செய்யும் தொழிலே தெய்வம்

This entry is part 28 of 51 in the series 3 ஜூலை 2011

1


உமாசங்கரின் தொலைபேசியில் ஒரு எடுக்கத் தவறிய அழைப்பு. பித்தானைப் பிதுக்கிப் பார்த்தார் உமாசங்கர். அவருடைய நண்பர் பூபதி கோலாலம்பூரிலிருந்து அழைத்திருக்கிறார். உடனே பூபதியை அழைத்தார் உமா.

உமா பூபதி நட்பைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்திலிருந்து ஒரே சமயத்தில் வந்தவர்கள்தான் இவர்கள். கோலாலம்பூரில் ஒரு பணமாற்று வியாபாரியிடம் சேர்ந்தார் பூபதி. இன்று ஒரு தனி முதலாளியாகிவிட்டார். உமாசங்கர் சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் சேர்ந்தார். இன்று ஒரு மதிப்புமிக்க பொறுப்புக்கு உயர்ந்துவிட்டார். மயிலிறகு அவர்கள் நட்பு. அத்தனை அழகு. இன்றுவரை ஓரிழை கூட காயப்படவில்லை. அந்த பூபதிதான்  அழைத்திருந்தார். மீண்டும் உமா அழைத்தபோது உடனே எடுத்துவிட்டார்.

‘உமா! ஒரு முக்கியமான தகவல். இப்போது சொல்லலாமா?’

‘முக்கியம் என்கிறீர்கள். அது எனக்கும் முக்கியம்தானே. சொல்லுங்கள் பூபதி.’

‘உங்களின் வேலை பாதிக்குமோ என்று தயக்கமாக இருக்கிறது. இதுபோன்ற வேலையை உங்களிடம் கொடுக்க இதுவரை தவிர்த்துவந்தேன். இப்போது வேறு வழியில்லை.’

‘நானென்ன நேற்றா வேலைக்குச் சேர்ந்தேன். சமாளிப்பேன் பூபதி. சுற்றி வளைக்காதீர்கள்.’

‘ஒரு வாடிக்கையாளருக்கு எழுபதினாயிரம் சிங்கப்பூர் வெள்ளி வேண்டுமாம். அதற்குரிய மலேசிய ரிங்கிட்டுகள் தந்துவிட்டார். அவருக்கு இன்று மூன்று மணிக்குள் அந்த வெள்ளி சேர்ந்தாக வேண்டும். இப்போது மணி 11. சிங்கப்பூரிலுள்ள தில்லான் பணமாற்று நிறுவனத்துடன் பேசிவிட்டேன். அங்கு

 

 

2

வெள்ளி தயாராக இருக்கிறது. அவரிடம் அந்தப் பணத்தை வாங்கி அந்த வாடிக்கையாளரிடன் கொடுத்துவிடவேண்டும்.’

‘சரி. சேர்த்துவிடுகிறேன். மேல் விபரம்?’

தில்லான் தொலைபேசி எண் குறித்துக் கொள்ளுங்கள். உங்களின் பெயர் அடையாள அட்டை எண் அவரிடம் கொடுத்துவிட்டேன். அவரிடம் பேசுங்கள். வரச் சொல்லும் நேரத்திற்குச் செல்லவேண்டும். அந்த வாடிக்கையாளர் ஒரு சீன மாது. தங்க மொத்த வியாபாரி. பெயர் கிம். அவருடைய தொலைபேசி எண் இதுதான். குறித்துக் கொள்ளுங்கள். வெள்ளியை தில்லானிடமிருந்து பெற்றதும் கிம்மை வீட்டுக்கு வரச் சொல்லுங்கள். 3 மணிக்குக் கொடுத்தால் போதுமானது. இன்று இரவே அந்த மாது ஜெனிவா புறப்படுகிறார். அவர் மிகவும் மிருதுவான வாடிக்கையாளர் உமா.’

‘இதற்குத் தயக்கம் தேவையில்லை பூபதி. எல்லாவற்றையும் முடித்தபின் நான் அலுவலகம் செல்கிறேன். முடித்துவிட்டு உங்களுக்குத் தகவல் தருகிறேன்.’

‘நன்றி உமா.’

உமாசங்கர் தில்லானை அழைத்தார். தகவல்கள் பரிமாறப்பட்டன. தன் இருசக்கர வண்டியை விரட்டிக் கொண்டு அரை மணி நேரத்தில் தில்லான் நிறுவனம் அடைந்தார். ஒரு தாளில் கையெழுத்தைப் பதித்தார். எழுபதினாயிரம் வெள்ளி. 14 ஐம்பது வெள்ளி கட்டுகள் கைமாறின. நோட்டுக்களை ஒரு துணிப்பையில் திணித்துக் கொண்டு புறப்பட்டார் உமாசங்கர்.

மனைவி அபிராமியிடம் கேட்டார்.

‘இந்தப் பையில் என்ன இருக்கிறதென்று சொல் பார்ப்போம்.’

அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே பையை அவிழ்த்துக் கொட்டினார் உமாசங்கர். எட்டுக் கைகள் உள்ள ஒரு மனிதனைப் பார்ப்பதுபோல் அந்த நோட்டுக்களைப் பார்த்ததில் இமைக்க மறந்தார் அபி.

 

 

3

‘கொஞ்சம் தொட்டுப் பார்க்க வா?’

‘தாராளமாக. இது பூபதியின் தொழில் பணம். ஒரு சீன மாதிடம் 3 மணிக்குள் சேர்க்க வேண்டும். கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது அபி.’

நோட்டுக் கட்டுக்களை அலமாரியில் அடுக்கினார்.

‘ஓ’ நிலை படிக்கும் மகன் பரத் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தான்.

‘மகனே பரத். உனக்கு ஒரு அதிசயம் காட்டட்டுமா?’

‘என்ன அதிசயமப்பா?’

‘வா. இங்கே.’

அலமாரியைத் திறந்தார். அத்தனை கட்டுக்களையும் கட்டில் மீது வைத்தார்.’

அபியையும் உமாவையும் மாறி மாறிப் பார்த்தான் பரத்.

‘அப்பா!! இதைத் தொட்டுப் பார்க்கலாமா?’

‘தொட்டுப்பார். மேலே கொட்டிப் பார். இது பூபதி மாமாவின் பணம். ஒரு சீன மாதுக்கு கொடுக்க வேண்டும். அவர் 3 மணிக்குத்தான் வருவார். அதுவரை பணம் நோகாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.’

‘புகைப்படம் எடுத்துக் கொள்ளவா?’

‘ஓ. நிச்சயமாக.’

இரண்டு கட்டுக்களை தன் கன்னங்களில் அழுத்திக் கொண்டு தன் ஐபேடில் படம் எடுக்கச் சொன்னான் அம்மாவிடம். எல்லாக் கட்டுக்களையும் அள்ளுவது போல் ஒன்று. ஒரு கட்டை விசிறுவதுபோல் ஒன்று. நெஞ்சின் மீது அத்தனையும் பரப்பியபடி ஒன்று. சில நிமிடங்களிலேயே கிளிக்காகின ஏராளப் படங்கள்.

 

 

 

4

‘இந்தப் பணத்தில் இரண்டு தாள் இருந்தால் போதும். அந்த நைகீ காலணியை வாங்கிவிடுவேனப்பா. அப்பா! உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.’

‘கேள்.’

‘பூபதி மாமாவும் நீங்களும் ஒரே சமயத்தில்தான் இங்கு வந்தீர்கள். அவர் எப்படி இவ்வளவு பணத்தில் புரள்கிறார். நீங்களோ சம்பளத்தில் வாழ்கிறீர்கள். இதை விட்டுவிட்டு பூபதி மாமாவின் தொழிலை நாமும் செய்தாலென்ன? இந்தப் பணத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறதப்பா.’

‘மகனே இந்தப் பணம் பூபதி மாமாவுக்குச் சொந்தமில்லை. பலர் பொருளை விற்று வியாபாரம் செய்கின்றனர். இவர் பணத்தை விற்று வியாபாரம் செய்கிறார். இந்தப் பணத்தை தில்லானிடமிருந்து வாங்கிவர நான் மட்டும்தான் சென்றேன். என்னை மிரட்டி இந்தப் பணத்தை யாராவது கொள்ளையடித்திருக்கலாம். என்னைக் கொன்றிருக்கலாம். இந்தப் பணத்தை வாங்கினேன். அவர்கள் எண்ணித் தரவில்லை. நானும் எண்ணிப் பார்க்கவில்லை. அந்த சீன மாதும் எண்ணி வாங்கப் போவதில்லை. சில தாள்கள் குறைந்த தென்று அந்த சீன மாது சொன்னால் நான் திருடனாக்கப் பட்டு விடுவேன். அந்த சீன மாதை நான் பார்த்ததில்லை. 3 மணிக்கு வருவதாகச் சொன்னார். வேறு நபர் வந்து வாங்கிச் சென்று விட்டால்? காவல் துறை என்ற நெருப்பில் காலம் முழுதும் வெந்தாக வேண்டும் மகனே. இந்த ஒரு வியாபாரத்துக்கே இந்த ஆட்டம். இந்த திடுக்கம். இதையே தொழிலாகச் செய்வது எவ்வளவு பெரிய சவால்? யோசித்துப் பார்.’

‘அய்யோ. பயமாக இருக்கிறதப்பா.’

பேசிக் கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்தார் உமாசங்கர். சீன மாது கிம் வணக்கம் சொல்லி உள்ளே வந்தார்.

 

 

 

5

அபிராமி தேநீர் கொடுத்தார். சில மாம்பழங்களை பையில் போட்டுக் கொடுத்தார்.

‘அட. இந்தியப் பழம். இன்று இரவு நான் ஜெனீவா செல்கிறேன். அங்கு உங்களை நினைத்துக் கொண்டே இதை ருசிக்கிறேன்.’

உமாசங்கர் பணத்துடன் வந்தார். பதினான்கு கட்டுக்களையும் தன் தோள் பையில் அமுக்கிக் கொண்டு விடை பெறும்போது சொன்னார்.

‘பக்கத்திலுள்ள கடைத் தொகுதியில் இன்று சில காலணிகள் வாங்கினேன். அவர்கள் ஏதோ பற்றுச்சீட்டு கொடுத்தார்கள். இன்று நான் ஜெனீவா செல்கிறேன். தயவுசெய்து இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அழகுப் பையனே வா. இது இந்த அத்தையின் அன்பளிப்பு. எடுத்துக்கொள்.’

அது இருநூறு வெள்ளிக்கான பற்றுச் சீட்டு.

‘அப்பா நான் கேட்ட நைகீ காலணி. ஒன்றல்ல. இரண்டு வாங்கலாம். நாம் பேசிக்கொண்டதை ஒட்டுக் கேட்டதுபோல் இந்த மாது இதைக் கொடுக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறதப்பா.’

உமாசங்கர் பூபதியிடம் தகவல்களைச் சொல்லிவிட்டு மகனைப் பார்த்துச் சொன்னார்.

‘மகனே இந்த வியாபாரம் நல்லபடியாக முடிந்ததில் பூபதிக்கு மகிழ்ச்சி. என்னாலும் பூபதிக்கு உதவி செய்ய முடிந்ததால் எனக்கும் மகிழ்ச்சி. சரியான நேரத்தில் வெள்ளி கிடைத்ததால் அந்த சீன மாதுக்கும் மகிழ்ச்சி. காலணி வாங்க காசு கிடைத்ததால் உனக்கும் மகிழ்ச்சி. அவரவர்கள் வேலையை அவரவர்கள் செய்ததால் எல்லாருக்கும் மகிழ்ச்சி. மகனே! நாம் செய்யும் தொழில் நாமே தேடிக்கொண்டதல்ல. நம்மை குறிப்பிட்ட தொழிலுக்கு உருவாக்கி பின் தரப்படுவது. இதை அமைத்துக் கொடுப்பது தெய்வம். நாமே அமைத்துக் கொண்டோம் என்பது கர்வம். சொந்தத் தொழிலை கந்தை என நினைப்பதும் மாற்றார் தொழிலை மரியாதை செய்வதும் வாழ்க்கைப் பிழை

 

 

 

6

மகனே. நான் வாழும்போதும் சரி. இறந்த பின்னும் சரி. ஒன்றை மட்டும் நீ மறக்கவே கூடாது மகனே.’

‘நிச்சயமாக அப்பா. சொல்லுங்கள். மறக்கமாட்டேன்.

உமாசங்கர் விரல்களை மடக்கி வலக்கரம் உயர்த்திச் சொன்னார்.

‘செய்யும் தொழிலே தெய்வம்.’

 

Series Navigationகொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

5 Comments

  1. Avatar
    லறீனா ஏ. ஹக் says:

    அருமையான கதை.மனதுக்கு இதம் தரும் இதுபோன்ற கதைகள் இன்னும் நிறைய வரட்டும், வாழ்த்துக்கள்!

  2. Avatar
    R.Ganesan says:

    Dear Yusuf, I verymuch like and reading your many stories in this web site. Every stories are in diffrent angles which is very much impressed. I am from my office system in which I not installed the e-kalappai or any other tamil phonitic conversion software. So that I write this in english. Like Malaimalar web site, in Thinnai site could it possible to convert the language in Tamil automatically? Have a nice day.
    Yours friendly,
    R.Ganesan

    1. Avatar
      யூசுப் says:

      தங்களின் பாராட்டுக்கு நன்றி அன்புடன் யூசுப்

  3. Avatar
    Bandhu says:

    //சொந்தத் தொழிலை கந்தை என நினைப்பதும் மாற்றார் தொழிலை மரியாதை செய்வதும் வாழ்க்கைப் பிழை//
    அருமையான கருத்து.. அருமையான கதை. நன்றி யூசுப்!

  4. Avatar
    யூசுப் says:

    தங்களின் பாராட்டுக்கு நன்றி. அன்புடன் யூசுப்

Leave a Reply to யூசுப் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *