிவு. படைப்பு. இரண்டும் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை அறங்களைச் சொல்லும் வித்தியாசமான நடையில். இவை இரண்டும் செல்லப்பாவை நாவலாசிரியராகவும் ஒரு புதிய அறிமுகத்தைத் தந்திருந்தன.

 

அவரை அறிமுகப்படுத்திய சங்கு, பின்னர் மணிக்கொடி என அவர் பத்திரப்படுத்தியிருந்த, சூறாவளி, சந்திரோதயம் போன்ற பழைய பத்திரிகைகளைக் காண்பித்தார். பேசிக்கொண்டிருந்தோம். “கொஞ்ச நாள் இருப்பீர்கள் இல்லையா? நாளைக்கு வாருங்களேன். முத்துசாமி, வைதீஸ்வரன், சச்சிதானந்தம் எல்லாம் இங்கே பக்கத்தில் தான் இருக்கிறார்கள். சொல்லி அனுப்புகிறேன். நாளைக்கு அவர்களையும் சந்திக்கலாம்.” என்றார்.

 

மறுநாள் பிற்பகல் நான்கு மணி அளவில் என்று நினைக்கிறேன். நான் அங்கு சென்றபோது அம்மூவரும் செல்லப்பா வீட்டுக் கூடத்தில் காத்திருந்தார்கள். ந.முத்துசாமி சில கதைகள் எழுதி யிருந்தார். எல்லாம் அவரது புஞ்சை கிராமத்து மனிதர்களை, வாழ்க்கையைச் சொல்பவை. எஸ். வைதீஸ்வரன் “கிணற்றில் விழுந்த நிலவு” கவிதையோடு அறிமுகமாகி யிருந்தார். சச்சிதானந்தம் எல்லோரையும் விட நிறைய படித்திருந்தார். எல்லோரும் எனக்கு சிறியவர்கள் மூன்றிலிருந்து ஆறு வயது சிறியவர்கள். சச்சிதானந்தம் முத்துசாமி இருவரும் பின் நாட்களில் நான் அடிக்கடி சந்தித்தும் கடிதத் தொடர்பு கொண்டும் மிக நெருக்கம் கொள்ள இருந்தவர்கள்.

 

அந்த முதல் சந்திப்பிலேயே, “வாருங்கள், விஜயபாஸ்கரனைப் பார்த்துவிட்டு வரலாம்” என்று கிளம்பினார். திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெரு வீட்டிலிருந்து எங்கு போனாலும் நடை தான். மௌண்ட் ரோடு வந்து  கூவம் பாலத்தைத் தாண்டினால் லாங்ஸ் கார்டன் ரோடு தான். இப்போது அந்த ரோடு பழைய ரோடாக இல்லை. லாரிகள் நிறைந்திருக்கும் இன்னும் என்னென்ன வெல்லாமோ அடைசலாகக் கிடக்கும் இன்றைய காட்சி அல்ல அன்று. வெகு அமைதியான ஜன நெரிசல் அற்ற சாலையாக இருந்தது. கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு வீட்டின் வெளிக் கதவைத் திறந்து உள்ளே போனால் எதிரே வந்தது தமிழ்ப் புத்தகாலய கண. முத்தையா. ”இருக்காரா?” என்று செல்லப்பா கேட்க, “வாங்க, என்று கைகூப்பி “இருக்கார் வாங்க” என்று வலப்பக்க அறையைக் காட்டினார். முத்தையா அங்குதான் குடியிருக்கிறார் போலும். விஜயபாஸ்கரனுக்கு அங்கு இடம் ஒதுக்கியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.  எனக்கு “சரஸ்வதி” அறிமுகமாகி இருந்தது. எங்கு சென்றாலும் அங்கு செல்லப்பா இருந்தால், அவர் குரல் தான் ஓங்கி ஒலிப்பதாக இருந்தது விஜயபாஸ்கரனும் மிக உற்சாகத்தோடு பேசிக் கொண்டிருந்தார். என்னிடம் “எழுத்தை விட சரஸ்வதிக்குத் தான் சிலோன்லே சந்தாதாரர் அதிகம்” என்றார். செல்லப்பா அதைத் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அச்சாகி அனுப்ப இருந்த புது சரஸ்வதி இதழை என்னிடம் கொடுத்து, “இது தான் புது இதழ், இனிமேத்தான் அனுப்பனும்” என்றார் புரட்டிப் பார்த்துக்கொண்டே இருந்த போது ஒரு பக்கத்தில் என் பார்வை நின்றது. “அதைப் பக்கத்தை நிரப்பறதுக்காகப் போட்டது” என்றார் சிரித்துக் கொண்டே. “நீங்களும் சரஸ்வதிக்கு எழுதுங்களேன்” என்றார். விஜயபாஸ்கரனிடமிருந்து வந்த அந்த அழைப்பு எனக்கு சந்தோஷமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. நான் மதிக்கும் இன்னோரு பத்திரிகாசிரியர் என்னை எழுதச் சொல்கிறாரே! “நான் என்ன எழுதப் போறேன்” என்று சொல்லிச் சிரித்தேன். “இப்போதானே எழுத ஆரம்பிச்சிருக்கார். தயக்கமா இருக்கும்” என்றார் செல்லப்பா. இந்த இரண்டு பத்திரிகைகளும் அன்றைய சூழலில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தவை. ஒன்றுக் கொன்று உதவிக்கொள்வனவாக ஆசிரியர் இருவரும் சினேக பாவத்தோடு இருந்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

 

இதெல்லாம் எனக்கு புதிய அனுபவங்கள். செல்லப்பா தன்னைக் காந்தியவாதியாகக் காண்பவர். விஜய பாஸ்கரன் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இருப்பினும் இந்த ஒட்டுறவு, சினேக பாவம். கடைசியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கே விஜய பாஸ்கரனைப் பிடிக்காமற் போயிற்று. தாமரை ஒரு கட்சிப் பத்திரிகை பிறந்தது.

 

வேடிக்கை என்னவென்றால், பின் வருஷங்களில் செல்லப்பா வீட்டிற்கு சாவகாசமாக இலக்கியம்  பேசுவதற்கு வருகிறவர் களில் தாமரை ஆசிரியர் தி.க. சிவசங்கரன், ஹரி ஸ்ரீனிவாசன் போன்றோரும் இருந்தனர். நேர் எதிர் அணிகளில் உள்ளவர்களாக அவர்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. அன்றாடம் சந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் போலத்தான் அவர்களிடம் மிகுந்த சகஜ பாவம் நிலவியது. அவர்களை செல்லப்பாவின் வீட்டில் பார்க்கும் போது அவர்களுக்கும் நான் பரிச்சயமானவனாகத் தான் இருந்தேன். இன்னமும் வேடிக்கை, நா.வானமாமலையும், சிதம்பர ரகுநாதனும் புதுக்கவிதையை தீவிரமாக எதிர்த்தபோதிலும், தி.க. சிவசங்கரனின் ஆசிரியத்வத்தில் தாமரையில் முற்போக்கு பாணி புதுக்கவிதைகளுக்கு உற்சாகமான வரவேற்பு இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருக்கும். தமிழ் முற்போக்கு தலைமைகள்  எப்படி சிவசங்கரனுக்கு இவ்வளவு சுதந்திரம் அனுமதித்தார்கள் என்று. தி.க.சியும் சுதந்திரமாக கட்சிக் கட்டுப்பாட்டை ஒரு சில விஷயங்களிலாவது மீறி செயல்பட்டாரே. ஆச்சரியம் தானே. இதற்கு முன் வானம்பாடிகளும் இருந்தார்களே. ஒரு வேளை, என்ன வேண்டுமானலும் செய்துகொள். முற்போக்கு அணியில் சேர்ந்துகொள். அவ்வப்போது தரும் கோஷங்களை முழக்கமிடு, போதும்” என்று ஒரு சொல்லப்படாத விதியோ என்னவோ.  ஹரி ஸ்ரீனிவாசன் கூட கொஞ்சம் ஒட்டியும் ஒட்டாதுமிருந்த முற்போக்கு தான். பின்னாட்களில் அவர் முற்றிலுமாக இலக்கிய உலகிலிருந்து விலகிவிட்டார்.

 

நான் சொல்ல வந்தது செல்லப்பாவின் வீட்டுக் கூடம் எல்லா தரப்பினரும் சந்தித்து அளவளாவும் இடமாக இருந்தது. தமிழ் ஒளி என்ற கவிஞர் அங்கு காணப்படுவார். ஆனால் அவர் கவிதைகள் எழுத்துவில் காணப்பட்டதில்லை. இருந்தாலும்..சிகாகோவில் இருந்த. ஏ.கே. ராமானுஜமும் கூடத்தான். அவர் வருகைக்கு அடுத்து வந்த எழுத்து இதழில் . அவரது ஆங்கிலக்கவிதைகள் கூட மொழி பெயர்ப்பில் பிரசுரமாயின. அவர் அன்றைய சிறு பத்திரிகை முயற்சிகளை அறிய ஆர்வம் கொண்டிருந்தார் என்பது, பின்னர் தில்லியில் யாத்ராவிற்காக சந்தித்தபோது தெரியவந்தது. அது ஒரு பக்கம். அந்த ஆரம்ப புதுக்கவிதை அறிமுக நாட்களில் சி.கனக சபாபதியை அடிக்கடி செல்லப்பாவின் வீட்டுக் கூடத்தில் பார்த்திருக்கிறேன். நிறைய எதிர்ப்பின் இடையே செல்லப்பா பக்கம் நின்று புதுக்கவிதைக்காக நிறைய பழம்  தமிழ் இலக்கிய சான்றுகளுடன் வாதாடியவர் சி. கனக சபாபதி. ஆனால் எனக்கு ஆச்சரியமளித்தவர் எழில் முதல்வன். அவர் ஏதும் வாதிட்டோ பேசியோ நான் அறிந்தவனில்லை. அப்போது அவர் எம்.ஏ. படித்துக்கொண்டிருந்தாரோ அல்லது லெக்சரராக இருந்தாரோ தெரியாது. இரண்டொரு முறை நான் அங்கு போனபோது அவர் அங்கு அமைதியாக அமர்ந்து நடப்பதைக் கவனித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். செல்லப்பா அவரைப் பற்றிச் சொல்லும்போது, “எழுத்து மீதும் ஆர்வம். மேலும் இங்கு வந்து எல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்று வருகிறார். வரட்டுமே.  பல்கலைக் கழகத் தவர்கள் வருவதும் நல்லது தான்” என்றார். இப்படித் தானே கனகசபாபதியும் நம்மோடு சேர்ந்தார். அவர் மூலம் மதுரைப் பல்கலைக் கழகம் மாறிக்கொண்டு வருகிறதே” என்றெல்லாம் சொன்னார். கமில் ஸ்வெல பில்லையும் சொல்ல வேண்டும். அவர் சும்மா வந்து பேசிவிட்டுச் செல்பவர். ஆனால் எட்டணா கொடுத்து ஒரு பிரதி வாங்கியவரில்லை. எழுத்து கடை மூடி, செல்லப்பா வலங்கிமானுக்குச் சென்றது, அங்கு சென்று எழுத்து பைண்ட் வால்யூம் எல்லாம் வேண்டுமே” என்று கெட்டாரா. செல்லப்பா மறுத்துவிட்டார். “எட்டணா கொடுத்து அன்று வாங்க மனமிருக்க வில்லை. இன்று இதற்கு மதிப்பு ஏற்பட்டதும் தேடிவரத் தோன்றுகிறதோ” என்று கோபித்துக்கொண்டாராம்.

 

பல்கலைக் கழகத்துக்குள் செல்லப்பாவும் எழுத்துவும் விமர்சனமும் நுழைவது  ஒரளவுக்கு நடந்தது தான் மதுரைப் பல்கலைக் கழகத்தில் பிச்ச மூர்த்தி, போன்ற பலர் அழைக்கப்பட்டு ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. செல்லப்பாவும் பல முறை சென்று பல்கலைக் கழக மாணவர்களுக்கு உரையாற்றியிருக்கிறார்.

 

செல்லப்பா எழுத்து பிரசுரம் ஆரம்பித்ததும், வல்லிக்கண்ணன், கனகசபாபதி போன்றோருடன் சென்று பல கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், உயர் நிலைப்பள்ளிகளுக்கு தன் எழுத்து பிரசுரங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். சிரமம் தான் கடுமையான உடல் உழைப்புத் தான். இருப்பினும் இந்தப் புத்தகங்கள் தான் எனக்கு ஏதோ கொஞ்சம் பணம் தந்திருக்கிறது என்று சொன்னார். இதைத்தான் ஆரம்ப காலங்களில் நா.பார்த்த சாரதி, “புடைவை விக்கறவன் மாதிரி புத்தகத்தைத் தோளில் சுமந்து கொண்டு வருவார். பாவமாக இருக்கும்” என்று எழுத, செல்லப்பா, “எழுத்து எப்படி நடக்கிறது என்று இதைவிட தெளிவாக யார் சொல்லிவிடமுடியும்?” என்று பதில் அளித்தார். ஒரு சில வருஷங்களுக்குப் பிறகு நா.பா. செல்லப்பாவின் பரம தோஸ்த் ஆக மாறிவிட்டார்.

 

இதெல்லாம் பின் வருடங்களில் நடந்த. விஷயங்கள். நான் இதைச் சொல்லக் காரணம், எழுத்து பிறப்பித்த ஒரு விழிப்புணர்வு, சூழல் மாற்றம், வீட்டில் உட்கார்ந்து பத்திரிகை நடத்தியதால் மாத்திரமே விளைந்ததல்ல .இதற்கு அவர் இயல்பும் எல்லா தரப்பினரிடமும் எப்போதும் வாதித்துக்கொண்டும் அளவளாவிக்கொண்டும் பல முனைகளிலும் செயல்பட்டுக் கொண்டும் இருந்ததே காரணம்.

 

நான் ஜம்முவிலிருந்தோ தில்லியிலிருந்தோ விடுமுறையில் வரும் போதெல்லாம் சென்னையில் கழித்த நாட்களின் பகல் நேரத்தின் பெரும்பகுதி செல்லப்பாவோடு கழித்தது தான். அவர் வீட்டுக் கூடம் மாத்திரமல்ல. யாரையும் பார்ப்பதென்றால், அது இலக்கியம் பற்றிப் பேசத்தான். அதைத் தவிர்த்து அவருக்கு வேறு எதிலும் ஈடுபாடு இருந்ததில்லை. நடந்து தான் செல்வார். திருவல்லிக் கேணியிலிருந்து சச்சிதானந்தத்தோடு பேச கோபால புரம் வீட்டிற்கு நடைதான். நேர் ரோடில் போகமாட்டார். ஏதேதோ சந்துகளில் புகுந்து வெகு சீக்கிரம் சென்றுவிடுவார்.இன்று அந்த வழியை நினைவுக்குக் கொண்டு வருவது எனக்குக் கஷ்டம். அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் சச்சிதானந்தம் தான். நான் சென்னையில் இருந்த நாட்களில் அவர் வீட்டுக்குப் போய்விட்டால் அவர் குடும்பத்தில் ஒருவனாகவே ஆனேன்.

 

அது முதல் நாளே தெரிந்தது. யார் கூட வந்தது என்று நினைவில் இல்லை. ஒன்று தில்லி ஹோட்டல் அறை நண்பன் துரை ராஜாக இருக்க வேண்டும். 1956-லிருந்தே நண்பன். அல்லது என் அத்தை பையனாக இருக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி கழிந்த பிறகு, “இதோ வந்துவிட்டேன்” என்று சொல்லி வெளியே சென்றேன். சிகரெட் பிடிக்கவேண்டும் எனக்கு. நான்  சென்ற பிறகு செல்லப்பாவுக்கு சொல்லியிருக்க வேண்டும், “சிகரெட் பிடிக்கப் போயிக்ருக்கிறான்” என்று. நான் திரும்பி வந்ததும் “ நீங்க சிகரெட் பிடிக்க வெளியே போகவேண்டாம். உங்களுக்கு ஒரு ஆஷ் ட்ரே தயார் செய்துவிட்டேன். இங்கேயே நீங்கள் சிகரெட் பிடித்துக்கொள்ளலாம். பேச்சு தடைப் படுகிறதே. அப்புறம் பேச்சு சுவாரஸ்யம் போய்விடும். நேரமும் வீணாகிறது.” என்றார். செல்லப்பா காபி டீ எதுவும் சாப்பிடுகிறவர் இல்லை. எனக்காகவோ இல்லை வருகிறவர்களுக்காகவோ காபியோ டீயோ மாமி தயார் செய்துவிடுவார். நான் ஒரு பெர்கொலேட்டரே வாங்கிவந்தேன். சீக்கிரம் கஷ்டமில்லாமல் காபி போட்டுவிடலாம் என்று. தனியாக வர நேரிட்டாலோ, அல்லது அதிக நாட்கள் சென்னையில் தங்க நேரிட்டாலோ, மனைவியை அவளது உறவினர் வீட்டில் விட்டு விட்டு நான் செல்லப்பா வீட்டிலேயே தங்கி விடுவது உண்டு. அப்போதெல்லாம் எந்நேரமும் பேச்சுத் தான். இரவு அவர் பேசிக்கொண்டே இருந்திருப்பார். நான் தூங்கிப் போயிருபேன். மறு நாள் காலை நான் எழுந்ததும், “பேசீண்டே இருந்தோம். நீங்க தூங்கிப் போயிட்டேள்” என்று தான் நான் எழுந்ததும் கேட்கும் வார்த்தை. அல்லது என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் வார்த்தை. இப்படி அவரை கஷ்டப்படுத்தியது நானும் சிவராமூவும் தான்.

 

நான் அவரை முதலில் சந்திக்கச் சென்ற போது, அங்கு சிவராமூ இருந்தார் என்று சொன்னேனே. அப்போது திரிகோணமலை யிலிருந்து வந்தவர் ஒருமாத காலமோ என்னவோ அவர் தங்கியிருந்தது செல்லப்பாவின் வீட்டில் தான். இடையில் சிதம்பரம் சென்று மௌனியைப் பார்த்து வந்தார். திரும்பியவர் மௌனியின் மனக்கோட்டை என்ற கதையோடு வந்தார். வெகு கால இடைவெளிக்குப் பிறகு மௌனி எழுதிய கதை அது. முன் பின்னாகவோ என்னவோ சிவாஜி இதழில் ஒரு கதையும், சரஸ்வதி இதழில் (பிரக்ஞை வெளியில் என்று நினைவு) ஒரு கதையும் வெளியாயின. செல்லப்பா அதற்குச் சற்று முன் மௌனியின் மனக்கோலம் என்ற ஒரு நீண்ட கட்டுரை தொடராக எழுத்துவில் எழுதினார். இதையெல்லாம் கண்ட ஒரு இலங்கை பேராசிரியர் “மௌனி வழிபாடு” என்று அதற்கு தன் கண்டனத்தை வெளீயிட்டிருந்தார். 15 வருடங்களுக்கும் மேலாக மௌனி மறக்கப் பட்டிருந்தார். மௌனிக்குக் கிடைக்கும் இந்த கவனிப்பு பிடிக்காதவர்கள், க.நா.சுவை முன்னிறுத்தி கிண்டலாகப் பேசினார்கள்.” க.நா. சு. நிறையப் புனைபெயர்களில் எழுதுபவர். எனக்குத் தெரிந்து “அதைரிய நாதன், மயன், ஆண்டாள்,:” இப்படி எத்தனையோ. அதைச் சுட்டிக்காட்டி, “மௌனியாவது மண்ணாவது, அப்படி ஒரு ஆளே கிடையாதைய்யா? இது க.நா.சு. வின் இன்னொரு புனை பெயராக்கும்” இந்த மாதிரி விளையாட்டெல்லாம் அவருக்குப் பிடிக்குமாக்கும்,” என்றார்கள். க.நா.சு முயன்று தேடியவரை கிடைத்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதி  அழியாச்சுடர் என்ற தலைப்பில் வெளியிட்டார், அத்தோடு, திருவனந்தபுரத்திலோ என்னவோ நிகழ்ந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டிற்கு மௌனியையும் அழைத்து “இதோ இவர் தான் மௌனி” என்று அறிமுகம் செய்தார். இதெல்லாம் 1959-ல் நடந்த கதை என்று நினைவு.  அப்படியும் சில கதைகள் அப்போது கிடைக்காமல் போயின. மௌனியிடமும் அவை இருக்கவில்லை. மௌனிக்கே தான் ஒரு புனை பெயர் ஆசாமியாகப் போனது பற்றிக் கவலை இருக்கவில்லை. இவ்வளவே நடந்தது. இதுவே மௌனி வழிபாடாகிப் போனது ஒரு பேராசிரியருக்கு.

 

இதையெல்லாம் தூக்கியடிக்கும் காரியமும் நடந்தது. மௌனியைப் போய்ப் பார்த்து வந்த தருமு சிவராமூ செல்லப்பாவுக்குக் கடிதம் எழுதினார். “இனி பிச்சமூர்த்தியை விட்டு விடுங்கள். மௌனிதான் நம் கவனத்துக்குரியவர். அவர பக்கம் தான் நம் கவனம் இனித் திரும்பவேண்டும்” என்று எழுத,  செல்லப்பா, “இப்ப இவன் நமக்கு உபதேசம் பண்ண ஆரம்பிச்சுட்டான்” என்று சலித்துக்கொண்டார். பின்னர் செல்லப்பா

சொல்லத் தான் எனக்கு இது தெரிந்தது. அந்த சமயம் தருமு சிவராமூ ஒரு படிமக் கவிஞராக தமிழின் ஒரே கவிஞராக சி.மணி, பிச்சமூர்த்தியெல்லாம் புறம் தள்ளப் பட வேண்டிய வர்களாக ஆயினர். ”என் கவிதைகள் எழுத்துவில் வெளிவந்த பிறகு தான், செல்லப்பாவுக்கு புதுக்கவிதை பற்றிய தெளிவும் ஞானமும் கிடைத்தது “ என்று எழுத ஆரம்பித்தாயிற்று.

 

செல்லப்பாவுக்கு எழுத்து தன் மணிக்கொடி சகாக்களால் எல்லாம் கைவிடப்பட்ட பிறகு அவருக்கு ஆதரவாகவும், தனக்கு உத்வேகம் தருபவராகவும் பார்த்தது பிச்ச மூர்த்தியைத் தான். பிச்சமூர்த்தியின் கவித்வத்தைப் பற்றி அவர் பங்களிப்பைப் பற்றி மறைமுகமாக மறுத்துப் பேசிய புனைபெயர் கட்டுரைகளும் எழுத்துவில் வந்தன. அதில் ஒருவர் எழுத்து மூலமாகவே விமர்சகராகவும் கவிஞராகவும் தெரிய வந்த நகுலனும். இது மாதிரி திரை மறைவு வேலைகளை தான் தெரிய வந்த தொடக்க காலத்திலிருந்தே ஒரு விஷமச் சிரிப்புடன் செய்தவர் நகுலன்.  ஒருவர்.  பிச்ச மூர்த்தியும் யார் என்ன சொல்கிறார்கள் எனபது பற்றியெல்லாம் கவலை இல்லாது தன் இயல்பில் தன் பாட்டுக்கு வாழ்ந்தவர்.

 

அந்த ஆரம்ப காலங்களில் செல்லப்பா அடிக்கடி பிச்சமூர்த்தியிடம் போய்வருவார். நான் அங்கு இருந்தால் என்னையும் அவர் அழைப்பார். செல்லப்பாவைப் போலவே ந. பிச்ச மூர்த்தியின் ஏழ்மையும் பார்க்க வேதனை தரும் ஒன்று. ஆனாலும் பிச்ச மூர்த்தி அதைக் காட்டிக்கொள்பவரல்ல. யாரிடமும் எதுவும் வேண்டுபவருமல்ல. செல்லப்பாவிடம் அவரும் அவரிடம் செல்லப்பாவும் மிகுந்த சுவாதீனம் கொண்டு பேசுவதை, அபிப்ராயங்கள் பரிமாறிக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். செல்லப்பாவுக்கு அவரு குரு ஸ்தானத்தில் இருந்தவர். அப்போதே எழுத ஆரம்பித்திருந்த நான் 50 வருட காலமாக இலக்கிய உலகில் பல துறைகளிலும் சாதனை படைத்துள்ள பிச்ச மூர்த்தியின் முன் ஒன்றுமில்லை. பேச்சு வரும்போது அவ்வப்போது “ஆமாம், நீங்க கூட இது பத்தி எழுதி இருக்கிறீர்கள் இல்லையா?” என்பார். திருவல்லிக்கேணியில் இருந்த வரை நடந்து தான் அவர் வீட்டுக்குப் போவோம். நடக்க வியலும் தூரம் தான் என்றாலும், எத்தனை இடங்களுக்கு? கடைசியாக சென்னையில் அவர் இருந்த இடம் பெரம்பூரில் எங்கோ ஒரு இடத்தில். அங்கு செல்லத் தான் நாங்கள் பஸ்ஸில் முதல் தடவையாக பயணம் செய்தோம். நாங்கள் போனதும் உள்ளே சென்று மனைவியை அனுப்பி எங்கள் இருவருக்கும் தோசை வாங்கி வர அனுப்பியது பின்னர் தெரிந்தது,

 

ஒரு முறை ஒரு பெரிய கூட்டம் நான் சச்சிதானந்தம், முத்துசாமி, வைதீஸ்வரன் செல்லப்பா இன்னம் யார் யாரோ வெல்லாம் அவரைப் பார்க்க திருவல்லிக்கேணியிலேயே அவர் வீடு சென்றிருந்தோம். அன்று கவிதை பற்றித் தான் சர்ச்சை. எழுத்துவில் வந்த ஒரு கவிதையை வைத்துக்கொண்டு எங்களை யெல்லாம் உங்களுக்கு என்ன தோன்றுகிறது, இந்த வரியில் என்ன சொல்ல வருகிறார், சொல்லுங்கள்” என்று சிரித்துக் கொண்டே எங்களையெல்லாம் கவிதை வாசிப்பில் அவர் வழியில் இட்டுச் சென்றார். இதற்கு கவிதையைப் பிரசுரித்த செல்லப்பாவும் தப்பவில்லை.

.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 51 நேசிப்பது உன்னை !சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *