ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்

This entry is part 6 of 46 in the series 26 ஜூன் 2011

ஜே. ஜே. எனும் தமிழ் படத்தில் நாயகன் நாயகி கைகளில் தவழும் ஒரு நாவல், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் அதிகம் பேசப்பட்ட நாவல், காலச்சுவட்டின் கிளாசிக் வரிசையில் வருகிற நாவல் என்பது தாண்டி நாவல் பற்றிய எந்த விமர்சனக் குறிப்பும் தெரிந்து கொள்ளாமல் வாசிக்க ஆரம்பிக்க, எடுத்த எடுப்பிலேயே சுவாரஸ்யத்துக்குள் இட்டுச் சென்று பிரமிக்க வைத்து சிந்தனையை தூண்டியது என்று சொன்னால் மிகை இல்லை.
ஆனால் இப்படி எல்லாம் சொல்லிவிட மாத்திரம் நாவலின் களம் ஒரு விறுவிறுப்பான மர்ம முடிச்சுகளை எதிர்பாராத விதமாக அவிழ்த்து நம்மை திகைப்பில் ஆழ்த்தும் மர்ம நாவல் களம் அல்ல. காதலையும் காமத்தையும் கலந்து கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் சோகம் கொஞ்சம் ஏமாற்றம் கொஞ்சம் விடலைத்தனம் கொஞ்சம் வில்லத்தனம் என்று செல்லும் ஒரு ஜனரஞ்சக களமும் அல்ல.
ஒரு டைரியின் பக்கங்களில் இருந்து சொல்லப்படும் குறிப்புகள். ஒ டைரியா? என்று அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கங்களை ரகசியமாக தெரிந்து கொண்டு குசு குசுவென்று கிசுகிசுக்க இது காதல் சோகம் துரோகம் இழப்பு பழி வாங்குதல் அல்லது பலியாதல் எனும் கைதியின் டைரிக் குறிப்பும் அல்ல. ஒரு பிரபல நட்சத்திரத்தின் ரகசிய பக்கங்களைச் வெளிப்படுத்தும் டைரிக் குறிப்பும் அல்ல.
ஒரு எழுத்தாளனின் டைரிக் குறிப்பு. எழுத்தாளன் என்றால் அவனுக்கென்று ரகசியப் பக்கங்கள் இல்லையா என்றால், வாழ்க்கையில் பெரும்பான்மை நேரங்களை இலக்கியத்துக்கென்று செலவழித்து வீணாப் போன எழுதாளனுக்கென்று ஏது ரகசியப் பக்கங்கள்? அவனுக்கு காதல் கூட இல்லையா என்றால் அவன் கண்ணுக்கு மிக அழாககத் தெரிந்த ஓமனக் குட்டி உடன் ஏற்பட்ட நட்பைக் கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத அளவு இலக்கியக் காதல் வந்து புகுந்து கொள்ள அவள் ஆசையோடு அவனுக்குக் காட்டும் அவளது கவிதைகளை அவன் நிராகரித்து தன்னை ஒரு கவிதாயினியாக கற்பித்து வைத்திருக்கும் அவளது உணர்வுகளை சீண்டி விட்டு விட அந்த கணத்திலேயே அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுகிறது.
பின் எப்படி சுவாரஸ்யம் என்றால் நகைச்சுவையே இல்லாத குடும்பச் சூழலை மையமாக வைத்து எழுதப்படும் பாலகுமாரன் நாவல்கள் எப்படி வாசகர்களை ஈர்க்கிறதோ அப்படி. அதாவது நாவலின் அடித்தளத்தில் இயங்குவது உண்மை. உண்மைக்கு முன் மேல்பூசுகள் அதன் தன்மைகளை இழந்து விடுகின்றன.
நாவலின் களம் இலக்கியச் சூழல். நாற்பது ஐம்பதுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களை கதாபாதிரங்களாகக் கொண்டு எழுபதுகளில் இருந்த இலக்கிய சூழலை விமர்சிக்கும் முயற்சியாக எழுதப்பட்ட நாவல் என்று சொல்லலாம். நிலைமை இப்படியே நீடிக்காது வெகு குறுகிய காலத்தில் மிகப்பெரிய மாற்றம் இலக்கிய சூழலில் வரும் என்ற மிகப்பெரும் நம்பிக்கையையும் சு.ரா இங்கே முன் வைக்கிறார். அவர் நம்பிக்கை எந்த அளவு நிறைவேறியது என்பதை இலக்கியவாதிகள் தான் சொல்ல வேண்டும்.
மலையாள எழுத்துச் சூழலை சார்ந்து எழுதப்பட்ட இந்த நாவல் சில இடங்களில் நேரிடையாகவும் பல இடங்களில் மறைமுகவாகவும் தமிழ் இலக்கிய சூழலையே சுட்டுகிறது என்பது வெளிப்படை. ஜோசப் தாமஸ் என்ற எழுத்தாளனின் நாட்குறிப்புகளில் இருந்து தொகுத்து வழங்கும் தொகுப்பாளனாக நாவலை நடத்திச் செல்லும் நோய்களின் பிடிகளில் இருந்து போராடி மீண்ட நோஞ்சான் பாலு என்ற கதாபாத்திரம் சு.ரா தான் என்று புரிந்து கொள்ள இடமிருக்கிறது.
பல இடங்களில் பல எழுத்தாளர்களின் கருத்துக்கள் வாயிலாகவும் ஏன் ஜே.ஜே மூலமாகவும் கூட சு.ரா தன் கருத்துக்களை முன் வைக்கிறார் என்று கொள்ளவும் இடமிருக்கிறது. இலக்கிய சூழல் மேலான தமது விமர்சனங்களை நேரடியாகச் சொல்லும் போது ஏற்படக் கூடிய சங்கடங்களை தவிர்க்க ஆனால் சொல்லி விடவும் வேண்டும் என்ற நிலையில் தான் செய்யக் கூடியதாக கருதியதே ஜே.ஜே சில குறிப்புகளாக உருவாகி இருப்பதாக நாவலின் பாலு மூலம் வெளிப்படுத்தி விடுகிறார் சு.ரா.
உலக இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஆராய்ச்சி செய்யும் நம்மவர்களுக்கு தன் மொழி மற்றும் பக்கத்து மாநில மொழி இலக்கியத்தையும் இலக்கியவாதியையும் பற்றி ஏதும் தெரிவது கூட இல்லையே என்ற ஆதங்கம் முதல் தனித் தமிழ் தீவிரத்தன்மை குறித்த கேள்வி, புதிய கண்டுபிடிப்புகளையும் , கர்த்தாக்களையும் எதிர்த்தால் உழைப்பாளிக்கு உழைப்புக்கான ஆதாரம் எங்கிருந்து வரும் என்று மூர்க்கத்தனமான கம்யூனிச ஆதரவுகளையும் கேள்விக்குட்படுத்துவது வரை பல சிந்தனைகளைத் தூண்டும் குறிப்புகள் நாவலில் ஏராளம்.
இது ஒரு முறை வாசித்து விட்டு தூக்கிப் போட்டுவிடும் நாவல் வரிசைகளில் வரும் படைப்பு அல்ல. பத்திரமாக வைத்திருந்து அவ்வப்போது படிக்கத் தூண்டும் படைப்பு. ஒவ்வொரு முறையும் புரிதல்களில் புது பரிமாணம் தெரியக் கூடும். ஒரு வாகர் நிலையில் இருந்தே இப்படி என்றால் எழுத்தாளக் கனவுகளுடன் இருப்பவர்கள் மிக நிச்சயமாக வைத்திருக்க வேண்டிய ஒரு நாவல்.

Series Navigationநிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….காற்றும் நானும்
author

விருட்சம்

Similar Posts

Comments

  1. Avatar
    லறீனா ஏ. ஹக் says:

    மிக அருமையானதொரு வாசக அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ள விருட்சம் அவர்களுக்கு ஒரு ஜே! :) . உண்மைதான்! ஜே.ஜே. சில குறிப்புகள்- அற்புதமானதொரு படைப்பு. அடிக்கடி வாசிக்கத் தூண்டும் அருமையான சிருஷ்டி!

Leave a Reply to லறீனா ஏ. ஹக் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *