டௌரி தராத கௌரி கல்யாணம் – 28

This entry is part 1 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர்

 

 

என்னது ….? என்று தன் இரு புருவங்களை உயர்த்தி கௌரியைப் பார்த்த  பிரசாத்தின்  ஆச்சரியப் பார்வையில்,  வொய் திஸ் .’L’ போர்டு ? ன்னு பயந்துட்டியா பிரசாத்….? வேறெதுக்கு ‘கங்கா கல்யாணி’யை வளர்க்கத்தான்..ஆஹாஆஹாஆஹா ….வேறெதுக்கோன்னு நெனைச்சுட்டேளாக்கும் ..! என்று விஷமச் சிரிப்புடன் மங்களத்தைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தபடியே வண்டிக்குள் ஏறுகிறாள் கௌரி. அம்மா…நீயும் பார்த்து ஏறு….என்றவளிடம்.,

 

அய்யோ ….அதெல்லாம் ஒண்ணுமில்ல…..திடீர்னு ஒரு பிரம்மச்சாரிக்கு ‘L’ போர்டு மாட்டி அழகு பார்க்கணம்னு எப்டியாக்கும் தோணித்து அதான்…என்று  பிரசாத் சிரிக்க அந்த இடத்தில் ஒரு சிரிப்பலை தொடர்ந்து கேட்டது.

 

சரி….பிரசாத்…அந்தக் குழந்தையை என்கிட்டக் கொடுங்கோ….நானும்  கொஞ்ச நேரம் எடுத்துக்கறேன் என்று வண்டிக்குள்ளிருந்து கையை நீட்டுகிறாள் சித்ரா.

 

லேசாக கைகளை முறுக்கிக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வெல்வெட் ரோஜாவாக, டர்கி டவலோடு கைமாறியது.குழந்தை.  அந்த ஒரு நொடியில் பிரசாத்துக்கு தன்னிடமிருந்து எதுவோ பறிபோவது போல உணர்ந்தான். எனக்கு  என்னாச்சு? புதுசா…இது,  எந்த மாதிரி பந்தம்..? என்று தன்னையே ஆச்சரியத்துடன் கேட்டுக் கொள்கிறான்.

கையில் குழந்தையை வாங்கிக் கொண்ட சித்ரா….”கௌரி, இந்தக் குழந்தை எவ்ளோ அழகு பாரேன்…..ரெண்டு மாசம் தான் ஆகியிருக்கும்….படுபாவி…..பச்சைக் குழந்தைன்னு கூடப் பாக்காமே இப்படிப்  பரிதவிக்க விட்டுட்டு கங்கைல முங்க அவளுக்கு எப்படித் தான் மனசு வந்ததோ…? குழந்தையை வளர்க்கணமேன்னு கூடவா தோணாது ஒரு பொம்மனாட்டிக்கு? என்று கவலை தோய்ந்த முகத்துடன் பக்கத்திலிருந்த கௌரியை ஏறெடுத்துப்  பார்த்த சித்ராவுக்கு, கௌரியின் தாழ்ந்த பார்வை பல வாக்கியம் பேசியது.

ஒவ்வொருவராக வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டதும், ‘ஸ்கார்பியோ வண்டி’ சீறிக்கொண்டு அரைவட்டமடித்து பாய்ந்து ஓடியது.

 

அம்மா….திரும்பத் திரும்ப அதையே பேசி ஞாபகப் படுத்தாதே. குழந்தையை பிரசாத் கிட்டக் கொடுத்துடு…அவரோட முகத்தைப் பாரேன், எங்கே…நாம குழந்தையை எடுத்துண்டு போயிடுவோமோன்னு பயப்படறதை…

 

அதெல்லாம் ஒண்ணுமில்லை…..நம்மகிட்ட கொடுத்தால், ரெண்டோட மூணா வளர்க்கப் போறோம்..நமக்கு தான் வசந்தி இருக்காளே..ஏன் கௌரி, நீயும் அதைத் தானே சொல்ல நினைச்சே?

 

சித்ரா சொன்னதைக் கேட்டு லேசாக திடுக்கிட்ட பிரசாத்தை கௌரி கவனிக்கத் தவறவில்லை.

 

அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்த கௌரி, அதுவும் சரி தான்…என்ன பிரசாத் , இப்ப அம்மா சொல்றதுக்கு என்ன சொல்றேள்..? வேண்டுமென்றே கேட்டு கௌரி பிரசாத்தை மேலும் சீண்டிப் பார்க்கிறாள். .

 

கௌரி…ப்ளீஸ்….நோ வே…..இந்த ‘கௌரி கல்யாணி’……ஐம் சாரி…..இந்த ‘கங்கா கல்யாணி’ என்னோட குழந்தை தான்…நானே வளர்த்துப்பேன். டெல்லிலயும் குழந்தையைப் பார்த்துக்க ஆள் இருக்காக்கும். அவன் கண்கள் கெஞ்சியது.

 

மங்களம் , உங்களுக்கு ஏதானும் இதில் ஆட்சேபணை இருக்கா…..? பிரசாத் கிட்ட குழந்தையைத் தரலாமா? இப்பவே சொல்லிடுங்கோ..

 

எனக்கொண்ணுமில்லை…..இதுக்கெல்லாம் கூட லீகல் ஒபினியன் வாங்கணும்….முதல்ல காசில ஒரு வக்கீலைப் பார்த்து..என்று மங்களம் ஆரம்பித்ததும்.

 

இவர்கள் பேசுவதை சுவாரசியமாக  முன்பக்க சீட்டில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த புரோஹிதர்….’நன்னாச் சொன்னே குழந்தே நீ….! இதுக்கெல்லாம் வக்கீலைப் போய் பார்த்தால்…அவன் அதையே சாக்கா வெச்சுண்டு பணம் பிடுங்க வேற என்னவெல்லாமோ கேள்வி கேட்பான்….” பேசாம காதும் காதும் வெச்சாப்பல குழந்தையை எடுத்துண்டு நல்லபடியா ஊரு போய்ச் சேருங்கோ…ஜனன மரணக் கணக்குல கூட சில விதிவிலக்கு இருக்காக்கும்’..

ஃபார் .எக்ஸாம்பிள் என்னையே எடுத்துக்கோங்கோ…அம்பது வருஷம் முன்னாடி அஞ்சு வயசுப் பையனா அனாதையா காசில சுத்திண்டு இருந்தேனாம்…இந்தப் புரோஹிதர் மாமாவோட படகுல ஒரு நாள் படுத்துத் தூங்கிண்டு இருந்தவனைத் தூக்கீண்டு வந்து வேதம் சொல்லிக் கொடுத்து அவராக்கும் என்னை இத்தரைக்கு ஆளாக்கி இருக்கார்..நானும் அன்னிலேர்ந்து அவரோடயே இருக்கேன்…அவருக்கு முடியாதப்ப நான் பார்த்துப்பேன்.அதான் இந்த மாதிரி குழந்தையைத் போட்டுட்டு தற்கொலை பண்ணிக்கற பொம்மனாட்டிகளைக் கண்டால் நேக்கு தேஷியம் வந்துடறது..

அனைவரின் கண்களும் அவர் பக்கம் திரும்பி கதை கேட்கும் ஆவலுடன் பார்த்தன.

அம்பி…..இந்தக் கொழந்தை உங்களுக்குத் தான், நீங்களே வெச்சுக்கோங்கோ…நானே சொல்றேன்..என்று மென்மையாக சிரித்தவர்….அப்பறம்….நீங்க வாய் தவறி ஒரு பேர் சொன்னேளே…..’கௌரி கல்யாணி’ அதையே குழந்தைக்கு பேரா வெச்சுடுங்கோ…. என்று .சொல்லிவிட்டு,  நேக்கு கேக்காத காதுன்னு மாமி நெனைச்சுண்டு இருக்கா…..நேக்கு காது ரொம்ப நன்னாக் கேக்குமாக்கும்..செலப்போ….கொஞ்சம் இப்படித் தான் விளையாடிப் பார்ப்பேன். அதுல நேக்கு ஒரு சந்தோஷம்..மாமி….சரிதானே? என்று சித்ராவைத்  திரும்பிப் பார்க்கிறார்.

 

நன்னா விளையாடினேள்  போங்கோ….மாமா….நீங்க .தப்பா நினைச்சுக்கப்படாது…மன்னிக்கணம். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டாள் சித்ரா.

 

போட்டும் விடுங்கோ….வேதம் சொல்றவாளை துவேஷம் பண்ணப்படாது. இது இந்தக்கால மனுஷாளுக்கு எங்கே புரியறது.?..சிலர் இருக்கா…எங்க காதுபடவே , அது…இதுன்னு பேசுவா…ஒரு பிராமணப் பண்டிதனுக்கு என்ன மரியாதை தரணம்னு கூடச் சொல்லிக் கொடுக்காதது அவா  படிச்ச படிப்பு….யாரைச் சொல்ல? என்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்ட திருப்தியில் கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து கொண்டார்.

 

கௌரியின் முகம் இறுகியது. தான் செய்த தவறைப் புரிந்து கொண்டவளாக, ‘சாரி மாமா’ என்று மெல்லிய குரலில் அவள் சொன்னதைக் கேட்ட அவர் சாய்த்த தலையை லேசாக அசைக்கிறார்.

 

சற்று நேரத்தில் சிவமடத்தின் அருகில் இருந்த ஒரு சின்ன சந்தில் வந்து நின்று மூச்சை விட்டது ஸ்கார்பியோ. வாசலில் இருந்த பெரிய வேப்பமரம் அந்த இடத்தின் பழமையைச் சொல்லியது.

 

பசி மயக்கம் தள்ளாட, தள்ளாடியபடி  இறங்கியவர்கள் மனத்தில் இங்க இன்னும் எத்தனை நேரமாகுமோ? – இந்த எண்ணம் தான் முதலில் இருந்தது,

 

சிவமடத்துக்குள் இவர்கள் நுழைந்ததும், அங்கே இவர்களுக்காகவே காத்திருந்தவராக  ரமணி சாஸ்திரிகள், ‘வாங்கோ…வாங்கோ….நாழியாயிடுத்து…..என்றபடி உள்ளே பார்த்து குரல் கொடுக்கிறார்….’அவாளை தம்பதியா நான் சொன்னேன்னு வரச்சொல்லு…சீக்கிரம்’, என்றவர், மங்களத்தைப் பார்த்து,’இந்தாம்மா…கொழந்தே, இங்க அரிசிமாவால ரெண்டு கோலத்தைப் போட்டுடு’..சொல்லிக்கொண்டே ரெண்டு முறம் எடுத்து அதுல தம்பதி பூஜைக்கு நீங்க கொண்டு வந்ததை எடுத்து வையுங்கோ…என்கிறார்.

 

சட்டென்று பின்னுக்கு நகர்ந்த மங்களம், முகத்தில் ஒரு கலவரத்துடன், மாமி…கோலம் நீங்க போடுங்கோ..இல்லாட்டா உங்காத்து கௌரி போடட்டும்…..நான் மாட்டேன்..என்று இன்னும் பின்னுக்கு நகர்ந்து கொள்கிறாள். அவள் முகத்தில் தான் செய்யத் தகாத காரியத்தை அவர் சொல்லிவிட்டது போல ஒரு உணர்வு.

 

இதைக் கண்டதும் பிரசாத்தின் மனம் வேதனையில் கலங்கியது.

 

இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்த கௌரி, ‘மங்களம்….இதென்னது ஒரு கோலம் போட இப்படி பயந்து போனா எப்படி….இப்போ இங்கே நீங்க தான் கோலம் போடப் போறேள், எனக்காக…என் மானத்தைக் காப்பாத்துங்கோ, எனக்கு கோலம் போடத் தெரியாது என்று மங்களத்தின் காதோரம் கிசுகிசுத்து விட்டு அவளது கையில் அரிசிமாவு கிண்ணத்தைத் திணிக்கிறாள் கௌரி.

 

வேறு வழியில்லாமல் கிண்ணத்தை கையில் வாங்கிக்கொண்ட மங்களம், சித்ராவைப் பார்க்கவும், அதில் ‘போடேன்’ என்ற சாடை தெரிந்ததும் அழகாய் ரெண்டு நட்சத்திரத்தை தரையில் இறக்கி வைத்து விட்டு நிமிர்ந்தாள் மங்களம்.

 

கௌரி மெல்லச் சென்று மங்களத்தைத் தட்டிக் கொடுத்து…’ நைஸ்…ரொம்ப தாங்க்ஸ் ‘ என்கிறாள்.

 

கௌரியின் இந்த செய்கையையும் அதன் உள்ளர்த்தத்தையும் கண்டு பூரித்துப் போகிறாள் சித்ரா. கூடவே, கௌரி, உன்னோட தங்கமான குணத்துக்கு ஆண்டவன் உன் வாழ்க்கைல இப்படி விளையாடியிருக்கக் கூடாது…நினைத்த மாத்திரத்தில் சித்ராவின் கண்களில் இருந்து  ஈரம் எட்டிப் பார்த்தது.

 

ஆச்சாரிய சம்பாவனையும் முடிந்து கௌரி நமஸ்காரம் செய்யும் போது,’தீர்க்கசுமங்கலி பவ’ என்று அட்சதை அவள் மீது விழுந்ததும் சித்ராவின் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியது.

 

மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. கௌரியின் கைபேசி மணி அழைத்து ஓய்ந்தது. மீண்டும் அழைத்ததும், கௌரி, ஹலோ…ம்ம்…சொல்லுங்க என்றபடி வராண்டாவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.

 

க்வா …….கவா……..ஆ…க் ..க்வா ….என்று மெல்லச் சிணுங்கலாக ஆரம்பித்த ஒலி மெல்லத் தொடர்ந்து சத்தம் அதிகமாக, துணியை உதைத்துத் தள்ளியபடி பிஞ்சுக் கைகளை நெட்டி முறித்து அழும் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த பிரசாத்தைப் பார்க்க சிரிப்பு வந்தாலும், ‘நீ எப்படி இவளை சமாளிக்கப் போறே’ என்ற பார்வையில் ‘இங்க கொடுங்கோ அவளை என்று பதவிசாக வாங்கிக் கொண்டு சென்ற மங்களத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரசாத்.

 

நல்லவேளை, கௌதமுக்கு கலந்து மீந்து போன பால் இருந்தது. விருட் விருட்ன்னு குடிச்சுடுத்து.அவளுக்கு பசி பாவம். இந்த பச்சக் குழந்தைய வளர்க்கறது உங்களுக்கு கஷ்டம் தான் பிரசாத் மங்களம் சொல்லி முடிக்கையில்.

 

எல்லாரும் வாங்கோ, எலை போட்டாச்சு….!

 

அம்மாடியோ……இந்த வாரத்தையை கேட்க எவ்ளோ நன்னாருக்கு….வாங்கோ…வாங்கோ..முதல்ல சாப்பாடு…அப்பறம் தான் மத்ததெல்லாம்…சொல்லிக்கொண்டே ஓடுகிறார்கள்.

 

கௌரி இன்னும் யார்ட்ட  பசியோட….பேசிண்டு இருக்கா…?  அவளைக் கூப்பிடுங்கோ…சித்ரா தான் அவசரப் படுத்தி அழைத்தாள் .

 

ம்ம்மா…..ஆபீஸ்லேர்ந்து…..இரு..வரேன்.நீங்கள்லாம் சாப்பிடுங்கோ…என்றவள், இதோ ஆச்சு…நான் வந்துட்டேன்..என்று வந்து உட்கார்ந்து கொள்கிறாள்.

 

அத்தனை பசியிலும் ருசி தெரிந்து, பாராட்டி விட்டுத் தான் சாப்பிட்டாள் சித்ரா,

 

அம்மா…எப்பவும் இப்படித் தான் எங்க சாப்பிட்டாலும் சமைக்கிறவாளை கண்டிப்பா மனசு  நிறைய பாராட்டிட்டு அப்பறமா தான் சாப்பிடுவா. அப்பத்தான்  சமைச்ச அவாளுக்கும் சாப்பிட்ட நமக்கும் ஒரு திருப்தி கிடைக்கும்ன்னு சொல்லிப்பா .

 

பசிச்சு வந்தவாளுக்கு வயிறு நிரம்ப சாதம் போட்டு அவா ரசிச்சு சாப்பிடரதைப் பார்க்கும் போது இருக்கற திருப்தி வேற எதிலுமே வராதாக்கும். அனுபவத்துல சொல்றேன்….என்கிறாள் மங்களம்.

 

குழந்தைகளுக்கு சாதத்துல நெய்யும் ரசமும் விட்டு நன்னா பிசைஞ்சு வாங்கிண்டேன்…ஊட்டிடுங்கோ..என்று கௌரியின் கையில் தட்டைத் தந்து விட்டு தானும் சாப்பிட உட்கார்ந்து கொள்கிறாள் மங்களம்.

 

அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, நீ காவேரி மாமியாத்து பொண்ணு மங்களம் தானே..? என்று அங்கிருந்த புரோஹிதர் கேட்கவும், ம்ம்ம்…..ம்…. என்று தலையைக் குனிந்தபடியே சொல்கிறாள் மங்களம்.

 

உங்களோட வந்திருக்காரே…புரோஹிதர் .அவருக்கு இவாளைத் தான் கல்யாணத்துக்கு பெண் பார்த்தார் மாமா….அப்பறம் அது சரிப்படலைன்னு சொல்லிட்டு, என்கிட்ட கூட உங்க ஃபோட்டோவை காமிச்சு நல்ல வரன் வந்தா சொல்லுன்னு கேட்டுண்டார்.  இப்ப எப்படி….? பார்க்கலாமோன்னோ ….?

 

அவர் அப்படிக் கேட்டதும், சாப்பிட்டுக் கொண்டிருந்த மங்களம் பாதியில் அப்படியே வைத்து விட்டு எழுந்து கொண்டு கையலம்ப சென்று விட்டாள் . அவளது அந்த செய்கையின் அர்த்தம் புரிந்து கொண்டவராக அவரும் வேறு எதுவும் கேட்காமல் எழுந்து சென்று விட்டார்.

 

ஹப்ப்பா …..டார்ச்சர்……என்றபடி பிரசாத் சொல்லிக் கொண்டே, நீங்க ஏன் சாப்பிடாமல் எழுந்திருக்கணம்..?

 

அவருக்கு வாயை வெச்சுண்டு சும்மா இருக்கப் படாதோ…? கேள்வி கேட்குற லட்சணம்…! கௌரி அலுத்துக் கொள்கிறாள்.

 

இவாளுக்கு எவ்வளவு இருக்கு பாரு? இவ தான் அந்தப் பொண்ணுன்னு தெரிஞ்சுண்டே கேட்கறதைப் பார்…என்று சித்ராவும் அலுத்துக் கொள்கிறாள்.

 

உண்ட மயக்கத்தில் வண்டியில் உறங்கிக் கொண்டே வந்தவர்கள் , மீண்டும் காசி வந்து சேர்ந்த போது இரவை எட்டிப் பிடித்திருந்தது வானம்.

 

அடுத்த நாள் காசியில் காரியங்கள் முடித்து கொண்டு மீண்டும் கயாவுக்கு கிளம்பியதும், அம்மாடி…இன்னியோட முடிஞ்சுது என்று பெருமூச்சு விட்ட சித்ரா. ஆனாலும் மனத்துக்குள் காவேரி மாமி சொன்ன விஷயம் உறுத்திக் கொண்டே இருக்கே  எப்படியாவது இன்னிக்கு பிரசாத் கிட்ட பேசிட வேண்டியது தான்…’மங்களத்தை கல்யாணம் பண்ணிக்கோ பிரசாத்’ இப்படி டைரக்டா நானே கேட்டுடறேன், அப்பறம் என்ன நடக்கறதுன்னு பார்த்துக்கலாம் என்ற தீர்மானத்துடன் அதற்க்கான சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தவள்,பிரசாத்தும், மங்களமும் ஏதோ மும்முரமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்,,,,,,’அப்போ, நமக்கு இது ரொம்ப கஷ்டமான விஷயம் இல்லை…கேட்டதும், முடிஞ்சா மாதிரி தான்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் .

 

 

 

 

 

 

Series Navigationஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *