தீபாவளி நினைவு

This entry is part 18 of 26 in the series 27 அக்டோபர் 2013

 

                                                         டாக்டர் ஜி.ஜான்சன்

             என்னுடைய ” உடல் உயிர் ஆத்மா ” நாவலை சிங்கப்பூரில் வெளியீடு செய்ய சிங்கப்பூர் தமிழவேள் நாடக மன்றத்தின் தலைவர் திரு. மு. தங்கராசனைத் தொடர்பு கொண்டேன். அவரும் கவிஞர் முருகதாசனும் ஏற்பாடு செய்து தமிழ் முரசில் செய்தியும் வெளியிட்டனர்.

நூல் ஆய்வை என்னுடைய பள்ளித் தோழரும் பால்ய நண்பரும் எழுத்தாளரும் விமர்சகருமான இராம. கண்ணப்‌பிரான் செய்ய ஒப்புக்கொண்டார்.

குறிப்பிட்ட நாளில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்து மண்டபத்தில் விழா தொடங்கியது.

சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர், தமிழறிஞர், செந்தமிழ்ச் செல்வர் திருமிகு வை.திருநாவுக்கரசு அவர்கள் தலைமை தாங்கினார்.

அப்போது கடும் மழை என்பதால் குறைவானவர்கள்தான் வந்திருந்தனர். அவர்களில் ஒரு சிலரை நான் அடையாளம் கண்டு கொண்டேன். பலரைத் தெரியவில்லை. ஆனால் ஒரு முகம் எனக்கு நன்கு பழக்கமான முகமாகும். நாங்கள் இருவரும் சிறித்துக் கொண்டோம். விழா தொடங்கிவிட்டதால் உடன் சென்று பேச முடியவில்லை.

கவிஞர் முருகடியான் அருமையான கவிதையில் என்னை வாழ்த்தி வரவேற்றார். அதுபோன்ற சிறப்பை நான் அதுவரை பெற்றதில்லை. ஒருவரை கவி கொண்டு வாழ்த்துவது எவ்வளவு சிறப்பானது என்பது அப்போதுதான் நான் உணரலானேன். அந்த கவிதை வரிகள் வருமாறு :

மாயக் குயவன் கொடுத்த உடம்பை

காயப் படாமல் காப்பது எப்படி?

வந்தது இருவர் வாலிப விருந்தில்;

தந்துயிர் காத்தது தாய்ப்பால் மருந்தில்!

அண்டம் இருப்பவை அனைத்தும் அழகுடல்

பிண்டம் இருப்பதாய்ப் பெரியோர் கூறினர்!

என்புத் தோலுடன் இரத்தச் சேற்றால்

ஒன்பது வாயில் ஓட்டைக் குடத்தில்

எப்படிக் காற்றெனும் இன்னுயிர் நிலைப்போ?

கட்புலன் அறியாக் கமுக்கம் யாதோ?

ஆன்மா என்பது அறிவா, மனமா?

ஊன்மா சிதைந்தால் ஓடுவ தெங்கே?

ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி

மோனத் தவத்தால் முற்றறிந் தாரோ?

காற்றை உண்டே களித்திருந் தாரும்

நேற்றைக் கிருந்தார் : இன்றே னில்லை?

பாவிகள் இருப்பதைப் பாமரர் அறிவார்

ஆவிகள் அலைவதை அறிபவர் அறிஞரே!

பட்டை உரிக்கும் பாம்பின் குணம்போல்

சட்டை கழற்றிச் சாதனை புரியும்

ஆதன் உடலுயிர் ஆய்வை நிகழ்த்தி

நாதன் நினைவுடன் நற்றமிழ் நாவல்

படைத்தநம் ” ஜான்சன் ” படைப்புத் திறனார்!

மருத்துவர் இவரின் மணித்தமிழ் நாவலில்

கருத்துக் கணிகளும் கமழ்ந்திடக் கண்டோம்!

மூடம் நீக்கிய மூதறி வெண்பதைத்

தேடல் தெரிந்தவர் தேடிடும் செல்வமே!

கற்பனை உண்மை கலந்தவர் அறிவே

அற்புதம் யாவும் அவனியில் கண்டது!

உடலின் இயக்கம் உணர்ந்தவர் தாமே

கடல்சூழ் உலகின் கணக்கினை அறிவார்!

மருத்துவம் தெரிந்தார் மாண்தமிழ் இலக்கிய

அருத்தம் அறிந்த அறிஞர் ” ஜான்சன் ”

நெருப்புக் குடைக்கீழ் நெளியுங் கோள்கள்

உருப்பட ஒழுங்காய் உருட்டிடும் அவனை

நெஞ்சில் நிறுத்தி நெடுங்கதை செய்தார்

அஞ்சுதற் கஞ்சும் அறிவொளி ” ஜான்சன் ”

விஞ்ஞா னத்தின் விளைவை அறிந்த

மெய்ஞ்ஞா னத்தின் மேன்மை புரிந்த

” உடல் உயிர் ஆத்மா ” ஒப்பிலா நன்னூல்!

இந்நூல் போல்தமிழ் இலக்கியம் வளம்பெறப்

பன்னூல் ஆக்கிடப் பரம்பொருள்

கண்ணருள் வீசக் களிப்புற வாழ்கவே!

தலைமையுரை, நூல் ஆய்வு, முடிந்தபின் வந்திருந்தோரின் மருத்துவ கேள்விகளுக்கு விளக்கம் தந்தபின் நூல் வெளியீடு நடந்தது.

நன்றியுரைக்குப் விழா இனிதே நிறைவு பெற்றது.

மறு நிமிடம் என்னை நோக்கி வேகமாக வந்தான் என் நண்பன் ஆனந்தன். ஆம் . அவனைத்தான் நான் எங்கோ பார்த்த ஞாபகம் என்று சொன்னேன்.

நாங்கள் கட்டி அணைத்துக் கொண்டோம். நாங்கள் பார்த்து எத்தனை வருடங்கள்? ஏறக்குறைய  முப்பத்தேழு வருடங்கள்!

நான் 1964 ஆம் வருடம் மருத்துவம் பயில தமிழகம் சென்றபின் எங்கள் தொடர்பு விடுபட்டிருந்தது. நான் திரும்பி வந்தபோது நாங்கள் வசித்த ஹென்டர்சன் மலை தரைமட்டமாகி இருந்த இடம் தெரியாமல் மாறிவிட்டது. அங்கு நான் பழகிய அனைவருமே எங்கெங்கோ சென்று விட்டனர். அவர்களில் ஆனந்தனும் ஒருவன்.

அவன் அப்படியேதான் இருந்தான். அந்த கருத்த முகத்தில் அதே கள்ளமில்லாத அகன்ற சிரிப்பு. நடுத்தர வயதில் கொஞ்சம் தடித்திருந்தான்.

” தமிழ் முரசில் செய்தி பார்த்தேன். நிச்சயம் அது நீயாகத்தானிக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்தேன். என் நம்பிக்கை வீண் போகலை. என்னால் இதை நம்ப முடியலை. ” என் கையை இறுகப் பற்றிக்கொண்டு கூறினான்.

” உன்னை நான் பலரிடம் கேட்டேன். யாரும் சரியாக சொல்லலை. நல்ல வேளை இந்த நல்ல நிகழ்ச்சியில் நாம் பார்த்து விட்டோம். இனி கவலை இல்லை. அடிக்கடி பார்த்துக்கொள்வோம். ” என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

அந்த சந்திப்பு விலை மதிக்க முடியாதது. அப்போது நூல் வெளியீட்டில் கிடைத்த வெள்ளிகள் துச்சமாகத் தெரிந்தது. ஆனந்தனைக் கண்டு பிடித்தது பெரும் புதையலைக் கண்டது போன்றிருந்தது!

சிறு வயதில் நாங்கள் இருவரும் அவ்வளவு நெருங்கிப் பழகிய பால்ய நண்பர்கள்.

குளுவாங் திரும்பும் வரை என் நினைவலைகள் அந்த இனிமையான இளம் வயதில் அலைமோதின.

நாங்கள் ஹென்டர்சன் மலையில் கம்பத்தில் குடியிருந்தோம். அங்குதான் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளி இருந்தது. அது மரத்தினாலும் அத்தாப்பினாலும் அமைந்திருந்தது. அதில்தான் அப்பா தமிழ் ஆசிரியர். மலை மீது நகரசபைக் குடியிருப்புகள் இருந்தன. அதனால் நிறைய தமிழர்கள் வாழ்ந்த பகுதி அது.

ஆனந்தனும் அவனுடைய தந்தையும் பள்ளிக் கட்டிடத்தின் பின்புறம் ஓர் அறையில் வாடகைக்கு குடியிருந்தனர். நான் அப்பாவுடன் வேறொரு அத்தாப்பு வீட்டில் குடியிருந்தேன். நடக்கும் தொலைவில்தான் இருந்தேன்.

எங்கள் இருவரின் தாய்கள் தமிழகத்தில் இருந்தனர். அதனால் தாயன்பு அறியாமல் தந்தையின் கொடூர கண்காணிப்பில் வளர்ந்தவர்கள் நாங்கள். அப்படி வளர்ந்ததும் ஒரு வகையில் நல்லதுதான். இல்லையேல் நாங்கள் இருவரும் அப்போது குண்டர் கும்பலில் சேர்ந்திருப்போம். குண்டர் கும்பலுக்கு பெயர்போனது அன்றைய ஹென்டர்சன் மலை!

பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியில் மாலையில் நாங்கள் சந்திப்பது வழக்கம்.

அப்போது எங்களுக்கு வயது பதினைந்துதான். நாங்கள் ஆளுக்கு ஒரு கையடக்கமான மு.வா. வின் திருக்குறள் தெளிவுரை வைத்திருப்போம். அதிலிருந்து தினம் ஒரு குறள் மனனம் செய்வோம்.

எங்களுக்கு வேறொரு பொழுதுபோக்கும் இருந்தது.நாங்கள் இருவரும் தீவிரமாக தபால் தலைகள் சேர்த்தோம். அன்றாடம் தபால் தலைகள் மாற்றிக்கொள்வோம். நாங்கள் தபால் தலைகளை விலை கொடுத்து வாங்க மாட்டோம்.

அப்போதெல்லாம் கடிதங்கள் எழுதுவதுதான் வழக்கிலிருந்தது. இன்றுபோல் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவை தெரியாத காலம். ஆகவே பள்ளி நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர் என எல்லாரிடமும் தபால் தலைகள் கேட்டு வாங்குவோம். ஒரே மாதிரியானது ஒன்றுக்கு மேல் கிடைத்தால் நான் ஆனந்தனிடம் அதைத் தந்துவிட்டு என்னிடம் இல்லாத ஒன்றை அவனிடமிருந்து வாங்கிக்கொள்வேன். இது போன்று நாங்கள் இருவரும் நிறைய தபால் தலைகளைச் சேர்த்து வைத்திருந்தோம். அது ஒரு சுவையான பொழுதுபோக்கு.

நாங்கள் ஒன்றாக சீனியர் கேம்பிரிஜ் தேர்ச்சி பெற்றோம். நான் உடன் மருத்துவம் பயில தமிழகம் சென்றுவிட்டேன். அதன்பிறகு எங்களின் தொடர்பு அறுபட்டது.

நான் திரும்பி வந்து வேறு நண்பர்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கும் ஆனந்தனைப் பற்றி ஏதும் தெரியவில்லை.

இப்போது முப்பத்தேழு வருடங்கள் கழித்து சற்றும் எதிர்ப்பாராத விதத்தில் சந்தித்தது பெரும் உவகையை உண்டுபண்ணியது.

அதன்பின் நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டோம். சிங்கப்பூரில் நடந்த சில இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் செல்வோம்.

தீபாவளி வந்ததும் நான் குடும்பத்துடன் அவனின் வீடு சென்றேன். அங்கு அவனின் மனைவியையும் மூன்று மகன்களையும் இரண்டு மருமகள்களையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்தோம். அன்று முழுதும் அவனின் இல்லத்தில் தான் கழித்தோம்.

.          அவனுடைய காரில் ஓட்டுநரின் பக்கத்து இருக்கையில் மு.வா.வின் சிறிய திருக்குறள் தெளிவுரை இருந்தது!

கிறிஸ்துமஸ் வந்தபோது ஆனந்தன், மனைவியுடனும் கடைசி மகனுடனும்  குளுவாங் வந்து இரண்டு நாள் தங்கிச் சென்றனர்.

இப்படி இரண்டு தீபாவளியும் கிறிஸ்துமசும் இரண்டு பால்ய நண்பர்களின் இனிய பண்டிகைகளாகக் கொண்டாடினோம்.

அதன்பின் வந்த தீபாவளிகளில் ஆனந்தனின் நினைவு துயரத்தைத் தந்தது.

அவன் மெதுவோட்டம் தினமும் செய்யும் பழக்கமுடையவன். அன்று லேசான மழை. அதைப் பொருட்படுத்தாமல் மெதுவொட்டம் சென்று வீடு திரும்பியபோது சாக்கடையத் தாண்டியுள்ளான். வழுக்கி விழுந்து சுவற்றில் தலை பலமாக அடிபட்டு விழுந்தவன் மீண்டும் உயிரோடு எழுந்திருக்கவில்லை!

( முடிந்தது )

Series Navigationகுழியில் விழுந்த யானைதூக்கமின்மை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    ஷாலி says:

    டாக்டர்.ஜான்சன் ஸார்! உங்கள் தீபாவளி நினைவு கட்டுரையில் நினைவில் நிற்பது நீங்களுமல்ல,உங்கள் நண்பருமல்ல.புது வெளிச்சம் பாய்ச்சிய கவிஞர்.முருகடியான் அவர்களின் வாழ்த்துக் கவிதைதான்.சரசரவென மழை பெய்வது போல் அற்புதமான பொழிவு.மனதிற்கு நிறைவு.வாழ்த்துக்கள்!

    நெருப்புக் குடைக்கீழ் நெளியுங் கோள்கள்
    உருப்பட ஒழுங்காய் உருட்டிடும் அவனை
    நெஞ்சில் நிறுத்தி நெடுங்கதை செய்தார்
    அஞ்சுதற் கஞ்சும் அறிவொளி ” ஜான்சன் ”

  2. Avatar
    Dr.G.Johnson says:

    திரு ஷாலி அவர்களே, சரியாகவே சொல்லியுள்ளீர்கள். தங்களின் கணிப்பு முற்றிலும் உண்மை. கவிஞர் முருகடியானின் கவிதை வரிகளை அனைவரும் காணவேண்டும் என்றுதான் அதற்கு கதையைவிட அதிக முக்கியத்துவம் தந்து முழுமையாக இணைத்திருந்தேன். அதை அப்படியே வெளியிட்ட திண்ணை ஆசிரியர் குழுவினருக்கும் , கவிதையை இரசித்து பாராட்டியுள்ள தங்களுக்கும் நன்றி..டாக்டர் ஜி.ஜான்சன் .

  3. Avatar
    வீ.தமிழ்மறையான் says:

    எனது முகநூல் ‘ பாட்டாளி பக்கம் ‘அல்லது Thamizhmaraiyan Veerasamy என்றும் தொடர்பு கொள்ளவும்.உங்களின் நூல்வெளியீட்டு விழாவுக்கு நாணும் வந்தேன்.பாரதிதாசன் பள்ளியின் படம் இருந்தால் தெரியப்படுத்தவும். உங்களுக்கு facebook என்னும் முகநூல் இருந்தால் தெரியபடுத்துக.நன்றி.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு. வீ. தமிழ்மறையான் அவர்களுக்கு வணக்கம் . உங்களின் பின்னூட்டம் கண்டு வியந்துபோனேன்! அந்த நூல் வெளியீட்டில் தாங்கள் இருந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சிங்கை வந்தால் சந்திக்க ஆவல்! என்னிடம் பாரதிதாசன் பள்ளியின் படங்கள் இல்லை. Odin Square பள்ளி மாறியதும் அதில் பாஞ்சாங் கணேசனுடன் எடுத்த படம் உள்ளது. ஆனால் தேட வேண்டும். அத்தாப்பு பள்ளியின் படம் இல்லை. நீங்கள் ஹென்டர்சன் மலையில் இருந்தவரா? அந்த பள்ளியில் பயின்றவரா? என் Email: drgjohnsonn@gmail.com

    facebook : Dr. G .Johnson என்று பார்த்தாலே போதும்.

    திண்ணை மூலம் இவ்வாறு நாம் கண்டுகொண்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறென். நன்றி.

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

    /////அவன் மெதுவோட்டம் தினமும் செய்யும் பழக்க முடையவன். அன்று லேசான மழை. அதைப் பொருட் படுத்தாமல் மெதுவோட்டம் சென்று வீடு திரும்பிய போது சாக்கடையத் தாண்டி யுள்ளான். வழுக்கி விழுந்து சுவற்றில் தலை பலமாக அடிபட்டு விழுந்தவன் மீண்டும் உயிரோடு எழுந்திருக்கவில்லை! ///

    இதுதான் கதையின் உச்ச நிகழ்ச்சி, உள்ளத்தைக் கீறும் துக்க நிகழ்ச்சி.

    நெருநல் உளனொருவன் இன்றிலை என்னும்
    பெருமை உடைத்திவ் வுலகு.

    என்று சொல்கிறார் வள்ள்ளுவர்.

    ////மாயக் குயவன் கொடுத்த உடம்பை
    காயப் படாமல் காப்பது எப்படி? ///

    இந்த சாவுப் புதிருக்குக் கவிஞர் முருகடியான் அவர்களே சித்தர் போல் முத்திரை வைக்கிறார்.

    நல்ல நிகழ்ச்சி முடிவில் ஓர் துக்க அதிர்ச்சியா ?

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *