சுறாக்களின் எதிர்காலம்

This entry is part 1 of 7 in the series 25 டிசம்பர் 2022

நடேசன்.

ஆஸ்திரேலியா – சிட்னி நகரின் கிழக்குப் பகுதியான கூஜி ( Coogee ) கடற்கரையில் 1935 ஆம் ஆண்டு  பெரிய சுறா ஒன்று  உயிருடன் பிடிபட்டது.  அதை  சிட்னியிலுள்ள  மீன்கள் வளர்க்கும் அகுவாரியம் (Aquarium) நீர்த் தொட்டியில்  விட்டனர்.  ஒரு கிழமையின் பின்பு அந்த சுறா மீன்  மனிதனின் முன் கையை வாந்தி எடுத்தது.  அந்தக் கையில் பிரத்தியேகமான பச்சை (Tattoo) குத்தப்படியிருந்து. அதிர்ச்சியடைந்த  அகுவாரியத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டதும் விசாரணை  ஆரம்பமானது .

அந்தக் கையின்  விரலின் ரேகை அடையாளம் மற்றும் அந்த பிரத்தியேகமான பச்சை குத்தலை  வைத்து காவல்துறை விசாரணையில் ஈடுபட்டபோது,   அந்தக்  கைக்குரியவர்    சிட்னியைச் சேர்ந்த சிமித் எனவும்,   அவர்  போதை வஸ்து கடத்தல்,  களவு,  கொலை போன்றவற்றில் ஈடுபட்டவர்  என்பதும், அத்தோடு ஏற்கனவே காவல்துறையால் தேடப்பட்டவர் என்பதும் அந்தப் புலன் ஆய்வில்  தெரியவந்தது.  

சிமித்தின் கொலை சிட்னியிலிருந்த  கொலை,   மற்றும் போதை வஸ்துக் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்தவர்களால் செய்யப்பட்டது என காவல்துறை கருதினாலும் மேலதிக ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் விசாரணையின் முடிவில் எவரும் கைதாகவில்லை. 

சிமித்தின் கொலையைச் செய்தவர்கள்  கிடைக்காதது மட்டுமல்லாமல்,   பிடிக்கப்பட்ட அந்த சுறாவும்  உடற்கூற்று பரிசோதனைக்காகக் கொலை செய்யப்பட்டது. 

இந்தச்  சம்பவத்தை ஏன் சொல்கிறேன் என்றால்,  சுறாக்கள் மனித உடலை மட்டுமல்ல,  வாகனத்தின்  இலக்கத் தகடு,   இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்  முதலான கடினமான எந்தப்  பொருட்களையும் பாரபட்சமற்று குழந்தைகள் வாயில் பொருட்களை வைத்து விழுங்குவதுபோல் இலகுவில் விழுங்கிக்கொள்ளும். கடலில் நாமெறியும் எந்த பொருட்களும் சுறாக்களினால் விழுங்கப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

நாம் வாழும் பூமி உருவாகிய காலத்திலிருந்து ஐந்து முறை சேதனப்பொருட்கள் (Bio mass) எல்லாம் அழிந்து மீண்டும் உருவாகியவை. மூன்று தடவைகள்  புவி அழிவிற்குக் காரணமாக இருந்தவை  சீதோசண மாறுபாடுகள்.   இறுதியாக வான் கற்களிலான  அழிவிலிருந்து டைனோசர் போன்ற  மிருகங்கள் உட்பட 90 வீதமானவை அழிந்துபோகச் சுறாக்கள் தப்பிப் பிழைத்தன.

சுறாக்கள் பரிணாம வளர்ச்சியில் டைனோசர்களுக்கு  முந்தியவை. 450 மில்லியன் வருடங்கள் முன்பு தோன்றியவை.  ஆரம்பத்தில் மற்றைய மீன்கள்போல் எலும்பாலான உடல் ஆரம்பத்தில் அவைக்கிருந்தாலும் பின்பு  மிதப்பதற்கும் இலகுவாக எடையற்று, நீந்துவதற்கும் வசதியாகக் குருத்தெலும்பு அல்லது கசியிழையம்  (cartilage) என மாறுபாடடைந்தது. 

பல்வேறு  காலநிலைக்கேற்ப இயற்கையில் தொடர்ந்து மாற்றமடைந்து இந்த புவியில் வாழும் 400 இற்கும்  மேற்பட்ட சுறா இனங்கள் தற்போது பல காரணங்களால் அழிந்துபோகும் நிலையில் உள்ளன. புவி வெப்பமாகுதல்,  சூழல் அசுத்தமாகுதல், கட்டுப்பாடற்ற மீன் பிடித்தல் என்பனவே  இதற்கு முக்கிய காரணிகள்.

தற்பொழுது மனிதர்களின் அக்கறையற்ற தன்மையால்  வெப்பமடைவதால் சுறாக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது . அவை மற்றைய மீன்களைப்  போலல்லாது தாமதமான  இனப்பெருக்க சக்கரத்தைக் கொண்டன. மற்றைய மீன்கள் பருவமடைந்து இனப்பெருக்கமாவதற்கு நான்கு அல்லது ஐந்து வருடங்கள் எடுக்கும்.  அத்துடன் அவை ஆயிரக்கணக்கான முட்டைகளைக் கடலின் ஓரங்களிலும் (Mangrove) மற்றும் பவளப் பாறைகளின் (Coral reefs) அருகேயும்  வருடத்திற்குப் பல தடவைகள்  வெளியேற்றும். 

இதனால்  அவைகளது இனப்பெருக்கம் நிச்சயமாகிறது. சுறாக்கள்  வளர்ந்து  பருவமடைவதற்கு இனத்திற்கு இனம் வேறுபட்டாலும்,  பல வருடங்கள் எடுக்கும் . உதாரணமாக பெரிய வெள்ளை சுறா பருவமடைய 26 – 30 வருடங்களாகிறது.  அத்துடன் 9-12 மாதங்கள் அவற்றின்  இனப்பெருக்க இடைவெளியாகும். .  

பெண் சுறாவின் உள்ளே,  குட்டி சுறா முலையூட்டிகள்போல் விருத்தியடைகிறது. அவற்றின் கர்ப்பகாலம் இனத்திற்கினம் மாறுபட்டாலும்  சராசரியாக ஒரு வருடக் கர்ப்பகாலம் எடுக்கிறது. 

குட்டிகளின் எண்ணிக்கை மாறுபட்டாலும்  அதிகமில்லை (2-135 :  சில வகை இரண்டு குட்டிகள்  மற்றைய இனம் 135 குட்டிகளை ஈனும்)   மற்றைய மீன்களை ஒப்பிடும்போது குறைவானது  உதாரணமாக சமன் போன்றவை  இலட்சக்கணக்கில் முட்டைகளை வெளித்தள்ளும்.  முக்கியமான விடயம் எல்லா சுறாக்களும் வருடா வருடம் இனப்பெருக்கமடைவதில்லை.

கிழக்காசிய நாடுகளில் சுறாக்களின் செட்டைகளாலான சூப் ருசியானதாகக் கருதப்படுகிறது.  இதனால் முக்கியமாக சீனர்களால் பிடிக்கப்படும்  சுறாக்கள்,  அவற்றின் சிறகுகள்  வெட்டப்பட்ட பின்னர்  மீண்டும் கடலில் விடப்படுகிறது.  அவை துடிதுடித்து இறக்கும்.  தற்காலத்தில் சீனாவே அதிக மீன் பிடிப்படகுகளை வைத்து   பரந்த கடலெங்கும்  மீன்களைப் பிடிக்கும் நாடாகக் கருதப்படுகிறது. சீனப்படகுகள்  தென் பசுபிக் , ஆபிரிக்கா மற்றும்  தென்னமெரிக்காவின் கரையோரங்கள் எங்கும் சென்று மீன் பிடிக்கின்றன.

 இதற்கப்பால்  இலங்கைப்  பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா பிரதேசத்தில் இழுவை வலைகளை வீசி  மீன் பிடிக்கும்போது  சிறிது பெரிது என்ற வித்தியாசமில்லாது மீன்கள் கடலிலிருந்து வழித்தெடுக்கப்படுகின்றது.   அத்துடன்   பவளப் ப்பாறைகளும்  அழிக்கப்படுகின்றன. 

 இப்படியான காரணங்களால் சுறாக்களுக்கு  ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவை  மீண்டு வர அதிக காலமெடுக்கும்.

மேற்கு நாடுகளில்  கடலில்  நீந்துபவர்களைச் சுறா தாக்குவதாகப் பயங்கரமான தலையங்கம் எழுதுவார்கள்.  தொலைக்காட்சியில்  காட்டுவார்கள்.  ஆனால்,    அங்கு உண்மை தெரிவதில்லை.  மறைக்கப்படுகிறது.   

 உண்மையில்  சுறாக்களின் தாக்குதலால் ஒரு வருடத்தில் சராசரி பத்துப் பேர் இறக்கிறார்கள் என்பதே உண்மை .  ஆனால், ஒரு வருடத்தில் எத்தனை மில்லியன் சுறாக்களை  நாம் அழிக்கிறோம்?  

சுறாக்களது  வாழ்விடங்களான பாறைகள் மற்றும் மன்குறோவ் எனப்படும் இடங்களில்  மனிதர்கள் அத்துமீறிச் செல்லும்பொழுது ஏற்படும் விபத்துகளே அல்லது  தற்காப்பிற்கான தாக்குதல்கள்  எனலாம். 

காட்டு மிருகங்களின் வாழ்விடங்களைத் தொடர்ந்து அழித்து வருவதுபோல் கடலையும் அழித்துவருகிறோம்.  எமது வாழ்விடங்களில் அத்துமீறியவர்களை எப்படிப் பார்ப்போம்?

அதே நேரத்தில் வரலாற்றில் சுறாக்களால் தாக்கப்பட்ட முக்கிய சம்பவம் ஒன்றுள்ளது. இரண்டாவது உலக மகாயுத்தக் காலத்தில்  சரியாகச் சொன்னால் 1945 ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் கப்பலொன்று ஜப்பானிய டோப்பிடோ எனப்படும் நீருக்கு கீழே தாக்கும் குண்டால்                   ( torpedo) தாக்கப்பட்டு மூழ்கியது . அதில் தப்பிய 900 கடற்படை வீரர்கள் கடலில் ஒன்றாக நான்கு நாட்கள்  உயிர் காக்கும் மிதவையில் மிதந்தபடியிருந்தபோது அதில்  பலர் சுறாக்களால் தாக்கப்படு இறந்தார்கள்.  அதில் 317 கடற்படையினர் மட்டுமே தப்பினார்கள்.

ஜோஸ் (JAWS- Novel by Peter Benchley)  என்ற நாவலை அடியொற்றி                  ஸ் ரீஃபன் ஸ்பில்பேக்  (Steven Spielberg) 1975 ஆம் ஆண்டு  எடுத்த திரைப்படம்,  பல  ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதுடன்  ஹொலிவுட் வரலாற்றில் அதிக பணத்தை வசூலாக்கிய திரைப்படமாகியது.  அந்த வசூல் பின்னர்     ஸ்ரார் வார் (Star war) திரைப்படத்தால் முறியடிக்கப்பட்டது  .  உலகெங்கும் சுறாக்கள்  மனிதர்களைத் தாக்குவதற்குக்  கடலில் காத்திருக்கும் கொடுமையான சாத்தன் என  வர்ணிக்கும் அளவுக்கு ஜோஸ் திரைப்படத்தின் தாக்கம் உலகமெங்கும் பரவியது.  சுறாக்கள் மீது  வெறுப்பையும் அச்சத்தையும் உருவாக்கியது. முக்கியமாக மனித மனங்களில் ட்ரகுலா (Dragula) போன்ற திரைப்படங்கள் கற்பனையை உருவாக்கியதுபோல்,  இந்த ஜோஸ் உருவாக்கிய மனச்சித்திரம் மிகவும் ஆழமானது. முக்கியமாக இளம் உள்ளங்களில் ஏற்படுத்திய பயம் கலந்த மாற்றம் பல சந்ததிகளுக்கு கடத்தப்பட்டு சுறாக்களுக்கெதிரான வெறுப்பை உருவாக்கியது. 

இந்துக்கள் பசுக்களைத் தெய்வமாக வழிபடுவதுபோல் பசுபிக்தீவுகளைச்  சேர்ந்த மக்கள் சுறாக்களைத் தெய்வமாக, தங்கள் மறைந்த மூதாதையரின் வழித் தோன்றலாக  வணங்குகிறார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்று புயலில் திசைமாறியவர்கள் மற்றும் தத்தளிப்பவர்களுக்குச் சுறாக்கள் வழிகாட்டி அவர்களைக் கரை சேர்க்கும் .  சில தீவுகளைச் சேர்ந்தவர்கள் சுறாக்களை உண்ணமாட்டார்கள். அது அவர்களது சமூகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.   சுறாக்களை  தமது முன்னோர்களாக நினைத்து கடற்கரையில் வந்து கூட்டமாகப் பாடுவார்கள் . பிஜித் தீவின் முதல் அதிபர்  இறந்தபோது அவரது உடலை  பல தீவுகளுக்கும்  மரக்கலங்களில் அந்த மக்கள்  மரியாதை செலுத்துவதற்குக் கொண்டு சென்றபோது,  அந்த மரக்கலங்களைத் தொடர்ந்து  சுறாக்கள் மிதந்தபடி  ஊர்வலமாகச் சென்றன என்று செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .

ஜப்பானியர்கள் மற்றும் நோடிக் (Nordic) நாடுகளில் மீனவர்கள்  பாரம்பரியமாக திமிங்கிலங்களை வேட்டையாடுகிறார்கள். தற்பொழுது   திமிங்கிலங்களைப் பாதுகாக்கப் பல நாடுகள் செயலில் இறங்கியுள்ளன. ஆனால்,  அது போன்ற செயற்பாடுகள் சுறாக்களுக்கு இல்லை. காரணம் சுறாக்கள் அருகி வருவது பலருக்கும்  தெரியாது .

சுறாக்களை நாம் ஏன் பாதுகாக்கவேண்டும் ?

சுறாக்கள் மிகவும் விருத்தியடைந்த புலன் உணர்வுகளைக் கொண்ட நீர் வாழ் உயிரினம்.  மிகவும் குறைந்த ஒலி அலைகளை அவற்றால் கேட்க முடியும் . மற்றைய மீன்களின் ஓசையை   ஒரு மைல் தூரத்திலிருந்தே அவற்றால் உணர முடியும்.  அதேபோல் நீரின் அதிர்வுகளையும்  அவற்றால் ஏற்படும் அழுத்தங்களையும் அவற்றால் கிரகிக்கமுடியும். அரை மைல் தூரத்திலே இருந்து இரத்தத்தின் மணத்தை அவற்றால்  முகர்ந்து கொள்ளமுடியும். சுறாக்களின் கண் பார்வை கூர்மையானது.  பூனைகளைப் போன்று சுறாக்களின்  கண்ணின் பின்பகுதி  (tapetum lucidum) இருளில் எதனையும்   பார்க்க உதவும்.

வனத்தில் புலிகள் முதன்மையான வேட்டை ஆடும் பிராணிகளாக                       ( Apex  Predator) இருப்பதால் அவை வனத்தில் சமநிலையைப் பேணுகின்றன. வனத்தில் மான்கள் பெருகினால் வனமே அழிந்துவிடும்.  இயற்கையின் சமநிலையைப் பேண புலி போன்ற வேட்டையாடும் மிருகங்கள் அவசியம்.  அதேபோல் கடலில் சுறாக்களே முக்கியமானவை. அவை மற்றைய மீன்களது எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் மூலம் பவளப்பாறைகளை பாதுகாப்பதுடன்   அல்கா எனும் நூண் பாசிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. 

மேலும்  பொதுவாக சுறாக்கள் மீது தவறான பார்வையே உள்ளது.  ஆனால்,     அருகி வரும் சுறாக்களை  எப்படிப் பாதுகாக்கலாம் என்பது தற்கால சமூகத்தின் மேல் வைக்கப்படும் கேள்வி. 

தற்பொழுது பலவு(  Palau,) மார்சல் தீவு (Marshal Island)  ,  பிரான்ஸ்,  பொலினீசியா ( French Polynesia)நியுகலிடோனியா(New Caledonia)   முதலான தென்பசிபிக் நாடுகளில்   தங்களது கடலில் சுறாக்களைப் பிடிப்பதை முற்றாகத் தடைசெய்திருக்கிறார்கள். சீனா அரசு அரச விருந்துகளில் சுறாவின் சிறகு கொண்ட சூப்  பரிமாறுவதைத் தடை செய்துள்ளது . 

அவுஸ்திரேலியா,  நியூசிலாந்து ,  இஸ்ரேல்   முதலான நாடுகள் வெள்ளை சுறாக்களை (Great white shark )  பிடிப்பதைத்  தடை செய்துள்ளன.   பல நாடுகள் இழுவை வலைகளைத் தடை செய்துள்ளன,

தனிமனிதர்களாக பிளாஸ்டிக்   போன்றவற்றைப் பாவிப்பதைக்  குறைப்பதும் முக்கியமானது.   அத்துடன் சுறாவை உண்பதைக் தவிர்ப்பதும் நல்ல விடயம். 

மனிதர்கள் இந்தப் புவியில் நிரந்தரமாகவோ அல்லது அவர்கள் மட்டுமோ வாழமுடியாது. இந்த உலகில் மற்றைய இனங்களையும் பாதுகாத்து வாழவேண்டியவன் என்ற பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்ணியமாகவும் நடக்க அறிவும் நமக்கு இயற்கையால்  தரப்பட்டுள்ளது. அதை நாம் புரிந்து கொண்டு நடக்கும் கடமைப்பாடும் உள்ளது. —

-0—

Series Navigationஇலக்கில்லாத இலக்கு
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *