சுண்டவத்தல்

This entry is part 5 of 6 in the series 30 டிசம்பர் 2018

 

மதுரை வீரன் (1956) படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் பேசுவதாக ஒரு வசனம் வரும். ‘தேவாமிர்தம் தேவாமிர்தம்னு இதத்தான் சொல்லியிருப்பாகளோ?’ பழைய கஞ்சியோடு அந்த  நீராகாரத்தின் கடைசிச் சொட்டை ருசித்துவிட்டு அவர் பேசும் வசனம் இது. அந்தக் காலங்களில் எங்கள்  வீட்டிலும் காலையில் பழைய கஞ்சிதான். கோப்பை நிறைய கஞ்சியோடு ஓர் ஆப்பை பசுந்தயிர் விட்டு அளவாக உப்புப்போட்டு அம்மா தருவார். உள்ளங்கை முழுவதையும் நனைத்துப் பிசைவேன். கடலெண்ணையில் வறுபடும் சுண்டவத்தல் காப்பிக் கொட்டை நிறத்துக்கு வரும்போது அரிகரண்டியில் அள்ளி அம்மா கஞ்சிமீது தூவுவார். சூட்டை கஞ்சி வாங்கிக் கொள்ள வத்தல் சமாதானமாகும். வெள்ளை வானில் கருப்பு நட்சத்திரங்களாய் அந்த வத்தல் சுற்றிச்சுற்றி வரும். பிசைந்த கைவிரல்களிலெல்லாம் முத்து முத்தாய் வெண்ணை நிற்கும். ஐந்து விரல்களையும் நாக்கின்மீது குவித்து உறிஞ்சினால் இமைக்குக் கீழே விழிகள் சொர்க்கம் தேடும். அந்தக் கஞ்சியோடு இரண்டு வத்தலையும் சேர்த்து மென்று இறக்கினால் புரியும்.என். எஸ். கிருஷ்ணன் சொன்னது வெறும் வசனமல்ல. வாழ்க்கை அனுபவம் என்று. அம்மாவும் ஆமோதித்தார்.

எங்கள் வீட்டில் காசு கொடுத்து வாங்காத சாமான்கள் என்று ஒரு பட்டியல் உண்டு. அரிசி, புளி, பால், தேங்காய். அதோடு சுண்டவத்தலும் சேர்ந்துகொண்டது. 1960களில் சுண்டவத்தல் விற்பதற்கென்றே ஒரு சமூகம் இருந்தது. முழங்காலுக்கு வேட்டி, இடுப்பில் பச்சை பெல்ட். மூங்கில் கழியை பிடரிக்குப்பின் நீட்டிவைத்து அதில் கைகளை பரப்பிக்கொண்டு கழுதைமேல் இரண்டு வத்தல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு  ‘சுண்டவத்த சுண்டவத்தோ’ என்று கூவிக்கொண்டு வருவார்கள். அவர்களிடம் அம்மா வத்தல் வாங்கியதே இல்லை. ஆனாலும் அவர்கள் எங்கள் வீட்டைக் கடக்கும்போது அம்மா மரக்கால் நெல் கொடுப்பார். கழுதையை வேடிக்கை பார்க்க நாங்கள் ஓடுவோம். ஒரு தடவை நான் கொடுத்த முள்ளங்கிக்காக எப்போதும் அந்தக் கழுதை என்னை வாஞ்சையோடு பார்க்கும். அந்த வத்தல்காரர் தனியாக ஒரு சாக்குப் பையில் எலந்தப்பழம், மனம்பழம், பனங்கிழங்கு, சோளம் என்று ஏதாவது வைத்திருப்பார். என்னைப்பார்த்த மாத்திரத்தில் இருப்பதை எனக்குக் கொடுத்து வெற்றிலை குதப்பிச் சிரிப்பார். அம்மாவின் நெல் அன்பிற்கு அந்த அன்பு ஆயிரம் மடங்கு அதிகம்.

மூன்று தலைமுறையாக எங்கள் வயக்காடுகளைக் கவனிக்கும் சுப்பன் களத்துமேட்டைச் சுற்றி சுண்டக்காய்ச்செடிகளை வைத்திருப்பார். எங்காவது மாட்டுச்சாணியைப் பார்த்தால் தங்கக்காசைப் பார்த்ததுபோல் ஓடி அள்ளிவந்து சுண்டக்காய்ச் செடிக்கு வைப்பார். ஏழெட்டு அடி உயரத்தில் செடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் வளர்ந்திருக்கும். பச்சை முத்துக்களை முனையில் வைத்துக்கொண்டு பூச்செண்டு மாதிரி கொத்துக் கொத்தாய்க் காய்த்துக் குலுங்கும். பிஞ்சு கசக்கும். முத்தல் ருசிக்காது. பறிக்கும் பக்குவம் சுப்பனுக்குத் தெரியும். ஒரு ஓலைக்கூடை நிறைய பறித்துவந்து வீட்டுத் திண்ணையில் இறக்கிவைப்பார். அந்த ஓலைக்கூடையைப் பார்த்த மாத்திரத்தில் அம்மாவுக்கு சுண்டக்காய் என்று தெரிந்துவிடும். கருங்காலி மரத்தில் செய்த மயில்கழுத்து அரிவாள்மனை, கோரைப்பாய். சொளகுகள் (முறங்கள்) சகிதமாய் அம்மா திண்ணைக்கு வந்துவிடுவார். அக்காவும் அத்தம்மாவும் சுண்டக்காயைத் திருகித் திருகி ஈச்சந்தட்டுக்களில் நிரப்புவார்கள். நானும் சேர்ந்துகொண்டு திருகிப் போடுவேன். அம்மா ஒவ்வொரு காயையும் முக்காலாய்ப் பிளந்து சொளகில் ஒன்றின்மீது ஒன்று ஏறாமல் பரப்புவார். ஒரு சொளகு நிறைந்துவிட்டால் அதை வெயிலில் வைப்பது என் வேலைதான். அம்மாவுக்கும் சூரியனுக்கும் எப்போதுமே ஓர் உடன்பாடு உண்டு. வத்தல் போடும் நாளில் சூரியன் தகிக்கும். மேகங்கள் அம்மாவுக்குப் பயந்து தலை காட்டாது. மாலை 4,5 மணிக்கெல்லாம் வத்தல் மொத்தமும் கூடைக்கு இடம் மாறும். அடுத்த நாள் பசுந்தயிரை அளவாகக் கடைந்து மோராக்கி அப்படியே வத்தல் இருக்கும் அந்த அலுமினியக் குண்டானில் ஊற்றுவார். எல்லா வத்தல்களும் மூழ்கினாலும், சில வத்தல்கள் திமிறி வந்து மிதக்கும். பிறகு அதுவும் மூழ்கிப்போகும். வத்தலுக்கு மேலே ஒரு விரல்கடை உயரத்துக்கு மேல்  மோர் நிற்கும்படி அம்மா பார்த்துக் கொள்வார். அடுத்தநாள் காலை வெறும் வத்தல்தான் இருக்கும். மோர் இருக்காது. ‘எல்லா மோரையும் வத்தல் குடிச்சிருச்சாம்’ அம்மா சொல்வார். ‘அந்த மோரை எங்கேம்மா வச்சிருக்கும்’ என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். மோர் குடித்த வத்தல் சூரியனைச் சந்திக்க தயாராகும். மாலைவரை காயும். அம்மா வந்து இரண்டு வத்தல்களை மோதிப்பார்ப்பார். ‘காய்ந்துவிட்டேன். நன்றாக ருசிப்பேன்.’ என்று அம்மாவிடம் அந்த வத்தல் சொல்லியிருக்கவேண்டும். அம்மா சந்தோஷமாக வத்தல்களை டின்னுக்கு இடம் மாற்றுவார். 50 ஆண்டுகளாய் புத்தம்புது ஜீவனோடு என்னோடு எப்போதும் வாழும் இந்த வத்தல் நினைவுகள்.

இன்று காலை பஃபலோ சாலையில் இருக்கும் என் வீட்டிலிருந்து இறங்கி தேக்கா மார்க்கெட்டுக்கு போய்க் கொண்டிருந்தேன். ‘அண்ணே’ என்று அழைத்தார் மளிகைக்கடை சண்முகம். ‘இந்தாங்கண்ணே. ஒங்களுக்காகத்தான் கொண்டுவந்தேன்’ என்று ஒரு பையைக் கொடுத்தார். வாயை விரித்துப் பார்த்தேன். அட! சுண்டக்காய். சண்முகம் தொடர்ந்தார். துவாஸ்ல நாங்க தங்கியிருக்க எடத்தில மொளச்சதுணே. ரொம்ப ருசியா இருக்கும்ணே. நீங்க சாப்புட்டுப் பாருங்க’ மீண்டும் அந்தப் பையை விரித்துப் பார்த்தேன். பச்சை முத்துக்களை ஏந்திக்கொண்டு பூச்செண்டாய்ச் சிரிக்கும் அந்த சுண்டக்காயில் அம்மாவின் முகம் தெரிந்தது. உற்றுப் பார்த்தேன். அக்காவின் முகம் அத்தம்மாவின் முகம் ஏன் சுப்பன்கூடத் தெரிந்தார். எனக்கு சுண்டவத்தல் பிடிக்குமென்று சண்முகத்துக்குத் தெரியும். அவரிடம் நாங்கள் சுண்டவத்தல் போடும் கதையை ஒரு தடவை சொல்லியிருக்கிறேன். உண்மைதான். எனக்காகவேதான் கொண்டுவந்திருக்கிறார். அப்படியே வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்தேன்.. காய்களைத் திருகி ஒரு குண்டானில் சேர்த்தேன். ‘இன்னிக்கு சுண்டக்காக்கறி வேண்டாம்’ என்றார் மனைவி. ‘இது கறிக்கல்ல வத்தலுக்கு’ என்றேன். ‘என்ன வெளயார்றிங்களா? எங்க காய வப்பீங்க?’  ‘எப்புடியாவது காய வப்போம்.’ என் வீட்டில் அந்த மயில்கழுத்து அரிவாள்மனையெல்லாம் கிடையாது. காய் நறுக்கும் கத்தியை எடுத்தேன். அம்மி விளிம்பில் சர்சர்ரென்று  இழுத்தேன். எல்லாக் காயையும் முக்காலாய்ப் பிளந்து ஒரு பழைய வேட்டியை எடுத்துக்கொண்டு சுண்டக்காயுடன் இறங்கப் போனேன். ‘பச்சச் சட்ட போலிஸ் இருக்கும் சிங்கப்பூர்ல வம்ப வெலக்கி வாங்காதீங்க.’  ‘நாம என்ன பாதுகாப்புச் சட்டத்த மீறிய குத்தமா செய்றோம். காயப்போடுவோம். விட்டாகன்னா வத்தல். இல்லாட்டி கொழம்பு.’ சொல்லிக்கொண்டே விரைந்தேன். லிட்டில் இந்தியா எம்மார்டி நிலையத்திற்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பேருந்து ஏறும் அந்த நீண்ட கொட்டகைப் பகுதிக்கும் இடையே ஓர் அழகான புல்வெளி. வேட்டியைப் பிரித்து விரித்தேன். நான்கு மூலையிலும் கான்கிரீட் கற்களை வைத்தேன். சுண்டக்காயைப் பரப்பபினேன். அந்தப் பேருந்து நிற்கும் இடத்திலுள்ள ஒரு தூணில் சாய்ந்துகொண்டு இறையன்பு எழுதிய ‘உலகை உலுக்கிய வாசகங்களை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். ‘நியாயமான காரணம். உண்மையான நேர்மை. யாரையும் இம்சிக்காத அணுகுமுறை. நல்லது செய்ய இது போதும்’ என்று சொல்லியிருந்தார். அட! அதைத்தானே செய்கிறேன். தைரியமாக நடிக்கிறேன். இருந்தாலும் ஒரு கண் அந்த பச்சைச் சட்டைக் காவலர்களைக் கவனித்துக் கொண்டே இருந்தது. உள்ளுக்குள் கொஞ்சம் பயம்தான். ஜேகே சொல்வது நினைவுக்கு வந்தது. ‘நாம் கற்பனையாக பயப்பபடும் பல விஷயங்களில் 95 சதவீதம் நடப்பதே இல்லை.’ உண்மைதான். தைரியப்படுத்திக் கொண்டேன். பிச்சையன் வந்தார். என் வீட்டுத் தொகுதியில்தான் அவரும் இருக்கிறார். ராஃபிள்ஸ் வந்தபோதே சிங்கப்பூருக்கு வந்ததுபோல் பேசுவார். ஒரு தடவை என்னிடம் சொன்னார். ‘இந்த ஊருப்பசங்க ஜீன்ஸை ஒழுங்கா காயப்போர்றதே இல்லண்ணே. அந்த ஈர ஜீன்ஸ்லேருந்து ஒரு மொச்ச வாட. பக்கத்தில நெருங்கமுடியாதுண்ணே’ என்றார். நான் சொன்னேன். ‘பிச்சையன் . அப்படீல்லாம் பேசாதீங்க. அவங்க தங்கியிருக்க எடத்தப் பாத்திருக்கிங்களா? 12 மணிநேர வேல. ராத்திரில ஊறவச்சு, காலைல தொவச்சு பகல்ல காயவச்சு அடுத்த நாள்ல போட்டுக்கிறனும். இடையில மழை வந்துட்டா சிலசமயம் போட்டுக்க ஒன்னுமே கூட இல்லாம போயிடும் பிச்சையன். பொண்டாட்டி புள்ளங்களக் காப்பாத்துறதுக்காக இங்க வந்து இப்புடியெல்லாம் கஷ்டப்பர்றாங்க. நீங்க அவுங்கள விரும்ப வேண்டாம் பிச்சையன். வெறுக்காமயாவது இருங்க.’ அதற்குப் பிறகு சில மாதங்கள் அவர் என்னிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். அந்தப் பிச்சையன் தான் இப்போது வருகிறார். என்ன சொல்லப் போறாரோ? ‘அண்ணே! பாத்திங்களா? வத்த காயுதுண்ணே. சிங்கப்பூர செங்கிப்பட்டியா ஆக்கிப்பிட்டாங்கண்ணே’ நான் நெளிந்தேன். ‘ என்னண்ணே இங்க வந்து நிக்கிறீங்க?’ ‘உக்கார பெஞ்சு இல்லியே’  ‘ஹஹ்ஹஹ்ஹா. நல்ல ஜோக்குணே. ‘ சொல்லிக்கொண்டே எம்மார்ட்டிக்கு விரைந்தார். ‘போய்த்தொலடா’  மனசுக்குள்ளேயே திட்டினேன். 4 மணிநேரம் காயப்போட்டேன். அம்மாவுக்கு ஒத்துழைக்கும் சூரியன் எனக்கும் ஒத்துழைத்தது. யாரையும் பாதிக்கவுமில்லை. யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. ஜேகே சொன்னது உண்மைதான். மோரில் ஊறவைத்து நாளை மீண்டும் காயவைக்க வேண்டும். சூரியன் ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைப்பான். காய்ந்த வத்தல்களை ஒரு பையில் சேர்த்தேன். அம்மா செய்தது ஞாபகம் வந்தது. இரண்டு வத்தல்களை மோதிப்பார்த்தேன். ‘நாம்பெத்த மகனே. காஞ்சிருச்சுய்யா’ அம்மா நினைவில்  குவிந்த கண்ணீரைக் கண்ணுக்குள்ளேயே பொத்திக் கொண்டேன். வீட்டுக்கு வந்ததும் மனைவி சொன்னார். ‘சாதிச்சிட்டீங்களே.’ வத்தலை மோரில் ஊறப்போட்டாகிவிட்டது. அடுத்த நாளும் காயப்போடும் படலம் சுகமாகவே முடிந்தது. அன்று இரவு மிஞ்சிய சோறில் வத்தல் நினைவோடு நீர் விட்டேன்.விடியலுக்காகக் காத்திருந்தேன். எனக்காக சுண்டவத்தலும் பழைய கஞ்சியும் காத்திருந்தன. காலை எழுந்ததும் ஒரு பிடி பிடிக்கவேண்டும்.

அந்த இரவுமுழுவதும் ஒரே ஊர் ஞாபகம். அத்தா அடிக்கடி சொல்வார். ‘ஒரு வெவசாயி அரிசிய காசுகுடுத்து வாங்குறது தற்கொல செஞ்சுக்குர்றது மாதிரி. அந்த நெல எந்த வெவசாயிக்கும் வரவே கூடாது.’  நான் ஒவ்வொரு தடவையும் இங்கே பொன்னி அரிசியைக் காசு கொடுத்து வாங்கும்போது அத்தா சொன்னதை நினைத்துக் கொள்வேன். விவசாய நிலங்களை விட்டு நான் ரொம்ப தூரம் வந்துவிட்டேன். அத்தா சொன்னது எனக்குப் பொருந்தாதுதானே. சமாதானப் படுத்திக் கொள்வேன். நான் சிங்கப்பூருக்கு புறப்பட்டபோது அத்தாவிடம் பயணம் சொல்லி விடைபெற்றபோது அத்தாவின் முகத்தை நேருக்குநேர் பார்த்தேன். அப்படி நான் பார்ப்பது அதுதான் முதல்தடவை. அத்தா சொன்னார். ‘நீங்க படிச்சிருக்கீங்க. எங்க வேணும்னாலும் போகலாம்யா. ஆனா நாலு தலமொறயா நம்மள வளத்த மண்ணுய்யா இந்த அறந்தாங்கி மண்ணு. கடைசியில எப்புடியும் இங்க வந்துருங்கய்யா.’  சொல்லிமுடித்ததும் அத்தா விருட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். நான் அந்தக் கண்ணீரைப் பார்த்துவிடக் கூடாதாம்.  அந்த சுண்டவத்தல் நினைவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துவிட்டேன். ஆனால் அன்று என்னோடு இருந்த அம்மா, அக்கா, அத்தம்மா எல்லாரும் அறந்தாங்கி மண்ணுக்கே தங்களைக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விட்டார்கள். சிலந்திப்பூச்சிக்குள்ள காதல் எந்த மனிதனும் நினைத்துப் பார்க்க முடியாத காதல். தாம்பத்யம் முடிந்ததும் ஆண் சிலந்தியைப் பெண் சிலந்தி தின்றுவிடுமாம். தன் காதலிக்கு உணவாக தன் உடம்பைக் கொடுத்து சந்தோஷமாய் உயிரைவிடுமாம் ஆண் சிலந்தி. சிங்கப்பூர் மண்ணில் என் வம்சம் விரிந்துவிட்டது. எல்லாரும் இங்கே நிம்மதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என் மண்ணின் பெருமை புரியாது. நான் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஒரு ஆண் சிலந்தியாக. நான் பிறந்த மண்ணே, என் பெண் சிலந்தியே கொஞ்சம் பொறு விரைவில் வந்துவிடுகிறேன்.

அட! எங்கெங்கோ பறந்துவிட்டேன். பொழுது விடிந்துவிட்டது. இதோ எனக்கு முன்னால் கஞ்சிக்குண்டான், சுண்ட வத்தல். காப்பிக் கொட்டை நிறத்தில் வெள்ளை வானில் கருப்பு நட்சத்திரங்களாய்  சுற்றிச் சுற்றி வருகிறது. தேவாமிர்தம் தேவாமிர்தம்னு சொல்றாங்களே அது இதேதான்.இது மட்டும்தான்.

யூசுப் ராவுத்தர் ரஜித் 

Series Navigation‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம்விழித்தெழுக என் தேசம் – கவிதை நூல் வெளியீடு
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

  1. Avatar
    S.Kandaswamy says:

    Very touching. Truly enjoyed your content and writing style. Reminiscing is always a pleasure. Your dream will happen at the right time. Thanks for sharing. Happy New Year to you and your family.

Leave a Reply to S.Kandaswamy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *