ஜரகண்டி

This entry is part 18 of 42 in the series 25 நவம்பர் 2012

– எஸ்ஸார்சி

அவன் எழுதிய புத்தகத்திற்குத்தான் அந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் விருது என்று அறிவித்திருந்தார்கள். செய்தித்தாளில் அந்த அறிவிப்பு வந்திருக்கிறதே. அப்படி எல்லாம் அவனைப்போன்ற விருது என்ற ஒன்றினை வாங்கிவிடும் பிரத்தியேக அரசியல் அல்லது கலை தெரியாதவர்கட்கெல்லாம் இந்த காலத்தில் விருது அறிவிப்பு சொல்லி விடுவார்களா. ஆனாலும் சொல்லி இருக்கிறார்களே. அவன் அடிமனத்தில் கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொண்டான். செல் பேசியில் யாரெல்லாமோ அழைத்தார்கள். வாழ்த்துச் சொன்னார்கள். ‘எனக்கு உங்கள் படைப்பைபப்படித்த அப்போதே தெரிந்து விட்டது.. இதற்கு நிச்சயம் பரிசு உண்டென்று’ சொன்னவர் அவன் எழுதிய புத்தகம் என்று ஒன்றையும் கண்ணால் பார்த்ததே இல்லை. அவர் எழுதிய அந்த புத்தகத்தை தொட்டுக்கூட பார்த்திருக்க மாட்டார்
‘ அந்த புத்தகத்தின் தலைப்பு என்ன’
‘கனவு மெய்ப்படும்’
‘சிறுகதையா இல்லை’ என்று இழுத்தார்.
‘ இல்லை புதினம்’
‘பெரிய புத்தகம்ல’
‘ இல்ல அளவு சின்னதுதான்’
‘சாதிப்பிரச்சனை பற்றி எழுதி யிருந்தீங்கல்ல’
‘ இல்ல அது தொழிலாளி பிரச்சனை சார்’
‘ அப்படி சொல்லுங்க, அதான் பரிசு உங்களை த்தேடி வந்திருக்குது. ஒண்ணும் சும்மா இல்ல’
மனிதனால் எப்படி எல்லாம் பேசமுடிகிறது.
பரிசு வழங்கு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அழகாக அச்சிட்டு அனுப்பி இருந்தார்கள். அவன் பெயர் அச்சிடப்பட்டு இருக்கிறதா என்று ஒருமுறை மீண்டும் பார்த்துக்கொண்டான். அய்ம்பது பேருக்கு விருதுகள் என்று பெயர்ப்பட்டியல் போட்டிருந்தார்கள், பின்னல் எம்ப்ராய்டரி கலை தொடங்கி சித்த வைத்தியம், கபடி விளையாட்டு சிறு விளக்கம், தாயக்கட்டை தன் வரலாறு கூறுதல் தென்னை நாறும் அதன் பயன்களும் என்று எத்தனை எத்தனையோ பிரிவுகள். விருதாளர் பட்டியல் நடுவே அவன் பெயரும் அவன் எழுதிய கனவு மெய்ப்படும் படைப்பின் பெயரும் கண்ணை ச்சிமிட்டிக்காட்டியது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு அவனை அழைத்திருந்தார்கள்.

நல்ல கலர்ச்சட்டையாக நிகழ்ச்சிக்கு ப்போய்வர ஒன்றை தேடிப்பார்த்தான். மனதிற்கு எதுவும் சரியாக இல்லை. சட்டைகள் கைவசம் இருப்பதில் ஒன்றை ப்பொருக்கி எடுத்து மாட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தான். போட்டுக்கொண்டு என்று சொன்னால் கொஞ்சம் சரி இல்லைதான். மாட்டிக்கொண்டு என்பதே சரி.
‘புதியதாய் என்ன அழகு கூட்டிக்கொண்டு விடுமா’ , அவன் மனைவி குறுக்கிட்டு நடப்புக்கு உரம் சேர்த்தாள்.
‘விசாகப்பட்டினத்தில் வேலை பார்க்கும் நம் பையனை இந்த நிகழ்ச்சிக்கு வா என அழைக்கலாமா எனக்கும் உள்ளூர ஆசை. அவன் வந்து இதெல்லாம் காணவேண்டுமென்று’.
‘ அழையுங்கள் எப்படியும் அவன் வழக்கமாய் வருபவன்தான் நிகழ்ச்சிக்கு வந்தமாதிரியும் ஆகும்’ இப்படி ப்பேசினால்தான் அவள் பேசுகிறாள் என்று அர்த்தம். ஆக அவனிடம் இது விஷயம் சொல்லி அவன் வருவது உறுதியானது.
‘ போட்டோ எடுத்தால் தேவலை. இதெல்லாம் இனியொரு முறை வாய்ப்பு நமக்குக்கிடைக்குமா என்ன’
‘ அதற்கெல்லாம் அங்கங்கே ஆள் வரும் நீங்கள் கவலையே பட வேண்டாம். போட்டோக்காரன் அவன் அவனுக்கு பிழைப்பு இருக்கிறதே’
பட்டென்று பதில் சொன்னாள்.
எப்போதும் அரசுப் பேருந்து, வேறு வழியே இல்லை என்றால் ஆட்டோ உயிரே போய் விடும் என்று அச்சம் வந்துவிட்டால் டாக்சி. எப்போதேனும் வாழ்க்கையில் நிகழும் அந்த ஒருமுறை ஜானவாசத்தில் நாதசுரக்காரன் முகம் பார்த்தபடிக்கு இம்மி இம்மியாய் நகரும் ஒரு ஒஜோசுக் கார் என்பதுவே நடைமுறைச் சாத்தியம்..
பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளன்று வாடகை டாக்சிக்கு புக் செய்தான். விசாகப்பட்டினத்திலிருந்து வந்த பையனோடு. அவனும் அவளும் டாக்சியில் ஏறி அமர்ந்துகொண்டார்கள். விழா அழைப்பிதழை பத்திரமாய் எடுத்து மடித்து வைத்துக்கொண்டான்.
‘ இதில் ஒண்ணும் குறைச்சல் இல்லை’
‘ அழைப்பிதழ் இல்லாவிட்டால் உள்ளே விடமாட்டேன் என்று வாசல் கேட்டிலேயே செக்யூரிடி சொன்னால் என்ன செய்வது அதுதான்,’
வள்ளுவர் கோட்டம் சுற்றி நோட்டம் விட்டான். விளம்பரம் சுவரொட்டிகள் ஏதும் இருக்குமா என்று பார்த்தான். ஒன்றும் காணோம்.
‘ என்னப்பா பார்க்கரே அது எல்லாம் ஒண்ணும் இருக்காது இது அரசாங்க பங்ஷன்’ பையன் அவனுக்கு ஒரு முறை நினைவு படுத்தினான்.
செக்ய்யுரிடி அவர்கள் மூவரையும் செக் செய்து உள்ளே அனுப்பி வைத்தான்.
அழைப்பிதழை எடுத்து செக்யுரிடியிடம் காண்பித்தான்.
‘சரி சரி உள்ள வையுங்க’
செக்யுரிடிக்கு என்ன இருந்தாலும் இத்தனை அலட்சியம் கூடாது என்று அவன் மனதில் மட்டும் நினைத்துக்கொண்டான்.
வள்ளுவர் கோட்டத்தில் விருது வாங்க வந்திருப்பவர்களை எல்லாம் ஒரு ஒரமாக அழைத்துப்போனார்கள். அழைப்பிதழை வாங்கிப்பார்த்து வந்தவர்கள் சரியான அதே நபர் தானா என்பதை உறுதி செய்தார்கள். நிகழ்ச்சிக்கான வட்ட வடிவ பாட்சை சட்டையில் குத்தி அதனை நிமிர்த்திவிட்டார்கள்
‘.பரிசுக்கு உங்க பேரு எப்ப எத்தனையாவதாக வரும்னு தெரிஞ்சிகிங்க மொதல்ல. பேரு படிக்க படிக்க மேடைக்குப் போயிகிட்டே இருக்கணும். இப்படியேப்போனா அந்தப்புறமா திரும்பி உங்க இடத்துக்கே மீண்டும் வந்து உக்காந்துகிணும். மொதல்வர் கை தொட்டுக் கொடுக்கறத கொஞ்சம் உடம்ப வளைச்சமாதிரி காட்டி வங்கிகணும் போட்டோ ஒண்ணு எடுப்பாங்க அதுக்குத்தக்கன நின்னுபுட்டு சட்டுனு அந்த எடத்தக்காலி பண்ணிடணும். அனாவசியமா சிரிக்கிறது எதுவும் கூடாது. வாய் திறந்து எதுவும் பேச அனுமதி இல்லை. கைகாலு பதனமா வச்சிகிணும் எந்த அங்க சேஷ்டையும் அங்க கூடவே கூடாது. வேற எந்த ஒரு ஜோலியும் மேடயில இல்ல.’
ஒரு அதிகாரி அவனுக்கும் அவனோடு அங்கே விருது வாங்க வந்தவர்கட்கும் வகுப்பு நடத்தி முடித்தார்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே அவர்களையெல்லாம் வரச்சொல்லி இருந்தார்கள். அவனுக்குப்பசி லேசாக எடுக்க ஆரம்பித்தது. ஏதேனும் சாப்பிட்டால் தேவலை என்றும் அவன் எண்ணினான். தாகம் எடுத்தது.
பார்வையாளர்களை அரங்கில் பட்டி பட்டியாக பிரித்து பிரித்து வைத்திருந்தார்கள். ஆடு மாடுகளுக்குத்தான் பட்டிகள் வைத்து அவை அடைக்கப்படும். ஏழுமலையானைத் தரிசிக்கப்போகிறவர்கள் காத்திருப்புக் கூண்டில் அடைபட்டு வருவதில்லையா என்ன. ஆக பட்டி என்று சொன்னால் ஒன்றும் தப்பாகி விடப்போவதில்லை.அவன் மனைவியும் மகனும் விருந்தினர் பட்டியில் அமர வைக்கப்பட்டனர்.
பரிசு வழங்கும் அரசுத் துறை அதிகாரிகள் அலுவலர்கள் வீட்டுத்திருவிழா ஆயிற்றே அவர்கட்குத் தனிப்பட்டி இருந்தது. அவர்கள் கொஞ்சம் அதிகமாய்த்தான் ஜில்புல் என்று அழகு செய்து கொண்டு சிரித்து சிரித்து ப்பேசிக்கொண்டே நேரம் போக்கினர்.
பரிசுபெறுவோர் பெயர் எழுதிய ஒரு ஒரு அட்டை தொங்கும் நாற்காலிகள் உள்ள பட்டியில் தன் பெயர் எழுதிக்கொண்ட நாற்காலியைத்தேடிப்பிடித்து அதனில் அமர்ந்துகொண்டான். ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து முடித்தான். புத்தகம் வெளியீட்டாளர்களுக்கு என ஒரு பட்டி அமைத்து நாற்காலிகள் உட்கார வேண்டியவரின் விலாசத்தை ஒட்டிக்கொண்டபடி விரைத்துக்கொண்டு நின்றன.
மிக முக்கியமானவர்கள் அமர்வதற்கென்று என ஒரு பட்டியும் முன் வரிசையில் மேடையை ஒட்டிக் காணப்பட்டது
அரசுத்துறை அதிகாரிகள் மட்டும் ஏதேனும் தின்றுகொண்டும் இல்லையென்றால்
ஏதேனும் ஒன்றை பாட்டிலில் வைத்துக் குடித்துக்கொண்டும் காணப்பட்டார்கள்
பரிசு வாங்க வந்திருந்தோர் யாரும் மனம் விட்டு பேசிக்கொண்டதாகத்தெரியவில்லை. பதிப்பகத்தாரொவ்வொருவரும் நிம்மதியாய் பேசிக்கொள்ளமுடியாதபடிக்குத்தான் சூழல் இருந்தது.
பார்வையாளர்கள் தம்மால் முடிந்தவரை உரக்கப் பேசிக்கொண்டேதான் அமர்ந்து இருந்தார்கள். விழா மேடையைத்துடைத்துக்கொண்டும் மைக்கை நோண்டிக்கொண்டும் இருவர் தொடர் பணியில் இருந்தார்கள். பரிசு பெறும் நூல்களின் மாதிரி ஒவ்வொன்றை மேசை போட்டு தூரத்தில் வைத்திருந்தார்கள். அவை புத்தகங்கள் என்று மட்டுமே தெரிந்தன. புத்தகத் தலைப்பு இன்னது என்று கூட படிக்கவும் முடியவில்லை.
கூடியிருந்தோரின் ஆரவாரம் முக்கியமானவர்கள் வந்துவிட்டதை உணர்த்தியது. உடன் மேடை நிரம்பியது.முதல்வர் வந்து ஆஜானுபாகுவாய் மேடையில் அமர்ந்துகொண்டார்.தமிழ்த்தாய்வாழ்த்தோடு நிகழ்வு ஆரம்பமானது..
முதல்வர் தமிழை வாழ்த்திப்பேச முக்கியமானவர்கள் முதல்வரை வாழ்த்திப்பேசினர். அம்மையப்பன் என்றால் என்ன உலகம் என்றால் என்ன என்கிற அந்த மாம்பழக்கதை அவனுக்கு மனதில் வந்துபோனது. விருதளிப்பு நிகழ்ச்சி துவங்கியது.
அவன் பெயரை விருதுக்கு அழைத்தார்கள். முதல்வர் தன் திருக்கரங்களால் சான்றிதழ் வழங்கினார்.. சால்வையை அருகிருந்த ஒருவர் அவனுக்குப்போர்த்திவிட போட்டோ வைபவமும் முடிந்தது. அடுத்த வினாடியே அவனைத் தள்ளிக்கொண்டு போய் தூரமாய்விட்டனர். சான்றிதழோடு காசோலை ஒன்றும் இருபதாயிரத்துக்கு வைத்திருந்தார்கள்.. அதனை ஒருமுறைக்கு இருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டான். அதனில் ஏதும் பிழை இருந்தால் யார் அப்புறமாய் எங்கெங்கு அலைவது. அதுவும் அந்த வங்கிக்காரியங்கள் சாதாரணமாய் நடந்துதான் விடுமா.
கூட்டம் கலையத்தொடங்கியது. மேடையில் இருந்தவர்கள் காலி செய்ய கீழே அமர்ந்திருந்தோரும் நகர்ந்துகொண்டே இருந்தார்கள்.
விசாகப்பட்டினத்திலிருந்து வந்திருந்த பையன் அப்பா எங்கே என்று அவனைத்தேடிக்கொண்டே இருந்தான். விருது பெற்றமைக்கு வாழ்த்து சொல்லலாம் என்று அவன் தேடியிருக்கலாம் அருகில் இருந்த அவன் மனைவிதான் பதில் சொன்னாள்.
‘ தம்பி அப்பாவ த்தேடுறயா லூசுவ எல்லாம் தோ பாரு அங்கயேதான் இன்னும் குந்தி இருக்கு ஒண்ணும் இன்னும் நாற்காலிய வுட்டு எழுந்திருக்கல’.’.
அவன் காதில் விழாது இது இருந்திருக்கலாம். ஆனால் காதில் நன்றாகவே விழுந்தது. .புதியதாய் இனிமேல் ஒன்றும் குடி முழுகிப்போய் விடாது. அவன் எண்ணிக்கொண்டான்.
காசோலையும் சான்றிதழும் கையில் பத்திரமாகவே இருந்தது.
‘ என்னப்பா ஜரகண்டி விருது வாங்கியாச்சா’ அவன் அருகே வந்து அவன் பையன் விசாரித்தான். அவன் சரியாகத்தான் சொல்கிறான். அப்படித்தான் திருப்பதி ஏழுமலையானை த்தரிசிக்கும் சமயம் கூட்டமாய் நெறிக்கும் சேவார்த்திகளை ஜரகண்டி ஜரகண்டி என்று ( தெலுங்கு பாஷையில் நகருங்க நகருங்க) தள்ளி த்தள்ளி விடுவார்கள். விருது வாங்கி வேளியே வருவது அப்படித்தான் அவனுக்கு அனுபவமானது.. ‘ என்ன இருந்தாலும் எழுத்தாளன் பிள்ளை அல்லவா நன்றாய்த்தான் உவமை சொல்கிறான்’ அவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டான். இப்போதெல்லாம் அவனை அரசு விருது பெற்ற எழுத்தாளர் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் அந்த சேதி எங்கே தெரிகிறது…
———————————————————————————–
. .. .. …

.

Series Navigationதெல்காப்பியம் கூறும் தன்மைப் பன்மையில் வினையடிகள்நாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

Leave a Reply to துளசி கோபால் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *