டௌரி தராத கௌரி கல்யாணம் – 11

This entry is part 2 of 20 in the series 21 ஜூலை 2013

கல்யாணியின் கைகளைப் பற்றியபடி, அத்தை….கடல் காத்து சூப்பர்..எனக்குக் கடல்னா கொள்ளை ஆசை…மதுரைல தான் கடலே இல்லையே..ஒரே போர். சென்னை ஜெகஜ்ஜோதியா இருக்கு, இல்லையா ? எனற லாவண்யாவின் முகமெங்கும் பரவசம் பொங்குகிறது .

ஏண்டி…அங்க தான் மீனாட்சியம்மன் கோயில் இருக்கே..? இத்த விட அங்க ஆடி வீதில காலாற நடந்தா..எப்படி இருக்கும் தெரியுமா? இந்தக் கடலே அந்தக் காத்துக்கு வந்து பிச்சை கேட்டு நிக்கணுமாக்கும்…எங்க பாரு இக்கரைக்கு அக்கரைப் பச்சை தான் போ…! கல்யாணி விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாள்.

ஐயே…அத்தை…அதெல்லாம் உங்க காலத்துலயாக்கும்..! இப்போல்லாம் அங்க ஒரே கூட்டம் தான்.அப்டியே இருந்தாலும் உள்ளூருல இருக்கப் பட்டவா அங்கே போகவே மாட்டா. எப்பப்பாரு கோயில் தானான்னுட்டு.

பேசிக்கொண்டே இருவரும் கால்கள் மணலில் புதையப் புதைய நடக்கும் போது…அருகிலிருந்து பூக்காரியின் குரல் இவர்களைப் பார்த்து அழைக்கிறது.

ஏம்மா….கோயிலுக்கு பூ வாங்கிட்டுப் போம்மா….முழம் பத்து ரூவா….நல்லா இருக்கு…ஏம்மா…! நாள் முழுக்க கை வலிக்க கட்டிய பூவை எப்படியாவது இவர்கள் தலையில் கட்டி விடவேண்டும் என்ற ஆதங்கத்தில், இவர்கள் முகத்தைப் பார்த்தபடியே ‘வாங்கிட்டுப் போங்கம்மா’ என்ற வேண்டுதல் அவளது கண்களில் இருந்தது.

அத்தை…மல்லிகைப் பூ…! வாங்கிக்கலாம் என்று பூக்காரியின் அருகில் சென்று நின்று ரெண்டு முழம் கொடும்மா…என்கிறாள் லாவண்யா.

அஞ்சு முழம் வாங்கிக்கோ…சுவாமிக்கும் சேர்த்து என்று கல்யாணி தனது பர்ஸ் திறந்து ஐம்பது ரூபாய் பணத்தைத் எடுத்துத் தருகிறாள்.

பூக்காரி அந்தப் பணத்தை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு ‘நீங்க நல்லா இருக்கோணம்’ என்று வாழ்த்துகிறாள்.

என்னதான் சொல்லுங்கோ…மல்லிகப்பூன்னா….அது, மதுர தான்..! நூறு பூவை வாங்கி தலைல வெச்சுண்டா போதும் ..அதோட வாசனை கூடவே வந்துண்டு இருக்கும்…இங்க முழம் போட்டு வாங்கினாலும் திரும்பறதுக்குள்ள நாrரும் நூலும் தான் தலையில் தொங்கிண்டு இருக்கும்.

லாவண்யாவுக்கு தலையில் பூவை வைத்துவிட்டு அழகு பார்த்த கல்யாணி தன் தலையிலும் சிறிது கிள்ளி வைத்துக் கொண்டு….டீ ..லாவண்யா நோக்கு இந்தப் புடவை அம்சமா இருக்கு….இப்போ நீ அப்டியே அம்மன் மாதிரியேன்னா இருக்கே..என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. ஆத்துக்குப் போனதும் நோக்கு திருஷ்டி சுத்திப் போடறேன்….கார்த்தி பார்த்தால் ரொம்ப சந்தோஷப் பட்டுக்குவான்….!

தலையில் வைத்த மல்லிகைச் சரத்தை தொட்டு சரி செய்த படியே….அத்தை சொன்னதை கேட்டு பெருமை பட்டுக் கொண்டாலும் கூடவே….”போதும்….நீங்களும் உங்க கார்த்தியும்…” அவருக்குத் தான் என்னைக் கண்டாலே பிடிக்கலையே. என் முகத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டேங்கறார். நீங்களே சொல்லுங்கோ…எங்களுக்குக் கல்யாணம் ஆகி பத்து நாளாயாச்சு. இன்னும் என்னை எங்கயும் கூட்டிண்டு போகலை….என்னை யாரோ மாதிரி தான் ட்ரீட் பண்றார்….லாவண்யாவின் குரலில் ஏகப்பட்ட ஏக்கம் இருந்தது.

என்னடி லாவண்யா…இது தலைல குண்டைத் தூக்கிப் போடறே நீ? லேசான அதிர்வோடு மருமகளின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறாள் கல்யாணி.

ஆமாம்….நான் ஒண்ணும் பொய் சொல்லலை….அந்த கெளரியைத் தான் இன்னும் மனசுல நெனைச்சுண்டு இருக்காரோன்னு ஒரு சம்சயம். யார் கண்டா? …நான் நினைக்கறேன்…..நான் தோசைக் கல்லுலேர்ந்து எண்ணெய் சட்டிக்குள்ளே விழுந்துட்டேனோன்னு…!

அதெப்படி நோக்கு கௌரியோட சங்கதி தெரியும்?

எல்லாம் தெரியும். அன்னிக்கு அவளோட அப்பா தவறிப் போனாரே….அப்போ அவாத்துக்கு நானும் போனேனே….அன்னிக்கு கார்த்திக்கே சொன்னான்…..ர் …என்று தவறைத் திருத்திக் கொள்வது போல நாக்கைக் கடித்துக் கொள்கிறாள்.

இருவரிடமும் சிறிது மௌனம்….நடையில் நிதானம்….!

லாவண்யா தொடர்கிறாள்.

இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சும் நான் இதை பெருசா எடுத்துக்கலை…ஏன் தெரியுமா? உங்களுக்குத் தான் அவளைப் பிடிக்கலையே….நீங்களும் மாமாவும் சம்மதிக்காம கார்த்தி எப்படி அந்த கௌரியை கல்யாணம் பண்ணிக்குவார்?…அதனால அவளை மறந்து போயிடுவார்னு நினைச்சேன்.

அதான்….நாங்க அதுக்கு சம்மதிக்கவே மாட்டோம்…அவனுக்கும்த் தெரியும்..அவன் அந்தப் பொண்ண என்னிக்கோ மறந்தாச்சு….அது ஒரு அடங்காப் பிடாரியாக்கும்…..ஓடுகாலி …இவனை பொண் பாக்கப் போன எடத்துல எப்படியோ மயக்கி வெச்சிருந்தது….நானாக்கும் அவனுக்கு புரிய வெச்சு அவளை ஒதுக்கி வெச்சேன். இப்போ அவனே அவளை ஒதுக்கியாச்சு தெரியுமா?.

நீ தான் இந்தாத்துக்கு மருமகளா வரணம்னு நான் வேண்டாத்த தெய்வமில்லை. போகாத்த கோயில் இல்லையாக்கும். அந்த மதுரை மீனாக்ஷியாக்கும் உன்னை என்கிட்டே கொண்டு வந்து சேர்த்திருக்கா. வந்த இடத்தில் அவனுக்கு திடீர்னு கல்யாணம் ஆச்சோன்னோ அவனுக்கு…அதான்…அவனாலே அதை உடனே ஏத்துக்க கொஞ்சம் சமயம் வேண்டியிருக்கு. எல்லாம் போகப் போக சரியாகும்…நீ சமத்து…சக்கரைக்கட்டி…இன்னும் கொஞ்ச நாள்ல பாரேன் அவன் உன்னையே சுத்தி சுத்தி வரப்போறான் …என்று தேனொழுகப் பேசி லாவண்யாவின் தலையில் ஐஸ் மழை பொழியச் செய்கிறாள் கல்யாணி.

நீங்க கவலைப் படாதேங்கோ அத்தை…அதை நான் பார்த்துக்கறேன். இன்னைக்கு நானே இதைப் பத்திப் பேசத் தான் அவரை பீச்சுக்கு கூப்டேன். அவர் தான் வரலை.

சொல்லிக் கொண்டே கல்யாணியின் கைகளைப் பிடித்தபடி பக்தியோடு கோவிலுக்குள் நுழைகிறாள் லாவண்யா.

உள்ளே தீபாராதனையின் அடையாளமாக மணி டாண்…..டாண்….என்று அடித்து இவர்களை அழைக்கிறது.

0 0 0 0 0 0 0 0 0

லேடீஸ் ஃபர்ஸ்டா…? நாம கொஞ்சம் மாத்தி யோசிப்போமே…நீயே சொல்லேன்…என்ன சர்ப்ரைஸ்?
புருவங்களை உயர்த்தி அவளது அழகான கண்கள் இரண்டும் விரியக் கேட்கிறாள் கௌரி.

ம்ஹும்…..நீ தான் முதல்ல சொல்லணும். எங்கே…..சொல்லு…சொல்லு…சொல்லு…சொல்லு…! என்று இயல்பான சந்தோஷம் இல்லாமல் இயந்திரத் தனமாக கூறிய கார்த்திக்கை கூர்ந்து கவனித்தவளாக…

என்னடா…ஒரே வாரத்துல ரொம்பவே நீ மாறிட்ட….உன் முகமே பேசுதே. கண்ணுக்குள்ள ஒரு இருட்டு…! நான் டெல்லி போனதும் எதாவது திருட்டுத் தனம் பண்ணினியா? என்று கேட்கவும்…

அதெல்லாம் அப்பறமா சொல்றேன்…முதல்ல நீ…ம்ம்ம்….சீக்ரம்..தா..வார்த்தை அவசரப் படுத்தியது.

அஜக்ஜா…..இதோ..கார்த்தி….உன் லக்கி ப்ரைஸ் ….நீ வராமலேயே…உனக்காக ரெண்டு நாள் அங்கேயே டேரா போட்டு கையோட வாங்கீண்டு வந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.

வாட்….? கார்த்திக் ஆச்சரியத்தோடு கேட்கவும்.

ம்ம்….ம்ம்ம்….என் சாமானமெல்லாம் தொலைஞ்சது ஒரு பக்கம் இருந்தாலும்…..அந்த வருத்தத்தை இது தீர்த்துடுத்து. எல்லாம் உனக்காகத் தான். ..என்று கையில் வைத்து மெல்ல வீசிக் காட்டுகிறாள் கௌரி.

என்னன்னு உன் வாயால சொல்லேன்….!

எல்லாத்துலயும் உனக்கு ஷார்ட்கட்…..என்று பொய்யாக கோபித்துக் கொண்டவள், டெல்லி பிராஞ்சுல ஒரு வேகன்சி…என்கிட்டே யாராவது தெரிஞ்சா சொல்லுங்கோன்னு சொன்னார். டக்குன்னு உன்னை ரெபர் பண்ணி கையோட ஆர்டர் வாங்கிண்டு வந்தேன். வருஷத்துக்கு ஐம்பது லட்சம் சம்பளம். கார், பங்களா…அலவன்ஸ்….இந்தாப் பிடி…..! என்னை நம்பி கொடுத்திருக்கா…காலை வாராதே. நாம டெல்லிக்கு ஷிப்ட் பண்ணிக்கலாம். வாட் டூ யூ ஸே ? என்று ஆங்கிலத்தில் பட படக்க பேசியபடி அந்த ஆர்டரை அவனிடம் நீட்டி “இந்தா பிடி” என்றவள் ஆமா….எங்க என்னோட ஹாண்ட்பாக். 3G கார்டு கொண்டு வந்திருக்கியா…? அதானே நீ சொன்ன என்னோட சர்ப்ரைஸ்….ஐ நோ….என்கிறாள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் ஒளியுடன் கௌரி .

இதைக் கேட்டு சந்தோஷப் படவில்லை கார்த்திக். பிரமை பிடித்தவன் போல இருந்தவனைப் பார்த்த கௌரிக்கு காற்றுப் போன பலூனாக துவண்டு போனது மனது. ” என்னாச்சு இவனுக்கு…? மனசு கேள்வி கேட்டது.

அதை வாங்கத் தயங்கிய கார்த்தி…..முகத்தில் கலவரத்தோடு…உன்னோட .ஹாண்ட்பாக்கை என்னோட அம்மா சுட்டுட்டா….இந்தா உன்னோட 3G .கார்டு ..என்று நீட்டியவன்….கூடவே இதோ..இந்தா என்னோட …அந்த சர்ப்ரைஸ் என்று ஒரு ஃபோட்டோவையும் கூடவே நீட்டுகிறான்.நீட்டும்போது அவன் கை மெல்ல நடுங்குகிறது.

அவனது நடத்தையில் மாற்றத்தை எண்ணி வியந்தவளாக அவன் தந்த ஃபோட்டோவை வாங்கிப் பார்க்கிறாள்.

கார்த்திக்கும் லாவண்யாவும் மாலையும் கழுத்துமாக இருந்த அந்தப் புகைப் படத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த கௌரி….
என்ன சொல்றே நீ கார்த்திக்…? அந்த லாவண்யாவை நீ…..நீ….க ….க…கல்யாணம் பண்ணீண்டியா….?எப்படி…வாட் டூ யூமீன் ?

எஸ்…..ஐ…..மீன் இட்..!

இடியட்………எப்படி முடிஞ்சுது உன்னால…? நீ செய்த இந்தக் காரியத்தை அன்டூ பண்ண முடியாதே…….கார்த்தி…! கௌரி படபடத்தாள் .

கார்த்தி அவளது முகத்தைப் பார்க்காமல் பேசிக் கொண்டே போகிறான்.

கௌரி….என்னை மன்னிச்சுடு. அந்த நிமிஷத்தில் நான் ஒரு சூழ்நிலைக் கைதி…! என்னோட இந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாது. மனசுக்குள்ள உன்னையே நினைச்சுண்டு அதை யார்ட்டயும் தைரியமா வெளியே சொல்ல முடியாமல் பயந்துண்டு…..அம்மா….அப்பா.…கூட இருந்தவா அத்தனை பேரோட வற்புறுத்தலுக்கும் கண்ணீருக்கும் முன்னாடி அடங்கிப் போய் பலியாடாகி….லாவண்யா கழுத்துல கட்டாயமா என்னை தாலி கட்ட வெச்சுட்டா. என்னோட இந்தக் கல்யாணம் என்னோட மனசுக்கு விரோதமா கண்ணீர் முனையில் நடந்தது. இதுக்கு உன் ஆபீஸ் கொலீக் ஜீவா கூட சாட்சி.

ஷிட்……….! ஜீவா….ஜீவா….ஜீவா………..அய்யோடா…! கௌரியின் முகம் மாறியது .

கார்த்தி அன்று நடந்த விபரங்களை ஒன்று விடாமல் சொல்லிவிட்டு…..எனக்கு வேற வழி தெரியலை….பாவம் லாவண்யா….என்று சொல்லி முடிக்கவும்.

அதே சமயம் ,அவள் கையிலிருந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரையும் புகைப் படத்தையும் சேர்த்து கடல் காற்று இழுத்துக் கொண்டு சென்று கடலோடு சேர்த்தது.

அவள் மனது சிறிது சிறிதாக உண்மையை கிரகித்துக் கொண்டிருந்தது…அதையும் மீறி இதயம் சிதறிப் போவது போலத் தவித்தது. அவளுக்குள் இருந்த வேகமும் விவேகமும் ஒன்றை ஒன்று கட்டிப் புரண்டு சண்டை போட்டது. விவேகம் வெற்றியோடு மனதை ஆக்ரமிக்க , கௌரி பேச ஆரம்பித்தாள் .

நீ நல்லவன்டா கார்த்தி….உன்னால மட்டும் தான் இப்படி ஒரு காரியம் செய்ய முடியும். நீ மனசுக்குள்ள கோழையாவும், வெளியே ரொம்ப தைரியசாலியாவும் இந்தக் காரியத்தை பண்ணீட்ட. ஒரு விதத்துல நான் உன்னைப் பார்த்துப் பெருமை படறேன். உன் சொந்தக்காரப் பெண்ணுக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலையில் அவளை காப்பாத்த நீ உன்னையே பணயமாக்கி சரி செஞ்சுட்டாய். அதே சமயம், உன்னையே நம்பி என்னையே இழந்த என்னை ஒரு இக்கட்டான இடத்தில் நிறுத்தி வெச்சுட்டே. இதுக்கு யார் தான் சாட்சி ?.

கனத்த இதயத்தோடு கௌரி குனிந்த படியே மணலைக் கிளறிக்.கொண்டிருந்தாள். அவளது விரல்கள் அனிச்சையாக அவனது பெயரை எழுதி எழுதி அழித்துக்கொண்டிருந்தது.

கார்த்தி எதையோ பேச ஆரம்பித்தான்.

கௌரி அதைத் தடுக்கும் விதமாக அவளது கைகளால் ‘நிறுத்து’ என்று சமிக்சை செய்து…கார்த்தி…நீ உன்னோட செய்கையால் என்னை அடித்து நொறுக்கி ட்ட..!

இப்போ…அல்லது எப்போதுமே என்கிட்டே நீ ஒண்ணுமேசொல்ல வேண்டாம். ஜஸ்ட்…இப்போ நான் சொல்லறதை மட்டும் கேட்டுக்கோ…நிமிராமலேயே கௌரி பேசிய வார்த்தைகள் தெளிவாக கேட்டது அவனுக்கு.

‘.ம்ம்ம்ம்ம்….சொல்லு……...திட்டு….அடி ………அவனுக்கே கேட்காமல் வார்த்தைகள் தயங்கியது .

கடலலைகள் போல கௌரியின் மனதுக்குள் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக முட்டி மோதியது.

இந்த விஷயத்தால் என் மனசைச் சிதறிப் போக நான் விடமாட்டேன். ஒரு சிதறிய மனசால எதையுமே சிந்திக்க முடியாது.

சீரா போயிண்டிருந்த என் வாழ்க்கையில் இந்தக் கார்த்திக் …..காதல், கல்யாணம், கணவர்,,,,இத்யாதி எல்லாம் ஒரு பகுதி தான். இதுவே வாழ்க்கையாகி விடாது. இதெல்லாம் இல்லாமலும் நான் எப்பவும் போலவே எனக்காக வாழ்வேன். என்னை இந்தக் காதலோ கார்த்திக்கோ வீழ்த்த முடியாது. நான் கௌரி. எனக்கென்று இலக்கு இருக்கு.

மனதுக்குள் நினைத்துக் கொண்டவள்…மெல்ல நிமிர்ந்தாள். கண்களில் நீர் படலம் மெல்ல மெல்ல உள்வாங்கியது.
நல்லவேளை….கார்த்தி நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலை…!
தெளிவாக வார்த்தைகளை வீசினாள்.
கார்த்திக்கின் கண்களில் ஒரு அதிர்ச்சி வந்து விலகியது.
சரியோ…..தப்போ…..நீ உன் சொந்தக்காரப் பெண்…..அவள் பேர் என்ன சொன்னே?
லாவண்யா….!
ம்ம்ம்…லாவண்யா ….அவளைக் கல்யாணம் பண்ணீண்டு ஒரு நல்ல காரியம் பண்ணினாய்.
அவனது கண்களுக்குள் ஆச்சரியக்குறி…!
ஒருவேளை…..நமக்கு கல்யாணம் ஆன பிறகு இது போல ஒரு இக்கட்டான நிலைமை உனக்கு வந்திருந்தால்…? அவள் நிறுத்தினாள்.
அவன் கேள்விக்குறியோடு அவளைப் பார்த்தான். கௌரியின் முகம் என்றுமில்லாத நிலையில் குழம்பி இருப்பதை புரிந்து கொண்டான்..

அவள் பேசட்டும் என்று அமைதியாகக் காத்திருந்தான் கார்த்திக்.

இப்போ நடந்ததற்கு நீ பொறுப்பில்லை. சொன்னாப்போல நீ அந்த நேரத்துல சூழ்நிலைக் கைதியாயிட்டே. ஒரு வேளை இதே போன்ற நிலை எனக்கு வந்திருந்தாலும்…..நீ கூட இதே பெருந்தன்மையோட என்னை விட்டுட்டு போயிடுவே தானே ?

அவனது முகம் அவமானத்தில் திரும்பியது.
பரவாயில்லை கார்த்தி….வாழ்க்கை பயணத்தில் சீரான நெடுஞ்சாலை மட்டுமே இருக்காது. குறுக்குத் தெரு….முட்டுச் சந்து..ஏன்….? விபத்து….இப்படி எது வேணா நடக்கலாம் இல்லையா? நான் அந்த விபத்துலேர்ந்து பிழைச்சுட்டேன்னு நினைச்சுக்கறேன். எந்த ஒரு பெரிய விபத்துலயும் சில சமயம் ஏதோ ஒரு அங்கஹீனம் ஏற்படலாம் இல்லையா? அதே போலத் தான்….எனக்கும் ஒரு நிலை…!

நாம ரெண்டு பேரும் சேர்ந்து பயணம் செய்து ஒரே இடத்தில் இறங்குவோம்னு நான் நினைச்சேன்…..ஆனா… இப்போ நாம பயணமே செய்யப் போறதில்லைன்னு புரிஞ்சுடுத்து.

நிஜமான நேசம்னா என்ன? நாம யாரை நேசிக்கிறோமோ அவரை அவரோட இயல்போட அதாவது அவரோட குற்றம் குறைகளோட நேசிக்கணம். நாம் விரும்பும் மனத்தை வருத்தப் படுத்தக் கூடாது. அப்படியே அவர் நமக்கு துரோகமே செஞ்சாலும் கூட அது அன்பு கொண்ட மனசுக்குப் பெரிசாத் தெரியாது. தான் விரும்பிய மனசின் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறணம்ன்னு வேண்டிக்கும். அதுவே தனக்கு மனக்கஷ்டமா இருந்தால் கூட. அதையும் முழு மனசோட ஏத்துக்கணம்..
எந்த ஒரு காரியமும் இன்னொரு காரணமில்லாமல் ஒருத்தரோட வாழ்க்கேல நடக்கறதே இல்லை . எனக்கு அந்தப் பக்குவத்தை கொடுத்ததே
நீ தான் கார்த்தி..!

ஒன் மினிட் ….கார்த்தி இடைமறிக்கிறான்..

பேசிக் கொண்டே போன கௌரி அவனை நேருக்கு நேர் பார்க்கிறாள் .

அப்போ……இது …கார்த்திக்கின் விரல்களின் இடையே அந்த பிரசாத்தின் கடிதத்தை வைத்து பட பட என்று ஆட்டினான் .

எது….? கேட்ட கௌரியின் கண்கள் அகல விரிந்தது .

(தொடரும் )

Series Navigationசூறாவளிமாயமாய் மறையும் விரல்கள்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *