தொடுவானம் 19. காதலும் வேண்டாம்! நட்பும் வேண்டாம்!

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

டாக்டர் ஜி. ஜான்சன்

நல்ல வேளையாக அப்போது பள்ளி விடுமுறை. பள்ளி திறக்கும் வரை எப்படியாவது சமாளித்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறந்ததும் வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததைச் சொல்லி புதிய ‘ ரிப்போர்ட் ” புத்தகம் பெற வேண்டும். அதன் பின்பு தமிழ் ஆசிரியர், உடற் பயிற்சி ஆசிரியர்களிடம் மீண்டும் அவர்களுடைய நற்சான்றுகளை எழுதச் சொல்ல வேண்டும். அவர்கள் நிச்சயம் உதவுவார்கள். தலைமை ஆசிரியர் மீண்டும் கையெழுத்து இடுவாரா என்பதில்தான் சந்தேகம் எழுந்தது.
இது நிச்சயம் வகுப்பு மாணவர்களுக்கு தெரிய வரும். இப்படியும் ஒரு அப்பாவா என்று அவர்கள் ஏளனம் செய்வார்களே ! அது எனக்குப் பெருத்த அவமானமாயிற்றே! ஆனால் பரவாயில்லை. எந்தக் குறையானாலும் நான் பள்ளியின் நீண்ட தூர ஓட்டக்காரன் என்ற பெயர் உள்ளது. அது ஒன்றே எல்லாக் குறைகளையும் போக்கும் என்று துணிவு கொண்டேன்.!
இருந்தாலும் வகுப்பில் ஒரே தமிழனான எனக்கு இந்த அவமானமா என்று வருந்தினேன். இவ்வளவுக்கும் அப்பாவும் ஓர் ஆசிரியர்தான்! ஒரு மாணவனுக்கு உயர்நிலைப் பள்ளியின் ” ர்ப்போர்ட் ” புத்தகம் எவ்வளாவு முக்கியமானது என்பது அவருக்கு எப்படித் தெரியாமல் போனது?
இவ்வளவுக்கும் காரணம் லதாவா? பாவம்! அது வீண் பழி! அவள் என்ன செய்வாள்? என்மீது அன்பு செலுத்தியது தவறா? இல்லையே!
குழம்பிய மனநிலையுடன் செய்வதறியாத நிலையில் பயத்துடன்தான் வீடு சென்றேன். அவர் வீட்டில் இல்லை. எங்கோ வெளியில் சென்று விட்டு மாலையில்தான் வீடு வந்தார். ஏதும் நடக்காதது போல் நடந்து கொண்டார்.ஒன்றும் பேசவில்லை. ஒருவேளை செய்த தவறை எண்ணி வருந்துகிறாரோ? தெரியவில்லை. இருந்தாலும் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தேன். காரணம் நாங்கள் இருவரும் ஒரே கட்டிலில்தான்
படுத்திருப்போம். நான் தூங்கிய பின் கூட அவர் அடிக்கலாம்.முன்பு ஒரு முறை வீட்டை பெருக்கவில்லை என்பதற்காக நான் தூங்கிய பின் துடைப்பக் கட்டையால் ஓங்கி அடித்துள்ளார்!
மறு நாள் காலையிலேயே ஒரு சீனன் லாரியுடன் வீட்டின் எதிரில் வந்து நின்றான்.நான் அது கண்டு திகைத்தேன்! ஆம்! மீண்டும் வேறு வீடு செல்கிறோம்!
நான் பேசாமல் என் சாமான்களை லாரியில் எடுத்து வைத்தேன்.மற்ற சாமான்களை சீனன் ஏற்றிக்கொண்டான். .எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை.
லாரி பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டிடம் முன் நின்றது. அந்த புது பள்ளி அப்போதுதான் ” ஒடின் ஸ்கொயரில் ” கட்டப்பட்டிருந்தது. மலையில் இருந்த பழைய அத்தாப்பு பள்ளி அங்கு மாறியிருந்தது.அந்த புதிய கட்டிடத்தில் மூன்று பெரிய வகுப்பறைகள் இருந்தன..கடைசியில் ஒரு காலி அறையும் இருந்தது.
உண்மையில் அது பள்ளியின் காவல்காரருக்கான அறை. காவல்காரர் இன்னும் நியமனம் ஆகவில்லை. நாங்கள் இருவரும் அங்கு குடியே-றினோம்!
ஒரு வகையில் பள்ளியில் தங்குவது எனக்கு வசதியாக இருந்தது. பள்ளியைச் சுற்றிலும் முள் வேலி இருந்தது. முகப்பில் பூட்டக்கூடிய ” கேட் ” இருந்தது. உள்ளேயே கழிப்பறைகளும் குளியல் அறைகளும் இருந்தன. இனி நகரசபை விடுதியில் பொது கழிப்பறையையும் து குளியல் அறையையும் பயன் படுத்தத் தேவையில்லை.
அதோடு காலையில் பள்ளி முடிந்து விடும். அதன் பிறகு பள்ளி முழுதும் எனக்குச் சொந்தம். வகுப்பறையில் ஆசிரியர் மேசையில் அமர்ந்து தனிமையில் நான் அழகாக படிக்கலாம். கரும்பலகையில் பாடங்களை பாராமல் எழுதிப் பார்க்கலாம்.
ஒரேயொரு குறை லதாவை பழையபடி எளிதில் பார்க்கமுடியாது. பார்க்க வேண்டுமென்றால் பேருந்து நிற்கும் இடம் நடந்து சென்று காத்திருக்க வேண்டும்.அது நிச்சயம் அப்பாவுக்கு தெரிந்து விடும். அனால் பரவாயில்லை. இனி முழு மூச்சுடன் படிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்தேன். லதா என்னை விட்டு எங்கே போய்விடப் போகிறாள் என்ற தைரியம் எனக்கு!
அதன் பின்பு நான் திட்டமிட்டபடியே அங்கு அமர்ந்து படித்தேன். இரவில் படுக்க கட்டில் கிடையாது. மாணவர்கள் பயன்படுத்தும் ஆறு மேசைகளை ஒன்றாக இணைத்து அதன் மீது மெல்லிய் மெத்தை விரித்துதான் இரவில் படுப்பேன். சுழல் விசிறி இருந்ததால் நன்றாக காற்று வீசும். கொசுத் தொல்லையும் இல்லை.
அங்கு அனைத்துமே பிடித்திருந்தது. பள்ளியின் பின்புறம் பெரிய விளையாட்டுத் திடல் மாலையில் தமிழ் இளைஞர்கள் காற்பந்து விளையாடுவார்கள். நானும் அந்த திடலில் ஓடுவேன். ஜெயபிரகாசம் வீடும் அருகில் இருந்தது. அவனுடன் இன்னும் நெருக்கமானேன்.
அவனுடைய வீட்டுக்கு அடிக்கடி செல்வேன் அவனுக்கு நிறைய உடபிறப்புகள் இருந்தனர். மூத்தவரின் பெயர் அருமைநாதன்.அவர் சிங்கப்பூர் பூ மலையில் பனி புரிந்தார் அப்போது இந்தியன் மூவி நியூஸ் மாத இதழ் சிங்கபூரிலும் மலாயாவிலும் மிகவும் அதிகமாக விற்பனையில் இருந்தது. அதை ஷா சகோதரர்கள் நடத்தினர். ஆசிரியர் எஸ், பி. சர்மா. அருமைநாதன் அதற்கு ஒரு வாசகர் மன்றம் அமைத்து அதன் தலைவர் ஆனார். ( அதன்பின்பு அதன் ஆசிரியர் ஆனார். பின்பு அதன் உரிமையாளருமாகிவிட்டார். இன்று அவர் எஸ்.ஏ நாதன் என்ற பெயரில் சிங்கப்பூர் மலேசியாவில் பிரபலமானவராகவும் விளங்குகிறார். சமீபத்தில் கூட ” My Unbelievable Journey with Indian Cinema “எனும் ஆங்கில நூலை எழுதி
சிங்கப்பூரிலும் கோலாலம்பூரிலும் வெளியிட்டார் )
ஜெயப்பிரகாசம் தம்பிதான் பன்னீர்செல்வம். கவிஞர் ஐ .உலகநாதனின் சீடன். அவன் முன்பே கொவிந்தசாமியுடன் சேர்ந்து என் நண்பன்.
ஜெயப்பிரகாசத்தின் அப்பா அந்தோணிசாமியும் அம்மா கிரேசும் என் மீது அதிக பாசம் கொண்டனர். அது எனக்கு ஆறுதல் தந்தது. ஜெயபிரகாசம் உடன் பிறந்த தம்பி தங்கைகளும் இருந்தனர். இரண்டு அக்காள்களும் இருந்தனர்.
ஜெயப்பிரகாசம் என்னுடன் மிகவும் நெருக்கமானான்.இருவரும் ஒன்றாக மாலையில் பேசிக்கொண்டே நடப்போம். பின்பு சீனர் உணவகத்தில் சாப்பிடுவோம். ஒரு முறை நாங்கள் இருவரும் பீர் அருந்திப் பார்க்க ஆசைகொண்டோம். அலெக்சாண்டிரா தபால் நிலையத்தின் பின்புறமிருந்த சீனர் உணவகத்தில் அமர்ந்து ஒரு போத்தல் ” அங்கர் பீர் ” வாங்கி கிளாசில் ஊற்றி உதட்டில் வைத்தோம். அப்போது அப்பாவும் அதே கடைக்கு தொலைவில் வருவது தெரிந்தது. உடன் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தோம்!
கொஞ்ச நாட்களில் ஜெயப்பிரகாசத்துடன் சேர வேண்டாம் என்று அப்பா கண்டித்தார். அவனுடன் சேர்ந்தால் படிப்பு கெடும் என்றார். நான் அதை நம்பவில்லை. படிப்பது என்னுடைய கடமையாக இருக்கும்போது அவனால் எப்படி என் படிப்பு கெடும் என்று எண்ணினேன். ஆகவே அவருக்குத் தெரியாமல் எங்களுடைய நட்பைத் தொடர்ந்தோம். நான் வேறு என்னதான் செய்வது? காதலும் வேண்டாம்,நட்பும் வேண்டாம் என்கிறாரே!
ஜெயப்பிரகாசம் காற்பந்து பிரியன். அங்குள்ள தமிழ் இளைஞர்களை ஒன்றுகூட்டி பாரதி காற்பந்து குழு வைத்திருந்தான்.அப்போது தொலைவில் உள்ள சிலேத்தார் தமிழ் இளைஞர் காற்பந்து குழுவினருடன் ஒரு பந்தயம் ஏற்பாடு செய்திருந்தான்.அங்கே சென்று வர ஒரு லாரியும் அமர்த்தியிருந்தான் பள்ளி விடுமுறை என்பதால் என்னையும் உடன் வரச் சொன்னான். நான் தயங்கினேன்.முன்பே பந்து விளையாட்டு பார்க்க ஒருமுறை சென்றபோது அப்பா அடிக்க வந்தது நினைவில் இருந்தது.
அண்று மதியம்போல் அந்த லாரி தேநீர் கடை அருகில் நின்றது. விளையாட்டாளர்களும் வேறு சில இளைஞர்களும் அங்கு கூடிவிட்டனர்.
நான் போவதா இல்லையா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.நானும் ஜெயப்பிரகாசமும் நின்றவாறு தேநீர் அருந்தி கொண்டிருந்தோம். அப்போது அப்பா பள்ளியிலிருந்து அங்கே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. நான் காற்பந்து விளையாட்டு பார்க்கப் போவதாகா யாரோ சொல்லியுள்ளனர். அவரைக் கண்ட நாங்கள் இருவரும் திகைத்து நின்றோம்.
வந்ததும் அங்கு வீதியில் கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்து கொண்டு ஜெயபிரகாசத்தை அடிக்க ஓங்கினார்,
” என் மகனை கெடுக்க பார்க்கிறாயாடா ? ” என்று ஆவேசமாகக் கத்தினார். நான் அவரைத் தடுக்க முயன்றேன். அப்போது அவர் என்னைப் பார்த்து கோபத்துடன், ” நீ பந்து விளயாட்டுக்கா போறே! போயிட்டு வாடா! அப்புறம் என்ன நடக்குதுண்ணு பாப்போம்! ” என்று மீண்டும் கத்திவிட்டு பள்ளி திரும்பினார்! நாங்கள் இருவரும் நிலை தடுமாறினோம். எனக்கு உடல் நடுங்கியது. ஜெயப்பிரகாசத்தின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது.
” என்ன உன் அப்பா இப்படி இருக்கிறார்? ” ஆத்திரத்தோடு கேட்டான். அவன் இயற்கையிலேயே முரடன்.
” நான் உன்னோடு வருவேன் என்றுகூட சொல்லவில்லை.அதற்குள் இப்படியா? ” என்றேன்.
” ஒன்று செய்..இன்று நீ வீடு திரும்பியதும் நிச்சயம் உதை விழத்தான் போகிறது.நீ எங்களோடு வந்தாலும் உதைதான். வராவிட்டாலும் உதைதான் . அதற்கு நீ பந்து விளையாட்டுக்கு என்னோடு வந்துவிட்டே உதை வாங்கலாமே! ” என அருமையான யோசனை கூறினான் நான் அது பற்றி யோசித்தேன். அது சரி எனப்பட்டது
ஒரு முடிவுக்கு வந்தவனாக, ” சரி வருகிறேன் ” என்று சொன்னபடி லாரியை நோக்கி நடந்தேன் .
காற்பந்து விளையாட்டில் எங்கள் குழு வெற்றி வாகைச் சூடிய களிப்பில் திரும்பி கொண்டிருந்தோம். ஆனால் என் மனதிலோ துயர்தான் குடிகொண்டிருந்தது.வீடு திரும்பியதும் என்ன ஆகுமோ என்ற அச்சம் நெஞ்சை அடைத்தது.
இரவு ஒன்பது மணிக்கு திரும்பினோம். லாரி தேநீர் கடை அருகில் நின்றது. எல்லாரும் இறங்கி விட்டோம் . திடீரென்று எங்கிருந்தோ அப்பா வந்துவிட்டார். அவர் கையில் ஒரு கம்பு வைத்திருந்தார். என் அருகே வந்தவர் அனைவர் மத்தியிலும் சரமாரியாக அடித்தார்..நான் தேநீர் கடைக்கு ஓடினேன். எனக்கு அந்த அடிகள் தந்த வலியை விட பலர் மத்தியில் அப்படி அவமானப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அங்கு
கடையை மூட பயன்படுத்தும் நீண்ட பலகைகள் ஓரிடத்தில் சாய்த்து வைக்கப் பட்டிருந்தன.வேறு வழி தெரியாமல் அவற்றில் ஒரு பலகையை தூக்கிக் கொண்டேன
அதைக் கண்டதும் , ” என்னையே அடிக்க வருகிறான்! ” என்று அலறியபடி ஓடிப்போய் எதிரே இருந்த பிரதான வீதியின் நடுவில் படுத்துக் கொண்டார்! இரண்டு பக்கமும் வந்த கார்கள் திடீர் ” பிரேக் ” போட்டு நின்றன!

( தொடுவானம் தொடரும் )

Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *