தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு

1
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

 

தமயந்தியம்மாள் இல்லம் நான்கு தலைமுறையினைப் பார்த்துவிட்டது. இல்லம் என்றால் முழு வீடும் இல்லை, பின்னால் இருக்கும் ஓடு வேய்ந்த சமையல் அறையும், அதை ஒட்டியிருக்கும் தளம் போட்ட பூஜை அறையும் மட்டும். அவை இரண்டும் தான் தியாகராஜனின் தாத்தா காலத்தில் இருந்தன. இப்போதைய சாப்பிடும் அறை அப்போது கூடமாக இருந்தது. தியாகராஜனின் அப்பா தன் காலத்தில் அதனுடன் புது கூடம் ஒன்றை இணைக்க, முன்னது கூடம் என்ற பட்டத்தை இழந்து அறையாகிப் போனது.

அந்த அறையில் தான் பழைய பச்சை வண்ண டிரங்கு பெட்டி வைக்கப்பட்டிருக்கும். திறக்கும் போது ரசக்கற்பூர வாடையடிக்கும். அதனுள்ளே பட்டு வேஷ்டியிலிருந்து புதுப் பென்சில் வரை அனைத்தும் இருக்கும். எப்போதாவது சுத்தப்படுத்தப்படும் நேரம், முக்கியத்துவம் குறைந்து போனதால், அதிலிருந்து வேண்டாம் என தூக்கி எறியப்படும் வாழ்த்து அட்டைகள், பழைய டைரி, அடர்ரோஜா வண்ண திருமண பத்திரிக்கைகள் போன்றவை தியாகராஜனுக்கும் அவர் தம்பிகளுக்கும் பொக்கிஷங்கள். தோழர்களிடம் அந்தப் பெட்டியை காட்டி அதனுள்ளிருக்கும் பொருட்களைப் பற்றி பெருமையாய் சொல்லிக் கொள்வார்கள்.

வீட்டைச் சுற்றிலும் முள் காடாக இருந்தது, அப்போது. இருந்தும், வீட்டில் நுழையக் கூடிய பூச்சிகளைப் பற்றிய பயம் இருந்ததில்லை யாருக்கும். அது பாட்டிலும் அது, இவர்கள் பாட்டிலும் இவர்கள் என்று ஒருவர் மற்றவர் வழியில் குறுக்கிடாமல், தன் வழியே சென்று கொண்டிருந்தார்கள். பிள்ளைகளுக்கு பூச்சிகளும் புழுக்களும் விளையாட்டு தோழர்கள். பள்ளி விடுமுறைகளில் பட்டாம்பூச்சிகளின் பின்னே திரிந்தார்கள். மழை நாட்களில் வரும் ரயில் பூச்சிகளைக் குச்சியால் தொட்டு அவை சுருட்டிக் கொள்வதை ஆர்வமாய் பார்த்தார்கள். மரவட்டையை இரண்டாக வெட்டிய பின்னும் அது நகர்வதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். வீட்டின் பின்னாலிருந்த மாமரத்தில் ஏறியிறங்கினார்கள். அருகேயிருந்த இலந்தை மரத்தின் காயை பழுக்கும் முன்னரே பறித்து கடித்தார்கள். அதன் துவர்ப்பு அவர்களின் நாவை உறுத்தவில்லை. இலந்தம் பழம் என்ற பெயரே உண்ண போதுமானதாய் இருந்தது அவர்களுக்கு. தியாகராஜனுடைய அம்மா தினமும் வீட்டை ஒட்டி முளைக்கும் புற்களை செதுக்கியபடி இருப்பாள். செதுக்குவதற்காகவே செய்யப்பட்டது போல உறுதியாக, கருமையின் பளபளப்போடு இருக்கும், அவளுடைய கைகள். வீட்டைச் சுற்றிலும் கட்டை துடைப்பத்தின் தடம் எப்போதும் பதிந்திருக்கும்.

தியாகராஜனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அகிலாண்டம், மாமியாரை விட அதிகமாய் வீட்டைப் போற்றினாள். குடிசை வீட்டிலிருந்து வந்திருந்த அவளுக்கு வீட்டின் அருமை தெரிந்திருந்தது. திருமணத்திற்கு முன் வரை, வெயிலின் போது மண் தரையை சாணமிட்டு மெழுகி, மழையின் போது ஒழுகும் இடங்களில் பாத்திரம் வைத்து, அது நிரம்பும் நேரம் மாற்றி பழக்கப்பட்டவள். மழைக்காலத்தின் போதுஈரமான இடங்களைத் தவிர்த்து, உலர்ந்திருக்கும் கொஞ்சம் இடத்தில் சாக்குப்பைகளை விரித்து, குடும்பமே ஒண்டிக் கொண்டு படுத்திருக்கும் நேரம், அகிலாவின் கனவுகளில் மச்சுவீடு இருக்கும்.

திருமணத்திற்கு பிறகு தளம் போட்ட வீட்டிற்கு வந்தது அவளுக்கு மிக திருப்தியாய் இருந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கும் பல விஷயங்களில் ஒத்துப் போகாவிட்டாலும், வீடு விஷயத்தில் மட்டும் இருவரும் விட்டுக் கொடுத்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டை யார் சுத்தம் செய்வது என்ற பிரச்சனை அவர்களுக்குள் எழுந்ததேயில்லை. அகிலா மாமியாருக்கு ஒரு படி மேலே போய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டைக் கழுவும் போது சுவர்களையும் சேர்த்து துடைப்பவளாக இருந்தாள். இதில் மாமியாருக்கு மிக பெருமை. அதை வெளிப்படுத்தும் விதமாக எப்போதாவது, ‘சுவத்தை ஒரேடியா தேய்ச்சி எடுத்துடாதடி! கஷ்டப்பட்டு கட்டியது’ என்பாள். தியாகராஜனின் பங்காக இந்த வீடு வந்த போது யாருக்கும் அதில் பெரிதாக ஒன்றும் தோன்றி விடவில்லை.

தியாகராஜனின் பிள்ளைகள்வளரும் போது பழைய அறைகளுக்கு வயதாகி விட்டிருந்தபடியால், மழை நேரம் சுவர்களில் ஈரம் கசியத் துவங்கியது. அடுப்பங்கரை ஓட்டின் இடுக்குகளிலிருந்து தேள்கள் கொட்டத் தொடங்கின. அகிலாவிற்கு இதனால் ஏற்பட்ட மன வருத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. வீடு, தாங்கள் தங்குவதற்கு ஏற்றதாய் இல்லை என்ற எண்ணம் அவளுக்குள் வலுப்பெற்றபடி இருந்தது. தங்கள் காலத்திற்குள் இப்போதிருக்கும் பழைய வீட்டைப் புதுப்பித்து, மேலும் குறைந்தது மூன்று அறைகளாவது கட்டிவிட வேண்டும் என்றுநினைத்திருந்தாள் அகிலா. மூன்று பிள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு ஆளுக்கு ஒரு அறை வேண்டும் தானே என்று நினைத்தாள். வரப்போகும் மருமக்களுக்காக தனித்தனி ஆட்டுரல், அம்மிக்கல் என்று சேர்த்தபடியிருந்தாள். அவங்க என்ன இங்கெல்லாம் வந்து தங்கப் போறாங்க!’ என்ற தியாகராஜனின் வாதமெல்லாம் எடுபடவில்லை.

உச்சி வெயிலில் நிலத்தில் உழுதெடுத்த பணத்தைப் போட்டு மிகப் பெரிய கூடமும் அதிலிருந்து பிரியக் கூடிய இரண்டு அறைகளும், அதற்கு மேலே மச்சுமாய் கட்டினார்கள். பழைய கூடத்தோடுசேர்த்து இப்போது மூன்று அறைகளாகிப் போயிருந்தது. வீட்டிற்கு தன் அம்மாவின் பெயரையே சூட்டி தமயந்தியம்மாள் இல்லம் என்று பெயர் வைத்தார் தியாகராஜன். அவர்கள் தெருவிலேயே மிகப்பெரிய மச்சு வீடாக அது அடையாளப்பட்டுப் போனது.

பொதுவாய் இருட்டியதும் பிச்சாடனார் தெரு ஆண்கள், திண்ணையில் அமர்ந்து நாட்டு நடப்புகளைப் பற்றி பேசுபவர்களாகவும், பெண்கள், சாணியிட்டு மெழுகிய தரையில் அமர்ந்து, தெருச் செய்திகளைப் பகிர்ந்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அந்த சமயம் தெருப்பிள்ளைகள் கண்ணாமூச்சியோ அல்லது கள்ளன் போலீஸ் விளையாட்டையோ விளையாடியபடி இருப்பார்கள். அது போன்ற நேரங்களில்

‘என்ன அகிலா! புள்ளைங்க கல்யாணத்த உங்க வீட்டு கூடத்திலேயே வச்சிடலாம் போல! எம்மாம் பெரிய வீடா கட்டிட்ட!’

என்று சுற்றுபட்ட பெண்கள் ஆச்சர்யத்தோடு சொல்வார்கள். அப்போதெல்லாம் அகிலாவிற்கு பெருமையாய் இருக்கும்.

அதன் பிறகு தெருவில் யார் வீட்டு மஞ்சள் நீராட்டானாலும், கல்யாணமானாலும், வளைகாப்பானாலும் இவர்களுடைய மாடியே பந்திக்கு என்றானது. பல நல்ல விஷயங்கள் நடக்கும் வீடு மங்களகரமான வீடாகத் திகழந்தது. இதில் அகிலாவிற்கு மிக சந்தோஷம். அவள் வழக்கம் போல வீட்டைச் சுற்றி முள் செதுக்கியபடியும், குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் பாலைத் துடைத்து விடுபவள் போல் சுவர்களை பார்த்து பார்த்து துடைத்தபடியும் இருந்தாள்.

தியாகராஜனின் மூத்த மகனுக்கு பெண் தேடும் போது பின்னால் கழிவறையும் குளியலறையும் கட்டினார்கள். இருந்தும் மருமகள் வரும் வரை அதை விறகு அடுக்க பயன்படுத்திக் கொண்டார்கள். பட்டிணத்திலிருந்து வந்த பெண் சுமாராய் படித்திருந்தாள். அவளுக்கு சிரமமான வேலைகள் செய்து பழக்கமில்லாததால், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி அகிலாவிடமே தங்கிப் போனது. அகிலா அதற்கெல்லாம் சலித்துக் கொள்ளவில்லை. உள் வேலைகளை மருமகளிடம் கொடுத்து விட்டு சுற்று வேலைகளைத் தானே எடுத்துக் கொண்டாள். அவளைப் பொறுத்த வரை வீடு, உயிருள்ள ஒரு அஃறிணையாக, அவளுடைய சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தோழியாக மாறிப் போயிருந்தது.

நான்கைந்து வருடங்களில் இளைய பிள்ளைக்கு டில்லியிலேயும், மற்ற இரு பிள்ளைகளுக்கு சென்னையிலேயும் வேலை அமைந்தது. அதற்கேற்றவாறு அவர்களின் குடும்பங்களும் அங்கங்கே தங்கி விட, தமயந்தியம்மாள் இல்லம் வெறிச்சோடிப் போனது. பின்னாலிருந்த மாமரத்தில் வெயிலோடு அணில்கள் மட்டுமே ஏறியிறங்கியபடி இருந்தன. யாருமற்ற அறைகள், முன்பிருந்தவர்களின் நினைவுகளைத் தம்முள் நிறைத்தபடி வாளாவிருந்தன. சூரிய ஒளி வீட்டில் நுழையவும் வெளியேறவும் முயன்றபடி இருப்பதை பார்த்தவாறு அமர்ந்திருப்பார் தியாகராஜன். மாடியில் வற்றல் பிழிந்தும், காய்ந்தவற்றை அண்டாக்களில் அடுக்கியும், ஊறுகாய்களைப் போட்டு ஜாடிகளில் அடுக்கியும் காலம் தள்ளியபடியிருந்தார் அகிலா. அவர்களின் மனம் முழுக்க விடுமுறையில் ஊருக்கு வரும் பிள்ளை, பேரப்பிள்ளைகளின் வரவை எதிர்நோக்கியபடி இருந்தது.

தொடக்கத்தில் விடுமுறைகள் கலகலப்பாக கழிந்தன. பேரப்பிள்ளைகளின் கூச்சலும் கும்மாளமுமாக வீடு நிறைந்துவிடும். பரம்பரையாய் வந்த பச்சை வண்ண டிரங்கு பெட்டி, பேரப்பிள்ளைகளையும் கவர்ந்தது. நினைத்த போது அதை திறக்கச் சொல்லி உட்கார்ந்துக் கொள்வார்கள். அதனுள் கருப்பு வெள்ளை புகைப்படங்களில் விறைப்பாய் புன்னகைக்கும் இளவயது தியாகராஜனையும், அவரின் தோளை ஒட்டி நின்று கேமராவை உற்று முறைக்கும் அகிலாவையும், தமது தந்தைமார்களையும் ஆவலோடு பார்த்தார்கள். மாமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடினார்கள். கன்று பால் குடிப்பதை ஆச்சர்யமாய் பார்த்து அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்தார்கள். அறைக்கு அறை ஓடி, தாவி விளையாடிய அவர்களின் குரல், அவர்கள் சென்ற பிறகும் வீட்டுச் சுவர்களில் எதிரொலித்தபடியிருக்கும்.

அடுத்த சில வருடங்களில் நடுப்பிள்ளை வேலை நிமித்தமாக தன் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்று விட, தில்லியிலிருக்கும் பிள்ளையாலும் வருடத்தின் அனைத்து விடுமுறைகளுக்கும் வரமுடியாமல் போனது. பிறகு அனைவரும் ஏதேனும் விசேஷத்தை முன்னிட்டு மட்டுமே ஊரில் சந்திப்பது என்றாகிப் போனது. தந்தையையும் தாயையும் தம்மோடு வந்து தங்கிக் கொள்ளும் படி அழைக்கத் தொடங்கினார்கள் பிள்ளைகள்.

ஆசைப்பட்டு ஒரு முறை சிங்கப்பூருக்கு விமானமேறினார்கள் தியாகராஜனும் அகிலாவும். போன புதிதில் சீனர்களின் முகம் முதற்கொண்டு எல்லாம் பிரம்மிப்பாக இருந்தது அவர்களுக்கு. பல இடங்களைச் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அந்த நாட்டின் உணவை மட்டும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்கு சென்றாலும் கட்டுச் சோற்றைக் கையோடு கட்டி எடுத்துக் கொண்டார்கள். மற்ற பிள்ளைகளிடம் தொலைபேசியில் தான் பார்த்தவற்றையெல்லாம் வியப்போடு பகிர்ந்துக் கொண்டார்கள்.

ஒரு மாதத்தில் அவர்களுக்கு புது இடத்தின் மீதிருந்த மோகம் குறைந்து போனது. அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்த பின், ஓய்வாக இருந்த நேரத்தில், வீட்டு நினைவு அகிலாவை ஆக்கிரமிக்கத் துவங்கியது. வெட்டாமல் விட்டதால் வளர்ந்த செடிகள் புதராகி வீட்டை விழுங்குவது போலெல்லாம் அவருக்கு கனவுகள் வரத் தொடங்கின. தியாகராஜனுக்கு, வேப்பங்குச்சியைக் பல்லிடுக்கில் கடித்தபடி லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு வெறுங்காலோடு கழனி வரை நடக்காமல் பொழுது விடிந்ததாய் தோன்றவில்லை. பார்க்கும் தமிழர்களையெல்லாம் மடக்கி வைத்து பேசத் தொடங்கினார் அவர். அடுத்த ஒரு மாதத்தை பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கினார்கள்இருவரும். அதற்கு மேல் முடியவில்லை. ஊரைப் பார்க்க கிளம்பிவிட்டார்கள்.

நாட்கள் செல்ல செல்ல பிச்சாடனார் தெரு மக்கள் இரவு நேரங்களில் வீதியில் அமர்ந்து பேசுவதைக் குறைத்துக் கொண்டார்கள். தொலைக்காட்சி நாடகங்களும், படங்களும் அவர்களின் சந்திக்கும் நேரத்தை விழுங்கத் துவங்கியிருந்தன. வீட்டிற்கு வருபவர்களிடம் கூட இடைவேளை நேரங்களில் மட்டுமே பேசுவது என்பது அவர்களின் வழக்கமாகிப் போனது. தியாகராஜனுக்கும் அகிலாவுக்கும் பொழுதை நெட்டித் தள்ள உதவியாய் இருந்தது தொலைக்காட்சி. அதில் வந்த நெடுந்தொடர்க் கதாப்பாத்திரங்களின் சூழ்ச்சிகளில், தம் பிரச்சனைகளையும் மறந்து, மனதைத் தொலைத்தார்கள் இருவரும். வீட்டு வேலைகளும் முன்பு அளவிற்கு இல்லை இப்போது. அம்மாவின் வசதிக்காக கிரைண்டர் வாங்கித் தந்திருந்தான் நடுப்பிள்ளை. முதலில் பிடிவாதமாக ஆட்டுக் கல்லில் அரைத்துத் தான் சாப்பிடுவோம் என்று இருந்த அகிலாவும் தியாகராஜனும், வயது ஏறஏற உடல் முடியாமல் போனதில், கிரைண்டருக்கு மாறினார்கள். வாங்கி வைத்திருந்த மூன்று ஆட்டுகற்களோடு தன் ஆட்டுகல்லையும் குடம் வைக்கப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினார் அகிலா. அம்மிக்கல் மட்டும் பிடிவாதமாய் பயன்பாட்டில் இருந்தது.

அகிலா மூட்டு வலியால் சிரமப்பட்ட போது, ஓரிரு அறைகளைப் பூட்டி வைத்தால் அம்மாவிற்கு வேலை குறையும் என்று மூத்த மகன் சொல்லப் போக, அன்று இரவு முழுவதும் அகிலா அழுதபடி இருந்தார். வீட்டைப் பராமரிக்க தன்னால் முடியாது என்பதை கடைசி வரை அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. மாரடைப்பில் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னர் கூட, சாப்பாட்டு அறையின் சுவர்களில் இருந்த விரிசல்களை, எங்கிருந்தோ ஒரு கை சிமெண்ட் வாங்கி வந்து, பூசியபடியிருந்தார்.

அகிலாவின் காலத்திற்கு பிறகு தான் வீடு சமாளிக்க முடியாத ஒரு பொருளாகிப் போனது. இவ்வளவு பெரிய வீட்டை யார் கவனிப்பது என்ற பிரச்சனை எழுந்தது. அதை தினமும் பெருக்குவதே பெரும்பாடாயிருந்தது. காசிற்காக வேலை செய்தவர்கள் கூட அதன் பிரம்மாண்டத்தை அலுத்துக் கொண்டார்கள். களையெடுக்காமல், பெருக்காமல் விடப்பட்ட மண் தரையில் சிறு கற்களும் மணலும் காலை உறுத்தத் துவங்கின. வீட்டைச் சுற்றிலும் பூண்டுச் செடிகள் உயரமாய் வளரத் துவங்கியிருந்தன.

மனைவியின் நாட்களுக்குப் பிறகு தியாகராஜன், தனிமையைப் விரட்ட, தில்லியில் சில நாட்களையும் சென்னையில் சில நாட்களையும் கடத்த முயற்சித்தார். ஆனால் அவரின் மனம் தன் ஊரைத் தவிர வேறு எதிலும் ஒட்டவில்லை. அதனால் தன் அந்திம காலத்தை, தான் பாடுபட்டு கட்டிய வீட்டின் சுவர்களையும், வாங்கி வைக்கப்பட்டிருக்கும் அம்மி கற்களையும் தடவியபடி கழித்துக் கொண்டிருக்கிறார். வெளியூருக்குச் செல்லும் வழியில் இருக்கும் கிராமங்களிலுள்ள பெரிய வீடுகளைப் பார்க்கும் போதெல்லாம் அவருள்ளிருந்து பெருமூச்சு கிளம்புகிறது.

தற்போது தன் பழைய பொலிவையெல்லாம் உதிர்த்துவிட்ட கூடாய் நிற்கிறது தமயந்தியம்மாள் இல்லம். காற்று மட்டுமே அதன் அறைகளில் உலாவிக் கொண்டிருக்கும் அரூபக் கதைகளை வாசித்தபடி, அதற்கு சாட்சியாய் வீட்டிற்குள் அலைந்துக் கொண்டோ திண்ணையில் படுத்துக் கொண்டோ இருக்கும் கிழவரைத் தழுவிச் செல்கிறது. இப்போதும் அந்த தெருவாசிகள் அதில் வசித்த மனிதர்களைப் பற்றி நினைத்தபடியே தான் அந்த வீட்டைக் கடக்கிறார்கள்

Series Navigation
author

ஹேமா

Similar Posts

Comments

  1. Avatar
    ஒரு அரிசோனன் says:

    நன்றாக இருக்கிறது.

    இந்தக் கதையைப் படித்தவுடன், என் அன்னையும் நானும், என் உடன்பிறப்புகளும் பிறந்து வளன்ர்ந்த, இப்போது மண்ணோடு மண்ணாகிப்போய், எருக்கு முளைத்துப்போன என் வீடுதான் நினைவுக்கு வருகிறது.

    என் மனது எண்ணங்களை அப்படியே வடித்துக் காட்டி இருக்கிறீர்கள். படித்து முடித்ததும் ஒரு கணம் என் நெஞ்சு கனத்தது.

    தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply to ஒரு அரிசோனன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *