திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளி

author
0 minutes, 3 seconds Read
This entry is part 5 of 15 in the series 5 ஜூன் 2016

Mr.Chandrasekaran.03png

முதல்  பிரதியை  சைவஹோட்டல்  வாயிலில்  வெளியிட்ட  விஞ்ஞான  ஆசிரியர்

நாவலப்பிட்டியில்  படிப்பகம்  அமைத்து  இலக்கியப்பயிர் வளர்த்த  சீர்மியத்தொண்டர்   இர. சந்திரசேகரன்

விஞ்ஞானிகளின்  வாழ்வையும்   பணிகளையும் எளிய தமிழில்   எழுதிய  மூத்த  படைப்பாளி

முருகபூபதி –  அவுஸ்திரேலியா

Mr.ChandrasekaranBookjpg

நூல் வெளியீடுகள்  எங்கும்  நடக்கின்றன.  முதல்  பிரதி,  சிறப்புப்பிரதி வழங்கும்  சடங்குகளுக்கும்  குறைவில்லை.  அவற்றை  அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள்  படிக்கிறார்களா ?  என்பது  வேறு  விடயம். இவ்வாறு  நூல்களின்  அரங்கேற்றங்கள்  கோலம்கொண்டிருக்கையில்,  ஒரு  எழுத்தாளரின்  நூலை முகத்திற்காக  விலைகொடுத்து  வாங்காமல்,  எதிர்பாராத  தருணத்தில் ஒரு  சைவஹோட்டல்  வாயிலில்  அந்த  எழுத்தாளரின் கைப்பையிலிருக்கும்  நூலைக்  கண்டுவிட்டு  பணம்  கொடுத்து வாங்கிய     முகம்  மறந்துபோன ஒரு  வாசக  அன்பர்  இன்றும் அழியாதகோலமாக  அந்த  எழுத்தாளரிடம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அந்த  எழுத்தாளர்  தமது  முதலாவது  நூலை  1974   ஆம்  ஆண்டு புரட்டாதி  மாதம்  கொழும்பில்  ஒரு  அச்சகத்தில்  அச்சடித்துவிட்டு, அவற்றில்  25   பிரதிகளை   எடுத்துக்கொண்டு  கோட்டை  ரயில் நிலையத்திற்கு  முன்னால் அமைந்துள்ள  பிரபல சைவஹோட்டலுக்குச்செல்கிறார்.

அங்கு  தமது  புதிய  நூலின்  பிரதிகளை  விற்பனைக்கு வைக்கமுடியுமா ?  எனக்கேட்கிறார்.    இத்தகைய விற்பனைக்காக  அந்த  ஹோட்டலுக்கு  அவர்  கமிஷனும் கொடுக்கத்தயார்.

ஆனால்,  அங்கு  மறுத்துவிடுகிறார்கள்.  சொல்லப்பட்ட  பதில் இலங்கை  நூல்கள்  விற்பனை  செய்வதில்லை.”

அங்கிருந்த  கண்ணாடி   அலுமாரியில்  தமிழகத்தின்  நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.   மேசையில்  தமிழக  வணிக  இதழ்கள் வண்ணம்   வண்ணமாக  விற்பனைக்கு  இருந்தன.

அந்த  எழுத்தாளர்    படி  இறங்கியபோது,  அந்த ஹோட்டலில்  உணவருந்திவிட்டு  கையை    காகிதத்தால் துடைத்துக்கொண்டு  வந்த  ஒரு  தமிழ்  அன்பர்,  அந்த  எழுத்தாளரை நிறுத்தி  ”  உங்கள்  புத்தகத்தின்  விலை  என்ன ?   என்று கேட்கிறார்.

மூன்று  ரூபா  தொன்னூறு  சதம்.”

அந்த  அன்பர்  நான்கு  ரூபாவை  நீட்டி  நூலைப்பெற்றுக்கொள்கிறார்.

மிகுதிச் சில்லறை  பத்து ச்சதத்தை வேண்டாமென கையசைத்துக்கொண்டே புத்தகத்தை பார்த்தபடி மக்களோடு மக்களாக கலந்துசென்றார்.

அந்த   நூலின்  பெயர்  விந்தைகள்  செய்த  விஞ்ஞானிகள்.  எழுதியவர்    இர.சந்திரசேகரன்.   அந்த நூல்  இதுவரையில் ஐந்து  பதிப்புகளைக் கண்டுவிட்டது.  அத்துடன்  பத்தாயிரத்திற்கும்  மேற்பட்ட  பிரதிகள்  விற்பனையாகிவிட்டன.

அந்த  முதல்  பிரதி பெற்றுக்கொண்ட  முகம்  மறந்துபோன  பெயர் தெரியாத  அந்த  வாசகர்  இர. சந்திரசேகரனின்  மனதில் அழியாதகோலமாக  வாழ்கிறார்.

சந்திரசேகரன்    பற்றி  இந்தப்பதிவில்  எழுதுவதற்கு  முன்பு,    1970 களில்   நான்  இலக்கிய  உலகிற்கு  பிரவேசிக்கும்  முன்னர்,  பத்திரிகை,   வானொலி,    இலக்கிய  இதழ்களின்  வாயிலாக  நான் அறிந்துவைத்திருந்த  ஒருவர் பற்றி  சொல்லவேண்டிய  தேவையை உணர்கின்றேன்.

—————————–

கொழும்பு   புறக்கோட்டையில்  மெலிபன்  வீதி  நடு இரவு  தவிர்ந்த ஏனைய நேரங்களில்  மிகுந்த  பரப்பான  இடம்.  பல  அங்காடிகள், அச்சகங்கள்,   காகிதாதிகள்  விற்பனை  நிலையம்  என  பலவற்றிற்கு வாடிக்கையாளர்கள்   வந்தவண்ணமிருப்பார்கள்.  அவர்களால்   அந்த வீதி  சுறுசுறுப்பாக    இயங்கிக்கொண்டிருக்கும்.

அந்த  வீதியில்  137  ஆம்   இலக்கத்தில்  அமைந்த  இரண்டு மாடிக்கட்டிடத்தில்  இலக்கியம்  வாழ்ந்தது.   பேசப்பட்டது,  சந்திப்புகள் நடந்தன  எனச்சொன்னால்  ஆச்சரியமடைவீர்கள்.     அந்தக்கட்டிடத்திற்கு    வராத  இலக்கியவாதிகள்,  கலைஞர்கள்  மிகவும்  சொற்பம்தான்.

சில  இலக்கியவாதிகளின்  அவசர  தங்குமிடங்களாகவும் அந்தக்கட்டிடம்  அமைந்திருந்தது.

இந்தியாவில்  நேரு  பதவியிலிருந்த  காலத்தில்  கம்யூனிஸ்ட்  கட்சி மீது   தடை விதிக்கப்பட்டிருந்தபொழுது,  தலைமறைவாக  வந்து சேர்ந்த   மூத்த  பொதுவுடைமைவாதி  தோழர் பா. ஜீவானந்தம் அவர்களும்  அங்கு  வந்து   தங்கியிருந்துள்ளார்.  தமிழக இலக்கியவாதிகள்  கு.அழகிரிசாமி,  ரகுநாதன்  மாத்திரமின்றி, மல்லிகை ஜீவா,  மு. தளையசிங்கம்,  மு.பொன்னம்பலம்,  சந்திரசேகரன், செம்பியன் செல்வன்,   மு.கனகராஜன்,   ரத்தினசபாபதி,  தெளிவத்தை ஜோசப்   முதலான  பலர்  அங்கு  வந்து  இலக்கியச்சந்திப்புகளில்  கலந்துகொண்டனர்.

அங்கு   ஒரு  கலை,  இலக்கிய  ஆர்வலர்  வாழ்ந்தமைதான் அதற்கெல்லாம்   காரணம்   அவர்  ஒரு  வர்த்தகர்.  பரோபகாரி. இலக்கியவாதிகள்  நலிவுற்ற சமயத்தில்  உதவியவர்.   இலங்கை வானொலிக்காக   நாடகங்கள்   எழுதியவர்.   தலைநகரில்  நடக்கும் இலக்கியக்கூட்டங்களில்   ஆர்வமுடன்  கலந்துகொள்ளும் இலக்கியச்சுவைஞர்.  இந்த வர்த்தக  ஸ்தாபனத்தின்  பிரதான மண்டபத்தில்தான்  இலக்கியச்சந்திப்புகள்  மாலை வேளைகளில் நடைபெறும்.   கலந்துகொள்ளும்   இலக்கியவாதிகளை குருசுவாமி தம்பதியர்  கனிவுடன் உபசரிப்பார்கள்  எனவும்  1970  களில்  வெளியான  இலக்கியப்புதினங்களில்   அறிந்திருக்கின்றேன்.   ஆனால்,  நேரில்  பார்க்கத்தான்  சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.

இவரை  ஓட்டப்பிடாரம் . குருசுவாமி  என்று   இலக்கிய வட்டாரத்தில்  குறிப்பிடுவார்கள்.

ஆயினும்  இவர்  பற்றிய  விரிவான  தகவல்களை  பதிவுசெய்யும் கட்டுரைகள்   எதுவும்  ஈழத்து  இலக்கிய  உலகிற்கு  கிட்டவில்லை. அந்தக்குறையைப்போக்கியவர்தான்    இர. சந்திரசேகர சர்மா  அவர்கள்.

ஆ.குருசுவாமி  பின்னாளில்  தமிழகம்  ஓட்டபிடாரத்திற்கு நிரந்தரமாகச்சென்ற  பின்னரும்  இலங்கை  எழுத்தாளர்களை  தமது ஊருக்கு   அழைத்து  உபசரித்தவர்.  அவர்  இன்று  உயிரோடு  இல்லை. ஆனால்,  அவர்  பற்றிய  விரிவான  ஒரு  ஆக்கம்  இன்றும்  இலக்கிய உலகில்  ஒரு  ஆவணமாகத்திகழ்கிறது.  அதனை  எழுதிய சந்திரசேகரன்   ஒரு  விஞ்ஞான  ஆசிரியர்.

யாழ்ப்பாணத்தில்   ஆவரங்காலில்  பிறந்து  அங்குள்ள  அமெரிக்க மிஷன்   பாடசாலை,  புத்தூர்  சோமஸ்கந்தா  ஆகியவற்றில்  தமது ஆரம்பக்கல்வியை   கற்றார்.  தந்தையார்  ஆலயக்குருக்கள்  என்பதால், பெற்றவர்களுடன்   இவரும்  இடம்பெயர்ந்து நாவலப்பிட்டிக்குச்சென்றார்.

தந்தையார்  இரத்தினசர்மாவுக்கு  அங்கு  கதிரேசன்  கோயிலில் திருப்பணி.   சந்திரசேகரன்  அங்கு புனித அன்ரூஸ் கல்லூரியில் கற்றுவிட்டு, அங்கேயே முதலாவது ஆசிரிய நியமனமும் பெற்று      கல்விப்பணியில்  ஈடுபட்டார்.     அங்கிருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக்கலாசாலைக்கு அனுமதி பெற்று சிறப்பு விஞ்ஞானப்பயிற்சி பெற்றார்.

பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் ( பிரதேச திட்டமிடல் — Regional Planning )  முதுமாணி ( எம்.ஏ) பட்டம் பெற்றார்.  அறுபதுகளில்   மலையகத்தில்  வாழ்ந்தவாறு  இலக்கியப்பிரவேசம் செய்தார்.    சிறுகதைகள்,  கட்டுரைகள்,   விஞ்ஞானக்கட்டுரைகள் எழுதினார்.   தினகரனில்  தத்துவச்சித்திரங்கள்  என்னும்  தொடரையும்  எழுதினார்.

இவரது   எழுத்துக்களை  1965  காலப்பகுதியில்  படித்திருக்கின்றேன். மாணவர்களுக்குப்புரியும்   வகையில்  எளிய  தமிழில்  அவர் எழுதியமையால்   மாணவர்களின்  அபிமான  எழுத்தாளராகவும்  அவர் அந்நாட்களில்   திகழ்ந்தார்.

வடக்கில்  பிறந்திருந்தாலும்  இவரது  கல்விச்சேவை   இலங்கையில் மலையகத்திற்கும்  தென்னிலங்கைக்கும்தான்  அதிகம்  கிட்டியது. ஓய்வுபெறும்   காலப்பகுதியில்தான்  வடக்கில்  பருத்தித்துறை வேலாயுதம்   மகா  வித்தியாலயத்தின்  விஞ்ஞான  ஆசிரியராகவும் வடமராட்சி   கிழக்கிற்கான  வலய  விஞ்ஞான  ஆசிரிய ஆலோசகராகவும்   பணியாற்றினார்.

நாவலப்பிட்டியில்   இளம்  எழுத்தாளர்  சங்கம்  உருவானபொழுது அதன்   தலைவராக  இருந்து,  மலையகத்தில்  இலக்கிய  வளர்ச்சிக்கு உந்து  சக்தியாக  விளங்கினார்.   அங்கு  கலைமகள்  படிப்பகத்தை உருவாக்கி   தரமான  வாசகர்  வட்டத்தையும்  வளர்த்தெடுத்தார். தென்னிலங்கையிலும்    கொழும்பிலும்  ஆசிரியப்பணி   புரிந்தவர்.

இவருடைய   மாணாக்கர்களில்   குறிப்பிடத்தகுந்தவர்கள்தான் எழுத்தாளர்    திக்குவல்லை கமால்,   கலைஞர்  ஸ்ரீதர் பிச்சையப்பா.

பேராசிரியர்   நந்தி,  பொப்பிசைப்பாடகர்  ஏ.ஈ.மனோகரன்,  படைப்பாளி ஆப்தீன் ,  ஆத்மஜோதி முத்தையா, கவிஞர்  பரமஹம்ச தாசன்  ஆகியோர்  மலையகத்தில் வாழ்ந்திருந்தமையால்   இவர்களின்  நட்பும்  இவருக்கு  கிடைத்தது.

இவர்களில்  ஆப்தீன்  அக்காலகட்டத்தில்  இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கியிருந்த   இளம் எழுத்தாளர்.  தனது  தொடக்ககால எழுத்துப்பிரதிகளை  செம்மைப்படுத்தியவர்  சந்திரசேகரன்தான் என்பதை   ஆப்தீன்  தமது  பதிவுகளில்  மறக்காமல்  குறிப்பிட்டுள்ளார்.

திக்குவல்லை கமாலும் தனது நூல்களின் முன்னுரைகளிலும் நேர்காணல்களிலும் தன்னை இலக்கிய உலகில் ஊக்குவித்தவர் சந்திரசேகரன் ஆசிரியர்தான் என்று வாஞ்சையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பாரதியாரின்  பேத்தி  விஜயபாரதியும்  அவர்  கணவர்  பேராசிரியர் சுந்தரராஜனும்  கு. அழகிரிசாமியும்  இலங்கை  வந்த  சமயத்தில் நாவலப்பிட்டிக்கு  அழைத்து  விழா  நடத்தியவர்.

இவர்கள்  மூவரையும்  எமது  நீர்கொழும்பு  இந்து  இளைஞர்  மன்றம் அவ்வேளையில்   அழைத்தபொழுது  நான்  மாணவனாக  இருந்தேன்.

சந்திரசேகரன்   கொழும்பில்  1972  காலப்பகுதியில் கல்வி அமைச்சின்  பாடவிதான  அபிவிருத்தி  நிலையத்தின் விஞ்ஞானக்குழு   அங்கத்தவராக  இருந்த  சமயத்தில்தான்  எனக்கு அறிமுகமானார்.

அப்பொழுது   கொழும்பு  சோவியத்  தூதரகத்தின்  தகவல்  பிரிவில் பணியாற்றிய  யாதவன்  என்ற  புனைபெயரில்  எழுதிய  நண்பர் இராஜ குலேந்திரன்தான்  எனக்கு   இவரை அறிமுகப்படுத்தினார்.

ஆனால்,  கடந்த  35  வருட  காலமாக   நாம்  இருவரும்  அந்த  இனிய நண்பர்  எங்கே  இருக்கிறார் ?  என்று  தேடிக்கொண்டிருக்கின்றோம். அவர்   துறவியாக  இந்தியாவில்  அரவிந்தர்  ஆசிரமத்தில் இருப்பதாகவும்   ஒரு  தகவல்  கசிந்திருக்கிறது.

1983   இற்குப்பின்னர்  எனக்கும்  நண்பர்  சந்திரசேகரனுடன் தொடர்பாடல்   குறைந்துபோனமைக்கு  அன்றைய  இலங்கைச்சூழலும் காரணம்தான்.

2012   ஆம்  ஆண்டு  எமது  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியத்தின் பணிகளுக்காக   யாழ்ப்பாணம்  சென்றிருந்தேன்.  அப்பொழுது  எமது யாழ். மாவட்ட  மாணவர்களின்  தொடர்பாளர்  அமைப்பு  சிறுவர் அபிவிருத்தி   நிலையத்தின்  பணிமனை   பழைய  பூங்கா  வீதியில் அமைந்திருந்தது.   அச்சமயம்  அதன்  தலைவர்  இன்றைய வடமாகாண  சபை  தவிசாளர் –  யாழ்.  மாநகரசபை  முன்னாள் ஆணையாளர்   திரு. சி.வி.கே. சிவஞானம்.

அங்குதான்   இர. சந்திரசேகரனும்  பணியிலிருக்கிறார்  என்ற  தகவல் எனக்குத்தெரியாது.  நான்  அங்கு  வரவிருப்பது  அறிந்து,  என்னைப்பற்றி   அங்கிருந்தவர்களுக்குச்சொல்லியிருக்கிறார். சிலவேளை   நான்  அவரை  மறந்திருக்கக்கூடும்  என நினைத்துக்கொண்டு,   அங்கிருந்தவர்களிடம்  நான்  வந்தவுடன் தம்மை   அறிமுகப்படுத்தவேண்டாம்,    முருகபூபதி  கண்டுபிடிக்கிறாரா பார்ப்போம்   என்று  எனக்குத்தெரியாமலே  ஒரு  சோதனை வைத்திருக்கிறார்.

அந்தப்பணிமனைக்குள்   ஒரு  மாலைப்பொழுதில்  பிரவேசித்தேன். சிவஞானம்   அங்கிருந்தவர்களை  எனக்கு  அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு  வணக்கம்  தெரிவித்தேன்.  ஒருவர்  ஓரமாக  ஒதுங்கி நின்றார்.

அவரை   அடையாளம்  கண்டுகொண்டேன்.  ஆனால்,  வணங்கவில்லை.   ஓடிச்சென்று  கட்டி  அணைத்துக்கொண்டேன். பிரிந்தவர்   கூடினால்  பேசவும்  வேண்டுமா ?

அங்கிருந்தவர்கள்   சந்திரசேகரன்  எனக்கு  வைத்திருந்த  சோதனை பற்றி  சொல்லிச்சிரித்தார்கள்.

” விஞ்ஞானிகள்   நடத்திய  சோதனைகள்  பற்றி  எழுதியவர்மாணவர்களுக்கு   சோதனைகள்  நடத்தியவர்,  இன்று  முதிய வயதிலும்    அந்தப்பணியைத்தான்  தொடருகிறார் “  என்று  சொல்லிச்சிரித்து,  அந்த  இடத்தை  கலகலப்பாக்கினேன்.

சந்திரசேகரன்  தற்பொழுது  யாழ்ப்பாணத்தில்  இயங்கும்  சாந்திகம் என்ற  அரசு  சாரா  தொண்டு  நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றுகிறார்.

தமிழில்  விஞ்ஞான  நூல்கள்  அரிதாகியிருந்த  கால  கட்டத்தில் இலங்கையில்  தமிழ்  மாணவர்கள்  பயன்படுத்தத்தக்க  முறையில் எளிய  முறையில்   விஞ்ஞானிகளின்  வாழ்வையும்  பணிகளையும் எழுதிய  முன்னோடிதான்  இர. சந்திரசேகரன்.

கலிலியோ கலிலி,   ஐசாக்  நியூட்டன்,  ஜோசப்  பிறீஸ்றிலி,  ஹம்ப்றி டேவி,  ஜோசப்  ஸ்ரீபன்சன்,  மைக்கல்  பரடே,  சார்ள்ஸ்  டார்வின்,    தோ மஸ்  அல்வா எடிசன்,  கிரஹம்பெல்,  ஜோர்ஜ்  வாஷிங்டன்  காவர்,  ஐன்ஸ்ரீன், சேர்  சி.வி. ராமன்  முதலானோரின்  அளப்பரிய  சேவையை விந்தைகள்  செய்த  விஞ்ஞானிகள்  நூலில் தொகுத்திருக்கும் சந்திரசேகரனின்  விஞ்ஞான  கல்விப்பணியையும்  கலை,  இலக்கிய செயற்பாடுகளையும்  பாடவிதான   அபிவிருத்தி  நிலைய  பணிப்பாளர் எஸ். ஜீ. சாமுவேல்,  பேராசிரியர்  நந்தி  சிவஞானசுந்தரம், ஆகியோர் முன்னுரைகள் எழுதியுள்ளனர்.  படைப்பாளிகள்  திக்குவல்லை கமால்,  ஆப்தீன்,  எம்.கே. முருகானந்தன்,  கலைஞர்  ஸ்ரீதர்  பிச்சையப்பா  ஆகியோரும்  விதந்து   குறிப்புகளை  எழுதியுள்ளனர்.

பேராசிரியர்  சபா ஜெயராசா  அவர்கள்,  தமிழ்  இலக்கிய  வளர்ச்சியில் ஓர்  ஆழ்ந்த  சுவடு,  எனக்குறிப்பிட்டு,   இவரைப்பற்றி   பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்:

” சிருஷ்டி   இலக்கியம்  படைப்பவர்களே  மேலோங்கிகள்  என்ற பொய்மை  தமிழியல்  மதிப்பீட்டில்  விசாலித்து  நின்றமை  எமது அறிவியல்   எழுத்தாக்கங்களின்  வளர்ச்சியைப்பாதித்த  வேளை, துஞ்சாது,   துணிவுடன்,   அறிவியல்  இலக்கியம்   படைத்தவர்களுள் ஒருவராக    அமைபவர்   திரு. இர. சந்திரசேகரன்   அவர்கள்.

அறிவியல்   கனதியை  விளங்கிக்கொள்ள  முயலாது,  அறிவியல் எழுத்தாக்கங்களை   ஒட்டுமொத்தமாக   விளங்கவில்லை   என்று நிராகரித்த    ஆசாரங்களை  நலிவடையச்செய்த  பணியிலும் இந்நூலாசிரியர்   பங்குகொள்கின்றார்.   நதியின்  பாய்ச்சல்போன்று தமிழியல்   வளர்ச்சியும்  முன்னோக்கியே  விசைகொள்ளல் வேண்டும்.    அத்தகைய  பணியின்  காலச்சுவடுகளை   கண்டவர் இந்நூலாசிரியர்.”

மலையக   எழுத்தாளரும்  அட்டன்  ஹைலண்ட்ஸ்  கல்லூரி  அதிபரும்  பாடவிதான  அபிவிருத்தி  நிலையத்தின்  பிரதம  கல்வி அதிகாரி (அமரர்)  திரு. இர.சிவலிங்கம்  அவர்களும்   சந்திரசேகரன் பற்றிய  குறிப்பொன்றில், ” தெளிவாகவும்  இயல்பாகவும்   எழுதும் இவர்,  அயராத  அறிவுத்தேடலுள்ளவர் ”  என்றும்  பதிவுசெய்துள்ளார்.

அண்மையில்  சந்திரசேகரன்  அவர்களை  மெல்பனில்  சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது.  இவர் இங்கு வந்தும் தமது பேரக்குழந்தைகளுக்கு  தமிழ் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.  ஒரு  நாள்  நீண்டபொழுதுகள்  உரையாடினோம்.   பெரும்பாலும்  அந்த  உரையாடல் நனவிடை தோய்தலாகவே  அமைந்தது.

கலைஞர்  ஸ்ரீதர்  பிச்சையப்பா,  இறுதிக்காலத்தில்  மதுவுக்கு அடிமையாகி   நோயுற்றிருந்தவேளையில்  இவர்  சென்று பார்த்திருக்கிறார்.   தன்னைத்தேடி  வந்துவிட்ட  ஆசானைக்கண்டதும் கால்களைக்  கட்டிப்பிடித்துக்கொண்டு  ”  சேர்  என்னை காப்பாற்றுங்கள்”  என்று  கதறியிருக்கிறார்.

மதுவுக்கு  அடிமையாகியிருந்த  தனது  மாணவனின்  நிலையறிந்து கலங்கிய   சந்திரசேகரன்,  விஞ்ஞானத்  தெளிவு கொண்டிருந்தமையால்,   வழக்கமாக  மற்றவர்கள்  சொல்லும் ஆலோசனையிலிருந்து   வேறுபட்டு,  ”  தம்பி  ஸ்ரீதர்,  உனது மருத்துவர்  சொல்லும்  சிகிச்சையின்  பிரகாரம்  இந்தப்பழக்கத்தை கைவிட்டுவிடு.   அவ்வாறு  மருத்துவரின்  கருத்துக்கு  மதிப்பளிப்பேன் என்று   என்னிடம்  சத்தியம்  செய்   ”  என்று  வலியுறுத்தியவர்  இந்த ஆசான்.    இவ்வாறு  சந்திரசேகரன்  கேட்டதும்,  ஸ்ரீதர்  பிச்சையப்பா

சத்தியம்  செய்திருக்கிறார்.  அவ்வாறே  சில மாதங்கள்   வாழ்ந்திருக்கிறார்.  தினகரன்  வாரமஞ்சரியில்  சாம்பரில் இருந்து  உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ்   என்ற  தலைப்பில்  ஸ்ரீதர்  எழுதிய கட்டுரையில்   தனது  தமிழ்மொழி  உச்சரிப்பையும் இலக்கியத்தேடலையும்   ஊக்குவித்ததோடு,  உள்ளார்ந்த  ஓவியக்கலை   ஆற்றலை  இனம்  கண்டு  வளர்த்தவர்  தனது  ஆசிரியர்   சந்திரசேகர  சர்மா  அவர்கள்தான்  என்று பதிவுசெய்துள்ளார்.

1999  ஆம்  ஆண்டில்  ஸ்ரீதர்  பிச்சையப்பா,  சந்திரசேகரனுக்காக எழுதிய  வாழ்த்துக்கவிதையையும்  பதிவுசெய்து, அவர்  பற்றிய குறிப்புகளுடன்  தமது  நூலின்   Ie;jhtJ  பதிப்பில் பின்னிணைப்பாக  சேர்த்துக்கொண்டதை  நெகிழ்ச்சியுடன்  சொன்னார் சந்திரசேகரன்.

நாவலப்பிட்டியில்   இளம்  எழுத்தாளர்கள்  சங்கம்,  கலைமகள் படிப்பகம்  ஆகியவற்றில்   அர்ப்பணிப்புடன்  இயங்கியிருக்கும் சந்திரசேகரன்,  அந்தப்பிரதேசத்தில்  இலக்கியப்போட்டிகளையும் நாடகங்களையும்   நடத்தியிருக்கிறார்.

கலைமகள்  படிப்பகத்தின்  ஆண்டுவிழாவில்  தமிழ்  அறிஞர்  டாக்டர் மு. வரதராசனின்  கிம்பளம்  என்ற  நாடகத்தை  மேடையேற்றியதுடன் ,  அவருடன்  கடிதத்தொடர்புகளையும் பேணியிருக்கிறார்.   மு.வ.  அவர்களின்  நூல்கள்  அன்றைய வாசகர்களை  பெரிதும்  கவர்ந்திருந்தமைக்கு  அவருடைய மொழியாளுமையும்  ஒரு  காரணம்.  முக்கியமாக  இளம் எழுத்தாளர்கள் –  மாணவர்கள்  அவருடைய  நூல்களை விரும்பிப்படித்தனர்.

சந்திரசேகரனும்  கலைமகள்  படிப்பகத்திலிருந்து  மு.வ.  அவர்களின் நூல்களிலிருந்து   பெறுதியான  கருத்துக்களை   தெரிவுசெய்து,   ஒரு தனி நூலை  தொகுத்திருக்கிறார்.  அதனை  அச்சிட்டு வெளியிடுவதற்காக  மு.வ.  அவர்களுக்கு  கடிதம்  எழுதி  அனுமதி கோரியிருக்கிறார்.

ஆனால்,  மு.வ.  விரும்பவில்லை.  ஏற்கனவே  வந்துவிட்ட நூல்களிலிருப்பவற்றை   மீண்டும்  தொகுப்பதில்  அவருக்கு  உடன்பாடு  இல்லை.  பின்னர்  மு.வ.  மறைந்த வேளையில்  தினகரன் ஆசிரியர்  சிவகுருநாதன்  கேட்டதற்கு  இணங்க,  அஞ்சலிக்குறிப்புடன் டாக்டர் மு.. மொழிகள்  என்ற  தலைப்பில்  சுமார்  ஆறுமாதங்களுக்கு  மேல்  தொடர் பத்தி  எழுதி,  தனது  விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டார்  சந்திரசேகரன்.

இலங்கை  வானொலியின்  கல்விச்சேவையில்  மாணவ  ஆசிரிய நிகழ்ச்சிகளை  நடத்தியிருக்கும்  இவர்,  விஞ்ஞான  பாடங்களை  நாடக வடிவிலும்   தயாரித்து  ஒலிபரப்பினார்.  அத்துடன்  அகல் விளக்கு,  மாணவர்  அரங்கு,   அறிவியல்  அரங்கு  முதலான   தொடர் நிகழ்ச்சிகளையும்  நடத்தியவர்;.

இவர்   எழுதிய  விஞ்ஞானப்பாடமொன்று,  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு,    ஒலிப்பதிவு  நாடாவாக  வட்டாரக்கல்வி அதிகாரிகளுக்காக     நடத்தப்பட்ட  விஞ்ஞானக்கருத்தரங்கில்   பிரிட்டிஷ்   கவுன்சில்,  யுனெஸ்கோ  ஆலோசகர்கள்  முன்னிலையில் ஒலிபரப்பப்பட்டது.    பின்னர்   அது   பி.பி.சி.  வானொலிக்கும் எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.

நல்லொழுக்கம்  சுற்றாடல்  பாதுகாப்பு  ஆலோசகரகவும்  அரசுசாரா தொண்டு    நிறுவனங்களில்  பணியாற்றியிருக்கும்  சந்திரசேகரன், தன்சானியாவில்   நடந்த  சர்வதேச  மாநாடொன்றிலும் கலந்துகொண்டவர்.

உளவள   நிபுணர்  பேராசிரியர்  தயா சோமசுந்தரம்  அவர்களின் மேற்பார்வையில்  யாழ்ப்பாணத்தில்  இயங்கும்  சாந்திகம்  தொண்டு நிறுவனத்தில்  திட்ட  இணைப்பாளராகவிருக்கும்  சந்திரசேகரன்,  எமது  சமூகத்தின்  பெறுமதியான  மனிதர்களின்  வரிசையில் இணைந்திருப்பவர்.

தேர்ந்த  வாசகராக,  விஞ்ஞான  ஆசிரியராக,  எழுத்தாளராக ஆய்வாளராக,  சமூகச்செயற்பாட்டாளராக  வாழ்ந்திருக்கும்  இவரிடம் குடியிருக்கும்   எளிமையே,  இவருடைய  வலிமை  என்பேன்.

75 வயதைக்கடந்துவிட்ட  நிலையிலும்  உற்சாகமாக  இயங்குகிறார். மெல்பனுக்கு  தமது  புதல்வியிடம்  வருகை  தந்த  இவரை  சிட்னியில் அவுஸ்திரேலியா  ஒலிபரப்புக்கூட்டுத்தாபன  ஊடகவியலார் படைப்பாளி  கானா. பிரபாகரன்  அவர்களிடம்   அறிமுகப்படுத்தினேன்.

இவர்,  சிட்னி  சென்றவேளையில்,  அங்கு  நடந்த  தவில்மேதை தட்சணாமூர்த்தி  நினைவரங்கு  ஆவணப்பட  வெளியீட்டில்   உரையாற்றினார்.  அத்துடன்  அவுஸ்திரேலியா ஒலிபரப்புக்கூட்டுத்தாபன  வானொலியில்  நீண்டதொரு நேர்காணலையும்  சந்திரசேகரன்  வழங்கினார்.

சந்திரசேகரன்   பல்லாண்டு  வாழ்ந்து  தமது  சமூகப்பணிகளை தொடரவேண்டும்  என  வாழ்த்துகின்றேன்.

—-0—-

 

Series Navigationதொடுவானம் 122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..ஜெயலலிதா கரம், ஸ்டாலின் நிறம், நடுத்தரத்தான் பயம்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *