திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்

0 minutes, 7 seconds Read
This entry is part 2 of 8 in the series 10 ஜூன் 2018

 

(லதா ராமகிருஷ்ணன்)

 

 

”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடு – இல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள்

லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த

தோழி நீலா அல்லது லீலா.

 

 

 

நானே ஒப்புக்கொள்வதில்லையே என்று நகைத்த என்னைப்

பகையாளிபோல் பார்த்தபடி

“பார்த்தே தீரவேண்டும்;

நேர்த்திக்கடன் செலுத்தாதிருப்பது தெய்வக்குத்தம்-

உய்ய வழி தேடிக்கொள். அவ்வளவுதான் சொல்வேன்” என்றாள்.

 

 

 

பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த தெனாலியில்

கிளப் டான்ஸர்(?) கணக்காய் அத்தனை குட்டைப்பாவாடையில்

அண்ணனோடு ஜோதிகாத் தங்கையைப் பார்த்ததில் உண்டான பீதியில்

அரங்கில் இடியிடித்து எரிமலை வெடிப்பதாய் பரவிய

ஒலியின் வன்முறையில் பலவீனமாகிப்போன மனதிற்கு

திரும்பவும் தியேட்டருக்குள் நுழைய தைரியம் வரவில்லை” யென்றேன்.

 

 

 

”பெண்ணின் நடை யுடை பாவனை குறித்து உனக்கெல்லாம்

எத்தனை மனத்தடை” என்று பழித்தாள்.

நான் சொல்லிக்கொண்டிருப்பது மனத்தடையின்

இன்னொரு பரிமாணம் பற்றி என்பதை

நன்றாகவேஅறிந்திருந்தும் ஏதுமறியாதவள் போல பேசுபவளிடம்

மேலும் என்ன சொல்லவிருக்கிறது…. ?

நாளும் வாளாவிருப்பதே இங்கே சாலச் சிறந்தது…..

 

 

 

அதையும் செய்யவிடாமல்

அங்கே விற்றுக்கொண்டிருந்த இளநீரைத் தாண்டிச் சென்று

கோலா வாங்கிக் கொடுத்தபடி _

”அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோள்களிலிருந்தெல்லாம்

வந்திறங்கிக் கண்டுகளித்துக்கொண்டிருக்கிறார்கள்;

அவர்களில் பேர்பாதிக்கும் மேல்

’பாரிய’ எழுத்தாளர்கள் ‘பாரிய’ எழுத்தாளர்கள் தெரியுமா”

என்று கூறிச் சென்றாள் மாலா அல்லது ஷீலா.

 

 

 

காரியமாய் அன்றி மனதார அப்படியேதேனுமொரு நூல்

அவர்களுடைய மேடைகளில் என்றைக்கேனும் மரியாதை செய்யப்பட்டிருக்குமானால்…….என்று

முனகும் மனதின் முட்டாள் வாயை முக்கியமாய் அடைத்தாகவேண்டும்….

 

 

 

அகண்ட திரையின் ஆக்கிரமிப்புக்கு அப்பால், இருள் மூலைகளில்

இறைந்துகிடக்கின்றன ஏராளமான இலக்கியப் படைப்புகள்

சிறிய அறிமுகமற்று, ஒரு வரி விமர்சனமுமற்று

சக படைப்பாளிகளாலும் சீந்தப்படாமல் _

வீசியெறியப்பட்ட மீந்த சோற்றுப்பருக்கைகளாய்

 

 

 

Series Navigationவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றிஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *