தொடுவானம் 10. தினம் ஒரு குறள்

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

 

           ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் ஓர் இலட்சியத் தமிழ் மாணவனாகத் திகழ வேண்டும் என்ற வாஞ்சையுடன் செயல்படலானேன்.
           இப்படி ஆக வேண்டுமெனில் நிறைய தமிழ் நூல்களைப் படித்தாக வேண்டும்.
          தமிழின் இனிமை என்னை மயக்கியது. அதோடு தமிழில் எழுதுவது மிகவும் பிடித்தது!
          திருக்குறள், புறநானூறு, அகநானூறு ஆ கியவற்றை வாங்கினேன். அவற்றில் திருக்குறள் மிகவும் கவர்ந்தது.ஒவ்வொரு குறளும் சுருக்கமாக இரண்டே வரிகளில் ஏழு வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது என்னை வெகுவாகக் கவர்ந்தது.தினம் ஒரு குறளை மனப்பாடம் செய்வது கூட எளிமையெனத் தோன்றியது.
          டாக்டர் மு.வரதராசனின் தெளிவுரை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
          திருக்குறளின் கடவுள் வாழ்த்து என்னுடைய பகுத்தறிவு சிந்தைக்கு ஏற்புடையதாக் அமைந்திருந்தது.
          அந்தப் பத்து குறள்களிலும் வள்ளுவர் எந்தக் கடவுளின் பெயரையும் குறிப்பிடாதது அதற்குக் காரணமாகும்.
          அதற்கு மாறாக, ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதவன், அற  ஆழி அந்தணன், எண்குணத்தான், இறைவன், என்று பல்வேறு சிறப்புப் பெயர்களில் வள்ளுவர் கடவுளை அழைத்துள்ளார்.
          ” ஒன்றே குலம், ஒருவனே தேவன். ” எனும் பகுத்தறிவு கொள்கைக்கேற்ப வள்ளுவரும் உலக மக்களுக்கு பொதுவான ஒரு கடவுளையே தம்முடைய கடவுள் வாழ்த்தில் போற்றியுள்ளது புதுமையானது!
          இவ்வாறு எழுத்துத் துறையில் ஓரளவு சிறந்து விளங்கிய நான், என்னுடைய இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள இலக்கிய நிகழ்சிகளிலும் பங்கு கொள்ள ஆவல் கொண்டேன். குறிப்பாக மேடைச் சொற்பொழிவுகள் கேட்க விரும்பினேன்.
          அதற்கு ஏற்றாற்போல் அப்போது தமிழகத்திலிருந்து திருக்குறள் முனுசாமி அவர்கள் சிங்கப்பூருக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவருக்கு நல்ல விளம்பரமும் வரவேற்பும் தந்தார் தமிழவேள்.
          அவர் திருக்குறளின் 1330 குறள்களையும் மனனம் செய்தவராம். அவரின் திருக்குறள் சொற்பொழிவுகள் இனிமையாகவும், நகைச்சுவை கலந்த குட்டிக் கதைகள் நிறைந்தனவாகவும் எளிய நடையில் இருக்குமாம்.
          நல்ல வேளையாக அப்பாவுக்கும் அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்கே வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் நானும் அவருடன் அனேகமாக எல்லா சொற்பொழிவுகளையும் கேட்டு இரசிக்க முடிந்தது!
          ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில், ” இறைவன் எங்கே ” எனும் தலைப்பில் சொற்பொழிவில் அவர் கூறிய ஒரு நகைச்சுவைத் துணுக்கு அந்த மண்டபத்தில் நிறைந்திருந்தவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
           ஒரு தகப்பன் தன்னுடைய  மகனிடம்,  கடவுள் உன்முன் தோன்றினால் நீ என்ன கேட்பாய் என்றாராம். மகன் பணம் கேட்பேன் என்றானாம். அதற்கு அவர், ‘ அட முட்டாளே! கடவுளே நேரில் வந்தால் பணம் தானா கேட்பாய்? ‘என்றாராம்.
          ” நீங்கள் என்ன கேட்பீர்கள் அப்பா? ” என்றானாம் அந்த பையன்.
          ” நான்  அறிவு கேட்பேன் . ” இது அப்பாவின் பதில்.
          ” எனக்குப்  பணம் தேவைப் படுகிறது. நான் அதைக் கேட்பேன். உங்களுக்கு அறிவு தேவைப் படுகிறது. நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். ” என்று சொன்னானாம் அந்தப பையன்!
          ஒவ்வொரு குறள்  பற்றி அவர் விளக்கும்போது இதுபோன்ற குட்டிக் கதைகளை நகைச்சவை ததும்பக் கூறி சபையோரின் ஆவலைத் தூண்டுவார்.
         அவருடைய சொற்பொழிவுகள் கேட்க சிங்கப்பூர் தமிழர்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.
          எனக்கு அதன்பின் திருக்குறளை மனனம் செய்யும் ஆர்வமும், அதன் பொருள் உணர்ந்து அதன் வழி நடக்க வேண்டும் என்ற உறுதியும் அதிகமாயிற்று.
          அப்போதுதான் மணியம் இலக்கிய மன்றம் முதன் முதலாக அகில சிங்கப்பூர் அளவில் திருக்குறள் மனனப் போட்டியும் பேச்சுப் போட்டியும்  நடைபெறும் என்று தமிழ் முரசில் விளம்பரம் செய்திருந்தனர்.
          மனனப் போட்டியின் விதி முறைகளை நான் படித்தபோது, போட்டி புதுமையானதும் கடுமையானதுமாகத் தோன்றியது.
          மொத்தம் 200 குறள்கள் மனனம் செய்தாக வேண்டும். குறள் எண், அதன் அதிகார எண், குறள் ஆகியவை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீதிபதிகள் அதிகார எண்ணையும்  குறளின் எண்ணையும் சொன்னவுடன் நான் குறளைச் சொல்லவேண்டும். அதுபோன்று அவர்கள் அதிகார எண்ணையும்  குறள் எண்ணையும்  கூறினால் நான் உடன் குறளைக் கூற வேண்டும்!
          இவ்வாறு அறத்துப்பாலில் 70 குறள்கள், பொருட்பாலில் 70 குறள்கள், காமத்துப்பாலில் 60 குறள்கள் மனனம் செய்தாக வேண்டும்.
        வழக்கம்போல் கோவிந்தசாமியும் பன்னீர்செல்வமும் நானும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால் நான் மட்டும் திருக்குறள் மனனப் போட்டியிலும் கலந்து கொள்ள விரும்பினேன்.
          முன்பே நான் திருக்குறளை  தினம் ஒன்று என்று மனப்பாடம் செய்து வந்ததால் நான் பொருட்பால், காமத்துப்பால் மனனம் செய்தால் போதுமானதாகத் தெரிந்தது. சற்று முயற்சி செய்து அதிகார எண்களை மட்டும் வரிசையாக நினைவில் வைத்துக்கொண்டால், குறளை  மனதுக்குள் எண்ணி அதன் எண்ணைக் கூறிவிடலாம்.
         நாள் ஒன்றுக்கு பத்து குறள்கள் மனனம் செய்தேன்.  போட்டி ஹெவ்லொக் ரோடு தமிழ்ப் பள்ளியில்,செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி மாலை நடைபெற்றது. நான் இரத்தினசாமி மாமாவின் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு சென்றேன்.
          அங்கு வந்திருந்தவர்களில் பலரும் பேச்சுப் போட்டிக்குதான் பெயர் தந்திருந்தனர். திருக்குறள் மனனப் போட்டிக்கு யாரும் வந்ததாகத் தெரியவில்லை! அது எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது! நான்மட்டும் என் பெயரை பதிவு செய்து கொண்டேன். போட்டி  ஏற்பாட்டாளர்கள் வேறு யாரும் வருவார்களா என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.
          நல்ல வேளையாக இறுதி நேரத்தில் ஒருவர் வந்து சேர்ந்தார்! அவர் மட்டும் அப்படி வரவில்லையெனில் ஒரு வேளை மனனப் போட்டி நடைபெறாமல் கூட போயிருக்கலாம்!
          நடுவராகச செயல்பட்ட திரு. முருகு சீனிவாசன் , போட்டி கடினமானது என்பதால் அதிகமானோர் கலந்துகொள்ளவில்லை என்றார். அதோடு, மன தைரியத்தோடு கலந்து கொள்ள வந்துள்ள எங்கள் இருவரையும் வாழ்த்தி வரவேற்பதாகவும் கூறினார்.
          நான் ஆறு கேள்விகளில் மூன்றுக்கு சரியான விடை சொன்னேன். எனது ஒரே போட்டியாளர் நான்கு கேள்விகளுக்கு சரியான விடை கூறி முதல் பரிசை வென்றார். எனக்கு இரண்டாவது பரிசு. இருந்தாலும் அது எனக்குள் பெரும் மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. சிங்கப்பூரிலேயே  இருநூறு குறள்களை மனனம் செய்துள்ளவர்கள் நாங்கள் இருவர்தான்!
           ,அங்கேயே, அப்போதே ஒரு முடிவு செய்தேன் –
திருக்குறள் முழுவதையுமே மனனம் செய்து விடவேண்டும் என்று!
          நான் திருக்குறளை மனனம் செய்வதை அப்பா ஏனோ தடை செய்யவில்லை.வள்ளுவர் பற்றி அவரும் ஓரளவு தெரிந்து வைத்திருந்தார். தமிழ் ஆசிரியர் அல்லவா அவர்!
          1960 ஆம் ஆண்டில், இரண்டாம் படிவம் படித்தபோது எனக்கு வயது பதிநான்குதான்! அந்த இளம் வயதிலேயே அத்தனை திறமைகளும் பெற்றவனாக எங்கள் வட்டாரத்தில் சிறந்த மாணவனாகவும், இலட்சிய இளைஞனாகவும் திகழ்ந்தேன்!
          அதுவரை நான் எந்தக் கடவுள் மீதும் பற்றில்லாதவனாக இருந்தேன். ஏறக்குறைய ஒரு நாத்திகனாகவே  செயல்பட்டேன்.திராவிட இயக்கத்தின் தாக்கம் அதற்கு முக்கிய காரணம்  எனலாம்..
         என்னுடைய வழிகாட்டியாகவும்,  இலட்சிய நாயகராகவும், தலைவராகவும் அறிஞர் அண்ணா திகழ்ந்தார்.
          நான் வாழ்ந்த அப்பகுதியில் என்னுடைய உறவினர்கள் சிலரும் வசித்தனர். அவர்கள் அனைவருமே தமிழ் நாட்டில் சிதம்பரம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
          செல்லப்பெருமாள், கந்தசாமி , இரத்தினசாமி ஆகியோர் எனக்கு மாமா  முறையினர். சிதம்பரம் என் சித்தப்பா.
          மோசஸ் வில்லியம் இன்னொரு சித்தப்பா.அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் அருகிலிருந்த பிரிட்டிஷ் இராணுவ முகாமில் பணி  புரிந்தார். அவர் சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசியப் படையில் இருந்தவர்.
          சாலமன் தாத்தா உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர். அவருடைய மகன் சார்லஸ்   என் வயதுடையவனாக இருந்தாலும் எனக்கு சித்தப்பா முறை.
          மலாயா லாபீசில் என்னுடைய பெரியப்பா குடும்பம் இருந்தது.
அப்பாவின் உடன் பிறந்தவர்  ஜோகூர் லாபீஸ் தோ.ட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியராகப் பணியில் இருந்தார்.     பெரியம்மாவும் தமிழ் ஆசிரியை.
          அதே தோட்டத்தில் சாமுவேல் தாத்தாவும் கிரேஸ் கமலா அக்காவும் வசித்தனர். அக்காவும் தமிழ் ஆசிரியைதான்.
          ஒவ்வொரு வருட இறுதியில் பள்ளிகளின் நீண்ட விடுமுறையில் நாங்கள் லாபீஸ் சென்று விடுவோம்.இரண்டு வாரங்கள் அங்கு தோட்டப் புறத்தில் தங்குவது பசுமையான அனுபவம்.
          பெரும்பாலும் தஞ்சோங் பாகாரிலிருந்து புகைவண்டி மூலம் நாங்கள் பயணம் செய்வோம்.
         அப்போதெல்லாம் சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குள் நுழைய கடப்பிதழ் தேவை இல்லை.
          மலாயாவையும் சிங்கப்பூரை ஆங்கிலேயர் ஆண்ட காலமது.
          ஜோகூர் பாரு, கெம்பாஸ், கூலாய், லயாங் லயாங், குளுவாங், ச்சாமிக் , பாலோ, பெக்கோ வழியாக சென்றடைய  பல மணி நேரங்களாகும். நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவி இயந்திரத்தால் இயங்கிய புகைவண்டிகள் அவை.             சிங்கப்பூருக்கும் மலாயாவுக்குமிடையே நிறையே வேறுபாடுகளைக் கண்டேன்.அவற்றில் மிகவும் முக்கியமானது மலாயாவின் இயற்கை அழகு!

வழி நெடுக இரு மருங்கிலும் வரிசை வரிசையாக ஓங்கி வளர்ந்த இரப்பர் மரங்களும், செம்பனை மரங்களும், தூரத்தில் தெரியும் உயர்ந்த மலைகள் வரைத் தெரியும் பச்சைப் பசெலெனும் வனப்பும் கண்களுக்கு மட்டுமல்ல, சிந்தைக்கும் விருந்தாகும்! இடையிடையே சில பெரிய நதிகளையும் கடந்து செல்வோம்.

எப்படித்தான் இந்தக் காட்டிலும் மேட்டிலும் கால் கடுக்க நடந்து சென்று இந்த மரங்களை நாட்டிருப்பாரோ நம்முடைய தோட்டத்து தமிழ் மக்கள் என்று வியந்தேன்!

எப்படி ஒரு மரத்துக்கும் அடுத்த மரத்துக்கும் இப்படி ஒரே அளவிலான இடைவெளி விட்டு நாட்டார்களோ என்றும் யோசிப்பேன்.

குறிப்பாக, வரிசை வரிசையாக உயர்ந்து ஆடாமல் அசையாமல் நிற்கும் செம்பனை மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவை இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்பதையே நினைவூட்டும். அவை மரங்களாக இருந்தாலும் அவற்றுக்கும் உயிர் உள்ளதுதானே எனவும் எண்ணுவேன்.

புகைவண்டி லாபீஸ் அடைந்ததும் அங்கே பெரியப்பா வாடகை வண்டியுடன் காத்திருப்பார். அங்கிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த ச்சாஆ செல்வோம். அங்கு சீனர் உணவகத்தில் தேநீர் அருந்திய பின் ஒரு சில சாமான்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடருவோம்.

ஜோகூர் லாபீஸ் தோட்டத்தின் செம்மண் சாலையில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு டிவிஷன் மூன்றுக்குச் செல்வோம்.

அவருடைய வீடு மரத்திலானது. மரப்படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.

பெரியப்பாவின் பெயர் எசேக்கியேல். அப்போது அவர் ஜோகூர் லாபீஸ் தோட்டத்திலுள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *