தகவல் பரிமாற்றம்

0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 12 in the series 15 மே 2022

 

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன….

இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்…

தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி…..

மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில்

மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை.

சில சமயம் வராத புறாவின் ஆயிரங் கால்களில் கட்டப்பட்டிருக்கும் காகிதத் துண்டுகள்

அதை எப்படியோ தரையிறங்க வைத்துவிடுகின்றன.

சில சமயம் தபால்காரர் வீசியெறிந்துவிட்டுச்செல்லாத

சில நூறு பக்கக் கடிதங்களைப் படிப்பதுதான்

எத்தனை சுவாரசியமாக இருக்கிறது!

காலப்போக்கில் கிழிந்ததும் கிழித்ததும்போக

எஞ்சிய கடிதங்களில் எந்தவொரு சொல்லையும் வரியையும் கண்டுபிடிக்க இயலவில்லை.

OK – Okayவுக்கு இடையே வித்தியாசம்

உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை

யாரும் யாருக்கும் எழுதுவதான தொனியில்

ஆரம்பமாகி முற்றுப்பெறாமலேயே முடிந்துவிடுபவை

வாட்ஸ் ஆப் கடிதங்கள்.

காலை ஆறுமணிக்கு எழுந்து மறுகணம்

மணி முற்பகல் பதினொன்றாகிவிடும் ஓட்டத்தில்

நிதானமாகக் கடிதங்கள் எழுதும் நேரம் பிடிபடவில்லை. எதை யென்பதும் யாருக்கு என்பதும்கூட.

எனக்கு நானே எழுதிக்கொள்ளலாமென்றால்

எதற்கு என்று கேட்பது மனமா மூளையா

இரண்டுமா புரியவில்லை.

இப்போதெல்லாம் தபால்காரர் வரும் நேரமென்ன

சரியாகத் தெரியவில்லை.

எங்கள் வீட்டு எண் தாங்கிய சிறு தபால்பெட்டியில்

குடியிருப்பினுடைய காவலாளியின் சார்ஜர் மட்டுமே எப்பொழுதும் குட்டிக் குருவிபோல் ஒரே இடத்தில் துவண்டுகிடக்கிறது.

ஒருவகையில் சார்ஜரும் மடல்தான் என்று தோன்றுகிறது.

அரிதாய்ப் பெய்யும் மழை

நீரில் கரைந்த வரிகள் நிறைந்த மடல்களை

ஒரே நேர்க்கோட்டில் தலைமீது பூவாய்ச் சொரிகிறது.

பெறவேண்டும் வரமாய இன்னும் ஒரே யொரு மடல் _

மறுமொழியளிக்காது விட்டுவிட…..

Series Navigationதிருப்பூரியம்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *