தொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …

This entry is part 5 of 12 in the series 7 ஜனவரி 2018

டாக்டர் ஜி. ஜான்சன்
203. எனக்கொரு மகன் பிறந்தான் …

மருத்துவமனையில் நடந்துள்ள ஊழல் ஊழியர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. அதுபோன்ற இனிமேல் யாரவது செய்தால் சுலபத்தில் பிடிபடுவார்கள் என்ற நிலையும் உருவானது. அந்த வகையில் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா மிகவும் கண்டிப்பாகவே இருந்தார்.
ஆனால் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆலோசனைச் சங்கம் இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக ஒரு தீர்வைச் சொல்லாமல் தள்ளிப்போட்டது. இதனால் டாக்டர் செல்லையா பொறுமை இழந்தார். இதனிடையே இந்த காரியம் சுவீடன் தேசத்திலுள்ள சுவீடிஷ் மிஷனுக்கும் தெரிந்துவிட்டது. அங்குள்ள சிலர் திரு.தேவசகாயத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள். டாக்டர்.செல்லையா பழிவாங்கும் நோக்குடன் தன் மனைவி மீது குற்றம் சுமத்தியுள்ளார் என்று அவர்களுக்கு தேவசகாயம் தெரிவித்துள்ளார். அவர்களும் அவருக்கு சாதகமாக உள்ளதும் தெரிந்தது. டாக்டர் செல்லையா மேல் நாட்டு மிஷனரிகள்மீது அவ்வளவு பற்றுதல் இல்லாமல் இருந்தார்.அதனால் அவர்கள் அவர் மீது சாதகமாக இல்லை. இந்த நிலையில்தான் மங்களத்தின் மீது திருச்சபையின் சங்கம் விசாரணையை நடத்தியது.
அதற்குள் கிருச்சபையின் பேராயரும் மாறிவிட்டார். அவர் மாமறைதிரு ஈஸ்டர் ராஜ் ஆவார். அவர் மங்களத்துக்கு சாதகமாக செயல்படலானார். அவருடைய காலத்தில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மங்களம் அந்த தொகையை செலுத்தினால் போதுமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த 40,000 ரூபாயையும் அவர் கட்டவில்லை. அதை சுவீடன் தேசத்திலுள்ளவர்கள் கட்டிவிட்டனர்.
டாக்டர் செல்லையாவுக்கு அந்த தீர்ப்பில் உடன்பாடில்லை. அவர் விரைவில் வெளியேறுவதில் தீவிரம் காட்டினார். காரைக்குடியில் ஒரு இல்லத்தை வாடகைக்கு எடுத்து ஒரு நர்சிங் ஹோம் ஏற்பாடு செய்தார். வாடகை வீடு ஒன்றில் குடியேறிவிட்டார். அவர் செல்வதை திருச்சபை தடுக்கவில்லை. மருத்துவமனை வரலாற்றில் டாக்டர் செல்லையாவை அப்படி இழந்தது பெரும் சோகமான நிகழ்வாகும். அந்த குற்றம் திருச்சபையையே சாரும்.
அப்பகுதியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த மருத்துவமனை அதன்பின்பு படிப்படியாக தாழ்வு நிலைக்குள்ளாயிற்று. டாக்டர் ஃபிரெடரிக் ஜான் அப்போது எம்.எஸ். முடிக்கும் தருவாயில் இருந்தார். உடன் ஆலோசனைச் சங்கம் அவரை தலைமை மருத்துவ அதிகாரியாக அறிவித்தது. விடுப்பில் வந்த அவர் புதுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரும் அவருடைய மனைவி டாக்டர் இந்திராவும் தலைமை மருத்துவ அதிகாரியின் பங்களாவில் குடியேறினர். அப்போது அவர்களுக்கு கீதா என்ற பெண் குழந்தை இருந்தது. அவர் தங்கியிருந்த வீட்டில் டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸும் குடியேறினர். அவர்கள் வீடு காலியானது. அதை ராமசாமிக்கு தரலாம். அனால் அவர் திருமணம் ஆகாதவர். அதனால் நான் அதைக் கேட்டுப் பார்க்கலாம். ஒருவேளை ராமசாமிக்கு அந்த பெரிய வீடு வேண்டாம் என்றுவிட்டால் எனக்குக் கிடைக்கலாம்.
அப்போது எனக்கு மலேசியாவிலிருந்து தந்தி வந்தது. எனக்கு ஓர் மகன் பிறந்துள்ளான். அவனுக்கு அலெக்ஸ்சாண்டர் சில்வெஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. சில்வெஸ்டர் என்பது நான் சொன்ன பெயர். அண்ணன் மகளின் பெயர் சில்வியா. இந்த பெயரை சிங்கப்பூரில் இருந்த என்னுடைய பால்ய நண்பன் ஜெயப்பிரகாசமும் நானும் எங்களின் முதல் குழநதைகள் ஆணாக இருந்தால் வைக்கவேண்டும் என்றும் முடிவு செய்திருந்தோம்.
குழந்தை ஜோகூர்பாரு சுல்தானா அமீனா பொது மருத்துவமனையில் பிறந்துள்ளது. ஜான் அண்ணன்தான் அலெக்ஸ்சாண்டர் என்னும் பெயரைச் சொல்லியுள்ளார்.
உடன் அவள் குழந்தையுடன் திரும்ப இயலாது. நானும் குழநதையைப் பார்க்க பிரயாணம் செய்யும் நிலையில் இல்லை. நான் பிறந்தது தெம்மூரில். . அப்போது அப்பா இருந்தது சிங்கப்பூரில். நான் அவரை எட்டு வயதில்தான் முதன்முதலாகப் பார்த்தேன். இப்போது என் மகன் பிறந்துள்ளது மலேசியாவில். நான் இருப்பதோ திருப்பத்தூரில். நிச்சயமாக இந்த ஒரு வருடத்தில் அவனைப் பார்த்துவிடுவேன்!
அவள் வரும்போது வரட்டும் என்று இருந்துவிட்டேன். ஒரு மாதத்தில் குழநதையின் புகைப்படம் வந்தது. கொழுகொழுவென்று அழகாக இருந்தான். நல்ல நிறம். தாயின் முக சாயலே அதிகம் இருந்தது.
என் மகன் அலெக்ஸ் பிறந்தது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது. மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு தந்தேன். அனைவரும் என்னை வாழ்த்தினர். இந்த மகிழ்ச்சியை நான் ஊருக்குச் சென்று கிராமத்தில் உறவினர்களுடன் கொண்டாடவேண்டும்!
செல்லப்பா வீட்டில்கூட அனைத்து டாக்டர்களையும் வரவழைத்து இரவு விருந்து தந்தார்! நான் பால்ராஜ், கிறிஸ்டோபர், தேவயிரக்கம் ஆகியோருடன் திருப்பத்தூர் ராஜாக்கிளி உணவகம் சென்று கொத்து பரோட்டா சாப்பிட்டேன்.
நண்பன் ஜெயப்பிரகாசத்துக்கு உடன் கடிதம் எழுதினேன். அதில் எனக்கு மகன் பிறந்துவிட்டான். என்றும் அவனுக்கு சில்வெஸ்டர் என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தேன். அவனுக்கு மகன் பிறந்ததும் அதே பெயரைச் சூட்டச் சொல்லி எழுதினேன். அதுவே எங்களுடைய நட்புக்கு அடையாளம் என்று நாங்கள் முன்பு முடிவெடுத்திருந்தோம்.. கோவிந்தசாமிக்கும் ஒரு கடிதம் போட்டேன். பன்னீரிடமும் தெரிவிக்கும்படி எழுதினேன்.
பல பெண்களைக் காதலித்தபோது இல்லாத இன்பம், மனைவியை மணந்தபோது இல்லாத இன்பம், எனக்கொரு மகன் பிறந்தது தந்தது உண்மை! எனக்கு ஒரு வாரிசு கிடைத்துவிட்டான்! எங்கள் குடும்ப பரம்பரை அறுபடாமல் இனி தொடரும்! பிள்ளைகள் கிடைப்பது கடவுளின் ஆசிர்வாதம் என்று வேதாகமம் .கூறுகிறது.
” உன் மனைவி உன் வீட் டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். ” என்று 128 வது சங்கீதம் கூறுகிறது.
” தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். ” என்னும் குறளையும் எண்ணிக்கொண்டேன். தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று இதற்கு மு.வ விளக்கம் கூறுவார். பொருள் என்பதை ” property ” என்று ஆங்கிலத்தில் கூறலாம். இதை பிள்ளைகள்தாம் நம்முடைய விலை மதிப்பில்லாத சொத்துக்கள் எனலாம்!
நான் மகிழ்ச்சிக் களிப்பில் மூழ்கினேன். இந்த செய்தியை அறிந்து அண்ணனும் அண்ணியும்கூட மகிழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கு சில்வியாவுக்குப்பின்பு குழந்தைகள் இல்லை. சில்வியா சிறு பிள்ளைதான். தரங்கம்பாடியில் பள்ளிக்கு செல்கிறாள். சில்வியாவுக்கு ஒரு தம்பி கிடைத்துள்ளான் என்று மகிழ்ச்சியுறுவாள்.
நான் அந்த வார இறுதியில் தெம்மூர் புறப்பட்டேன். வீட்டில் அனைவருமே ஆர்வமுடன் வரவேற்றனர். தங்கைகள் கலைமகளும் கலைசுந்தரியும் தஞ்சாவூர் போர்டிங்கிலிருந்து வந்திருந்தனர். கலைமகள் எஸ்.எஸ்,எல்.சி. தேர்வு எழுதியிருந்தது. இனி பள்ளி சொல்லவேண்டியதில்லை. கலைசுந்தரி இன்னும் ஒரு வருடம் படிக்கவேண்டும். அப்பாவுக்கு மிகவும் பெருமை. தனக்கு ஒரு பேரன் வந்துவிட்டான்! முன்பே அவருக்கு ஒரு பேத்தி ( சில்வியா ) உள்ளாள்.
பால்பிள்ளைக்கு என்னைக் கண்டதும் தலைகால் புரியவில்லை. உடன் தூண்டில் போட தயார் ஆனான். எனக்கு அந்த ஆர்வம் எப்போதும் உள்ளது அவனுக்குத் தெரியும். நாங்கள் தூண்டில்களுடன் ஆற்றுக்குச் சென்றோம்.
மதிய உணவுக்குப்பின்பு கூண்டு வண்டி கட்டிக்கொண்டு சிதம்பரம் சென்றோம். பால்பிள்ளைதான் வண்டியை ஓட்டினான். அங்கு கடைத்தெருவில் இரண்டு பூ மாலைகளும் மெழுகுவர்த்தியும் வாங்கினோம். சில பழங்களும் வாங்கினோம்.
திரும்பும் வழியில் அற்புதநாதர் ஆலயத்தில் இறங்கி கல்லறைத்தோட்டம் சென்றோம். தாத்தா பாட்டி கல்லறைகளுக்கு மாலைகள் அணிவித்து மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்தேன்.
ஞாயிறு காலையில் ஆலயம் சென்று ஆராதனையில் கலந்துகொண்டேன்.இஸ்ரவேல் உபதேசியார் என் மகன் அலெக்ஸ்சுக்கு பிரார்த்தனை செய்தார். மன திருப்தியுடன் இல்லம் திரும்பினேன்.
கலைசுந்தரி போர்டிங் சென்றபின் கலைமகள் கிராமத்தில் இருக்கவேண்டும். மேற்கொண்டு ஆசிரியை பயிற்சியில் சேர்க்கலாம் என்று எண்ணினேன். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை உசிலம்பட்டியில் ஒரு ஆசிரியை பயிற்சிப் பள்ளி நடத்தியது. அதில் சேர்க்க எண்ணினேன். அப்பாவும் சரி என்றார்.கலைமகளுக்கும் நாட்டம் இருந்தது. ஆதலால் கலைமகளை என்னுடன் திருப்பத்தூர் அழைத்துச் செல்ல முடிவெடுத்தேன்.
மாலையில் பால்பிள்ளை வண்டி தயார் செய்தான். கலைமகளும் நானும் கூண்டு வண்டியில் அமர்ந்துகொண்டு சிதம்பரம் புறப்பட்டோம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசெந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்புகாதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *