ஜல்லிக்கட்டுப் போராட்டம்   ஜல்லிக்கட்டுப் பாரம்பரியமும் நீதிமன்ற வழக்குகளும்

author
0 minutes, 37 seconds Read
This entry is part 2 of 14 in the series 5 பெப்ருவரி 2017

 

தமிழ்செல்வன்

 

தொன்றுதொட்டு வரும் ஜல்லிக்கட்டின் பாரம்பரியம்

 

ஏறு தழுவுதல் என்கிற சங்ககாலம் தொட்டுத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, தமிழகத்தின் சில பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரியமாகப் பொங்கல் திருவிழாக்காலங்களில் நடத்தப்படும் வீர விளையாட்டாகும். பெரும்பாலும் தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இவ்வீர விளையாட்டு, உண்மையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்திலேயே இருந்தது என்பதற்கான சான்று கிருஷ்ணரின் புகழ் பாடும் ஸ்ரீமத் பாகவதம் என்கிற நூலில் உள்ளது. கோசலை மன்னன் நக்னஜித்தின் மகளான நக்னஜீதி (சத்யா என்றும் அழைக்கப்பட்டாள்) என்பவளை மணப்பதற்காக கிருஷ்ணர் ஏழு காளைகளை அடக்கியதாகப் பாகவதம் கூறுகிறது. (http://tamilbtg.com/sri-krishnas-jallikattu/ )

ஜல்லிக்கட்டுப் - பாகவதம்

கோசலை மன்னன் நக்னஜித்தின் மகளான நக்னஜீதி ஆழ்வார் பாசுரங்களில் நப்பிண்ணை என்று குறிப்பிடுகிறாள். வைணவ ஆழ்வார்களான பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் கிருஷ்ணர் நப்பிண்ணையைக் கைப்பிடித்ததைப் பாடியுள்ளனர். ( http://www.tamilhindu.com/2009/12/who-is-nappinnai/ )

 

உலகின் தொன்மையான சிந்து சமவெளி நாகரிகத்திலும் ஏறு தழுவுதல் போன்ற காளைகள் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் இருந்துள்ளதாக ஐராவதம் மகாதேவன் போன்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அது சம்பந்தமான கல்முத்திரை இலச்சினைகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. (http://www.thehindu.com/todays-paper/Bull-baiting-of-yore/article15143051.ece)

 

சரஸ்வதி ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குனர் டாக்டர் எஸ்.கல்யாணராமன் அவர்களும் சிந்து-சரஸ்வதி நாகரிகக் காலத்திலேயே காளைகள் வேளாண்மையின் இன்றியமையாத அங்கமாக இருந்துள்ளதால் ஏறு தழுவும் பாரம்பரியம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளர்.

ஜல்லிக்கட்டு - சிந்து சமவெளி நாகரிகம்

பின் நாட்களில் தமிழ் மன்னர் காலங்களிலும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து வந்துள்ளது என்பதற்கான சான்றுகள் கலித்தொகை போன்ற சங்ககால இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் காணக்கிடைக்கின்றன.  சோழன் நல்லுருத்திரனார் என்கிற சங்ககாலப் புலவர் முல்லைத் திணை பாடலில், முல்லை நிலங்களில் வாழும் ஆயர் குல மக்கள் ஏறு தழுவுதல் என்கிற கலாச்சாரத்தைக் கடைப்பிடித்துவந்ததைப் பற்றி முல்லைக்களி என்கிற பாடலில் விரிவாகப் பாடியுள்ளார்.

 

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டில் பங்கு பெற்று உயிரை இழந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபடும் பண்பாடு கூட சில இடங்களில் இருந்திருக்கலாம் என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நாட்டு இன மாடுகளின் பெருக்கத்திற்கும், பாதுகாப்பிற்கும் கூட ஒருவகையில் இந்த ஜல்லிக்கட்டு பயனளித்துள்ளது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊர்க்கோவிலுக்கென்று ஒரு காளை மாட்டை நேர்ந்து கொள்வர். அதற்குக் கோவில் காளை என்று பெயர். அந்தக் காளையை ஊர் மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துப் பிள்ளை போலவே அன்பு செலுத்தி வளர்த்து வருவர். ஊரில் உள்ள பசுக்களையெல்லாம் இனக்கலப்பில் ஈடுபடுத்துவதற்கு அந்தக் காளைக்கு முன்னுரிமை உண்டு. அந்தக் காளை மூலம் பிறக்கும் காளைக்கன்றுகள் பலம் வாய்ந்ததாகவும் அழகானதாகவும் இருக்கும். கோவில்காளைகளை பரிமாறிக்கொள்ளும் பழக்கமும் வெவ்வேறு ஊர்களுக்கிடையே இருந்துள்ளது.

 

கோவில் காளையை சிவபெருமானின் வாகனம் நந்தி பகவானாக வழிபடும் பண்பாடு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது, வாடிவாசல் வழியே சீறிச் செல்லும் முதல் காளை கோவில் காளையாகத்தான் இருக்கும். கோவிலில் உள்ள தெய்வத்துக்கும் அந்தக் கோவில் காளைக்கும் பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு அந்தக் கோவில்காளையைத்தான் வாடிவாசல் வழியே செலுத்துவர். அதை எந்த வீரரும் அடக்க முனைய மாட்டார்கள். அது ஒரு சம்பிரதாயம் ஆகும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும்.

 

சில ஊர்களில் ஏறு தழுவதல் நடைபெறுவது போலவே, வேறு சில ஊர்களில் மஞ்சு விரட்டு என்கிற எருதோட்டம் நடைபெறுகின்றது. இதில் காளைகளை அடக்காமல், ஊரைச் சுற்றி அவற்றை விரட்டி ஓட்டிக்கொண்டு செல்வர்.

 

இவ்வாறாக பகவான் கிருஷ்ணர் காலத்திலிருந்து, சிந்து சமவெளி நாகரிகம், சங்ககாலம் வழியாக இன்றுவரைத் தொடர்ந்து வரும் ஏறு தழுவதல் என்கிற ஜல்லிக்கட்டு ஹிந்து மத, ஆன்மிக, கலாச்சாரப் பாரம்பரியத்தின் சின்னமாக விளங்குகிறது.

 

நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கின் வரலாறு 

 

கிராமப்புறங்களில் பொங்கல் திருவிழாக்களின் போது, கிராமக் கோவில்களைச் சார்ந்து விளையாடப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு, சமீப காலமாகக் கோவில் திருவிழாக்களும், அவை சார்ந்த கொண்டாட்டங்களும் சுற்றுலாத்துறைக்காகவும், அரசு வருமானத்துக்காகவும் வியாபாரமயமாக்கப்பட்டதன் விளைவாக, பாரம்பரியத்திலிருந்து விலகிச் சென்று வருமானம் ஈட்டித்தரும் விஷயங்களாக ஆகிப்போயின. அதன் விளைவாக ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கு பெறும் காளைமாடுகள் பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டன.

 

காளைகளுக்கு மது புகட்டுதல், அவற்றின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவுதல், மிளகாய், புகையிலை வைத்தல், அதன் வாலைக் கடித்தல், வாலை முறுக்குதல், வாடிவாசலிலிருந்து வெளியே செல்ல மறுக்கும் காளைகளைக் கூர்மையான குச்சிகளால் குத்தி உந்துதல் போன்ற பல சித்தரவதைகள் காளைகள் மீது நடத்தப்படன.

 

மேலும் விளையாட்டில் பங்கு பெறும் வீரர்களும் காளைகளும் இறந்துபோவதும், கடுமையாகக் காயமடைவதும் அதிகரிக்கத் தொடங்கியது. இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட விலங்குகள் நல அமைப்புகளும் விலங்குகள் நல ஆர்வலர்களும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மீதுத் தங்கள் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தனர். ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்கிறன குரல்கள் எழும்ப ஆரம்பித்தன.

 

ஆனால் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விலங்குகள் நல அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தமிழக அரசிடம் மனுக்களைச் சமர்ப்பித்துக்கொண்டுதான் இருந்துள்ளன. ஜல்லிக்கட்டு வழக்கின் வரலாறு பின்வருமாறு: –

 

South Indian Humanitarian League என்கிற அமைப்பும் Blue Cross of India என்கிற அமைப்பும்  30 வருடங்களுக்கு மேலாக, தமிழக சட்டமன்றத்தின் புகார்மனுக்கள் குழுவிடம் ஜல்லிக்கட்டைத் தடை செய்யவேண்டும் என்று,  தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளன.

 

2004: – ராமநாதபுரத்தில் ரேக்ளா போட்டி நடத்த அனுமதி கேட்டு வழக்கு போடப்படுகிறது. நீதிபதி இப்ரஹிம் கலிஃபுல்லா மாடுகளுக்கு காயம் ஏற்படாதவாறு போட்டியை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்து அனுமதி அளிக்கிறார்.

 

2006: – மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி மனு போடப்படுகிறது. ஜல்லிக்கட்டில் மகனை இழந்த தந்தை ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருகிறார்.  நீதிபதி பானுமதி, பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் முழுமைத்தன்மையைக் கவனத்தில் கொண்டு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா, எருதுப்போட்டி, இவை சம்பந்தமான அனைத்து விளையாட்டுக்களுக்கும் தடை செய்து உத்தரவிடுகிறார்.

 

2007: – நீதிபதி பானுமதியின் உத்தரவு மீதான மேல்முறையீடு நீதிபதி எலிபி தர்மாராவ் & நீதிபதி பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வருகிறது.  அவர்கள் மார்சு 9, 2007 அன்று பின்வருமாறு சிலக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்:

 

  • ஒரு மாதத்துக்கு முன்பாகப் பங்கேற்கும் காளைகளின் உரிமைதாரர்கள் விலங்குகள் நலவாரியத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

 

  • விலங்குகள் நல மருத்துவர் காளையின் ஆரோக்கியத்தைப் பரிசோதனை செய்து, அது போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி வாய்ந்தது என்று சன்றிதழ் அளிக்க வேண்டும்.

 

  • போட்டியில் பங்கேற்பவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று சோதனை செய்யப்பட வேண்டும்.

 

  • காளைக்ளுக்கு ஊக்க மருந்துகள் கொடுப்பது, கண்களில் மிளகாய்ப்பொடி, மிளகாய்கள், புகையிலை ஆகியவற்றைத் தேய்ப்பது, வால்களை முறுக்குவது, கடிப்பது போன்ற சித்தரவதைகள் செய்யக்கூடாது.

 

  • உள்ளூர் நீதிபதியிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற்ற பின்பு தான் போட்டி நடத்தப்பட வேண்டும்.

 

 

மேற்கண்ட கட்டுப்பாடுகளை விதித்து, ஜல்லிக்கட்டு அடத்த அனுமதி அளித்து, மாவட்ட ஆட்சியர் / உள்ளூர் நீதிபதி / காவல்துறை அதிகாரிகள் / கால்நடை மருத்துவர்கள் / விலங்குகள் நலவாரிய பிரதிநிதிகள் ஆகியோர் கண்காணிப்பின் கீழ் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடுகின்றனர்.

 

2007: – மேற்கண்ட உத்தரவை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் (AWBI), பீடா (PETA) அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. 27 ஜூலை 2007  அன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

 

2008: –  பிறகு நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் / ஏ.கே.பட்நாயக் அகியோர் ஜனவரி 11, 2008 அன்று ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை  விதித்தனர். ஆனால், அதைவிட மோசமாகக் காளைமாடுகள் துன்பத்திற்குள்ளாகும் ரேக்ளா போட்டிக்கு அனுமதி அளித்தனர்.  இரண்டே நாட்களில், அதாவது 13 ஜனவரி அன்று தமிழக அரசு மேல்முறையீடு  செய்ய, அதே நீதிபதிகள் ஜனவரி 15 அன்று ஜலிக்கட்டுக்கு அனுமதி அளித்துத் தீர்ப்பு அளித்தனர்.

 

2009: –  தமிழக அரசு சட்டமன்றத்தில் அவசரச் சட்ட மசோதா கொண்டுவந்து, ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் 2009  என்கிற சட்டத்தை நிறைவேற்றியது. பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960 படி, அந்தச் சட்ட விதிகளில் திருத்தம் கொண்ட இந்தச் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் தேவை. ஆனால் தமிழக அரசு ஒப்புதல் பெறவில்லை.

 

நவம்பர் 2010 முதல்  மார்ச்சு-2011 வரை அதே நீதிபதிகள் ஜல்லிக்கட்டை நடத்தக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தனர்.

 

ஜூலை 2011: காங்கிரஸ் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளை (காளை, எருது, பசு..) சேர்த்தார்.

 

2012: – விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜனின் மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் 12 ஜனவரி 2012  அன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன் / கருப்பையா ஆகியோர் மூன்று முறை தடை சொல்லினர். ஆயினும், பிறகு கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவு கோஷ்டியினர் ஏற்படுத்திய கூச்சல் குழப்பத்திலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்கிற கூற்றையும் கேட்டு, 24 மணிநேரம் அரசுக்கு அவகாசம்  வேண்டும் என்று மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் வேண்டுகோளுக்கு அனுமதி அளித்தனர். பிறகு அதே நீதிபதிகள், அடுத்த நாளே, அதாவது 13 ஜனவரி 2012  அன்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தனர்.

 

இதனிடையே 2009 முதல் 2013 வரை ஜல்லிக்கட்டு நடைபெறுவதைக் கண்காணித்த விலங்குகள் நல அமைப்பினர் நிகழ்ச்சியைப் புகைப்படங்களும், வீடியோக்காட்சிகளும் எடுத்து, காளைமாடுகள் துன்பத்திற்குள்ளாக்கப்படுவதை ஆவணப்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

 

 

2014: இந்திய விலங்குகள் நலவாரியம் (AWBI), பீடா (PETA) அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. 7 மே 2014  அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நீதிபதி பினாகி சந்திரபோஸ்  ஆகியோர் 1960 பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தினை முழுமையாகக் கவனத்தில் கொண்டு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற அனைத்து விளையாட்டுக்களுக்கும் தடை விதித்தனர். அவர்கள் பின்வரும் விஷயங்களைத் தங்கள் தீர்ப்பில் முக்கியமாகக் குறிப்பிட்டனர்.

 

  • சட்டம் வழங்கும் உரிமைகள் மட்டுமல்லாமல் அடிப்படை உரிமைகள் மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் உண்டு.

 

  • பசி, தாகம், மற்றும் ஊட்டச் சத்து இன்மை ஆகியவற்றிலிருந்து விடுதலை

 

  • பயம் மற்றும் துன்பத்திலிருந்து விடுதலை

 

  • உடல்சார்ந்த மற்றும் வெப்பம் சார்ந்த உபாதைகளிலிருந்து விடுதலை

 

  • வலி, காயம், நோய் ஆகியவற்றிலிருந்து விடுதலை

 

  • இயல்பான நடத்தை முறைகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் தேவை.

 

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு மறுபரீசிலினை மனு சமர்ப்பித்தது.

 

(http://www.vigilonline.com/index.php?option=com_content&view=article&id=1658:high-court-and-supreme-court-jallikattu-the-pca-act&catid=55:plainspeak )

 

 

பாஜக அரசின் நடவடிக்கைகள்:

 

இதனிடையே 2014 பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று மாபெரும் வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சி, தனது தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அமைத்தது. ஆரம்பத்திலிருந்தே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத்தான் பா.ஜ.கட்சியும் அரசும், பேசியும் செயல்பட்டும் வந்தன.

 

அதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு 7 ஜனவரி 2016  அன்று ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, தி.மு.க-காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தைத் திருத்தம் செய்து ஆணை வெளியிட்டது. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளைமாட்டை விலக்கி அரசாணை வெளியிட்டது. ஆயினும், 12 ஜனவரி 2016 அன்று மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

 

 

பிறகு, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் வாதங்களைக் கேட்ட பிறகும், 26 ஜூலை 2016 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை விதித்தது. ஆயினும் தடையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

 

 

இதனிடையே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குழுவினர் பா.. மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமியை நேரில் சந்தித்து அவருடைய உதவியைக் கோரினர். அவரும் டிசம்பர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடைய வாதங்களை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 14-ம் தேதியன்று சுப்பிரமணியன் ஸ்வாமி தன் வாதங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தார்.

 

அதில் மேலே (இக்கட்டுரையின் ஆரம்பத்தில்) கொடுத்துள்ள அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு, ஜல்லிக்கட்டு ஹிந்து மத, ஆன்மிக, கலாச்சாரப் பாரம்பரியம் என்பதால் அரசியல் சாஸனத்தின் 29(1) க்ஷரத்தினால் பாதுகாக்கப்படுகிறது என்றும், அந்தக் கலாச்சாரப் பாரபரியத்தைப் பாதுகாப்பது அரசியல் சாஸனம் 51 A (f) க்ஷரத்தின்படி தமிழ் ஹிந்துக்களின் அடிப்படைக் கடமைகளாக இருக்கிறது என்றும், பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் (1960)-ன் படி, நிரந்தரத் தடை விதிப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், அரசியல் சாஸனத்தின் 13-ம் க்ஷரத்தின்படி, அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதால், பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் தடை அந்த உரிமைகளை இல்லாமல் ஆக்க முடியாது என்றும், விகிதாச்சாரக் கோட்பாட்டின்படி (Doctrine of Proportinality) அடிப்படை உரிமைகளுக்கு நியாயம் இழைக்கப்படவேண்டும் என்றும், ஜல்லிக்கட்டின் மூலம் நாட்டு மாட்டினங்கள் பாதுகாக்கப்படுவதால் அவற்றின் பால், பாலின் மூலம் கிடைக்கும் மற்ற பொருட்கள் வேளாண்மைக்கும் மருத்துவத்துக்கும் பலவழிகளில் பயன் தரும் அவற்றின் சாணம், சிறுநீர் ஆகிய பொருட்கள் நாட்டின் பாரம்பரிய வேளாண் விஞ்ஞானத்தை முன்னேற்ற உதவுவதால் அரசியல் சாஸனத்தின் 48-வது க்ஷரத்தின் பாதுகாப்பும் ஜல்லிக்கட்டுக்கு உண்டு என்றும், மறுக்கமுடியாத அழுத்தமான வாதங்களை முன்வைத்துள்ளார் டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி. ( https://www.desicow.org/single-post/2017/01/19/Jallikattu—Why-Regulation-May-Help-Not-Ban )

 

 

இதனைத் தொடர்ந்து, பொங்கல் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கேட்டுக்கொண்ட பொழுதும், பொங்கலுக்கு முன்பு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க முடியாது என்று ஜனவரி 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

 

(தொடரும்…)    

Series Navigationஜல்லிக்கட்டுப் போராட்டம் தேச விரோத அமைப்புகளால் கடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம்தோழி கூற்றுப் பத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *