திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வை

author
0 minutes, 34 seconds Read
This entry is part 1 of 33 in the series 12 மே 2014

இப்ராஹிம்
பெங்களூர்.

அனிமேஷன் படங்கள் என்றால் எல்லோருக்கும் தனிப்பிரியமும்,குழந்தைகள் போல இன்னும் குதூகுலமும்,அது எடுக்கப்படும் விதம் குறித்து அதன் மீது தீராவியப்பும், உண்டு.இன்றைய அனிமேஷன் படங்கள் வெறும் பொம்மைகளின் கேலிக்கூத்தாக இல்லாமல் தீவிர சினிமா ரசிகர்கள் கூட ஒதுக்கிப்போக முடியாமல் உன்னதமான சினிமாவுக்கு உண்டான ஆழமான கதை,திரைக்கதை,வசனங்கள் போன்றவைகளுடன் ஒரு மாயையான உலகை ஒன்றரை மணி நேரம் மட்டும் உண்மையென நம்பவைப்பதர்க்கான அணைத்து முயற்சிகளுடன் எடுக்கப்படுகின்றது.இதனாலேயே அனிமேஷன் படங்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது மேலும் நடிகர்களின் தேதிக்கு காத்திராமல்,கால்ஷீட் பிரச்சனை இல்லாமல் இயக்குனர்/தயாரிப்பாளர் தான் நினைத்தபடி படமெடுக்க களத்தில் இருக்கும் அதி நவீன அனிமேஷன் தொழிற்நுட்பங்கள் கைகொடுக்கின்றன. அதுமாட்டுமின்றி அனிமேஷன் படங்களுக்கென ஆஸ்கர் உட்பட பல பெரிய விருதுகளும் கொடுக்கப்படுகின்றது,இவ்வகை படங்களில் உரையாடலை விட காட்சிகளே பிரதானம் என்பதால் பலநாடுகளில் மொழி பெயர்க்கப்படுகின்றது.

சரி,இப்படி வளர்ந்து நிற்கும் அனிமேஷன் தொழிற்நுட்பத்தின் ஆரம்பம் தான் என்ன?

சராசரி மனிதக்கண்களுக்கு 12 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட பிரேம்களை (பிரேம் என்றால் போட்டோ எடுத்தது போல ஒரு அசையாக்காட்சி) ஒரு நொடிப்பொழுதில் தொடந்து ஓட்டினால் அது ஒரு தொடர்காட்சியாக தெரியும்.கம்ப்யூட்டரால் தற்போது உருவாக்கப்படும் அனிமேஷன் படங்கள் வருவதற்கு முன்பு ,காட்சிகள் எல்லாம் ஓவியங்களாக வரையப்பட்டு அது நொடிக்கு 15 frames ஓடவிடப்பட்டு ஒரு நகரும் படமாக அதை கேமராவில் பதிவு செய்து கொள்வார்கள்.(http://www.cinemateca.rg/movies/animation.htm), இதை Hand Drawn Animation என்பார்கள்.1920 களின் இறுதியில் எல்சி கிறிஸ்லெர் செகார்(Elzie Crisler Segar) உருவாகிய பாப்பை (popeye) பரவலான வரவேற்பை பெற்றது பின்னர் இதே துறையில் தோன்றிய டிஸ்னி சகோதரர்கள் சினிமா உலகில் மிகப்பெரிய இடத்தை பிடித்ததற்கு அவர்கள் உருவாக்கிய மிக்கி மௌஸும் அதை தொடந்து எடுத்த Snow white and seven dwarfs படங்கள் தான் காரணம்.இவர்களை போல பலர் கார்ட்டூன் படங்களை எடுக்க முன்வந்ததால் MGM cartoon Studio வும்,Walt-Disney Studioவும் தொடங்கப்பெற்று நிறைய படங்களை,கார்ட்டூன் பாத்திரங்களை தயாரிக்கத்தொடங்கின.அதன் பயனாக டாம் & ஜெர்ரி,மிக்கி மௌஸ்,டொனால்ட் டக் என்று குழந்தைகளை கவரும்(ஏன் பெரியவர்களையும் தான்) வண்ணம் உருவாக்கப்பட்டு உலகளவில் சினிமாவிலும், டிவியிலும் பிரபலமாக தொடங்கியது ஆரம்பகால அனிமேஷன்.

பின்னர் stop -motion தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட “clay-toon” வகை கார்டூன்கள் உருவாகின.திரைத்துறைக்கு stop-motion என்பது புதிதல்ல 1900 களிலேயே பொது அமெரிக்க சினிமாக்களில் தொடங்கப்பெற்ற ஒரு தொழிற்நுட்பம் தான்,பழைய அமெரிக்க கருப்பு-வெள்ளை பிக்ஷன் படங்களில் வரும் காட்ஸில்லாவும், டைனோசர்களும்,கிங்காங்கும்,ஈவில் டெட் பேய்களும் ஏதோ வாதம் வந்தவர்கள் நகர்வதை போல் நகர்வதை காணலாம் அதற்க்கு காரணம் இந்த stop-motion வகை தொழிற்நுட்பம் தான். விட்டலாச்சார்யாவின் ஜெகன் மோகினி வகை பேய் படங்கள் இது போன்ற காட்சிகளால் நிறைந்திருக்கும்.

அதே நுட்பம் கார்டூன் படங்களுக்கும் கொண்டு வரப்பெற்று “clay-toon” வகை படங்கள் உருவாகின,அதாவது ஒரு உருவத்தை(பொம்மையை போல) செய்து அதை அடுத்தடுத்த இடத்திற்கு இன்ச் இன்ச்சாக நகர்த்தி கேமராவில் பதிவு செய்து கொள்வார்கள். சாதாரண அனிமேஷன் போல் அல்லாமல் பார்ப்பவர்களுக்கு நகரும் படமாக தோன்ற இதில் கொஞ்சம் அதிகமான frame கள் ஓட்டப்படவேண்டும். இங்கிலாந்தில் தொடங்கப்பெற்று புகழ்பெற்ற Wallace and Gromit என்ற தொலைகாட்சிதொடரை எடுத்த ஆர்ட்மான் (Aardman) ஸ்டுடியோஸ் தன்னுடைய எல்லா படங்கள்,விளம்பரப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் இன்றுவரை Stop-Motion தொழிற்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி எடுத்து வந்திருக்கின்றன.இதற்க்கு மிகுந்த பொருட்செலவும்,நிறைய நுணுக்கமான வேலைகளை கொண்டபடியால் பொதுவாக யாரும் இதன் பக்கம் போவதில்லை(வெறும் 30 நிமிட காட்சிக்கு கிட்ட தட்ட 30,000 முறை உருவங்களை நகர்த்தி ஷாட் எடுக்க வேண்டும்!) .கடைசியாக வெஸ் ஆண்டர்சன் இயக்கிய “Fantastic Mr.Fox” மட்டும் கார்ட்டூன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது,ஆஸ்காருக்கும் தேர்வானது.

பின்னர் கம்ப்யூட்டர் என்ற எலக்ட்ரானிக் தெய்வம் கண்டுபிடிக்கப்பட்டு அது வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டபின் சினிமா உலகம் அதை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டது எனலாம்.அதிலும் குறிப்பாக இந்த கம்ப்யூட்டர் அனிமேஷன் அல்லது சிஜி(computer Generated) திரைத்துறையில் செய்திருக்கும் புரட்சி மகத்தானது.பெரும் கட்டிடங்கள் சரிவதும்,நாடுகள் அழிவதும்,பீட்டர் ஜாக்சனின் படங்களில் வரும் சொர்க்கம் போன்ற நகரங்களை உருவாக்கவும்,அதிதத்ரூப போர்க்காட்சிகளையும்,சண்டை காட்சிகளையும்,ரோபாட்டுகளை மனிதர்களை போல செயலாற்ற வைக்கவும், லட்சக்கணக்கான வருங்களுக்கு முன் அழிந்து போன டைனோசர்களும்,மம்மிகளும் உயிரோடு நம் கண்முன்னே நடமாட வைத்த CG என்னவென்று சொல்வது?

இப்போது பரவலாக இருப்பது இந்த Computer animation வகை தான்.இதிலும் கண்களையும்,மூளையையும் ஏமாற்றும் அதே 24 Frames/Sec வேலை தான். காட்சிக்கு தேவையான காடு,மலை,ஆறு,வீடுகள்,சாலைகள்,மனிதர்கள் என்று அனைத்தையும் CGI ஆக கம்ப்யூட்டர் மூலம் வரைந்து கொண்டு, அதற்க்கு வடிவமும்,செயலும் செதுக்கப்படும்,குறிப்பாக மனிதர்கள்,விலங்குகள் தான் CGIயின் பிரதான வேலை.பாத்திரங்கள் எலும்பும் சதையுமாக உயிர்ப்புடன் தெரிய எலும்பை போல குச்சியாக ஒரு உருவத்தை வரைந்து கொண்டு அதற்க்கு சதை, தோல் எல்லாம் போர்த்தப்படும்(கம்ப்யூட்டரில் தான்), பின்னர் கைகால் அசைவுகளுக்கெல்லாம் அந்த உருவத்தின் உடம்பில் நிறைய புள்ளிகளாக குறிக்கப்பட்டு தேவையானபோது அது அசைவிக்கப்படும்.இதனை அவர்(Avar-animation Variable) என்பார்கள்,இந்த Avar இன் அளவுகளை மாற்றுவதன் மூலம் ஒரு நிலையான உருவத்தை நடக்கவோ,நகரவோ வைக்க முடியும். முகத்தின் அசைவுக்கும், பாவனைகளுக்கு மட்டும் இந்த அவர்(Avar) பாயிண்டுகள் நிறைய தேவைப்படும்.

1980 களின் ஆரம்பத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் மட்டுமே இருந்த CGI தொழிற்நுட்பத்தை வைத்து PIXAR நிறுவனம் “Toy story” என்ற முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் அனிமேஷனால் உருவாக்கப்பட்ட முழுநீளபடத்தை எடுத்து மகத்தான வெற்றி கண்டு CGIயின் புரட்சியை தொடங்கியது. சினிமாவில்,டிவியில்,வீடியோ கேம்களில் பயன்படுத்தப்படும் CGI பற்றி படிப்புகளும் கூடின. சினிமாவில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தக் கூடிய வேலை வாய்ப்பு பல்கிப்பெருகியது அமெரிக்க படங்கள் மட்டுமல்லாது இன்று உலகில் பல நாடுகளின் ஆக்க்ஷன்,பாண்டஸி,கார்டூன் ஜானரில் எடுக்கப்படும் திரைப்படங்கள் CGIஐ மட்டுமே நம்பி வருகின்றன. அதுமட்டுமில்லாது சினிமாவில் தொழிற்நுட்ப மேதைகளான ஸ்பீல்பெர்கும், கேமரூனும்,பீட்டர் ஜாக்சனும் அது வரை இருந்து வந்த அடிப்படை அனிமேஷனில் திருப்தி அடையாமல், பார்வையாளர்களுக்கு நம்பகத்தன்மையை பெருக்கும் வண்ணம் புதிது புதிதாக பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டு இதை கூர்த்திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இதற்க்கு அவசியமான மென்பொருளை உருவாக்கி தர மைக்ரோசாப்ட் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

இந்த கம்ப்யூட்டர் அனிமேஷன் தொழிற்நுட்பத்தில் மிக முக்கிய வகையான Motion-Capture டெக்னாலஜியை பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும்-பாண்டஸி படங்களில் அகோர முகம் கொண்ட மனிதர்கள்,பேசும் விலங்குகள்,பாதி சிதைந்த மம்மி போன்றவைகளுக்கெல்லாம் மனிதர்கள் போல முகஅசைவும்,செயல்பாடுகளும் எப்படி வருகின்றன?ஒரு நடிகரை தேவையான காட்சிகளில் நடிக்க வைத்து அவரது முக பாவனைகளை, செயல்கள், நுணுக்கமான உடல் மொழியை கேமராவால் பதிந்து கொண்டு அதை கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட உருவத்திற்கு பொருத்துவதுதான் Motion-capture technology. சில இடங்களில் தேவைப்பட்டால் அந்த அனிமேஷன் பாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகரின் முக அமைப்பை/பாவனைகளையே கூட (Motion-Capture) முறையில் பயன்படுத்திக்கொள்வார்கள்.”The Mummy” படத்தில் வரும் மம்மி,Lord of the Ring ல் வரும் கோலும்(gollum) ,pirates of caribbean 2 படத்தில் வரும் டேவி ஜோன்ஸ் பாத்திரம் (POC-2 மிகப் பெரிய வெற்றி அடைந்ததற்கு காரணமே அந்த பாத்திரம் தான் என்கிறார்கள் விமர்சகர்கள்) இதற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இதே performance-capture டெக்னாலஜியின் உச்சகட்டம் தான் 2009ல் வெளிவந்து உலகெங்கும் பெரும் வெற்றி பெற்ற அவதார்.1995 லேயே கதையை தயார் செய்து வைத்துக்கொண்டு அப்போதிருந்த அனிமேஷநில் திருப்தி அடையாமல் தொழில்நுட்பவளர்சிக்காக காத்திருந்தார் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். எடுக்கப்படப்போகும் படம் அனிமேஷனாக இருந்தாலும் அவை மிகவும் துல்லியமாகவும், நிஜத்தை ஒத்ததாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தன்னுடைய குழுவினருடன்/கேமராமேன் வின்சென்ட் பேசுடன் பல பரீட்சித முயற்சிகள் மேற்கொண்டு இறுதியாக மனிதக்கண்களுக்கு நிகரான ஒரு 3-D கேமராவை கண்டுபிடித்தார் (Pace/cemaron fusion camera).இந்த கேமராவின் லென்சுகள் மனிதனின் இருகண்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை விட நெருக்கமாக இருக்கும் இதனால் நம் கண்களை போலவே கிட்டத்தில் இருக்கும் பொருட்களை தெளிவாக பார்க்கவும் உடனே தூரத்தில் இருப்பவைகளை மையப்படுத்தி பார்க்கவும் உதவியது.அதோடு நடிப்பவர்களுக்கு சென்சார்களுடன் கூடிய விசேஷ உடை அணிவிக்கப்பட்டு டைரக்டரின் கையில் இருக்கும் கேமராக்கள் மனித அசைவுகளை விட்டு அந்த சென்சார்களின் அசைவுகளை மட்டுமே பதிவு செய்து கொள்ளும்.மற்ற அனிமேஷன் பட பாத்திரங்களை விட அவதார்-நா’வி கிரகத்து மக்கள் தனித்து நிற்ப்பதற்கு ஒரு காரணம் முகத்தின் அசைவுகளை படம்பிடிக்கும் ஸ்கல் கேமரா(skull camera) கண்களை நுண்ணிய அசைவுகளை அதிகம் கவனித்து பதிக்கும்படி இருந்ததால் அந்த பாத்திரம் மிகவும் உயிர்ப்புடன் திரையில் தெரிந்தது.மேலும் முன்பிருந்த அனிமேஷன் தொழிற்நுட்பத்தில் நடிகர்களின் நடிப்பை கேமராவில் பதித்து அதை கணினியின் மூலம் கார்டூன் பாத்திரங்களின் மீது ஏவி ஒழுங்கமைக்க(Rendering) ரொம்ப நாட்கள் பிடிக்கும் ஆனால் அவதார் அப்படி எடுக்கப்படவில்லை-மனிதஅசைவுகளை கேமராவில் படம் பிடிக்க பிடிக்கவே அதை கணினி உடனடியாக காட்சிகளாக எடுத்து துப்பும்(இதனை ப்ராசஸ் செய்ய 1 கிலோமீட்டர் சுற்றளவுள்ள சர்வர் ரூமில் 10,000 ப்ராசஸர்களும்,கிட்டத்தட்ட 32,00,000 GB மெமரியும் தேவைப்பட்டது).இதனால் தவறுகளை உடனடியாக திருத்திக்கொள்ளவும்,திருப்தியில்லா காட்சிகளை உடனடியாக மாற்றவும் முடியும்.இந்த லிங்கில் உள்ள வீடியோவில் 3:12 இல் இருந்து பாருங்கள் http://www.youtube.com/watch?v=JmdK4NdwYkY .

ஸ்பீல் பெர்க் “அவதார்” படத்தின் மிக அதிநவீன தொழில் நுட்பத்தை கண்டு வியந்து அதை பீட்டர் ஜாக்சனின் WETA(ஸ்டுடியோ ) உதவியுடன் தன்னுடைய முழு நீள அனிமேஷன் படமான “The Adventures of TinTin” , படத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டார்.மேலே சொன்ன அதே பாணியில் நடிகர்களின் நடிப்பை,செயலை படம்பிடித்து அதை அந்த கார்டூன் உருவத்தின் மீது பதிவு செய்து அதை ஒரு டிஜிட்டல் சூழலில் பொருத்திவிடுவார்கள் (திரைக்கதைக்கு ஏற்றார் போல அந்த பாத்திரம் காரில் பறப்பது,மலைகளில் தாவுவது போல) . இந்த http://www.youtube.com/watch?v=5OGWPtaUOok வீடியோவை பாருங்கள் Motion-Capture Technology ஐ பற்றி தெளிவாகப்புரியும்.

நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை,இயக்குனர் தான் நினைத்த கதையை எந்த இடருமின்றி தன் விருப்பம் போல எடுக்க,லொகேஷன் என்ற பெயரில் அலையவேண்டி இல்லாமல் நினைத்த மாதிரியான உலகத்தை CG மூலம் உருவாக்கலாம்.வருங்காலத்தில் எல்லா படங்களும் இது போலவே வந்தால் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை, நடிகர்களின் நடிப்புத்திறனை கூட கிராபிக்ஸ் உதவியால் செம்மைபடுத்திவிடலாம்-(தமிழுக்கு அவசியம் தேவை!).

சினிமாவில் அனிமேஷன் கிராபிக்ஸ் தேவை அதிகமாகி விட்டது அதனால் அந்த தொழிற்நுட்பமும் அபரீதமாக வளர்ந்து கொண்டே போகின்றது.எந்தவொரு துறையை மெருகேற்ற புகுக்கப்படும் எந்தவொரு தொழிற்நுட்பமும் வரவேற்று போற்றப்படவேண்டியது தான் இல்லையா?

அன்புடன்

இப்ராஹிம்
பெங்களூர்.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *