செங்கண் விழியாவோ

This entry is part 22 of 23 in the series 11 அக்டோபர் 2015

 

அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே

சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேற் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்திரண்டாம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தில் “மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து” என்று தாங்கள் போக்கற்று வந்ததைச் சொன்னார்கள். கண்ணன் எழவில்லை. இப்பாட்டில் நாங்கள் எல்லா அபிமானங்களையும் விட்டுவிட்டுப் பிறந்தகத்துக்கு ஆகாதபடிக்கு வந்தோம் என்று விண்ணப்பம் செய்கிறார்கள்.

நம்மாழ்வார் ஒரு பாசுரத்தில் சொல்கிறார்.

ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்

            கருநாய் கவர்ந்த காவலர் சிதைகிய பானையர்

            பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர்

            திருநாரணன் தாள்கமலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ [4…1…1]

அதாவது ஒரு பேரரசன்; அவனுடைய நாடு வேற்றரசனால் படையெடுத்து வந்து பறிபோயிற்று. நாட்டை இழந்தவன் ஓடுகிறான். குதிரையும் இல்லை. களைப்பு மேலிடுகிறது. இரவு வந்து விடுகிறது. பசிக்கிறது. கை தட்டினால் ஆயிரம் பேர் வந்து ஏனென்று கேட்கும்படி இருந்தவன் பசியினால் இராப்பிச்சை எடுக்கலாமா என எண்ணுகிறன். கையில் பாத்திரம் வேறு இல்லை. யாரோ தூக்கி எறிந்த உடைந்த மண்பாண்டம் கிடப்பது கண்ணில் பட அதை எடுத்துப் பிச்சை கேட்கிறான். ஒரு வீட்டில் மீதமிருந்த சோற்றைப் போடுகிறார்கள். அதை எடுத்துச் சாப்பிட ஓடுகிறான். அப்போது வழியில் இருளில் ஒரு கருப்பு நாய் படுத்துக் கிடக்கிறது. அதைத் தவறிப் போய்க் காலால் மிதித்து விடுகிறான். நாய் காலைக் கௌவ மண்பாண்டமும் அதிலிருந்த சோறும் கீழே கொட்டி விடுகிறது. முன்பு சிற்றரசர்களெல்லாம் வந்து கப்பம் கட்டிய யாரும் காணக் கிடைக்காத அந்த அரசரின் திருவடி இப்போது ஒரு நாய் கௌவக் கிடக்கிறது என்கிறார் நம்மாழ்வார். முக்கூரார் எடுத்துக்காட்டும் உதாரணம் இது.

‘கருநாய் கவர்ந்த காவலர்’ என்பதற்கு ”கருநாய் என்றால் கருமையான நாய் மட்டும் அன்றீரே கருவுற்ற நாயிரே” என்பது ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானமாகும். அதாவது கருவுற்று குட்டி போட்ட நாய். அது மிகவும் சீற்றத்துடனே கடிக்கும். அவன் கதறி அழுகிறான். சக்ரவர்த்தியாய் அங்கண் மாஞாலத்து அரசராய் இருந்தவனுக்கே இந்தக் கதி என்றால் சாதாரணமானர்களின் நிலையை என்னென்று சொல்வது? எந்தச் செல்வமும் நிலையானதன்று. நாராயணன் திருவடி மட்டுமே நிலையானதாகும்.

அரசர்களின் செல்வ வாழ்வு நிலையில்லாதது என்பதைத் திருமங்கையாவாரும்,

பாண்டேன் வண்டறை யும் சூழ

                  லார்கள்பல் லாண்டிசைப்ப,

            ஆண்டார் வையமெல்லாம் அர

                  சாகி, முன் னாண்டவரே

            மாண்டா ரென்று வந் தார்அந்

                  தோ, மனை வாழ்க்கை தன்னை

            வேண்டேன், நின்னையடைந்தேன் திரு

                  விண்ணகர் மேயவனே!       [பெரிய திருமொழி 6-2-5]      

 

என்று அருளிச் செய்துள்ளார். ’அங்கண் மா ஞாலம்’ என்பதில் ‘அம்’ என்பதுத் அழகையும், ’கண்’ என்பது இடமாகியப் பரப்பையும் குறிக்கிறது. ’அம்’ என்பது போக்யங்களையும், ‘கண்’ என்பது போக்யஸ்தானங்களையும், ‘மா’ என்பது போக்ய உபகரணங்களையும் குறிக்கிறது என்றும் பூர்வாச்சாரியர்கள் கூறுவர். ஞாலத்து அரசர் என்றதால் அவர்கள் இந்த உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆட்சி செய்யும் அரசர்கள் என்று கொள்ளலாம். மேலும் அவர்கள் ஒரு மூலையை ஆட்சி செய்தாலும் கர்வ மிகுதியால் இந்தப் பெரிய உலகையே ஆட்சி செய்வதாக எண்ணுகிறார்கள்.

“பூமியின் ஒரு கோணத்தில் நூற்றில் ஒரு பாகத்தை ரக்ஷிப்பதாலுண்டான அடக்க முடியாத கர்வத் தீயினால் கலங்கிக் கொண்டிருக்கும் க்ஷூத்ர நரபதிகள்” என்பார் ஸ்ரீவேதாந்த தேசிகர். பௌண்டர வாசுதேவன் என்பவன் தன்னைக் கிருஷ்ணனாக எண்ணிக் கிருஷ்ணன் போலவே இருக்க மரத்தாலேயே சங்கும், சக்கரமும் தரித்துக் கொண்டது இங்கு நினைவு கூறத்தக்கது.

மேலும் ஒருவருக்கு அவர் பதவி உயர உயரக் கர்வமும் அதிகமாகும். இதை ஆறாயிரப்படி ஒரு சான்றுடன் விளக்குகிறது. “பிரமன் முதலான தேவர்கள் கூட பல பிறவிகளெடுத்து பல அனுஷ்டானங்களை மேற்கொண்டு அதன் பிறகுதான் மோக்ஷகதி அடைந்தனர். ஆனால் இந்தப் பிறவியிலேயே மோக்ஷம் அடைய வேண்டுமென்று சிலர் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு திரிகிறார்களே! இது எப்படி சரியாகும்?” என்று பட்டரை ஒருவர் கேட்டாராம்.

அதற்கு பட்டர் “ பிரமன் முதலான தேவர்கள் அவர்களின் பதவிக்குத் தக்க வாறு அகங்காரம் கொண்டிருப்பார்கள். எனவே அது அழிய அவர்களுக்குப் பல பிறவிகள் வேண்டும். ஆனால் இவர்கள் இயற்கையாகவே மிகவும் தாழ்ச்சியை உடையவர்கள்; மேலும் அதிகமான அகங்காரம் அற்றவர்கள்.; பகவானின் அருளையே எப்போதும் வேண்டி நிறபவர்கள். எனவே இவர்களுக்கு ஒரு பிறவியே போதுமானதாகும்” என்று பதில் அருளினாராம்.

சிலர் இந்த ராஜ்யத்தைப் பெரிதாக எண்ணுகிறார்கள். ஆனால் “ராஜ்யம் நாம மஹாவ்யாதி: அசிகித்ஸ்யோ விநாஸ்ந;” என்று கூறப்படுகிறது. அதாவது ராஜ்யம் என்பது எப்போதும் தீராததாய், சிகிச்சையும் செய்ய முடியாததாய் இருக்கும் ஒரு நோய் பொன்றதாகும்” என்பது இதன் பொருளாகும். மேலும் ராஜ்யத்தை ஆளும் அரசன் பற்றிச் சொல்லப்படுகையில் ”தஸவேஸ்யாஸமோ ந்ருப:” என்று கூறி இருக்கிறார்கள். பத்து வேசிகளுடைய பாபத்தை ஓர் அரசன் சுமக்கிறான்” என்பது இதன் பொருளாகும். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் அரச குலத்தில் பிறப்பதையே “ மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பல்லது தொழுகவில்லென” என்று கூறுவான்.

அரசனுக்குப் பொறுப்பும் மிக அதிகம். அவன் தன் நாட்டு மக்களைத் தன் உயிர் போல் கருத வேண்டும். எனவேதான் கம்பர் தயரதனைக் குறிப்பிடும்போது “ உயிரெலாம் உலாயதோர் உடம்புமாயினான்” என்றார். ஔவையாரோ மன்னனையே அந்நாட்டின் உயிராகக் கருதி “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”: என்றார். அந்த உயர் பதவிக்கான கர்வங்ளை விட்டுவிட்டு உன்னிடம் வந்ததைக் கூற ‘வந்து’ என்ற சொல்லால் காட்டுகின்றனர். இப்படி அரச பதவியின் மீது இருக்கும் அபிமானம் விட்டவர்கள் எல்லாரும் காட்டுக்குப் போவது என்பதுதான் பண்டைய மரபு. இத நம்மாழ்வாரும் காட்டுகிறார்.

 

”உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகாண்டவர் இம்மையே

தம்மின் சுவைமடவாரைப் பிறர்கொள்ளத் தாம்விட்டு

வெம்மின் ஒளிவெயில் கானகம் போய்க்குமை தின்பார்கள்

செம்மின் முடித்திருமால் விரைந்தடி சேர்மினோ”       [4—1—12]

அப்படிக் காடு நோக்கிப் போகாமல் உன்னிடம் வந்த அரசர்கள் போல நாங்கள்வந்தோம் என்கிறார்கள். நின் பள்ளிக் கட்டிற் கீழ் ஏன் வந்தார்கள் என்றால் ஒவ்வோர் அரசனும் சில அரசர்களிடம்தான் தோற்பான். ஆனால் இவன் மட்டுமே உலகில் உள்ள எல்லா அரசர்களையும் தோற்கடிக்கக் கூடியவன். மேலும் இவனே உபாய வஸ்து. இவனல்லாமல் வேறு யாரும் இல்லை; விபூதி பூதர்கள் விபூதிமான் வாசல் புகுதல்தானே முறை. எனவே சர்வலோக சரண்யன் வாசலுக்கு வந்தார்கள். அத்துடன் எங்கேனும் வழிப்பறி உண்டானால் ராஜாவின் வாசலுக்கு வந்து கூப்பிடுமாப்போலே வந்தார்கள்.மேலும் இளையபெருமாளைப் போலே அங்கேயே கண்ணனின் கல்யாண குணங்களுக்குத் தோற்று அங்கேயே கிடப்பார்கள். அவனை அகன்று விட்டால் மீண்டும் நமக்கு முடிசூட்டிவிட்டு அரசராக்கி விட்டால் என்ன செய்வது என்று அங்கேயே கிடப்பார்கள்.

இதுபோல அரசர்கள் கிடப்பதைப் பூத்தாழ்வாரும் காட்டுகிறார்.

   ”கோவாகி மாநிலம் காத்துநம் கண்முகப்பே

      மாவேகிச் செல்கின்ற மன்னவரும்— பூமேவும்

      செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ்பிறப்பும்

      தண்கமல மேய்ந்தார் தமர்”

நான்முகனும் யுககோடி சகஸ்ரநாம்ம் செய்து விஷ்ணுவை ஆராதித்துமீண்டும் தன் பதவி பெற்றார். பண்டைய அரசர்கள் திருமாலைக் கண்டு அவர் திருவடிகளிலிலேயே கிடந்து அர்ச்சாவதாரத்தைத் தரிசித்துப் பலகைங்கர்யங்கள் புரிந்திருக்கிறார்கள். பலதிவ்ய தேசங்களில் அரசர்களின் தொண்டு பாடப்ப்படுகிறது. திருமங்கையாழ்வார்,

“தென்னன் தொண்டையர்கோன் செய்த நன்மயிலைத் திருவல்லிக்கேணி”

“மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீண்முடிமாலை”

“வயிரமேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சியட்டபுகரத்து”

“பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழற்பல்லவன் மல்லையர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம்”

“செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணி மாடம்”

என்றெல்லாம் அருளிச் செய்கிறார்.

இதன் உள்பொருளோ என்னவென்றால் அரசர் ஜீவாத்மா. அது அகங்காரம், மமகாரம் என்கின்ற அகப்பற்று மற்றும் புறப்பற்றுகளைக் கொண்டுள்ளது. அது பாகவதர் கோஷ்டி எனும் ஸத்ஸங்கத்த்தின் சேர்க்கையால் அவை தொலையப்பெற்று பகவானின் திருவடி சம்பந்தம் பெற்று அங்கேயே கிடக்கிறது.

இந்த ஆய்ச்சியர் சிறுமிகளும் அந்த அரசர்கள்போலே நாங்கள் வந்தோம் என்கிறார்கள். கண்ணன் பள்ளிக்கட்டின் படுக்கையில் இருந்து கொண்டு கேட்கிறான். ‘சிறுமிகளே! நீங்கள் எதற்காக வந்தீர்கள்? என்ன காரியம் ஆகவேணும்?”

இவர்கள் உடனே ‘கண்ணா! இது என்ன புதிதான கேள்வியாக இருக்கிறதே! நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்று உனக்குத் தெரியாதா? தெரிந்தும் கேட்கிறாயே! அந்த அரசர்கள் அபிமானங்களை விட்டதைப்போலே, நாங்களும் ஸ்திரி அபிமானம் விட்டு, தேக அபிமானம் விட்டு, போக அபிமானம் விட்டு, சுற்ற அபிமானம் விட்டு, நண்பர் அபிமானம் விட்டு வந்துள்ளோம். அரசர்கள் உன் அம்பிற்குத் தோற்று வந்து கிடப்பார்கள். நாங்கள் உன் அன்பிற்குத் தோற்று வந்துள்ளோம்.” என்கிறார்கள். கடந்த பாசுரத்தில் சொல்லப்பட்ட “மாற்றார் உனக்கு வலி தொலைந்து” என்பதற்கு இப்பாசுரத்தின் முதல் மூன்று அடிகள் விளக்கமாகும்.

’வந்து தலைப்பெய்தோம்’ என்கிறார்கள். அதாவது ”இங்கே நாங்கள் வரக் கூடியவர்களா? இல்லையே! மண்ணுலகில் அவதரித்துப் படாத பாடெல்லாம் பட்ட உன்னாலும் அடைய முடியாதவர்களன்றோ நாங்கள். நாங்களே இங்கு வந்துள்ளோம். இந்த வாய்ப்பை நழுவவிடாமல் எம்மை ஏற்றுக்கொள்வாய்” என்று சொல்கிறார்கள்.

அவனோ “ஆயர் சிறுமிகளே! நீங்கள் வந்த காரியம் தான் முடிந்து விட்டதே! இன் உங்களுக்குக் குறை ஏதும் இல்லையே” என்கிறான். சிறுமிகள் “இப்போது நாங்கள் உன்னை அடைந்தோமே தவிர, அதற்கான பலனைப் பெறவில்லையே! அடியார்கள் காண விழைவது உன் கண்ணழகைத்தானே? அந்தத் தாமரை கண்ணழகை எமக்குச் சிறிது காட்டாயோ” என்று வேண்டுகிறார்கள்.

ஆண்டாள் நாச்சியார் இந்த இடத்தில் ”கிண்கிணி வாய்ச்செய்த தாமரைப்பூப்போலே” என்று உவமை காட்டுகிறார். கிண்கிணி என்பது குழந்தைகள் அணியும் ஒரு அணியாகும். குழந்தைகளுக்கு இடுப்பில் அரைஞாண் கட்டுவது வழக்கம். அதில் மாதுளம் பூவைப்போல சிறியதான பாதி திறந்தும், பாதி மூடியிருக்குமான மணிகள் கட்டுவார்கள். அதேபோல பாதி திறந்தும் பாதி மூடியும் பூரணமாக மலராது இருக்கும் தாமரைப் பூப் போலே உள்ள உன் கண்களால் எம்மை நோக்காயோ? என்று இவர்கள் வேண்டுகிறார்கள். அதுவும் ‘செங்கண் சிறுச் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ” என்று கேட்கிறார்கள். சிறிது நோக்கி அருள் செய்வாய் என்றுதான் கோரிக்கை விளம்புகிறார்கள். ஏனெனில் பகவான் முழுப்பார்வை பார்த்து அருளினால் அதைத் தாங்கும் சக்தி நமக்கு இருக்க வேண்டுமே! அதனால்தான் பகவான் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் நிதானமாகப் பார்க்க வேண்டும். திருமலையப்பனின் திருக்கண்களே அதனால்தான் மறைக்கப்பட்டு இருக்கிறதாம். அவன் கண்களும் பாதித் திறந்து, பாதி மூடியும் இருக்கிறதாம். அவனுடைய ஸ்வாதந்திரம் கண்களை மூடச் செய்கிறது. ஆனால் பிராட்டியின் புருஷகாரம் கண்ணை மூடவொட்டாமல் செய்கிறது. இவர்களின் அபராதம் மூடச் செய்கிறது. அவன் கருணை மலரச் செய்கிறது.

‘சிறுச்சிறிதே’ என்பதற்கு ”ஒரு நீர்ச்சாவியிலே வெள்ளமாகாவே ஸாத்மிக்க ஸாத்மிக்க என்கை” என்பார் பெரியவாச்சான்பிள்ளை. அதாவது நீரில்லாமையால் நொந்துபோன பயிரிலே வெள்ளமாக ஒரே அடியாய் நீர் ஊற்றாமல் கொஞ்சமாக கொஞ்சமாக நீர் ஊற்ற வேண்டும் என்பது இதன் பொருளாகும். மிக அதிகமாக ஊற்றினால் அந்தப் பயிர் தாங்காதன்றோ?

”ஒரு குளம்படியிலே முழுக்கடலையும் அடக்க முடியாது. அதுபோல உன் கண்ணழகு வெள்ளத்தை முழுவதும் எங்கள் மேல் பாய விட்டால் எம்மால் தாங்க முடியாது. மேகத்திலிருந்து பெய்யும் மழைத்துளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாதகப் பறவை போல் நாங்கள் உன்விழியின் அருளுக்காகக் காத்திருக்கிறோம்.”என்கிறார்கள். ’இளவாய்ச்சியர் கண்களில் விடவே செய்து விழிக்கும் பிரான்’ என்று அருளிச்செயலில் எடுத்தோதப்பட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

”விடுவேனோ என்விளக்கை என்ஆவியை

      நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை

      தொடுவே செய்து இளஆய்ச்சியர் கண்ணினுள்

      விடவே செய்து விழிக்கும் பிரானையே”

                                    [திருவாய்மொழி 1—7—5]

செங்கண் என்று சாதாரணமாக சிவந்திருக்கும் கண் என்று கூறுவதிலிருந்து அந்தக் கண்களுக்கு எதையுமே உவமையாகச் சொல்லமுடியாதென்பது புலப்படுகிறது. அவனின் கண்களில் உள்ள சிவப்பு தாமரைக்கு இருந்த போதிலும் அவன் திருக்கண்களில் உள்ள கருணையும், அருளும் அதற்கு இருக்காதன்றோ? உபமானம் நேர்நில்லாமையால் உபநேயந்தன்னையே சொல்லல் என்று இதைக் கூறுவார்கள். ஆழ்வார்கள் அருளிச்செயல்களிலும் இதைப் பார்க்கலாம். “உன் கண்கள் திருவடி, மற்றும் திருக்கைகளுக்குத் தாமரையை நிகராகக் கூற இயலாது; அதுபோல உன் திருமேனி நிறத்திற்கு பொன்னையும் கூற இயலாது என்பது அருளிச்செயலாகும். திருவாய்மொழியில் [3-1-2] இதைக் காணலாம்.

”கட்டுரைக்கில் தாமரைநின் கண் பாதம் கை ஒவ்வா

சுட்டுரைத்த நன்பொன்னுன் திருமேனி ஒளிஒவ்வாது”

கண்ணன், ”எனது கண் பார்வை உங்கள் மேல் பட்டால் உங்களுக்கு என்ன பலன்” என்று கேட்கிறான். அதற்கு இவர்கள் “எங்கள் மேல் சாபம் இழிந்து போகும்” என்கிறார்கள். மேலும் “திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்” என்று கேட்டுக் கொள்கிறார்கள். அதாவது எம்பெருமானின் திருமுகத்தில் இருக்கும் கண்களில் ஒன்று சூரியனாம்; மற்றொன்று சந்திரனாம்; இது இல்பொருள் உவமையாகும்.

வால்மீகி இராமாயணத்தில் “சந்த்ர ஸூர்யௌ ச சக்ஷூஷீ” என்றும், மகாபாரதத்தில் “சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே” என்றும் காட்டப்பட்டிருப்பது இங்கு நினைவு கூறத் தக்கது. மேலும் வராக புராணத்தில்,

”தஸ்ய சிந்தயதோ நேத்ராத் தேஜஸ் ஸமபவந் மஹத்

தக்ஷிணம் வஹ்நிஸங்காஸம் வாமம் துஹிநஸந்நிபம்”

என்று சொல்லப்பட்டதும் ப்ராமாணங்களாகும். அதாவது “அப்படி நினைத்துக் கொண்டிருந்த [பகவானுடைய] கண்களிலிருந்து ஒரு பெரிய தேஜஸ் உண்டாயிற்று. வலது கண் நெருப்பைப் போல் விளங்கிற்று. இடது கண் பனியைப்போல் இருந்தது.” என்பது இதன் பொருளாகும்.

முதல் பாசுரத்திலேயே நாச்சியார் ‘கதிர் மதியம் போல் முகத்தான்” என்று அருளினார். ஒருகண் அருளையும், மற்றொரு கண் வெம்மையையும் தரக் கூடியவை. பாகவதர்களின் பக்கம் அருளையும், அன்பர்க்கு எதிரிகளிடத்தில் வெம்மையையும் காட்டக் கூடியவை.

இப்படி கண்களுக்குச் சூரியனாஇயும், சந்திரனையும் உவமையாகச் சொன்னவர்கள் மேலும் ‘அங்கண்’ என்கிறர்கள். ’அம்கண்’ என்றால்குற்றமே இல்லாத அழகுடையவை என்பது பொருளாகும். பிற கண்களுக்குக் குற்றங்கள் உண்டாம். சூரியனுக்கும் கூசக்கூடியது, களங்கம் உடையது என்ற குற்றங்கள் உள்ளன. சந்திரனுக்கும் ராகு, கேதுக்களால் மறைக்கப் படுதல், குறைந்து வளர்ந்து வருகை போன்ற குற்றங்கள் உள்ளன. ஆனால் இவை குற்றமே இல்லாதவை. எனவே அழகிய கண்களாம்.

தாமரை மலரானது சூரியன் வரவு கண்டால் மலரும். சந்திரனைக் கண்டால் குவியும். இங்கு த்கிருமுகத்தில் இரண்டும் ஒருங்கே தோன்றுவதால் தாமரைக்கண்கள் பாதி மலர்ந்தும் பாதி மூடியும் காட்சியளிக்கின்றன. இங்கே சூரிய சந்திரர்கள் உண்டோ எனில் சங்கும் சக்கரமும் சந்திர சூரியர்களாக உள்ளன என்ற பேயாழ்வார் பாசுரம் இங்கு எண்ணத் தக்கது.

  ”ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய்

            ஓங்கு கமலத்தின் ஒண்போது—ஆங்கை

            திகிரி சுடரென்றும் வெண்சங்கம் வானில்

            பகரு[ம்] மதியென்றும் பார்த்து”

“ கண் ஒரே மாதிரி அன்றோ இருக்கும்; அது எப்படி ஒரே கண் சூரியனாகவும், மற்றொரு நோக்கில் சந்திரனாகவும் இருக்கும்?” என்று ஒருவர் கேட்டாராம், அதற்கு பட்டர், “ஸிம்ஹம் ஆனையோடே பொராநின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமாப்போலே” என்று கூறினாராம். நரசிம்ம அவதாரத்தில் இரணியனுக்கு சீற்றத்தைக் காட்டியவன் பிரகலாதனுக்கு அருள் புரிந்தான் அன்றோ?

”அப்படிப்பட்ட கண்களால் எங்கள் மேல் நோக்குதியேல் என்று கூறுகிறார்கள், நீ அப்படிப் பார்த்தால்தான் அருள் வெள்ளம் பாய்ந்து எம் சாபம் அதாவது நீ எம்மைப் பிரிந்திருப்பதான துன்பம் தீரும்” என்று அவர்கள் வேண்டுகிறார்கள்.

இந்த ஆய்ச்சியர் சிறுமிகள் இந்தப் பாசுரத்தில், 5—ஆம் அடியில் “எம்மேல்” என்றும் 7—ஆம் அடியில் “எங்கள் மேல்” என்றும் மீண்டும் 8-ஆம் அடியில் “எங்கள் மேல்” என்றும் வேண்டி தங்கள் தய நீய தசையை எடுத்துக் காட்டுகிறார்கள் என்பார் ஸ்ரீ பயங்கரம் அண்ணாங்காச்சாரியார் ஸ்வாமிகள். மேலும் அவர் தாயர் கூற்றாக வரும் ஒரு பாசுரத்தையும் இதற்கு எடுத்துக் காட்டாகக் காட்டுவார்.

        ”ஐய புழுதி உடம்பு அளைந்து இவள்

                  பேச்சு மலர்த்தலையாய்

            செய்ய நூலின் செப்பாடை செப்பன்

                  உடுக்கவும் வல்லாள் அல்லல்

            கையினில் சிறு தூதையோடு இவள்

                  முற்றில் பிரிந்துமிலள்

            பையரவணைப் பள்ளியானோடு

 

                  கைவைத்து இவள் வருமே”

பெருமானின் மூன்று திவ்ய அவயங்களின் பெருமை இப்பாசுரத்தில் காட்டப்படுகின்றன. ’எங்கள் மேல் நோக்குதியேல்’ என்பதால் திருக்கண்களும், ‘சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்’ என்பதால் திருவடிப் பெருமையும், எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ’ என்பதால் அபய ஹ்ஸ்தமும் காட்டப்படுகின்றன.

”இப்பாசுரத்தைத் தினமும் அனுசந்தானம் செய்து வந்தால் உடல் நலம், திருமணம், செல்வம், விரும்புபவர்களுக்கு அவற்றைப் பெறுபவர்க்குத் தடங்கலான பாப நிவர்த்தி ஏற்படும்” என்று முக்கூர் நரசிம்மாச்சார்யார் அர்ளிச் செய்கிறார்கள்.

=============================================================================

Series Navigationவலிமனோரமா- தமிழ் சினிமாவின் அடையாள பெண்ணிய வடிவம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *