திவசம் எனும் தீர்வு

This entry is part 5 of 13 in the series 25 மார்ச் 2018

எஸ்ஸார்சி

அம்மா தெவெசத்துக்கு நான் தானமா குடுத்தேன். அந்த ஒன்பது அஞ்சி வேட்டிய இடுப்புல சுத்திண்டு இதோ என் முன்னாடி அந்த பிராம்ணன் நிக்கறான். அவனோடவே நான் இந்த க்ஷணம் ஓடிப் போயிடறேன்னா என்னப்பா கூத்து இது? அவள் பதில் எதுவும் பேசவில்லை.அண்ணனும் அண்ணியும் திகைத்துப்போய் நின்றார்கள்.அவளை அந்த அண்ணன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் வரன் பார்த்து ,முறைப்படி நன்றாகதான் திருமணம் செய்து கொடுத்தான்.மாப்பிள்ளையும் ஒரு ஆடிட்டர்.அது இருக்கட்டும்.
‘ தெவசம் நடத்திவைக்க வந்த அந்த புரோகிதர் போயாச்சா?’
‘அவருக்கு வேறேங்கயோ ஒரு ஜோலி இப்பவே இருக்காம். அவர் போயிட்டார்’
‘அந்த பிராம்ணன்’
‘ரெண்டு பேருக்கு பிராம்ணார்த்த போஜனம் போட்டம்..ஒரு பிராம்ணன தெவசம் நடத்தி வச்ச அந்த வாத்தியார் தன் சுத்துகாரிய ஒத்தாசைக்கு வேணும்னு கையோட கூட்டிண்டு போயிட்டார். பாக்கி ஒண்ணு பெஞ்சில் உட்கார்ந்துண்டு பேப்பர் படிக்கறது.’ அவன் மனைவிதான் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘கொஞ்சம் மரியாதையா பேசு.அவர் காதுலயும் விழுமே’
‘விழட்டுமே.தட்சணை கொடுத்தப்பறமா இங்க என்ன வேலை’
‘வேல இருக்கறதானாலே அவர் உக்காந்துண்டு இருக்கார்’ அவனின் தங்கை வெடுக்கென்று பதில் சொன்னாள்.
‘இது என்ன ப்புதுசா ஒரு பதில்’
‘ஆமாம் புதுசாதான்’ அவள் தன் அண்ணிக்குப்பதில் சொன்னாள். அவன் குழம்பிப்போனான்.அவன் கண்கள் சிவந்து போனது.
அவனுக்கு சமீபமாய் அம்மாவும் இல்லை.அப்பாதான் எப்போதோ காலமாகிவிட்டார்.தங்கைக்கு அவன் தான் எல்லாமே. அவன் மனைவியும்தன் நகை நட்டுக்களை நாத்தனாருக்குக்கொடுத்து உதவினாள்.கல்யாணம் என்றால் சாமான்யமா என்ன? கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார் என்கிறார்களே சும்மா இல்லை அது. காரியங்கள் பிரயத்தனம் பண்ணி நிறைவேத்தி அனுபவித்தால் தான் அதன் அதன் கஷ்ட நஷ்டங்கள் தெரியவரும். எதுவும் இங்கு சுலுவான விஷயம் இல்லை…
திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகி இருக்கலாம்.ஒரு நாள் காலை ஐந்து மணி. வாயிலில் காலிங்க் பெல் அழுத்திடும் ஒலி.அவன் மனைவி வாயிற் கதவைத்திறந்தாள். அவன் தங்கைதான் நின்று கொண்டிருந்தாள் அவள் இப்படி ஒரு நாள் காலை அறக்க பறக்க வந்து நிற்பாள் என்று யார் எதிர் பார்த்தார்கள்..அவளை அடையாளமே காண முடியவில்லை. ‘ புகுந்த வீட்டிற்கு நாம் பார்த்து அனுப்பி வைத்த நாத்தனாரா இவள்’ அவளுக்கு அய்யம் வந்தது..
‘அண்ணி நானே தான்’
நாத்தனாரின் அதே குரல்.’யாரு?’ அவனும் வாயிலருகே தயங்கியபடியே வந்தான்.’அண்ணா நான் தான் வந்துருக்கேன்’
‘யாரு பாருவா’ பார்வதி என்கிற அப்பா பாட்டியின் பெயரைத்தான் அவளுக்கு வைத்திருந்தார்கள்.
‘ஆமாண்ணா உங்க பாருவேதான்’
அவளின் குரலே இது. தங்கை பாருவின் குரல்..
‘என்னடி அம்மா ஆச்சு உனக்கு’ தங்கையை க்கட்டிக்கொண்டு கோ வென்று கூச்சலிட்டான் தேம்பித்தேம்பி அழுதான்.கண்கள் நீரை அருவியாய்க்கொட்டின.அண்ணனும் அண்ணியும் அவளைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துப்போனார்கள்.அவள் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.
‘அண்ணி எனக்கு ப்பசிக்கறது’
‘டிபன் பண்ணித்தரேன்’
‘இல்ல ரொம்ப பசி’
வீட்டில் இருந்த பழைய சோற்றைத் தட்டில் போட்டுக்கொண்டு அப்படி அப்படியே விழுங்கினாள்.தண்ணீர் குடித்தாள்.’நான் சித்த படுத்துகறேன் அண்ணி’
சொல்லிய அந்த பெஞ்சிலேயே உறங்கிப்போனாள்.அயர்ந்த உறக்கம்.
தங்கைக்கு பத்து வயதிலிருந்தே முதுகில் ஒரு சிறிய தேமல் இருந்தது. அண்ணன் அவளை த்தோல் மருத்துவர்களிடம் காண்பித்தும் இருக்கிறான்.அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை.என்று மருத்துவர்கள் கூறி இருந்தனர்.அதற்கு மேல் அதனில் ஒன்றும் இல்லை. ஆக பிரச்சனைய அத்தோடுவிட்டும் விட்டார்கள்.
அந்தத்தேமலை தங்கையின் முதுகில் கண்ட அந்தக்கணமே புது மாப்பிள்ளை’என்ன இது என்று கத்தி ஆர்பாட்டம் செய்து இருக்கிறார். சண்டை. சண்டை சண்டை.கணவன் மனைவி இருவருக்கும் பேச்சு வார்த்தையே நின்றுபோனது. அவள் வேறு எங்கேயாவது நிச்சயம் ஓடிப்போய்விடுவாள் என அவளை மாமியார் வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்தனர். ஆயிரம் முயற்சிகள் செய்தாள். முடிந்தால்தானே. ஒரு நாள் மாலை அவள் எப்படியோ தப்பித்து அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். அந்த ஊர்ப்பேருந்து நிலையம் வந்திருக்கிறாள்.
ஈரோட்டுக்கும் சிதம்பரத்திற்கும் செல்லும் நேர் வழிப்பேருந்தில் ஏறினாள். ஒரு இடம் பார்த்து அமர்ந்து கொண்டாள். நடத்துனரிடம் கெஞ்சி இருக்கிறாள்.மனிதாபிமானம் வற்றிப்போய்விடவில்லை.அந்த நடத்துனர்’ நம்ம ஊர் பொண்ணு.நானும் அடிக்கடி பார்த்தும் இருக்கேன். புதுசாக்கல்யாணம் ஆனது. குடும்பத்துல ஏதோ சிக்கல் சொல்லிக்கொண்டே ,சரி நீ போய் உக்காரும்மா என்று சொல்லி ஒரு சீட்டைக்கிழித்துக்கொடுத்து இருக்கிறான்
.’காசில்லை சார் என்னிடம்’ என்று திரும்பவும் சொல்லியிருக்கிறாள்.’ அது தெரியும்மா .அக்கா தங்கச்சிவ எனக்கும் இருக்கு’ என்று அந்த நடத்துனர் அவளுக்குப்பதில் சொல்லி இருக்கிறான் .
பாரு அன்று அண்ணன் வீடு வந்தவள்தான். ஆண்டுகள் பத்து முடிந்து போனது.அந்த ஈரோட்டு மாப்பிள்ளை அவளைத்தேடி வரவேயில்லை.அவ்வளவுதான். காலம் அப்படியே போய்க்கொண்டிருந்தது.தங்கை அவனோடேயே இருந்தாள். இன்னும்தான் இருக்கிறாள்.
ஆண்டிற்கு இரண்டு திதிகள்:.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என வரும். இன்று அவன் வீட்டிற்கு பிராம்ணார்தத்திற்கு வந்த பிராம்ணன்தான். இதோ அந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டு இருக்கிறான்.இப்போது எழுந்து அவனிடம் வந்து நிற்கிறான்.கைகளைக்கட்டிக்கொண்டான்.
‘சார். நான் உங்க தங்கயை என் ஆத்துக்காரியா ஏத்து கூட்டிண்டு போறேன். நேக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லே வயசு நாற்பது தாண்டி ஆச்சு. உங்க தங்கை அவளுடைய அந்த பழைய சமாச்சாரம் எல்லாம் நீங்க என் கிட்ட சொல்லி இருக்கேள். எனக்கு நன்னாவே தெரியும்.நானும் மனப்பூர்வமா அவளை என் ஆம்படையாளா ஆக்கி அழைச்சிண்டு போறேன். அவளை நன்னா வச்சிப்பேன். அவளுக்கும் இதுல மனப்பூர்வ சம்மதம்னா எங்கூட அனுப்பி வையுங்கோ’.
அவன் தங்கை அவனிடம் போய் நின்றுகொண்டாள்.அவள் தன் சம்மதத்தைத்தெரிவித்து விட்டதாகவே அவன் உணர்ந்தான்.
‘எங்க ஆத்து தெவசத்துக்கு நீங்க எத்தனை தடவை வந்து இருக்கேள்?’
‘இது மூணாவது தெவசம்’
‘உங்களை என் பித்ரு ஸ்தானத்துல வச்சிதானே நான் பாத்தேன்’
‘அதுவும் சரிதான்’ சொல்லிய அந்த பிராம்னன் தனது டூ வீலரை எடுக்கப்போனான்.தங்கை கூடவே போனாள்.ஒரு நிமிடம் அவனிடம் ஏதோ சொன்னாள்.திரும்பினாள்.
‘அவர் கிட்ட என்ன பேச்சு’ என்றாள் அண்ணி.
தங்கை பதில் எதுவும் சொன்னால்தானே.வீட்டின் உள்ளே சென்றாள்.எதுவுமே நடக்காதமாதிரி தன் காரியத்தை எப்போதும்போல் செய்துகொண்டு இருந்தாள்.’சரி விடு இது இத்தோடு போகட்டும்’ என்றான் அவன் மனைவியிடம்.
மறு நாள் காலை எப்போதும்போல்தான் விடிந்தது.ஆனால் அவள் தங்கையைக்காணவில்லையே.இது என்ன விபரீதம்.
‘எங்கடி போயிருப்பா’
‘எனக்கு அந்த பிராம்ணன் மேலதான் சந்தேகம். அந்த தெவசம் பண்ணிவச்ச வாத்தியாரை இப்பவே புடிச்சிக்கேக்கணும்’
‘ ராத்திரி தாப்பா போட்டு இருந்த வாசக்கதவு இப்ப சும்மாதான் சாத்தி இருக்கு.அவ திறந்துண்டு போயிருக்கணும்.ஒரு பேக் இல்லே.அவ துணிமணி ஒரு பிட் கூட இங்க இல்லே’
அவன் டூத் பிரஷ் எடுத்துப்பல் விளக்கினான்.வழக்கம்போல் விபூதி எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்ளப்போனான்.மரக்கட்டையில் செய்த விபூதி மடல்’அப்பா அவனுக்குக்கொடுத்துவிட்டுப்போனது.’அப்பாதுன்னு இது ஒண்ணுதான் என்னண்ட இருக்கு’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான்.
அதனில் ஒரு கடிதம் அவனுக்காகக்காத்திருந்தது.
‘அண்ணனுக்கும் அண்ணிக்கும்
என் நமஸ்காரம்.
பத்தாண்டுகளாக நீங்கள் இருவரும் கணவனாக மனைவியா வாழ்ந்ததை நான் ஒரு நாள் கூட பார்க்க வேயில்லை.என் வாழ்க்கை என் விதி அது எப்படி யாகவது. போகட்டும்.அதற்காக நீங்கள் சருகாகிப்போவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்கமுடியவில்லை அப்படி ஒரு மனக்கஷ்டம் உடன் பிறந்தவள் எனக்கும் இருப்பதை நீங்கள் உணர்ந்தும் இருக்கலாம்.
காலை .பல் துலக்கியதும் அப்பாவின் விபூதிப்பிறயைத்தொட்டு திரு நீறு பூசிக்கொள்வீர்கள். ‘முருகா’ என்று சொல்லி விபூதி இட்டுக்கொள்வதை நான் நீங்கள் குழந்தையாக இருப்பதுமுதல் நான் பார்த்தும் இருக்கிறேன்
.நான் அந்த பிராம்ணனோடு தான்போகிறேன்.வாழ்க்கை இனி நன்றாக அமையுமா அது எனக்கு எப்படித்தெரியும்.என்னைத்தேடவும் வேண்டாம்.என்னை மன்னித்து விடுங்கள்.வேறு வழி எனக்குத்தெரியவில்லை.அடுத்த முறை உங்களைப்பார்க்கும்போது நீங்கள் மூவராகி இருக்க அந்த முருகன் இனியாவது உங்களுக்கு அருளட்டும்’ இப்படிக்கு உங்கள்,பாரு..’ எனக்கு ஒரு உதவி.இப்படி நான் ஒரு பிராம்ணார்த்ததுக்கு வந்தவனோடதான் ஓடிப்போயிட்டேங்கற சேதி யாருக்கும் தெரிய வேண்டாம்.’
அவன் மனம் கனத்தது. கண்கள் இடுங்கின.அந்தக்கடிதத்தை மனைவியிடம் கொடுத்தான்.
—————————————————————————–

Series Navigationபந்துகம்பன் கழகம் காரைக்குடி கம்பன் திருவிழா, முத்துவிழா அழைப்பு
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    அவள் அவனுடன் சென்றதற்கான காரணம் யாருமே எதிர்பாராதது. நல்ல குறும்படமாக எடுக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *