துணைவியின் இறுதிப் பயணம் – 13

This entry is part 5 of 7 in the series 17 பெப்ருவரி 2019

சி. ஜெயபாரதன்கனடா

 

என் இழப்பை நினைஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

 

++++++++++++++

[41]

மீளா புரிக்கு !

என்னுள்ளத்தின் சுவர்களில்

ஒவ்வோர் அறையிலும்

நான் காண விழைவது

துணைவி படம் ஒன்றைத்தான் !

நான் கேட்க

விரும்புவது துணைவி

இனிய குரல்

ஒன்றைத் தான் !

ஓவ்வோர் அறைத் தளத்திலும்

என் காதில்

விழ வேண்டுவது

துணைவி தடவைப்பு

எதிரொலி

ஒன்றைத்தான் !

ஒவ்வோர் சுவர்ப் படத்திலும்

அவளது கண்கள்

உற்று நோக்க வேண்டுவது

எனது கண்களைத் தான் !

எண்ணற்ற  அவளது

படங்களைத் தேடி எடுத்து

பலகையில் ஒட்டிப்

பலர் பார்க்க வைத்தேன்,

ஈமச் சடங்கிலே !

யாரை நான் இழந்தேன்  என்று

ஊராரும், உற்றாரும்

பார்க்க வேண்டும் அன்று !

உடலையும் உயிரையும்

பிடித்து வைக்க முடிய வில்லை !

படங்களை யாவது

தினம், தினம்

பார்த்துப் பார்த்து

துணைவியை நினைக்கலாம் !

திரைப் படங்களில் அவள்

உயிரோடு

நடமாடி இருந்ததைக்

காணலாம்

மீண்டும், மீண்டும் !

என்னை விட்டுத் துணைவி

பிரிந்து விட்டாள்

நிரந்தரமாய் !

எனது இல்லத்தில் இனிமேல்

வாழத் தேவை யில்லை

என்று ஆயுள்

அத்தமனம் ஆனது !

ஒருபோக்குப் பாதையில்

திரும்பிப் பாராது,

புலம் பெயர்ந்து விட்டாள்

மீளா புரிக்கு !

++++++++++++++++

[42]

உயிரா ?  உடலா ?

உயிர் என்னும் மாய விசை

இல்லையேல்,

உடம்பெனும் யந்திரம்

ஓடாது இப்புவியில் !

உடம்பு என்றோர்

பம்பரம் இல்லை யெனின்

உயிருக்கு வேலை

உண்டோ ?

தனித்து வாழ முடியாத

இரண்டும்

பிணைந்து வாழ வேண்டும்,

பிறப்புருவில்.

அல்லது

முறிந்து வீழ வேண்டும்,

என்பது ஊழ்விதி !

முதன் முதல்

உயிர்  நீங்க வில்லை

துணைவிக்கு !

முறிந்து,

முடங்கியது முதலில்

உடம்பு !

உயிருக்கு ஆயுள் நீட்சி

இருப்பினும்

நோயுற்ற கூண்டிலே

குடியிருக்க

முடிய வில்லை,

உயிர்ப் புறா  !

இறுதியிலே

பூரண

ஓய்வெடுத்தது உயிரும்

உடம்பும் !

+++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சிஜெயபாரதன்

+++++++++++++

Series Navigationசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்காதலர்தினக்கதை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *