ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்

This entry is part 8 of 18 in the series 26 ஜனவரி 2014

 

 

சீசனல் பிலிம்ஸ் இம் சி யூன் ஆரம்பத்தில் ஷா சகோதரர்கள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர்.  அவர் இளைய திறமைகளைக் கண்டு கொள்வதில் சமர்த்தர்.  இம் புரூஸ் லீயின் திறமையைக் கண்டு, ஷா நிறுவனத்தினரிடம் பெரிய ஒப்பந்தம் செய்யும் கருத்தை முன் வைத்தார்.  ஆனால் அதற்கு அவர்கள் ஒப்பவில்லை.  பெரிதும் போராடி தோல்வி கண்டதன் காரணமாக, மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த வேலையை விட்டு வெளியே வந்து, தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.  பல மாதங்களுக்குப் பிறகு ஷா நிறுவன  அதிபர் சர் ரன் ரன் ஷா, இம்மின் கருத்தை ஏற்காதது தான் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு என்று தன் நண்பர்களிடம் சொன்னதான நிகழ்வு உண்டு.  அவர் செய்த தவறை அனைவரும் அறிந்திருந்தனர்.

 

அதன் பிறகு இம் தயாரித்த படங்கள் தரமான, முகம் தெரிந்திராத நடிகர்கள் கொண்டு எடுக்கப்பட்டு வந்தன.

 

ஜாக்கியை வாடகைக்கு பெரும் எண்ணம், சீசனலில் ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக இருந்த ய_ன் ஊ பிங் மூலமாக வெளியிடப்பட்டது.  ய+ன் ஜாக்கியை விட வயதில் மூத்தவன்.  ஜாக்கி நாடகக் கழகத்தில் சேரும் முன் பயிற்சி பெற்று வெளியே வந்தவன்.  அவரை ஜாக்கி பல முறை சந்தித்திருக்கிறான்.  அவனுடைய ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருக்கிறான்.  இம் ய+ன் பெயரைக் கேட்டதுமே ஜாக்கிக்கு தன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுவார் என்ற முழு நம்பிக்கை ஏற்பட்டது.  எந்தத் தயாரிப்பாளர் தன்னுடைய ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளரின் பேச்சிற்கு முக்கியத்துவம் கொடுத்து கேட்கிறாரோ, அவருக்கு வேலை செய்வது நிச்சயம் நல்லது என்று ஜாக்கி எண்ணினான்.

 

இம் ஜாக்கியிடம், “ஜாக்கி.. நான் என்ன நினைக்கிறேன்னு  சொல்லறேன்.  உன்னிடம் நல்ல திறமை இருக்கு..” என்றார்.

 

பாதி புன்னகையுடன், “ஆம்.. எல்லோரும் சொல்றாங்க” என்றான் அடக்கமாக.

 

“அடுத்து நாங்க என்ன செய்யப் போறோம்ன்னு சொல்றேன்.. எனக்கு உன்னை முழுக்கத் தெரியாது. உன்னுடைய சில படங்களை பாத்திருக்கேன்.  நல்லா இருந்தது.  யூன் உன்னை ரொம்ப நம்பறான்.  அதனால இயக்கவும் விரும்பறான்..” என்று முடித்தார்.

 

 

இதைக் கேட்டதும் புகழ்ச்சி பலமாக இருக்கிறதே என்று ஜாக்கி எண்ணினான்.  ஒபரா சகோதரர்கள் திறமைகளைப் பாராட்டும் போது ஜாக்கிக்கு எப்போதும் அளவில்லாத மகிழ்ச்சி கொடுக்கும் என்று இன்றும் நினைவு கூறுவார் ஜாக்கி.

 

“ஆனா  உண்மை என்னன்னா.. நீ உன்னால என்ன செய்ய முடியுங்கறத உன்னை விட யாராலும் தெரிஞ்சி  வைச்சிருக்க முடியாது.  அதனால.. உனக்காக என்ன செய்யலாம் என்று நாங்க சொல்லப் போறதில்லை.  ஏன்னா எந்தவொரு திட்டமும் இது வரை இல்லை. நீயே அதைச் சொல்லணும்னு விரும்பறேன். நான் ஜாக்கிச் சானைப் படத்தில் போட்டால், ஜாக்கி சானால் என்ன தர முடியும்?” என்று சொன்னதைக் கேட்டதும் ஜாக்கி விக்கித்து நின்றான்.

 

எப்போதுமே திறமையில்லாதவன் என்று சொல்லும் லோ எங்கே.  என்ன செய்யலாம் என்று கேட்கும் இம் எங்கே.  லோ ஆட்டி வைக்கும் கைப்பாவையாக ஜாக்கி இருந்தது எங்கே.  ஜாக்கியின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கும் இம் எங்கே.  அதுவும் தன் தேர்ந்த ஸ்டண்ட் வேலைக்காக அல்ல.  குங்பூ வன்மைக்கலைக்காக அல்ல.  படம் எடுப்பதற்காக.

 

“இம் அவர்களே..”

 

“என். ஜி.. “ என்று திருத்தினார்.

 

சில காரணங்களுக்காக அவர் தன் பெயரை என். ஜி என்று வைத்துக் கொண்டார்.

 

“என். ஜி.. புரூஸ் என்ன செய்தாரோ.. அதை மிகச் சிறப்பாகச் செய்தார்.  யாராலும் அதை விடச் சிறப்பாகச் செய்ய முடியாது.  அதனால் அதையே ஏன் நாம் செய்ய முயற்சிக்க வேண்டும்? மக்களுக்கு நடைமுறை கருத்துக்களே பிடிக்கும். ஆனால் காய்ந்த எலும்புத் துண்டுகள் போன்ற படங்கள் அல்ல.  புரூஸ் லீ அன்று வரை யாரும் செய்தேயிராத செயல்களைச் செய்து காட்டியதாலேயே வெற்றி பெற்றார்.  இப்போது பலரும் புரூஸ் செய்வதையே செய்து காட்டுகின்றனர். நாம் வெற்றி பெற வேண்டுமென்றால், நாம் புரூஸ் செய்ததற்கு மாறாக எதையாவதுச் செய்ய வேண்டும்.

 

பனி மலை அப்படியே பெயர்ந்து வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி தன்னுடைய ஸ்டண்ட் கால நாள்களில் சாமோ, யூன் பியாவ், பிறகு வில்லி, சென் என்று பலரிடம் பேசியதனைத்தும் பெருக்கெடுத்து வந்தன.  விருப்பு வெறுப்புகள், கனவுகள், நல்ல படத்திற்கான அம்சங்கள் அனைத்தையும் முன் வைத்தான்.  முன்பே எண்ணியும் பார்த்திராத விசயங்கள் கூட அப்போது மடை திறந்த வெள்ளமென வரவர,  எல்லாவற்றையும் கூறினான்.

 

பேசும் போதே ஜாக்கி தன் நாற்காலியிருந்து எழுந்து, சண்டை போடும் பாவனை கொடுத்தான்.  “புரூஸ் காற்றிலே உயரமாகப் பறந்து உதைத்தார்.  நாம் இப்போ எவ்வளவுக்கு எவ்வளவு கீழே உதைக்க முடியுமோ அவ்வளவு கீழே உதைக்கணும்” என்று கூறிக் கொண்டே செய்தும் காட்டினான்.  “புரூஸ் யாரையாவது அடிக்கும் போது பலத்தையும் கோபத்தையும் காட்ட கத்துவார்.  நாம் அதற்கு எதிராக, ஒருவரை அடிக்கும் போது எவ்வளவு விலிக்கும் என்பதைக் காட்ட வேண்டும்” என்று கூறி அதையும் செய்து காட்டினான்.

 

“புரூஸ் லீ ஸ_ப்பர் மேன்.  மாமனிதன்.  ஆனால் இப்போது தன்னைப் போன்ற சாதாரண மனிதனைப் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று எண்ணுகிறேன்.  அவர்களைப் போன்று பல தவறுகளைச் செய்த பின் வெற்றி கொள்வதை, நகைச்சுவை உணர்வு கொண்டவனை, கோழைத்தனம் கொண்டவனை, சமயத்தில் பயப்படாதவனை.. இவையெல்லாம் ஏதாவது அர்த்தமாகிறதா?” என்று முடித்தான்.

 

என். ஜி. தாடையை தடவிக் கொண்டே, ஜாக்கி செய்து காட்டியதனைத்தையும், சொல்லியதனைத்தையும் கவனமாகப் பார்த்தார், கேட்டார்.  பிறகு, “இன்றைய உலகில் இதெல்லாம் உண்மையே. நாம் இதையேச் செய்வோம். உன்னுடைய படத்தையே எடுப்போம்” என்றார்.

 

இம் அத்தனை அமைதியாக பேசியது ஜாக்கியினால் நம்ப முடியவில்லை.  தான் சொன்ன கருத்துக்களை அவர் ஏற்பார் என்று சற்றும் எண்ணியதில்லை.  அவர் கத்தாமல் இருந்தாலே போதும் என்று எண்ணிய ஜாக்கிக்கு, அதை அலட்சியமில்லாமல் ஏற்றது எண்ணியும் பார்க்காதது.

 

என். ஜி.  ஜாக்கி சொன்னதனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.  ஜாக்கிக்கு நடுக்கம் ஏற்பட்டது.  தன்னுடைய படத்தை தன்னுடைய பாணியில் எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று இது வரை தனக்குள்ளாகவே சொல்லி வந்தது, இன்று நடக்கப் போகிறது என்ற எண்ணம் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

 

என். ஜி. யூன்னுக்கு இயக்குநராகும் வாய்ப்பைத் தந்தார். யூன்னும் ஜாக்கியும் கழகத்தில் சேர்ந்திருக்கவில்லையென்றாலும், யூனுக்கு குருவின் பயிற்சி முறை அத்துபடி என்பதால், ஜாக்கியால் என்ன செய்ய முடியும் என்பதை நன்கு அறிந்திருந்தான்.  சாமோவிற்கு ஜாக்கி அதிகம் தெரிந்திருந்த போதும், அது வரை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வாய்க்கவில்லை.

 

என். ஜிக்கும் யூன்னுக்கும் ஷாவோலின் மர மனிதர்கள் படத்திற்குப் பிறகு, தான் செய்த பாம்பு முஷ்டி யுத்திகளைச் செய்து காட்டினான். ரசிக்கத்தக்க வகையில் அதை எப்படிச் செய்யலாம் என்று நடித்துக் காட்டினான்.  ஒபரா பயிற்சியின் போது கற்றுக் கொண்ட ஸ்டண்ட் வித்தையும், இது போன்ற பாம்பு முஷ்டியும் இணைத்து ஒரு நல்ல ஸ்டைலை உருவாக்குவதன் அடிப்படையில் இந்தப் படம் அமைய வேண்டும் என்று முடிவு செய்தனர்.

 

அடுத்த முக்கியமான பெரிய முடிவு கதை பற்றியது.  ஆசிரிய மாணவ உறவினை மாற்றிப் போடுவது.  எந்த வன்மக்கலைப் படத்தை எடுத்துக் கொண்டாலும், ஆசிரியர் மிகுந்த அறிவாளியாகவும் மதிக்கத் தகுந்தவராகவும் இருப்பார். மாணவர்கள் அன்புடன் இருப்பார்கள்.  ஆசிரியரின் மரணம் அவர்களில் சிறந்த மாணவன் வஞ்சம் தீர்க்க போவதாய் இருக்கும்.  கழகத்தில் குரு படுத்திய பாட்டிற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் யூன்னும் ஜாக்கியும் ஒரு புது விதமான பாத்திரத்தை உருவாக்கினார்கள்.

 

ஆசிரியர் மிகவும் வேடிக்கையானவராக இருப்பார்.  ஆனால் மாணவருக்கு கற்றுத் தர இயலாத அளவிற்கு வேடிக்கையானவரல்ல.  ஜாக்கிக்கு மிகவும் சாதாரண மனிதனாக, விருப்பத்திற்கு மாறாக ஆசிரியரிடம் கற்றுக் கொள்ள சிக்கிக் கொள்ளும் மாணவனாக நடிக்கும் கதாபாத்திரம்.

 

ஹாப் எ லோப் ஆப் குங்பூ படம் போன்று குங்பூக் கலையை கேலிக்குள்ளாக்காமல், இந்தப் படத்தில் கலையை மீண்டும் கண்டுபிடிக்கும் வகையில், நகைச்சுவையுடன் மனிதத் தன்மையும் நிறைந்த கதையாக செய்ய இருவரும் முயன்றனர்.

 

பாம்பு முஷ்டி வன்மக்கலைப் பள்ளியின் உயிருடன் இருக்கும் கடைசி மனிதராக ஒருவர்.  அவரைக் கழுகு நகக் கலையில் சிறந்த ஆசிரியர் எதிர்த்த வண்ணம் இருப்பார்.  ஒரு வயதானவர் கழுகு நக மாணவர்களால் அடித்துப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கும் நாயகன், அவருக்கு உதவி செய்கிறான்.  அதற்கு பிரதிபலனாக, அவருடன் தங்க இடம் தருகிறார்.

 

அந்த முடிவு வேறு சிரமங்களைக் கொண்டு வருகிறது.  கழுகு நக மாணவர்கள் உதவி செய்தவனையும் எதிரியாக எண்ணி தாக்க முற்படுவது ஒன்று.  மற்றொன்று பாம்பு முஷ்டிக் கலையைக் கற்க வைப்பது.  தான்தோறியாக ஓடியாடித் திரிந்தவனை, கடினமான பல்வேறு பயிற்சிகளைச் செய்ய வைப்பதும் சண்டைப் பயிற்சி பெற வைப்பதும் சிரமத்தைத் தானே கொடுக்கும்.

கழுகு நக குருவை எதிர்த்து முதலில் சண்டைப் போடும் போது, கழுகு நக யுத்திகளை எதிர்த்து பாம்பு முஷ்டி யுத்திகள் பயன்படாமல் போகிறது.  இதை உணரும் நாயகன் தன்னுடைய ஆசிரியருடைய கதை இனி முடிந்து விடும் என்று எண்ணும் வேளையில், தன்னுடைய பூனை பாம்புடன் சண்டைப் போடும் போது பயன்படுத்தும் முறைகளைக் காண நேரிடுகிறது.

 

பாம்பு விஷம் கொண்டு வேகத்துடன் இருந்த போதும், ப+னை சண்டையில் தன்னுடைய உயரத் தாண்டும் தன்மையாலும், அதிவேகத்தாலும் வெல்வதைக் காண்கிறான்.  பாம்பு சிக்கிக் கொண்டால் அவ்வளவு தான்.  தப்ப இயலாது.  ஆனால் பூனை எப்படியோ வளைந்து நெளிந்து, எப்படி எதிர்த்தாலும், அதைத் தாண்டி குதித்து நிலத்தில் கால் பதிக்கும் தன்மை கொண்டது.  அதனால் பூனை விதம் பாம்பு முஷ்டியை விடவும் கழுகு நக வித்தை விடவும் மிகவும் பலமானதாக இருப்பதை உணர்கிறான்.

 

அதனால் படத்தின் கடைசி சண்டையில், நாயகன் வில்லனை தான் ஆசிரியரிடம் கற்ற அத்தனை யுத்தியையும், புதிய பூனை நக யுத்தியையும் சேர்த்து சண்டையிட்டு வெல்கிறான்.

அந்தக் கதையின் நாயகன் ஜாக்கி. என். ஜி. ஜாக்கியின் குருவாக நடிக்கும் பாத்திரத்திற்கு யூன் ஊ பிங்கின் தந்தையான சைமன் யூன் சியு-மின்ஐ தேர்ந்தெடுத்தார்.  அவர் ஷா சகோதரர்கள் படத்தில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றவர்.  கழகத்தில் வன்மக்கலை ஆசிரியராக இருந்தவரும் கூட.  அவர் ஆசிரியர் பாத்திரத்திற்கு தேர்நதெடுக்கப்பட்டார்.  படத்தில் ஆட்டம் பாட்டத்துடன் திரியும் இளைஞனை கட்டுப்படுத்தும் வேடிக்கை மனிதராக மிகவும் நன்றாக நடித்துக் கொடுத்தார்.

 

 

 

 

 

எதிரியாக கொரிய டிக்வான்டோ கலைஞர் ஹ_வாங் ஜங் லீ செய்தார்.

 

பூனை நக யுத்தி பெரும்பாலும் குதிப்பதும், பூனை போன்று சத்தம் செய்வதுமாக இருக்கும்.  அது உண்மையான குங்பூ யுத்தி கிடையாது.  ஆனால் சற்றே வித்தியாசமாக, புரூஸ் லீயின் சண்டைகளைப் போன்று சுவாரசியமானதாகக் காட்டியது.

ஒவ்வொரு நாள் படப்படிப்பிற்குச் செல்லும் முன்னர் தான் சண்டைக்குப் பயன்படுத்தும் முறைகளை கண்ணாடி முன்னால் செய்து பார்த்து திருப்திப்படுத்திக் கொண்டு சென்றதாக இன்று ஜாக்கி நினைவு கூர்வார்.  கடைசி சண்டைக் காட்சியில் எதிராளி ஓங்கி முகத்தில் தாக்க, ஜாக்கியின் பல் தெரித்து விழுந்து விட, அதையும் காட்சியாக்கினர்.

 

படத்தை எடுத்து முடித்ததும், எல்லோரும் இது அன்று வரை வெளி வந்த குங்பூ படங்களை விடவும் ரொம்ப மாறுபட்டு இருந்ததாக எண்ணினர்.  ஆனால் இந்த மாற்றம் மக்கள் மத்தியல் செல்லுபடியாகுமா என்பது தெரியாதிருந்தது.  என். ஜி ஜாக்கியை வைத்து படம் எடுத்தால் முதலுக்கே மோசம் ஏற்படும் என்று விநியோகஸ்தர்கள் முன்பே எச்சரித்திருந்தனர்.  எது என்னவாக இருந்த போதும், இதுவே முதன்முதலில் ஜாக்கி சான் முழுமனதுடன் செய்த உண்மையான படம்.

 

இந்த ஸ்னேக் இன் தி ஈகில்ஸ் ஷேடோ – கழுகின் நிழலில் பாம்பு என்ற படம் வெற்றி பெற்றதா?

 

Series Navigationவளரும் அறிவியல் – மின் இதழ்ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *