தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5

This entry is part 15 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

 

வெங்கிடி சார் ஏன் ஓடினார்? – 5

வெங்கிடி சார் யார்?

போஜனப்பிரியரல்ல :

“மாலீ கொஞ்சம் மோர்த் தண்ணி கொண்டா. நீர்க்க இருந்தால் போதும். ரொம்ப நீர்க்க இருக்கணும், நீராரத் தண்ணி விட்டாலும் சரி.” 

வயது வித்தியாசமின்றி அடுத்தவர் சொல்லுக்கு மரியாதை தருபவர் :

“எல்லாரும் ஒரு வளியா தொலஞ்சாங்கடாப்பா. இப்பதான் அக்கடான்னு இருக்கு ஊடு” என்றது மாலி.  வெங்கிடி சார் சிரிப்பை  சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். இனிமேல் சிரிப்பு தன்னை மீறி வராது என்று தெரிந்தவுடன் “அப்படியெல்லாம் சொல்லப்படாது மாலி” என்று குழைவாக உபதேசம் செய்தார் வெங்கிடி சார்.  

வெங்கிடி சாரின் விருந்தோம்பல்:

சோழநாட்டு மன்னன் கரிகாலன், ஓய்மானாட்டு நல்லியக்கோடன், தொண்டைநாட்டு இளந்திரையன், செங்கண்மாத்து 

வேள் நன்னன் சேய் நன்னன் என்னும் சங்ககால மன்னர்களுக்குப் போட்டியாக  விருந்தோம்பும் கலையில் சிறக்கிறார்,  வெங்கிடிசார் ! கதையின் ஆரம்பத்தில் வரும் அவர் குழந்தை ஒரு மாசமாக இரவில் தான் உறங்குவதற்கு வைத்திருக்கும் தலையணையை விருந்தாளிகள் எடுத்துக் கொண்டு விட்டதாக உதட்டைப் பிதுக்குகிறது.

அவர் மனைவி “வந்த விருந்தை விரட்டணும்னு சொல்லலே…இருந்தாலும் மட்டுப்படுத்திக்கிட்டாதான் தேவலாம். அவங்க வரதுக்கு மேலே நீங்க கொந்திக் கொந்தி உபசாரம் பண்ணறதும், சீராட்றதும், கொண்டாடறதும்…! என்னமோ மாசம் ஐந்நூறு ஆயிரம் நமக்கு வராப்ல அவங்க நெனச்சுட்டு ‘டேராப்’ போடறதும் .. ” என்கிறாள். “குழந்தைக்கு தலகாணி இல்லாம ஒரு மாசம் கையைத் தலைக்கு வச்சுப்படுத்த ஆத்தாமை – இப்ப என்ன?”

வெங்கிடி சார்.கண்ணை மூடிக்கொண்டு விட்டார். காதுக்கு இமையில்லாததால்தான் அப்படிச் செய்கிறார்.. 

விருந்தோம்பல் என்றால் என்ன மாதிரியான விருந்தோம்பல்? : 

அந்தக் கொடிக்கால் தெரு எண்பது வீடுகளுமே அவர் எப்படி இவ்வளவு சமாளிக்கிறார் என்று ஆச்சரியப்படுவதுண்டு. தினம் பொழுது விடிந்தால் நாலு இலைக்கு ஆள் வந்த மணியமாகத்தான் இருக்கும் வெங்கிடி சாருக்கு. பாண்டு சோகைக்கு வைத்தியம் பார்க்க வருகிற அவருடைய அத்தைமார்கள், வயிற்றுக்கட்டி ஆபரேஷன், பக்கவாதம், உள்நாக்கு வீக்கம், இப்படி பல வகை மருத்துவங்களுக்காக வந்து தங்குகிறவர்கள். மாஜிஸ்ரேட் கோர்ட்டில் ஈரங்கிக்கு வருகிற சுற்று வட்ட கிராமங்களில் உள்ள பந்துக்கள் – சாசனம், பரிவர்த்தனை பதிவு செய்ய வருகிறவர்கள் – ரிஷப வாகனம், வெண்ணைத்தாழி, புன்னை வாகனம், தேர் என்று வருகிற திருவிழா, நவராத்திரி வேடிக்கை பார்க்க வருகிறவர்கள் – ….

இது தவிர,ஊரில் கும்பாபிஷேகம், அன்னதானம், ஆஸ்பத்திரி கட்டுவது  என்றால் தன் பங்குக்கு மூன்றோ ஐந்தோ போட்டு விடுவார். 

இப்படிப்பட்ட மனுஷனை ஒரு சிறுவன் என்ன பாடு படுத்தி விடுகிறான்? அவரும் அவர் மனைவியும் விருந்தோம்பலின் நல்லது கெட்டதுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது வாசலில் “ஐய்யா …ஐ ..யா.” என்று அவர் இதுவரை கேட்காத தீனமான குரலைக் கேட்டுப் பதறி விடுகிறார். சரேலென்று ஊஞ்சலில் இருந்து எழுந்து போய்ப் பார்க்கிறார்.

ஒரு பையன். தலைமுடி அழகாகக் கத்திரித்திருக்கிறது. கட்டை குட்டையான உடல். பதினான்கு பதினைந்து வயது இருக்கும். இடையில் ஒரு பழுப்பு டிராயர். உடல் திறந்து கிடக்கிறது. துருப்பிடித்த தகரக் கறுப்பு. நிமிர்ந்து நிற்க முடியவில்லை பையனால். குரலும் எழும்பவில்லை. கம்மித் தோய்ந்து கிடக்கிறது. நாலு நாளாக ஒரு பருக்கைச்சோறு கிடைக்கலே என்கிறான். பசியின் கோர சொரூபத்தைப் பார்த்து வெங்கிடிசாருக்கு கைகால் எல்லாம் ஒரு தடவை நடுங்குகிறது. வீட்டில் சாப்பிட ஒன்றும் இல்லை என்றதும் காசு டப்பாவில் தேடிப் பார்க்க சில்லறையாக பதினாலாணா இருக்கிறது. அதிலிருந்து எட்டணாவை எடுத்துக் கொடுக்கிறார் பையனிடம்…பையன் கூனிக் கொண்டே மெள்ளப் படியில் நடக்கிறான். உள்ளே அவர் திரும்பிப் போகிறார்.

சத்து மாவையாவது கரைத்துக் கொடுத்திருக்கலாம், காசை மட்டும் கொடுத்தனுப்பிய வேதனையில் இருப்புக் கொள்ளாமல் வாசலைப் பார்க்க நடக்கிறார். படியில் நின்று பார்க்கிறார்.

என்ன இது? பையன் முதுகு விறைக்க விடுவிடுவென்று நடந்து கொண்டிருக்கிறான். முண்டர்களுக்கு இருக்குமே, அந்த மாதிரி முதுகு. இவனா பசியில் உயிர் போகத் துடித்தவன் ! அட களவானித் தறிதலை !

அவர் அவனைக் கூப்பிடுகிறார். ‘திருட்டு நாயே ! திரும்பிப் பார்த்த அவன் ஓட்டம் எடுக்கிறான். அவர் அவன் பின்னால் ஓடுகிறார். வழியில் ஒரு வீட்டில் இருக்கும் விசுவத்தை உதவிக்கு இழுத்துக் கொண்டு ஓடுகிறார். தெருக்கோடி, சாலியத் தெரு, தைக்கால் தெரு, வாணக்காரத் தெரு, குயத் தெரு என்று பையன் ஓடுகிறான். வெங்கிடிசாரால் ஓட  முடியாது நின்று விடுகிறார். திரும்பி வந்த 

விசுவம் அவனைப் பிடிக்க முடியவில்லை என்கிறான். அவர் அவனை அனுப்பி விட்டு ரெட்டியார் மில்லுக்குப் பக்கத்தில் போய் நிற்கிறார்.கடைத்தெரு வழியாகப் போவதற்கு அந்தக் கிண்டன் வந்து மாட்டினால்…?  

வெங்கிடி சார் நிற்கும் கடைக்குப் பக்கத்தில் ஒரு சோடா கேட்டுக் கொண்டு வருபவனைப் பார்க்கிறார். அதே பயல்தான். அவனைப் பிடிக்கப் பார்க்கும் போது அவன் தப்பித்து ஓடுகிறான். அவனை எப்படியாவது இன்று பிடித்து விட வேண்டும் என்று விரட்டிக் கொண்டு தலை தெறிக்க ஓடுகிறார். மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறார். ஏதோ கல் இடறவே மடேர் என்று விழுந்து முழங்கால் தோளெல்லாம் சிராய்த்து விடுகிறது. அந்தப் பயல் தூர நின்று சிரிக்கிறான். கவனிக்கிறான். பேசாமல் நிற்கிறான்.பிறகு அந்த எட்டணா நாணயத்தை அவர் முகத்தைப் பார்க்க எறிகிறான்..ஓடியே போய் விடுகிறான். 

வெங்கிடி சார் காசை எடுக்கிறார். பரதைப் பயலே என்று கத்துகிறார். கீழேயிருந்து எழுகிறார். சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

சாலையிலே அந்தக் காசை வீசி எறிகிறார். 

தி. ஜானகிராமன் வெங்கிடிசார் ஏன் ஓடினார் என்று கேட்கிறார். 

வெங்கிடி சார் கண்மண் தெரியாமல் வருவோர் போவோருக்கெல்லாம் விருந்துபசாரம் செய்யும் மனிதர். அவர் தனக்கு மிஞ்சிதான் தானம் என்று நினைக்காதவர. மனிதர். வீட்டில் இருக்கும் பதினாலணா சில்லறையில் பெரும் பகுதியை சிறுவனுக்குக் கொடுத்து விட்டு மிச்சமிருக்கும் ஆறணாவைத் தன் செலவுக்கு வைத்துக் கொள்ளும் பரிவு மிகுந்த  உயர்ந்த மனிதர். 

விசுவம் “எட்டணாத்தானே சார். தலை முளுகி விடுங்க ” என்று சொல்லிச் சிரிக்கும் போது அவனை இங்கிதம் தெரியாதவன் என்றும் போத்து மாதிரி வளர்ந்திருக்கிறான், மண்டையில் ஒன்றுமில்லை என்று மனசுக்குள் கோபித்துக் கொள்கிறார்.அவர் மனதில் இருப்பதை புரிந்து கொள்ளாத ஜென்மம் என்று கோபம். பணத்தைத் தன்னிடமிருந்து ஏமாற்றி வாங்கிக் கொண்டு விட்டான் என்ற கோபத்தில் அவனை அடிக்க ஓடுகிறாரா? இந்தச் சாமானியத்தைச் சொல்ல தி ஜா தேவையில்லை. 

ஏமாற்றியவனைப் பிடித்து ‘இனிமேல் இப்படியெல்லாம் ஏமாற்றாதே? என்று இங்கிதமாகச் சொல்லி திருத்த விரும்புகிறாரா? (மாலியிடம் சொல்லிச் செய்த மாதிரி?) 

இல்லை, ஏமாற்றியதற்கு அவனைக் கட்டி வைத்து உதைத்துப் பாடம் போதிக்க வேண்டும் என்று பிடிக்க ஓடினாரா? 

சிறுவனைப் பிடித்து, அவனிடம் கொடுத்த பணத்தைத் திரும்ப அடைய ஓடினாரா? அவனுக்கு கொடுத்த பணம் இனி தனக்கில்லை என்று நினைப்பவராக இருப்பதால்தானே அவன் அவரை நோக்கி விட்டெறியும் பணத்தை அவர் தெருவில் எறிகிறார் ? அதனால் அவர் அவனிடம் ஏமாந்து போய்க் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற ஓடினார் என்றும்  நினைக்க முடியாமலிருக்கிறது. மேலும் விசுவம் பேச்சு விளக்கமும் விருந்தோம்பல் தன்மையும் இத்தோடு ஒத்துப்போகவில்லை.

ஒரு கதைக்கு முடிவு என்று ஒன்று எதற்கு இருக்க வேண்டும் என்று ஜானகிராமன் இந்தக் கதையை எழுதி விட்டாரோ? அல்லது வாசகரே அதைத் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டாரா?  அவரே தலைப்பில் கேள்வியை ஏன் எழுப்ப வேண்டும் ?ஒரு சிறுகதை முடிவு, முற்றுப் புள்ளி என்று எதுவும் இல்லாது கதைக்கு அப்பாலும் விரிகிறது என்று அவர் நினைத்து விட்டதாகத்தான் தோன்றுகிறது. தி.ஜா.வுக்குப் பின் எழுத வந்த அசோகமித்திரன், சா.கந்தசாமி ஆகியோர் இந்த உத்தியைப் பெரும்பாலான அவர்களின் கதைகளில் பின்பற்றியிருக்கிறார்கள்.  

Series Navigationகையெழுத்துஆசைப்படுவோம்
author

ஸிந்துஜா

Similar Posts

2 Comments

  1. Avatar
    jananesan says:

    கும்பகோணத்தாரின் வெங்கிடிசார் கதையின் சாரத்தை ஸிந்துஜா தான் புழங்கிய மதுரைத் தமிழில் அருமையாகச்சொல்லி விட்டார்.தி.ஜா வின் உத்தியையும் நயமாய் பந்தி விரிச்சிட்டார்.இத்தொடர் தி.ஜாவுக்கு நல்லதோர் புகழஞ்சலி.

  2. Avatar
    Dr J Bhaskaran says:

    விருந்தோம்பலின் நல்லது கெட்டதுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தச் சிறுவன் வருகிறான்.
    வலிந்து ஒருவன் தன் தான தருமங்களையும், விருந்தோம்பலையும் ஏமாற்றுவதைப் போல காசு பெற்றுச் செல்கிறான். பணத்தைவிட, தன் தருமத்தை அவன் அவமதிப்பதைத்தான் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. துரத்துகிறார். காசை அவன் அவர் முகத்தில் விட்டெறிவதைத் தன் தருமத்தையே தன் மீது எறிவதாக நினைப்பதால், காசைத் தெருவில் வீசிவிடுகிறார்.
    தருமம் செய்பவர்களுக்குத் தன் தருமத்தை மதிக்காதவர்களைப் பிடிக்காது – அது தருமத்துக்கே இழுக்கு என்பது அவர்கள் எண்ணம். தருமத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வியதால் வந்த கோபத்தில் துரத்தி ஓடுகிறார் வெங்கிடி சார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *