தூதும், தூதுவிடும் பொருள்களும்

author
2
0 minutes, 16 seconds Read
This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

சு. முரளீதரன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழாய்வுத் துறை
தேசியக் கல்லூரி (தன்னாட்சி)
திருச்சி.01
முன்னுரை

தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திற்கு பிறகு தோன்றியவை சிற்றிலக்கியங்கள் ஆகும். இவை சங்க காலத்திலேயே முளைவிட்டு, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்லத் தழைத்து வளர்ச்சியுற்றன.

“குழுவி மருங்கினும் கிழவ தாகும்”
–     தொல் – பொருள் – புறத் – 1030

“ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப”
–         தொல் – பொருள் – புறத் – 1031

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”
–         தொல் – பொருள் – புறத் – 1037

என்பது தொல்காப்பியர் கூற்றாகும். பேரிலக்கிய மரபு காலப்போக்கில் மாற்றம் பெற்று தனிச்தனிச் சிற்றிலக்கியங்களாக, முறையே பிள்ளைதமிழ், உலா, ஆற்றுப்படை, தூது என இன்னும் பிற சிற்றிலக்கியமாக உருப்பெற்றன.

“விருந்தே தானும்
புகுவது கிளந்த யாப்பின் மேற்றே”
–    தொல் – பொருள் – 551

என்ற சூத்திரத்தில் வனப்பு எட்டனுள் ஒன்றான விருந்து என்பது காலத்துக்கேற்றவாறு பிறக்கவிருக்கும் புதுவகை இலக்கியங்களுள் அடங்கும். ‘விருந்து’ என்பது புலவர்கள் தாம் தாம் வேண்டியவாறு தனித்தும் தொடர்ந்தும் வரப் புதிதாகப் பாடப்படுவதை குறிக்கும்.

தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று தூது ஆகும். சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணங்கள் கூறும் பன்னிருப்பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப்பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் நூல்கள் தொண்ணூற்றாறு என வரையறை கூறவில்லை. தொண்ணூற்றாறு என்னும் வரையறைக்குட்பட்ட சிற்றிலக்கிணங்களுக்கே சில பாட்டியல் நூல்ளில் இலக்கணம் கூறப்படவில்லை. வரையறைக்குட்படாத பிற சிற்றிலக்கியங்களில் சிலவற்றிற்குச் சில பாட்டியல் நூல்களில் இலக்கணம் கூறப்பட்டிருக்கின்றது.

தூது
ஒருவர் தம் கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்புவதே தூதாகும். தூதினைப் புறத்தூது, அகத்தூது என இரண்டாகக் கூறலாம்.

அகத்தூது

தலைவன் தலைவியிடத்தே தூது அனுப்புதலும், தலைவி தலைவனிடத்தே தூது அனுப்புதலும் அகத்தூது எனலாம்.

புறத்தூது

அரசர்கள், பகைவரிடத்துத் தூது அனுப்புதலும், புலவர்கள் புரவலர்களிடத்துத் தூது அனுப்புவதும் உண்டு. அதனைப் புறத்தூது எனலாம்.

தொல்காப்பியத்தில் தூது

பிரிவு

தொல்காப்பியர் அகத்திணை இயலில், பாலை திணையில் பிரிவு பற்றி

“ஓதல் பகையே, தூது இவை பிரிவே”
–    தொல் – அகத்  25

என்கிறார்.

“அவற்றுள்

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”
–    தொல் – அகத்  26

ஓதல், பகை, தூது, என பிரிவு பற்றிக் கூறிவிட்டு அவை அந்தணர்க்கும் அரசருக்கும், உரியதாகும் என கூறுகின்றார்.

செய்தி அறிவிப்பவன் ஆணாக இருப்பின் தூதன், பெண்ணாக இருப்பின்  துதாள் என்று அழைப்பர்.

பிற பிரிவுகள்

ஓதல், பகை, தூது ஆகிய பிரிவுகளைப் போலப் பகை தணிவினைப் பிரிவு, சேந்தற்குற்றுழிப் பிரிவு, துணைவயிற் பிரிவு, நாடுவாவற் பிரிவு, அறப்புறங்காவற் பிரிவு, பொருள் வயிற்பிரிவு முதலான பிரிவுகளும் உள்ளன. இந்த பிரிவுகள் நிகழும் காலங்களில் பிரிந்திருக்கும் தலைமக்களுக்கு இடையே தூது நிகழும்.

வாயில்கள்

தலைவன் – தலைவியிடத்தும், தலைவி – தலைவனிடத்தும் தூதுவிடும் வழக்கம் மிகவும் தொன்மையான வழக்கம். இதை தொல்காப்பியர் வாயில்கள் என்று குறிப்பிடுகின்றார்.

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”
–     தொல் – கற்பியல் – 52

கற்புக்காலத்தில் தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் இவர்களை வாயில்கள் என தொல்காப்பியர் கூறுகின்றார்.

அகம்புகல் மரபின் வாயில்கள்

கற்புக் காலத்தில் ஊடல் தீர்க்கும் வாயில்கள் பன்னிருவரில் சிலர் சில வேளைகளில் இல்லத்தில் உட்புகுந்து தம் கருத்துக்களை ஏற்ற பெற்றியில் உரைக்கும் உரிமையைப் பெற்றோர் அகம்புகல் மரபின் வாயில்கள் ஆவார்கள். தொல்காப்பியர் அகம்புகும் உரிமையுடைய வாயில்கள் யார் யார் என்பது தெரிவுறுத்தப்பட்டவில்லை. எனினும் சூழ்நிலைக்குத் தக்க வாயில்கள் யார் வேண்டுமானாலும் இத்தகைய உரிமையைப் பெறுவார்கள் என்று கூறுகிறார்.

மனம் வேறுபட்டிருக்கும் இருவரிடையில் அவர்கள் மனக் குறைகளை நீக்கி இணைக்கும் பணியைச் செய்வோரே வாயில் என்ற பெயரால் சுட்டுகின்றார்.

“குற்றம் காட்டிய வாயில் பெட்பிவம்
பெட்ட வாயில் பெற்றிரவு வலியுறுப்பினும்”
–    தொல் – பொரு – நூ . 99
பரத்தை வாயில்

பரத்தமை காரணமாகத் தத்தம் தலைவியர்களுக்கு ஏற்பட்ட ஊடலைத் தீர்க்க வாயிலைவிடுக்கும் உரிமை நான்கு வகை வருணத்தார்க்கும் உரியது ஆகும். பரத்தமை காரணமாக ஏற்பட்ட ஊடலைத்  தீர்;க்கப்பயன்படும் வாயில் என்ற பெயரால் சுட்டப்படுகின்றது.

நம்பியகப் பொருளில் பிரிவுகள்

தொல்காப்பியம், அகத்திணையியலில் களவு, கற்பு ஆகிய இருவகைக் கைகோளுக்குமுரிய பிரிவு வகைகளைப் பொதுவகையாகச் சுட்டுகின்றது. பிற்காலத்தில் நாற்கவிராச நம்பி இப்பிரிவை களவுக்கும் கற்புக்கும் உரியனவாகத் தனித்தனியே கூறுகின்றார்.

“ஒருவழித் தனத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்வயிற் பிரிதலென் றிருவகைத்தாகும்”
–     நம்பி. அக . 39
எனக் களவுக்குரியதாகவும்

“பரத்தையிற் பிரித லோதற்குப் படர்தல்
அட்டகு காவலொடு தூதிற் ககறல்
உதவிக் கேகல் நிதியிற் றிகழ்தலென்
றுரைபெறு கற்பிற் பிரிவறு வகைத்தே”
–     நம்பி . அக . 62

எனக் கற்புக்குரியதாகவும் குறிப்பிடுகின்றார்.

இங்குத் தூதிற் பிரிவு கற்புக் காலத்தில் நிகழும் என்று நம்பி அகப்பொருள் கூறுகின்றது.

இறையனார் அகப்பொருளில் கற்புக்குரிய பிரிவு வகைகள் ஆறுவகை என்பதை,

‘ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்
றாங்கவ் வாறே யவ்வயிற் பிரிவே”
–    இறை. அகப் தூது. 35
என்று கூறுகின்றது.

தொல்காப்பியர் களவு, கற்பு எனும் இருவகைக் கைகோளுக்கும் உரிய பிரிவு வகைகளைப் பொதுநிலையில் சுட்டியிருந்தாலும், பிற்காலத்தில் இவை களவுக்கும், கற்புக்கும் எனத் தனித்தனியே வரையறுத்துக் கூறப்பட்ட வளர்ச்சி நிலையையும், தூதிற் பிரிவு கற்புக் காலத்துக்கேயுரியது என்ற கருத்தை பிற்கால இலக்கண நூல்கள் கூறுகின்றது.

தூது பிரிவு – கால எல்லை

“யாண்டின் தகமே” – எனத் தொல்காப்பியர் தூது பிரிவுக்குக் கூறிய கால எல்லை பற்றிய தொடருக்கு,

“அறுதிங்கள் – முத்திங்கள் எல்லாம் கொள்ளப்படும்”
–    தொல் – பொருள், இளம் . 147

என இளம்பூரணர் விளக்கம் கூறுகின்றார்.

“தூதிற் பிரிவும் துணைவயிற் பிரிவும்
பொருள்வயிற் பிரிவும் ஓர்யாண் டுடைய”
–    நம்பி – அக . 90

தொல்காப்பியருக்கு  பிறகு தூதிற் பிரிவுக்குரிய கால எல்லை ஓர் ஆண்டு முழுமையும் உரியது என கால எல்லை மாற்றம் பெற்றுள்ளது.

காமமிக்க கழிபடர் கிழவி

உயர்திணையேயன்றி அஃறிணையையும் தூது செல்லுமாறு வேண்டும் வழக்கம் தலைவன், தலைவி இடையே உண்டு. இது பெரும்பாலும் பிரிவுத்துன்பம் மிகுந்த நிலையில் ஏற்படும். தலைவர் பிரித்தவிடத்துப் பிரிவுத்துன்பம் அதிகமான நிலையில், தன் காதல் மிகுதியையும், ஆற்றாமையையும் அஃறிணைப் பொருள்களிடம் கூறித் தூது சென்றுவறுமாறு தலைவி வேண்டுவாள். இதை “காமமிக்க கழிபடர் கிளவி” என இலக்கண ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அஃறிணைப் பொருள்களை தூது அனுப்புவதை தொல்காப்பியர் வழுவமைதியாக கூறுகின்றார்.

“சொல்லா மரபின் அவற்றெடு கெழீஇச்
செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்”
–    தொல் – பொருள் – 2

சொல்லா மரபின  ஆவன – புள்ளும், மாவும், மரனும், கடலும், கானலும் முதலியனவும், செய்ய மரபாவன தூதாச் சேறலும், வருதலும், உளபோலக் கூறும் அவைபோல்வன பிறவும் என இளம்பூரணர் மேல் கூறிய நூற்பாக்கு விளக்கம் கூறியுள்ளார்.

ஒருவர் கூறுவனவற்றை அறிந்துணர்ந்த அவற்றிற்கேற்றபடி அஃறிணைப் பொருள்கள் நடக்கும் உணர்வு பெற்றவை அல்ல, அங்ஙனம் அவற்றை முன்னிலைப்படுத்தி உரைப்பது ஒரு மரபாக புலவர்கள் கொண்டு இருக்கின்றனர். ‘இலக்கியம் கண்டதற்கேற்ப இலக்கணம்’ படைப்பது இதன் மூலம் அறிய முடிகின்றது.

காமமிக்க கழிபடர் கிளவியின் பயன்

அஃறிணை பொருள்களை தூது விடுவதால் ஏற்படும் பயனை நம்பியகப் பொருள்

“நெஞ்சு நாணு நிறைசோ ரறிவும்
செஞ்சுடர்ப் பருதியுந் திங்களும் மாலையும்
புள்ளும் மாவும் புணரியுங் கானலும்
உள்ளுறுத் யன்றவு மொழிந்தவை பிறவும்
தன்சொற் கேட்குந போலவுந் தனக்கவை
இன்சொற் சொல்லுந போலவு மேவல்
செய்குந போலவுந் தேற்றுன போலவும்
மொய்குழற் கிழத்தி மொழிந்தாங் கமையும்
–    நம்பியகப் பொருள்  நூற் . 223

அஃறிணைப் பொருள், தான் கூறியது கேட்டு, தனக்கு ஆறுதல் கூறுதல் போலவும், தன் ஏவலைக் கேட்டு அதன்படி செய்தல் போலவும், தன்னைத் தேற்றுதல் போலவும் தலைவிக்குத் தோன்றுதலால் அவள் உள்ளத்தில் ஓர் ஆறுதல் உண்டாகிறது என நம்பியகப் பொருள் விளக்குகின்றது.

அகச்சார்புடைய புறத்தூது

பிரிவு வகைகள் பற்றிக் கூறிய தொல்காப்பியர் ஓதல், பகை, தூது, காவல், பொருள்தேடுதல், நாடு காவல், என ஆறு பிரிவு வகைகளில், பகைவேந்தனைச் சந்து செய்வதற்காகப் பிரியும் பகைவயிற் பிரிவும், பிறிதொரு மன்னரிடத்தில் தூது சொல்லிச் சந்து செய்வதற்காகச் செல்லும் தூதிற் பிரிவும் இப்பிரிவில் அடங்கும். இவை இரண்டும் புறத்தூதில் அடங்கும். ஆனால் பிரிதல் ஒழுகலாறு என்ற உரிப்பொருண்மை நோக்கில் அகத்திணையியலில் இப்பிரிவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு ஆகிய இரண்டும் பகை மன்னிரிடம் சென்று சந்து செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் புறப்பொருள் சார்புடையவனாகவும் விளங்குகின்றன. இவ்விரு பிரிவுகளும் உரிப்பொருள் நோக்கில் அகச் சார்புடையனவாகவும், சந்து செய்யும் நோக்கில் புறச் சார்பு உடையவனாகவும் திகழ்வதால் இவை இரண்டும் அகப்புறத்தூது என்று கூறப்படுகின்றது.

தூதிடையாடல்

மலைக்காலத்தில்  தலைவிக்கு நேரும் பிரிவாற்றாமைத் துயரைக் கண்ட தோழி, அவளை விடுத்துத் தலைவனிடம் தூதாகச் செல்லும் பொருண்மை பயந்த துறை தூதிரையாடல் என்பதாகும்.

“ஊழிமாலை உறுதுயர் நோக்கி
தோழி நீங்காத் தூதிடை யாடின்று”
–    பு.வெ.மாலை. பெருந்திணை நூ-3

துயரவற்கு உரைத்தல்

மாலைக்காலத்தில்  தலைவியின் துயர் பெறாத தோழி தலைவனிடம் தூதாகச் சென்று தலைவியின் துயரைக் கூறுதல் என்றும் பொருண்மையுடைய துறை “துயரவற்கு உரைத்தல்” எனப்படும்.

“மான்ற மாலை மயிலியல் வருத்தல்
தோன்றக் கூறித் துயரவற் குரைத்தன்று”
–    பு.வெ.மாலை. பெருந்திணை நூ-4
தூது இலக்கியங்களில் யாப்பு

தூது இலக்கியம் எவ்வகைப் பாடல்கள் அமைய வேண்டும் என்பதை இலக்கண விளக்கம், பிரபந்த மரபியல், ஆகிய பாட்டியல் நூல்கள் குறிப்பிட்டுள்ளது. இவ்விரு நூல்களுக்கு முன்னரும், பின்னரும் தூது இலக்கியங்கள் தோன்றியுள்ளன. தூது நூல்களில் முதல் நூலான 14-ம் நூற்றாண்டில் தோன்றிய முதல் தூது நூல் உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சு விடு தூது “கலிவெண்பா” யாப்பையே கொண்டு படைக்கப்பட்டுள்ளது.

கலிவெண்பா யாப்பு

தூது இலக்கணம், கலிப்பாவில் அமைதல் வேண்டும் என்பதை

“பயில் தரும்  கலிவெண்பா பாவினாலே
உயர்திணைப் பொருளையும், அஃறிணைப் பொருளையும்,
சந்தியின் விடுதல் முந்தறு தூது எனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே”
–    இ.விளக்கம் நூ .874

என்னும் பாடல் 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

“இருதிணை யுடன்அமை யயலை உரைத்து
தூது சொல விடுவது தூது இவை கலிவெண்
பாவினால் விரித்துப் பகர்(வது மரபே)”
–    பி மரபியல்

மேற்கூறிய இரண்டு நூல்களும் முதல் தூது நூலான உமாபதி சிவாச்சாரியாரின் “நெஞ்சுவிடு தூது”க்குப் பின்னர் எழுதப்பட்ட இலக்கண நூல்ளாகும். இவ்விரு இலக்கண நூல்களும், முன்னர் எழுந்த தூது இலக்கியங்களைக் கொண்டே, தூது இலக்கியங்களுக்கு  “கலிவெண்பா” யாப்பை வரையறுத்து உள்ளது.  “கலி வெண்பா” யாப்பிலேயே பெரும் பகுதியான தூது நூல்கள் இயற்றப்பட்டு;ள்ளன. மேலும் இரண்டு அடிகள் ஒரு கண்ணிகள் எனப்படும்.

பிறவகை யாப்பு

ஒரு சில புலவர்கள் கட்டளைக் கலித்துறையில் வண்டுவிடு தூது, அன்னம் விடு தூது அல்லி மரைக்காயரும், 20-ஆம் நூற்றாண்டில் கனகசபை புலவர் எழுதிய மேக தூதக்காரிகையும், நவநீதகிருஷ்ணதேவன் மீது பாடிய வசன விடு தூதும் கட்டளைக் கலித்துறை யாப்பில் இயற்றப்பட்டுள்ளது.

19-ஆம் நூற்றாண்டில் சரவண முத்துப்பிள்ளை தத்தை விடு தூதை வண்ணப்பாடல்களில் இயற்றியுள்ளார்.

19-ஆம் நூற்றாண்டில் “பிரபந்த தீபம்” என்னும் நூல்

“தூதின் இலக்கணம் சொல்லும் வகையே
ஆண்பால் பெண்பால் அவரவர் காதலை
பாணன் முதலாகப் பாவைய ரோடும்
கிள்ளை முதலாம் அஃறிணை யோடும்
தூது போவெனச் சொல்லுதல் ஆமே”

எனப் பொருள் அமைப்பு பற்றிச் சொல்லியுள்ளதே தவிர யாப்பு அமைப்பைப் பற்றி கூறவில்லை.

தூது பொருள்கள்

தூது சொல்லி விடுவதற்குரிய பொருள்கள் எவை என்பதை இரத்தினச் சுருக்கம்

“இயம்புகின்ற காலத்து எகினம்மயில் கிள்ளை
பயன்பெறும் மேகம்பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்
தூதுரைத்து வாங்கும் தொடை
– நூற் . 7
எனக் கூறுகின்றது.

இப்பாடலில் அன்னம், மயில், கிள்ளை, மேகம், நாகணவாயப்புள், தோழி, குயில், மனம், தென்றல், வண்டு, என்னும் பத்து தூது பொருள்கள் தூது விடுவதற்குத் உகந்தவை என்பதை இரத்தின சுருக்கம் கூறுகின்றது. இவையன்றி வேறு பல புதிய பொருட்களைத் தூது விடுத்ததாகப் பாடிய நூல்களும் காலப்போக்கில் தோன்றியுள்ளன.

“எகின மயில் கிள்ளை எழிலியொரு பூவை
சுகிகுயினெஞ் சார்தென்றல் வண்டு – தொகை பத்தை
வேறுவே றாய்ப்பிரித்து வித்தரித்து மாலைக்கொண்டன்
பூறிவா வென்றல் தூது”
–    பிர. திர.  நூ .30
என்று பிரபந்தத் திரட்டு கூறுகின்றது.

உயர்திணை தூது செல்பவர்கள்

தொல்காப்பியர் அகப்பொருள் நிலையில் தலைவி தலைவனிடமும், தலைவன் தலைவியிடமும் தூது விடுப்பார்.

‘தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப’
–     தொல் – கற்பியல் . 52
ஊடல் தீர்க்கும் பொருட்டு தூது செல்பவரை வாயில்கள் என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.

அஃறிணைத் தூதுப் பொருட்கள்

அஃறிணைத் தூதுப் பொருட்கள் சொல்லும் திறமுடையன அல்லவாயினும் அவற்றை விளித்துத் தூது விடுவது தலைவர் தலைவியர்க்கு உளவாகும் மனமயக்கமே ஆகும்.

“ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுதலிய நெறியால்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லி யாங்கு அமையும் என்மனார் புலவர்”

–    தொல். பொருள். செய்யுள். 201

அஃறிணைப் பொருள்களை விடுத்து தத்தம் எண்ணங்களைப் புலவர்கள் வெளிப்படுத்துதலை, ஓர் இலக்கிய மரபாகவே கொண்டுள்ளனர்.

தூது நூல்களில் பிற தூதுப் பொருள்கள்

நூலாசிரியர் தூது விடுவதற்குரிய ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து அதன் சிறப்பை கூறும்போது, தான் தூது விடுவதற்கு ஏன் பிறபொருளைத் தேர்ந்தெடுக்கவில்லை என கூறும்போது பிற தூது விடுக்கத்தக்க பிற பொருள்களையும் அறிய முடிகின்றது.

“ ஈடுபட்ட வெள்ளை யெகினத்தைத்  தூது விட்டால்
சூடுபட் டார்துணிந்து சொல்வாரோ ……………….

–    அழகர். கிள்.  வி. தூது. கண்ணி.199

தூது விடுத்துள்ள பொருட்கள்

உயர்திணை

1.     விறலி,     2.மங்கை         3.பாங்கி         4.மதங்கி
5.    தாதி     6.தோழி         7.நங்கை         8.நவநீதகிருஷ்ணன்
9.    மாது      10.பாவை        11.பிள்ளை      12.புலந்திரன்
13.    புலவர்     14.பூவை        15.பெண்டிர்        16.மோகன வல்லி
17.    வானவன்  18.நவீனமாது

அஃறிணை

1.  விலங்கு
1.    கழுதை        2. குக்கல் (நாய்)        3. எலி        4. மான்

2.    பறவை
1.    கிள்ளை        2.வண்டு        3.காக்கை        4.கிளி
5.    குயில்            6.குருவி        7.தத்தை        8.மயில்
9.    கருடன்        10.பொறிமயில்    11.அன்றில்         12.புறா
13.    கழுகு

3.    மணம்
1.    குவளை        2.சவ்வாது        3.சந்தனம்        4.மாலை
5.    மலர்            6.இருவாட்சி        7.பாரிசாதம்

4.    உணவுபொருள்
1.    அன்னம்        2.நெல்        3.வெற்றிலை    4.பாங்கு

5.    அறிவியல் பொருள்
1.    மின்சாரத் தந்தி        2.ராக்கெட்        3.ரயில்

6.    குணம்
1.    அன்பு            2.காதல்        3.நெஞ்சு        4.சிரிப்பு

7.    பிற
1.    பணம்            2.பொடி        3.மேகம்        4.துகில்
5.    கொண்டல்        6.செருப்பு        7.கொன்றை        8.பொன்
9.    வனச            10.பஞ்சவர்ணம்    11.படுக்கை        12.பள்ளியறை
13.    தென்றல்        14.வசனம்        15.வெண்ணிலா    16.சங்கு
17.    நீதி            18.முகில்        19.மறலி        20.நன்னூல்
21.    பழையது        22.பிச்சி        23.பிரபந்தம்        24.தமிழ்
25.    வளி            26.விளக்கு

முடிவுரை

தொல்காப்பியர் களவு, கற்பு எனும் இரு வகைக் கைகோளுக்கும் உரிய பிரிவு வகைகளைப் பொது நிலையில் சுட்டியிருப்பினும் பிற்காலத்தில் இவை களவுக்கும், கற்புக்கும் எனத் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் தூதிற்பிரிவு என்பதைப் பொதுவகையில் சுட்டியிருப்பினும், அது கற்புக் காலத்திற்கே பெரும்பான்மையும் உரியது என்பதை அறிய முடிகின்றது.

ஊடல் காலத்தில் மனம் வேறுபட்டிருக்கும் தலைமக்கள் இணைக்கும் பணியில் ஈடுபடுவோராகிய வாயில்களைத் தூதாகக் கொள்ளலாம்.

உயர்திணைத்தூது பொருள்களை விட அஃறிணைத் தூது பொருள்களே அதிகம் இயற்றப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

தூது இலக்கியம் கலிவெண்பா மற்றும் பிற வெண்பாவில் பாடப்பட்டுள்ளது அறிய முடிகின்றது.

இலக்கியம் தோன்றிய பிறகு தான் இலக்கணம் தோன்றியது என்பதை அறிய முடிகின்றது.

Series Navigationதாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்கமலா இந்திரஜித் கதைகள்நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைமருமகளின் மர்மம் – 12நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஷாலி says:

    தூது கட்டுரையாசிரியர் ஏராளமான பறவைகளை தூது செல்ல அடையாளம் காட்டுகிறார்.ஆனால் சங்க கால பாட்டில் இடம்பெற்ற பனம்பழ நாரை எப்படி விடுபட்டது. புலவரின் சொந்த ஊர் “சோழநாடு சோறுடைத்து”எனும் கும்பகோணம் பக்கத்தில் உள்ள சத்திமுற்றம் எனும் சிற்றூர்.வறுமையை போக்க பாண்டிய மன்னனை பாடிப் பரிசு பெற மதுரைக்கு செல்கிறார்.அங்கு அவர் படும் பாடு பாட்டாக வருகிறது.

    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

    நீயும் உன் மனைவியும் தென்திசை குமரியாடி
    வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச்
    சத்தி முத்த வாவியுட் தங்கி

    நனை சுவர் கூரை கனை குரற் பல்லி
    பாடு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதி கூடலில்

    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்திக்
    காலது கொண்டு மேலது தழீஇ
    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே!
    என்பதாகும். இதன் பொருள்:-

    பனங்கிழங்கை பிளந்தார் போல் அலகு கொண்ட நாரைக் கூட்டங்களே.. நாரைக் கூட்டங்களே.. நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களைத்து விட்டு வடக்கு திசை வழியே செல்லும் போது ‘சத்திமுத்தம்’ என்னும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள்.
    அந்த சமயம் பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என மழை பெய்து நனைந்து போன சுவர் இருக்கும் கூரை வீட்டில், தலைவன் வரும் சேதியை அறிவிக்கும் முகமாக வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள்.
    மன்னனைப் பார்க்க வந்த நேரம் இருண்டு போனதால், இந்த மதுரையம்பதியில் ஓர் மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை கால்ககளை கட்டிக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனை கண்டேன் என்று கூறுவாயா?
    என்று நாரை விடு தூதாக அமைந்துள்ளது இந்த புலவரின் செய்யுள்.

    இந்தப்பாடலில் மிகச்சிறப்பான வரிகள்,

    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்திக்
    காலது கொண்டு மேலது தழிஈ……..

  2. Avatar
    ஷாலி says:

    பொதுவாக தூது அனுப்புவார்கள் தங்கள் பெயரைச் சொல்லித்தான் தூது அனுப்புவார்கள்.ஆனால் இங்கே ஒரு இளம் பெண் வித்தியாசமாக பேரை சொல்லவேண்டாம் ஊரைச் சொல்லவேண்டாம் என்று கூறி தூது அனுப்புகிறாள்.பயபுள்ளே எப்படியும் வந்து தூக்கிட்டு போயிருவான் என்ற நம்பிக்கை அவளுக்கு.
    பெரிய இடத்தை காதலிக்கிறாள் தலைவி.மன்னன் பாண்டியனை காதலிக்காதே! இது கதைக்கு ஆகாது என்று தடுக்கிறாள் அன்னை. இதை தன் தோழிஇடம் கூறி தூது அனுப்புகிறாள்.
    இரக்கம் இல்லாத யானையைக் கொண்ட தமிழர் தலைவன், அந்தப் பாண்டியன், என் காதலன், அவனிடம் எனக்காகத் தூது போவாயா?
    ஆனால் ஒரு நிபந்தனை, அவனிடம் என்னைப் பற்றி எதுவும் சொல்லிவிடாதே, என் பெயரைச் சொல்லிவிடாதே, என் ஊரைச் சொல்லிவிடாதே, என்னுடைய மனம் கவர்ந்தவனாகிய அவனைச் சந்திக்கமுடியாதபடி என் தாய் என்னை வீட்டுக்குள் அடைத்துவைத்துத் துன்புறுத்துவதையும் சொல்லிவிடாதே, அவனை நினைத்து இங்கே ஒருத்தி தூங்காமல் தவித்துக்கொண்டிருக்கிறாள் என்பதைமட்டும் சொல்லிவிட்டு வா, அது போதும்!

    என்னை உரையல், என் பேர் உரையல், ஊர் உரையல்,
    அன்னையும் இன்னள் என உரையல், பின்னையும்
    தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என்
    கண் படா ஆறே உரை
    நூல்: முத்தொள்ளாயிரம் (#82)

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *