தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.

This entry is part 7 of 16 in the series 6 மார்ச் 2016
MGR speaking

தேர்தல் சூடு பிடித்தது.
இதற்கு முன் நடந்த தேர்தல்களைவிட இது முற்றிலும் மாறுபட்டது என்பது கண்கூடு. இப்போது மக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவல்லது என்பதை மக்கள் உணரலாயினர்.
பட்டணங்களில் வாழும் படித்தவர் முதல் பட்டித்  தொட்டிகளில் வாழும் பாமரர்கள்  வரை அரசியலில் அதிகம் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர்.இதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம். மேடைப் பேச்சுகளுடன் அது நின்றுவிடவில்லை. மக்களைப் பெரிதும் கவர்ந்திடும் திரைப்படங்களும் முக்கிய காரணம் எனலாம்.
நாடு முழுதும் உள்ள மக்களை எளிதில் சென்றடையும் தொலைத் தொடர்புச் சாதனமாக திரைப்படங்கள் அமைந்து விட்டதை திராவிட முன்னேற்றக் கழகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. அதற்கேற்றாற்போல் அண்ணாவும் கலைஞரும் திரைப்பட கதை வசனம் எழுதும் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அதுவரை பக்திப் படங்களையே பார்த்துப் பழகிய தமிழக மக்கள் புதிதாக சமூகப் படங்களைப் பார்க்கலாயினர். எம்.கே. தியாகராஜ பாகவதர்,  பி.யு.சின்னப்பா, கிட்டப்பா போன்ற கதாநாயகர்களைப் பார்த்து இரசித்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை கதாநாயகர்களாகக் கண்டு இரசித்தனர். அதோடு கவிஞர் கண்ணதாசனின் பாடல்களைகளைக் கேட்டு .மகிழ்ந்தனர். நகைச்சுவைக்கு என்.எஸ்.கிருஷ்ணன், டி.எ .மதுரம், மனோரமா, சந்திரபாபு, நாகேஷ் இருந்தனர். மந்திரிக்குமாரி, மலைக்கள்ளன், பராசக்தி, வேலைக்காரி, ஓர் இரவு, மனோகரா, தாய் சொல்லைத் தட்டாதே, தாய்க்குப் பின் தாரம், தொழலாளி, அலிபாபாவும் நாற்பது ,திருடர்களும்,  குலேபகாவலி, நாடோடி மன்னன், காஞ்சித் தலைவன், பூம்புகார் போன்ற வெற்றிப்  படங்களை வெளியிட்டு அவற்றில் முழுக்க முழுக்க பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டனர்! இதில் நடிக்கும் கதாநாயகர்கள் எப்போதுமே நல்லவர்களாக, ஏழைகளுக்கு உதவுபவர்களாக, நீதியை நிலைநாட்டப் போராடி வெற்றி பெறுபவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். அதைக் காணும் மக்கள் அது வெறும் நடிப்பு என்பதை மறந்து, உண்மையில் கதாநாயகர்கள் அப்படிப்பட்டவர்களே என்று நம்பலாயினர்.

நடிகர்களில் எம்.ஜி. ஆர். புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, பொன்மனச் செம்மலாகப் போற்றப்பட்டார். சண்டை காட்சிகளில்  அவர் குத்துக் சண்டை, சிலம்பம், வாள் சண்டை ஆகியவற்றில் மிகவும் இயல்பாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர் என்பதால் அவரை உண்மையில் பெரிய வீரனாகவும் எண்ணிப் போற்றினர். அவர் மக்கள் நெஞ்சங்களில் உன்னதமான இடத்தைப் பெற்றார். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.  காஞ்சித் தலைவன், ஆயிரத்தில் ஒருவன், எங்கள்  வீட்டுப் பிள்ளை, அன்பே வா, நான் ஆணையிட்டால், விவசாயி, அரச கட்டளை போன்ற எம்.ஜி.ஆர். படங்களா தேர்தல பிரச்சாரத்துக்குப் பெரிதும் உதவின,

உலகிலேயே திரைப்படங்கள்  மூலம் பகுத்தறிவுச்  சிந்தனையையும், அரசியல் விழிப்புணர்வையும் உண்டுபண்ணியதொடு, தேர்தல் பிரச்சாரமும்  செய்த ஓர் அரசியல் கட்சி உண்டெனில் அது திராவிட முன்னேற்றக் கழகமே! இது ஓர் அதிசயமான உண்மை! இதற்குக் காரணமாக இருந்தவர்கள் அண்ணாவும் கலைஞருமே! எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற ஜாம்பவான்களை உருவாக்கியவர்களும் இவர்களே! பராசக்தி ( 1952 ) இல்லையெனில் சிவாஜி இல்லை. மந்திரி குமாரி (1950 ) இல்லையெனில் எம்.ஜி.ஆர். இல்லை. இந்த இரண்டு படங்களுக்கும் கதை வசனம் எழுதியவர் கலைஞர்!

          அப்போது கவிஞர் கண்ணதாசனும் கழகத்தில் இருந்ததால் அவர் எழுதிய திரைப்படப் பாடல்களில் கழகத்தின் கொள்கைகள் பிரதிபலித்தன. அவற்றை  எம்.ஜி. ஆர். படங்களில் பாடி நடித்தபோது அது கழகத்தின் பிரச்சாரமாகவே இருக்கலாயிற்று. அத்தகைய கண்ணதாசனின் பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலித்தவண்ணமாக இருந்தன.
            திரைப்படங்கள் மூலம் பகுத்தறிவுக்  கருத்துகளைப்  பரப்பியதோடு நில்லாமல், எழுத்துத் துறையிலும் மறுமலர்ச்சியை உண்டுபண்ணினர்.மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு இதழ் வெளியிட்டனர். திராவிட  ,நாடு, அண்ணா , காஞ்சி, முரசொலி, மன்றம், தென்றல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவற்றிலும் திராவிடக் கொள்கைகளையும், புரட்சிக்  கருத்துகளையும், சமுதாய அவலங்களையும், முன்னேறும் வழிவகைகளையும், தமிழ் உணர்வையும், தமிழ் இனத்தின் வரலாற்றுச் சிறப்புகளையும் , பைந்தமிழ் சங்க இலக்கியங்கள் பற்றியும் எழுதிக் குவித்தனர்.அவை அனைத்தும் பள்ளி, கல்லூரி , இளைஞர்களின் மத்தியிலும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.
          இந்தத் தேர்தல் தமிழ் நாட்டில் நடைபெறும் நான்காவது சட்டமன்றத் தேர்தல். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. ஆனால் 1962 வது தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி ஆட்டம் கண்டது. முதல்வராக இருந்த .காமராஜ் பதவியை ராஜினானா செய்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார். அவருக்குப் பதிலாக எம். பக்தவத்சலம் முதல்வரானார். மத்திய அரசு 1965 ஜனவரி 26 ஆம் நாளன்று இந்தியை ஆட்சி மொழியாக்கியது. அதை எதிர்த்து தி. மு. க. மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியது. அதில் அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் பங்குகொண்டனர். அதனால் தமிழகம் கொந்தளிப்பில் ஆழ்ந்தது.காங்கிரஸ் கட்சி எப்போதும் இல்லாத அளவில் பலவீனம் ஆனது. அது தி.மு. க. விற்கு சாதகமானது. ” வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது! ” எனறு முழங்கினார் அண்ணா.
           அரிசி பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம், இந்தித் திணிப்பு ஆகிய மூன்றும் இந்தத் தேர்தலில் முக்கியமாக விமர்சனத்துக்கு உள்ளானது. மக்களின் அதிருப்தி தி.மு.க.வுக்கு சாதகமானது. ” காமராஜர் அண்ணாச்சி! கடலைப் பருப்பு விலை என்னாச்சி? ” என்றும் ” பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? ” என்றும் தி.மு. க. வினர் ஊரெங்கும் கோஷங்களை எழுப்பினர்.
          இவை எல்லாவற்றையும்விட இன்னொரு நிகழ்வும் வாக்குகளை தி. மு. க. விற்கு சாதகமாக்கியது. அதுதான் எம்.ஜி.ஆர். சுடப்பட்டது. அதைக் செய்தவர் எம்.ஆர்.ராதா. கழுத்தில் சுடப்பட்ட எம். ஜி. ஆர். மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். தமிழக மக்கள் பெரும் பதற்றத்துக்கும் சோகத்துக்கும் உள்ளாயினர். அப்போது அவர் நாத்திகராக இருந்தாலும் அவருக்காக ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றில்  அனைத்து மதங்களின் வழிபாடுகள் நடந்தன. அவர் எப்படியாவது பிழைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒவ்வொருவரும் தனிப்பட்டமுறையிலும் வேண்டிக்கொண்டனர்.  எம்.ஜி.ஆர். புரட்சி நடிகராகவும் அண்ணாவின் தம்பியாகவும் இருந்ததால் அவர்மேல் மக்கள் அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர். தர்மம் தலை காக்கும் என்பதுபோல் அவர் ஆச்சரியமான வகையில் பிழைத்துக்கொண்டார். அந்த அசம்பாவிதத்தால் மக்களின் ஏகோபித்த அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றார். அவர் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டார. அவர் மேல் எழுந்த அனுதாப அலை அப்படியே தி. மு. க. வின் பக்கம் சாய்ந்தது. தி.மு.க. வேட்பாளர்களின் சுவரொட்டிகளில் கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆரின் படங்களை வெளியிட்டன. அதில் அவர் கைகூப்பி வணங்கும் நிலையில் காணப்படுவார். ( இதில் மர்மம் என்னவெனில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் திராவிட பாசறையில் வளர்ந்தவர்தான். அவர் தந்தை பெரியாரின் ஆதரவாளர். எம்.ஜி.ஆர். அண்ணாவின் பாசமிக்க தம்பியானாலும் பெரியாரிடம் மிகுந்த மரியாதை கொண்டவர். ஆனால் அந்தத் தேர்தலில் பெரியார் தி.மு.க. வை ஆதரிக்காமல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இது அரசியல் என்றாலும் எம்.ஆர்.ராதா ஏன் அப்படி எம்.ஜி.ஆரை கொல்ல முயன்றார் என்பது மர்மமாகவே உள்ளது.)
          தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகி விட்டது. இனி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தலை தூக்குவது முடியாது என்ற பரிதாப நிலை கண்கூடாகியது.
          1967 ஆம் வருடம் பெப்ருவரி மாதம் தேர்தல் நடந்தது. வாக்கெடுப்பு மிகவும் துரிதமாக நடைபெற்றது.
           எதிர்பார்த்தபடியே அண்ணாவின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கரஸ் படு தோல்வியைத் தழுவியது.
மொத்தம் 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது.இதில் தி.மு.க. மட்டும் 137 இடங்களைக் கைப்பற்றியது. சுதந்திரக் கட்சி 20 இடங்களிலும், மார்ஸ்சிய கம்யூனிஸ்ட்டு கட்சி 11 இடங்களிலும், பிரஜா சோசியலிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், இந்திய முஸ்லீம் யூனியன் 3 இடங்களிலும், சோசியலிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் , தி.மு.க.ஆதரவு சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் மொத்தம் 51 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
          இந்தத் தேர்தலில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் தி.மு. க.மாணவர் தலைவர் பி. சீனிவாசன் என்பவரிடம் தோல்வியுற்றார். தேர்தலுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கிய காமராஜர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லமுடியவில்லை. அப்போது அவர், ” நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன். ” என்று சவால் விட்டது பெரும் கேலிக்கூத்தானது!
          பூவராகவனைத் தவிர்த்து மற்ற அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் தோல்வியடைந்தனர்.
அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவை 1967 மார்ச் 6 அன்று பதவியில் அமர்ந்தது. தமிழக முதல்வராக அண்ணாவும், வி.ஆர். நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, கே.ஏ. மதியழகன், ஏ.கோவிந்தசாமி, எஸ்.ஜே. சாதிக் பாட்சா, சத்தியவாணி முத்து, எம். முத்துசாமி, எஸ்.மாதவன், என்.வி. நடராசன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.
          இந்தத் தேர்தலுடன் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. தமிழகம் திராவிடக் கட்சிகளின் கைகளுக்கு மாறியது.
          அண்ணாவின் அற்புதமான தலைமையில் தமிழகம் பொற்காலம் கண்டது.
          1967 ஜூலை 18 ஆம் நாளன்று ” மெட்ராஸ் ஸ்டேட் ” என்பது ” தமிழ் நாடு” என்று மாற்றப்பட்டது. சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடி ஆனது. மும்மொழிக் கொள்கை நீக்கப்பட்டு, இந்தி அல்லாத இருமொழிக் கொள்கை ( ஆங்கிலமும் தமிழும் ) ஏற்றுக்கொள்ளப்பட்டது.அரிசியின் விலை கட்டுப்படுத்தப்பட்டது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்சிகள் நடத்த ஊக்கமளிக்கப்பட்டது.
          தமிழக மக்களின் மனதில் தமிழ் இன உணர்வும் தமிழ் மொழி மீது பற்றுதலும் புத்துயிர் பெற்றதுபோல் பெருகியது.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை பிறந்தது. திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம், சேர சோழ பாண்டிய போக்குவரத்துக் கழகங்கள் உருவாயின, பேருந்துகளில் திருக்குறள் பொறிக்கப்பட்டன.
          தமிழகத்தில் திராவிட ஆட்சி மாற்றம் இவ்வாறு நிகழ்ந்தபோது நான் வேலூரில் இருந்து நேரடியாகப் பார்த்தது எனக்கு பெரும் பாக்கியமும் மறக்க முடியாத இனிய அனுபவமும் ஆகும்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஅவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழாகனவு நீங்கிய தருணங்கள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    smitha says:

    Not only in 1967, EVR campaigned against DMK since Annadurai parted ways with him in 1949.

    Also, DMK was not so confident of winning the elections. Anna had in fact stood for parliament. After he became CM, he resigned, stood for assembly & got elected.

    A major credit for the DMK victory was the alliance with Rajaji.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *