சுந்தரி காண்டம் 8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி

0
ஒரு அறுபது வருடங்களுக்கு முன்னர் மாம்பலம் என்றழைக்கப்பட்டதெல்லாம் இப்போது பழைய மாம்பலம் என்று அழைக்கப்படும் மேற்கு மாம்பலம்தான். இன்று ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யும் உஸ்மான் சாலை அப்போது நாய் நரிகள் ஓடும் புதர் காடாக இருந்ததாக ஏரியா பெருசுகள் சொல்லக் கேள்வி. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் ஓரளவு முன்னேற்றம் வந்து விட்டது தி. நகருக்கு. புதிதாக பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின் சந்தடிகள் கூட ஆரம்பித்தன. மேடலி சாலையில் இருந்து பிரியும் கில்ட் சாலையில் இடது பக்கமாக ஒரு முட்டு சந்து பிரியும். அங்கு வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே உள்ள குடும்பங்கள் சில உண்டு. அங்கு இருந்த குடும்பங்களில் பிராம்மண குடும்பங்களும் உண்டு. அப்படிப்பட்ட குடும்பம் ஒன்றில் பிறந்தவள் தான் பத்மலோசனி. பின்னாளில் லோசனை எடுத்துவிட்டு பத்மினி என்றே அவள் போட்டுக்கொண்டாள்.

பத்மா கொஞ்சம் கவர்ச்சியான முகம் கொண்டவள். கூரிய மூக்கும் குவிந்த உதடுகளும் அவள் முகத்தை இன்னும் எடுப்பாக்கியது. இதெல்லாம் அவள் வாயைத் திறக்கும் வரைதான். அவள் பல் வரிசை அவ்வளவு வரிசையில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக பற்கள் ஏறுமாறாக இருக்கும். அதை அவள் அறிந்தே இருந்தாள். அதனால் வாய் விட்டு சிரிப்பதேயில்லை. எல்லோர்க்கும் புன்னகைதான். அது அந்தக் காலத்தில் ஒரு மோனோலிசா புன்னகையைப் போல் பார்ப்பவரை எல்லாம் மயக்கியது.

பத்மாவிடம் எத்தனை தாவணிகள் இருந்தது என்று யாருக்கும் தெரியாது. அவள் எப்போதும் ஒரு வெங்காயக் கலர் சருகு தாவணியே அணிந்திருப்பாள். அதுதான் லேசான காற்றில் கூட படபடத்து அவளது முன்னழகைக் காட்டும். அவள் ஒன்றும் பெருந்தனக்காரியில்லை. ஆனாலும் அவளது சிறிய முலைகள் ஷார்ப்பாக இருக்கும். இருக்கும்படி அவள் வைத்திருப்பாள். வாசனைத்தூள் டப்பியில் வைக்கப்பட்டிருக்கும் கூரான குப்பியை அவள் ஜாக்கெட்டில் வைத்து தைத்திருப்பதாகவும், அவளுக்கு இயற்கையிலேயே கூர் கிடையாது என்றும் ஒரு பட்டி மன்றமே நடந்தது அந்நாளில்.

பத்மா எப்போதும் பனிரெண்டு மணி உச்சி வெயிலில் சிரமம் பாராது வெளியில் சுற்றுவாள். அதனாலெல்லாம் அவள் மேனி கறுத்து விடப் போவதில்லை என்பதை அவள் அறிவாள். ஏனென்றால் அவள் ஏற்கனவே நல்ல கறுப்பு. இன்னும் கறுக்க என்ன இருக்கு?

பத்மா அஞ்சா நெஞ்சினள். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் அவளது ஷ்பெஷாலிட்டி. அவள் பார்வையைத் தாங்க முடியாமல் பல பையன்கள் கண்களைத் தாழ்த்திக் கொண்டதுதான் அநேகமாக நடக்கும். சில கௌரவர்கள் பார்வையைத் தாழ்த்தாமல் வானத்தை நோக்கி திருப்பி விட்டு சூரியன் ஒளி தாங்காமல் குனிவதாகப் பாவ்லா காட்டுவார்கள்.

இந்திப் படம் ஒன்றில் ஷர்மிளா டாகுர் என்ற நடிகை விமானத்தில் போகும் காட்சியில் கழுத்தில் இருக்கும் மெல்லிய தங்கச் செயினைக் கடிப்பது போன்ற காட்சி பெரும் வரவேற்பைப் பெற்ற கால கட்டம் அது. அதற்காகவே பல முறை படம் பார்த்த இளைஞர்கள் அக்காலத்தில் உண்டு. பத்மாவும் மெல்லிய செயின் ஒன்று கழுத்தில் அணிந்திருப்பாள். அது கவரிங் என்பது விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். அதை எடுத்து லேசாக பல்லில் கடித்தபடியே உச்சி வெயிலில் அவள் அசைந்து வருவதைப் பார்ப்பதற்காகவே பலர் சந்து முனையில் தவமிருப்பார்கள். கவரிங் செயினைக் கடிப்பதே கவ்ரிங்குக்குத் தான் என்பதை அவர்கள் அறிந்தவர்களில்லை.

பத்மாவின் குடும்பம் என்னவோ கவுரவமான குடும்பம்தான். ஆனால் அவளது தந்தையார் சிவா விஷ்ணு கோயில் வாசலில் தர்ப்பை விற்று கொண்டு வரும் சொற்ப வருமானம் பத்மாவின் கற்பனைகளுக்கு ஒத்து வரவில்லை. மாவு மிஷின் போகவும், நாலணா எட்டணாவிற்கு மளிகை சாமான்கள் வாங்கவும் பத்மா கடைக்கு வரும்போது பையன் கூடவே வருவார்கள். வாசற்படி தாண்டும்வரை இழுத்து போர்த்திக் கொண்டு வரும் அவள் தெருமுனை வரும் முன் தாவணியை இறுக்கி இடுப்பைச் சுற்றி செருகிக் கொள்வாள். அவளது ஜாக்கெட்டின் உள்புறம் ஒரு கசங்கிய பத்து ரூபாய் நோட்டு இருக்கும். அதை இரண்டு விரலால் எடுக்க அவள் வெகு பிரயத்தனப்படுவாள். அப்போது விலகும் தாவணியைக் குறிவைத்து பல ஜோடிக் கண்கள் காத்திருக்கும்.

சிரமப்பட்டு எடுக்கும் பத்து ரூபாய் தாளை ஒரு சிகரெட்டைப் போல் சுருட்டி கையில் வைத்துக் கொண்டு அவள் கடைக்குப் போவாள். வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிய பின் நோட்டை நீட்டுவாள். வழக்கம்போல கடைக்காரர் சில்லறை இல்லை என்று மறுக்கும்போது அவள் பரிதாபமாக சுற்றும் முற்றும் பார்த்து விழிப்பாள். பையன்களின் கைகள் தங்கள் பாக்கெட்டுகளில் சில்லறைகளைத் தேடும். முந்திக் கொண்டவன் டப்பென்று சில்லறையை கடைக்காரர் கல்லா மேல் வைத்துவிட்டு பத்மாவைப் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பாள். பத்மாவும் தன் மோனோலிசா புன்னகையைத் தவழ விட்டு நகர்வாள். வீடு சேர்வதற்குள் பத்து ரூபாய் தாள் பழைய இடத்திற்குப் போயிருக்கும். அம்மா கொடுத்த சில்லறை சுருக்குப் பையில் சேர்ந்து இடுப்பில் செருகப்பட்டிருக்கும். இப்படி கொஞ்ச கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில்தான் அவள் லிப்ஸ்டிக் வாங்குகிறாள். ஸ்னோ வாங்குகிறாள். பவுடர் வாங்குகிறாள்.

கொஞ்சம் வளர்ந்தவுடன் பத்மா அம்மா துணையுடன் மகாலட்சுமி தெருவில் ஐயங்கார் மெஸ் ஆரம்பித்தாள். இன்றைய திராவிடக் கட்சியின் இரண்டாம் நிலை முன்னிலை தலைவர்களில் ஒருவர் தினமும் அங்கே ஆஜர். பின்னாளில் நடிகர் மோகன் நடித்த வெற்றிப் படம் ஒன்றில் கதாநாயகிக்கு இணையான தோழி பாத்திரத்தில் அவள் நடிக்க காரணம் அவர்தான். எல்லாம் பழைய மோர்க்குழம்பு விஸ்வாசம்.

பத்மாவின் வாழ்வில் திருப்பம் வேறொரு ரூபத்தில் வந்தது. பிரபல இயக்குனராக இருந்து பல வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்து பின்னாளில் நகைச்சுவை நடிகராக மாறிப்போய்விட்ட ஒருவர் அவளைத் திருமணம் செய்து கொண்டார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதனால் ஊரறிய அவரது மனைவி என்று அவளால் சொல்லிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவள் ஆசைப்பட்ட வசதிகள் எல்லாம் அவர் அவளுக்குச் செய்து கொடுத்தார். கொடியிடையுடன் இருந்த அவள் காலப்போக்கில் பக்கவாட்டில் பெருத்து போனாள். அதனாலேயே இயக்குனருக்கு அவளிடம் இருந்த மயக்கம் குறைந்து போனது. ஆனாலும் பத்மா உஷார் பேர்வழி. உடம்பு பெருக்கும் முன்பே தன் நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொண்டாள். மூன்று நான்கு குடித்தனங்களைக் கொண்ட ஒரு வீட்டை தன் பெயருக்கு வாங்கிக் கொண்டாள். இன்றும் அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அம்மாவும் அப்பாவும் இறந்து போய் அவளுக்கும் வாரிசு இல்லாமல் தனிமரமாக அவள் இருக்கிறாள். இப்போதெல்லாம் அவள் லிப்ஸ்டிக்கோ, ஸ்நோவோ, பவுடரோ போடுவதில்லை. வசதி பெருகியதாலும் ஏசி அறையிலும் காரிலும் வாசம் செய்வதாலும் அவள் இப்போது மாநிறமாக இருக்கிறாள்.

அவள் வீட்டு வரவேற்பறையில் விலை உயர்ந்த கலைப் பொருட்களுக்கு மத்தியில் நல்ல வெள்ளி ப்ரேம் போட்ட சட்டத்துக்குள்ளே கசங்கிய பத்து ரூபாய் நோட்டு ஒன்று சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது.



Series Navigationஅவன், அவள். அது…! -4ஊற்றமுடையாய்