தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

மூன்றாம் நாள் தேர்வு
21.05.2014

துணிச்சல் என்னவென்று அறிந்து கொள்ள மிகவும் முனைந்தேன். துணிச்சல் என்றால் என்ன? ஒரு சிலர் என்னைத் துணிச்சல் அற்றவள் என்று சொன்னது காரணமாக இருக்கலாம். எதிராளி நம் செயல்கள் மூலமாகவே நம்மை மதிப்பிடுகிறார்.

தேர்வு நடத்தும் அலுவலரின் செயல்தான் என் பார்வையை அவர் பின்னேயே நகர்த்திக் கொண்டிருக்க செய்தது. ஒவ்வொரு நிகழ்விலும் துணிச்சலோடு செயல்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எனக்குள்ளாக சொல்லிக் கொண்டேன்.

அவருக்கு அந்த துணிச்சலை தந்தது எது? அவர் இருந்த பதவி! ஒரு சாதாரணர் அவ்விடத்தில் வந்து தன் அதிகாரத்தை காண்பிக்க முடியுமா?
இயலாமை துணிச்சலை உண்டு சீரணித்து விடுமோ என்னமோ? மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியலில் துணிச்சல் அதிக முயற்சி செய்து வெளிப்படுத்தக் கூடிய ஒன்றோ?

மூன்றாம் நாள் தேர்வு (21.05.2014) அன்று நடந்த நிகழ்வுகளைக் குறிப்புகளின் படி 07.06.2014 அன்று எழுதுகிறேன்.

தேவன் ஆட்டோவோடு வந்து விட அன்றைய தினம் நான் மிகவும் சோர்ந்திருந்தேன். அடிப்படையில் செய்யக்கூடிய சிறு வேலைகளை செய்யவும் அதிக முயற்சி தேவைப்படுவதாக இருக்கலாம். அல்லது எப்பொழுதும் மகள் அருள்மொழியின் உதவியை எதிர்பார்த்து அவளையே அழைத்ததில் அவள் நகைச்சுவையாய் முன் ஜென்மத்தில் நீ எனக்கு மாமியாராய் இருந்திருப்பாய் என்று எண்ணுகிறேன் என்று சொல்லி விட அது அவள் மனதை கிள்ளிச் சென்றதாய் இருக்கலாம்.

ஏதோ ஒரு வகையில் மனத்தொந்தரவுக்கு ஆளான நான் தேவன் வந்தது அறியாமல் அப்படியே தரையில் படுத்திருந்தேன். அம்மா வந்து “என்ன வாயிற்று என்னவோ போலிருக்கிறாயே,” என்று கேட்க “ஒன்னும் இல்லம்மா ஆட்டோ பயணம் அசதியை கொடுத்திருக்கலாம்,” என்று கூறினேன்.

ஒரு வகையில் இந்த ஆட்டோ பயணமும் அசதியைக் கொடுக்கத்தான் செய்தது.

தேவன் “அக்கா எக்சாம் போகலியா ?” என்றான்

ஆட்டோவில் போய் அமர்ந்த பிறகு, ஆட்டோவில் போகும் போதே தான் அன்று தலையும் வாரினேன். பெரும்பாலும் அலங்காரங்களை விரும்பாதவள் தான் நான்.

முறையாறு போகும் வரை எந்த சுவராசியங்களும் இல்லை. அங்கே அந்த லம்பாடி தண்டா பெண்ணோடு விஜய்யும் காத்திருந்தான்.

நாங்கள் அவர்களை ஏற்றிக்கொண்டு கோனாக்குட்டை தாண்டும் போது அந்த இரண்டு பெண்கள் ஆட்டோவை நிறுத்தும் படி கையசைக்க அவர்களை ஏற்றிக் கொண்ட பிறகு தொடர்ந்தது பயணம்.

ஆட்டோ அம்மாப்பாளையம் அருகே செல்லும் போது, சாலையோர நிலத்தில் கருநிறத்தில் சதுரமாக தார் பூசப்பட்ட மைதானமும், அவ்விடத்திற்கு செல்ல பிராதான சாலையில் இருந்து ஒரு கிளைச் சாலையும் வடிவமைக்கப் பட்டிருந்தது.

அது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அரசியல் பிரச்சாரத்திற்காக வந்த போது அமைக்கப்பட்டது.

புதியதாய் வந்த பெண்களின் பேச்சு அரசியல் பக்கம் தாவ அதுவரை அமைதியாயிருந்த தேவனும் அவர்கள் பேச்சில் கலந்துக்கொண்டான்.
அரசியலுக்கும் எனக்கும் எட்டாத தூரம் ஆகையால் காதை மானசீகமாக பொத்திக் கொண்டு சாலையோரக் காட்சிகளில் லயிக்க முயன்றும் பேச்சுக்குச் செவிமடுத்து காது அது உருவானதிற்கான பணியை செவ்வனே செய்தது.

“ஹம்மா எத்தனை ஜோடி செருப்பு அந்த அம்மாவிற்கு“ என்று புலம்பினாள் ஒருத்தி

அட பெண்கள் ஏன் இந்த ஆடை ஆபரணங்கள் சுற்றியே மனதை ஒருமுகப் படுத்துகிறார்கள் அவர்கள் சுபாவம் அப்படிப் போலும். இந்திராகாந்தியும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் வைரத்தோடை பற்றி விசாரித்ததாக எங்கோ படித்த நினைவு.

முதல்வர் ஜெயலலிதா அவர்களை எனக்கு பிடிப்பதில்லை. வயதானவர்களை காலில் விழும்படி எடுக்கப்பட்டிருந்த ஓரிரு படங்களை ஊடகங்கள் வாயிலாக பார்த்ததும் ஒரு காரணம்.

நான் எந்த கருத்து திணிபையும் நிரந்தரமாக பிடித்துக் கொள்வதில்லை. தவறு என்று அறியும் பட்சத்தில் தூக்கி எறியவும் தயங்காதவள்.

அரசியல் அறிவில்லாதவளாக நான் இருந்ததால் அவர்கள் பேச்சை செவிமடுத்ததோடு, அரசியல் விமர்சனத்தில் தலையிடாமல் விலகியியே இருந்தேன்.

அன்றைய தினம் கூட்டத்தில் நடந்த துர்மரணம் பற்றியும், மகளிர் குழு பெண்கள் கட்சிப் புடவையைச் சீருடையாக்கி சூரியனின் தகிப்பை பொறுத்து காத்திருந்ததும் விளக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு பொட்டலம் பிரியாணிக்காகவும் 100 ரூபாய்க்காகவும் இப்படி உயிர் மரித்ததை எண்ணி வருந்தினேன்.

மக்கள் எத்தனை மடத்தனத்தை தரித்துக்கொண்டிருக்கிறார்கள். எதையும் உணராமல் அவர்களின் திறனை அறியாமல் அதை மேம்படுத்தாமல் யாரோ ஒரு தலைவி தலைவனின் பின்னப்பட்ட சிலந்தி வலையில் சிக்கி இரையாகி போகிறார்கள்.

அரசியல் விரும்பாத நானும் கூட அரசியல் அடிமைதான். சுயாதீன முடிவு எடுக்கக் கூடியவளாக இல்லை. இந்த அரசியல் சட்டங்களை என்னையும் கட்டுப்படுத்தும் என்று எண்ணி வியந்தேன்.

சமூகத்தின் அடிமைத்தனம் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னை அடிமைப்படுத்தி மனதை அந்தச் சூழலுக்குப் பழக்கப்படுத்தி யிருந்தது.

கள்ள ஓட்டு போடப்பட்டதை வெளியரங்கமாக்கிக் கொண்டிருந்தது பேச்சு. ஓட்டு பணத்துக்கு விற்கப்பட்ட திசையை நோக்கிப் பயணப் படவும் எறையூர் வந்துவிடவும் சரியாக இருக்க ஹப்பா என்று பெருமூச்சை நான் விட்டுக் கொண்டேன்.

அவ்வளாவா தொந்தரவு செய்தோம் என்று கேட்டாள் அந்த பெண். ஆமாம் என்று உண்மையை சொல்ல முடியாமல் புன்னகைத்து வைத்தேன்.

இனிய வுளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

என்ற குறள் நினைவில் வந்தது. ஆமாம் என்றிருந்தால் அந்த பெண் வருந்தி யிருப்பாளே! என்ற சிந்தனை என்னை சலனப்படுத்தியது.

அவர்களிடமிருந்து விடைப்பெற்றுத் தொடர்ந்தது பயணம்.

“பிட் எடுத்துக்கிட்டிங்களா” என்றாள் லம்பாடி பெண்.

“ஹய்யோ நான் மாட்டேன்டா சாமி,” என்றேன் விஜயை பார்த்தபடி.

அவன் என்னை முறைத்தான். “எதுக்கும் துப்பில்ல கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா எப்படி ?” என்றவனை பார்த்து,

“சொல்லித்தான் தெரிஞ்சுக்கனுமின்னு இல்லடா. பார்த்தும் தெரிஞ்சுக் கலாம். கோ-ஆர்டினேட்டர் முன்னாடி போய் நின்னுட்டு திரும்ப வந்து பிட் அடிக்குறது மத்தவங்களுக்கு ஒன்னுமில்லாத விஷயமா இருக்கலாம். எனக்குள்ள மாற்றத்தை உண்டாக்கிக்கிட்டு இந்த உலகம் மாறனும்ன்னு ஆசைப்படுற எனக்கு அது அவமானம்டா,” என்றேன்

என்ன புரிந்ததோ பெரிய கவரிமான் பரம்பரை என்று சிடு சிடுத்தான்.

அத்தியந்தல் அருகே ஒரு இஸ்லாமிய பெண் ஏறினாள்.

சுய அறிமுகங்களினூடே பிட் குறித்த பேச்சு வர முழுக் கை மூடப் பட்டிருந்த புர்காவின் கை பகுதியில் சொருகப்பட்டிருந்த பிட்டை காண்பித்தாள். அட உணமையில் பெண்கள் ஏமாற்றுவதற்கு ஏற்றவாறு அவர்கள் உடையும் உதவுகிறது.

இந்த பயணம் எனக்கு ஒரு வாழ்வியல் தெளியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. எப்பொழுதும் போல் விஜயும் தேவனும் என்னைக் கொண்டு போய் தேர்வறையில் விட்டார்கள். அறை மேல்தளத்தில் இருந்த போதிலும் இன்று ஏனோ இருவரும் சலித்துக் கொள்ளவில்லை.

முதல் நாள் தேர்வின் போது பக்கத்து அறைக் கண்காணிப்பாளராக வந்தவரே இன்று எனக்கு தேர்வுக் கண்காணிப்பாளராக வந்திருந்தார். நாங்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது புதிய நபர் ஒருவரும் கண்காணிக்க வந்திருந்தார்.

தேர்வறைக் கண்காணிப்பாளரும் அவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

வரலாற்று பாடத்தில் அவர் கோல்ட் மெடல் வாங்கியதைப் பற்றி, அடிக்கடி கவனம் அவர்கள் பேச்சின் பின்னே ஓடியது.

எழுதுவதற்கான தகவலை தேடி ஓடுவதும், திடீரென கற்பனை உலகில் சஞ்சரித்துவிடுவதும் என் மன இயல்பு. எழுத்துத் துறையில் இது எனக்கு பெரிதும் பயன்பட்ட போதிலும் எதார்த்த வாழ்க்கையில் அநேகத்தை இழந்து போகச் செய்தது.

தொழிற்கல்வி நான் பயின்ற சமயம், முக்கியமான ஒரு தேர்வின் போது என்னையும் அறியாமல் இராபர்ட் கிளைவ் கதாபாத்திரம் தரித்த ஒரு சரித்திர நாவல் பிடித்ததின் பின்னனியில் குதிரையில் ஏறி சீறி பாய்ந்து கொண்டிருந்த தமிழ்ச்செல்வியை தலையில் கொட்டி நிஜ உலகத்திற்கு கொண்டு வர ஒரு ஜெயலட்சுமி ஆசிரியை தேவையாய் இருந்தது.

நான் எழுதி முடித்து அமைதியாய் அமர்ந்திருந்ததை பார்த்த கண்காணிப்பாளர் “என்ன நல்லா எழுதினீங்களா? பிட் வேணுமா நோட்ஸ் எங்க வச்சிருக்கீங்க,” என்று கேட்க,

“வேண்டாம் சார்,” என்றேன்

“நல்லா எழுதியிருக்கீங்களா ?” என்றார்

ஆம் என்று ஆமோதிப்பாய் தலையசைத்தேன்

என்னைச் சுற்றியிருந்த அனைவருமே பிட் வைத்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு நேர் பக்கவாட்டில் கலைச்செல்வி அமர்ந்திருந்தாள். ஒரு முறை வாக்காளர் அடையாள அட்டை வேண்டி அலுவலகம் வந்து வாய்த் தகராறு ஆனது அவளுக்கும் எனக்கும்.

அவளுக்கு பின்னிருந்தவன் ஓரிருமுறை அவள் மீது பிட்டை எறிய

“எதுக்கு இப்ப என் மேல போடுற, நேரா போய் கோர்டினேட்டர்ட்டயே,” சொல்லிடுவேன் என்றாள்.

மெல்ல ஒரு புன்னகை தவழ்ந்தது என்னுள் !

நேர்மையாய் இருப்பவர்கள் கர்வியாகவும் இருக்கிறார்கள்.

பெஞ்சின் நடுவில் நான் அமர்ந்திருந்ததாலும் என் இருபக்கங்களிலும் இருவர் தேர்வு எழுதியதாலும். நான் அவர்கள் எழுதி முடிக்கும் வரை அமைதியாய் அமர்ந்திருந்தேன்.

தேர்வறைக் கண்காணிப்பாளரே கலைச்செல்வியின் மீது பிட் எடுத்தெறிய அவள் தள்ளிவிட்டு நிமிர்ந்து கண்காணிப்பாளரை பார்த்த பார்வையில் தொனித்த ஏளனத்தை வார்த்தையில் வடித்துவிட முடியாது.

இந்த ஒரு சிலருக்காகத்தான் நாட்டில் மழை இன்னும் பெய்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.

நான் தேர்வு முடிந்து வெளியில் வர எப்போதும் போல் லம்பாடி பெண், அவளோடு வந்த மற்றொரு பெண், விஜய் என்று பயணம் தொடர்ந்தது.

அன்றைய தினம் விஜய் நான் எழுதிய இது நிகழாதிருந்திருக்கலாம் கவிதை தொகுப்பை அவருக்கு பரிசளிப்பது என்று கூறினான்.

அதையா ? என்ற வினாவில் எழுத்துலகின் நுனிவிரலையும் இன்னும் நான் தொட்டு முடிக்கவில்லை என்ற பணிவே எதிரொலித்தது.

வழியில் அவர் அவர் இடத்தில் அவரவர் இறங்கிவிட நானும் தேவனும் வீடு சேர்ந்ததும் என் அன்றைய பயணம் முடிந்தது. தேவனின் தனித்த பயணத்திற் கான விடைபெறலோடு கடந்து சென்றான்.

[அடுத்து நான்காம் நாள் தேர்வு]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *