தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே

This entry is part 3 of 14 in the series 18 அக்டோபர் 2020

 

 

ஜானகிராமன் எந்த ஊரில் , தேசத்தில் இருந்தாலும் அவர் உடம்பு மட்டுமே அங்கே நிலை கொண்டிருக்கும் ; மனது என்னமோ தஞ்சாவூரில்தான் என்று பல பேர் பல முறை பேசியும் எழுதியும் காண்பித்திருக்கிறார்கள். அவர் சென்னையில், தில்லியில் இருந்த போதும் செங்கமலமும் பூவுவும் ஆறுகட்டியிலும், செல்லப்பா தாழங்குடியிலும், காமேச்வரனும் ரங்கமணியும் நல்லூரிலும் ,

சட்டநாதனும், புவனாவும் செம்பானூரிலும்  அம்மணியும் கோபாலியும் அன்னவாசலிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள்.  தஞ்சையையும் காவிரியையும் மனதுக்குள் வைத்துப் பூஜித்து ஒரு ரிஷி போலத் தபஸ் பண்ணிக் கொண்டிருந்தார் அவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஜானகிராமனுக்கு யாவரும் கேளிர்தான். அவ்வளவு பரிவு, அன்பு, நேசம், இனிய சொற்கள், எவரையும் நோகடிக்காத மென்மையான உடல்மொழி  மன மொழி. இதை நான் தில்லி இலக்கிய வாசகர் வட்டக் கூட்டங்களில் தூரத்தில் நின்று பார்த்திருக்கிறேன். வெங்கட் சாமிநாதன், நா. பார்த்தசாரதி, லா.ச.ரா., கி. கஸ்தூரிரங்கன் சுப்ரமண்ய ராஜுஆகியோரிடமிருந்து கேட்டிருக்கிறேன். அவரது எழுத்துகளிலும்  இத்தகைய குணங்களில், இயல்புகளில் தோய்ந்து வருவதை உணர்த்தியிருக்கிறார்.

‘என்ன ஒரு மனிதர் ! என்ன ஒரு எழுத்து ! ‘ என்று மயங்காமல் இருக்க முடியவில்லை. 

ஆனால் யாதும் ஊரே? தி. ஜா. ஒரு அரைப் புன்னகையுடன் இதைக் காதில் விழாதது போல் கடந்திருப்பார் ? 

“யாதும் ஊரே” என்னும் ஜானகிராமனின் சிறுகதையைப்படிக்கும் போது இந்த எண்ணங்கள் தோன்றுகின்றன.

கதைசொல்லிக்கு மார்க்கெட்டுக்குப் போக வேண்டியதில்லை. கடிகாரத்தைப் பார்த்துக் குளிக்க வேண்டியதில்லை. கடிகாரத்தைப் பார்த்து சாப்பிட வேண்டியதில்லை. பஸ் ஸ்டாண்டுக்கு ஓட வேண்டியதில்லை. யானா மாதிரியும், டபிள்யூ மாதிரியும், வியூகம் வைத்து பஸ்ஸைத் தாக்க நிற்கும் ‘க்யூ’  வரிசையில் நிற்க வேண்டியதில்லை. இது எப்படி சாத்தியம்? அதுவும் ஒரு சாதாரண சாமான்ய மனிதன், பாமரன். இஷ்டப்படி அலைகிற சாதாரண மனிதனுக்கு ?

எல்லாம் மூன்று மாத லீவில், முன்னூறு ரூபாய் சம்பளம் கொடுத்து இரண்டு முந்நூறுக்கு வேலை வாங்கி விடும் ஆபிசிலிருந்து விடுபட்டு பாலகரம் வந்ததினால்தான். பட்டணத்திலிருந்து ஒரு இரவு ரயில் பயணம். ரயிலிலிருந்து இறங்கி ஒன்றரை மணி பஸ்ஸில் பயணம். அப்புறம் மண்சாலையிலிருந்து வாய்க்கால் மதகைக் கடந்து வந்தால் பாலகரம் ஊர்.  மூங்கில் தோப்புகள், சுழியிட்டு ஓடுகிற ஆறு, வழிந்து ஓடுகிற வாய்க்கால்,கொல்லை முருங்கை மரத்தில் திணைக் குருவியின் ஊசிக்கத்தல், வலியன் குருவி கனைத்துக் கனைத்துக் குழைக்கிற இனிமை, நீளமான ஒரு வாக்கியத்தை திருப்பித் திருப்பிப் பேசிக் கொண்டிருக்கும் 

புளியமரத்துக் குருவி, ஆழங்காண முடியாத நிசப்தம், அதன் நடுவே கீச்சிடும் அடுத்த வீட்டு ஊஞ்சல், நிழல், காற்று, நாற்றங்கால்களில் அலையோடுகிற பசும்பொன், வரப்புகளில் நாயுருவிகளை உராய்ந்து நடப்பது, களத்துக் கலியாண முருங்கையில் ‘ட்ரூவ்’ என்று அழைக்க்கிற மணிப்புறா. இந்த அற்புதங்களில் திளைக்கத்தானே மூன்று மாத லீவில் வருகை?

ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒரு நாள் கதைசொல்லியின் அரட்டைக்கு அந்தக் கிராமத்தில் காது கொடுக்கும் கோணல் கிச்சான் ஒரு  சந்நியாசியை அழைத்து வருகிறான். ஊர் ஆற்றங்கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த அவரைக் கிச்சான் தன் வீட்டில் பிக்ஷை எடுத்துக் கொள்ளுமாறு கோரி தனது வீட்டுக்கு அழைத்து வருகிறான். ஆனால் அங்கே அவனது மனைவி திடீரென உடம்பு சரியில்லாமல் போய்ப் படுத்திருக்கிறாள். அதனால் கிச்சான் கதைசொல்லியிடம் சந்நியாசியை அழைத்து வருகிறான். கணவனும் மனைவியும் அவரை நமஸ்கரித்த பின் பிக்ஷை கொடுக்க சமையல் வேளைகளில் மனைவி இறங்குகிறாள். கதைசொல்லியிடம் சந்நியாசி பேசுகையில் முன்னவரின் உத்தியோகம், ஜாகை பற்றிக் கேட்கிறார். கதைசொல்லி பட்டணத்தில் தனது  தங்குமிடத்தைப் பற்றிச் சொன்னதும் அங்குள்ள அவருக்குத் தெரிந்த சில பெரிய மனிதர்களை பற்றி சந்நியாசி விசாரிக்கிறார். அன்று கதைசொல்லியின் வீட்டில் பிக்ஷை நடக்கிறது. மறுநாள் கோணல் கிச்சான் வீட்டில் என்று ஏற்பாடு. எங்கும் ஒருநாளைக்கு மேல் தங்குவதில்லை என்னும் சந்நியாசி கிச்சானின் அன்பைப் பொறுக்க முடியாது தங்குவதற்கு ஒப்புக் கொள்கிறார்.  ஊரில் உள்ள சீதாராமன், சேது வன்னியர்,மேலத் தெருவிலிருந்து பாலுத் தென்கொண்டார் எல்லோரும் வந்து விசாரித்து விட்டு அவரை வணங்கிச் செல்கிறார்கள். 

கதைசொல்லி சொல்கிறார்: “எனக்குப் பொறாமையாகத்தான் இருந்தது. அவர் யாரையும் தாழ்வாக, தவறாகப் பேசவில்லை.

உபதேசத்தைத் தொழிலாகக் கொண்டவர்களைப் போல் யாரையும் குறை கூறவில்லை; கிண்டல் செய்யவில்லை. பரம சாத்வீகராக, எல்லாவற்றையும் துறந்து விட்டு என்னை ஏங்க ஏங்க அடித்துக் கொண்டிருந்தார்.”  (மேலேயுள்ள இரண்டாவது பாராவைப் படிப்பது போல இருக்கிறதோ!)  

இரவு சாப்பிடும் முன் அக்கரையில் ராமாயணம் கதை சொல்வதைப் பற்றிப் பேச்சு எழுகிறது. கதைசொல்லி தினமும் அதற்குப் போவது வழக்கம். சாப்பிட்டு முடித்ததும் சந்நியாசி தானும் உடன் வருகிறேன் என்கிறார். போகிறார்கள். அவர்கள் கதை சொல்லும் இடத்தை நெருங்கியதும் புராணிகர் சந்நியாசியைப் பார்க்கிறார். அவரைக் கூப்பிட்டுத் தன்னுடன் திண்ணையில் உட்கார வைத்துக் கொள்கிறார். 

கதை கேகயத்திலிருந்து திரும்பி வரும் பரதன், தந்தை காலமானது பற்றிய சந்தர்பங்களைக் கேட்டுத் தாயையும் கூனியையும் வெறுக்கிறான்; திட்டுகிறான். ராமனைத் திருப்பி அழைத்து வரவேண்டுமென்கிறான். இந்த இடத்தில் கதை சொல்வதை நிறுத்தி விட்டு “தாயாதிகளென்றால் காய்ச்சல், பொறாமை எல்லாம் கூடவே பிறந்து விடும். அப்படித் தப்பித் தவறி அவர்கள் சுமுகமாக இருந்தாலும் மற்றவர்களுக்குத் தாங்காது – கூனியைப் போல. ஏதாவது சொல்லிக் கிளப்பி விட்டு விடுவார்கள். ராமாயணத்துக்கோ பாரதத்துக்கோ போக வேண்டாம். இதோ நம் கண் முன்னாலே பார்க்கிறோம்” என்று சந்நியாசியைக் காட்டுகிறார்.

பூர்வாசிரமத்தில் சந்நியாசியின் பெயர் சந்தானம். இரு போகம் ஏழு வேலியிலும் நெல்லு சாகுபடி. வருஷ வருமானம் இருபதினா

யிரத்துக்குக் குறையாது (1962ல் !).பிள்ளை குட்டி கிடையாது. தாயாதிகள் கறுவிக் கொண்டியிருக்கிறார்கள். ஒரு வருஷம் முன்பு சந்நியாசிக்கு ரொம்பவும் உடம்புக்கு வந்து படுக்கையில் தள்ளி விட்டது. தாயாதிகள் அவரைக் கரைத்துப் போகிற வழிக்கு சந்நியாசம் வாங்கிக் கொண்டால் ஆத்மாவுக்கு மோட்சம் கிட்டும் என்று வறுத்து எடுத்துக்  கையில் கமண்டலத்தையும் தண்டத்தையும் கொடுத்து விடுகிறான்கள். ஆனால் விபரீதமாக நாலைந்து நாளில் இவருக்கு உடம்பு தேற ஆரம்பித்து விடுகிறது.. ஆனால் சந்நியாசி வீட்டில் இருக்கலாமோ?  சம்சாரமோ பரம சாது. ஒரு திரிசமன் அறியாதவள். அபர வயதில் பிக்ஷைக்கு ஊர் ஊரா கப் போய்க் கொண்டு இருக்கிறார். பரம அயோக்கியன்கள் அந்தத் தாயாதிகள் ! என்கிறார் புராணிகர்.

சந்நியாசி குனிந்த தலை நிமிரவில்லை.குப்பென்று கண் கலங்குகிறது.முகச்சதைகள் கோணி, விசித்து விசித்து அழத் 

தொடங்குகிறார். கதை சொல்கிறவர் பாவம் என்று பரிதாபப்படும் போது சந்நியாசி மேலும் விசித்து விசித்து அழுகிறார். அவரால் அடக்க முடியவில்லை. கடைசியில் எல்லோரும் எழுந்து கிளம்புகிறார்கள். வீட்டுக்கு வந்ததும், கதைசொல்லி அவருக்குப் படுக்க ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு வீட்டுக்குள் போகிறார்.அங்கு மனைவியிடம் நடந்ததைச் சொல்லுகிறார். 

“அழுதாரா?  ஸ்வாமிகளா” என்று வியக்கிறாள் அவள்..” மறுபடி சொல்லுங்கள் – கதை சொல்கிறவர் என்ன சொன்னார்?”

கதைசொல்லி மறுபடியும் சொல்கிறார்.

அவர் மனைவி விழுந்து விழுந்து குலுங்கிக் குலுங்கி முந்தானையால் வாயைப் பொத்திச் சிரிக்க ஆரம்பிக்கிறாள். 

“என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது?”

அவள் சிரிப்பை நிறுத்திவிட்டுக் கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள். இருமுகிறாள்.

“நீங்கள் போய் அந்தத் தாயாதிக்காரா கிட்டே சொல்லி ராஜி பண்ணுங்கள். ஊருக்குள் வராமல் களத்திலாவது சாகுபடியைக் கவனிக்கட்டும்” என்கிறாள் அவர் மனைவி.

சந்தானம் என்கிற சந்நியாசிக்கு யாதும் ஊரே என்பது அவர் சொந்த ஊர்தான் !

Series Navigationஏழைகவிதையும் ரசனையும் – 3
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *