ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 2

author
2
0 minutes, 24 seconds Read
This entry is part 4 of 31 in the series 5 பிப்ரவரி 2012

மாயன்

இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்… இவை எல்லாமே பிறந்ததிலிருந்து ‘கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம். மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது.

புத்தியை ‘பயிற்றுவிக்கப்பட்ட மனம்’ என்று சொன்னால் சரிதானே! பயிற்றுவிக்கப்படாததை ‘மனம்’ என்றே அழைக்கிறோம்.

தியானம் என்பது புத்தியை உபயோகித்து மனதை அப்படி போ..இப்படி போ என்று சொல்வதற்கு அல்ல. புத்தியே தெரிந்ததின் தொகுப்பு என்பதனால்,பழக்கத்தில் வருவதனால்- புத்தி சொல்படி ‘தேர்வு செய்தல்’ தியானம் அல்ல.

வெறுமனே மனத்தை, மனம் எனும் பொட்டலத்தை, எண்ணங்களின் குவியலை வேடிக்கை பார்த்தல்.

மனம் தன் எண்ணங்களால் மீண்டும் மீண்டும் வேறு வேறு வட்டங்கள் அதுவாகவே உருவாக்கி உருவாக்கி அதன் உள்ளேயே சிக்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கும்.

அதனால் தான் ஜே.கே. சொன்னது discipline-கட்டுப்பாடு என்பது அது எவ்வளவு நல்லது என்றாலும் அது எவ்வளவு புனிதமானது என்றாலும் அது வட்டமே! எவ்வளவு புனிதமானது என்றாலும் அது மீள முடியாத ‘ஒரு வட்டமே’. இதில் நல்லது கெட்டது என்பதை விட ‘வட்டம் என்பது இருக்கிறது’ என்பதை நீ அறிவாயா? உன் மனம் எதனால்ஆனது என்பதை வேடிக்கை பார்த்திருக்கிறாயா?

ஒரு திருடன்,கொள்ளைக்காரன் மனம் திருந்தி தன் எண்ணங்கள் மாறி (நிஜமான) துறவறம் பூண்டான் எனில், நல்ல விஷயம்தான். ஆனால் இப்போதும் அது ஒரு வட்டம்தான். எண்ணங்களின் லேபிள் மாறியிருக்கிறது. வட்டத்தின் கலர் மாறி இருக்கிறது.

மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.) அறியும் போதே நீங்கள் விடுபடுகிறீர்கள்.

உங்கள் உடலுக்கு நோய் எனில்

1.டாக்டரிடம் போகிறீர்கள். அவர் என்ன என்று கண்டுபிடிக்கிறார்

2.மருந்து சாப்பிடுகிறீர்கள்

ஆக இரண்டு Step தேவையாயிருக்கிறது. ஆனால் மன வேதனை, மனக்கலக்கம் என்றவுடன்

1.அது என்ன என்று கண்டுபிடிக்கிறீர்கள்.

அவ்வளவே…ஒரு Step மட்டுமே. ஆனால் மனம் அவ்வளவு சுலபமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது. ஏன் எனில் you choose. நீங்கள் தேர்ந்து எடுக்கிறீர்கள். அதுவே மனது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தடையாய் இருக்கிறது. மனம் பல அடுக்குகளால் ஆனது. அதனை அறிய , அது தன்னை விடுபடுத்திக் கொள்ள ‘தேர்ந்து எடுக்காத தன்மை’ வேண்டும். ஆறாய் பெருகி வந்து கொண்டிருக்கிற எண்ணங்களை தேர்ந்து எடுக்காது கவனிக்கிற தன்மை வேண்டும்.

அப்ப நல்லது கெட்டது பார்க்க வேண்டாமா எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா என்றால் நீங்கள் இன்னும் எண்ணங்களை பார்க்கவில்லை என்று அர்த்தம். அல்லது அப்படி பார்ப்பதற்கு மனம் இப்போதே தடை போட ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.

மனக்கட்டுப்பாடு ஏன் தியானத்திற்கு பலன் இல்லை எனில் மனம் எதற்கும் சரி செய்து கொண்டு ஒரு புது வட்டத்தை உருவாக்கிக் கொள்கிற தன்மை கொண்டது. இப்படி இப்படி தியானம் செய் என்றதும் நாலைந்து நாளில் மனம் அதற்கு ஏற்றார் போல தன்னை சரி செய்து கொண்டு இன்னொரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டுவிடும். இப்போதும் அதே கதைதான். பழைய குருடி ஆனால் புது வட்டம்.

ஒன்றை மறுபடி மறுபடி செய்தீர்கள் என்றால் அது அந்த வட்டத்தை பலமாக்கிக் கொண்டுவிடும். தன் பயணத்தை தொடரும். என்ன பயணம் எனில் மீண்டும் தடத்தில் போவதுதான் வேறு ஒன்றுமில்லை

சரி தடத்தில் போகவேண்டாம் என்று நீங்கள் முடிவு எடுத்தீர்கள் எனில் கொஞ்சநேரம் கழித்து கவனித்தால் மனம் அந்த தடத்தின் எதிர்திசையில் போகும். இதுவும் தடமே.

மனக் கட்டுப்பாடு இல்லாத – எதுவேண்டுமானாலும் செய்கிற மனம் – என்றால் அது இதற்கு மாறானது / எதிரானது மட்டுமே தவிர ஆனால் அதுவும் ஒரு தடமே. அதுவும் ஒரு pattern தான். அது இன்னொரு வட்டம்.

மாற்று திசையிலேயே போக ஆரம்பித்தால் அப்புறம் இரண்டு தடங்கள் உருவாகியிருக்கும்.

இது இல்லை எனில் அது. இது தனிமனிதனுக்குள் வளர்ந்து வளர்ந்து அது அவன் உருவாக்கின சமூகத்தினுள்ளும் இரட்டைத் தன்மையை கொண்டுவந்தது.

ஆக ஒன்று தெரிகிறது. தியானம் என்பதை ‘செய்ய’ முடியாது. அது வெறுமனே கவனிக்கப்படவேண்டியது. அதுதான் முதல் Step. அதுவே கடைசியும் கூட.

எண்ணங்கள் கேவலமோ, நல்லதோ, கெட்டதோ, புனிதமோ, வக்கிரமோ, அபத்தமோ, கொடூரமோ முதலில் அவை எண்ணங்கள். எண்ணங்களே! எண்ணங்கள் மட்டுமே! லேபிள் வேண்டாம். அப்படிப்பட்ட எண்ணங்கள் வரக்கூடாது என்று தடுக்காதீர்கள். அது நோய்.

ஆனால் வருவதையெல்லாம் செயல்படுத்தினால் சமூகம் பாதிக்கும்.

அவை வெறும் எண்ணங்கள் என்ற நிலையில் நல்லது கெட்டது என்கிற லேபிள் ஒட்டாமல்,நல்லது கெட்டது என்ற முடிவுக்கு வராமல் மனதில் வரும் எல்லா எண்ணங்களையும் கவனிக்க இயலுமா…? பாருங்களேன். முப்பது விநாடிகள் பார்க்க முடியுமா உங்களால்? வெறும் முப்பது விநாடிகள். அதற்குமேலும்?

பார்க்கும் போது பழையனவைகள், நீங்கள் அறியாத ‘நீங்கள்’ , நீங்கள் அறியாத உங்கள் எண்ணங்கள் வெளியே வர ஆரம்பிக்கும்.

நாம் ஒரு பழக்கமான வாழ்க்கைக்கு நம்மை வாழ விட்டுக் கொடுத்து விட்டோம். அதில் இருந்து விடுபட்டு ‘கவனிக்க’ ஆரம்பிக்கும்போது ஆழ்மனதில் இருப்பவை விடுபட்டு வெளியே வர ஆரம்பிக்கும். இதுவே ஜே.கே சொல்கிற ‘Self-reveleation”. சுயம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளல். அதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நடைமுறை வாழ்வில் பழக்கத்திலேயே எதையும் செய்யாத தன்மை வேண்டும்.

ஒரு pattern வட்டத்தில் சிக்கிக் கொள்ளாத தன்மை வேண்டும். அப்போது நீங்கள் அறியாத உங்கள் மற்றொரு பகுதியான மனம் (அதை ஆழ்மனம் என்கிறோம்) வெளிப்பட ஆரம்பிக்கும்.

உங்களை அறியாமல் செய்கிற ‘செயல்களை’ ‘தேர்ந்து எடுக்காத’ மனசுடன் பார்க்க ஆரம்பிக்கும் போது ஆழ்மனம் அந்த செயல்கள் மூலம் வெளிப்படுகிறது. சரி விருப்பத்தோடு செய்தால் என்ன ஆகும்? விருப்பம் என்றவுடம் அங்கே விரும்பாதது என்று ஒன்றும் இருக்கிறது. இந்த இரண்டின் உரசல் ஆரம்பிக்கிறது. அப்போது அடக்கிவைக்கப் பட்டுள்ளவைகள் வராது.

இதைத்தான் நாம் ‘அவன் ‘body language” பார்த்தியா’ என்கிறோம். ‘body language” ஆழ்மனத்தின் வெளிப்பாடே! அவனது வெளிமனம் என்னதான் நினைத்தாலும் உடல் வேறுவிதமாக காட்டுகிறது. அதுசரி. அவன் ‘body language” இருக்கட்டும். உங்களது ‘body language” நீங்கள் கவனித்தது உண்டா? அதைத்தான் ஜே.கே சொல்வது.

மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.)

நீங் கள் அறியாதது உங்கள் மனம். இதை நம்புவது கடினம். ஆனால் நீங்கள் நம்பக் கூடாது. ஏனெனில் நம்பினால் அதற்கு அப்புறம் அங்கே ஏதும் தொடர்வதற்கு இல்லை. நீங்கள் நம்ப ஆரம்பிக்கும்போதே ‘இது சரி’ என்று தேர்ந்து எடுக்க ஆரம்பிக்கிறீர்கள். அப்போது ஆழ்மனம் அடைபட்டுவிடும். No Self reveleation. சுயம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது.

அப்படி என்றால் ஆழ்மனதில் என்ன எண்ணங்கள் வந்தாலும் அதை நான் செயலில் காட்டவா என்றால் இந்தச் சமூகம் தாங்காது. உங்கள் ஒருவரையே தாங்க முடியாது எனில் எல்லோரையும் எப்படி தாங்குவது. அதனால் தான் சமூகம் ஒரு pattern- வட்டத்தை உருவாக்கி நீங்கள் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. உண்மையில் மதம் என்கிற நிறுவனம் ஒரு தடத்தில் போவதே…அதுவும் ஒரு pattern ல் போவதே. ஆனால் தனி மனிதன் எண்ணங்களை வகைப்படுத்தாமல் கவனிக்க ஆரம்பித்துவிட்டான் எனில் அவனுக்கு மதம் என்னும் நிறுவனம் தேவைப்படாது.

மனம் எப்படி எப்படி எல்லாம் தன் எண்ணங்களை நீட்டித்து கொண்டே போகிறது என்பதை எதையும் ‘தேர்ந்து எடுக்காமல்’ கூர்ந்து கவனிப்பது மட்டுமே இங்கு பேசப்படுகிறது. (Choiceless awareness).

இப்படி கவனிப்பது எதற்காக? நாளை எனக்கு ஞானம் கிடைக்க, சித்திகள் கிடைக்க என்று ஆரம்பித்து விட்டால் அங்கே ‘தேர்ந்து எடுத்தல் தொடங்கிவிட்டது என்றே அர்த்தம். மறுபடியும் வட்டம்.

இப்படி தேர்ந்து எடுக்காமல் கவனித்தால்….எண்ணங்களை சேகரித்து வைப்பது என்பதே இல்லாமல் போகிறது. நீங்கள்தான் தேர்ந்து எடுக்காமல் கவனிக்கிறீர்களே! ஆக கவனித்தல் என்பது – இனி ஏதும் சேகரிக்காமல் இருப்பது என்பதே.

அது சரி…மேலே மஞ்சள் கலரில் ‘நீங்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் ‘இதுவரை சேகரித்த எண்ணங்களின் பொட்டலம் தானே.

இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின் ஒரு புது தோற்றமே.

நீங்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள். அதில் உங்கள் ego வும் இருக்கிறது. ஏனெனில் நான் புதிய சிந்தனைகள் வருவது இல்லை என்றவுடன் நீங்கள் சிந்திக்கவேயில்லை என்றல்லவா கூறுகிறேன். அதனால் உங்கள் ego தூண்டப்பட்டு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒப்புக் கொள்ளாதது நல்லதுதான்.. ஒப்புக் கொண்டுவிட்டால் நம்பிக்கை வந்துவிட்டது என்று அர்த்தம் அப்போது அதற்கு மேல் தியானம் கிடையாது.

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 5) எழில் இனப் பெருக்கம்மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 12
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    மாயன்:அகமும் புறமும் says:

    //Very abstract thinking. Functionally irrelevant ones. It goes to prove that that intellect is useless, unless it is combined with practical wisdom.// ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் பொதுவாக ‘சுவரின் மீது நடப்பது’ என்று விமர்சனம் செய்யப்படுவது உண்டு. தூய தர்க்கம்தான் அது. பொதுவாக மதங்கள் ஒன்றைப் பிடித்துக் கொண்டு (சிலை,தத்துவம்,சடங்கு,ஒரு சொல்) மற்றவற்றை விலக்கிவிடச் சொல்கிறது. பின்னர் அந்த ஒன்று தானாகவே….(ராமகிருஷ்ண பரமஹம்சரின் காளி பக்தி மாதிரி.எல்லாவற்றையும் விடுவித்த காளி பக்தி, காளி மீதான பற்றிலிருந்து மீள முடியவில்லை) ஜே.கே. தூய தர்க்கம் பேசியவர்.தூய தத்துவம் பேசியவர். தான் பேசுவது தத்துவம் என்று கூட சொல்வதை மறுத்தவர். ஓஷோ இதை நிராகரிப்பின் வழி என்கிறார்.நேதி…நேதி…என்று போகும்போது என்ன நடக்கிறது என்று.
    இதற்கு மாறான வழி ஒன்றும் உண்டு. அது ‘எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் வழி’.வைணவம் இதில் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *