சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது

This entry is part 3 of 14 in the series 26 மார்ச் 2017

 
குள்ளக்கோள்  புளுடோ 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++

புளுடோ வுக்கு மீண்டும்
சூரிய மண்டலக் கோள் மதிப்பீடு  !
பரிதியைச் சுற்றும் கோள்கள் மீண்டும்
ஒன்பது என்று மாறியது !
புதன் முதல் புளுட்டோ வரை
விதவிதப் பாறை, வாயுக் கோள்களில்
விலக்கப்  பட்டது புளுடோ !
நெப்டியூன் இறுதிக்கோள் என்பது மாறி
இப்போது மீண்டும் புளுடோ
ஒன்பதாம் கோள் தகுதி பெற்றது
அறிவிக்கப் பட்டது  !
குள்ளக் கோள் புளுடோ
கோளாய் உயர்நிலை பெறும் !
வடிவத்தில் புதன் கோளுக்குப்
பாதி விட்டம்  !
எட்டுக் கோள்கள் பரிதியை ஒரே
மட்டத்தில்
சுற்றறி வரும் போது
குள்ளக் கோள் புளுடோ
கோணச் சாய்வு  நீள்வட்டத்தில்
சுற்றி வரும்  தனித்து!

+++++++++++++++

“நான் கெஞ்சிக் கேட்கிறேன் : (பரிதிக்கு) எத்தனைக் கோள்கள் உள்ளன வென்று உறுதியாகக் காரணங்கள் கூற முடியாதா உங்களுக்கு ?  (இப்போது) அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது . . !”

ஜொஹான்னெஸ் கெப்ளர் (1571-1630)

ஒன்றை மட்டும் உறுதி செய்வேன்.  ஒப்பில்லா எந்த ஓர் விஞ்ஞான ஆணையகம் செப்பியதற்கும் மாறாக, புளுடோ ஒரு கோள் தகுதி கொண்டது நான் சொல்கிறேன்.  அதுபோல் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவும், பூமியின் நிலவும்  கோள்களே.

கிர்பி ருனியான்  [Scientist, Johns Hopkins University] 

புளுடோவின்  சாய்வு நீள்வட்டச் சுற்றுப்பாதை
[சிவப்பு நிறத்தில்]
2006 இல் புகழ்பெற்ற அகிலநாட்டு வானியல் கூட்டகம்  [International Astronomical Union (IAU)] புளுடோவின் கோள் தகுதியை நீக்கி, சூரிய குடும்பக் கோள்கள் ஒன்பதிலிருந்து எட்டான விளக்கம் அனுமதி பெற்றாலும்,  அந்த மாற்ற முடிவும் விஞ்ஞானத் தர்க்கத்துக்குள் மாட்டிக் கொண்டது.  அது பொருளற்ற முடிவென்று, புளுடோவைப் பற்றிச் சாதமாக, அடுத்த வார [மார்ச்சு 21, 2017] வானியல் பேருரையில் மாற்றி அறிவிக்கப் போகிறேன்.

கிர்பி ருனியான்  [Scientist, Johns Hopkins University] 

பனிப்பாறைக் கோள் புளுடோ பரிதியின் ஒன்பது கோள்களில் சிறியது. நமது நிலவில் முக்கால் அளவு விட்டம்.  ஆயினும் அதன் மேற்தளத்தில் நிகழ்பவை யாவும் கோளைச் சார்ந்த குணப்பாடை ஒத்தவை.  கோளுக்கு மாறாக எதுவும் புளுடோவுக்கு இல்லை.
கிர்பி ருனியான்  [Scientist, Johns Hopkins University] 

+++++++++++++++

புறக்கோள் புளுடோவுக்கு மீண்டும் சூரிய மண்டலக் கோள் தகுதி

2006 ஆம் ஆண்டில் அகிலநாட்டு வானியல் பேரவை விஞ்ஞானிகள் [International Astronomical Union (IAU)] கூடிக் குள்ளக்கோள் புளுடோ, சூரிய மண்டலக் கோள் தகுதி பெறாது என்று  முடிவு செய்தது, தற்போது 2017 மார்ச்சில் தர்க்கத்துள் சிக்கியுள்ளது.  அதாவது சூரிய மண்டலக் கோள்கள் எட்டு, ஒன்பது அல்ல என்னும் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப் படவில்லை, இப்போது.  புகழ்பெற்ற விஞ்ஞானப் பேரவை கூற்றுக்கு மாறாகப் பரிதியின் புறக்கோள் புளுடோ சூரிய மண்டலக் கோள் தகுதி பெற்றது என்று உறுதியாகச் சொல்கிறார், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கிர்பி ருனியான் [Kirby Runyon].  நமது  பூமியைப் போல் புளுடோவும் ஒரு கோள், அடுத்து பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவும் ஒரு கோள், பூமியின் நிலவும் ஒரு கோள், அவைபோல் சூரிய மண்டலத்தில் மறுக்கப்பட்டுள்ள 100 மேற்பட்ட அண்டங்களும் கோள்களே என்று வெகு அழுத்தமுடன் கூறுகிறார், கிர்பி ருனியான்.

சமீபத்தில் நாசாவின் தொடுவான் விண்ணுளவி [New Horizon Space Probe] புளுடோவை 8000 மைல் தூரத்தில் நெருங்கிப் பற்பல புதிய தகவலை அனுப்பியுள்ளது.  புறக்கோள் புளுடோ நமது பூமியிலிருந்து சுமார் 4.67 பில்லியன் மைல் தூரத்தில் உள்ளது.  அந்தக் கோளுக்குப் புதியதாக ஒரு விளக்கமும், அதற்கு நியாயப்பாடும் அளிக்கிறார் கிர்பி ருனியான்.  அவரது தலைமைக்குக் கீழ் ஐந்து அகில நாட்டு விஞ்ஞானிகள் ஒப்புமை தந்து இப்போது அந்தக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

  1. அலன் ஸ்டெர்ன் & கெல்ஸி சிங்கர் [Southwest Research Institute, Boulder, Colarado]
  2. டாட் லௌவர் [National Optical Astronomy Observatory, Tucson, Arizona ]
  3. வில்லியம் கிரண்டி [Lowell Observatory, Flagstaff, Arizona]
  4. மைக்கேல் சம்மர்ஸ் [George Mason University, Fairfax, Virginia]

அந்தக் கூட்டறிக்கை 2017 மார்ச் 21 இல் நடக்கும் நிலவு & கோள் விஞ்ஞானப் பேரரங்கில்  [Lunar & Planetary Science Conference] வெளியாகப் போகிறது.  கிர்பி ருனியான் தர்க்க வினாக்களுக்குப் பதிலும் கூறுவார்.

++++++++++++++

 

பூமியும் மற்ற எல்லாக் கோள்களும் தம்தம் இடங்களில் தங்கி இருக்க வேண்டும் என்பதும், பிரளயம் ஏற்படாத வரை அவை இருப்பிடத்தி லிருந்து மாறிச் செல்லா என்பதும் இயற்கை நியதி !

அரிஸ்டாட்டில் (கி.மு. 382-322)

“இப்போது நான் குள்ளிக் கோள் புளுடோவைக் (Dwarf Planet Pluto) கண்டுபிடித்த விஞ்ஞானியின் மனைவி”

பாட்ரீஷியா, புளுடோவைக் கண்டுபிடித்த டாம் டாம்பாஹின் மனைவி (2006)

பரிதியின் கோள்கள் வெவ்வேறு கட்டங்களில் விருத்தியான போது, பூமியை வடித்த ஒரே மாதிரி விசைகளால் அவையும் செதுக்கப்பட்டன.  ஆதலால் ஒரே மாதிரி தள வடிவமைப்பு, உயிரினத் தோற்றம், நமது கடந்த காலம், எதிர்காலம் அவற்றிலும் நிகழலாம் !

அமெரிக்க ராக்கெட் விஞ்ஞானி ராபர்ட் கோடார்டு (1882-1945)

புளுடோவின் நிகழ் காலம் இறந்த காலமானது !

1930 ஆம் ஆண்டு புளுடோ கண்டுபிடிக்கப் பட்ட காலம் முதலே அது பரிதி மண்டலத்தின் ஓர் அண்டக் கோள் என்னும் கருத்தில் அடிப்படை ஐயப்பாடுகள் விஞ்ஞானிகளிடையே எழுந்தன !  2006 ஆம் ஆண்டில் புளுடோ உலக விஞ்ஞானிகளால் பரிதிக் குடும்பத்திலிருந்து நீக்கப் பட்டு, புதிய கோள் குழுவில் ஒன்றாகக் “குள்ளிக் கோள்” (Dwarf Planet) என்று அழைக்கப் படுகிறது !  ஒன்பதாவது கோள் புளுடோவை முதன்முதல் கண்டுபிடித்த வானியல் நிபுணர் கிளைடு டாம்பாஹ் (Clyde Tombaugh) தனது 90 ஆவது வயதில் (1997) காலமானார்.  அவரை எரித்த சாம்பலைப் “புதிய தொடுவானம் விண்ணுளவியில்” (New Horizon Space Probe) வைத்து விண்வெளி எங்கும் நாசா விஞ்ஞானிகள் தூவினர்.  2015 இல் திட்டப்படிப் புதிய தொடுவானம் விண்கப்பல் பயணம் செய்து, புளுடோவை உளவுவதற்கு முன்னமே புளுடோ பரிதி மண்டலத்தின் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது குறித்து மிகவும் மனமுடைகிறார் 93 வயதான அவரது விதவை மனைவி பெட்ரீஷியா (Patricia) !  “இப்போது நான் குள்ளிக் கோள் புளுடோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் மனைவி” என்று தனது பெயர் தாழ்ந்து போய் விட்டதென்று அவர் கலங்குகிறார் !

புளுடோ ஏன் பரிதி குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டது ?

2006 ஆம் ஆண்டில் உலக வானியல் விஞ்ஞானிகள் [International Astronomical Union (IAU)] பிரேகில் (Prague) ஒன்றுகூடி, புளுடோ அண்டக் கோள்களின் பண்பாட்டு நிலையை ஒத்திருக்க வில்லை என்று முடிவு செய்து அதைப் பரிதிக் குடும்பத்திலிருந்து நீக்கி விட்டார்கள்.  பிறகு அதைக் கோளின் மதிப்பு நிலையிலிருந்து தாழ்த்திக் “குள்ளிக் கோள்” (Dwarf Planet) என்னும் புதிய குழுவில் தள்ளினார்கள் !  1992 இல் கியூபெர் வளையத்துக் கோள் (Kuiper Belt Object) ஒன்றைக் கண்டுபிடித்த பிறகு, டேவிட் ஜெவிட், ஜேன் லு (David Jewitt & Jame Luu) மற்றும் சில வானியல் நிபுணர்கள், வளையத்துக்கு அருகிலே சூரிய மண்டலத்தில் ஏராளமான புதிய அண்டக் குள்ளிகளைக் (70,000 Small Planet Bodies) கண்டார்கள். அவற்றில் எரிந்து போன வால்மீன்கள், விண்கற்கள் நெப்டியூன் கோளுக்கு அப்பால் பரிதியிலிருந்து 2.8-4.5 பில்லியன் மைல் தூரத்தில் இருப்பதை நோக்கினார்கள் !  அத்தகைய புதிய கோள் குள்ளிகளைக் கியூபெர் வளையத்தில் கண்டுபிடித்தது விஞ்ஞானிகளுக்குக் கோள்களைப் பற்றிய புதியதோர் கருத்தை உருவாக்கியது.

புதிய கண்ணோட்டத்தில் கோள்கள் என விஞ்ஞானிகள் குறிப்பிடுபவை எவை ?  2006 இல் பிரேகில் கூடிய உலக வானியல் விஞ்ஞானிகள் கோளுக்கு ஒரு புதிய குறிவிளக்கம் (Definition of a Planet) தந்தனர்.

முதன்முறை வந்த குறிவிளக்கம் :

முதலாவது : கோள் என்பது விண்வெளியில் ஒரு விண்மீனைச் சுற்றி வருவது.  அது விண்மீனும் இல்லை.  வேறு ஒரு கோளின் துணைக்கோளும் இல்லை.

இரண்டாவது : அதன் நிறை முழுவதும் ஈர்ப்பாற்றலால் இழுத்துச் சுருக்கப் பட்டுக் கோளமாய் உருட்டி யிருக்க வேண்டும்.

மூன்றாவது :  அதன் வடிவம் பெரிதாக இருந்து சுற்றுவீதியில் எதுமில்லாது விலக்கப் பட்டிருக்க வேண்டும்.

கோள் குறிவிளக்கம் தர்க்கத்துக்குள் சிக்கியது !

உலக விஞ்ஞானிகள் பலர் முடிவு செய்த குறிவிளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத விஞ்ஞானிகள் சிலர் இருக்கிறார்கள்.  நாசாவின் “புதிய தொடுவான் விண்ணுளவிக் குறிப்பணியின் தலைவர் (New Horizon Space Probe Mission Leader) அலன் ஸ்டெர்ன் (Alan Stern) IAU விஞ்ஞானிகள் கூறிய மூன்றாவது விளக்கம் தவறு என்று சொல்கிறார்.  ஆகவே மூன்றாவது விளக்கம் தர்க்கமுள்ளதாக ஆகிவிட்டது. எப்படி ?  பூமி, செவ்வாய், வியாழக் கோள், நெப்டியூன் ஆகிய நான்கும் மூன்றாவது விதிக்கு முரணாக உள்ளன.  அந்த நான்கு கோள்களைச் சுற்றிலும் உள்ள தளப் பாதைகளில் எண்ணற்ற விண்கற்களின் குறுக்கீடுகள் உள்ளதால் கோள்கள் எனப்படும் குறிவிளக்கத்திற்கு அவை முரண் படுகின்றன என்று அலன் ஸ்டெர்ன் போல் எதிர்ப்பவரும் சிலர் இருக்கிறார்கள்.  பின்னால் IAU விஞ்ஞானிகளின் குறிவிளக்கத்துக்கு மேம்பட்ட செம்மை விளக்கமும் வெளிவந்தது.

மேம்பட்ட குறிவிளக்கம் :

1.  விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவது கோள்.

2.  பெரிதாக உருண்டை வடிவில் இருப்பது கோள்.

3.  அது பழுப்புக் குள்ளிபோல் (Brown Dwarf) ஆகப் பெரிதாக இருக்கக் கூடாது.  13-75 மடங்கு நிறையுள்ள வியாழக் கோள் அல்லது விண்மீன் போல “தவறிய விண்மீனாக (Failed Star) இருக்கக் கூடாது.

கோள்களின் குறிவிளக்கம் எதிர்காலத்தில் நுட்பமாக இன்னும் செம்மைப் படலாம் அல்லது மாறலாம்.  21 ஆம் நூற்றாண்டு புதுக் குறிவிளக்கப்படி மைய நிறையுடைய பரிதியை எட்டுக் கோள்களும், நான்கு குள்ளிக் கோள்களும், மற்றும் எண்ணற்ற சிறு அண்டங்களும் (Small Bodies) சுற்றி வருகின்றன !

புளுடோவின் நீள்வட்டக் கோணச் சுற்றுவீதி !

பரிதியைச் சுற்றுவரும் புளுடோவின் நீள்வட்டச் சுற்றுவீதி மட்டும் மற்ற கோள்களின் சீர் மட்ட வீதிகள் போலின்றி 17 டிகிரிக் கோணத்தில் சாய்ந்துள்ளது.  மேலும் அதன் சுற்று வீதி நெப்டியூன் சுற்றுவீதியைத் தனித்துவ நிலையில் இரண்டு இடங்களில் வெட்டிக் குறுக்கிடுகிறது !  மேலும் புளுடோவின் நீள்வட்ட வீதி கியூபெர் வளையத்தை ஊடுருவிச் சென்று மீள்கிறது.  நெப்டியூனும், புளுடோவும் தம் பாதைகளில் சுற்றிவரும் போது எப்போதாவது இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கும் தருணத்தில் புளுடோ நெப்டியூனில் மோதித் தகர்ந்து போய் விடலாம்.  அல்லது நெப்டியூன் ஈர்ப்பு மண்டலத்தில் புளுடோ சிக்கிக் கொண்டு, நிரந்தரமாய் அதன் துணைக்கோளாகி விடலாம் !  அத்தகையதோர் விந்தைக் காட்சி எப்போது நிகழும் என்று கணனி மூலம் நுட்பமாகக் காலத்தைக் கண்டு விடலாம் !

ஒளிநிறப் பட்டை ஆய்வில் [Spectroscopic Analysis] புளுடோவில் எந்த வித வாயும் இருப்பதாக அறிய முடிய வில்லை. புளுடோவின் வாயு அழுத்தம் மிக மிக பலவீன மானது. காரணம், புளுடோ மண்டலத்தின் கடும் குளிரில் [-230 டிகிரி C] ஹைடிரஜன், ஹீலியம் தவிர மற்ற எல்லா வாயுக்களும் குளிர்த் திரவமாகும்; அல்லது தணிவு [Liquefied or Frozen] நிலை பெறும்! புளுடோ வலுவற்ற ஈர்ப்பு சக்தி கொண்டுள்ளதால், தணிவாகாத வாயுக்கள் விண்வெளியில் பறந்து போய்விடும்! புளுடோ ஒரு காலத்தில் நெப்டியூன் கோளுக்குச் சந்திரனாய் இருந்து, ஓடுகாலித் துணைக் கோளாய்த் [Runaway Satellite] தன்னை விடுவித்துக் கொண்டு பின்னல் பிரிந்திருக்கக் கூடும் என்று எண்ணப் படுகிறது!

சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

சூரிய குடும்பத்திலே மிகச் சிறிய புறக்கோள் புளுடோ!

இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இரண்டு புறக்கோள்களில் [Outer Planets] ஒன்று, புளுடோ. மற்றொன்று அதைச் சுற்றி வரும் அதன் துணைக்கோள், சாரன் (Charon). இரண்டும் விண்வெளியில் வெகு தூரத்தில் மிகவும் மங்கிப்போய் தெரியும் கோள்கள். சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளான புளுடோவை, அமெரிக்க வானியல் விஞ்ஞானி, கிளைடு டாம்பாக் [Clyde Tombaugh] 1930 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். ரோமானியக் ‘கீழுலகக் கடவுள்’ [God of the Underworld] புளுடோவின் பெயரால், புதுக் கோள் பெயரிடப் பட்டது.

நெப்டியூன் கண்டுபிடிக்கப் பட்டதுபோல், புளுடோவும் வானியல் கணித முறைப்படி ஊகித்துக் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு கோள்!  நெப்டியூன் சுற்றி வரும் வீதி, எதிர்பார்த்த பாதை போல் இல்லாமல் புதிராக இருந்தது! இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [1905-1916] அமெரிக்க வானியல் விஞ்ஞானிகள், பெர்ஸிவல் லோவெல் [Percival Lowell], வில்லியம் பிக்கரிங் [William Pickering] இருவரும், ஒளிந்து கொண்டுள்ள ஏதோ ஒரு புறக்கோள் பாதைத் திரிபு [Straying from the Path] செய்து வருகிறது, என்று உறுதியாக நம்பினார்கள்! அந்த நம்பிக்கையில் ஜமெய்கா மண்டவில் நோக்ககத்தில் [Observatory Mandeville, Jamaica] பிக்கரிங், புதுக் கோள் இருப்பிடத்தைக் கணித்துக், குறிப்பிட்ட விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தேடினார். அதே போல் லோவெல், பிளாக்ஸ்டாஃப், அரிஸோனா நோக்ககத்தில் [Observatory Flagstaff, Arizona] முயன்றார். பல வருடங்கள் தேடியும், இரண்டு விஞ்ஞானிகளும் புதுக்கோளைக் கண்டு பிடிக்க முடியவில்லை!

இருவரும் காலஞ் சென்றபின், 1930 இல் அவரது கணிதக் குறிப்புக்களைப் பயன்படுத்தி ஓரிளைய வானியல் விஞ்ஞானி கிளைடு டாம்பாஹ் [Clyde Tombaugh], தனது புதிய தொலை நோக்கி மூலம், பல இரவுகள் தொடர்ந்து வானத்தை வேட்டையாடிக் களைத்துக் கடைசியில் [Feb 18, 1930] புதிர்க் கோளைக் கண்டு பிடித்தார். ஆனால் சில நாட்கள் பொறுத்து லோவெல் பிறந்த நாளன்று, 1930 மார்ச் 13 இல் புதுக்கோள் புளுடோ கண்டு பிடிப்பை உலகுக்கு அறிவித்தார்.

புளுடோவைப் பற்றிய வானியல் தகவல்

புளுடோவின் துணைக்கோள் சாரன் [Charon] 1977 இல் கண்டு பிடிக்கப் பட்டது. புளுடோவை 12,000 மைல் தூரத்தில் சுற்றி வருகிறது சாரன். மங்கலான புளுடோவின் விட்டத்தைக் கணக்கிடுவது மிகவும் கடினம்! 1994 இல் பூமியின் வட்ட வீதியில் சுற்றி வரும் ஹப்பிள் விண்தொலை நோக்கி [Hubble Space Telescope] புளுடோ [1410 மைல்], சாரன் [790 மைல்] என்று இரண்டு கோள்களின் விட்டங்களை மிகவும் துள்ளியமாக கணக்கிட உதவியது.  புளுடோவின் வடிவை ஒப்பு நோக்கினால், புதன் கோளின் விட்டம் 3030 மைல், பூமி நிலவின் விட்டம் 2100 மைல்.

பரிதிலிருந்து 3.7 பில்லியன் மைல் தூரத்தில் சூரிய குடும்பத்தின் புறவெளிக் கோளாக யுரேனஸ், நெப்டியூன் இரண்டுக்கும் அப்பால், புளுடோ சுமார் 248 ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பரிதியைச் சுற்றி வருகிறது.  புளுடோ தன்னைத் தானே ஒருமுறைச் சுற்ற சுமார் 6 நாட்கள் எடுக்கிறது.  புதுக்கோள் புளுடோ பரிதியைச் சுற்றி வரும் நீண்ட நீள்வட்ட வீதி மட்டம் [Elongated Elliptical Orbital Plane], மற்ற சூரியக் கோள்கள் சுற்றும் நீள்வட்ட வீதி மட்டத்திற்கு 17 டிகிரி சாய்ந்துள்ளது, ஒரு சிறப்பான வேறுபாடு! நீண்ட நீள்வட்டத்தில் சுற்றும் புளுடோ ஒரே ஒரு கோள்தான் பரிதிக்கருகில் வரும் போது, நெப்டியூன் வீதியைக் குறுக்கிட்டு [Transit], நெப்டியூனுக்கும் முன்னே புகுந்து, பரிதியை மிகவும் நெருங்குகிறது! 1989 இல் புளுடோ அவ்வாறு நீண்ட நீள்வட்டத்தில் பவனி வந்து குறுக்கீடு செய்து, பரிதியைச் சிறு ஆரத்தில் [Perihelion] மிகவும் நெருங்கியது. பிறகு 124 ஆண்டுகள் [248/2=124] கழித்து 2113 இல் புளுடோ பரிதிக்கு உச்ச தூரத்தில், [நீள் ஆரத்தில் Aphelion] பயணம் செய்து திரும்பி, அடுத்து 124 ஆண்கள் தாண்டி கி.பி 2237 இல் மீண்டும் பரிதிக்கு அருகே வரும்!

பரிதி மண்டலப் படைப்பில் தீர்க்கப்படாத சில புதிர்கள் !

அண்டக் கோள்கள் ஏன் பரிதியை நீள்வட்ட வீதிகளில் ஒரே தளமட்டத்தில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணிகள் உள்ளன ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் காலம் மாறாமல் சுற்றி வருகின்றன ? சூரியனை மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஏன் ?  கோள்களின் துணைக்கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவது ஏன் ?  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

(தொடரும்)

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Many Planets are in the Solar System ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]

23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
24 A Discover Special – Unseen Universe – Comets Captured By : Jack McClintock (Jan 31, 2007)
25 Newsweek Magazine : The New Solar System – Our Changing View of the Universe – Requiem for a Planet Pluto (1930-2006) By : Jerry Adler
26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804172&format=html(Creation of Solar System Planets)
27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40207221&format=html(புதனும், புளுடோவும்)
28 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
29 New Scientist Magazine – New Planet Definition Sparks Furore (August 25, 2006)

29(a) http://www.bizjournals.com/houston/prnewswire/press_releases/Texas/2017/03/13/DC35759

30. http://www.space.com/43-pluto-the-ninth-planet-that-was-a-dwarf.html  [March 22, 2015]

31. http://sci-techuniverse.blogspot.ca/2017/03/scientists-make-case-to-restore-plutos.html

32. http://www.spacedaily.com/reports/Scientists_make_the_case_to_restore_Plutos_planet_status_999.html  [March 21, 2017]

33.  https://en.wikipedia.org/wiki/Pluto  [March 23, 2017]

34. http://10times.com/planetary-science-conference [March 20-24, 2017]

35.  http://www.hou.usra.edu/meetings/lpsc2017/events/education/ [March 20-24, 2017]

******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (March 24, 2017) [R-1]

Series Navigationஅசோகமித்திரன் – கோட்டோவியம் – ஒரு அஞ்சலிஉயிரோட்டம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *