திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்

This entry is part 43 of 46 in the series 26 ஜூன் 2011

சிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களில் பதிந்து விட்ட ஒன்று. தமிழ் ஈழப் போராட்டத்தில் நியாய உணர்வு கொண்ட சிங்களவர்களும் இணைந்து பணி புரிய முடியாதபடிக்கு அவர்களிடமிருந்து தனிமைப் பட்ட நிலையில் இயக்கங்களும் போராட்டங்களும் இருந்து வந்திருக்கின்றன. இது பற்றி முதன்முதலில் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் விவாதித்தவர் பிரமிள். அவருடைய “ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை” புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நூலை இன்று படிக்கும்போது வருத்தம் மேலிடுகிறது, ”தற்கொலை” என்ற கணிப்பு அன்று வெகு தொலைவில் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல உருவாகிவரும் சிதைவில் உண்மையின் வெப்பமும், மக்களை முன்னிறுத்தாத நெகிழ்ச்சியற்ற அரசுச் செயல்பாடுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. காந்தியும், மண்டேலாவும் சரி எப்படிப் பட்ட தீர்க்கதரிசிகள் என்பது ஒவ்வொரு விடுதலை இயக்கத்தின் போக்கையும் பார்க்கையில் உறுதிபடுகிறது.

சிங்கள அறிவுஜீவிகள் தொடர்ந்து தமிழ் போராட்டங்கள் பற்றியும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருந்த சூழலில் அது அவர்களுடைய உடனடி சமூகத்தில் என்ன பிரசினைகளை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிந்து கொள்வது கடினமில்லை. இருந்தும் கூட சிங்கள அறிவுஜீவிகள் பலரின்  செயல்பாடு தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசின் கொடும்போக்கிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கிறது. ஆனால் தமிழ் ஊடகங்கள் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. அவற்றை வெளியிடுவதன் மூலம் சிங்களச் சமூகம் அனைத்தையும் “எதிரி”யாகக் கட்டமைக்க முடியாமல் போகலாம் என்றோ என்னவோ அந்தக் குரல்கள் தமிழ் பத்திரிகைகளில் வெளியாவதில்லை.

ஆனால் இன்று நிலைமை வேறு. சிங்கள அரசு போர்க்காலத்தில் புரிந்த அத்துமீறல்களுக்கு, செர்பியாவின் மிலோசெவிச் போன்று சிங்கள அரசின் குற்றவாளிகள் தண்டனை பெற வெண்டுமென்றால் இது வெறும் தமிழர்களின் குரலாகவே நின்று விடக்கூடாது. ஸ்ரீலங்காவின் அனைத்து தரப்பினரின் குரலாகவும் அது ஒலிக்க வேண்டும். அந்தக் குரலை உலகிற்கு மட்டுமல்லாமல், தமிழ் மக்களிடத்தும் கொண்டு செல்ல வேண்டும்.

திண்ணை தளத்தில் சமீப காலமாக தொடர்ந்து பங்களிப்புச் செய்து வரும் ரிஷான் ஷெரீஃபுக்கு விசேஷமான நன்றிகள். உதுல் பிரேமரத்ன, அஸங்க சாயக்கார, ப்ரியந்த லியனகே, பியன்காரக பந்துல, ஜெயவீரக, சுனந்த தேசப்ரிய போன்ற ஆகச் சிறந்த சிங்கள அறிவிஜீவிகளின் படைப்புகளை, கவிதைகளை, உரிமைக் குரல்களை தமிழ் மக்கள் முன்னால் வைப்பது என்பது இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒன்று. ஸ்ரீலங்காவின் நம்பகத் தன்மை உலக நாடுகளின் முன்பு மீண்டும் நிறுவப் படவேண்டுமென்றால், போர்க்குற்றவாளிகள் உலகப் பொது மேடையில் தண்டனை பெற்றாக வேண்டும். தமிழர்களின் இன்றைய அவலனிலை, வெறுமே தமிழர்களின் அவல நிலை அன்று, ஸ்ரீலங்காவின் குடிமக்களின் அவல நிலை என்ற உணர்வு தொடர்ந்து முன்னிறுத்தப் படவேண்டும்.

”தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, ஊர் மற்றும் பாதைகளின் பெயர்களைச் சிங்களப்படுத்துவது, யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பதிவு செய்வது, வன்னி மக்களுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்காதிருப்பது, வடக்கு கிழக்கு இராணுவ ஆட்சி, விடுதலைப் புலிகளின் கல்லறைகளை அழித்து அவற்றின் மீது இராணுவ முகாம்களைக் கட்டுவது போன்ற செயற்பாடுகள் அனேகமானவற்றால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தியானது, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும், சம உரிமைகளற்ற மக்கள் என்பதுதான். பார்வதி அம்மாவின் அஸ்தி சேதப்படுத்தப்பட்டமை தனியொரு சம்பவமல்ல என்பது அதனாலேயேதான். அதுபோலவே அந்தச் சம்பவமானது அரசியல் சம்பவமொன்றாகக் கருதப்படுவதும் அதனாலேயேதான். அந்தச் சம்பவமானது எங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியதுவும் அதனாலேயேதான்.ஒன்றிணைந்த, அமைதியான, நேர்மையான இலங்கையொன்று எங்களுக்கு அவசியமெனில், அதன் முதலாவது நிபந்தனையானது தமிழ் மக்களை சுதந்திரமாகவும், ஆத்ம கௌரவத்தோடும் உள்ள மக்களாக வாழ இடமளிப்பதே.” என்ற சுனந்த தேசப்ரியவின் குரல் அனைத்து சிங்கள மக்களின் குரலாகவும் மாறவேண்டும் என்றால் அது தமிழ் மக்களிடம் இணக்கக் குரலாக, ஒருங்கிணைவுக் குரலாக கொண்டு செல்லப் படவேண்டும். அந்த முயற்சியின் மிக முக்கியமான பங்களிப்பு ரிஷான் ஷெரிபுடையது. மீண்டும் தனிப்பட்ட முறையிலும், திண்ணை வாசகர்கள் சார்பாகவும் அவருக்கு நம் நன்றிகள்.

 

Series Navigationஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்இருள் குவியும் நிழல் முற்றம்
author

கோபால் ராஜாராம்

Similar Posts

2 Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    இது மிக முக்கியமான அறிவுரை. வெகு ஜன தமிழர்களும் தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் ஊடகங்களும் உணர்ந்து
    சிங்களவர்களின் ஆதரவையும் ஒரு கொடுங்கோல ஆட்சிக்கு எதிரான சர்வ தேச நடவடிக்கைக்குப் பெற முடியுமானால் அது அந்தக் கொடுங்கோலரைப் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தும் முயற்சிக்கு வலிமை சேர்க்கும்.

  2. Avatar
    சர்வசித்தன் says:

    சிங்களர்கள் யாவரும் தமிழர்களுக்கு எதிரான மனப்போக்குக் கொண்டவர்கள் என எண்ணுவது முற்றிலும் தவறானதே. எம் மொழி பேசுபவர்களாயினும், எவ்வினம் சார்ந்தவர்களாயினும் நல்ல மனிதர்கள் மானுட விழுமியங்களை மதிப்பவர்களாகவும், அவை மீறப்படும் போது குரல் கொடுப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இதற்குச் சிங்களர்களும் விதிவிலக்கல்ல. ஆனால்,சிலர்; அரசியல் வாதிகளின் அடாவடித்தனங்களுக்கு அஞ்சியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பேச்சிழந்து போய்விடுகிறார்கள்.அதனையும் மீறிப் பேசுவோர் மூச்சிழக்கவும் நேரிட்டு விடுகிறது! எனினும், இன்றைய நவீன யுகத்தில் இணையங்கள் மற்றும் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக உண்மை நிகழ்வுகளை அறியும் வாய்ப்புப் பெற்ற இளைஞர் சமுதாயம் இனிவருங் காலங்களில்… கொடூரர்களைத் தண்டிக்கவும்… சமூக நலன் விரும்பிகளைத் துணிந்து ஆதரிக்கவும் தயங்காது என்பதால்….. புதிய மானுடத்தின் எழுச்சி வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை.பாரதி கனவுகண்ட ‘கிருத யுகம்’ இந்த 21 ம் நூற்றாண்டில் நனவாகும் என நம்பலாம்!

Leave a Reply to சர்வசித்தன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *