தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 6 of 12 in the series 24 ஜூலை 2022

                

 

                                                பாச்சுடர் வளவ. துரையன்

 

                  எரிகலன் இமைக்கும் கோலத்து            

                        இறைமகள் அமுது செய்யப்

                  பரிகலம் பண்டை அண்ட

                        கபாலமாம் பற்ற வாரீர்.                           751

 

[எரி=ஒளிவிடும்; கலன்=அணிகலன்; இமைக்கு=விளங்கும்; கோலம்;காட்சி; பரிகலம்=உண்கலம்; பற்ற=எடுத்து]

 

ஒளிவிடும் அணிகலன்கள் திகழத் திருக்கோலம் பூண்ட தேவிக்குக் கூழ் படைக்க உண்கலமாக மிகப் பழைய அண்டகோளமாகிய கபாலமே ஏற்றதாகும். எனவே அதை எடுத்து  வருக.

==================================================================================

                  பிரமனைப் பண்டு பெற்ற

                        பெருந்திரு அமுது செய்யப்

                  பரமனைப் பாடிப் பாடிப்

                        போனகம் படைக்க வாரீர்.                        752

 

[திரு=அழகு; அமுதுசெய்ய=உணவு படைக்க; போனகம்=உணவு]

 

பிரமதேவனை முன்னர் படைத்த மகாகாளி உணவு கொள்ளப் பரம்பொருள் சிவபெருமானைப் பாடித் துதித்துக் கூழ் படைப்போம் வாருங்கள்.

=====================================================================================       

                  சாகினி கனமும் உள்ள

                        சம்மினி கணமும் எல்லா

                  யோகினி கனமும் பக்கத்து

                        உண்பன ஊட்ட வாரீர்.                           753

 

[சாகினி=தேவிமுன் குடை பிடிப்போர்; சம்மினி=தோலாடை போர்த்தவர்கள்; கனம்=குட்டம்; யோகினி=பேய்ப்படைக்குத் தலைமை தாங்குபவர்கள்; ஊட்ட=படைக்க]

 

சாகினிக் கூட்டங்களே! சம்மினிகளே! யோகினிகளே! எல்லாரும் வாருங்கள். மகாகாளி விரும்பி உண்பன ஊட்டப் படைக்க வாருங்கள்.

=====================================================================================

                  கொடுத்ததன் அமுதம் தானும்

                        கொண்டனள் இறைவி ஈண்டுப்

                  படுத்த பாவாடை யோடும்

                        பரிகலம் பற்ற வாரீர்.                            754

 

[கொடுத்த=படைத்த; தன்=தனக்குண்டான; ஈண்டு=இங்கு; படுத்த=விரித்த; பாவாடை=படையலிட விரிக்கப்பட்ட துணி; பரிகலம்=உண்கலம்; பற்ற=எடுக்க

 

நாம் படைத்த படையலைத் தேவி உண்டார். எனவே, இங்கே படையலிடப் பரப்பி வைக்கப்பட்ட பாவாடை, உண்கலங்களை எடுத்து இடத்தைத் தூய்மைப்படுத்த வாருங்கள்

===================================================================================

                  கமலத்தேன் கையில் வீழ்ந்த

                        கமண்டலம் நிறைந்த தண்ணீர்

                  அமலைக்குத் தூய தெண்ணீர்

                        ஆரமு தாக்கி வாரீர்.                       755

 

[கமலத்தோன்=பிரமன்; கமண்டலம்=நீர் உள்ள பாத்திரம்; தெண்ணீர்=தெளிந்த நீர்; ஆரமுதாக்கி=பருகத் தக்கதாகச் செய்து]

 

பிரமன் கையில் இருந்து தவறிய கமண்டலம் நிறைய உள்ள தண்ணீரைத் தூய்மையான தெளிந்த நீராகச் செய்து, தேவிக்குக் கை, வாய் பூச பருகுவதற்குத் தர வருக.

=====================================================================================

                   

                  கதக்களிறு எட்டும் பட்ட

                        களந்தொறும் கும்பம் சாய்த்த

                  மதப்புதுத் தயிலம் தோய்ந்த

                        மணிமுத்துப் பிளவும் கொள்வீர்.                  756

 

[கதம்=மதம்; களிறு=யானை; களம்=இடம்; கும்பம்=தலை; சாய்த்த=வீழ்த்திய; தயிலம்=நெய்; மதம்=யானையின் கன்னத்தில் வழியும் மதநீர்; பிளவு=வெட்டுப்பாக்கு]

 

எட்டுத்திக்கு மத யானைகள் வீழ்ந்து கிடக்கின்ற களங்களிலே அவற்றின் மத்தகத்தில் இருந்து ஒழுகும் மதநீராகிய நெய்யில் யானைகளின் தலையில் இருந்து எடுத்த முத்துகளை கழுவிப் பாக்காகக் கொள்ளுங்கள்.

=====================================================================================

                  உந்தியில் முகுந்தன் முன்னாள்

                        உயிர்த்த தாமரையும் ஈரைந்து

                  இந்திர தருவும் தந்த

                        இலைச்சுருள் எடுத்துக் கட்டிர்.                    757

 

[இந்திர தரு=கற்பகமரம்; சுருள்=வெற்றிலை]

 

திருமாலின் கொப்பூழில் பூத்தத் தாமரையின் இதழ்களையும், இந்திரலோகத்துப் பத்துவகைக் கற்பக இலைகளையும், வெற்றிலைச் சுருளாக மடித்துக் கொள்ளுங்கள்.

=====================================================================================

                  மாயவன் சங்கு சுட்டு

                        வடித்த நீறுஅடைக் காயோடு

                  நாயகி அமுது செய்ய

                        நாம்இனிப் படைக்க வாரீர்.                     758

 

[மாயவன்=திருமால்; நீறு=சுண்ணாநம்ம்பு; அடைகாய்=வெற்றிலைப் பாக்கு]

 

திருமால் தன் திருக்கரத்தில் ஏந்திய சங்கைச் சுட்டு உண்டாக்கிய சுண்ணாம்பைத் தேவியின் திருவாய்க்கு அமுதம் எனப் படைப்போம் வாருங்கள்.

=====================================================================================

                  என்றுகொண்டு அலகை எல்லாம்

                        இமையவர் பிணம் கொண்டு ஈண்டுஅக்

                  குன்றுகொண்டு அட்ட கூழ்நம்

                        குடிமுறை பகுக்க வாரீர்.                           759

                 

[அலகை=பேய்; அட்ட=சமைத்த; குடிமுறை=குடிகளுக்குள்ள முறைமை; பகுக்க=பங்கிட]

 

பின்னர் பேய்கள் எல்லாம் தேவர்கள் மலை போன்ற உடல்களை எல்லாம் அடுப்பில் வைத்துச் சமைத்தக் கூழை முறையாக நமக்குள் பங்கிட்டுக் கொண்டு உண்போம் வாருங்கள்.

=====================================================================================

                  அண்டர் பொன்எயில் வட்டம்முட்ட

                        நெருங்கு பேய்பெற அட்டகூழ்

                  குண்டர் பொன்எயில் வட்டம் முட்ட

                        முகந்து அலந்து கொடுக்கவே.                      760

 

[அண்டர் பொன்எயில்=வான்உலகச் சொர்க்கம்; குண்டர்=சமணர்; முகந்து=எடுத்து]

 

தேவர்கள் இறந்தபின் வானுலகில், பேய்களாக வாழ்கின்றனர். நாம் சமைத்த கூழை, முதலில் அந்தப்பேய்களுக்கு வார்க்க, அருக சமயத்தவரின் சுவர்க்கமாகிய பொன்னெயில் வட்டத்தைப் பாத்திரமாகக் கொண்டு அளந்து கொடுங்கள்

=====================================================================================

                                      

                   மைந்து கூர்நிலம் நீர்நெருப்பு

                        வழங்கு மாருதம் மாகம் என்று

                  ஐந்து பூதமும் உண்ண உண்ண

                        அடும் கள்ளோடும் இடுங்களே.                    761

 

[மைந்துகூர்= வலிமை பொருந்திய; வழங்கு=உலவும்; மாருதம்=காற்று; மாகம்=ஆகாயம்; அடும்=காய்ச்சிய]

 

வலிமை பொருந்திய ஐம்பூதங்களான நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம், என்பனவற்றுக்கு உண்ண உண்ணப் போதும் இனி வேண்டாம் என்று சொல்லும் அளவுக்குக் காய்ச்சிய மதுவுடன் கூழ் வார்த்துவிடுங்கள்.

=====================================================================================

            நீலம் உண்ட முகில் குழாம்என

                  நின்ற பேய்இது நிற்பதோர்

            ஞாலம் உண்ட வயிற்று இரைப்பை

                  அடக்கு மின்கள் நடக்கவே.                              762

 

[நீலம்=திருமாலின் நிறம்; குழாம்=கூட்டம்; ஞாலம்=உலகம்; அடக்குமின்=நிரப்புங்கள்]

 

நீருண்ட மழைமேகம் போல நிற்கின்ற இந்த நீலநிறப் பேய் விஷ்ணுப் பேய் ஆகும். இதன் வயிறு உலகையே உண்டு பெருத்த வயிறு. இப்பேயின் இரைப்பை நிறையக்கூழ் ஊற்றுங்கள். அது போய்விடும்.

=====================================================================================                    

                  நின்ற லைப்பன நான்மு கத்தொரு

                        பேய்மடுப்ப நிணம்பெய் கூழ்

                  தந்த லைப்பொலி மண்டையில் சத்

                        கோடி சாடிகள் சாய்மினே.                         763

 

[அலைப்பு=வருத்தம்; மடுப்ப=குடிக்க; நிணம்=சதை; தன்தலைப்பொலி=அதன் தலை ஓடு; மண்டை=மடக்கு, சதம்=நூறு; சாடி=தாழி; சாய்மினோ=ஊற்றுங்கள்]

 

நான்கு முகத்துடன் வந்து நிற்கும் இது பிரம்மப்பேய் ஆகும். இது குடிக்கச் சதைக் கொழுப்புடைய கூழை அதன் கபாலத்தையே கையில் கொடுத்து எத்தனை நூறு கோடி தாழி வேண்டுமானாலும் ஊற்றுங்கள்.

====================================================================================

                  பேய் இரங்க இரந்து வந்தது

                        இருந்த கூழது பெய்ம்மினோ

                  ஆயிரங்கண் இழந்த பேயை

                        அருத்தி தீர இருத்தியே.                           764

 

[இரங்க=மனம் இளக; இரந்து கேட்டு; அருத்தி=உண்ணச் செய்க; இருத்தி=உட்காரச் செய்து]

 

பேய்களே பார்த்து மனம் இரங்கும்வகையில் ஆயிரம் கண்களையும் இழந்து வருந்தி வந்து நிற்கும் இது இந்திரப்பேய் ஆகும். இதை உட்கார வைத்து அதன் பசி தீருமட்டும் கூழை உண்ணக் கொடுங்கள்.

====================================================================================

 

            எயிறிழந்தும் நிலா இழந்தும்

                  விலாஇ ழந்தும் அமர்ந்த பேய்

            வயிறிழந்தில இன்னம் இன்னம்

                  அருந்து கூழ்புக வார்மினோ.                           765

 

[எயிறு=பல்; நிலா=ஒளி; வார்மினோ=ஊற்றுவீர்]

 

பற்களை இழ்ந்தும், அழகொளியை இழந்தும் விலாஎலும்பு ஒடிந்தும், வந்து உட்கார்ந்திருக்கும் இந்தச் சந்திர சூரியப் பேய்கள் தங்கள் வயிற்றை இழக்கவில்லை. இவற்றின் பசி தீர வயிறு நிறைய மேலும் மேலும் கூழ் ஊற்றுங்கள்.

=====================================================================================           

           

            இழந்த வாள்விழி போன பின்னை

                  இறந்து வந்து பிறந்த பேய்

            அழுந்த வாயில் அநந்த கோடி

                  மடா எடுத்து மடுக்கவே.                                766

 

[வாள்=ஒளி; பகன்=கணநாதர் எண்மரில் ஒருவர்; மற்றையர்: சருவன்=ருத்திரன், பசுபதி, ஈசானன்; உக்கிரன்; மகாதேவன்; மகிமன்]

 

தக்கன் யாகத்தில் கண் ஒளியிழந்து மடிந்து, பின் உயிர் பெற்று வந்துள்ள பேய் இது. இதன் பெயர் பகன். இதற்கு இதன் வாய் நிறைய எத்தனை கோடித் தாழி வேண்டுமானாலும் கூழ் ஊற்றுங்கள்

=====================================================================================

                  நெய் இழந்தது பால் இழந்தது

                        நீள்பெரும் பசி தீருமோ!

                  கை இழந்தது பிறந்த பேய் இது

                        கோடி சாடி கவிழ்க்கவே.                         767

 

[நீள் பெரும்பசி=அடங்காப் பசி; சாடி=பானை]

 

நெய் கிடைக்காமல் போனது; பால் கிடைக்காமல் போனது; இதன் அடங்காப் பசி பின் எப்படித் தணியும்? இது வீர்பத்திரரால் கை வெட்டுண்டு பின் உயிர்த்தெழுந்து வந்துள்ள  அக்கினிப் பேய் இது. கோடி கோடிப்பானைகள் கூழை இதற்கு ஊற்றுங்கள்,

=====================================================================================

                  மாய் குடிக்கு நிமித்தமாக

                        மகள் பெறும் திரு மாமடிப்

                  பேய் குடிக்க அநேக கோடி

                        மடா எடுத்தவைன் பெய்ம்மினோ.                  768

 

[மாய்=மடியும்; குடி=குலம்; நிமித்தம்=அறிகுறி; மாமடி=மாமனார்; பேய்=தக்கன் மிடா=பானை]

                                                                    

தன் குலம் அழிவதற்கு  அடையாளமாக ஒரு மகளைப் பெற்றெடுத்த சிவபெருமானின் மாமனாரான மரியாதைக்குரிய தக்கப் பேய் இது. இதற்கு அநேகக் கோடிப் பானைகள் கூழ் ஊற்றுங்கள்.

=====================================================================================

                  இது பகுவாய்த்து வயிற்றினில்

                        இப்பேருலகு விழுங்கும்பேய்

                  மதுவொடும் அண்ட கடத்தடா

                        மடுக்க மடுக்க எடுக்கவே.                       769

 

[பகு=பெரிய; வாய்த்து=வாயை உடைய; அண்ட கடாகம்=அண்டம் போலக் கொப்பறை; மடுக்க=பருக்க; மொண்டு=கொண்டு]

 

இப்பேய்க்கு வாய் மிகப்பெரிது; இந்த உலகமே அடங்கும் அளவுக்கு வயிறு உடையது இது; இதற்கு மதுவுடன், அண்டக் கொப்பறைப் போன்றப் பெரிய தாழியில் கூழை எடுத்து அது குடிக்கக் கூடிக்க ஊற்றிக் கொடுங்கள்.

 ====================================================================================

                  அடிக்க அடிக்க எழும் அருகப் பேய்கட்கும்

                        புத்தப் பேய்கட்கும் அண்ட கபாடக் கூழ்

                  பிடிக்கப் பிடிக்க உறும் வயிறு பழம்படியே

                        பெருகுக பெருகுக வாய்பருகுக பருகுகவே.        770

 

[அருகர்=சமணர்; கபாடம்=முகடு; பழம்படி=முன்போல]

 

அடித்து விரட்டினாலும் போகாத சமணப் பேய்களுக்கும் புத்தப் பேய்களுக்கும், அண்டமுகடு முட்டத்தாழியில் கொண்டுவந்து கொட்டக் கொட்டக் கூழைக் கொடுத்தாலும் வயிறு நிரம்பாது பெருத்துக் கொண்டே போகும். இவற்றின் வயிறு நிறையக் கூழ் பருகட்டும்.

=====================================================================================

                  இப்படிக் கழுத்தே கிட்ட

                        இரைத்த புத்தப் பேய் மண்டை

                   கைப்பிடி பெறும் பேயோடு

                        கலந்தொரு கலத்தில் உண்டே.                     771

 

[கழுத்தே கிட்ட=தொண்டை முட்ட; இரைத்த=மூச்சு வாங்க; மண்டை=மட்கலம்]

 

வயிறு நிறையத் தொண்டை முட்டக் குடித்த புத்தப்பேய் ஒன்று மட்கலத்தைக் கையில் பிடித்தபடி இருக்க மற்ற பேய்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி ஒரு உண்கலத்தில் இருந்த கூழைக் குடித்தன.

==================================================================================

                  தாராக அண்டம் தொடுத் துணிந்தார்

                        தமக்கிடம் போத் தமனியத்தால்

                  சீராச ராசேச் சரம் சமைத்த

                        தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே.             772

 

[தாராக=தார் ஆக; மாலையாக; தமனியம்=பொன்; சமைத்த=உருவாக்கிய]

 

அண்டங்களை எல்லாம் கோர்த்து மாலையாக அணிந்துள்ள சிவபெருமான் எழுந்தருளிக் கோவில் கொள்ள பொன்னால் தஞ்சை இராசராசேசுவரம் கோவிலை அமைத்த மன்னர்பிரான் இராசராச சோழன் வாழ்கவே” என வயிறாரக் கூழ் உண்ட பேய்கள் வாயார வாழ்த்தின

=====================================================================================

                  நீடிய எண்திசை நீழல் வாய்ப்ப

                        நேரிய தெக்கிண மேரு என்னப்

                  பீடிகை தில்லை வனத்த மைந்த

                        பெரிய பெருமாளை வாழ்த்தினவே.                773

 

[தெக்கிண=தென்திசை; பீடிக=ஆசனம்; தில்லைவனம்=சிதம்பரம்]

 

எட்டுத் திசைகளிலும் குளிர்ச்சியான நிழல் பொழிய உயர்ந்த தட்சிண மேரு என்று புகழப்படும் சிதம்பரப் பேரம்பலத்திற்கு பொன் தகடு பூட்டிப் புகழ் கொண்ட  இரண்டாம் குலோத்துங்கனை வாழ்த்துவோம் என வாழ்த்தின.

====================================================================================

                  பிரட்டனையே பட்டம் கட்டழித்துப்

                        பேர் ஏழரை இலக்கம் புரக்க

                  இரட்டனையே பட்டம் கட்டிவிட்ட

                        இராச கம்பீரனை வாழ்த்தினவே.              774

 

[கட்டவிழ்த்து=இழக்கச் செய்து; புரக்க=ஆள]

 

இரட்டபாடி ஏழரை இலக்கம் எனும் பெயர் கொண்ட நாடுகளின் அரசன் பிரட்டனின் அரசுரிமையை நீக்கி இரட்டனுக்குப் பட்டம் சூட்டிய இராசகம்பிர சோழன் வாழ்க என வாழ்த்தின.

=====================================================================================

                  அழிவந்த வேதத்து அழிவு மாற்றி

                        அவனி திருமகட் காக மன்னர்

                  வழிவந்த சுங்கம் தவிர்த்த பிரான்

                        மகன் மகன் மைந்தனை வாழ்த்தினவே.         775

 

[வழிவந்த=தொன்றுதொட்டு வரும்; சுங்கம்=பண்டவரி; மகன்மகன் மைந்தன்=கொள்ளுப் பேரன்]

 

அழிவடைய இருந்த வேதங்களை அழியாமல் காத்த, நாட்டுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, வழிவழி தொடரும் மன்னர் குல வழக்கச் செயலான சுங்க வரியை நீக்கிய பெருமான், முதல் குலோத்துங்கச் சோழனின் பேரன் மகன் இரண்டாம் இராசராச சோழனை வாழ்த்தின.

=====================================================================================

                  செருத்தந் தரித்துக் கலிங்கர் ஒடத்

                        தென்தமிழ்த் தெய்வப் பரணி கொண்டு

                  வருத்தம் தவிர்த்து உலகாண்ட பிரான்

                        மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே.             776

                 

[செரு=போர்; தரித்து=ஈடுபட்டு]

 

கலிங்கத்தவரை ஓட ஓட விரட்டி வெற்றி பெற்றதைப் பாராட்டி தெய்வத்தமிழில் ஒரு பரணி பாடப்பெற்ற புகழ் கொண்ட, மக்கள் துயர் நீங்கி மகிழ்ந்திருக்க, உலகாண்ட பெரும்புகழைப் பெற்றிருந்த விக்கிரம சோழனின் பேரன் இரண்டாம் இராசராசசோழனை மேலும் வாழ்த்தின.

=====================================================================================

                  முன்றில் கிடந்த தடங்கடல் போய்

                        முன்னைக் கடல்புகப் பின்னைத் தில்லை

                  மன்றிற்கு இடம்கண்ட கொண்டல் மைந்தன்

                       மரகத மேருவை வாழ்த்தினவே.                  777

 

[முன்றில்=முன் இடம்; தடங்கடல்=பெரிய கடல்; மன்று=அமப்லம்; கொண்டல் மலன்= மழை போலக் கருணை கொண்ட மகன்; மரகத மேரு=பொன் மேரு]

 

சிதம்பரத்தின் முன்றிலில் பள்ளி கொண்டிருந்த கோவிந்தராசப் பெருமாளை அவ்விடத்திலிருந்து அகற்றி முன்போலக் கடலுள் பள்ளிகொள்ள வைத்து, தில்லைச் சிற்றம்பலத்திற்கு மிகுதியாக இடம் உண்டாக்கிய இரண்டாம் குலோத்துங்கன் மகன் இரண்டாம் இராசராசனைக் கூழ் உண்ட பேய்கள் வாழ்த்தின.

 

Series Navigationஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்ஐனநாயகச் சர்வாதிகாரம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *