சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014
“சைவ உணவு உடல்நலனுக்கு நல்லது, அசைவ உணவு உடல்நலனுக்கு கெட்டது” எனும் மூடநம்பிக்கை சைவர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலைநாட்டவர் இந்தியரை விட குண்டாக இருப்பதை பொதுவாக காணலாம். இதற்கு மாமிசத்தை தவிர என்ன காரணம் சொல்லமுடியும்?
அது தவிர்த்து சுகர், பிரஷர் என எந்த வியாதிக்கு மருத்துவரிடம் போனாலும் அவர்கள் கூறும் முதல் அறிவுரை “சிகப்பு மாமிசம் குறைவாக சாப்பிடுங்கள்” என்பதே. மாமிசத்தை விட முடியாதவர்களுக்கு லீன் சிக்கன் என சொல்லி கொழுப்பெடுத்த, தோல் அகற்றிய சிக்கனை சாப்பிட பரிந்துரைப்பார்கள். மாமிசம் முழுக்க கொலஸ்டிரால்..சைவ உணவு எதிலும் கொலஸ்டிரால் கிடையாது, அதனால் சைவ உணவுதான் உடலுக்கு நல்லது. இப்படிதான் பல சைவர்களும் நம்பி வருகிறார்கள்.
முட்டை சைவமா, அசைவமா எனும் வாதம் ஒருபுறம் நடக்க முட்டையில் உள்ள கொலஸ்டிரால் அளவற்ற தீங்கு விளைவிப்பது என சைவர்கள் பலரும் நம்புகிறார்கள். முட்டை உண்ணும் சைவர்கள் கூட முட்டையின் வெள்ளைகருவை மட்டுமே உண்கிறார்கள். அடுத்ததாக ஒரு உயிரை கொன்று உடல் வளர்ப்பதா என்பது போன்ற அறம்சார்ந்த சிந்தனைகள் ..இவை எல்லாம் சேர்ந்து சைவர்களை ஒரு கற்பனை உலகில் ஆழ்த்தியிருக்கிறது. அசைவம் உண்பவர்கள் உடல்நலனை கெடுத்துகொள்பவர்கள் என்பது மாதிரி உண்மைக்கு புறம்பான நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள்.
30 ஆண்டுக்கு முந்தைய பழுதுபட்ட விஞ்ஞானம், ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ஜைன மதம் சார்ந்த அறநெறிகள், 20 ஆண்டு பழைய மெடிக்கல் காலேஜ் சிலபஸ், பன்னாட்டு கம்பனிகளின் லாபிகள்,,இவையே இந்த நம்பிக்கைகளுக்கு காரணம். சைவ உணவு இயற்கைக்கு முரணானது மட்டுமின்றி, பல்லுயிர் பெருக்கம், புவிநலன், உடல்நலன் என பல வகைகளில் உலகுக்கும், மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் கேடு விளைவிப்பதாகும். அதன் தீமைகளையும், கற்பனைகளையும் ஆராய்வோம்.
மனித இன வரலாற்றை ஆராய்ந்தால் மனிதன் இறைச்சி உண்ணாத காலகட்டமே நம் பரிணாம வரலாற்றில் கிடையாது. கிட்டதட்ட 34 லட்சம் ஆண்டுக்கு முந்தைய லூஸி எனும் நம் மூதாதையின் எலும்புக்கூடு தான் நமக்கு கிடைத்ததிலேயே மிக தொன்மையான எலும்புகூடு. லூஸி மாமிச பக்ஷிணி. லூஸியின் எலும்புகூடு கிடைத்த பகுதிகளில் எலும்பில் இருந்து மாமிசத்தை கற்களாக லூஸி சுரண்டு உண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இப்படி 3.4 மில்லியன் ஆண்டுக்கு முன்பு துவங்கும் நம் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி வரலாறு பின்பு ஹோமோ எரெக்டஸ், ஹோமோசாபியன்ஸ், நியாண்டர்தால் என சென்று நவீன நியோலிதிக் மனிதனில் வந்து நிற்கிறது. இந்த 3.4 லட்சம் ஆண்டுகளில் குரங்கின் மூளைபகுதி பெரிதானது, வால் விழுந்தது, நாலு காலில் இருந்து இரு கால்களில் நடக்க துவங்கினோம், கற்கருவிகளை செய்தோம், நெருப்பை கண்டுபிடித்தோம்..இப்படி குரங்கில் இருந்து மனிதனான இத்தனை லட்சம் ஆண்டுகளில் எந்த காலகட்டத்திலும் மனிதன் சைவ உணவுவழக்கத்தை கைகொண்டது கிடையாது. நம் காலரி தேவைகளில் பெரும்பகுதியை மாமிசமே பூர்த்தி செய்தது. அதுவும் இன்றைய மருத்துவர்கள் உடல்நலனுக்கு கெடுதல் என சொல்லும் கொழுப்பும், கொலஸ்டிராலும் நிரம்பிய சிகப்பு மாமிசம் தான் நம் பெரும்பகுதி காலரி தேவைகளை பூர்த்தி செய்தது. மிகபெரும் சைஸில் இருந்த கம்பளியானை, காட்டேருமை போன்ற மிருகங்களை தான் ஆதிமனிதன் வேட்டையாடி உண்டான். இன்றைக்கும் பூமியெங்கும் பரவி இருக்கும் எஸ்கிமோ, சான் புஷ்மன் போன்ற தொல்பழங்குடிகளில் ஒரே ஒரு குடி கூட சைவ உணவுவழக்கத்தை கொண்டிருப்பது கிடையாது.
ஆக குரங்காக இருந்தவனை மனிதனாக்கிய உணவு அசைவம், குறிப்பாக சிகப்பு மாமிசம். அது எப்படி திடீர் என நமக்கு கெடுதலானதாக ஆகிவிடும்? ஆதிமனிதன் எக் ஒய்ட்ஸை தான் சாப்பிட்டானா? முட்டையை கொலஸ்டிரால் என சொல்லி உண்ணாமல் விட்டானா? இன்றைய சைவர்கள் உண்ணும் அரிசி, பருப்பு, கோதுமை, பீன்ஸ், பயத்தம்பருப்பு, பாசிபருப்பு, ஸ்கிம் மில்க், பச்சைபட்டாணி…இது எல்லாம் என்னவென்றே 10,000 ஆண்டுக்கு முன்பிருந்த மனிதனுக்கு தெரியாது. அன்று அவன் உண்டது மாமிசம், சில காய்கறிகள், கொட்டைகள், விதைகள், சில கிழங்குகள் மட்டுமே. அதிலும் இன்று இருப்பதுபோல் வருடம் முழுக்க தக்காளி, காலிபிளவர் கிடைக்கும் என்ற நிலை எல்லாம் அன்று இல்லை. காய்கறிகள் ஒரு குறிப்பிட்ட மாதம் மட்டுமே முளைக்கும். மீதி நாட்களில் மாமிசம் மட்டுமே உணவு தேவையை பூர்த்தி செய்தது.
சிங்கத்தின் இயற்கை உணவு மாமிசம். ஆயுள் முழுக்க மூன்று வேளையும் அதனால் மாமிசத்தை மட்டுமே உண்டு உயிர்பிழைக்க முடியும். அதே போல் மனிதன் முற்றிலும் மிருக உணவுகளை தவிர்த்துவிட்டு மூன்று வேளையும் தாவர உணவுகளை மட்டுமே உண்டு உயிர்பிழைக்க முடியுமா? முடியாது. தாவர உணவுகளில் கீழ்கண்ட மூல சத்துக்கள் கிடையாது.
பி12 வைட்டமின். இது எந்த தாவர உணவிலும் கிடையாது. பி12 முட்டை, மாமிசம், மீன், பால் போன்ற மிருக உணவுகள் மூலம் மட்டுமே கிடைக்கும். பால் சைவ உணவுதானே என கேட்கலாம். மாட்டுப்பாலை மனிதன் உண்ணத்துவங்கியது 4000 ஆண்டுக்கு முன்பே. ஒரு பரிணாம விபத்தால் மனிதரில் சிலருக்கு இருந்த லாக்டோஸ் அலர்ஜி அகன்றது. ஆனால் இன்றும் சீனாவில் 90% மக்களுக்கு லாக்டோஸ் அலர்ஜி உண்டு. பெருமளவு சீனர்கள் பாலையும், சீஸ் போன்ற பொருட்களையும் உண்ணுவது கிடையாது. சீனர்கள் சைவ உணவு வழக்கத்தை கைகொண்டால் அவர்கள் பி12 தட்டுபாட்டால் மரணிக்க வேண்டியதுதான். சீனர்கள் தவிர்த்து உலகின் பல நாடுகளில் பல இனத்து மக்கள் லக்டோஸ் அலர்ஜியுடன் இருப்பதை காணலாம். ஆக சைவ உணவு மட்டுமே கைகொள்பவர்கள் பி12 தட்டுபாட்டால் உடல்நலன் பாதிக்கபட்டு மரணமும் அடைய நேரும். இந்திய சைவர்கள் பால் சாப்பிட்டு வைட்டமின் பி12 தட்டுபாட்டில் இருந்து தப்பலாம் என வைத்துகொள்ளுங்கள். ஆனால் 4000 வருடங்களுக்கு முந்தைய இந்திய சைவர்கள் என்ன செய்திருப்பார்கள்? ஆண்டவன் என்ன 34 லட்சம் ஆண்டிலிருந்து கிமு 6000 வரை மனிதர்கள் அசைவமாக இருக்கவேண்டும், அதன்பின் சைவமாக இருக்கவேண்டும் என திட்டமிட்டானா?
வைட்டமின் ஏ: இதுவும் எந்த தாவர உணவிலும் கிடையாது. ஈரல், முட்டை, மிருகங்களின் கண், காட்லிவர் மீன் எண்ணெய் போன்ற அசைவ உணவுகளில் மட்டுமே வைட்டமின் ஏ கிடைக்கும். காரட்டில், கீரையில் வைட்டமின் ஏ இருப்பதாக சைவர்கள் தவறாக நம்புகிறார்கள்.
வைட்டமின் ஏவின் மிருக வடிவம் ரெடினால். தாவர வடிவம் பீடா காரடின். நாமும் மிருகங்கள் தான் என்பதை நினைவில் கொண்டால் நமக்கு ரெடினாலே முக்கியம் என்பது தெரியும். பீடா காரடினை சில நிபந்தனைகளுக்குட்பட்டு உடலால் வைட்டமின் ஏவாக மாற்ற முடியும். ஆனால் குழந்தைகள், டயபடிஸ் உள்ளவர்கள், தயரய்டு சுரப்பியில் பிரச்சனை உள்ளவர்கள், கடும் உடல் உழைப்பில் ஈடுபடும் உழைப்பாளிகள் இவர்களால் பீடா காரடினை வைட்டமின் ஏவாக மாற்ற முடியது. ஆக 8, 9 வயது சைவகுழந்தைகள் காரட் சாப்பிட்டு வைட்டமின் ஏ கிடைக்கிறது என நம்பினால் ஏமாந்து தான் போவார்கள். கிலோகணக்கில் குழந்தைகள் காரட் உண்டாலும் பலன் கிடையாது. பாலில் சிறிதளவு வைட்டமின் ஏ உண்டு. ஆனால் உடலுக்கு அன்றாடம் தேவையான அளவு வைட்டமின் ஏவை பாலால் கொடுக்க முடியாது.
மேலும் வைட்டமின் ஏ கொழுப்பில் கரையும் வைட்டமின். ஸ்க்கிம் மில்க் என்ற பெயரில் பாலில் இருக்கும் கொழுப்பை எடுத்துவிட்டு குடித்தால் அதில் உள்ள வைட்டமின் ஏ உடலில் சேராது. வைட்டமின் ஏ பற்றாகுறை கண்பார்வை கோளாறுகள், மாலைக்கண் வியாதி ஆகியவற்றை உருவாக்கும்.
வைட்டமின் டி3: எந்த தாவர உணவிலும் டி3 கிடையாது. வைட்டமின் டியில் இருவகை உண்டு. டி2, டி3. டி3 கிடைக்க சிறப்பான வழி சூரிய ஒளி. சூரிய ஒளி உடலில் பட்டால் உடல் அதில் இருந்து டி3 தயாரித்து கொள்ளும். உணவு மூலம்  டி3 பெறவேண்டுமெனில் முட்டை, மீன், மாமிசம், பால் போன்றவற்றில் மட்டுமே டி3 உண்டு.
டி3யை உணவின் மூலம் பெறாமல் சூரிய வெளிச்சத்தின் மூலம் பெற்றுகொள்வோம் என சைவர்கள் நினைக்கலாம். ஆனால் புதுடில்லிக்கு வடக்கே நீங்கள் இருந்தால் வருடத்தில் ஏழெட்டு மாதம் வைட்டமின் டி சூரிய ஒளியில் கிடைக்காது. டில்லிக்கு வடக்கே இருப்பவர்கள் சைவ உணவு வழக்கத்தை கடைபிடித்தால் மரணம் அடையவேண்டியதுதான். ஆண்டவன் என்ன காஷ்மிரிலும், திபெத்திலும் மனிதன்  வாழ கூடாது என திட்டமிட்டானா?
சூரிய வெளிச்சம் ஏராளமாக கிடைக்கும் இந்திய திருநாட்டிலும் 80% மக்கள் வைட்டமின் டி குறைபட்டால் அவதிபடுவதை காணலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் வருடம் ஏழெட்டு மாதம் சூரியனையே காண இயலாத நார்டிக் நாடுகள், அலாஸ்கா முதலான பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் வைட்டமின் டி தட்டுபாடு இல்லை. காரணம் அவர்கள் உண்ணும் கொழுப்பு நிரம்பிய கடல்மீன், சீல், வால்ரஸ், சால்மன் முதலான மீன்கள் அவர்களுக்கு தேவையான வைட்டமின் டியை ஏராளமாக கொடுத்துவிடுகின்றன. ஆக சைவ உணவுவழக்கம் சூரிய வெளிச்சம் ஏராளமாக இருக்கும் நம் நாட்டு மக்களையும் வைட்டமின் டி3 தட்டுபாட்டில் இருந்து காக்கவில்லை.
பாலில் இருக்கும் வைட்டமின் டி3 அளவு போதாது. வைட்டமின் ஏ, டி3க்காக முழுக்க, முழுக்க பாலை மட்டுமே நம்பி இருந்தால் ஆபத்தே. பாலையும் பருக முடியாத லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ள சீனர்கள் எப்படி சைவர் ஆவது எப்படி சாத்தியம்?
இதுபோக சைவ பெண்கள் அனிமியா எனும் இரும்புசத்து பற்றாகுறையால் அவதிபடுவதை காணலாம். சைவர்களுக்கு உணவின் மூலம் இரும்புசத்தை அடைய முயல்வது மிக கடினம். காரணம் சைவ உணவுகள் அனைத்திலும் நான்-ஹெமே வகை இரும்புசத்து உள்ளது. இவற்றை உடல் கிரகிப்பது மிக கடினம். உதாரணம் கீரையில் இரும்புசத்து அதிகம். ஆனால் கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் அந்த இரும்பை உடல் கிரகிப்பதை தடுத்துவிடும். கீரையில் உள்ளதில் 2% அளவேனும் இரும்பு உடலில் சேர்ந்தால் அதிசயம்.
உலர்திராட்சை, பேரிச்சை, கோதுமை முதலானவற்றுக்கும் இதே நிலைதான். பேரிச்சையில் இரும்பு அதிகம் என பலரும் நம்பி வந்தாலும் அதில் உண்மை இல்லை. தினம் நூறு பேரிச்சை பழம் உண்டால் மட்டுமே 19- 50 வயது பெண்ணுக்கு போதுமான இரும்புசத்து கிடைக்கும். ஆனால் அதிலும் கிரகிக்கபடும் இரும்பின் சதவிகிதம் மிக குறைவு
அசைவர்கள் முட்டை, சிக்கன், ஈரல் முதலானவற்றில் போதுமான அளவு இரும்புசத்தை எளிதில் அடையலாம். உதாரணம் 4 முட்டை உண்டால் அதில் 2.4 கிராம் அளவு எளிதில் கிரகிக்கபடும் ஹீமே வகை இரும்புசத்து கிடைக்கும். நூறுகிராம் ஈரலில் ஒரு நாளைக்கு தேவையானதில் 130% இரும்புசத்து கிடைக்கும். அசைவ உணவுகளில் உள்ள இரும்புசத்து எளிதில் கிரகிக்கபட காரணம் அது ஹீமோக்ளோபின் வடிவில் இருப்பதுதான்.
சைவ உணவுவழக்கத்தை கைகொள்ளூம் பெண்கள் அனிமியாவால் ஏராளமாக பாதிக்கபடுவார்கள். இந்திய பெண்களில் சுமார் மூன்றில் இரு பங்கு பெண்களுக்கு அனிமியா பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மாதவிலக்கு/பிள்ளைபேறு முதலான காலங்களில் இரும்புசத்தின் தேவை அதிகரிக்கும்.
வைட்டமின் மாத்திரை உண்டால் போதாதா? இதெல்லாம் ஒரு பிரச்சனையா என நினைக்கலாம். ஆனால் மனித உடல் மாத்திரைகளில் இருக்கும் சிந்தடிக் வைட்டமின்களை ஏற்றுகொள்வது கிடையாது. பல வைட்டமின் மாத்திரைகளில் இருக்கும் வைட்டமின்கள் மனித உடலால் பயன்பட இயலாத வடிவில் இருப்பவை. இயற்கையாக உணவில் கிடைக்கும் வைட்டமின்களே மனிதனுக்கு நன்மையளிப்பவை.
சைவ உணவின் உடல்நலன் சார்ந்த சிக்கல்களில் நூற்றில் ஒரு பகுதியே மேலே இருப்பது. அடுத்த பகுதிகளில் மாமிச உணவு உடலுக்கு கெடுதலானதா, கான்சரை வரவழைக்க கூடியதா என்பதையும் சைவ உணவு வழக்கத்தால் வரும் மேலும் பல சிக்கல்களையும் ஆராய்வோம்.
Series Navigation
author

செல்வன்

Similar Posts

13 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //இன்றைய சைவர்கள் உண்ணும் அரிசி, பருப்பு, கோதுமை, பீன்ஸ், பயத்தம்பருப்பு, பாசிபருப்பு, ஸ்கிம் மில்க், பச்சைபட்டாணி…இது எல்லாம் என்னவென்றே 10,000 ஆண்டுக்கு முன்.பிருந்த மனிதனுக்கு தெரியாது. அன்று அவன் உண்டது மாமிசம்.//

    திரு.செல்வன் அவர்கள் சொல்வது அறிவியல் உண்மை.
    சுமார் 8 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாவில் வாழ்ந்த பூர்வகுடி ஐரோப்பியர்கள், காட்டு மிருகங்களை வேட்டையாடி உண்ணும் நாடோடிகளாக (Hunter &Gatherer) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியப் பயிர், விவசாய விளைபொருள் உற்பத்தி முறை தெரிந்திருக்கவில்லை. மிருகங்களை வேட்டையாடி மிருகங்கள் போல் வாழ்ந்து வந்தனர். ஆனால் 7500 வருடங்களில் அதாவது 500 வருடங்களில் வேளாண் உற்பத்தி முறை அறிந்து பயிர்த்தொழில் சாகுபடி செய்து விவசாயிகளாக மாறிய நிகழ்ச்சி, மானிட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

    விலங்கோடு விலங்காக வாழ்ந்த ஐரோப்பியர்கள் எப்படி விவசாயத்தை அறிந்தனர். ஒரு 500 வருடங்களுக்கு முன்பு பசுமைப்புரட்சி ஏற்பட காரணம் என்ன? விவசாயத்தை கற்றுக்கொடுத்தவர்கள் யார்? என்ற கேள்வி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நீடித்து வந்தது. இன்றைய நவீன (GENETIC) மரபியல் சோதனை முடிவுகள் இக்கேள்விகளுக்கு உரிய பதிலை சமீபத்தில் வெளிப்படுத்தின.

    ஆஸ்திரேலியா அடிலெய்டு பல்கலைக்கழகமும் மற்றும் (Australian Centre for Ancient DNA-ACAD) ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் எஸ்தோனியா நாட்டு ஆய்வாளர்கள் குழு ஒன்றிணைந்து ஜெர்மனி, ஹங்கேரி, இங்கிலாந்து நாட்டிலுள்ள பழம்பெரும் புதைகுழிகளை கல்லறைகளை ஆராய்தனர். அங்கு அடக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளை சோதித்து அதன் DNA மூலக்கூறுகளை பிரித்தெடுத்தனர்.
    பொதுவாக ஸ்டிரோசியம் ( Sr) என்ற தனிமம் Element நமது எலும்பில் உள்ளடங்கி உள்ளது. நீரில் உள்ள Sr ‘Sr’ ஆனது நாம் நீர் உட்கொள்ளும்போது உடம்பில் உள்ள எலும்பில் படிந்து விடும். இதுபோல் நீரருந்தும் விலங்குகள் தாவரங்களிலும் இந்த ஸ்டிரோசியம் படிவதுண்டு.

    தாவரங்களை உண்ணும ஆடு, மாடு போன்ற கால்நடைகளிலும் ஸ்டிரோசியம் படியும். ஆனால் கால்நடைகளின் கழிவில் பெரும்பாலான ஸ்டிரோசியம் வெளியேறிவிடும். எனவே இந்த விலங்குகளை வேட்டையாடி உண்ணும பழக்கமுள்ள ஐரோப்பிய பூர்வகுடி மனிதர்களின் எலும்புகளில் இந்த ஸ்டிரோசியத்தின் அளவு மிகக்குறைவாகவே இருந்துள்ளது.

    ஆனால் அதே சமயம் ஐரோப்பா முழுவதும் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புராதன புதைகுழி எலும்புகளில் இந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரம் மிக அதிக அளவில் இருந்தது. காரணம் இம்மக்களது உணவுப்பழக்கம் தானியங்களாக இருந்ததுதான். ஆகவே இவர்கள் தான் ஐரோப்பாவிற்கு முதன் முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவர்கள் என்று அறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.

    இறுதியில் ஐரோப்பாவில் விவசாயம் செய்த முதல் விவசாயியின் DNA மாதிரிகளின் தொடர்ச்சி பிரான்ஸ், ஹங்கேரி, துருக்கி, சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் முடிந்தது. ஐரோப்பாவிற்கு விவசாயத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் மத்திய கிழக்கு அரபு மக்களே என்று அறிவியல் உலகம் ஒப்புகொண்டது.

  2. Avatar
    ஷாலி says:

    குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.அந்த தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்.
    குறிஞ்சி நிலத்தவர் உணவு:
    சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.)
    திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169)
    குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183)
    மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ).

    பாலை நிலத்தார் உணவு:
    ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133).

    முல்லை நிலத்தார் உணவு;
    பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445).

    மருத நிலத்தார் உணவு;
    மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. ( 216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256).

    நெய்தல் நிலத்தார் உணவு;
    நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

    இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு.இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.? சைவ ஸ்மிதா கூறுவாரா?

    1. Avatar
      paandiyan says:

      //கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).
      //

      Tasmac should implement the same asap. see many years ago we have implemented this.. why not now?

  3. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஷாலி அவர்களே,

    பண்டைய தமிழர்கள் பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள். செப்பிலும், கல்லிலும் அரச கட்டளைகளை எழுதினார்கள். எண்ணை விளக்கில் இருளைப் போக்கினார்கள். முரசடித்து செய்தியைப் பரப்பினார்கள்.

    இப்பொழுதும் அதையா செய்கிறார்கள்? காலப் போக்கில் மாறுகிறார்கள். அதையே பரிணாம வளர்ச்சி என்கிறோம்.

    சைவமோ, அசைவமே, யாருக்கு எதில் விருப்பம் உள்ளதோ, அதை உண்டுவிட்டும் போகட்டும்.

    அவரவர் அவரவர் உணவுப் பழக்கமே சிறந்தது என்றும் வாதம் புரியட்டும். ஆரோக்கியப் புள்ளி விவரங்களை எடுத்து வைக்கட்டும்.

    இதில் பழந்தமிழர் பெருமை பேசி, ஒரு உணவுப் பழக்கத்தை சிறப்பிக்க வேண்டிய தேவை என்ன வந்தது?

    இது புள்ளி விவரம்:
    அமெரிக்கர்களில் ஐந்து விழுக்காட்டோர் சைவ உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டால், அதனால் சேமிக்கப்படும் தானியங்களைக்கொண்டு உலகப் பசியைத் தீர்த்து விடலாம்.

  4. Avatar
    Prakash Devaraju says:

    ஷாலி அவர்க​​ளே! அறிவிய​லையும் இலக்கியத்​தையும் ​சேர்த்து ​செம கட்டு கட்டுகிறீர்கள்! இலக்கியத்தில் ஐவ​கை நில மக்கள் இத்த​கைய உணவுக​ளை உண்டனர் என்று வருவதால், அவ்வுணவுக​​​ளே அவர்களது staple diet என்று எடுத்துக்​கொள்வது சரியா ? தினமும் கள் குடித்தால் என்னாவது ?

    எனக்​கு மற்று​மொரு சந்​தேகம் – சங்க காலங்களில் ஜாதிகள் எவ்வாறிருந்திருக்கும் ? அந்தணர்கள் இருந்ததாக பல பாடல்களில் வருகின்ற​தே – அவ்வந்தணர்களும் அந்நாளில் மாமிசம் உண்டனரா? திருக்குறள் – உலகப்​​​பொதும​றை என்று கூறினாலும், பல குறள்களில் வரும் இம்​மை, மரு​மை, ஊன் உண்ணா​மை அதிகாரம் – ​போன்னறவற்​றை ​வைத்து பார்க்கும்​போது வள்ளுவமும் ஒரு மாதிரியான சமண/இந்து நுல் ​போல் ​தோன்றுகிறது. வள்ளுவன் காலத்திலிருந்​தே ஊன் உண்பவர்களும், அது அறச்​செயலன்று என்று கூறுபவர்களும் மாயந்து​​கொண்டிருக்கின்றனர் ​போலும்.

    ​@Smitha…saw your argument about lack of fiber in non-veg food ​in an earlier article. You are right that food from animal sources lack fiber. But, non-vegetarians do eat vegetarian foods and the vice versa does not happen. In fact, many indian non-vegetarians are occasional non-vegetarians and food sources from animals are just a part of their diet. So, while vegetarians can lack some of the ‘nutrients which come only from animal sources’, non-vegetarians have lesser likelihood of such happening.

  5. Avatar
    arun says:

    bringing down the history of Hindus/saivism to just 4000 years is ridiculous. why you are becoming self-proclaimed historians of this great nation? One can be very well a vegetarian or non-vegetarian. food is more of a personal thing like god. Here, no one should pose as if eating flesh alone is superior and all vegetarians are sick and anemic.

    1. Avatar
      I I M Ganapti Raman says:

      When you say ‘ridiculous’, you become a dictatorial historian yourself. Physician, heal thyself !

      Shali does not mean ‘staple diet’; but indicates or wants us to infer, that, in ancient Tamilnadu, non vegetarian food was common with people. They ate all kinds of bizarre non-vegan food just as the Chinese or the Thai-s or Vietamese eat today; which is not surprising because sophistication and pretensions came to us when we became ‘modern’. The vegetarians in ancient Tamil society, in that sense, were Bostonians i.e. people who looked down upon others and lived aloof from common society.

      Valluvar comes in the period of Tamil history, i.e. what is called the last Sangam period. Some scholars push him even after that i.e. Sangam maruviya kalam or Kaappiya Kalam. Be that as it may, his paranoid insistence on vegan food, bias against common entertainment of masses like drinking country liquor kallu and his daringness to advise Kings show him a fanatic Jain monk not in touch with ground realities or experienced the life an average Tamilian of his time but close to corridors of power. Ka Na Subramaniam and others even say Konda Konda Acharya was his Jain name. Tamilnadu Jains have a temple for him somewhere in Madurai Dist I remember to have read.

      In short, that may shock you, he does not represent the life adopted by common Tamils of his times, instead, he represents an ideal life only. His book of maxims Kural contain ideals which cannot be realised by ordinary mortals like you and me. He is for the elite of society. For that matter, whoever insists of veganism only, is an elite member of society. Common masses don’t have that pretension: anything is ok provided it comes cheap and in plenty for them. Poverty and hunger don’t stand on prestige and status.

  6. Avatar
    செல்வன் says:

    உணவு பர்சனல் தேர்வு
    யார் யாருக்கு எது விருப்பமோ அதை உண்டுவிட்டு போகட்டும்

    இவை எல்லாம் சரிதான். ஆனால் முழுமையான விவரங்களை தெரிந்துகொண்டு, இரு உணவு வழக்கங்களிலும் இருக்கும் நன்மை/ தீமைகளை அறிந்து கொண்டு முடிவெடுக்கவேண்டும். உதாரணமாக இக்கட்டுரையில் சைவர்களுக்கு பி12, வைட்டமின் ஏ, வைட்டமின் டி3 குறைவால் வரும் பாதிப்புகள் குறித்து விளக்கபட்டுள்ளது. நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சைவர்களாக இருக்கும் பொழுது இவை எல்லாம் விவாதிக்கபடுவதும், ஆராயபடுவதும் அவசியம் ஆகிறது

  7. Avatar
    smitha says:

    Selvan,

    As I have said earlier, I have lisetd some foods other than leafy vegerables & carrot for vitamiun A for which you have no answer. Ditto for the fibre content topic.

    Just because Vit A is less (as per ur opinion) in vegetarian food does not mean that it is less nutritional than non veg food.

    There are many more things to it.

    The title itself is misleading.

    U are going with a precondition that non veg food is better.

    This is not the right way to start a debate.

  8. Avatar
    Selvaa says:

    குரங்கு இனத்தைச் சேர்ந்தவன் மனிதன் அவ்வாறெனில் குரங்கின் உணவு முறையை பின்பற்றி காய், கனி, கிழங்கு, புற்றீசல்,உண்டு வந்தவன், வன வாழ்க்கையில் வேட்டையாடி புலி , சிங்கம் 2ண்ட பின் போட்டுச் சென்ற விலங்குகளின் கறியை உண்டு ருசி கண்டவன் தான் அதையே உண்ண விரும்பி, பின்னர் எல்லாவற்றையும் உண்ண அலைந்து இந் நிலைக்கு வந்து நிற்கின்றான். உணவு அவரவர் விருப்பம், எதையெல்லாம் உடல் ஏற்கிறதோ அதை உண்டு, உடல் 2ழைப்போடு வாழ்ந்தாலும் முதுமையால் வரும் நோயிலி ருந்து தப்ப முடியாது. உயிர் கொலை கொடிது. உண்பவர்களை தடுப்பது யாருடைய உரிமையுமல்ல

    1. Avatar
      தி. தமிழ்ச்செல்வன் says:

      மனிதன் தோன்றியதே இன்னும், இன்றும் ஆய்வுக்குரியதாக இருக்கிறது. ஆறாம் அறிவு என்னும் ‘சிந்தனை ஆற்றல்’ பெற்றே மனிதன் தோன்றினான். அச்சிந்தனையில் விளைந்ததுதான் “நாகரிகம்” என்னும் பயன்பாடு (பண்பாடு). அறிவில் முதிர்ச்சி அடைய அடைய தீயவற்றை அகற்றி நல்லனவற்றைத் தொடர்ந்தான். அவற்றில் ஒன்றுதான் மனிதனை மனிதன் கொன்று ‘நரமாமிசம்’ உண்ட காலம் போய் விலங்கு மாமிசம் மட்டுமே சாப்பிட்டு வந்தான். மேலும் அறிவு முதிர்ச்சி அடையும்போது, மற்ற உயிர்களை கொன்று தின்பது பாவம் என்று உணர்ந்து அதை விடுத்து காய்கறிகளை மட்டுமே உண்கிறான்.

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *