தொடுவானம் 159. இனி நான் மருத்துவன்!

This entry is part 5 of 14 in the series 26 பெப்ருவரி 2017

இந்த விடுமுறையை தெம்மூரில் மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தேன். காரணம் தாம்பரத்திலிருந்து அத்தையும் நேசமணியும், தரங்கம்பாடியிலிருந்து அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். தங்கைகள் கலைமகளும், கலைசுந்தரியும் தஞ்சாவூர் போர்டிங்கிலிருந்து வந்திருந்தனர். இருவரும் தாவணி போட்ட பெரிய பிள்ளைகளாகிவிட்டனர்.  வீடு கலகலப்பாக இருந்தது. அம்மா தடபுடலாக விருந்து செய்தார். அவருக்கு உதவியாக பெரிய தெருவிலிருந்து அஞ்சலை சின்னம்மாவின் மகள் மஞ்சளழகி வந்திருந்தாள். எடுபிடி வேலைகள் அனைத்தையும் அவள் பார்த்துக்கொண்டாள்.

          இந்த விடுமுறை இன்னொரு வகையிலும் சிறப்பு பெற்றிருந்தது. பெரியப்பா குடும்பத்தினர் மலாயாவிலிருந்தும், கடைசி வீட்டு மோசஸ் சித்தப்பா குடும்பத்தினர் சிங்கப்பூரிலிமிருந்தும் இங்கு திரும்பி குடியேறிவிட்டனர். அப்பா ஒருவர் மட்டும் இல்லாத குறைதான்! அவர் இன்னும் தனியாக சிங்கப்பூரில் உள்ளார். நான் இறுதி ஆண்டில் தேர்ச்சி பெற்றதும் அவரும் வந்துவிடுவார்.

பால்பிள்ளை வேறு எங்கும் வேலைக்குப் போகாமல் எங்களுடனேதான் இருந்தான். செட்டியார் மனையைச் சுற்றிலும் உயரமான தென்னை மரங்கள் இருந்தன. அவற்றில் குலைகுலையாக இளநீரும் தேங்காயும் காய்த்திருந்தன. மரங்களில் ஏறி அவற்றைப்  பறித்துப் போட்டு வீட்டுக்கு கொண்டு வருவான்.  இளநீர் வெட்டித் தருவான்.வெயில் நேரத்தில் இளநீர் பருகுவது சுவையாக இருக்கும். அதிலும் சொந்த வீட்டு இளநீர் என்பதால் அதன் சுவையே அலாதிதான்!

வீட்டுத் தோட்டத்தில் மூங்கில் மரங்கள் கொத்து கொத்தாக உயரமாக வளர்ந்திருந்தன. அவற்றை தாத்தா சிறு கன்றுகளாக 1953 இல் நட்டபோது நான் சிறுவன்.  குட்டையிலிருந்து நீர் கொண்டு வந்து ஊற்றுவேன். இப்போது அவை முற்றிய மரங்களாக வளர்ந்துள்ளன. அவை பந்தல் போடுவதற்கும் வீடு கட்டுவதற்கும் பயன்படும். கிராம மக்கள் மூங்கில் வாங்க தாத்தாவிடம்தான் வருவார்கள். அந்த மூங்கில் மரங்களில் தேன் கூடு காணப்படும்.  பால்பிள்ளை முகத்தை துணியால் மூடிக்கொண்டு மூங்கில் மரத்தில் ஏறி தேன் கூடு முழுவதையும் எடுத்து வருவான்.அதில் தேன் சொட்டச் சொட்ட வழியும். அதன் மெழுகைப் பிழிந்தாலும் தேன் வழியும். அந்தத் தெவிட்டாதத் தேனைப் பருகி சுவைத்து இன்பம் காண்போம். வீட்டு  தோட்டத்துத் தேன் என்பதால் அதுவும் மதுரமாக இனிக்கும்!

பால்பிள்ளையும் நானும் தூண்டில் போட எங்கள் ஊர் இராஜன் வாய்க்கால் கரை ஓரமாக வெகு தூரம் நடந்து சென்று நிறைய கெண்டைகளும், குறவைகளும், கெளுத்திகளும் கொண்டு வருவோம். அம்மா அவற்றை உடனே ஆய்ந்து கமகமக்க குழம்பு வைத்துவிடுவார். அண்ணன் குமராட்சி சென்று விரால் மீனும் பெரிய இறாலும் வாங்கி வருவார். விரால் மீன் சுவையே தனிதான்.

கோழிக் குழம்புக்கு பஞ்சமே இல்லை. வீட்டில் அம்மா ஏராளமான கோழிகள் வளர்த்தார். அவை இரவில் கூட்டில் அடைந்தபின்பும், காலையில் வெளியே செல்லும்போதும் அவற்றில் ஒன்றைப் பிடித்து கூடையில் அடைத்து விடுவார். அவ்வளவுதான். மஞ்சளழகி அதை கொஞ்ச நேரத்தில் சுத்தம் செய்துவிடுவார். பின்பு அடுப்பங்கரையிலிருந்து கோழிக்குழம்பின் மணம் தெருவரை கமகமக்கும்.

இவை போதாதென்று அம்மா அவுல் , சீடை, கெட்டி உருண்டை, அதிரசம், பணியாரம், முறுக்கு, அச்சு முறுக்கு ஆகிய விதவிதமான பலகாரங்கள் செய்து தகர டப்பாக்களில் அடைத்து வைத்திருப்பார். இந்தப் பலகாரங்கள் அண்ணனுக்கு மிகவும் பிடிக்கும்.

இதுபோன்று குடும்பத்துடன் சேர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஆறு வருடங்கள் விடுதியே  கதி என்றிருந்த எனக்கு இது நல்ல மாற்றத்தை உண்டுபண்ணியது. ஒவ்வொரு நாளும் இப்படி இனிமையாகக் கழிந்தது. வேறு கேளிக்கைகள் இல்லாவிட்டாலும் கிராமத்தில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த விடுமுறை முடிந்ததும் மீண்டும் விடுதி சென்று பொது மருத்துவம், அறுவை மருத்துவம் இரண்டு பாடங்களிலிலும் முழு மூச்சுடன் ஈடுபட்டு எப்படியும் மீண்டும் இறுதித் தேர்வில் வெற்றி பெற்றாகவேண்டும் என்று மனதில் உறுதி பூண்டேன்.விடுமுறை முடிந்ததும் இவர்களையெல்லாம் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், தேர்வை நினைத்து மனதை திடப்படுத்திக்கொண்டேன்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனை அற்புதநாதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும்.  எங்கள் குடும்பத்தினர் போன்று பெரியப்பா குடும்பத்தினர், சித்தப்பா குடும்பத்தினர், சாமிப்பிள்ளை தாத்தா குடும்பத்தினர், தேவசித்தம் சித்தப்பா குடும்பத்தினர் அனைவரும் வருவதால் கோவில் நிறைந்திருக்கும்.  இஸ்ரவேல் உபதேசியார் அருமையாக பிரசங்கம் செய்து ஜெபம் செய்வார்.

மொத்தத்தில் ஒரு நிறைவான விடுமுறையை தெம்மூரில் கழித்தேன்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் அண்ணி என்னுடன் நிறைய பேசினார்கள். அதுபோன்று மாலை வேளைகளில் இராஜகிளியும் நிச்சயமாக வந்துவிடுவார். நேசமணி பற்றி சொல்லத் தேவையில்லை. அத்தை மகள் என்பதால் ” அத்தான் …அத்தான்… ” என்று அழைத்து ஆசையுடன் பேசுவாள்!

விடுமுறை முடிந்து விடைபெறும் நாளும் வந்தது. கவலையுடன்தான் விடை பெற்றேன். திருப்பதி துரித பயணியர் தொடர் வண்டி மூலம் வேலூர் சென்றேன். அது இரவுப் பிரயாணம்.உறக்கம் வரவில்லை. ஊர் நினைவாகவே இரவு கழிந்தது.

எப்போதும் இல்லாத புதுத்  தெம்புடன் படிப்பில் கவனம் செலுத்தினேன். ஒரு நோயைப் பற்றி படித்ததும் மறுநாளே அந்த நோயால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளியை வார்டில் தேடித் சென்று பரிசோதனை செய்து வந்தேன். இப்படிச் செய்வதால் அந் நோய் பற்றி முழுமையாக  மனதில் பதிய வகை செய்தது.படித்தவற்றையே மீண்டும் படிப்பது எளிதாகவே இருந்தது. சென்ற தேர்வில் ஒரு கேள்விக்கு  சரியாக விடை எழுத முடியாமல் போனதால்தான் இந்த மறு தேர்வு. இந்த முறை எழுத்துத் தேர்வில் அனைத்து கேள்விகளுக்கும்  சிறப்பாக பதில் எழுதவேண்டும். கடந்த பத்து வருடங்களில் கேட்கப்பட்டிருந்த அனைத்து கேள்விகளையும் மீண்டும் ஒருமுறை திரும்ப படித்து தயார் செய்துகொண்டேன். இனி எந்தக்  கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்குத்  தகுந்த பதில் எழுதமுடியும் என்ற தைரியம் உண்டானது.  நாட்கள் ஆக  ஆக அந்த நம்பிக்கை உறுதியானது. நான் இன்னும்  ஆறு மாதங்களில் நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்ற நிலைக்கு உள்ளாகினேன். மனம் தளராமல் அன்றாடம் நூல்களையும், எழுதிவைத்துள்ள குறிப்புகளையும் புரட்டிப் பார்த்துக்கொண்டேன்.

அந்த ஆறு மாதங்களும் வேகமாகவே உருண்டோடின. தேர்வு நாட்களும் வந்தன. முதல் நாள் பொது மருத்துவம். மறுநாள் அறுவை மருத்துவம்.
எழுத்துத் தேர்வில் ஆறு கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் எழுதினேன். அதன்பின்பு ஒரு வார இடைவெளியில் சென்னையில் செயல்முறைத் தேர்வும் நேர்முகத் தேர்வும் நடந்தன.
மருத்துவத்தில் எனக்கு இருதய வால்வு குறைபாடுடைய நோயாளி. இருதய நோய்கள் பற்றி நான் நன்றாக தயார் செய்திருந்தேன். எழுத்துத் தேர்வில் நான் நன்றாக எழுதியிருந்ததால் அது எனக்கு உதவியது. சோதனையாளர் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் திருப்திகரமாக பதில் கூறினேன். அன்று மதியம் நேர்முகத் தேர்விலும் சிறப்பாகச் செய்தேன். அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. நான் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டேன்!

          அறுவை மருத்துவத்தில் நான் பரிசோதித்த நோயாளிக்கு வயிற்றில் புற்று நோய். நான் சிரமமின்றி பதில் சொன்னேன். சோதனையாளர் திருப்தி கொண்டார் என்பதை அவருடைய முகம் காட்டியது. அன்று மதியம் நேர்முகத் தேர்வில் தேர்வாளர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளிலிருந்து நான் தெரிந்துகொண்டேன் – நான் அறுவை மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்பதை!

          ஆம்! நான் பொது மருத்துவத்திலும், அறுவை மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! நான் மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்! முடிவுகள் வருமுன்பே எனக்கு முடிவு தெரிந்துவிட்டது! இனிமேல் நான் ஒரு மருத்துவன்! என் பெயருக்குமுன் இனி நான் டாக்டர் என்று போட்டுக்கொள்ளலாம்! பதினைந்து வருடக் கனவு நனவானது! அதோடு அப்பாவின் சபதமும் நிறைவேறிவிட்டது! என்னை இது வரை வழி நடத்திவந்துள்ள கடவுளுக்கு நன்றி கூறினேன்!

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்!இன்றும் வாழும் இன்குலாப்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *