சொல்லித் தீராத சங்கிலி

This entry is part 28 of 30 in the series 20 ஜனவரி 2013

 

 

எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று

வர்ணத் திரைச்சீலைக்கப்பால்

சமையலறையில் உறைகிறது

வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள்

யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு

ஏறிச் செல்லப் பாதங்களில்லை

 

கூடத்தில்

வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது

பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று

காலணி தாங்கும் தட்டு

தடயங்களைக் காக்கிறது

 

ஒரு தண்ணீர்க் குவளை

தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று

வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி

வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு

என்னவோர் எழில் சேர்க்கின்றன இவை

 

பிரகாசிக்கும் கண்கள்

செவ்வர்ணம் மிகைத்த ஓவியமொன்றென

ஆகாயம் எண்ணும்படியாக

பலகை வேலிக்கப்பால் துள்ளிக் குதித்திடும்

கறுப்பு முயல்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்

 

எந்த விருந்தினரின் வருகையையோ

எதிரொலிக்கிறது காகம்

அவர் முன்னால் அரங்கேற்றிடவென

வீட்டைத் தாங்கும் தூண்களிரண்டின் இதயங்களுக்குள்

ஒத்திசைவான நாடகமொன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது

 

இரவின் அந்தகாரத்துக்குள் ஒளிந்துபோன

காதலின் பெருந்தீபம்

சொல்லித் தீராத சங்கிலியொன்றோடு

மௌனத்தைப் பிணைத்திருக்கிறது

என்னிலும் உன்னிலும்

 

– எம்.ரிஷான் ஷெரீப்

 

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *