தாய்மை

author
7
0 minutes, 5 seconds Read
This entry is part 22 of 28 in the series 27 ஜனவரி 2013

 

டாக்டர் ஜி. ஜான்சன்

கோத்தா திங்கி பேருந்து நிலையத்தின் எதிர்புறம் ஒரு சந்தின் வழியாகப் புகுந்தால் பிரதான வீதியொன்று தெரியும். அதைத் தாண்டி சென்றால் எதிரேயுள்ள கடைகள் வரிசையில் கிளினிக் புத்திரி உள்ளது. நான் அதில்தான் தற்போது பணியாற்றுகிறேன்.

மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இந்த கிளினிக்கில் மலாய்க்காரர்களே அதிகம் வருவதுண்டு. இந்தப்பகுதியில் ஏராளமான பெல்டா ( FELDA ) தோட்டங்கள் இருப்பதால் அவர்களின் ஜனத்தொகையே அதிகம். எப்போதாவதுதான் தமிழர்கள் வருவர். சீனர்கள் வருவது மிகக் குறைவுதான்.

நான் பெர்மாஸ் ஜெயாவிலிருந்து காலை ஒன்பது மணிக்கெல்லாம் கிளினிக் வந்துவிடுவேன். இரவு பத்துவரை வேலை.

எனது மருத்துவப் பணியில் எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. அன்றாடம் நான் காணும் ஒவ்வொரு நோயாளியிடமும் கதைகளுக்கு ஒரு கரு கிடைக்கும். அதுபோல் இந்த கதையும் ஒரு கரு பற்றியதுதான்.

கரு எப்படி உருவாகிறது என்பதே ஆச்சரியம் நிறைந்ததே. அதற்கு ஒரு பெண்ணின் ஒரேயொரு சினைமுட்டையும் ஒரு ஆணின் உயிர் அணுவும் (sperm ) ஒன்று சேர வேண்டும். அது சேர்ந்து கருவாக உருவாவதற்கு மாதத்தில் ஒரு வாரமே உகந்த நேரம். வேறு நாட்களில் ஆண் பெண் ஒன்று சேர்ந்தாலும் கரு உட்பத்தியாகாது. இந்த ஒரு கரு உற்பத்திக்காக எத்தனை தம்பதினர் எத்தனை எத்தனைக் காலம் கண்ணீரும் கவலையுடனும் என்னைக் காண வந்துள்ளனர் என்பதை நானறிவேன்.

ஆனால் ஒரு சிறுகதைக்கான கருவோ எந்நேரமும் வெகு எளிதில் உருவாகிவிடும். இதுவே படைப்பாளிகளின் தனிச் சிறப்பு எனலாம்.

வழக்கம் போல் அன்றும் நோயாளிகளைப் பார்த்துகொண்டிருந்தேன். திங்கட்கிழமை என்பதால் எப்போதுமே கூட்டம் அதிகம்தான். வாரஇறுதி ( weekend ) நோய் என்று ஒன்று உள்ளது. அதனால் பலர் திங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் என்னைப் பார்க்க வந்து விடுவர். அவர்களுக்கு பெரும்பாலும் வயிற்றுப்போக்கு, ஒற்றைத்தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, இடுப்பு வலி, கைகால் குடைச்சல் பரவலாக காணப்படும். நானும் அவர்களின் நோக்கம் தெரிந்தவனாக மருத்துவ விடுப்பு ( MC ) தந்துவிடுவேன்.

என் எதிரே அமர்ந்திருந்த மலாய்ப் பெண்ணை நான் பார்த்தேன். லீசா எனும் பெயர் கொண்ட அவளுக்கு வயது 25. மணமானவள். AB Tech நிறுவனத்தில் வேலை செய்பவள்.

” டாக்டர்…நீங்கள் முன்பு தெசா செமேர்லாங் மில்லினியம் கிளினிக்கில் வேலை செய்தீர்கள் இல்லையா? நான் உங்களை அங்கே பார்த்துள்ளேன். ” மலாய் மொழியில் கூறி என்னைத் தெரிந்துள்ளதாக காட்டிக்கொண்டாள்.

‘ ஆமாம் ” என்றேன்.

” டாக்டர். நான் இன்று வேலைக்கு போகலை. நேற்றிலிருந்து வாந்தியும். மயக்கமாகவும் உள்ளது. வயிறு வலிக்குது. ” சோர்வாகவே அவள் காணப்பட்டால்.

” வையிற்றுபோக்கு உள்ளதா ? ” என்றவாறு அவளைப் பார்த்தேன்.

” இல்லைங்க டாக்டர்.” இது அவளின் பதில்.

அவளை சாதாரண பரிசோதைகள் செய்துவிட்டு, ‘ ஒரு வேலை நீ கருவுற்றிருக்கலாம். எப்போது கடைசி மாதவிலக்கு என்று கேட்டேன்.

‘ டிசம்பர் மாதம் பத்தாம் தேதி டாக்டர். ஆனால் இருக்காது டாக்டர். எப்போதும் இப்படிதான். ” நம்பிக்கையற்றவளாகக் கூறினாள்

‘ திருமணம் ? ”

‘ உம்…. ”

“பிள்ளைகள் ?”

‘ இல்லை ”

” மணமாகி எத்தனை வருடங்கள்? ”

” ஆறு வருஷம் “.

” ஒரு முறைகூட கரு தரிக்கவில்லையா? ”

‘ இல்லைங்க டாக்டர்..அதனால்தான் எனக்கு நம்பிக்கை இல்லை.” உறுதியாகச் சொன்னாள்.

” எனக்கு என்னவோ இது கற்பம்போல் தோன்றுது. எதற்கும் சிறுநீர் பரிசோதித்து பார்த்துவிடுவோம். ” முடிவாகக் கூறினேன்.

அவள் வேண்டாவெறுப்பாகவே தலையாட்டினாள். அதற்குக் காரணம் அந்த பரிசோதனை செய்ய அவள் முப்பது வெள்ளி கட்டியாகவேண்டும்.

அது urine pregnancy test எனும் பரிசோதனை. அதில் மூன்று சொட்டு சிறுநீர் இட்டால் மறு வினாடியில் இரண்டு கோடுகள் தெரிந்தால் கற்பம் என்பது உறுதி.

அதை செய்து முடித்த கிளினிக் பெண் ஜோதி வாழ்த்துக்கள் என்று ஆங்கிலத்தில் கூறியவாறே அறைக்குள் நுழைந்தாள்.

நான் அதை வாங்கிப் பார்த்தேன். அதில் இரண்டு கோடுகள் இருந்தன!

” நீ கர்ப்பமாக உள்ளாய். வாழ்த்துக்கள் .” அவளைப்பார்த்துக் கூறினேன்.

அவளால் அதை நம்பமுடியவில்லை. அவளின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. முன்பே ஆரஞ்சு நிறத்தில் இருந்த அவளின் முகம் பூரிப்பில் சிவந்த ரோஜாவானது!நான் அந்த பரிசோதனை சாதனத்தை அவளிடம் காட்டினேன். அதில் இரண்டு கோடுகள் உள்ளதை அவள் உற்றுப் பார்த்தபின்புதான் நம்பினாள்

மறு நிமிடம் அப்படியே என் கைகள் இரண்டையும் பூரிப்புடன் பற்றிக்கொண்ட அவளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது!

” ரொம்ப நன்றி டாக்டர்! ரொம்ப நன்றி டாக்டர்! என்னால் இதை நம்பவே முடியலை! ” உரக்கவே கத்திவிட்டாள்.

உடன் கைத்தொலைப்பேசியை எடுத்து கணவனை அழைத்து அந்த நல்ல செய்தியைக் கூறினாள்

தாய்மை அடைவது தருகின்ற பேரானந்தத்தை அன்று அவளிடம் நேரில் கண்டு வியந்தேன்.

இந்த ஒரு கரு உண்டாக அவள் ஐந்து வருடங்களாக முயன்று ஒவ்வொரு மாதமும் ஏமாந்தது போன நிலையில் .இனி வாய்ப்பே இல்லை என்ற நிலையில்தான் அவள் என்னிடம் வந்துள்ளாள்.

ஈன்ற போழுதிட் பெரிதுவக்கும் என்று வள்ளுவர் சொன்னபோது குழந்தையை ஈன்றேடுப்பது பெரிய இன்பம் பெண்ணுக்கு என்றார். ஆனால் கருவுறுவது அதைவிட பேரின்பம் என்பதை அன்றுதான் நான் உணர்ந்தேன்! ( முடிந்தது )

Series Navigationவிதிகவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013
author

Similar Posts

7 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

    ஒரு நிஜத்தின் நிழல் பேசியது போல இருந்தது. பெண்மையில் தாய்மை தான் உயர்ந்த பதவி.
    அதை வேண்டாதோர் இல்லை. ஒரு பெண் தாயான தருணத்தை அவளறியும் பொழுதை ஒரு டாக்டராக நீங்களும் மகிழ்ந்து எழுதியது வியப்பே. இந்த உணர்வு அநேகமாக ஜாதி,மதம்,மொழி,இடம் கடந்தும் உலகம் முழுதும் ஒரே மாதிரி இருப்பதுவும் நிஜம்.. நல்ல உணர்வை வெளிப்படுத்தியது உங்கள் தாய்மை.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களே, அந்த மலாய் மங்கை அடைந்த ஆனந்தத்தை நான் கண்டபின் அதை உடன் பதிவு செய்துவிடவேண்டும் என்று எழுதியதே ” தாய்மை “. உங்களின் நல்ல பாராட்டுதலுக்கு நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar
    வாணிஜெயம் says:

    மருத்துவத் துறையில் தாங்களின் அனுபவங்கள் புனைவாக பகிர்வது அருமையாக உள்ளது.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *