தொடுவானம் 129. இதய முனகல் ….

This entry is part 3 of 12 in the series 31 ஜூலை 2016
          Mitral Valve(1)
மருத்துவ வகுப்புகளை  பொதுவாக டாக்டர் மில்லர் நடத்தினாலும், மனை மருத்துவம் (  Clinical Medicine ) வேறு விதமானது. அது மூன்று பிரிவுகள் கொண்டது. அவை மருத்துவம் ஒன்று, மருத்துவம் இரண்டு , மருத்துவம் மூன்று என்று அழைக்கப்படடன. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைமை மருத்துவர் இருப்பார். அவரின் தலைமையில் பல மருத்துவர்களும், பயிற்சி மருத்துவர்களும், மருத்துவ மாணவ மாணவிகளும் செயல்படுவார்கள். வார்டுகளும் தனியாக இயங்கும். பயிற்சி மாணவர்களுக்கான நோயாளிகளை அந்தந்த வார்டுகளில் சென்று பார்க்கவேண்டும். அந்தந்த பிரிவுக்கு தனி அலுவலகமும் அங்கேயே கலந்துரையாடல் அறையும்  அமைந்திருக்கும். மீதமுள்ள இரண்டு ஆண்டுகளும் மாணவர்கள் அந்தந்த பிரிவில்தான் இருந்தாக வேண்டும்.

எனக்கு மருத்துவம் ஒன்று பிரிவு. அதில் பத்து பேர்கள் இருந்தோம். அவர்களில் ஐவர் பெண்கள். மருத்துவம் ஒன்றின் தலைமை மருத்துவர் டாக்டர் பெஞ்சமின் புளிமூட் என்பவர். மலையாளி. சற்று உயரமாக வாட்டம் சாட்டமாக இருப்பார். எப்போதுமே வெள்ளை சட்டைதான் அணிந்திருப்பார். கதர் சட்டை போல் இருக்கும். அதன் கைகள் சற்று பெரிதாக இருக்கும். சட்டைப் பையில் வெள்ளை நிறத்தில் சில அட்டைகள் வைத்திருப்பார். அவற்றில் சில குறிப்புகள் எழுதிக்கொள்வார். அவர் மெதுவாகத்தான் பேசுவார். வேகமாகவோ கோபமாகவோ பேசி நான் பார்த்ததில்லை.கோபம் வந்தாலும் அதை நாசூக்காக நிதானமாக மெதுவாகவே வெளியிடுவார். அவருக்கு இடது பக்க கண் அடிக்கடி துடிக்கும். அந்தக் கண்ணை மட்டும் மூடி மூடி திறப்பார். ( இவர் பின்னாளில் கல்லூரி முதல்வராகவும், மருத்துவமனையின் இயக்குனராகவும் சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாங்கள் படித்து முடித்து வெளியேறி இந்தியாவின் பல பகுதிகளில் பணிபுரிந்தபோது அங்கெல்லாம் எங்களைத் தேடி வந்து நாங்கள் எவ்வாறு பணியாற்றுகிறோம் என்றும் ஆய்வு செய்தவர்! ) இப்படி சிறப்பு வாய்ந்தவரிடம்தான் நான் இரண்டு வருடங்கள் மனை மருத்துவம் கற்றுக்கொண்டேன். அதனால்தான் எனக்கும் மனை மருத்துவமே மிகவும் பிடித்துவிட்டது.

Mitral Stenosis(1)

மனை மருத்துவம் என்பது வார்டுகளில் கற்பது. அது நோயாளிகளின் படுக்கை அருகே இருந்து கற்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. டாக்டர் மில்லரிடம் நாங்கள் அடிப்படை மருத்துவம் கற்றோம். அதில் வகுப்பறையில் எங்கள் வகுப்பினர் அனைவரும் ஒன்று கூடுவோம். மருத்துவ நூல்கள் கொண்டு செல்வோம். மில்லர் உரையாற்றும்போது நாங்கள் குறிப்பெடுத்துக்கொள்வோம். மனை மருத்துவம் அப்படியில்லை. இங்கு பத்து பேர்கள்தான்  இருப்போம். ஒரு நோயாளியைச் சுற்றிலும் அவருடைய படுக்கை அருகே நிற்போம்  அந்த நோயாளியை எவ்வாறு முறையாக அணுகி நோய் பற்றியவற்றைக் கேட்டு அறிந்து, அவரை எப்படியெல்லாம் பரிசோதிக்கவேண்டும் என்பதை டாக்டர் புளிமூட் சொல்லித்தருவார். அதுபோல் ஒரு நோயைப் பற்றி அறிந்துகொள்ள வெவ்வேறு நாட்களில் வேறு வேறு நோயாளிகளிடம் செல்வோம். அத்தகைய வகுப்புகள் இரண்டு மணி நேரம் கூட நீடிக்கும். சில வேளைகளில் காலை முழுதும் நீடிக்கும். அப்போது ஒரே நோய் உள்ள பலரின் படுக்கைகளுக்குச் செல்வோம். சில நேரங்களில் நிற்பதாலேயே கால்கள் கடுக்கும். இடையில் தேநீருக்கு ஒன்றாகச் சென்று விட்டுகூடத் தொடருவோம். அவரும் எங்களுடன் தேநீர் பருகுவார். அப்போது மருத்துவம் அல்லாத இதர .காரியங்களைப் பேசிக்கொள்வோம். நாங்கள் பத்து பேர்களும் அவருடன் நெருங்கிப் பழகுவோம். எங்கள்  ஒவ்வொருவரைப்பற்றி அவர் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார். நாங்கள் ஒரு சிறு குடும்பமாகவே மாறிவிடுவோம். வேலூர் மருத்துவக் கல்லூரியில் பயில்வதின் சிறப்பு அம்சம்களில் இதுவும் ஒன்றாகும்!

தேநீர் நேரத்தில் டாக்டர் புளிமூட் எங்களைப்பற்றி விசாரிப்பார். அப்போது நான் தமிழ் மீது ஆர்வம் கொண்டவன் என்பதையும் சிறுகதைகள் எழுதி சிங்கப்பூர் மலேசிய பத்திரிகைகளுக்கு அனுப்புவேன் என்று சொன்னேன். அன்றிலிருந்து என்னைப் பார்க்கும்போதெல்லாம் என்ன கதை எழுதுகிறேன் என்று கேட்பார்.

வார்டுகளில் நோயாளிகளிடம் எப்படி நோய் பற்றிய விவரங்களைச் சேகரிப்பது என்பதைக் கற்றுத் தருவார். அவை பாட நூலில் இருந்ததால் அவற்றை இரவில் புரட்டிப் பார்ப்பேன். வார்டுகளில் நூல்கள் படிக்கமுடியாது.முழுவதும் நோயாளிடம் பேசுவதிலும் பரிசோதனை செய்வதிலும் நேரம் கழியும்

டாக்டர் மில்லர் ஆரோக்கியமான இருதய ஒலிகளைக் கேட்பது பற்றி சொல்லித் தந்திருந்தார். இங்கே வார்டில் இருதய நோய்களில் இதயத்தில் எழும் வேறு வகையான ஓசைகள் பற்றி புளிமூட் விளக்கினார். இருதய நோயாளிகளை நாங்கள் பரிசோதனை செய்து அது பற்றி தெரிந்துகொண்டோம்.

இருதயத்தில் நான்கு விதமான வால்வுகள் உள்ளன. அவற்றுக்கு தனித்தனியான பெயர்களும் உள்ளன.அவை மைட்ரல் வால்வ்  Mitral Valve ), அயோர்டிக் வால்வ் ( Aortic Valve ), ட்ரைகஸ்பிட் வால்வ் ( Tricuspid Valve ), பல்மனரி வால்வ் ( Pulmonary Valve ) என்று அழைக்கப்படுகின்றன.

உயிர் வாழ உடலின் மிக முக்கிய உறுப்பு இருதயம். அந்த இருதயத்தின் மிக முக்கிய உறுப்புகள் இந்த நான்கு வால்வுகள். இவை இல்லையேல் இரத்த ஓட்டம் நடைபெறாது. சீரான இரத்த ஓட்டத்தை இயங்குபவை இந்த நான்கு இருதய வால்வுகள். இதனால் இவை மிகவும் உன்னதாமாகக்  கருதப்படுபவை.

திசுத்தாள்  அளவிலான மெல்லிய தன்மையுடைய இந்த வால்வுகள் இருதய தசைகளை ஒட்டியவாறு அமைந்துள்ளன. இவை தொடர்ந்து திறந்தும் முடியும் இயங்குவதோடு இதய ஓசையையும் எழுப்புகின்றன.ஒரு வருடத்தில் இதயம்  80 மில்லியன் தடவைகளை துடிக்கின்றன.அத்தனை தடவையும் இதய வால்வுகள் திறந்தும் முடியும் செயல்படுகின்றன. இதுபோன்று ஒருவரின் வாழ்நாளில் 5 முதல் 6 பில்லியன் தடவைகள் இதயம் துடிக்கிறது.

மைட்ரல் வால்வும் ட்ரைக்ஸபிட் வால்வும் இதயத்தின் மேல் அறைகளிலிருந்து இரத்தத்தை கீழ் அறைகளுக்குள் ஓட உதவுகின்றன. ஐயோர்டிக் வால்வும் பல்மனரி வால்வும் இரத்தத்தை பெரிய தமனிக்குள்ளும், நுரையீரலுக்கும் ஓட உதவுகின்றன.

சில காரணங்களால், குறிப்பாக ரூமேட்டிக் காய்ச்சல் வந்தபின்பு இதயத்தின் வால்வுகள் பழுதடைந்து செயலிழக்கின்றன.அதுபோன்ற நேரங்களில் மைட்ரல் வால்வ்  மிகவும் பாதிக்கப்படுகிறது.

பெரும்பாலும் மைட்ரல் வால்வ்  சுருங்கும் அல்லது விரிவாகலாம். அது சுருங்கும்போது அதன் வழியாக வெளியேறும் இரத்தம் ஒரு ஓசையை எழுப்பும். அதற்குப் பெயர் முணுமுணுத்தல் அல்லது முனகல் ( Murmur ) என்பது. இது  மைட்ரல் சுருக்க முனகல் ( Mitral Stenois Murmur ) என்று அழைக்கப்படுகிறது.

இந்த நோய் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. இது இளம் வயதினரைப் பாதிப்பது. ரூமேட்டிக் காய்ச்சல் கிருமிகளால் உண்டாவது. இந்த கிருமிகளுக்குப் பெயர் குரூப் ஏ ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் ( Group A Streptococcus ) என்பது. இது 5 முதல் 15 வயதுடைய பிள்ளைகளுக்கு தொண்டையில் தொற்றாக உண்டாவது. இதை உடன் குணப்படுத்திட்டாவிட்டால் நீண்ட நாட்கள் காய்ச்சல் உண்டாகும். அப்போது கிருமிகள் இரத்தத்தில் கலந்து இருதய வால்வுகளைத் தாக்கும். பின் காய்ச்சல் குணமானாலும் இருதய வால்வுகளில் பாதிப்பு உண்டாகி பல வருடங்கள் கழித்து இருதய நோயின் அறிகுறிகள் தோன்றும்.

இதுபோன்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை நாங்கள் வார்டுகளில் பார்ப்போம். அவர்களின் நெஞ்சில் ஸ்டெத்தஸ்கோப் வைத்து அந்த முனகல் ஓசையைக் கேட்டுப் பழகுவோம். துவக்கத்தில் அது சிரமம் என்றாலும் நிறைய நோயாளிகளிடம் அதைத் திரும்பத் திரும்பக் கேட்பதின்  மூலம் அதை அடையாளம் காணலாம். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் வார்டுக்குச் சென்று நோயாளியின் இருதய ஓசையை மீண்டும் கேட்டு வரலாம். நாங்கள் மருத்துவ மாணவர்கள் என்பதை அறிந்து நோயாளிகள் நாங்கள் செல்லும் போதெல்லாம் தங்களைப் பரிசோதிக்க ஒத்துழைப்பார்கள்.

முதல் நாளின் வார்டில் மைட்ரல் வால்வு நோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண் படுக்கை அருகே நாங்கள் குழுமியிருந்தோம். படுக்கையைச் சுற்றிலும் திரை போடப்பட்டிருந்தது. அந்த இளம் பெண் நோயாளி ஜாக்கட்டைக் கழற்றி அமர்ந்திருந்தாள். டாக்டர் புளிமூட் எங்களை ஒவ்வொருவராக அந்தப் பெண்ணின் இடது மார்புக்கு கீழே கையை வைத்து அழுத்திப் பார்க்கச் சொன்னார். அப்போது இதயம் துடிக்கும் போது அதன் உணர்வு கையில் மோதும். அதன் தன்மையை கையால் நாங்கள் உணரவேண்டும். இதயம் வேகமாகத் துடிப்பதையும் மெதுவாகத் துடிப்பதையும் கையில் உணரலாம். அதோடு அது பலமாக மோதுகிறதா அல்லது மெதுவாக மோதுகிறதா என்பதையும் அறிந்துகொள்ளலாம்.இதையே கையால் தொட்டுணர்ந்து ஆய்தல் ( Palpation ) என்கிறோம். அதன்பின்பு ஸ்டெத்தஸ்கோப்பை அந்த இடத்தில் வைத்து அழுத்தியப்படி இதய ஓசையைக் கேட்க வேண்டும். மைட்ரல் சுருக்க நோயில் இரண்டாவது ” டப் ” இருதய ஓசைக்குப் பின்பு முனகல் ஓசை உரக்கமாகி பின்பு மெல்ல குறையும். இதை அடிக்கடி கேட்டால்தான் உணரமுடியும். இந்த முனகல் ஒளியை வைத்துதான் மைட்ரல் வால்வ் சுருக்கம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தலாம். இப்படி நாங்கள் பத்து பேர்களும் அந்த பெண்ணை பரிசோதனை செய்தோம். இது முதல் முறை என்பதால் அதைக் கேட்பதற்கு நேரம் எடுத்துக்கொண்டோம்.

எல்லாரும் பரிசோதனை செய்தபின்பு மைட்ரல் வால்வ் சுருக்க நோய் பற்றி விரிவாக விளக்கினார். அதைப் பாட நூலில் இரவில் முழுதும் படித்து வரச் சொன்னார்.

மருத்துவம் படிப்பது சிரமமாக இருந்தாலும் ஒருவகையில் அது மனதுக்கு இதமாகவும் இருந்தது!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சிகடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *